Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

நூல் அறிமுகம்: மருத்துவர்களின் மரணம் (சிறுகதைத் தொகுதி)

<p>நூல் அறிமுகம்: மருத்துவர்களின் மரணம் (சிறுகதைத் தொகுதி)</p>
ஆதிலட்சுமி சிவகுமார்

 

இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் ஈழத்து இலக்கிய வாசகர்களால் நன்கு அறியப்பட்டவர். நாவல், சிறுகதை, விமர்சனக் கட்டுரைகள் என பன்முக ஆற்றல்களைக் கொண்டவர். பத்திரிகைத்துறையில் முதிர்ச்சி பெற்றவர். இளம் படைப்பாளிகள் பலர் பற்றிப்படர்ந்து உயரத் தோன்றாத்துணையாக இருந்தவர். இன்னும் இருப்பவர். மண்வாசனையோடு தன் கருத்துநிலையில் சொல்ல நினைப்பதை நேர்த்தியாக சொல்லும் திறன்கொண்டவர்.

இவரது நான்காவது சிறுகதைத் தொகுப்பாக 'மருத்துவர்களின் மரணம்' என்கின்ற நூல் வெளிவந்திருக்கின்றது. இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்து, பதினைந்து ஆண்டுகளின் பின்னராக இந்நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

கடந்த 2016 யூன் மாதத்தில் உடல்நலமின்மை காரணமாக உயிரிழந்த தனது இனிய காதலியும் துணைவியுமான இராஜநாயகிக்கு இந்நூலை ஒப்புவித்திருக்கின்றார் ஆசிரியர். ஒருவகையில் அவரது இழப்பின் விட்டுவிலகாச் சூழ்நிலையிலேயே இந்நூல் வெளிவந்திருக்கின்றது.

கடந்த சில ஆண்டுகளில் ஆசிரியரால் எழுதப்பட்ட பத்துச் சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 'வெல்லும் பக்கத்துடன் எப்போதும் நிற்பதன் மூலம் தன்னுடைய சொந்தநலன்களைப் பெருக்கிக்கொண்டு, எல்லோருடனும் சமரசம்செய்து வாழ்தல் என்பது சுயம் உள்ள ஒரு படைப்பாளிக்குப் பொருந்தக்கூடிய விடயமல்ல' என்பதை தெட்டத்தெளிவாக தன்னுரையில் வெளிப்படுத்திக்கொண்டு, நூலிற்குள் அழைத்துச்செல்கின்றார் ஆசிரியர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன்.

அலட்டல்கள் இல்லாமல் மிகநுணுக்கமான முறையிற், சொற்செறிவோடு கதைநகர்த்தும் நுட்பமான படைப்பாளியான இவரின் சிறுகதைகள் வாசகர்களின் மனப்பரப்பில் அதிக தாக்கத்தை உணரச்செய்வனவாக உள்ளன.

இங்கு எட்டாவதாக இடம்பெற்றுள்ள 'மருத்துவர்களின் மரணம்' என்கின்ற சிறுகதை முதற்கவனம் பெறுவதாக உள்ளது. ஆசிரியரின் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய 'சுனாமி'யான, அவரது துணைவியின் இழப்பு ஏற்பட்ட சூழலையும் அது அவரில் ஏற்படுத்திய தாக்கத்தையும் சுட்டுவதாக எழுதப்பட்டுள்ள கதை எனினும், பொறுப்புள்ள சில மனிதர்களின் பொறுப்புணர்வற்ற நிலையால் இழக்கப்பட்ட உயிரின் அவலத்தை வெளிப்படுத்துவதாகவும் இச்சிறுகதை காணப்படுகின்றது. இச்சிறுகதையில் ஆசிரியரால் 'அது' என விளிக்கப்படும் அது என்ன என்பதை வாசகர்கள் உணர்ந்துகொள்வதே சிறப்பாக அமையும்.

இதில் இடம்பெற்றுள்ள இன்னொரு கதையான 'அட' என்கின்ற சிறுகதை வாசிப்பவர்களையும் முடிவில் 'அட' என வியப்படைய வைக்கின்றது. சிலவற்றை சொல்வதற்கு வார்த்தை கிடையாது. இக்கதையை படித்தபோது அப்படித்தான் இருந்தது. வாசித்து உணர்வதன்மூலமே இவற்றின் தனிச்சுவையை அவரவர் உணர்ந்துகொள்ள முடியும் எனத் தோன்றுகிறது. தங்களை பெரிய மனிதர்களாக வெள்ளை ஆடைகளுக்குள் மறைத்துக்கொண்டு உலவும் சில மனிதர்களின் பொய்த்தோற்றங்களை வெளிப்படுத்தும் அருமையான சிறுகதை. இவரது இக்கதையின் ஆழத்தை சிறப்பாகப் புரிந்துகொள்ள நுணுக்கமான வாசிப்புத்திறன் மிக்க வாசகர்களால் முடியும்.

இதேபோல், 'இத்தால் சகலரும் அறியவேண்டியது என்னவென்றால்... '  என்கின்ற சிறுகதையும் ஆசிரியரின் தனித்துவத்தை சொல்லிநிற்பதாக உள்ளது. இந்தக் கதையின் கருத்தும், கதையை சொல்லும் விதமும், கதையூடாக அவர் சொல்லாத செய்தியும் இங்கு முதன்மை பெறுகின்றது. இது சிதம்பரதிருச்செந்திநாதனுக்கே உரிய தனித்துவமான திறமையாகும். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளுக்குள் வாழும் மனிதர்களின் நெருக்கடிமிகுந்த வாழ்வின் துயரத்தை அப்படியே உணரவைக்கும் சிறுகதையாக உள்ளது.

இத்தொகுதியின் நிறைவாக இடம்பெற்றிருக்கும், பெண்ணியம் சார்ந்த சிறுகதையாக 'வாழ்தல் என்பது...' என்ற சிறுகதை கவனிக்கப்பட வேண்டியது.

காலங்காலமாக எத்தனை யுகங்களாக நாங்கள் புரட்சி பற்றிப் பேசினாலும், சிந்தித்தாலும் நடைமுறை வாழ்வில் பெண் மீதான துயரம் என்பது தீர்க்கப்பட முடியததாகவே உள்ளதென்பதை இச்சிறுகதை உணர்த்துகின்றது. முடிவில் தன் வாழ்வின் முதன்மையான தீர்மானத்தை தீர்க்கமாக சிந்திக்கும், முடிவுசெய்யும் புரட்சிப்பெண்ணை கதாசிரியர் தோற்றுவித்துள்ளார். இதனூடாக எங்கள் சமுகத்தில் இன்னும் உடைக்கப்பட முடியாமலிருக்கும் பிற்போக்கு எண்ணங்களை பெண்களே தகர்த்தெறிய வேண்டும் என்கின்ற செய்தியையும் ஆசிரியர் கோடிகாட்டுகின்றார் என்றே உணரமுடிகின்றது.

தொகுப்பின் தலைப்பிற்கேற்ற அட்டைப்படத்தினைத் தாங்கி வெளிவந்துள்ள இந்நூலின் பக்கங்கள் ஒப்பீட்டளவில் மிகச்சொற்பமாகவே உள்ளன. குறைந்த கால அவகாசத்தில் வெளியிடப்பட்டமை காரணமாக இருக்கலாம் எனினும் சற்று மனதை நெருடுவதாகவே இருக்கின்றது.

இப்படியாக இவரது பத்துச் சிறுகதைகளும் பேசுகின்ற பொருளையும் பேசாப்பொருளையும் வாசகர்கள் ஆழமான வாசிப்பினூடாக உய்த்தறிந்துகொள்ள முடியும் என எண்ணமுடிகிறது. தன் அடையாளம் குலையாது நீண்டநெடுங்காலமாக ஈழத்துப் படைப்பியற்றுறையில் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும் இவரது, பதிப்பில் வராத ஏனைய சிறுகதைகளும் நூலுருப்பெறவேண்டும் என நான் ஆவலுறுகின்றேன். 

11/3/2017 1:46:33 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்