Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இப்சனின் Peer Gynt - திறந்தவெளி நாடக அரங்கு

<p>இப்சனின் Peer Gynt - திறந்தவெளி நாடக அரங்கு</p>
ரூபன் சிவராஜா

 

ஹென்றிக் இப்சனின் 'பேர் கிந்த் – Peer Gynt' நாடகத்தினைத் திறந்தவெளி அரங்கமாகக் காண்கின்ற அருமையான வாய்ப்பு 06-08-17 கிட்டியது.

கோலோவத்ன (Gålåvatnet) எனும் பேராற்றினுடைய கரையே அந்நாடக அரங்கமாக இருந்தது. நோர்வேயின் கிழக்குப் பிராந்தியத்தில் ஒஸ்லோவிலிருந்து கிட்டத்தட்ட 300 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள Gudbrandsdalen பிரதேசத்தில் அமைந்துள்ளது Gålåvatnet. இது கடல்மட்டத்திலிருந்து 800 மீற்றல் உயரம் கொண்ட ஒரு மலைப்பிரதேசமாகும். அது பலபத்து கிலோமீற்றர் பரப்பிற்கு குடியிருப்புகள் அற்ற, காடுகளாலும் ஆறுகளாலும் சூழப்பட்ட பிரதேசம்.

1989ம் ஆண்டிலிருந்து இங்கு ஒவ்வோராண்டும் ஓகஸ்ட் மாதம் 2 வாரங்கள் 'Peer Gynt அரங்கப் பெருவிழா' ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இம்மாதம் 4 - 14 திகதிவரை இவ்விழா இடம்பெற்றது.

மலைகள் ஒருபக்கம், ஓங்கி வளர்ந்த காடுகள் மறுபுறம், பேராறு இன்னொரு பக்கம், இவற்றுக்கு நடுவில் திறந்தவெளி, நாடகம் நிகழ்த்தப்படும் மைய அரங்கப் பகுதியாக பேராற்றின் கரை. அரங்கத்தின் மையப்பகுதிக்கு இருமருங்கும் சிறுசிறு மணல்திட்டுகளும் சில பாறைகளும் அத்தோடு அரைவட்டத்திற்கும் கூடுதலான பகுதி பார்வையாளர்களுக்கான இருக்கைகள். 3000இற்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் நிறைந்திருந்தது அந்த திறந்தவெளி.

இன்னொரு பகுதியில் பெரிய பெரிய கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. உணவு, தேநீர், கோப்பி, குளிர்பானங்களிலிருந்து, மதுபானங்கள் உட்பட்ட விற்பனைக்கான மையங்களும் அங்கு காணப்பட்டன. Peer Gynt நாடகம் மற்றும் இப்சன் சார்ந்து வடிவமைக்கப்பட்ட நினைவடையாள அழகுப்பொருட்கள் (souvenir) தனியான மையத்தில் விற்கப்பட்டன.

<p>இப்சனின் Peer Gynt - திறந்தவெளி நாடக அரங்கு</p>

இவ்வாறாக நேர்த்தியாகவும் கவரத்தக்க முறையிலும் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் கவனத்தை ஈர்த்தன.

***

Peer Gynt எழுதப்பட்ட ஆண்டு 1867. இந்த ஆண்டுடன் 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதனைச் சிறப்பாக அடையாளப்படுத்தும் வகையில் இந்த ஆண்டின் ஏற்பாடுகள் தனித்துவமானவையாக அமைந்துள்ளன. இதன் கதைக்களம் Gudbrandsdalen கிராமத்தில் நிகழ்வதாக அமைக்கப்பட்டதாகும். அதனால் அதற்குரிய குறியீட்டு அர்த்தத்துடன் இப்பிரதேசத்தில் Peer Gynt Festival நடைபெற்று வருகின்றது. Peer Gynt என்ற பெயரில் இயங்கும் ஒரு இலக்கிய அமைப்பினாலேயே இந்த விழா ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

<p>இப்சனின் Peer Gynt - திறந்தவெளி நாடக அரங்கு</p>

***

ஹென்றிக் இப்சன்

1851இல் நோர்வேயின் பர்கன் நகரின் நாடக மையத்தில் (Theatre in Bergen) நாடக எழுத்துரு மற்றும் அரங்க நெறியாளராகப் பணிக்கு அமர்த்தப்பட்டதோடு அவரது நாடகத்துறை மீதான நேரடி ஈடுபாடு தொடங்கியது. அந்த நாடக அரங்க மையத்தின் நிதியுதவியுடன் டென்மார்க்கின் Copenhagen இல் அரங்கியற்கலை தொடர்பான கற்றைநெறியைப் பயின்றார். கல்வியை முடித்த பின்னர், மீண்டும் பர்கன் நாடக அரங்க மையத்தில், அரங்க நெறியாளராக பணியைத் தொடர்ந்தார். இங்கு நாடக அரங்கியல் துறையில் பணியாற்றிய காலங்கள் அவருடைய படைப்பாளுமையை வளர்த்தெடுக்க வித்திட்ட காலமெனக் கருதப்படுகிறது.

 1857 – 1864 ஒஸ்லோவில் (பழைய பெயர் கிறிஸ்தியானியா), நோர்வேக் கலை இயக்குனராக (Artistic director) பணிபுரிந்தார். 1864 இலிருந்து 1890 வரையான 26 ஆண்டுகள் இத்தாலி, ஜேர்மன் உட்பட்ட வெளிநாட்டு வாழ்க்கையில் பல நாடகங்களையும், கவிதை நாடகங்களையும் எழுதினார். 1890 இல் மீண்டும் தாயகம் திரும்பினார்.

நோர்வேஜிய இலக்கியங்களில் இப்சனின் படைப்புகள் பலவும் உலகளாவிய அறிமுகம் பெற்றவை. பல்வேறு மொழிகளுக்கு அவை கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. சேக்ஸ்பியரின் நாடகங்களுக்கு நிகராக அறியப்பட்டவை. இப்சனின் படைப்புகளில் Peer Gynt அதிகம் தனித்துவச் சிறப்புக் கொண்டதாகக் கருதப்படுகின்றது. அதில் கையாளப்படும் பேசுபொருளின் அடிநாதம் காலங்களைக் கடந்து, புவியியல் எல்லைகளைக் கடந்து நிற்கக்கூடிய பொதுத்தன்மையைக் கொண்டிருப்பதே அதற்கான மூலகாரணி.

மனிதனின் வெவ்வேறு குணவியல்புகளையும், அந்த இயல்புகளின் உந்துதலால் வழிநடத்தப்படும் மனிதர்கள், அவர்களின் உணர்வுகளையும், பாடுகளையும் பேசுகின்றது. மனித இயல்புகளினதும் அவற்றினால் உந்தப்படும் நடத்தைகள், செயற்பாடுகள் மீதான தத்துவ விசாரணைகள் எழுப்பப்படுகின்றன.

கற்பனையும் யதார்த்தப் பிரதிபலிப்பும் மட்டுமல்ல, சுவாரஸ்யமும் ஆழமும் கொண்ட புனைவிலக்கியமாக Peer Gynt படைக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் இதனையொரு அரங்கத்திற்கான நாடகப்பிரதியாகக் கருதி இப்சன் எழுதவில்லை எனக் கூறப்படுகின்றது. வாசிப்புப் பிரதியாகவே இது இப்சனால் எழுதப்பட்டது. ஆயினும் 1876இல் முதன்முறையாக நாடகமாக அரங்கேற்றப்பட்ட போது மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தக் காலப்பகுதியிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் நாடக அரங்கமாகத் தொடர்கிறது. 150 ஆண்டுகள் கடந்தும் உலகம் முழுவதும் பேசப்படுகின்றது. நோர்வேயின் பல்வேறு நகரங்களிலும் ஆண்டுதோறும் பலதடவைகள் அரங்கேற்றப்படுகின்றது. இதிலிருந்து அப்படைப்பின் கனதியையும், தரத்தினையும், கலைத்துவ அழகியலையும், காலங்களைத் தாண்டிய பெறுமதியையும் உணரமுடியும்.

இந்நாடகத்தில் 'நோர்வேஜியத்தனம்' என்று கூறப்படும் நோர்வேஜியர்களின் இயல்பு என்று கட்டமைக்கப்பட்டிருந்த அம்சங்கள், அவற்றின் பிற்போக்குத்தனங்கள் மீதான ஒருவகை நையாண்டி கதையோட்டம் முழுவதும் இழையோடியுள்ளது.

தனது நலன்களை இலகுவில் அடையும் முனைப்புக்காக, தனக்கான பொறுப்புகள் உட்பட எதையும் உதறித்தள்ளக்கூடிய, உறவுகளை விட்டு விலகி ஓடுகின்ற நிலைப்பாடுகள், பல்வேறு மனித இயல்புகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு விசித்திரமான பாத்திரப்படைப்பு. பிரச்சினைகள், சவால்களுக்கு நேரடியாக முகங்கொடுக்கமல், அவற்றைச் சுழித்துக்கொண்டு கடந்து செல்லும் மனிதன் Peer Gynt. புளுகுமூட்டைகளை அவிழ்த்துவிடுகின்ற, தன்னைப் பற்றிய சுயதம்பட்டம் நிறைந்த, கற்பனைத் திறன் மிக்கவன் அவன். அவனைச் சுற்றி நிகழ்கின்றது கதை. காதலிலிருந்து குடும்பம், உறவுகள், அன்பு, கருணை, சமூக வாழ்வு, உலகப்போக்கு என அதன் பேசுபொருள் விரிந்து செல்கின்றது. சுயம் பற்றிய தேடலும் கேள்விகளும் எழுப்பப்படுகின்றது. இவ்வாறாக நாடகத்தின் களம் தொட்டுச் செல்லும் பரப்பு அகன்றது, ஆழமானது.

திறந்தவெளி நாடகத்திற்கான அரங்க அமைப்பு, ஒளியமைப்பு, ஒலி, இசை என காட்சியமைப்புகள் (scene setting) நேர்த்தியாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டிருந்தது. காட்சி மாற்ற உத்திகள், பாத்திரங்கள் அரங்கத்திற்குள் பிரவேசிக்கும் விதம், உடையலங்காரம், நடிகர்களின் உடல்மொழி என கவனத்தை ஈர்த்த விடயங்கள் அதிகம். அவற்றினூடாகப் பெற்ற அனுபவமும் காட்சியின்பமும் மறக்க முடியாதவை.

1828 இல் பிறந்த இப்சன் 1906இல் இறந்தார். 1879 இல் ஜேர்மன் நாட்டில் வசித்த காலத்தில் இப்சன் எழுதிய 'பொம்மை வீடு – A Doll’s House’ நாடக எழுத்துரு தான் அவருக்குரிய மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரத்தை முதலில் கொடுத்தது. அவர் யதார்த்த நாடகங்களின் மூலகர்த்தா என்றும் கருதப்படுகின்றார். இன்றுவரை இப்சனின் படைப்புகள் பேசப்படுகின்றன. சமகாலத்திற்குப் பொருந்திப்போகின்றன. அவரது நாடகப்பிரதிகளில் நுட்பமும் நவீனத்துவமும்மிக்க நாடக உத்திகள் கையாளப்பட்டிருக்கும். உலகப் பொதுமையுடைய பேசுபொருள் மற்றும் காத்திரமான பாத்திரப் படைப்புகளைக் கொண்டிருக்கின்றன. இவையே காலங்களைக் கடந்து, புவியியல் எல்லைகளைக் கடந்து அவரும் அவரது படைப்புகளும் பேசப்படுவதற்கான காரணிகள். இன்றும் அரங்குகளில் நாடக ஆற்றுகைகளாக உலகளாவி நிகழ்த்தப்படுவதற்குமான அடிப்படைகள் இவைகளே.

கதைகள் புதிரான முடிச்சுகளைக் கொண்டும், கூர்மையான முரண்பாடுகளைக் கொண்டும் கட்டமைக்கப்பட்டவை. நுணுக்கமான சித்தரிப்புகள், மறைபொருள், கதை நகர்வு, மனித உளவியலின் பல்வேறு பரிமாணங்களையும் சிக்கல்களையும் வெளிப்படுத்தும் வகையில் நிபுணத்துவம் மிக்க உளவியல் அறிவுடையவராகவும் கருதப்படுகிறார். அந்த வகையில் சிக்முன்ட் பிரொய்ட் இனால் (Sigmund Freud- உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறைமையை நிறுவிய உளவியல் சிந்தனையாளர்) விதந்துரைக்கப்பட்ட எழுத்தாளர் இப்சன் என்பது குறிப்பிடத்தக்கது. கிரேக்க எழுத்தாளர்  (கி.மு 497 - 405 ) மற்றும் சேக்ஸ்பியருடன் இப்சனை சிக்முன்ட் பிரொய்ட் ஒப்பிட்டார் எனப்படுகிறது.

நாடக எழுத்துருக்களில் அவர் முன்னிறுத்திய பாத்திரங்கள் வலிமையானவை, சவாலானவை. நூரா (பொம்மை வீடு), பேர் கிந்த், மருத்துவர் ஸ்தொக்மன் (ஒரு மக்கள் விரோதி - An Enemy of the People), பாதிரியார் Brand, எல்லிடா (கடலிலிருந்து ஒரு கன்னி - The Lady from the Sea) போன்றவை அப்பேர்ப்பட்ட பாத்திரப்படைப்புகள்.

 ஒவ்வொரு நாடகப்பிரதிகளிலும், அவர் படைத்த பாத்திரங்கள், குறிப்பாக முதன்மைப் பாத்திரஙகள் முற்றிலும் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவை. ' Brand ' இல், எவ்வித சமரசங்களுக்குள்ளும் தன்னை ஒப்புக்கொடுக்காத பாதிரியார், அதேவேளை அதற்கு எதிர்மாறான பாத்திரப்படைப்பு 'பேர் கிந்த்', சவால்களுக்கு முகம்கொடுக்காத வளைந்து நெளிந்து எல்லாவற்றையும் கடந்து செல்கின்ற ஒருவன் அவன். 'பொம்மை வீட்டின்' நாயகி, நள்ளிரவில் கதவை அடித்துச் சாத்திவிட்டு, கணவனிடமிருந்து, குடும்ப அமைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சுயத்தைத் தேடிச்செல்லும் கனதியான பாத்திரம், 'ஒரு மக்கள் விரோதி'யில் தனியொருவனாக நின்று அதிகார அடுக்குகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் மருத்துவர் பாத்திரம் என வெவ்வேறுபட்ட கனதியான பாத்திரப்படைப்புகள் இப்சனின் படைப்புகளில் சித்தரிக்கப்பட்டவை. உலக இலக்கியத்தின் கனத்தைப் பெற்றவை.

8/19/2017 12:21:56 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்