Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஓவியர் வீர.சந்தானம்: உலக அநீதிக்கும் மனிதப் படுகொலைக்கும் எதிரானவனே கலைஞன்

<p>ஓவியர் வீர.சந்தானம்: உலக அநீதிக்கும் மனிதப் படுகொலைக்கும் எதிரானவனே கலைஞன்</p>
பா.செயப்பிரகாசம்

 

'முகில்களின் மீது நெருப்பு' - அவரது ஓவிய நூல். அது ஒரு குறியீடு. நெருப்பை ஏந்தி முகிற்பஞ்சு போன்ற தூரிகை வெளிப்படும் என்பதின் குறியீடு. நெருப்பற்ற எந்த சிறு ஓவியத்தையும் சந்தானத்தின் தூரிகைமுனை பிறப்பித்ததில்லை.

முகில்களின் மீது நெருப்பு - ஓவியங்கள் எல்லாமும் ஈழத்துயர், சினம், துவக்கு அனைத்தையும் கோர்த்துத் தீட்டப்பட்டவை. ஒவ்வொரு ஓவியத்தின் அடியிலும் குருதி தோய்ந்த சிறு குறு மொழிகள்.

'நானும் நீயும் மனிதர்களென்று அவர்களுக்குத் தெரியாது'

'சூழவும் உடைபடும் கடைகளின் ஒலியும்

வெறிக்கூச்சலும் வேற்று மொழியும்

விண்ணுயர்ந்த தீச்சுவாலையும்'

'புத்தரின் மௌனம்'

'வெட்ட வெளிச் சிறைதான் இங்கே

<p>ஓவியர் வீர.சந்தானம்: உலக அநீதிக்கும் மனிதப் படுகொலைக்கும் எதிரானவனே கலைஞன்</p>

காற்றுக்கும் காவலுண்டு'

'புழுதி பறந்த வீதிகள் எங்கும்

குருதி தோய்ந்த புலமையின் சுவடுகள்'

'விழி மணிகளில் தீப்பொறி ஏந்தினேன்'

'இனியும் யார் காத்துள்ளனர்?

சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுக!'

-ஒவ்வொரு ஓவியத்தின் கீழேயும் குருதி உறை வாசகங்கள் தீ மூட்டிக் கொண்டிருக்கும்.

பாய்ந்து பறக்கும் ஒரு பறவை போல் விரிந்த கை. பெருவிரலில் பறவையின் மணிக்கண். இது வீர சந்தானத்தின் இலச்சினை.   

அவரது ஓவியங்களுக்குள்ளிருந்து அதிகாரத்துக்கு அடங்காத ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. 'நாற்காலி வரிசை' என்னும் ஓவியங்களில் தொடங்கிய அது சுவாசிப்பு உள்ள மட்டும் வெளிப்பட்டது. எந்தப் புள்ளியில் அவர் நின்று போனாரோ, அந்தப் புள்ளியிலிருந்து ஓவியங்களின் கால்கள் ஓடிக் கொண்டிருக்கும்.

'நாற்காலியை ஒரு உயிராகவும், மனித வடிவத்தின் ஒரு அடையாளமாகவும் நான் நினைத்தேன். அவற்றுடன் நான் அடிக்கடி உரையாடத் தொடங்கியதன் வெளிப்பாடு இது' என்கிறார்.

முகில்களின் மீது நெருப்பு - ஓவியங்கள் நூல்வடிவில் வெளிப்பட்ட காலம் 1987. 1987 - ஜுன் 29ல் 'இந்திய அமைதிப்படை' என்ற சாத்தான் படை ஈழத்தில் இறங்குகிறது. தன் ஆக்கிரமிப்பை நிலைப்படுத்திக் கொள்ள ஆயிரக்கணக்கானோரை காவு கொள்கிறது. சிங்கள ராணுவம் என்னவெல்லாம் நட்த்தியதோ அதை ஒன்றுவிடாது செய்து அதற்கு மேலும் ஆட்டம் போட்டது. சிறுபான்மைத் தமிழினம் மீது, பெரும்பான்மைச் சிங்களத்தின்  கொடூரங்கள்தாம் அவரது 'முகில்களின் மீது நெருப்பு' ஓவியங்கள். இந்திய சாத்தான் படையின் ஈழத் தமிழர் ஒடுக்கு முறை அதன்பின்னரான அவரது வரைவுகளில் தொடருகின்றன.

-2-

1981 - செப்டம்பரில் 'மனஓசை' என்ற கலை, இலக்கிய அரசியல், சமூக இதழைத் தொடங்கினோம். எதிர்க்கருத்தியலை மையப் புள்ளியாக்கி, ஒரு கலை இலக்கியச் சிற்றிதழ் 15 ஆயிரம் படிகள், 20 ஆயிரம் படிகள் என விற்பனையாகின. புரட்சிகரக் கலை இலக்கிய இதழும் முற்போக்கு இதழ்களும் இல்லாதிருந்த சில ஆண்டுகளினூடாக இந்த அதிசயம் நிகழ்த்தப்பட்டது.

1981-ல் தொடங்கிய 'மனஓசை' இதழுக்கு எழுத்துப் பங்களிப்பு செய்வோர் மட்டுமன்றி, ஓவியப் பங்களிப்பும் தேவையானது. ஓவியம் இன்றி இதழியலைக் கற்பனை செய்யவும் ஏலாது. இளைய ஓவியர்களை அணுகினோம். சந்தானம், மருது, புகழேந்தி, சந்ரு, ஞானவேல் போன்ற இன்றைய தேர்ந்த முதிய ஓவியர்கள் அன்று இளைஞர்கள். 

1984 ஜூலையில் ஓவியர் சந்தானத்தின் நேர்காணலை மனஓசை எடுத்திருந்தது.

'கடந்த மே மாதம் சென்னை - 'கிறீம்ஸ் சாலையில்' தோழர்கள் சந்தானம், சாம் அடைக்கலம் இருவரும் வரைந்த நவீன ஓவியங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அருவருக்கத்தக்க, மனவிகாரங்களை 'நவீன ஓவியம்' என்ற பெயரில் பார்த்த நமக்கு, தோழர்களது மாறுபட்ட ஓவியங்கள் நவீன ஓவியத்தின் பால் நமக்கோர் நெருக்கத்தை உருவாக்கின.                                              

இலங்கை பூமியை மண்டை ஓடுகளாக நிறைத்து தீட்டப்பட்ட ஓவியம், சிறைகளுக்குள் மனிதர்களின் மண்டை ஓடுகள், கண்கள், காதுகள், வாய்கள் பிளாஸ்திரி போட்டு ஒட்டப்பட்ட காட்சி - இப்படி வித்தியாசமான ஓவியங்கள் - ஆயிரக்கணக்கில் புதிய விசயங்களைத் தந்து கொண்டிருந்தன. ஓவியங்களை நேரில் கண்டு கருத்துக் கேட்டபோது, ஓவியர் சந்தானம் பதில் அளித்தார். ஓவியர் சாம் அடைக்கலம் அருகிலிருந்தார்'(மனஓசை-ஜூலை 1984)

நேர்காணல் - முதல் கேள்வி, 'மக்களுக்கான ஓவியங்களை வரைய வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?'

'உலக அநீதிக்கும் மனிதப் படுகொலைக்கும் எதிரானவனே கலைஞன். சமீபத்திய இலங்கைச் சம்பவமே எங்களை முழுமையாக உலகுக்கு வெளிக்காட்டியுள்ளது. இவ்வோவியங்கள் இலங்கைக்கு மட்டுமே பொருந்தக் கூடியவை என்று கருதிட வேண்டாம்' - 

உலக முழுமைக்கும் பொருந்தக் கூடியவை என்னும் அர்த்தம் அச்சொற்களின் சுனைக்குள் சுவை நீராய் நின்றது.

இந்த நவீன முறை ஓவியங்களை ஒருசிலர் மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது என்ற மற்றொருகேள்வியை அவர் விளக்கிய விதம் நுட்பமானது.

'இந்த ஓவிய முறை அப்படி, நான் கற்ற முறையிலேயே வெளிப்படுத்த ஆசைப்படுகிறேன். அடக்குமுறைகளை அப்படியே சித்தரிக்கும் ஓவியமானது மனித நிகழ்ச்சிகளின் புறத்தை மட்டுமே வெளிக்காட்டும். நானோ மனிதனின் உள்ளத்தில் அமுங்கிக் கிடப்பதை வெளிக்கொணர நினைக்கிறேன்'

நேர்காணலின் இறுதியில் வருவது அவரின் பிரகடனம் 'நான் கற்ற நவீன முறையிலேயே உழைக்கின்ற மக்கள் புரிந்து கொள்ளும்படி கடினமாக உழைப்பேன். ஏராளமாக வரைவேன். மக்களுக்குப் பயன்படாமல் போனால் அவற்றைக் கூழாக்குவேன். கிழித்துக் குப்பையில் எறிவேன். இது உறுதி'

இறுதிவரை மக்களுக்கு - மண்ணுக்கு - இனத்துக்கு - மொழிக்குப் பயன்படுகிற வாழ்க்கையில் தோழர் நடந்தார்.

நேர்காணலுக்குத் தலைப்பு 'மக்களுக்குப் புரியாத ஓவியங்களைக் கிழித்தெறிவேன்'! 

-3-

தமிழ்த் தேசிய அமைப்புகள் திருச்சியில் 31-05-2017ல் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நானும் பங்கேற்றேன். 1965 – மாணவர் போராட்டத்தில் முன்னணியில் நின்ற பழைய நினைவுகள் மேலெழுந்தன. கைதாகி அன்று மாலை விடுவிக்கப்பட்ட வேளை, நான் சக போராளிகளிடம் தெரிவித்தது 'மீண்டும் ஒரு போரில் சந்திப்போம்'

1938- இந்தி எதிர்ப்புப் போர்க்களம் திருச்சி. 1938 ஆம் ஆண்டு சோமசுந்தர பாரதியாரைத் தலைவராகவும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் தளபதியாகவும், பெரியார் ஈ.வெ.ரா, தமிழவேள் உமாமகேசுவரனார், டபிள்யூ பி.சௌந்தரபாண்டியனார், கே.எம். பாலசுப்பிரமணியம் ஆகியோரைக் கொண்ட போராட்டக் குழு உருவாக்கப்பட்டது இந்த மண்ணில் தான்.

31-05-2017 போராட்டக் களத்தில் அய்யா பழ.நெடுமாறன்,  தோழர்கள் பெ.மணியரசன், காவிரி உரிமை மீட்புக் குழு திருவாரூர் நகரப் பொறுப்பாளர் கலைச்செல்வன், காவிரியாறு பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளரும் கனிமக் கொள்ளையை எதிர்த்துப்  போராடி வருபவருமான அயர்ச்சியுறாப் போராளி தோழர் முகிலன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஆலோசகர் மனிதநேய மருத்துவர் பாரதிச்செல்வன் போன்றோர் முன்னின்றனர். இவர்களே போல் போராளிகள் எங்கெல்லாம் திரளுகின்றனரோ, அவ்விடங்களிலெல்லாம் ஓவியர் வீர.சந்தானத்தின் உறுதிகொண்ட காலடி பதியாமல் இருக்காது. 

அன்றைக்கு விடைபெறுகையில் கூறியவாறு மறுபடி ஒரு போர்க்களத்தில் என் தோழனைச் சந்திப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை. 13-07-2017ல் என் தோழனின் உடல்தான் தரிசனத்திற்குக் கிடைத்தது. 

மக்கள் வாழ்வியல் கருதிய போராட்டங்கள் எங்கெங்கு நடைபெறினும் ஆதரிப்பு அவருடையதாக இருக்கும். இது உரிமைப் போர்களின் காலம். வாழ்வியல் ஆதாரங்கள் அழிக்கபடுவதின் காரணமாய் ஆத்திரம் கொள்வது மக்கள் இயல்பு. இக்கால கட்டத்தில் ஒவ்வொரு முனையிலும் தன்னைக் ஈடுபடுத்திக் கொள்வதை இயன்றவரை சாத்தியப்படுத்திக் கொண்டிருந்தார் தோழர். 

தமிழ்த் தேசியநலன்களுக்கு குரல் கொடுத்தார். பிரதான களம் தமிழ்த் தேசியமாக அமைந்தது. மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்காரியம், பெண்ணியம் - என அனைத்துக் கருத்தியலாளர்களுடனும் தொடர்பாடலில் இருந்தார். ஈழ விடுதலைப் போர் முதல் இந்தி எதிர்ப்புப் போர் வரை எப்போதும் முன்னணியாளராக வாழ்ந்தார். அவர் பங்கேற்ற முதல் போராட்டக்களம் எதுவெனத் தெரியாது. அவர் கலந்துகொண்ட இறுதிப் போராட்டக் களம் திருச்சியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் களமே என நான் நினைத்ததும் பிழை எனப் பின்னர் தெரிந்தது.

இயல்பில் அவரொரு போராளி என்பதால் போராட்ட களங்கள் அவரைத் தேடி வந்து கொண்டிருந்தன. வங்கப் பெருங்கடலின் இன்னொரு கடற்கரையில் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலைத் துயரத்துக்கு - மெரினா கடற்கரையில் மெழுகுவத்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்த முயன்ற மே17 இயக்க முன்னோடிகளை குண்டர் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் தள்ளியது இன்றைய கொடிய அரசு. இதைக் கண்டித்து ஜுன் 20ல் சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வீர.சந்தானம் கலந்து கொண்டிருக்கிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் நின்ற போது, 'இந்த வயதில் நீங்கள் வந்து நிற்பது யானை பலம் ' என்று தெரிவித்திருக்கிறார்கள். அப்போது தோழர் சொன்னார், 'இளையோர்கள் போராளிகளாக ஆக வேண்டும். என்னைப் பார்த்து நிறைய இளைஞர்கள் போராளிகளாக மாறுவார்கள்'. இவ்வாசகம் நிறைய உள்ளர்த்தம் கொண்டது.

எதற்கும் எவருக்கும், தயங்காமல் தன் கருத்தை முன்வைத்து விடுவார்.

ஒரு எடுத்துக்காட்டு நான் சொல்லவரும் நிகழ்வு. அ.இ.அ.தி.மு.க-தோற்ற காலத்தில் எம்.ஜி.ஆரின் உற்ற ஆலோசகராக இருந்தார் ஒரு தலைவர். எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில் ஜெயலலிதாவுக்கு வேண்டாதவராக ஆனார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் பா.ம.க-வில் முக்கிய அங்கம் வகித்தார். பின்னர் ஜெயலலிதாவிடம் அடைக்கலமாகிவிட்டார்.

                  'ஐம்பது பைசாவுக்கு

கால் மடக்கி

                கையேந்துகிறது

                எங்கள் ஊர் யானை'

என்ற மு. சுயம்புலிங்கத்தின் கவிதையை தோழரிடம்   சுட்டிக்காட்டினேன்.  

'செவிட்டில கொடுத்த மாதிரி இருக்கு. தத்ரூபமாச் சொல்லீட்டாரே' என்று கவிதையைச் சிலாகித்தார். ஈழவிடுதலை ஆதரவுக் கூட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற வேளையில், 'ஒங்க ஊர்க்காரர் பண்ணின காரியத்தைப் பாத்தீங்களா? வேறென்ன சொல்ல' என்று இக்கவிதையை அங்குமட்டுமல்ல, நிலைமாறும் மனிதர்களைப் பற்றிப் பேசுகிற இடங்களிலெல்லாம், இக்கவிதையும் அவருடன் பயணித்தது.

இடையில் - 2015-ல் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

'மரணத்தின் வாசற்படியில் போய் அமர்ந்துவிட்ட என்னை மருத்துவர் எழிலன் மீட்டு வந்தார்' என்றார்.

மருத்துவர்கள் மீதான நோயாளிகளின் நம்பிக்கை இயல்பானது. ஆனால் மருத்துவர் நா.எழிலன் மீது ஓவியரின் நம்பிக்கை எல்லையில்லாதது. மருத்துவர்கள் அமுதசுரபி போல. நோயாளியின் கை பிடித்து நாடித் துடிப்பு அறிகிற வேளையில் - அமுதசுரபியிலிருந்து உயிர்த் துடிப்பையும் எடுத்து வழங்கி விடுகிறார்கள்.

2015-ல் அவர் நலிவுற்றிருக்கையில் புதுச்சேரியிலிருந்து சென்னை சென்று பார்த்துத் திரும்பினேன். வழக்கமாய் நான் உதிர்க்கும் வாசகம்; 'ஒரு காலம் வரை நாம் நினைப்பது போல் இயங்குகிறது   உடம்பு.இப்போது  உடம்பு சொல்வது போல் நாம் இயங்க வேண்டிய காலம்'.

விழுப்புரத்திலிருந்து தொடர்வண்டியில் மதுரை போய்க் கொண்டிருந்த இரவில் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்ற சேதியைப் பரிமாறிக் கொண்டிருந்தேன். என் இரு கைகளையும் பற்றியபடி 'ஜேபி, நா. சொல்றேன். மருத்துவர் எழிலனைப் பாருங்க' படபடத்தார்.

அந்தப் பொழுதில், தன் ஓவியத்திறனை அடையாளம் கண்டு கொண்டவராய் மட்டுமேயல்ல, வாழ்வையும் மரணத்தையும் ஒன்றாய் அனுபவித்திருக்கும் ஒருவரைத் தரிசித்திருந்தேன்.

***

திரை இயக்குநர் பாலு மகேந்திராவின் சந்தியா ராகம் ஓவியரை வேறொரு பரிமாணதிற்கு இட்டுச்சென்றது. தம்பியுடையான், மகிழ்ச்சி, பீட்சா, வில்லா, கத்தி, அநேகன், அவள் பெயர் தமிழச்சி- ஆகியவை அவர் நடித்த படங்கள்.

கும்பகோணம் அருகிலுள்ள உப்பிலியப்பன் கோயில் அவர் பிறந்த ஊர். பிறந்ததும் படித்ததும், பின்னர் ஓவியக்கல்லூரியில் பயின்றதும் கும்பகோணம். தஞ்சை, கும்பகோணம் பகுதிகள் மராட்டிய சரபோஜி மன்னர்கள் ஆளுகையின் கீழிருந்தது சிலகாலம். தோல்பாவைக் கூத்து அவர்களுக்குப் பிரியமான கலை. தோழர் வீர.சந்தானத்தின் ஓவியங்களில் தோல்பாவைக் கூத்து சிறப்பிடம் பெற்றது. தோல்பாவைக் கூத்தின் தாக்கத்தை அவர் ஆடை வடிவமைப்புகளில் வெளிக்கொண்டு வந்தார். 'அவள் பெயர் தமிழரசி' திரைப்படத்தில் பாரம்பரிய தோல் பாவைக் கூத்துக் கலைஞராகவே நடித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவர் கடைசியாய் நடித்துக் கொண்டிருந்த படம் 'ஞானச் செருக்கு'. அவர் இறுதிவரையிலும் சுறுசுறுப்பாகவே இருந்தார். அலைச்சல் கூடாது என்னும் மருத்துவ ஆலோசனையையும் மீறி அவர் செயல்பட்டது அலைச்சலா சுறுசுறுப்பா? எவரொருவரும் அவரவர் இயல்பிலிருந்து தாண்டிப் போக முடியாது.

'கடுகு படத்தை இளையவர்கள் சேர்ந்து எடுத்திருக்கிறார்கள். வா போய் பார்த்து வருவோம்' என்று ‘நிழல்’ திருநாவுக்கரசுடன் போய்ப் பார்த்து, அவ்விளைஞர்களை உற்சாகப்படுத்திவிட்டு வந்திருக்கிறார்.

இளைஞர்கள் எப்போதும் கம்பீரமாக இருப்பார்கள். அவருக்கு 'இளைஞ முகம்' வாய்த்திருந்தது. அகத்திலிருக்கிறது வாலிபம். அவர் மலைச்சிக் கலைச்சி இருந்ததை நான் ஒரு பொழுதேனும் கண்டதில்லை. சிரித்துக் கொண்டே இருப்பது முகமா தாடியா? அவரிடம் எதைத் தரிசித்தோம்.

உலக அநீதிக்கும் மனிதப் படுகொலைக்கும் எதிரானவன் கலைஞன். இந்தப் பொது ஈர்ப்பு அவரை முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துப் போயிற்று. தன்னினம் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவாய் தஞ்சை விளாரில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை தனது கோட்டோவியங்களால் வடிவமைப்புச் செய்து தமிழருக்கு முன் வைத்தது. ஒவ்வொரு புள்ளியும் அங்குலமும் இவரின்   கோட்டோவியத்தால் தீட்டித் தரப்பட்டது. இந்த வரைவு அடிப்படையில் நூற்றுக்கணக்கில் சிற்பிகள், தமிழகத்திலிருந்தும் அப்பாலுமிருந்தும் கொண்டுவரப்பட்ட தரமும் உறுதியும் கொண்ட கற்கள் - 2010-டிசம்பரில் வேலை தொடங்கப் பெற்றது. 2013-ஆம் ஆண்டு அக்டோபர் 15ல் 'முள்ளிவாய்க்கால் முற்ற' உருவாக்கம் முடிவுபெற்றது. இக்கால முழுமையும் சந்தானம் எங்கே சென்றார்? அங்கே தான் தங்கினார். காண்போரின் நெஞ்சங்களையும் கண்களையும் குளமாக்கும் முள்ளிவாய்க்கால் முற்றம் இரவுபகல் பாராது உழைத்த ஓய்வறியாப் போராளியின் வடிவமைப்புக் கொடை.

நாம் இழந்தது ஒரு ஓவியரையா? ஒரு போராளியையா? ஒரு தோழனையா?

இவை சில துளிகள். சித்தரிப்பதற்கும் சீராட்டுதற்கும் எல்லோருக்கும் இன்னும் எத்தனையோ பக்கங்கள் இருக்கும்!

7/22/2017 7:19:32 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்