Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

என்.சரவணனின் 1915: கண்டி கலவரம் -  பேரினவாத வேரை ஆவணப்படுத்துகிறது!

என்.சரவணனின் 1915: கண்டி கலவரம் -  பேரினவாத வேரை ஆவணப்படுத்துகிறது!
ரூபன் சிவராஜா

 

ஊடகவியலாளர் என்.சரவணனின் இருநூல்களின் அறிமுக நிகழ்வு 29.04.18 ஒஸ்லோவில் இடம்பெற்றது. «1915: கண்டி கலவரம்» (இலங்கையின் முதலாவது இனக்கலவரம்), «அறிந்தவர்களும் அறியாதவைகளும்» அவ்விருநூல்களுமாகும். இரண்டும் கட்டுரைகளின் தொகுப்பு நூல்கள்.

இக்கட்டுரையாளரின் தலைமையில் இடம்பெற்ற நூல் அறிமுகவிழாவில், கலாநிதி சர்வேந்திரா, கவிஞரும் எழுத்தாளருமான கவிதா லட்சுமி, ஊடகவியலாளர்கள் ராஜன் செல்லையா, பர்ஸான் பசீர் ஆகியோர் அறிமுக-விமர்சன உரைகளை ஆற்றியிருந்தனர். கண்டி கலவரம் நூல் பற்றியதும் சரவணன் பற்றியதுமான சில அறிமுகக் குறிப்புகளைக் கட்டுரையின் இந்தப் பகுதியிலும், அடுத்த பகுதியில் கருத்தாளர்களின் உரைகளின் சாராம்சத் தொகுப்பினையும் பதிவுசெய்ய விழைகின்றேன்.

இந்த இருநூல்களும் பேசுபொருள் சார்ந்து தமிழ் அரசியலுக்கும், சமகாலத்திற்கும் முக்கியமானவை. '1915 – கண்டிக் கலவரம்' இலங்கையின் முதலாவது இனக்கலவரமான கண்டிக் கலவரத்தினை மையப்படுத்தியது. அக்கலவரம் நடந்தேறி 100 ஆண்டுகள் கடந்த நிலையில், 2014 இல் அதனையொத்த கலவரம் அளுத்கம, பேருவல பகுதிகளில் நடந்தன. இந்த ஆண்டு மார்ச் மாதமும் கண்டியில் அதனையொத்த கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இத்தகைய சூழலில் 1915இல், நூறாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கண்டி கலவரத்தின் பின்னணி, தோற்றுவாய் பற்றிய வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ள நூல் இது. தினக்குரல் ஞாயிறு பதிப்பில் தொடராக வெளிவந்த 60 கட்டுரைகள் இந்நூலில் உள்ளன.

கொலனித்துவத்திற்கு எதிரான அரசியல், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியாகவும் பின்னர் அனைத்து இனங்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியாகவும் எந்த அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதென்பதை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பதிவுசெய்கிறது இந்த நூல்.

சிங்கள பௌத்த பேரினவாதம் எந்த அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றது, அதன் நிறுவனமயப்பட்ட கூறுகளை தகவல், ஆதார, ஆய்வு ரீதியாக முன்வைக்கின்ற வரலாற்று ஆய்வாக இந்த நூல் அமைந்துள்ளது.

இரண்டாவது நூல் அறிந்தவர்களும் அறியாதவையும். இதில் இலங்கையோடு தொடர்புடைய 25 ஆளுமைகள் பற்றிய தனித்தனிக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வீரகேசரி வார இதழின் 'சங்கமம்' பகுதியில் வெளிவந்த கட்டுரைகள் இவை. இலங்கைத் தீவின் வரலாற்று, சமூக, அரசியல், பொருளாதார அம்சங்களோடு வெவ்வேறு காலகட்டங்களில் செல்வாக்குச் செலுத்திய நபர்கள் இவர்கள் என்பது இந்நூலின் சிறப்பம்சம்.

கொலனித்துவ வரலாற்றுக் கட்டுரைகளே, இந்த நபர்கள் பற்றிய விரிவான கட்டுரைகளுக்கு திறவுகோலாக உந்துதலாக இருந்துள்ளது என்பதை சரவணன் இந்நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்.

25 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகை, ஊடக எழுத்துத்துறையில் இயங்கி வருபவர் சரவணன். அர்ப்பணிப்பு மனநிலையோடு நேரத்தையும் உழைப்பையும் எழுத்தில் செலவிடுபவர். 

என்.சரவணனின் 1915: கண்டி கலவரம் -  பேரினவாத வேரை ஆவணப்படுத்துகிறது!

சரிநிகர் பத்திரிகை மூலம் எழுத்துத்துறையில் ஒரு கட்டுரையாளனாக அறியப்பட்டவர் சரவணன். ஈழத்தமிழ் பத்திரிகைத் துறையில் சரிநிகர் பத்திரிகை தனித்துவம் மிக்கது. 1990ம் ஆண்டிலிருந்து 2001 வரை வெளிவந்த வாரப் பத்திரிகை. மாற்று இதழ் என்று சொல்லக்கூடிய காத்திரமான பங்களிப்பினை சரிநிகர் ஒரு பத்தாண்டு காலம் ஆற்றியிருக்கின்றது.

அப்பேர்ப்பட்ட சரிநிகர் பட்டறையில் ஊடகத்துறைப் பயிற்சி பெற்று, பட்டைதீட்டப்பட்டவர். அதன் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் அவர் பணிபுரிந்தவர். புனைபெயர்களில் ஏராளமான கட்டுரைகளை அந்தக் காலகட்டங்களில் எழுதியிருக்கின்றார்.

90களின் இறுதி ஆண்டுகளில் சரிநிகர் பத்திரிகையினை மிகுந்த ஈடுபாட்டோடு வாசித்த ஒரு வாசகனாக நான் இருந்திருக்கின்றேன். அதன் வார இதழ்களை சேகரித்து வைக்குமளவிற்கு அதன் தரம், உள்ளடக்கப்பெறுமதி, பயன்பாடு சார்ந்த மதிப்பீட்டினைக் கொண்டிருந்தேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். ஊடகத்துறையில் மாறுபட்ட கருத்துகளுக்கு முக்கியத்துவமும் மதிப்பும் கொடுக்கின்ற ஒரு பண்பினைக் கற்றுக்கொடுக்கக்கூடியது சரிநிகர்.

சரிநிகரில் தொடங்கிய ஊடகப் பயணம், தினக்குரல், வீரகேசரி போன்றவற்றின் வாரப்பதிப்புகளிலும் சமகாலத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நமது மலையகம்.கொம், பெண்ணியம்.கொம் போன்ற இணையத் தளத்திலும் அவருடைய கட்டுரைகளை, ஆய்வு எழுத்துகளை வாசிக்க முடியும்.

சரவணனின் சமூகப் பார்வை, அரசியல் பார்வை என்பது கூர்மை மிக்கது. சமூகநீதி சார்ந்த பார்வை அது. அது சமரசமற்ற பார்வையென்பதை அவருடைய எழுத்துகள் மூலம் கண்டடையலாம். அவருடன் உரையாடுவதன் மூலமும் உணர்ந்துகொள்ளலாம் என்பது என் போன்றவர்களின் அதவானிப்பு.

சிங்கள-பவுத்த பேரினவாதப் போக்கினை வெளிப்படுத்துவதை மையமாகக் கொண்ட அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை 25 ஆண்டுகளில் அதிகமாக எழுதியவர்களில் ஒருவர். சரவணனின் சிங்கள மொழி ஆளுமையானது (சிங்களத்தில் எழுதப்பட்ட நூல்கள் மற்றும் சிங்கள மொழிப் பத்திரிகைகள், கட்டுரைகள் மீதான வாசிப்பும் தேடலும்) நிறுவனமயப்படுத்தப்பட்ட சிங்கள பவுத்த பேரினவாதத்தின் போக்கினை உள்ளார்ந்த பரிமாணத்தில் புரிந்துகொள்ளவும் வெளிப்படுத்தவும் துணைநிற்கின்றது எனலாம்.

நோர்வே போன்ற புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்து கொண்டு பிரக்ஞைபூர்வமாகத் தொடர்ச்சியாக எழுதுவது என்பது எளிதல்ல. இயந்திரமயமான இந்த வாழ்க்கைச் சூழல் நிர்ப்பந்திக்கின்ற வருமான ஈட்டல், குடும்பம், ஏனைய நாளாந்தப் பணிகளுக்கு மத்தியில் எழுதுவதென்பது, அதுவும் தொடர்ந்து வாராவாரம் எழுதுவது என்பது மிகுந்த அர்ப்பணிப்பு மிக்க செயல். சமகால அரசியலை, அதன் போக்குகளை அவதானித்து எழுதுவதென்பது ஒரு வகை. ஆனால் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு, அதற்குரிய தகவல்களையும் மூல ஆதாரங்களையும் தேடியெடுத்து பகுத்து ஆய்ந்து முன்வைப்பதென்பது வேறுவகை. அதற்குரிய நேரம், உழைப்பு, தேடல் மிகப்பெரியதென்பதை நாம் அறிவோம்.

தவிர புதிய விடயங்களை, தமிழில் பற்றாக்குறையாக உள்ள விடயங்களை எழுதும் ஆர்வமும் உந்துதலும் கொண்டவராக இருக்கின்றார். இன்னொரு வகையில் சொல்வதானால் பேசாப்பொருளைப் பேசுவதை எழுதுவதை தனக்கான ஒரு இலக்காகவும் கொண்டிருப்பவர்.

ஒரு நாவலை வாசிப்பதற்கும் கட்டுரைத் தொகுப்பு நூலை வாசிப்பதற்கும் பெரிய வித்தியாசமுள்ளது. ஆயினும் சரவணனின் மொழி இலகுவானது. கதைசொல்லிக்குரிய லாவக மொழிநடையையும் அவரது எழுத்தில் காணமுடியும். சலிப்பின்றி வாசிக்கக்கூடிய எளிமையும் நேர்த்தியும் மிக்க சரளமான மொழிநடை. ஆர்வம் குறையாமல் வாசிப்பின் போக்கில் தடங்கல் இன்றி வாசிக்க முடிகிறது இந்நூல்களை.

அரசியல் சொல்லாடல்கள் மட்டுமல்ல. சமூக பொருளாதார, வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு எழுதும் எழுத்துகளிலும் பொருத்தமான சொல்லாடல்களைத் தெரிவு செய்து எழுதுபவர்.

இந்தத் தொடரில் உள்ள கட்டுரைகளின் நீளம் என்பது வாசகர்களை ஒன்றச் செய்யக்கூடிய அளவான நீளத்தில் அமைந்துள்ளன. தொடர் கட்டுரைகள் என்பதால் அவற்றிற்கிடையிலான ஒரு பிணைப்பு, அதாவது வாசகர்களை கட்டுரைகளின் போக்குடன் ஒன்றச் செய்வதற்குமான தொடுப்பு இன்றியமையாதது. ஒன்றிலிருந்து மற்றையதற்கான தொடர்ச்சி - இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் கட்டுரைகளின் கட்டமைப்பு அமைந்திருக்கின்றது.

இலங்கை அரசியலின் 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து, 19ஆம் நூற்றாண்டின் காலகட்டங்கள் இந்நூலில் பேசப்படுகின்றன. அது கொலனித்துவ ஆட்சியின் காலங்கள். எனவே இலங்கை நிலவரங்களைப் பேசுவதென்றால் இயல்பாகவே சர்வதேசம் பற்றியும் பேசவேண்டும். அதன் சூழல் பற்றிய வரலாற்று நிகழ்வுகள், திருப்புமுனைகள் பற்றிய அறிதல் அவசியப்படுகின்றது. இலங்கைத் தீவில் சர்வதேச சூழல் ஏற்படுத்திய தாக்கம், செல்வாக்கு பற்றியும் பேசவேண்டும். கண்டி கலவரம் நூலினை வாசிப்பவர்கள் இவற்றை விடயங்களை வாசித்து அறிய முடியும்.

வரலாற்றுப் பார்வையூடாக இடைப்பட்ட காலத்தினதும் சமகாலத்தினதும் எதிர்காலத்தினதும் போக்கினைப் புரிந்துகொள்ளுதல், அறிந்துகொள்ளுதல், கற்றுக்கொள்ளுதல் எனும் அடிப்படைகளில் இவ்விருநூல்களின் சமகாலப் பயன்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.

தொடர்ச்சியான ஆய்வுச் செயற்பாடுகளுக்கு, குறிப்பாக அரசியல் ஆய்வு மாணவர்களுக்கு பயனுடைய தகவல்கள், ஆதார தரவுகள் நிறைய இதில் உள்ளன.

«தனது கட்டுரைகளுக்கு நான் எடுத்துக் கொள்ளும் நேரமும் உழைப்பும் சக்தியும் அதற்கான தகவலை மீள்உறுதி செய்துகொள்வதற்காக» என்று குறிப்பிடுகிறார். தகவல்களின் நம்பகத்தன்மைக்கும் தகவல்களின் துல்லியத்தன்மைக்கும் நேர்த்திக்கும் அவர் கொடுக்கும் முக்கியத்துவம் இது. தவிர அவர் எழுதும் விடயங்கள் அடுத்தநிலை ஆய்வுகளுக்கு உதவியாக அமைய வேண்டுமென்ற கரிசனையினையும் அவர் கொண்டிருக்கின்றார்.

இன்றைய காலம் தகவல் யுகத்தின் காலம். உலக ஒழுங்கினையும், அதன் அரசியலையும் தீர்மானிக்கும் சக்தியாக தகவல்களே விளங்குகின்றன. அனைத்துவகைக் கருத்துருவாக்கங்களிலும் பெரும் செல்வாக்குச் செலுத்தும் வகிபாகத்தினை தகவல்களே கொண்டிருக்கின்றது. இந்த அடிப்படையில் தகவல்கள், தரவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சரவணனின் அணுகுமுறையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அரசியல், வரலாறு, சமூகம், மலையக மக்களின் வாழ்வியல், அவர்களின் உரிமைகள், பெண்ணியம், சாதியத்திற்கு எதிரான எழுத்துகள் எனப் பன்முகப்பரிமாணம் கொண்டவை சரவணனின் கட்டுரைகள், ஆய்வுகள்.

சிங்கள -பௌத்த தேசியவாதம் பலமான சித்தாந்த வடிவம் பெற்றுவிட்ட ஒன்று. அது படிப்படியாகப் பல்வேறு எதிர்மறையான பரிமாணங்களில் விரிவடைந்து இனவாதமாகவும் பேரினவாதமாகவும் ஈற்றில் பாசிசமாகவும் நீட்சிபெற்றுவிட்டது என்பது இந்த நூலில் நிறுவப்படுகின்றது. இந்தச் சித்தாந்தத்தை பாதுகாப்பதற்கு ஒரு பலமான அரச இயந்திரம் இருக்கின்றது.

இன்றைய கல்வி முறை, நீதி- நிர்வாகத்துறை, ஆட்சித்துறை என அனைத்திலும் இந்தச் சித்தாந்தத்தைப் பாதுகாக்கும் பொறிமுறை வலுவான கட்டமைப்பு வடிவமாக்கப்பட்டுள்ளன, நிறுவனமயப்பட்டுள்ளன என்பதையே இந்த நூற்றாண்டு வரலாற்றுப்பாடம் கற்றுத்தந்திருக்கிறது என்று இந்த நூலின் இறுதிக்கட்டுரையை நிறைவு செய்திருக்கின்றார் சரவணன். இந்த நூலின் சாரமும் இதுவே.

திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றினையும் தமக்குச் சாதகமான வரலாற்றினையும் பௌத்த சிங்கள பேரினவாத சக்திகள் தொடர்ச்சியாக முன்வைத்துவரும் ஒரு நிலையில் அதனை மறுதலித்து பக்கச்சார்பின்றி வரலாற்றை உள்ளபடி பதிவுசெய்யும் இதுபோன்ற நூல்களின் தேவை அதிகமிருக்கின்றது. இது ஒருவகையில் வரலாற்று மீட்பு என்ற வகைக்குள் அடங்ககக்கூடியது என்று சொல்லத் தோன்றுகிறது.

(தொடரும்)

5/12/2018 3:57:51 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்