Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

குணா கவியழகனின் கர்ப்பநிலம் - வாழ்வியலைப் பேசுகின்ற போர் இலக்கியம்!

<p>குணா கவியழகனின் கர்ப்பநிலம் - வாழ்வியலைப் பேசுகின்ற போர் இலக்கியம்!</p>
கவிதா லட்சுமி

 

கர்ப்பநிலம் சொந்த மண்ணில் அகதியாக்கப்பட்ட எமது சமூகத்தின் கதை. குணா கவியழகன் தனது காட்டையும் தனது நிலத்தையும் எழுதும் எழுத்தாளர். இந்த நாவலுக்குக்கூட கர்ப்பநிலம் என்று பெயர் வைத்தாலும், காடு விட்டுப்போய்விடக் கூடாதென்று வனமேகுகாதை என்றும் உபதலைப்பு வைத்துக் குறிப்பிடுகிறார். காலத்தைப் பதிவு செய்பவர். மிகக் காத்திரமான எழுத்து நடையைக் கொண்டவர் என்று விடமேறிய கனவு நாவலில் படித்தபோது தெரிந்துகொண்டேன். இந்தப் பதிவு மூலம் கர்ப்பநிலம் நாவலோடான எனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

எத்தனை பெரிய ஒரு நூலாக இருந்தாலும் ஒரு வாசகரை சிந்திக்கச்செய்வது ஏனோ சில வார்த்தைகள்தான். பொறிதட்டும் வார்த்தைகள். கர்ப்பநிலம் நாவல் போர் அவலத்தையும், வீரத்தையும், ரணங்களையும், ஆதிக்க சக்திகளின் கயமையையும், துரோகத்தினையும், ஒரு சமூகத்தின் பண்பாட்டையும் பேசுகிற பொழுதிலும் அப்பப்போ கர்ப்பநிலம் காத்திரமாகவே கடவுள் மறுப்பைப் பேசுகிறது, சாதியெதிர்ப்பை முன்வைக்கிறது. இடதுசாரிக் கொள்கைகளையும் பேசும் அதேவேளை சாதிகளுக்கு அடிப்படை பொருளாதரம் என்பதைப் பற்றியும் பேசுகிறது. அனைத்தும் ஒரிரு வரிகளுக்குள்தான். இப்படியான சின்ன சின்ன விடயங்கள்தான் எழுத்தாளரின் தரத்தை சிந்தனை வளத்தை காட்டுவதாக நான் உணர்கிறேன்.

எமது சமூகத்தின் சமகால வாழ்வியலைப் பேசும் ஒரு போர் இலக்கியம் இது. இதைப் படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு நாவல் படிக்கிறோம் என்பதை விட, ஒன்றோடு ஒன்று கோர்வையாகக் கோர்க்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பொன்றைப் படிக்கும் உணர்வு ஏற்பட்டது எனக்கு. அதற்கு சில காரணங்களும் இருக்கிறன.

குணா கவியழகன் கையாளும் யுத்திகளில் ஒன்று தனியாக ஒரு பாத்திரத்தை முன்னிலைப்படுத்தாமை என்பது. பல பாத்திரங்களை அதற்குண்டான வீரியத்தோடும் தனித்துவத்தோடும் எழுதுவது. கர்ப்பநிலத்திலும் கதாநாயகர் என்றும் யாரும் இல்லை. வாசிப்பவர் மனதில் யார் பதிந்துவிடுகிறார்களோ அவரவர் கதாநாயகர் அவ்வளவே. அதேபோல ஒரு அத்தியாயம் மற்ற அத்தியாயத்தின் தொடர்பை வேண்டி நிற்பதில்லை. அப்படி எழுதுவதாலோ என்னவோ கர்ப்பநிலத்தில் வரும் பல அத்தியாயங்கள் சிறுகதைகளாய் பிரசுரிக்கத் தகுந்ததாய் இருக்கின்றன.

ஒரு அத்தியாயத்தில் வரும் தேவி என்ற பாத்திரத்திற்கு புலம்பெயர்ந்து போகும் பெரும் சனநெரிசலில் குழந்தை பிறப்பதும் அது தொடர்பாக படும் அவலங்களும் மனநிலையும் தவிப்பும் இந்த நாவலில் மிகச்சிறப்பாக எழுதப்பட்ட அத்தியாயம் எனலாம். இதைத் தனிச்சிறுகதையாகவே பிரசுரிக்கலாம். இந்த அத்தியாயத்தில் வரும் கார்கூட ஒரு கதாபாத்திரமாகவே ஆகிவிட்டிருக்கிறது. இதை ஒரு குறும்படம் செய்யலாம் என்பதும் என் மனதில் ஓடி மறைந்தது.

சில மனிதர்களையும் அவர்தம் வாழ்வினையும் தனித்தனி அத்தியாயங்களாக எடுத்து அவர்களை ஆங்காங்கே இணைத்துப்போகிறது இந்த நிலம். பல பாதைகள் வந்து ஒரு புள்ளியில் இணைந்து மீண்டும் பிரிவது போல கர்ப்பநிலத்தின் வடிவம் காணப்படுகிறது.

விடமேறிய கனவு, நஞ்சுண்டகாடு நாவல்களின் வேகம் கர்ப்பநிலத்தில் இல்லை என்பது எனது கருத்து. ஆரம்பத்தில் கிட்டத்தட்ட ஒரு நூறு பக்கம் வரை கதை மெதுவாகவே நகர்கிறது. சலிப்படையவும் செய்கிறது. சில இடங்களில் கூறியது கூறல் என்ற உணர்வும் ஏற்படுகிறது. மூன்றில் ஒரு பாகத்தைக் கடந்தபின் கதை வேகமெடுத்து பின் கடைசியில் மீண்டும் தனது வேகத்தைக் குறைத்துக் கொள்கிறது. இதற்கு முக்கிய காரணமாக நான் பார்ப்பது கதையில் வரும் எண்ணிக்கையில் அதிகமான பாத்திரங்களாக இருக்கக்கூடும்.

வழமையாக நாவல்களில் பாத்திரங்கள் அறிமுகமானபின் கதை செல்லல் தொடங்கிவிடும். கர்ப்பநிலத்தில் புதிது புதிதாகக் கதாபாத்திரங்கள் கடைசிவரை இணைத்துக்கொள்ளப்படுவதால் கதைநெடுக அதை அறிமுகப்படுத்துதல் என்பதன் தேவையிருப்பதால் சலிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அவை கதைக்கு ஒரு வேகத்தடை போடுவதாக உணர்கிறேன்.

<p>குணா கவியழகனின் கர்ப்பநிலம் - வாழ்வியலைப் பேசுகின்ற போர் இலக்கியம்!</p>

கர்ப்பநிலம் புலப்பெயர்வையும் அகதிவாழ்வின் அவலத்தையும் பேசுகிறதென்றாலும் காமமும் காதலும் கையாளப்பட்டிருக்கிறது. குணா கவியழகன் காதலையும் காமத்தையும் முதலில் இந்த நாவலில்தான் அதிக அளவில் கையாண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருடைய அப்பால் ஒரு நிலம் நான் படிக்கவில்லை. காதலையும் காமத்தையும் அல்லது மனித மனதின் வக்கிரங்களையும் எந்த ஒரு சூழலும் மாற்றிவிடாது என்பதை பல இடங்களில் தைரியமாகவே எழுதியிருக்கிறார். 

கலாச்சாரச் சீர்கேடாக நாம் பார்த்துவரும் விடயங்களை அதற்குப்பின்னால் இருக்கும் காரணங்களையும் மனித இயல்புகளையும் பதிவு செய்கிறது கர்ப்பநிலம். இருந்தாலும் தமிழ்சமூகத்தில் கொணரும் காதல் காமம் போன்ற போக்குகளுக்கு புனிதச்சாயம் பூசப்படுவதாகப்படுகிறது. அல்லது எதிர்மறை விளைவுகளுக்கு அதன் பின்னணிகளை ஆழ விளக்குவதன் மூலம் அதற்குரிய நியாயத்தை, மனித இயல்பை எடுத்துரைக்கும் எழுத்தாளர் பிற சமூகங்களைக் குறிப்பிடும் போது அதை ஒரு வாழ்முறையாகவே காட்ட முயற்சித்திருப்பது நெருடுகிறது.

கர்ப்பநிலத்தில் காட்டப்படும் காதல் என்பது அது அந்தக் காலத்திற்கே உரிய விதம். ஒரு கடிதம் கொடுப்பதற்கே தயக்கம், காதலை சொன்னால் என்ன ஆகும் என்கிற நடுக்கம், ஏக்கம், காதலுக்காக இரந்து நிற்றல், மனதை வெளிப்படுத்த எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் எல்லாம் அந்த நிலத்தையும் காலத்தையும் பேசுகின்றன.

எல்லா உயிரினிடத்திலும் இருக்கும் காதலும் காமமும் மனித பிறவிக்கு மட்டும் அந்நியமானதில்லையே. அறிவைக் கொண்டு பகுப்பாய்ந்து மனிதன் தனக்கான கட்டமைப்புகளைச் செய்தாலும், இயற்கை அவனை வென்றுகொண்டே இருக்கும் என்று நான் சொல்வதுண்டு. கர்ப்பநிலமும் அதையே சொல்கிறது.

தொண்நூறுகளில் கதை நகர்ந்து செல்கிறது. யாழ்ப்பாணச் சமூகத்தின் இடப்பெயர்வை பேசுகிறது. இதில் வயதானவர்களின் நிலைதான் எங்கும் பரிதாபமானதாகி விடுகிறது. போர்த்தேசத்தில் வயதானவர்களின் பரிதாபங்கள் எத்தனையோ. கர்ப்பநிலத்திலும் அவர்களின் நிலையை எழுத்தாளர் ஆழமாகப் பதிந்துள்ளர்.

தனித்த வயோதிப ஜீவன்களின் மரணபீதியை அத்தியாயங்கள் எடுத்துவருகிறது.

குணா மனம் சம்பந்தப்பட்ட  சின்னச்சின்ன விடயங்களை நாசுக்காக கதையில் எழுதிச் செல்கிறார். ஒரு பெண் ஆளுமையுள்ளவளாக இருக்கும் இடங்களில் அவளை மட்டம்தட்ட ஆண் கையில் எடுத்துக்கொள்ளும் ஆயுதம் உடல். அது ஆண் மனதின் வக்கிரத்தின் வெளிப்பாடு. சந்திரிகாவைப் பற்றி ஒரு இடத்தில் பேசுவதாக வருகிறது. 'அவளின்ர முகத்தில மட்டுமில்லையடா, அவளின்ர கண்ணிலயும் குரலிலையும் இருக்குது சங்கதி. அது காமத்தைத் தூண்டுற ஒரு பொம்பிளையோட குரலும் கண்ணுமடா. சிங்கள ஆம்பிளையலுக்கு பிடிச்சமாதிரி. உனக்கு அது பிடிச்சுப்போச்சு.' என்பது போல, இது தொடர்பான விடயம் இன்னுமொரு இடத்தில், போர்களத்தில் ஒரு பெண் போராளி தனது போர்தொடர்பான கருத்தை ஒரு அதிகாரியாக சொல்லும் போதும் அதை ஏற்றுக்கொள்ள தயங்குகிய ஆண் அணித்தலைவன், பிற போராளிகளின் மனநிலையையும் கொண்டு வந்திருப்பார். ஆளுமையான பெண்களை இப்படித்தானே குட்டியமர்த்துகிறது எம் சமூகம்.

யதார்த்தமான மனித மனதைக் கதைகளின் ஓட்டத்தோடு இயைந்து போகவிடுகிறார். அரசியலையும் பேசுகிறது நாவல். பாத்திரங்களினூடாகப் பேசப்படும் அரசியலிலும் ஒரு பக்கசார்பு நிலை தென்படுகிறது. இந்த நூலில் ஆங்காங்கே படிமங்களும் கையாளப்பட்டிருக்கின்றன. யோகர் சுவாமி என்ற படிமம் எனது கவனத்தை ஈர்த்தது.

நாவலில் யோகர்சுவாமி என்ற ஒரு சித்தருடைய படம் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும். அதை ஆங்காங்கே ஒரு படிமமாக குணா பாவித்திருப்பார். படிக்கும் போது யோகர் சுவாமி பற்றி நான் அறிந்திருக்கவில்லை என்பதால் படிக்கும் போது இந்த யோகர்சுவாமி என்னை இடையூறு செய்தபடியே இருந்தார். அதனால் பாதியில் புத்தகத்தை வைத்துவிட்டு யோகர்சுவாமி பற்றி தேடியும் கேட்டும் தெரிந்து கொண்டவை மிக சுவாரசியமான விசயங்கள். குணாவின் யோகர்சுவாமிப் படிமத்தின் ஆழத்தையும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

யோகர்சுவாமியின் சித்தாந்தம் என்ன சொல்கிறது என்றால்

'சும்மா இரு'

'எல்லாத்திற்கும் பின்னால் ஒரு அர்த்தம் இருக்கும்'

சும்மா இரு என்பதற்குப் பின்னால் பெரும் தத்துவம் இருப்பது போலவே உணர்கிறேன். சும்மா இருப்பது மிகக்கடினம். எல்லாவற்றையும் கடந்து ஒரு அவதானியாய் இருப்பதற்கு, எல்லாவற்றையும் புரிந்து கொள்வதற்கும் அதற்குரிய மனப் பக்குவம் வேண்டும்.

இப்படி யாழ்பாணத்துச் சித்தர்கள் பற்றிய கதைகள் சுவாரசியமானவையாக இருக்கின்றன. ஆனால் இந்தக்கதைகளைத் தொகுக்கவோ அடுத்த சந்ததியருக்கு எடுத்துசெல்லவோ, ஆவணப்படுத்தவோ முயற்சிக்காதது எம் சமூகத்தின் பெரும் துயரமே. 

குணா கவியழகனின் கர்ப்பநிலம் மற்றும் பிறநூல்களில் என்ன இருக்கிறது என்று கேட்டால், ஒரு விடயத்தை சொல்ல முடியும். அது ஒரு சமூகத்தின் பதிவு, எமது போராட்ட வாழ்வியலின், அதன் வெவ்வேறு காலகட்டங்களின் பதிவு! 

அந்தவிதத்தில் குணா கவியழகன் எழுத்து மிகமுக்கியத்துவம் பெறுகிறது. ஒரு சமூகம் தனது காலத்தை ஆவணப்படுத்தல் மிக முக்கியமானது. சிலர்தான் அதைச் செய்து வருகிறார்கள். நாம் எமது காலத்தைப் பதிவு செய்யாவிடின் அது தொடர்பான குற்றச்சாட்டுகள் பிற சமூகங்களில்லிருந்து எழும். நாம் அதிலிருந்து தப்பியோடவே முடியாது.

ஆனால் சமகாலத்தை நாம் கலை, இலக்கிய வடிவமாக்குவதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. அது நாம் காலத்தின் அருகில் நின்று பார்ப்பதால் விடயங்களை தூரநின்று பார்த்து எழுத முடியாமற் போய்விடுகிறது. எமது உணர்வுகள் கருத்துக்கள் போன்ற சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமளித்துவிடுகிறது. ஒருவிடயத்தை அதற்குள்ளே நின்று எழுதும் பலவீனத்தைத் தருகிறது. பரிமாணக் குறைபாடுடையதாவும் இருந்துவிடும் வாய்ப்புகள் உள்ளது.

யாழ்ப்பாணத்துப் பெண்களை, பண்பாட்டை சில இடங்களில் புனித்தப்படுத்தியும், அதே மறுபகுதியின் செய்பாடுகளை தாழ்த்தியும் எழுத்தப்பட்டிருப்பதை படிக்கும் போது இன்னும் சற்றுத் தூரநின்று பார்த்து எழுதியிருக்கலாமோ என்ற எண்ணம் எழுகிறது. நாவலை வாசித்து முடிக்கும் ஒருவருக்கு, தமிழ்ச்சமூகத்தில் பாலியற் தொழிலாளர்கள் இல்லை என்பதைப் போலவும், பிற சமூகங்களில் அது சுலபமாகக் கிடைக்கிறது என்ற பிம்பத்தையும் ஏற்படுகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் மனநிலை என்ன? எமது சமூகத்துப் பெண்களை புனிதப்படுத்தும் மனநிலை நாவலாசிரியரின் எதிர்ப்புணர்வா? போர்சூழலில் தமிழ்ச் சமூகத்திற்கு நடந்த அநியாங்களுக்கான பழிவாங்கல் உணர்வா? குணா கவியழகனின் நாவல்கள் புனைவிலக்கியம் என்ற விடயத்தைத்தாண்டி ஒரு போராளியின் உள்ளார்ந்த நேரடி அனுபவங்களின் பதிவாகவும், காலத்தின் பதிவாகவும் இருப்பதும் அவற்றின் முக்கியத்துவத்தின் பரிமாணங்களில் ஒன்று. இப்படியான பக்கசார்ப்பு மனநிலை எழுத்துக்கள் பிறவிடயங்களிலும் நம்பிக்கையற்ற தன்மையை கொடுத்துவிடக்கூடும்.

ஒருவிடயத்தை தூரநின்று பார்த்து எழுதுவதற்கும் அந்த வட்டத்திற்குள் நின்று எழுதுவதற்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கத்தானே செய்யும்.

அருகில் நிற்கும் போது பள்ளத்தாக்குகள் பெரியதாயும், மலைகளின் சிகரம் அதிஉயரமாயும் தெரியுமல்லவா?

இப்படியான அடைப்படைச் சிக்கல்களைத்தாண்டி எழுதும் தன்மை எத்தனை எழுத்தாளர்களுக்கு உண்டு. காலத்திற்குள் நின்று எழுதினாலும் அதைத் தூரநின்று பார்க்கும் தன்மையோடு ஒரு எழுத்து வரும் போது அது காலத்தை தாண்டி அதன் முக்கியயத்தைப் பெறுகிறது. கர்ப்பநிலத்திலும் எழுத்தாளர் தனது சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடமளித்திருப்பதாகவே உணரமுடிகிறது.

ஆனாலும் காலத்தைச் சொல்லவேண்டிய விடயங்களை சொல்லாமல் போவதும் பெரும் இழப்புத்தானே. எமது அரசியற் குறைபாடுகளில் இதுவும் ஒன்று. எதையும் சொல்லாமல் வைத்திருப்பது.

எனினும் குணாகவியழகனின் எழுத்து இந்த நூலில் புலமைஅச்சத்தை விட்டிருக்கிறது. அது ஒரு சிறந்த எழுத்தாளனுக்குப் முக்கியமான விடயம்.

எனது பாரதியின் கவிதையொன்றில் வரும் வரி.

- அவலத்தே பெரிய அச்சம் புலமை அச்சம் -

அங்கீகாரம், புகழ், பணம், நேரம் போன்றவற்ரால் தமக்குத்தாமே சுயதணிக்கை போட்டுக் கொள்ளும் எழுதாளர்கள்தான் அதிகம்.

தமது எழுத்து எடுபடுமா என்ற அச்சம், பெரும்பான்மைகுச் சாதகமாக இலக்கியம் இருக்கிறதா என்ற அச்சம், இழப்பு சம்மந்தமாக வரும் பயம். உடன்பாடுகள் பற்றிய பயம்.

இப்படியாக புலமை அச்சத்தையும், புலமை அடிமைத்தனத்தையெல்லாம் விட்டெறிந்து எழுதத் துணிவதே எழுத்து. குணா அந்த நம்பிக்கையை இந்த நாவலில் கொடுக்கிறார்.

இலங்கை அரசியலில் பின்னால் இருந்து இயங்கும் பெரும் சக்திகள் பற்றி வாதங்கள் பிரதிவாதங்கள் என்று பிரக்ஞையோடே கர்ப்பநிலம் எழுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் மிகச் சாதாரண மக்களின் உரையாடல்களாக பேசப்படுகிறது. ஒரு படிமத்தில் புத்தனையும் பழிக்கிறது கர்ப்பநிலம். இடதுசாரி சாரி அரசியலையும் கருத்துக்களையும், சுயநல உலகில் இடதுசாரி அரசியல் சாத்தியமா என்ற கேள்வியையும் எம்முன் வைக்கிறது.

இந்தக்கதையை படிக்கும் போது பல்வேறு விம்பங்கள் மனதில் எழும். ஆனாலும் இந்த அட்டைப்படம் நிலத்தையும் காட்டையும் கடலையும் கொண்ட உணர்வற்ற அட்டைப்படமாகவே இருக்கிறது என்பது எனது கருத்து. பொருத்தம்தான் எனினும் கர்ப்பநிலத்தில் கையாளப்படும் எத்தனையோ உணர்வுகளில் ஒன்றையாவது அட்டைப்படம் ஆக்கியிருக்கலாமே?

வாசித்து முடித்ததும் இறுதிப்பக்கங்களில் பாத்திரங்களின் விளக்கமும், கதை நகரும் நிலத்தின் வரைபடமும் போடப் பட்டிருக்கின்றன. என்னைக்கேட்டால் நூலின் அதை முற்பகுதில் போட்டிருக்கலாம் என்பேன். நூலின் பக்கங்களை குறைத்து கதையை இன்னும் வேகப்படுத்தியிருக்கலாம்.

முக்கியமாக என்னை மிகவும் கவர்ந்த விடயம் அவர் நாவலை ஆரம்பித்த விதமும் அதை முடித்த விதமும். கதிர் என்ற சிறுவன் தனது தாத்தாவோடு இடம் வலம் என்று கால்களை ஆட்டி நடந்து விளையாடுவதாக இனிமையான காலங்களோடு தொடங்கும் இந்த நாவல் இறுதியில்  லெப்ட் ரைட் என்று மார்ச் செய்யும் போர்முறை நடையுடன் முடித்திருப்பதில் எழுத்தாளர் காலத்தின் பரிமாணத்தை அழகாக கொண்டுவந்துள்ளார்.

'எல்லாம் மண்ணாசைதான் புள்ளை. மனிசன் மண்ணாசை பிடிச்சு திரிவான். அதுதான் உயிருக்கு அடிப்படை. அங்க இருந்துதான் அதிகாரத்தை உருவாக்க முடியும். பூமிமுழுக்க இந்தப் போக்கு மாறாது. ஆனால் மண்ணை இழந்திட்டால் மனிசன் வேரில்லாத மரம் போலதான். திரும்ப வேர் விடுறது அவ்வளவு இலேசு இல்லை' இது நாவலில் வரும் குணாவின் வசனம்.

நாவலை வாசித்து முடித்தபின்னும் இன்னமும் எனது காதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் வார்த்தை வயோதிபர்களின் 'பிள்ளை, பாலம் வந்திட்டுதே!' என்பதுதான். கதாபாத்திரங்கள் பாலத்தை கடந்துவிட்டிருந்தாலும் கர்ப்பநிலத்தை படித்துமுடித்த பின் பாலத்திற்கு இன்னும் நாம் யாரும் வந்து சேரவில்லையே என்ற உணர்வே எஞ்சி நிற்கிறது.

கர்ப்பநிலம் ஆவணம். காலத்தின் பதிவு. போரையும் போராட்ட வாழ்வியலையும் நிலத்தின் மீதான வாழ்வுரிமையையும் பதிவு செய்துள்ளது!

***

(நோர்வேயில் 24.02.18 இடம்பெற்ற கர்ப்பநிலம் அறிமுக விழாவில் கவிஞரும் எழுத்தாளருமான கவிதா லட்சுமி ஆற்றிய விமர்சன உரையின் எழுத்துவடிவம்)

3/17/2018 1:47:02 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்