Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

'சரமகவிகள்' - யாழ்ப்பாணத்தில் பா.அகிலனின் நூல் வெளியீடு

வெண்ணிலா

 

காயங்கள் நிரம்பிய ஈழத்தமிழரின் வாழ்வைப் பாடும் கவிதைகளை உள்ளடக்கி, 'சரம கவிகள்' என்ற புதியதொரு கவிதைத் தொகுதி அண்மையில் வெளியாகியுள்ளது. பா.அகிலன் யாத்த இந்தக் கவிதைகள் 20-11-11 யாழ்ப்பாணத்திலே வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பா.அகிலனின் இன்னொரு கவிதை நூல் வந்திருந்தது, 'பதுங்கு குழி நாட்கள்' என்ற தலைப்பில்.

இந்தப் புதிய கவிதை நூலான 'சரம கவிகளில்' அகிலன் ஈழத்தமிழர்களின் உச்சத் துயரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

காணாமற்போனோரைக் குறித்த துயரம், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட கொடுமை, கடத்தப்பட்டுப் புதைக்கப்பட்டவர்களின் புதைகுழிக்கதைகள், போர்க்காலத்தில் கொல்லப்பட்ட, மனித உடலே சிதைக்கப்பட்ட நிலையில் இருக்கும் நிலையும் சிதைக்கப்பட்ட மனித உடலே வாழ்வைக்குறித்த கேள்விகளை எழுப்பும் நிலையும் எனப் பல பொருள்களில் நாற்பது கவிதைகளை இந்தத் தொகுதியில் எழுதியிருக்கிறார் அகிலன்.

துயரத்துக்கு கால எல்லை கிடையாது. அதன் தாக்கம் தலைமுறைகளுக்கு நீள்வது. காலங்களைக் கடந்து செல்வது என்பதை இந்தக் கவிதைகளை வாசிக்கும்போது உணரமுடிகிறது.

முக்கியமாக நாங்கள் அறிந்த சேதிகளை அகிலன் உணர்த்தும் முறைமை அவற்றின் தீவிரத்தையும் நிலையையும் மேலும் செறிவாக்குகின்றன. மேலும் அவற்றை ஆழப்படுத்துகின்றன.

ஈழத்தமிழர்களின் காயங்கள் காலந்தோறும் புதுப்பிக்கப்பட்டும் பெருப்பிக்கப்பட்டுமே வந்திருக்கின்றன. காயங்கள் பெருக்கப் பெருக்க அவற்றின் வலியும் கூடிக்கொண்டே சென்றது. ஒரு காலம் மரணத்துள் வாழ்வோம் என்று கூறிய இந்த மக்கள் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றவே முடியாத பேரவலப் பரப்பிற்குள் வீழ்த்தப்பட்டனர்.

ஒரு துப்பாக்கிகளுக்குப் பதில் பல துப்பாக்கிகளும் பீரங்கிகளும் கொண்டு வீழ்த்தப்பட்டனர் இந்த மக்கள்.

இந்த அவலப் பெரும் பரப்பின் தீவிரத்தையும் அதன் பன்முகக் குரூரத்தையும் காட்சிகளின் வழியாகவும் உணர்தலின் வழியாகவும் சொல்வதன் வழியாகவும் கவிதையாக்கியுள்ளார் அகிலன்.

அலவமும் துயரமும் நிறைந்த ஈழத்தமிழர் வாழ்வின் சிதைவுகளைப் பரப்பி வைப்பதன் மூலமாக இந்த உலகத்தைக் கேள்விக்குட்படுத்துகிறார் அவர். ஆனால், இந்தக் கேள்விகளை அகிலன் நேரடியாகக் கேட்கவில்லை. உலகின் மௌனத்திற்கு முன்னும், பாராமுகமாக இருக்கும் கள்ளத்தனத்துக்கு முன்னும் அவர் ஒரு சாட்சியாக நின்று இவற்றை முன்வைப்பதன் மூலம் மறைபொருளில் இந்தக் கேள்விகளை எழுப்புகிறார்.

இதேவேளை இந்தக் கவிதைகளின் வழியாக அகிலன் பல தோற்றப்பாடுகளையுடைய பாத்திரங்களாகி நின்று, பல உணர்நிலைகளின் வழியே வெளிப்படுகிறார்.

மிதுனம், தலைப்பிடப்படாத காதற்கவிதைகள், சுவிஷேசம், செம்மணி, வைத்தியசாலைக் குறிப்புகள், தாயுரைத்தாள், பிற என ஏழு வகைப்படுத்தல்களில் நாற்பது கவிதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பிலிருந்து ஐந்து கவிதைகள்

***

1. செம்மணி 03

பகலிரவாய்ப் பெருக்கெடுத்தது இரத்தம்

கன்னியானாள் மகள்

மணவாட்டிக்கும் விதைவைக்குமிடையில் 

ஒரு பாத்திரமாயிருந்தாள் தாய்

குரல் கொடுத்தால்

மறுகுரல் தர யாருமற்ற ஒற்றைப் பெண்கள்

முற்றுற்றன பதினேழு முழு வருடங்கள்

காத்திருந்த கண்கள் தூர்ந்தன

உப்பாய்ப்போன தந்தைக்காய்

ஓர் விளக்கை ஏற்றிவையெனக் கூறமுடியவில்லை என்னால்.

00

2. பிண இலக்கம் 178

இரத்த விளாறாய்க் கிடந்தான்

பாதித்தலை

பிளந்த நெஞ்சறையில் நூலிட்டு இறங்க

திரவமாய்க் கசிந்தது இருள்

தடுமாறிக் கடந்தால்

காத்துப் பசித்தவொரு முதிய தாய்

ஒரு நோயாளித் தந்தை

மாலையிட்ட சில புகைப்படங்கள்

 

தேகத்தின் பாதாளத்துள் இறங்க முதல்

முற்றிலாக் கேவலால் துரத்துண்டோம்

முள்ளாய் கிடந்து கனத்தது கண்ணீர்

 

அவசரமாய் வெளியேறிய பின்

மூடி

துணிப் பந்தொன்றை அடைத்து

தைக்கத் தொடங்கினேன்.

00

3. மந்தோவின் பெண்கள்

ஒட்டிக் கிடந்தது உயிரின் கடைசிச் சவ்வு

 

அருகு வர

யாந்திரீகமாய் நீக்கினாள் கீழாடை

இரத்தக் கிடங்கில்

மோய்த்துக் கிடந்தன ஆயிரமாண் குறிகள்

 

நீரள்ளிப் பெய்த பின்

அவள் மூளையிலிருந்து 

ஒவ்வொரு ஆண்குறியாய்ப் பிடுங்கத் தொடங்கினேன்

 

காலம் கலங்கியபடி மடிந்தது.

 

(சதாத் ஹசன் மந்தோவின் சிறுகதை ஒன்றில் வரும் தொடர்ச்சியாக வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்ட பெண் பாத்திரம்)

00

4. தாயுரை

எங்கேயென்று சொல்

இல்லையென்பதையாவது சொல்

 

வீங்கி வெடிக்கத் தயாராகிவிட்டவோர்

முதிய இதயத்தைக் காவ முடியாதென்னால் இனியும்

 

பிடி சாம்பராவது கொடு

என் பிதிரர்களின் மடியில்

கொட்டி விடுகிறேன் அவனை

 

நாளை என்னைத் தீயிடவும் 

பிண்டமிட்டுப் பாதையிடவும் 

இல்லையாரும் ஆயினும்

அவன் போய் உறங்கட்டும் நிம்மதியின் பேராற்றில்

 

00

5. பெருநிலம்: மண்ணடுக்குகள் பற்றிய அறிமுகம்

பூண்டும் புராணிகமும் 

நீரும் இல்லும் சேர்த்துப் பொத்தப்பட்ட 

பெரு நகரத்திற்குக் கீழே

பகலிரா ஓயா 

தெருக்களும் கிளைகளும் மொய்த்துப் பரவி

சனங்கள் நெரிந்து

வாகனங்கள் விரையுமொரு நிலப்பரப்பிற்கு இன்னும் கீழே

கீழிறங்கிப் போனால்

 

சாம்பரால் ஆன வெம்மையடங்காவொரு புயற்பரப்பு

நீங்கி

மேலும் நடந்து கீழிறங்கினால்

அழுகையும், கதறலும் பரவிய ஒலியடுக்கு

அதற்கும் கீழே

முடிவடையாத குருதியால் ஒரு திரவப்படுக்கை

அதற்கும் கீழே

கெட்டிபட்டு முள்ளடர்ந்து மண்டிய நினைவடுக்கு

அதற்குக் கீழே

மரங்களின் வேர்களும் முட்டாதவொரு மௌனப்பரப்பு

நீங்கி இன்னும் மேல் நடந்து

கீழிறங்கினால்

 

ஒரு முதிய பெண்

காலங்களை விரித்தெறிந்த தோலாசனத்தின் மீதொரு

துறவிப் பெண்

 

(பங்குனி 2010)

00

12/8/2011 2:55:26 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்