Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பவளவிழா காணும் பத்மநாப ஐயா: ஓர் அனுபவப் பகிர்வு!

<p>பவளவிழா காணும் பத்மநாப ஐயா: ஓர் அனுபவப் பகிர்வு!</p>
ரஞ்சித்

 

ஈழத்து படைப்புலகில் மிகவும் ஆளுமை மிக்க மனிதரான பத்மநாப ஐயா அவர்கள் கடந்த 24ஆம் திகதி தனது 75ஆவது அகவையை நிறைவு செய்துள்ளார்.

ஈழத்து இலக்கிய உலகில் இலக்கியம், கலை மற்றும் படைப்புலகம் சார்ந்த பத்மநாப ஐயாவின் அளப்பரிய பங்களிப்பை அறியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். ஈழத்து தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கும், வளர்ச்சிக்கும் அயராது தொடர்ந்து தன்னை அர்ப்பணமாக்கியவர் அவர்.

அந்த வகையில், ஈழத்து தமிழ் இலக்கிய பரப்பில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஒரு நபராக அவர் இருக்கின்றார்.

ஆயினும், அவரின் இந்த முகத்துக்கும் அப்பால் அவருடனான அறிமுகம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது அவரின் பன்முகத் தன்மை கொண்ட ஆளுமையை வெளிப்படுத்தும் என இப்பதிவு கருதுகின்றது.

1981ஆம் ஆண்டு மார்ச் மாதம். அப்போது நான் யாழ்.பல்கலைக்கழக முதலாவது ஆண்டு மாணவன். தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிக்கொணர்ந்தவரும், மனிதவுரிமை ஆர்வலரும், நண்பருமான குகமூர்த்தியே பத்மநாப ஐயாவை எனக்கு அறிமுக்கப்படுத்தியவர். (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தனது பணியை முடித்து வீடு திரும்பிய வேளையில் கொழும்பு ஜாவத்தைப் பகுதியில் வைத்து ஜீப்பொன்றில் வந்த ஆயுதபாணிகளால் குகமூர்த்தி கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போனார். இது நடந்தது ஆர்.பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில்)

ஐயாவுடனான முதற்சந்திப்பு நல்லூரிலுள்ள குகமூர்த்தியின் வீட்டியேயே இடம்பெற்றது. அப்போது ஐயாவுடன் அ.யேசுராஜா அவர்களும் வந்திருந்தார். அவருடனும் அன்று தான் எனது முதற்சந்திப்பு.

அறிமுகங்களின் பின்னர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கதைத்தோம். எனக்கோ பல விடயங்கள் புதிதாக இருந்தன. ஆயினும் புதியவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர்களின் பேச்சுக்களில் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்டேன். இதற்குப் பின்னரும் அடிக்கடி சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடுவோம்.

1981களில் தீவிர வாசகனாக இருந்த எனக்கு அவர் அரிய பல சஞ்சிகைகளையும், நூல்களையும் வாசிக்கத் தருவார். இந்த சஞ்சிகைகளும், நூல்களும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். தரமான இலக்கியங்கள் தீவிர வாசகனுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் அவர் மிகுந்த கரிசனை எடுத்திருந்தார். அவரின் இந்த முயற்சியால் தான் கணையாழி, காலச்சுவடு போன்ற தென்னிந்தியாவின் தரமான பல சஞ்சிகைகளையும், நூல்களையும் வாசிக்கும் பாக்கியத்தை நான் பெற்றிருந்தேன்.

<p>பவளவிழா காணும் பத்மநாப ஐயா: ஓர் அனுபவப் பகிர்வு!</p>

இதனை அவர் வெறும் இலக்கியத்தின் மீதான காதலால் மட்டும் செய்யவில்லை. இவற்றுக்கு அப்பால் அப்போது இடம்பெற்ற விடுதலைப் போராட்டத்துக்கு தன்னுடைய துறைசார்ந்த பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற சிந்தனையே அவரிடம் இருந்தது.

1980களின் ஆரம்பத்தில் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் தீவிரம் பெறத்தொடங்கிய காலகட்டத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்த சிலரிடம் விடுதலைப் போராட்டம் தொடர்பில் புதிய சிந்தனைகள் வேரூன்ற ஆரம்பித்திருந்தன.

அவர்களால் போராட்டம் சார்ந்த ஆய்வு முயற்சிகளின் அவசியத்தை உணரப்பட்டிருந்ததன் விளைவாக யாழ் பல்கலைக்கழகத்தில் மறுமலர்ச்சிக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியான கருத்தரங்குகள் நடத்தப்பட்டதுடன், ஆய்வு நூல்களும் வெளியிடப்பட்டன.

யாழ் பல்கலைக்கழக மறுமலர்ச்சிக் கழகம் இத்தகைய தயார்படுத்தலைச் செய்ய தன்னாலான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. பல்கலைக்கழகச் சூழலின் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி இவற்றை யாழ். பல்கலைக்கழக மறுமலர்ச்சிக் கழகம் தன்னாலானவரை செயற்படுத்தி உள்ளது. இதில் ஐயாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. குறிப்பாக, மறுமலர்ச்சிக்கழகம் வெளியிட்ட தளிர் சஞ்சிகை மற்றும் ஆய்வு நூல்களின் வடிவமைப்பில் ஐயா முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.

குறிப்பாக, 1983ஆம் ஆண்டு சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட கறுப்பு யூலை இனப்படுகொலையைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் மேலும் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. இந்நிலையில், விடுதலையின் பெயரால் பல இயக்கங்கள் தோற்றம் பெற்றன. இந்த இயக்கங்களுக்கு இடையே வளர்ந்து சென்ற முரண்பாடுகள் இறுதியில் அவர்களுக்கு இடையில் மோதல்களையும், உட்படுகொலைகளையும் ஏற்படுத்தியிருந்தன.

இது விடுதலையை ஆழமாக நேசித்த ஈழத்தமிழர் தேசியத்தின் மூத்த அரசியல் அறிஞர் மு.திருநாவுக்கரசு மற்றும் ஐயா உள்ளிட்ட பலருக்கு மிகவும் அதிர்ச்சியையும், கவலைகளையும் ஏற்படுத்தியிருந்தன.

இத்தகையதொரு நிலையில் ஜனநாயகத்தின் அவசியம் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பவற்றை வலியுறுத்தி மறுமலர்ச்சிக்கழகத்தால் ‘போராட்டத்துள் ஒரு போராட்டம்’ எனும் நூல் வெளியிடப்பட்டது. 'ஆயுதம் மட்டும் அரசியலல்ல, இளைஞர் மட்டும் மக்களல்ல' என்ற வாக்கியத்தின் கீழ் எழுதப்பட்ட இச்சிறு நூல் ஜனநாயகத்தின் குரலாய், போராட்டத்தின் தேவையாய், மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்துவதாய் அமைந்திருந்தது.

சிங்கள இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முழுமையாக ஆதரித்த இந்த நூல் தமிழ் மக்கள் மத்தியிலும், ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் மத்தியிலும் உயிர்த்துடிப்புள்ள ஜனநாயகத்தின் அவசியத்தைப் பற்றி வற்புறுத்தியிருந்தது. இந்நூலை அக்கால கட்டத்தில் உடனடியாக வெளியிடுவதற்கு ஐயா அளித்த பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

அத்துடன் எமது விடுதலை தொடர்பில் மக்கள் மத்தியில் வேரூன்றியிருந்த கற்பனைகளுக்குப் பதிலாக, அரசியலை விஞ்ஞானபூர்வமாகவும், யதார்த்த பூர்வமாகவும் பார்க்க வேண்டிய தவிர்க்க முடியாத அவசியம் எழுந்த 1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுகந்தம் வெளியீட்டால் தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும் எனும் நூல் வெளியிடப்பட்டிருந்தது. சர்மா எனும் பெயரில் மு.திருநாவுக்கரசால் எழுதப்பட்ட இந்நூல் புவிசார் அரசியல் கண்ணோட்டத்திலும், சர்வதேச அரசியல் கண்ணோட்டத்திலும் அணுகப்பட்டிருந்தது.

இதன்போது பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்தி சந்திக்கு அருகாமையில் அமைந்திருந்த சங்கரின் அச்சகத்துக்கு தினமும் சென்று எழுத்துப் பிழைகள் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை கவனித்ததில் ஐயாவுக்கு முக்கிய பங்குண்டு. 26 ஆண்டுகளுக்கு முன்னர் 25,000 பிரதிகள் வெளியிடப்பட்ட இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் காலத்தால் இன்னும் மாற்றமடையாமல் இருக்கின்றன.

இந்நூல், 2008ஆம் ஆண்டு வன்னியில் போர் தீவிரமடையத் தொடங்கிய காலகட்டத்தில் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியால் மீள்பதிப்புச் செய்யப்பட்டிருந்தது. இதன்போது 5,000 பிரதிகள் அச்சிடப்பட்டு தமிழகம் எங்கும் இலவசமாக விநியோகிக்கப்பட்டிருந்தது. காலமான நண்பன் கி.பி.அரவிந்தன் முன்னெடுத்த இந்த முயற்சியில் ஐயாவும் பங்கேற்றிருந்தார்.

இவ்வாறு, மு.திருநாவுக்கரசு எழுதி 1987ஆம் ஆண்டு வெளியான ‘இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும்’ எனும் நூல், 1987 ஜுலையில் இலங்கை, இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டதும் ‘யாருக்காக இந்த ஒப்பந்தம்?’ என்ற நூல் மற்றும் சாவடைந்த ரவிசேகரத்தின் முயற்சியால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வெளியான ‘சன்டினிச புரட்சி நிக்கரகுவா’ என்று நூல் போன்ற பதிப்புக்கள் வெளிவர ஐயா வழங்கிய பங்களிப்பு மிகவும் காத்திரமானது.

(சன்டினிச புரட்சி நிக்கரகுவா என்று நூலை பதிப்பித்துக் கொண்டிருந்த போது அந்நூலின் அச்சக வேலைகளைக் கவனிப்பதற்காக அச்சகத்துக்கு சென்று கொண்டிருந்த போது சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட வேளையில் சயனைட் அருந்தி ரவிசேகரன் வீரச்சாவடைந்தமையும், பின்னர் அச்சகம் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு அச்சிடப்பட்ட அனைத்துப் பக்கங்களும் அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது)

இவைகளுக்கு அப்பால், தமிழியல் வெளியீடாக ஐயா வெளியிட்ட ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த நா.சபாரத்தினம் அவர்கள் எழுதிய ஆசிரியத் தலையங்கங்களைத் தொகுத்து வெளியிட்ட ஊரடங்கு வாழ்வு, மரணத்துள் வாழ்வோம் மற்றும் பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் போன்ற பல வெளியீடுகள் அவருக்கு விடுதலையின்பால் இருந்த ஆழ்ந்த கரிசனையை வெளிப்படுத்தும்.

இதனைவிட ஓவியர் மார்க் மாஸ்டரை கௌரவிக்கும் முகமாக வெளியிடப்பட்ட ‘தேடலும் படைப்புலகமும்’ ஐயாவின் துணைவியார் எழுதிய  இலங்கையின் தோட்டப் பள்ளிக்கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சினைகளும் என்ற ஆய்வுக் கட்டுரையையும் முக்கியத்துவம் வாய்ந்தன.

இக்காலத்தில் விடுதலைப் போராட்ட இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய ஐயா, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளான மாத்தையா, பண்டிதர் மற்றும் கிட்டு போன்றவர்களுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி போராட்டத்துக்கு இலக்கியங்களும், படைப்புக்களும் ஆற்றக்கூடிய பங்களிப்புக்கள் தொடர்பில் விவாதித்துள்ளார். இத்தகைய பணிகளை முன்னெடுப்பதற்காக பண்டிதரின் முயற்சியால் அவர் விடுதலைப் புலிகளின் தோணியில் உயிராபத்துக்களுக்கு மத்தியில் இந்தியா சென்று திரும்பியிருந்தார்.

இதற்கப்பால் புலம்பெயர் வாழ்விலும் அரசியல் சார்ந்த ஐயாவின் படைப்புலக முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. மு.திருநாவுக்கரசு எழுதிய ‘ஒற்றை மைய உலக அரசியல்: போரும் சமாதானமும்’ எனும் நூலை தமிழியல் வெளியீடாக வெளியிட்டு அரசியல் தளத்தில் ஒரு புதிய சிந்தனைப் போக்கு ஏற்பட ஐயா வழிவகுத்தார்.

அத்துடன், மு.திருநாவுக்கரசு எழுதிய ‘தேசியமும், ஜனநாயகமும்’, ‘இனப்படுகொலை: தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும்’ ஆகிய இரண்டு நூல்களையும் ஒருங்கிசைந்த ஆய்வுக்கான தமிழ் நடுவம் வெளியிட்ட போது அதன் ஆக்கத்தில் ஐயா முக்கிய பங்காற்றியிருந்தார்.

அவரின் இத்தகைய பங்களிப்புக்கள் மற்றும் முயற்சிகள் எல்லாவற்றையும் வெறும் படைப்புலகத்துடன் மட்டும் நாம் மட்டுப்படுத்தி பார்க்க முடியாது. அவருக்கு இருந்த அரசியல் நிலைப்பாட்டின் கலவையே அது என்று நாம் நோக்க வேண்டும்.

இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். ஈழத்தமிழ் மக்களுக்கு என இலண்டனில் ஒரு கலாசார பண்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் கனவு. அதற்காக 2000ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்திலேயே அதன் வடிவமைப்பு, செலவுகள் தொடர்பில் ஒரு ஆவணத்தை தயாரித்து வைத்திருந்தார். அது தொடர்பில் பலருடனும் கதைத்தார். ஆயினும் எவரும் ஐயாவுக்கு கைகொடுக்க முன்வரவில்லை.

இன்னும் அந்தப் பெருங்கனவை சுமந்து கொண்டு வாழ்பவர் ஐயா.

இத்தகையதொரு நிலையில் படைப்புலகம், ஆவணப்படுத்தல், நூலகம் போன்ற ஐயா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு நாம் அனைவரும் கைகொடுக்க வேண்டியது அவருக்கு நாம் அளிக்கும் கௌரவம் என்றால் அது மிகையாகாது.

8/26/2016 11:41:50 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்