Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

உலகம் பலவிதம் - நோர்வேயில் நூல் அறிமுக நிகழ்வு! - சில குறிப்புகள்

<p>உலகம் பலவிதம் - நோர்வேயில் நூல் அறிமுக நிகழ்வு! - சில குறிப்புகள்</p>
ரூபன் சிவராஜா

 

இந்த மாதம் 4ஆம் திகதி (04.03.18) ஒஸ்லோவில் ஒரு புத்தக அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. 80 - 100 ஆண்டுகளுக்க முற்பட்ட எழுத்துகளின் மீள்பதிப்புப் புத்தகம் அது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை (1855- 1955) எழுதிய பத்திரிகை எழுத்துகள், புதினங்கள், உரைச்சித்திரங்கள், சிறுகதைகள், நாவல்கள் உள்ளடங்கிய 700 பக்க தொகுப்பு நூல அது. 'நூலகம்' அமைப்பினர் மற்றும் யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் இணைந்த முன்னெடுப்பில் இத்தொகுப்பு உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நூல் உருவாக்கத்தில் நோர்வேயைச் சேர்ந்தவர்கள் சிலரின் கணிசமான பங்களிப்பும் இருந்திருக்கிறது.

இந்தப் பதிவு, நூல் மீதான எனது வாசிப்பனுபவம் அல்ல. நூல் அறிமுக விழாவிலிருந்து உள்வாங்கிக் கொண்டவற்றின் சில குறிப்புகள் மட்டுமே. குறிப்பாக பேராசிரியர் ந.சண்முகரட்ணம் அவர்களுடைய விரிவான விமர்சன ஆய்வுரையின் ஊடாகக் கிரகித்த விடயங்களின் தொகுப்பாகக் கொள்ளலாம்.

இலக்கிய/நூல் விமர்சன அணுகுமுறை சார்ந்து நான் கொண்டிருந்த புரிதலுக்கு வலுச்சேர்ப்பதாகவும் தேடலைத் தூண்டுவதாகவும் அமைந்தது பேராசிரியர் ந.சண்முகரட்ணம் அவர்கள் ஆற்றிய விரிவானதும் கனதியானதுமான விமர்சன ஆய்வுரை. விமர்சன அணுகுமுறை, மரபு சார்ந்து கற்றுக்கொள்வதற்கான நிறைய விடயங்களை அவரது ஆய்வுரை உள்ளடக்கியிருந்தது.

பேராசிரியர் சண்முகரட்ணம் அவர்கள் இந்த நூலை அறிமுகம் செய்த விதம், விமர்சனங்களை முன்வைத்த முறைமை கவனத்தை ஈர்த்தது. முதலில் அந்த எழுத்துகளின் காலச்சூழல் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். கொலனி ஆதிக்கத்தினுடைய காலம் அது. அதன் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு வாழ்வியல் சார்ந்த பின்புலங்களும் வரலாற்றுப் புறச்சூழலும் அவரது உரையில் வெளிப்பட்டன.

தொடர்ந்து நூலினை ஐந்து தளங்களில் நோக்கினார்:

1)அரசியல், பொருளாதார சமூக மாற்றம் சார்ந்தும், மாற்றத்திற்கு எதிரானதுமான அந்த நூலின் உள்ளடக்கத்தின் பிரதிபலிப்பும் அதன் வகிபாகமும்

2) அதன் சைவ அபிமான, சாதிய அடுக்குகளைப் பேணும் நிலைப்பாடு

3) பால்நிலை சார்ந்த பிரதிபலிப்பு

<p>உலகம் பலவிதம் - நோர்வேயில் நூல் அறிமுக நிகழ்வு! - சில குறிப்புகள்</p>

4) ஐரோப்பிய கலாச்சார செல்வாக்குத் தொடர்பான நூலாசிரியரின் கருத்துகள் மற்றும் எழுத்துகளின் வகிபாகம்

5) ஆக்க இலக்கியப் படைப்புகளாக நூலின் உள்ளடக்கப் பெறுமதி, தன்மைகள்

என அவற்றை விரிவாகப் பகுத்து நோக்கினார்.

அவர் பின்பற்றிய விமர்சன அணுகுமுறை, அதன் பிரதிபலிப்புத் தொடர்பாக தனிக்கட்டுரையே எழுத முடியும். அந்த அளவிற்கு உள்ளடக்கப்பெறுமதியும் விமர்சன மரபின் கூறுகளும் அதற்குள் இருந்தன. அதற்கான மெனக்கெடலும் முன்தயாரிப்பும் அளப்பெரியது என்றே தோன்றியது.

பேராசிரியர் அவர்கள் ஒரு இடதுசாரிச் சிந்தனை மரபினைக் கொண்டவர். இந்த நூலாசிரியர் சைவ, சாதிய மேலாதிக்க நிலையிலும் பெண்களின் உரிமைகளுக்கு முரணான நிலைப்பாடுகளையும் எழுத்துகளில் பிரதிபலித்தவர். இருப்பினும் அப்பேர்ப்பட்ட அடிப்படை முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் ஒரு நூலினை சமூக அறிவியல் கண்ணோட்டத்தோடு விமர்சனம் செய்திருந்த பக்குவமும் பாங்கும் கவனம்கொள்ள வைக்கிறது.

ஆவணப்படுத்தல், அந்தக் காலச் சூழல், அந்தக்காலகட்ட அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு வாழ்வியலில் செல்வாக்குச் செலுத்திய அக புறக்காரணிகள் சார்ந்த புரிதலுக்கு இந்த நூல் உதவக்கூடியது எனத் தோன்றுகிறது.

நாவல்களில் தென்னிலங்கை¸ தமிழ்நாடு¸ மலாயா¸ சிங்கப்பூரைக் கதைக்களமாகக் கொண்ட படைப்புகள் உள்ளன. இன்றைய ஈழத்தமிழ் புலம்பெயர் இலக்கிய ஓட்டத்தின் தொடக்கமென அவற்றைக் கொள்ளலாமெனவும் கருதப்படுகிறது.

கருத்தியல் அடிப்படையில் சாதியவாத¸ சமயவாத¸ மேலாதிக்கத்தின் பிரதிபலிப்புகள் என்பதற்கு அப்பால்¸ ஈழத்தமிழ் படைப்பிலக்கிய முன்னோடிகளில் ஒருவராக திருஞானசம்பந்தப்பிள்ளை கருதப்படுகிறார்.

நூலாசிரியர் 35 ஆண்டுகள் (1912 - 1947) யாழ் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். இந்துசாசனம் என்ற பத்திரிகையின் ஆசிரியராக 40 ஆண்டுகள் (1912-1951) இருந்தவர். கொலனித்துவ ஆட்சி ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைக் கருத்தியல் தளத்தில் எதிர்வினையாற்றி வழிநடத்தியவராகப் பதிப்புரையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மிசனரி பாடசாலைகளும் அவற்றுக்கூடான மதமாற்ற முனைப்புகள் தீவிரம் பெற்றிருந்த காலகட்டம். ஆங்கில கொலனித்துவக் கல்வி நிறுவனமயப்படுத்தல் தீவிரமடைந்த புறநிலையில், நவீன உலக தரிசனத்திற்கு அக் கல்வித்திட்டம் வழிகோலியது. இவற்றுக்கூடாக சமூக பொருளாதார மாற்றங்களும் நிகழ்ந்தன. மிசனரிகளின் ஆங்கில வழிக் கல்வி கிருஸ்தவ மதமாற்றத்தை நோக்காகக் கொண்டிருந்தது.

ஆனபோதும் மிசனரியினர் எதிர்பார்த்த அளவு அல்லது செலவிட்ட வளங்களுக்கும் முனைப்பிற்கும் ஏற்ற அளவில் அவர்களின் மதமாற்றத்திட்டம் வெற்றியளிக்கவில்லை. இதற்கான பிரதான காரணம் நாவலரின் 'சைவ மறுமலர்ச்சி' சார்ந்த செயற்பாடுகள் எனப்படுகிறது. இந்தக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட எனச் சொல்லப்பட்ட மக்களின் கல்விக்கு எதிரான பல முட்டுக்கட்டைகள் சாதி மேலாதிக்கவாதிகளினால் போடப்பட்டன.

சாதி மேலாதிக்க சிந்தனையைக் கொண்டிருந்த சைவ மறுமலர்ச்சியில் சைவசமய சீர்திருத்தம் இடம்பெற்றதா என்ற விமர்சனம் வலுவாக முன்வைக்கப்பட வேண்டியது. இந்தக் காலகட்டத்தில் சைவ வேளாள மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் வகையிலான சிந்தனைகளும் செயற்பாடுகளும் இருந்தன. கிருஸ்தவ மயமாக்கலுக்கும் சைவசமய மறுமலர்ச்சிக்குமிடையிலான முறுகல் நிலவிய காலச்சூழல். இதனை மாற்றத்திற்கும் மரபுபேணலுக்குமிடையிலான முரண்பாடுகளின் காலமாக அடையாளப்படுத்த முடியும் எனவும் பேராசிரியர் சண்முகரட்ணம் குறிப்பிட்டார்.

உலக அனுபவத்தில் கொலனித்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் கலாச்சாரப் போராட்டங்களாகவே தோற்றம் பெற்றிருக்கின்றன. பின்னர் அவை அரசியல் போராட்டமாகவும், தேசிய விடுதலை நோக்கியும் நகர்ந்திருக்கின்றன. ஆனால் யாழ்ப்பாண சூழலில் கொலனித்துவத்திற்கு எதிரான கலாச்சார எதிர்ப்பு, அரசியல் ரீதியான எதிர்ப்பாக வளர்த்தெடுக்கப்படவில்லை.

திருஞானசம்பந்தபிள்ளை பத்திரிகையாளர், படைப்பிலக்கியவாதி, பாடநூலாசிரியர் என்ற பரிமாணங்களில் எழுத்துத்துறையில் இயங்கியவர். அவருடைய தமிழ் மொழிநடையில் அழகியலும் சுவாரஸ்யமும் செழுமையும் உணரமுடிகிறது. பேராசிரியர் சண்முகரட்ணமும் மொழிச்செழுமை மற்றும் சுவாரஸ்ய நடை சார்ந்த சில அம்சங்களைச் கோடிட்டுக்காட்டினார். அவருடைய எழுத்துகள் யாழ்ப்பாணத்தின் நடுத்தர சமூகம் ஒன்றை மையமாகக் கொண்டிருந்திருக்கின்றன.

கதைகள், சைவ மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுகளாகவும், கிருஸ்தவ எதிர்ப்புடையனவாகவும் மரபுமீறலைக் கண்டு பொங்குகின்ற எழுத்துகளாகவும் காணப்படுகின்றன..

விமர்சனக் கண்ணோட்டத்தோடு வாசிக்கப்பட வேண்டியது இந்நூல். இவை எழுதப்பட்ட காலத்தின் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின் சமூக¸ அரசியல்¸ பொருளாதார அக-புறச்சூழல்¸ சமயவியல்¸ ஊடகவியல்¸ தேசியம் சார்ந்த பார்வை¸ அதன் போக்கு உட்பட்ட கூறுகளை விளங்கிக்கொள்ள உதவக்கூடியது. அத்தோடு. வரலாற்று¸ சமூக ஆய்வுக் கண்ணோட்டத்தோடு நோக்குவதற்கும் பயன்தரவல்லது.

இந்நூலின் சமகாலப் பயன்பாடு என்று நோக்குமிடத்து இதன் ஆவணப்பெறுமதியைக் குறிப்பிடலாம் அல்லது ஆவணப்படுத்தலுக்கு முன்னுதாரணமாகவும் உந்துதலாகவும் தமிழ்ச்சூழலில் கொள்ளக்கூடியது.

அன்றைய காலகட்டத்தின் இலக்கியப் போக்கு¸ மொழிப் போக்கின் அம்சங்களை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்வதென்ற தளத்திலும் இந்நூலுக்குரிய பயன்பாட்டுப் பெறுமதியை மதிப்பிட முடியும். இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்டுவந்த மாற்றங்கள் மற்றும் இன்றைய நிலையை ஒப்புநோக்குவதற்கும் பயன்தரக்கூடியது.

இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இதற்குரிய உழைப்பினைக் குறைத்து மதிப்பிட முடியாது. பழைய பிரதிகளைத் தேடியெடுத்து¸ மறுவாசிப்பிற்கு உட்படுத்தி¸ வகைபிரித்து¸ ஒழுங்குபடுத்தி தொகுத்து நூலாக்குதல் என்பதற்குப் பின்னால் பலரது உழைப்பிருக்கிறது. இது நீண்ட காலத்தை விழுங்குகின்ற பணி. ஆவணப்படுத்தல் என்பது தமிழ்ச்சூழலில் அக்கறை குறைந்த துறையாக இருந்துவரும் நிலையில் இம்முயற்சி முன்னுதாரணமாக அமைகிறது. இதன் ஆவணப்பெறுமதியும் பயன்பாடும் முக்கியத்துவம் மிக்கது.

3/10/2018 10:39:22 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்