Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அரசியற்தீர்வு - இந்தியாவை நம்பிப் பின்தொடர்வதில் உள்ள அபத்தங்களும் ஆபத்துகளும்

அரசியற்தீர்வு - இந்தியாவை நம்பிப் பின்தொடர்வதில் உள்ள அபத்தங்களும் ஆபத்துகளும்
தம்பு லோவி

 

இந்தியாவின் ஆதரவு இன்றி எந்த ஒரு தீர்வையும் ஈழத்தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது என்ற ஆழமான நம்பிக்கை பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் மத்தியில் பதிந்து காணப்படுவதுடன் இந்த நம்பிக்கையின் அடிப்டையில்தான் அவர்களது அரசியல் செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன. இது எந்தளவு தூரம் பிழையானதும் ஆபத்தானதும் என்பதனை விளக்குவதும், இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியாவின் உண்மையான முகத்தை காட்டுவதுமே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கை இனப்பிரச்சனை தொடர்பில் இந்தியாவின் வகிபாகம் குறித்து ஆய்வு செய்வதற்கு உண்மையில் குறைந்தது கடந்த நான்கு தசாப்த காலத்தில் தமிழ் மக்களின் போராட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு அரசியல் மற்றும் இராணுவ ரீதியிலான விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அத்தகைய ஒரு விரிவான ஆய்வினை செய்வது இந்த இடத்தில் பொருத்தமானதல்ல என்பதால், இந்த கட்டுரையானது இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாவதற்கு காரணமாக இருந்த விடுதலைப்புலிகளின் யாழ் குடாநாடு மீதான தாக்குதல் காலப்பகுதில் இருந்து ஆரம்பிக்கிறது.

இந்தியாவின் சதியும் வலையும்

போரியல் ரீதியில் மிகவும் பலமாக இருந்த விடுதலைப் புலிகள் அதைத் தக்கவைக்கவும் அதற்கெதிராக உலகளாவிய ரீதியில் திரண்டெழுந்து வந்த நேரடித் தலையீட்டைத் தவிர்ப்பதற்காகவும் 2000ம் ஆண்டு விரும்பியோ விரும்பாமலோ யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

அதாவது ஓயாத அலைகள் 3 ஐ தொடர்ந்து ஆனையிறவு முகாமை வீழ்த்தி யாழ் குடாநாட்டை கைப்பற்றும் நிலையில் இருந்த விடுதலைப் புலிகளை அவர்களது நடவடிக்கையை இடைநிறுத்தும் பொருட்டான நேரடியானதும் மறைமுகமானதுமான சில நடவடிக்கைகளை சில வல்லரசு நாடுகள் ஏற்படுத்தியிருந்தன. அவற்றுள் கீழ்வரும் நான்கு விடயங்கள் முக்கியமானவை. 

1. இந்து சமுத்திரத்தை கண்காணிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த அமெரிக்க, இராணுவ கட்டளைத் தளத்திலிருந்து உடனடியாக சிறீலங்கா இராணுவத்திற்கு உதவுவதற்காக போர்க்கப்பல் ஒன்றை இலங்கைக்கு அண்மையில் அமெரிக்கா நகர்த்தியது.

2. சுமார் 50000 சிறீலங்கா இராணுவத்தை பாதுகாப்பாக வெளியேற்றி தருவோம் என்று கூறிக்கொண்டு இந்தியா தனது தென்னிந்திய கடற்படைத் தளமான கேரளாவின் கொச்சியில் இருந்த கடற்படையையும் திருவனந்தபுரத்திலிருந்த விமானப்படையையும் தயார் நிலையி;ல் வைத்திருந்தது.

3. அதேநேரம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு தனது இராணுவத்தை தகுந்தபடி தயார்படுத்தவும் அவர்களுக்குத் தேவையான மரபு வழிச்சண்டையில் மிகவும் பயன்படக்கூடிய ஆயுதமான பல்குழல் எறிகணை செலுத்திகளையும், அவற்றுக்குரிய எறிகணைகளையும் பாகிஸ்தான் மற்றும் செக் குடியரசு ஆகியவற்றிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது. இந்த கால அவகாசத்தை சிறீலங்கா இராணுவத்தை வெளியேற்றித் தருவோம் என்ற கால இழுத்தடிப்பினூடாக இந்தியா செயற்படுத்தியது.

அரசியற்தீர்வு - இந்தியாவை நம்பிப் பின்தொடர்வதில் உள்ள அபத்தங்களும் ஆபத்துகளும்

4. இரகசியமான நேரடியான எச்சரிக்கை ஒன்றும் இந்தியத்தரப்பால் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டது.

இவ்வடிப்படையில் தான் விடுதலைப் புலிகள் யாழ்குடாவை கைப்பற்றும் நடவடிக்கையில் இருந்து பின்வாங்க நேரிட்டது. யாழ் குடாநாடு விடுதலைப் புலிகளின் கையில் விழுந்திருக்குமேயானால் அது ஏறத்தாள அவர்கள் தமது இலக்கை அடைந்ததற்கு சமனாக இருந்திருக்கும். அதாவது கிட்டத்தட்ட வடதமிழீழத்தின் 90 வீத நிலப்பரப்பு அவர்கள் கையில் வந்திருக்கும். அடுத்ததாக எஞ்சிய 10 வீத நிலப்பரப்பும் கிழக்கின் 40 வீதமான நிலப்பரப்பும் அவர்களின் முழுப் படைபலத்தையும் தென்முனை நோக்கி நகர்த்துவதன் ஊடாக இலகுவில் மீட்டெடுக்கக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கும். இதற்குத் தேவையான மனித வளமும் ஆயுத வளமும் யாழ்.குடாநாட்டை மீட்டிருந்தால் கிடைத்திருக்கும்.

புலிகளின் அபரிதமான வளர்ச்சியை நன்குணர்ந்த இந்தியா, அவர்களுக்கு முற்றுப்புள்ளி இட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டது. இனியும் தாமதித்தால் தன்னலத்திற்கு ஆபத்து என்றுணர்ந்து, தனது இரகசியத் திட்டத்தை, அதாவது 1989 இல் செயற்படுத்தி முடிக்க முடியாமல் போனதை, தந்திரோபாய நடவடிக்கையினூடாக முடிப்பதற்கு முடிவெடுத்தது.

அத்திட்டமானது விடுதலைப் புலிகளை என்ன விலை கொடுத்தாவது முற்றுமுழுதாக அழிக்க வேண்டும் என்பதே அவர்களின் திட்டமாக இருந்தது. உண்மையில் இந்தியாவிற்கு விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் அல்ல. மாறாக அவர்களின் சுதந்திர தமிழீழம் என்ற உறுதியான கொள்கையே அச்சுறுத்தலாக இருந்தது. இது தனது நாட்டில் நடக்கும் பிரிவினைவாதப் போராட்டங்களுக்கு உந்துசக்தியாகவும், அரைகுறையான மாநிலச் சுயாட்சிக் கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும் என்பது அப்போதிருந்து இன்றுவரை இந்தியாவின் நிலைப்பாடாகும். 

குறிப்பாக யாழ் குடாவிற்குள் விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த காலகட்டத்தில், இந்தியா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் நேரடியான தலையீட்டை ஏற்படுத்தியிருந்தன. ஆனால் சீனாவானது பெரியளவில் ஒன்றையும் செய்யாமல் நிதானமாக அந்தச் சூழ்நிலையை அவதானித்துக்கொண்டிருந்தது. சீனாவானது சிறீலங்காவுடன் நீண்டகால புரிந்துணர்வுடன் கூடிய நட்புறவை வளர்த்து வந்திருந்தது. அதனடிப்படையில் தான் அதன் செயற்பாடானது சிறீலங்காவுடன முள்ளிவாய்க்கால் முதல் தற்போது வரை அமைந்துள்ளது.

விடுதலைப் புலிகளோ அல்லது அவர்களின் சுதந்திரத் தமிழீழ கொள்கையோ ஒருபோதும் சீனாவுக்கான அச்சுறுத்தலாக இருந்ததில்லை. முள்ளிவாய்க்கால் சண்டை நடந்து முடியும்வரை அவர்களைப் பற்றி எந்த ஒரு ஊடகமும் பெரிதளவில் எழுதவுமில்லை. ஆனால் முள்ளிவாய்க்காலில் எழுந்த யுத்தக்குற்றச்சாட்டுக்களின் நேரடித் தாக்கம் தன்மீது விழத்தொடங்கியது என்றவுடன் சுதாகரித்துக் கொண்ட இந்திய உளவுத்துறை, சீனா என்ற கருவியை கையில் எடுத்து அதனைப் பெரியளவில் இந்திய ஊடகங்களின் ஊடாக பரப்புரைகளை ஏற்படுத்தியது. அதாவது போரியல் ரீதியான உதவிகளை நேரடியாக சீனா செய்ததாகவும், சீனாவின் செயற்பாட்டை தவிர்ப்பதற்காக தானும் சிறிலங்காவிற்கு உதவவேண்டிய நிலை ஏற்பட்டது போலவும், அதன் பின்னரான சீனாவின் தற்போதைய மேலாதிக்கத்தைக் குறைப்பதற்காக சிறிலங்காவுடன் இணைந்து செயற்படவேண்டிய தேவையுள்ளதாகவும் தனது பரப்புரையை மேற்கொண்டு வருகின்றது.

வல்லாதிக்க நாடுகளும் அவற்றின் நலன் சார் போட்டிகளும்

உண்மையில் உலக ஒழுங்கையும் அதன் செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானித்தவர்களுக்கு இது இலகுவாக புரியக் கூடிய விடயமாகும். இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று வல்லாதிக்க நாடுகளும் அவற்றின் நலன் சார் போட்டிகளும், அது இலங்கைத் தீவில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் சற்று அவதானிப்போமேயானால், யார் எமது உண்மையான எதிரி என்பது தெரியும்.

அமெரிக்க- சோவியத் ஒன்றிய பனிப்போர் காலங்களில் இவர்களுக்கு இடையிலான பனிப்போர் காரணமாக பல புதிய நாடுகள் (சுதந்திரத்திற்காக போராடிய நாடுகள்) உருவாகின. சோவியத் ஒன்றியத்தின் உடைவு காரணமாக இப்பனிப்போர் முடிவிற்கு வர, அமெரிக்கா உலக வல்லரசாகியது. அதன் இராணுவ பொருளியல் மேலாண்மை மற்ற நாடுகளுக்கு குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாக அமைந்தது. இதில் பல நாடுகள் அமெரிக்காவுடன் நல்லுறவில் இருந்தாலும், பொருளியல் ரீதியான மேலாண்மையை அவை விரும்பவில்லை. இதனால் தான் 1990களில் ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியம் என்ற நாடுகளின் கூட்டுப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் தனிவல்லாதிக்க நிலையும், நாடுகளின் கூட்டுப்பொறிமுறையான ஐரோப்பிய ஒன்றிய முறையும் உலகளாவிய ரீதியில் சுதந்திரமான நாடுகள் மேலும் அமைவதற்கான சூழலில் ஒரு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

இக்காலகட்டத்தில் தான் விடுதலைப் புலிகள் மிகவும் பலமான போராட்ட அமைப்பாக மாறியிருந்தனர். புலிகளின் வெற்றிகரமான ஆயுத போராட்டம் மற்ற நாடுகளின் சுதந்திரப் போராட்ட அமைப்புகளுக்கு தெம்பையும், நம்பிக்கையையும் கொடுத்ததுடன், அவர்களின் போராட்ட உத்திகளையும் பின்பற்றத் தொடங்கினர். துரதிஸ்டவசமாக சில பயங்கரவாத அமைப்புக்களும் புலிகளின் இராணுவ உத்திகளை பயன்படுத்த தொடங்கினர். இதுவே அமெரிக்காவை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக திரும்ப வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன், அமெரிக்காவைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளோ, அவர்களின் சுதந்திரத் தமிழீழ கொள்கையோ நேரடியான அச்சுறுத்தலாக இல்லாமல் இருந்தாலும், மேற்கூறிய உலக ஒழுங்கானது சுதந்திர தமிழீழத்தை ஏற்கக் கூடிய நிலையில் இருக்கவில்லை.  

உண்மையில் இந்த மூன்று வல்லரசுகளுக்குமிடையில், இலங்கையை மையப்படுத்தி இராணுவரீதியிலான, பொருளியல் ரீதியிலான மேலான்மை நிலை என்ற இரண்டு நகர்வுகள் நடைபெறுகின்றன. இதில் முதலில் அமெரிக்காவைப் பார்ப்போமானால் -

பொருளியல் ரீதியாக, இந்தியா, பாக்கிஸ்தான், சீனா, இந்தோனேசியா போன்ற பாரிய பொருளாதார சந்தை வாய்ப்புக்களை கொண்ட கேந்திர நிலைகளுக்கு அண்மையில் இலங்கை இருப்பதால், அமெரிக்கா தனது காலடியை இலங்கையில் வலுவாக ஊன்றுவதற்கு முயற்சிக்கின்றது. தனது தனி வல்லரசு நிலைக்கு சவாலாக வளர்ந்து வரும் சீனாவை கட்டுப்படுத்தும் முகமாக இந்தியாவை தனது பக்கத்தில் வைத்திருப்பதற்கு அது விரும்புகின்றது. அதுமட்டுமல்லாது இந்தியா, சீனா, ரஷ்யா என்ற முக்கூட்டு செயற்திட்டத்தை (இதை ரஷ்யா 2000ம் ஆண்டிலிருந்து முயற்சித்து வருகிறது) முறியடிப்பதற்கும் இந்தியாவை தனது பக்கத்தில் வைத்திருக்க விரும்புகின்றது. இக்காரணங்களினால் தான் இந்தியாவைச் சுற்றி சீனாவின் செயற்திட்டத்தை விட அமெரிக்காவின் செயற்பாடானது அதிகமாக இருக்கின்றது. ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், மியன்மார், இலங்கை, அண்மையில் மாலைதீவு என தனது செயற்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.

மறுமுனையில் சீனாவானது தனது உற்பத்திகளின் சந்தைப்படுத்தலை குறிப்பாக ஐரோப்பா, ஆபிரிக்கா, தென்னமெரிக்கா, அரேபியா நாடுகளிற்கான விநியோகப் பாதையாகவும் இதற்குத் தேவையான எரிபொருட்களுக்கான அரேபியக் கடலூடான வழங்கல் பாதையாகவும் இருக்கின்ற இலங்கையில் தனது காலை வலுவாக ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது.

இந்தியாவானது தனது பொருளாதார சந்தைப்படுத்தலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருக்க முயற்சிக்கின்றது. இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் விடுதலைப்புலிகளின் தமிழீழ கொள்கையும் அந்த கொள்கையை பற்றுறுதியுடன் பின்பற்றியதால் அந்த இயக்கமும் அமெரிக்க சீன அச்சுறுத்தல்களை விட பாரிய அச்சுறுத்தலாக விளங்கியமையால், அந்த அச்சுறுத்தலை இல்லாது ஒழிப்பதற்கு இந்த இரண்டு அரசுகளையம் இலங்கைக்கு உதவுவதற்கு பயன்படுத்திக் கொண்டது.

உண்மையில், அமெரிக்க சீனப் போட்டியில் இலங்கையில் சீனாவின் செல்வாக்கு இருப்பதையே இந்தியா விரும்புகின்றது. இதனை நம்புவது கடினமானது தான். ஆனால், உலக மகா யுத்தத்தின் பின்னர், உலக நாடுகளிடையேயான வல்லாதிக்கப் போட்டியில் இந்தியாவின் சார்பு நிலை அரசியலின் மைய நலன் குறித்து நுணுக்கமாக ஆராயும் போது இதனை புரிந்து கொள்ளலாம். இந்திய சீன எல்லைப் பிரச்சினை இன்றும் இருக்கின்ற போதிலும், அது ஒருகாலமும் முழு அளவிலான போரை உருவாக்காது. இதற்கு இரு நாடுகளும் உண்மையில் தயார் இல்லை. ஆனால் அமெரிக்க சீனப் போட்டியில் அமெரிக்காவானது சீனாவை எப்படி வலுவிழக்கச் செய்யலாம் என்ற முயற்சியில் முன்னெடுக்கும் இரண்டு திட்டங்கள் தான் இந்தியாவை கவலை கொள்ள செய்திருக்கிறது. அவையாவன,  

1. அதன் ஒருமைப்பாட்டைச் சிதைத்தல்

2. அதன் மேற்கத்தைய சந்தைப்படுத்தலை கட்டுப்படுத்தல்

இதில் முதலாவதாக சொல்லப்பட்ட செயற்திட்டத்தினை செயற்படுத்தினால், அது இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாதிக்கும். இரண்டாவது செயற்திட்டத்தைச் செயற்படுத்தினால் சீனா தனது சந்தைப்படுத்தலை இந்தியாவிலும், இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளிலும் செயற்படுத்த முயற்சிக்கும். இதனால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிப்படையும்.

உலகளாவிய ரீதியிலான தலையீட்டில் ரஷ்ய- சீன- இந்திய நிலைப்பாடுகளில் ஒரேவிதமான அணுகுமுறையே காணப்படுகின்றன. இது இராணுவரீதியிலான நோக்கங்களுக்காகவும், மேற்கின் தன்னிச்சையான வல்லாதிக்க நிலையை எதிர்ப்பதற்காகவும் ஒருங்கிணைய வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே, ரஷ்யாவின் முன்மொழிவான முக்கூட்டுச் செயற்திட்டம் எந்தவிதமான உடன்படிக்கையும் இல்லாமல் மறைமுக நிகழ்ச்சிநிரலில் செயற்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவின் நட்புறவு நாடுகள் என்று அழைக்கும் நாடுகளே அமெரிக்காவின் வளர்ச்சியைக் கண்டு தமக்கிடையேயான ஐரோப்பிய ஒன்றியம் என்ற கூட்டை ஏற்படுத்தும்போது, மேற்சொன்ன மூன்று நாடுகளும் ஒருங்கிணைந்து செயற்படுவது என்பது ஒன்றும் அதிசயமல்லவே.

போர்நிறுத்தப் பொறி

மேற்கூறிய விடயங்களை வைத்துப் பார்க்கும்போது இந்தியா எவ்வளவு தூரம் எமது விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு முயற்சித்திருக்கும் என்பதை அறியக் கூடியதாக இருக்கும். 2000ம் ஆண்டு யாழ் குடாநாடு மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலைகள் விடுதலைப் புலிகளுக்கு ஒன்றை தெளிவாக உணர்த்தியது. அதாவது இவ்விதமான இராணுவத் தாக்குதல் மேலாண்மை என்பது, சர்வதேச நடவடிக்கை ஒன்றிற்கு வழிகோலி பாதகமான விளைவை கொண்டுவரும் என்றும், அதனால் அவர்களும் அவ்விக்கட்டில் இருந்து தற்காலிகமாக தப்புவதற்கு, இந்தியா மறைமுகமாக விரித்த வலையான போர்நிறுத்த உடன்படிக்கையில் நோர்வேயை கண்காணிப்பாளராக ஏற்றுக்கொண்டு சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள்.

விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நோக்கம் பின்வருவனவற்றை அடிப்படையாக கொண்டமைந்திருந்தது.

1. தற்காலிகமான ஓய்வு மற்றும் ஆயுத வளங்களைச் சேர்த்தல்

2. முடிந்தவரை தம்மீதான பயங்கரவாத முத்திரையை அகற்றுதல்

3. தமது நிர்வாக அலகிற்கு சர்வதேச ரீதியான ஓர் அங்கீகாரத்தைப் பெறல். அதனூடாக ஓர் இடைக்காலத் தீர்வை பெற்றுக்கொள்ளல்.

4. தமிழர் பிரச்சினையை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்லல்.

இந்தியாவைப் பொறுத்தவரையில்

1. விடுதலைப் புலிகளை எப்படியாவது இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட வைத்தல்

2. இந்தப் போர்நிறுத்தத்தை அடிப்படையாக வைத்து விடுதலைப் புலிகளை மிக நீண்டகாலத்திற்கு போராடும் ஆற்றலிலிருந்து தள்ளி வைத்திருத்தல்.

3. விடுதலைப் புலிகள் சம்பந்தமான முழுமையான தகவல்களை திரட்டுதல், அவர்களை பலவீனப்படுத்துதல், மற்றும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துதல்.

4. சிறிலங்கா இராணுவத்தை ஆயுத மற்றும் ஆளணி ரீதியாக பலப்படுத்த உதவுவதும், கால அவகாசத்தை கொடுத்தலும்

5. சரியான தருணம் வரும்போது, விடுதலைப் புலிகள் மீது பெரும் அழித்தொழிப்புத் தாக்குதலை சிறிலங்கா இராணுவத்தைக் கொண்டு மேற்கொள்ளல்.

6. விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை செயலிழக்கச் செய்தலும், அதனூடாக விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை இனம்காணுதலும்.

7. விடுதலைப் புலிகளின் முதுகெலும்பாக உள்ள தளபதிகளை இனங்காணுதல், அவர்களை அழித்தல். இதில் ஒரு முக்கிய விடயம் யுத்த நிறுத்த உடன்படிக்கை சம்பந்தமான ஆரம்பகட்ட பேச்சில் கலந்துகொண்ட மூத்த தளபதி கேணல் சங்கர் ஆழஊடுருவும் அணியினால் கொல்லப்பட்ட சம்பவமாகும். அவரின் நடமாட்டம் யுத்தநிறுத்தப் பேச்சுக்களின் ஊடாக வெளித்தெரிய வந்தது. இந்த இழப்பு விடுதலைப் புலிகளின் மேல் முள்ளிவாய்க்கால் வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கையை பொறுத்தவரை

1. சிதைந்து போன இராணுவக் கட்டமைப்பை ஒருங்கமைத்து கட்டியெழுப்புதல்

2. விடுதலைப் புலிகள் மீண்டும் ஒரு தாக்குதல் நிலைக்குச் சென்றால் அதற்கெதிரான செயற்படுவதற்கு சர்வதேச பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துதல்.

3. விடுதலைப் புலிகளை எப்படியாவது ஓர் ஆயுதக் களைவை நோக்கி நிர்ப்பந்தித்தல்.

4. அதனூடான ஒரு தீர்வை அவர்கள் மேல் திணித்தல்.

உண்மையில் சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் ஓர் இடைக்கால தீர்வை விரும்பிய நிலையில் தான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். ஆனால் மறுதலையில் இதை அரங்கேற்றிய இந்தியாவிற்கு இதைப்பற்றிய அக்கறை துளிகூட இல்லை. அண்மையில் நோர்வே வெளியிட்ட Pawns of Peace அறிக்கையில் இருந்து இந்தியாவின் இத்தகைய உள்நோக்கம் கொண்ட வகிபாகத்தை தெரிந்து கொள்ளலாம்.

இனி யுத்தநிறுத்த உடன்படிக்கையின் பின்னதான செயற்பாடுகளை ஆராய்வோமானால், யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் விடுதலைப் புலிகள் தமது உறுப்பினர்களை அரசியல் செயற்பாடுகளிற்காக இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு அனுப்பினார்கள். அவர்கள் மாணவர்கள், மக்கள் ஆகியோரின் அமோக ஆதரவுடன் வரவேற்கப்பட்டார்கள். அதேநேரம் சிறிலங்கா இராணுவமும் அமைதியான முறையில் அவர்கள் சம்பந்தமான தரவுகளை இரகசியமான முறையில் திரட்டத் தொடங்கியது.

முதலாவது பாரிய யுத்தநிறுத்த மீறலாக, விடுதலைப் புலிகளின் படகு பூநகரி கடற்பகுதியில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் அமைந்தது. இதில் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். இதற்கெதிராக அவசர அவசரமாக அமெரிக்கா ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டு, புலிகளை அமைதிகாக்கும்படியும் வேண்டிக்கொண்டது. இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்திய அதே அமெரிக்கா, அவர்களிடம் அமைதிகாக்கும்படியும் போர்நிறுத்த உடன்படிக்கையை முறித்துக் கொள்ள வேண்டாம் எனவும் வேண்டிக்கொண்டது தான்.

அமெரிக்காவின் இத்தகைய சில ஆரம்பகால செயற்பாடுகள் விடுதலைப் புலிகளுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. அதாவது தமது அமைப்பு மீதிருக்கும் பயங்கரவாத முத்திரையை அமெரிக்கா நீக்கும் என்பதாகும். ஆனால் இது அவர்களுக்கு வைக்கப்பட்ட ஒரு பொறி என்பதை அவர்கள் சிறிது காலம் சென்ற பின்னர்தான் உணர்ந்தார்கள்.

சில மாதங்கள் நம்பிக்கையுடன் ஓடின. பின் மெதுமெதுவாக இடுப்புப்பட்டி அணிதல், புலிக்கொடி ஏற்றுதல் என்று சிறு சிறு விடயங்கள் கூட புலிகளின் யுத்தநிறுத்த மீறலாக பதியப்பட்டது. துணை ஆயுதக்குழுக்களைக் கொண்டு அரசியல் செயற்பாட்டுக்கு வந்திருந்த போராளிகள் மேல் அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டன. அரசியல் கூட்டங்களுக்கு தடையேற்படுத்தப்பட்டன. மறுபுறம் இராணுவமானது மக்கள் மீதான கெடுபிடிகளை தொடர்ந்த வண்ணம் இருந்தது. சில இடங்களில் மக்களின் அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் நடத்தி கணிசமான உயிரிழப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. உயர் பாதுகாப்பு வலையங்களை அகற்ற மறுத்திருந்தது. மறைமுக பொருளாதார தடையை தொடர்ந்த வண்ணம் இருந்தது.

பேச்சுவார்த்தையானது எதுவித திருப்பங்களையும் ஏற்படுத்தாமல் புலிகள் மீதான அழுத்தங்களை அதிகரித்தவண்ணம் தொடர்ந்துகொண்டிருந்தது. பேச்சுவார்த்தையின் இடைநடுவில் இணைத்தலைமை நாடுகள் (Co-chairs) என்ற பெயரில் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்தியாவின் பூரண அனுசரணையுடன் உள்நுழைந்து கொண்டார்கள். இவர்கள் விடுதலைப் புலிகளை ஓர் ஆயுதக் களைவை நோக்கி கொண்டு செல்வதற்கு முற்பட்டார்கள்.

இது விடுதலைப் புலிகளை மீண்டும் ஓர் இறுக்கமான முடிவை எடுக்க நிர்ப்பந்தித்தது. புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து ஒதுங்கத் தொடங்கினார்கள். பகிரங்க ஆட்திரட்டல்களை செயற்படுத்தத் தொடங்கினார்கள். இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் துணை இராணுவக் குழுக்களுக்கு எதிரான மறைமுக தாக்குதல்களைத் தொடங்கினார்கள். இலங்கை இராணுவமும் ஆட்சேர்ப்பு, போராயுதங்களைக் கொள்வனவு செய்தல், யுத்த ஆயுதங்களை வாங்கிக் குவித்தல், ஆழ ஊடுருவும் அணிகளை இறக்கி முக்கிய தளபதிகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்துதல் போன்ற செயற்பாடுகளை ஏலவே தொடங்கியிருந்தார்கள்.

இதற்கிடையில், இணைத்தலைமை என்று வந்த நாடுகளில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக லஷ்மன் கதிர்காமரின் படுகொலையைத் தொடர்ந்து அறிவித்தது. இந்த அறிவிற்பிற்கு இலங்கையில் இருந்த ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தவர்களின் அதிதமான அழுத்தங்களே காரணமாயிற்று. இதற்கு இந்தியாவின் ராஜதந்திர அழுத்தங்களும் ஆலோசனைகளும் காரணமாக இருந்தன.

விடுதலைப் புலிகள் சுதாகரித்துக் கொண்டு மீண்டும் தாக்குதல் நிலைக்குச் செல்லப்போகின்றார்கள் என்றுணர்ந்த இந்தியா, தனது அடுத்த கட்டத் திட்டத்தை செயற்படுத்தத் தொடங்கியது. இந்திய- அமெரிக்க கூட்டுச் சதியின் ஊடாக, விடுதலைப் புலிகள் எதிர்பார்த்திராத வகையில், விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கணிசமான ஆள், ஆயுத வளங்களுடன் பிரிந்தார். (இதுவும் விடுதலைப் புலிகளை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்றது).

இவற்றையெல்லாம் ஒருவாறு முறியடித்து சரியான நேரத்தில் தாக்குதல் ஒன்றைச் செயற்படுத்த திட்டமிட்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு மேலும் ஒரு பேரிடியாக சுனாமி என்ற பாரிய இயற்கை அனர்த்தம் அமைந்தது. இது முழு இலங்கைத் தீவிற்கும் பாரிய உயிர், உடைமை அழிவை ஏற்படுத்தியிருந்தது.

உடனடியாக விடுதலைப் புலிகள் தங்கள் தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டு மக்களின் அவலங்களைப் போக்க விசேட செயலணியை அமைத்து செயற்படுத்தினார்கள். இந்த சுனாமித் தாக்கத்தினால் தமது தொடக்க திட்டங்களை தள்ளிவைத்தனர். ஆனால் இது விடுதலைப் புலிகளின் முற்றான அழிவிற்கு வழிகோலியது.

சுனாமி நிவாரண உதவி என்ற பெயரில் இந்திய, அமெரிக்கக் கடற்படையினர் இலங்கையின் கிழக்குக் கடற்கரை ஊடாக இலங்கை வரலாற்றில் முதல்முறையாக வந்து இறங்கினார். பல அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக பல நூறு உளவுத் துறையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் எவ்வித தடங்கலும் இன்றி உட்புகுந்தார்கள். இத்தகைய சில அரச சார்பற்ற நிறுவனங்கள் விடுதலைப் புலிகளின் பகுதிகளில் சிறிய அளவிலான உதவிகளைப் புரிந்திருந்தார்கள்.

விடுதலைப் புலிகள், மக்கள் இப்பெரும் அனர்த்தத்தின் பிடியிலிருந்து முதலில் விடுபடட்டும் என்ற சிந்தனையில் இருந்தபொழுது, மறுபுறத்தில், சிறிலங்கா இராணும் நன்கு ஒருங்கமைக்கப்பட்டு பல ஆயிரம் பேர் உள்வாங்கப்பட்டு ஊதிப் பெருத்திருந்தது. சிறிது காலத்தின் பின் சிறிலங்கா இராணுவம் மீண்டும் ஆழ ஊடுருவும் அணி, வெள்ளை வான் குழு ஆகியவற்றின் மூலம் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள், ஆதரவாளர்கள் மீதான தாக்குதல்களை ஏற்கனவே நன்கு திரட்டப்பட்ட உளவுத் தகவல்களுடனும், விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த கருணா குழு உறுப்பினர்களின் உதவியுடனும் தொடங்கியது. இதற்காக இந்தியாவின் பாதுகாப்பிலிருந்த கருணா இலங்கைக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதேநேரம் விடுதலைப் புலிகளின் நகரும் ஆயுதக் களஞ்சியங்களான அவர்களின் பாரிய கப்பல்கள், சர்வதேச கடல்பகுதியில் வைத்தும், இலங்கை கடற்பரப்பில் வைத்தும் இந்திய அமெரிக்க உளவுத் தகவல்கள் அடிப்படையில் தாக்கி அழிக்கப்பட்டன. இதற்காக இந்தியா வழங்கிய 2 பாரிய போர்க் கப்பல்களையும், அமெரிக்கா வழங்கிய கப்பல்களையும் சிறிலங்கா கடற்படை பயன்படுத்தியது. சில சர்வதேச கடற்பகுதியில் வைத்து தாக்கப்பட்ட தாக்குதல்களில் இந்தியக் கடற்படையும் நேரடியாக பங்குபற்றியிருந்தது.

அதேவேளை விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் வெளிநாடுகளில் வைத்து கைது செய்யப்பட்டனர். சொத்துக்கள் முடக்கப்பட்டன. இதுவும் இந்திய அமெரிக்க கூட்டு நடவடிக்கை மூலமும், தகவல் பரிமாற்றம் மூலமும் நடைபெற்றது.

இவற்றையெல்லாம் நன்குணர்ந்த விடுதலைப் புலிகள், தம்மீதான பாரிய அழித்தொழிப்புத் தாக்குதல் ஒன்று சர்வதேசத்தின் உதவியுடன் நடைபெறப்போவதை உணர்ந்து, தாக்குதல் நிலையை கைவிட்டு தற்காப்பு நிலைக்கு சென்றார்கள். அதில் ஒன்றுதான் சுனாமி கட்டமைப்பு என்ற சிறிய கட்டமைப்பு ஒன்றிற்கு இணங்கி, அதனூடாக தம்மீதான வலிந்த தாக்குதல் ஒன்றை தவிர்ப்பதற்கான முயற்சி ஒன்றை அவர்கள் மேற்கொண்டமை ஆகும். ஆனால், இதனைக் கூட ஜே.வி.பி யின் ஊடாக சிறிலங்காவின் உயர்நீதிமன்றத்திற்கு எடுத்து சென்று செல்லுபடியற்றதாக்கினார்கள். நோர்வே அண்மையில் வெளியிட்ட அறிக்கையையும், அவ்வப்போது ஊடகங்களில் வெளியான செய்திகளையும் நுணுக்கமாக ஆராயும்போது இதற்கும் பின்னால் இந்தியா செயற்பட்டமையை அறியலாம்.

அதே நேரம் சிறீலங்காவின் ஜனாதிபதி தேர்தலும் வந்தது. இதில் ரணில் வெற்றியீட்டினால் சர்வதேச ஆதரவுடன் தம்மீதான தாக்குதல் தீவிரம் அடையும் என்று எண்ணி, தேர்தலை பகிஷ்கரிப்பதன் ஊடாக இராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவருவதன் ஊடாக தீவிர சர்வதேச தலையீட்டை மட்டுப்படுத்தலாம் என புலிகள் எண்ணியிருந்தார்கள். ஆனால் இராஜபக்ஷவின் வருகை களநிலவரங்களில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.

இதைத் தொடர்ந்து இராணுவத் தலைமை மீதான தாக்குதலினூடாக இராணுவக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி, தாக்குதலை சில மாதங்கள் தள்ளிவைக்க முடியும் என்று நம்பினார்கள். ஆனால் அதுவும் கைகூடிவரவில்லை.

மாவிலாறு என்ற சிறிய மக்கள் மத்தியிலான பிரச்சினையை மையமாக வைத்து பாரிய இராணுவ நடவடிக்கையை இந்தியாவின் அனுசரணையுடன் போர்நிறுத்த உடன்பாட்டை மீறி சிறீலங்கா இராணுவம் தொடங்கியது. இத்தாக்குதல் முள்ளிவாய்க்கால் வரை சென்று பெரும் உயிர் உடமை அழிவுகளுடன் முற்றுப்பெற்றது.

யார் உண்மை எதிரி?

இங்கு இவற்றையெல்லாம் ஏன் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது என்றால், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உண்மையான எதிரியை சரியாக அடையாளம் கண்டிருந்தாலும், அவர் அதற்கெதிரான எந்தவகையான அணுகுமுறையையும் எடுக்கவில்லை. ஒரு கட்டத்தின் பின்னர், இந்தியாவுக்கெதிராக செயற்படக்கூடாது என்ற பிரபாகரனின் முடிவு, இறுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை பாதுகாப்பதற்கு அவசியமான சில செயற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் கூட அவரை எடுக்கவிடாமல் தடுத்தது. இதற்கு பிரதான காரணமாக இந்தியா இல்லாமல் எந்தத் தீர்வும் சாத்தியப்படாது என்ற பழைய தமிழ்த் தலைவர்களின் கருத்துக்களும், சரியான தூரநோக்குடனான இந்திய இலங்கை தொடர்பான நகர்வுகள், தகவல்கள் என்பவற்றில் ஏற்பட்டிருந்த வெற்றிடமும், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு நிலையும் காரணமாக அமைந்தன.

சீனாவின் செயற்பாடுகள் தான், தனக்கு இலங்கையுடனான உறவை வளர்ப்பதற்கு வழிவகுத்தது என்று அன்று தொட்டு இன்றுவரை கூறிவருகின்ற இந்தியாதான், முள்ளிவாய்க்காலில் நடந்த பாரிய இனப்படுகொலையின் உண்மையான போர்க் குற்றவாளி. இவர்களுடன் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான்கின்மூன், விஜய் நம்பியார் போன்றவர்கள் மனித குலத்திற்கு எதிராக நடைபெற்ற மிகப் பெரிய படுகொலைகளைத் தடுக்கக் கூடிய நிலையிலிருந்தும், இந்தியா என்ற போலியான ஜனநாயக திரையைப் போட்டுக்கொண்டிருக்கும் நாட்டின் விருப்பத்திற்கேற்ப இன்றுவரை செயற்பட்டு போர்க் குற்றத்தில் பங்கு கொள்கிறார்கள். 

ஆனால், இன்றுவரை எம்மில் பலபேர் இந்தியா இல்லாமல் இங்கு ஒரு தீர்வும் ஏற்படாது என்று கூறி வருகிறார்கள். எமது ஆயுதப் போராட்டம் ஆனாலும் சரி, அஹிம்சைப் போராட்டம் ஆனாலும் சரி, இந்தியாவை நம்பி செயற்பட்டதால்தான் தோல்வி நிலைக்கு கொண்டு சென்றது. இதற்கு எம்மிடம் நாடுகளின் நலன்சார்புநிலைத் தன்மை போன்ற தூரநோக்குடனான செயற்பாட்டின்மையே காரணமாக அமைந்தது.

3/16/2012 6:29:19 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்