Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

’திருமாவளவன் மட்டும் உண்மைகளை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்’

’திருமாவளவன் மட்டும் உண்மைகளை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்’
வி.அ.ரங்கநாதன் (இலங்கை)

 

இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் இலங்கை விஜயம் குறித்த சர்ச்சைகள் தமிழ்நாட்டில் எழுந்துள்ளன. இப்பயணம் வெறும் கண்துடைப்பு எனவும் இப்பயணத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்தும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் மிகவும் சரியானவை.

இலங்கையில் இன்று தமிழ் மக்கள் எதிர்கொண்டு நிற்கும் அரசியல் சூழலை இந்திய நாடாளுமன்றத் தூதுக் குழு நேரடியாக விஜயம் செய்துதான் அறியவேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. இது தொடர்பான உண்மைகளை சர்வதேச ஊடகங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் பல ஆண்டுகளாகவே வெளிப்படுத்தி வந்துள்ளனர். அரைநூற்றாண்டுக்கும் மேலான இன ஒடுக்குமுறை வரலாற்றை பட்டறிவின்  ஊடாகப் புரிந்து கொள்வதே மேலானதும்கூட

போர் முடிவுற்றதன் பின்னர், இதுபோன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட, ரி.ஆர்.பாலு, கனிமொழி, திருமாவளவன் போன்றோரை உள்ளடக்கிய தமிழக நாடாளுமன்றக் குழுவின் பயணமும் எவ்வித பலனுமின்றி கடும் விமர்சனங்களுக்கு ஆளானது நாம் அறிந்ததே. இப்பயணம் குறித்து இதுவரை வெளியாகாத மறைந்திருக்கும் உண்மைகளை வெளிப்படுத்துவது இது போன்ற பயணங்கள் குறித்த மாயைகளை விலக்க உதவும் என்றே நம்புகிறோம்.

ஆசிரியர்

***

மறைந்திருக்கும் உண்மைகள் - தமிழ்நாடு நாடாளுமன்ற குழுவின் இலங்கைப் பயணம் - 4

வவுனியா அகதி முகாம்களுக்கான பயணம்

இரண்டாம் நாள் 12 மணிக்குப் பின்னர் நாடாளுமன்றக் குழுவினர் வவுனியா முகாம்களுக்கு சென்றனர். முன்னர் கூறியது போல இவர்களுடைய பயணத்தின் முக்கிய நோக்கம் முகாம்களைப் பார்வையிடுவதே என்பதனால் அங்கே அதிக நாட்களையும், நேரத்தையும் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் வெறுமனவே 5 மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. 30 முகாம்கள் இருந்த போதும் 5 முகாம்களை மட்டுமே இவர்கள் பார்த்தனர். ஏனைய முகாம்களைப் பார்ப்பதற்கு இவர்களுக்கு நேரம் இருக்கவில்லை.

’திருமாவளவன் மட்டும் உண்மைகளை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்’

இவர்கள் முகாம்களில் கூடாரங்களுக்கு சென்று மக்களுடன் பேசிய போதிலும்   படையினரும், உளவுப்பிரிவினரும் கூடவே சென்றதனால் மக்கள் சுதந்திரமாக பேசும் நிலை இருக்கவில்லை. பயணக்குழுவினர் முன்கூட்டியே திட்டமிட்டு முன்கூட்டியே தரவுகளை சேகரிக்க முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. குறிப்பாக இடம்பெயர்ந்தோர் உரிமைகள் ஐ.நா சமவாயத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதை அவதானிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டும்.

அங்குள்ள பெற்றோரை இழந்த குழந்தைகள், ஊனமுற்றவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், மற்றும் முதியவர்களை குழுமமாகச் சந்தித்து தகவல்களைச் சேகரித்திருக்க வேண்டும். விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என ஆயிரக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும், குடும்பத் தலைவர்களும் படையினரால் தனியான முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அக்குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்திருக்க வேண்;டும். ஆனால் இச்செயற்பாடுகள் எதுவும் ஒழுங்குப்படுத்தப்பட்ட வகையில் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

முகாம் மக்கள் இங்கிருந்து வெளியேற தயவு செய்து உதவுங்கள் என ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்தனர். கண்ணீர் ததும்பிய நிலையிலேயே இவ்வேண்டுகோளை விடுத்தனர்.

பாதுகாப்பு நெருக்கடிகளினால் முகாம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை பற்றியும் கூறினர். நீர்ப்பற்றாக்குறை நிலவுகின்றது. ஐந்து நாட்களுக்கு ஒரு தடவை தண்ணீர் தரப்படுவதாகவும் தெரிவித்தனர். மக்களுக்கு அரசாங்கம் அரிசியை வழங்குகின்ற போதிலும் எண்ணெய், காய்கறி மற்றும் ஏனைய பொருட்கள் கிடைப்பதில்லை என்றும், பணம் எதுவும் இல்லாத நிலையில் தாம் அதற்காக பெரிதும் கஷ்டப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

பருவமழை பெய்ய ஆரம்பித்தால் நோய் பரவும். கூடாரங்கள் விழுந்துவிடும் என்றும் அச்சம் தெரிவித்தனர். மலசல கூடப் பற்றாக்குறையையும், வரிசையில் நிற்க வேண்டிய அவலத்தையும் தெரிவித்ததோடு கழிவு நீர் அகற்றப்படாத பிரச்சினையையும் குறிப்பிட்டனர்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புப்பட்டவர்கள் என கூறி அடைத்து வைக்கப்பட்டவர்களின் முகாம்களை இவர்கள் பார்க்கவில்லை. அரசாங்கம் அதற்கு சம்மதிக்கவில்லை. இவர்களும் அதற்கான முயற்சிகளைச் செய்ததாகத் தெரியவில்லை.

உண்மையில் இக்குழுவினர் பல்வேறு குழுவினராகப் பிரிந்து அங்குள்ள சுகாதாரப் பிரச்சினை, உணவுப் பிரச்சினை, சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கான பிரச்சினை, பெண்கள் பிரச்சினை, படையினரின் கெடுபிடிகள் என்பவற்றை தனித்தனியாக ஆய்வு செய்திருந்தால் இவர்களின் பயணம் ஆரோக்கியமானதாக இருந்திருக்கும். வெறும் எட்டுப் பக்க அறிக்கையை மட்டும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டிய அவலம் இருந்திருக்காது. அந்த எட்டுப் பக்கத்திலும் நான்கு, ஐந்து பக்கங்கள் தான் அகதிகள் பற்றிய பிரச்சினையாக இருந்திருக்கும். முகாமிலிருந்து வெளியேறிய பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குறிப்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் வெளியிட்ட கருத்துக்கள் தான் கோபத்தையும், ஆத்திரத்தினையும் தரக்கூடியதாகவிருந்தது.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன் நாச்சியப்பன் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வெள்ளைப் பூச்சு அடித்து கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். வவுனியா முகாம்கள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக, அகதிகள் தங்குவதற்கான விதிமுறைகளுக்கு நெருக்கமாக அமைந்துள்ளன எனக் கூறினார். அதேவேளை, ஐ.நா உட்பட சர்வதேசப் பிரமுகர்கள் பலர் முகாம்களைப் பார்வையிட்ட பின் சர்வதேச நியமங்களுக்கு அமைய அங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கூறியிருந்தனர்.

முட்கம்பி வேலிகள் மக்களின் பாதுகாப்பிற்காகவே போடப்பட்டுள்ளன எனவும் இவர் தெரிவித்திருந்தார். யாரிடமிருந்து பாதுகாக்க என இவர் எதுவும் கூறவில்லை. மக்களை நடமாடவிடாமல் தடுப்பது ஏன் என்பது பற்றியும் கூறவில்லை.

மற்றுமொரு காங்கிரஸ் உறுப்பினர் அழகிரி இந்தியாவில் தெரிவிக்கப்படுவது போல நிலைமைகள் மோசமாக இல்லை. அங்கு மக்களுக்குரிய எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

பயணக்குழுவின் ஓர் உறுப்பினராக வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மட்டும் அகதிமுகாம் பற்றிய உண்மைகளை இலங்கை ஊடகங்களுக்கும் தெரிவித்திருந்தார். நாடு திரும்பிய பின் இந்திய ஊடகங்களுக்கும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். திருமாவளவனைச் சந்திப்பதற்கு இலங்கை ஊடகங்கள் குறிப்பாக தமிழ் ஊடகங்கள் முயற்சித்த போதிலும் பயண இறுதிவரை அது முடியவில்லை. பயண இறுதி நேரத்தில் தினக்குரல் பத்திரிகை மற்றும் சக்தி தொலைக்காட்சி என்பன இரகசியமான வகையில் திருமாவளவனைச் சந்தித்து அவரது பேட்டியை வெளியிட்டிருந்தன.

தினக்குரல் பத்திரிகைக்கு பேட்டி வழங்கிய திருமாவளவன் முகாம் நிலைமை பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். 'மிகவும், வேதனையாகவும், கடினமான வலியுடையதாகவும் அந்த அனுபவம் இருந்தது. மக்களை ஏன் இந்தளவிற்கு வதைக்கின்றார்கள் என்ற கேள்வி நமக்கு எழுந்தது. அங்கிருக்கும் மக்கள் கூட அதனை தான் சொன்னார்கள். நாம் என்ன பாவம் செய்தோம்? ஏன் எங்களைப் போட்டு வதைக்கின்றார்கள்? இதனை விட விஷம் கொடுத்து மொத்தமாகக் கொன்று விடலாம் என்று பெண்கள் தலையில் அடித்துக் கொண்டு அழுதவாறு சொன்னார்கள். மூன்று, நான்கு தடவை நானும் கண்கலங்கி விட்டேன். நிறைய இளைஞர்கள் பேச அஞ்சினார்கள். எங்களுடன் பேசினால் பின்னர் அடையாளம் கண்டு ஏதாவது செய்து விடுவார்களோ என்று பயமாக இருப்பதாக அவர்கள் கூறினார்கள். எங்களை வெளியில் அனுப்பி சொந்த வாழ்விடங்களுக்கு செல்ல ஏதாவது செய்யுங்கள் எனவும் கேட்டனர்.

இப்போதுதான் விடுதலைப் புலிகள் இல்லையே, பிறகு எதற்காக எங்களைப் பிடித்து வைத்திருக்கின்றார்கள் என்றெல்லாம் அங்குள்ள மக்கள் கதறினார்கள். அத்துடன் பெரும்பாலான மக்கள் குடிக்க, குளிக்க போதிய தண்ணீர் இல்லை என்றும், தண்ணீர் பிடிப்பதற்காக ஒரு வாரம் வரிசையாக காத்திருக்க வேண்டியிருக்கின்றது என்றெல்லாம் கவலைப்பட்டு சொன்னார்கள். இதுதான் மிகவும் உச்சமான குறையாக அங்கு வெளிப்பட்டது. இதேநேரம் எங்களை சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்புங்கள். அதுபோதும், அரசாங்கம் எமக்கு எதுவும் செய்ய வேண்டாம். நாங்கள் பிழைத்துக் கொள்கின்றோம் என்பதையே அங்குள்ள மக்கள் ஒருமித்த குரலாகச் சொன்னார்கள்.

ஜனாதிபதியைச் சந்தித்த போதும் முகாம்களில் மக்கள் கடுமையாக வதைபடுகின்றார்கள். அங்கு போதிய குடிநீர் இல்லை. மருத்துவக் குழு இல்லை. தங்களை விடுவிக்க வேண்டும் என்பதே மக்கள் அனைவரினதும் ஒருமித்த குரலாக இருந்தது என்பவற்றை அழுத்தமாகத் தெரிவித்தோம்.

பயணக் குழுவினரின் மூன்றாம் நாள்

இந்திய நாடாளுமன்றக் குழுவினர் மூன்றாம் நாள் மலையகத்திற்கு பயணம் சென்றனர். ஹெலியின் மூலம் நோர்வூட் மைதானத்திற்கு வருகை தந்த இக்குழுவினர் அங்கிருந்து ஹட்டனை நோக்கி வாகனத்தில் பயணித்தனர். காலை 10.45க்கு ஹட்டன் நகரை வந்தடைந்த குழுவினருக்கு ஹட்டன் நகர மக்களும், வர்த்தகர்களும் வரவேற்பு அளித்தனர்.

மலையகத்திற்கு பயணம் செய்த நாடாளுமன்றக் குழுவினர் வரவேற்பு விழாக்களில் கலந்து கொண்டார்களே தவிர, தோட்டங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் உண்மை நிலையினை அறிய முயலவில்லை. மலையகத் தமிழ் மக்களின் சமகால அரசியல் பிரச்சினைகளை அறிந்து கொள்வதிலும் அவர்கள் பெரியளவிற்கு கரிசனை காட்டவில்லை.

மலையக மக்களின் பிரச்சினைகள் இலங்கைத் தீவில் வாழும் ஏனைய மக்களின் பிரச்சினைகளை விட வித்தியாசமானதாகும். மிகப்பெரிய மனித அடிமைத்தனத்தில் அவர்கள் வாழ்கின்றனர். இதுபற்றி மோகனதாஸ் என்பவர் '20ம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்' என்ற பெயரில் ஒரு நூலே எழுதியிருக்கின்றார்.

மலையக மக்கள் ஒரே நேரத்தில் தேசிய இன ஒடுக்குமுறைக்கும், வர்க்க ஒடுக்குமுறைக்கும் உள்ளாகின்றனர். இவ்விரு ஒடுக்குமுறைகளும் மலையக சமூகத்திற்கு புறத்தே இருந்து வருவதால் தான் நவீன அடிமைத்தனத்துடன் வாழவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இன்று அவர்கள் இலங்கைத் தீவில் நிலமற்ற சமூகமாக வாழ்கின்றார்களாயின் அது மிகையாகாது. பரம்பரரையாக தமது உழைப்பினை செலுத்தி வளமாக்கிய அந்நிலத்திலிருந்து அவர்கள் அந்நியமாக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான சிங்களக் குடியேற்றங்கள் அவர்களின் இருப்பினையே அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளது.  போதாக்குறைக்கு பல்தேசிய நிறுவனங்களின் ஆதரவுடன் உருவாக்கப்படுகின்ற மேல்கொத்மலைத் திட்டம் போன்ற திட்டங்களும், அவர்களின் கூட்டிருப்பை ஆட்டம் காணச் செய்துள்ளன. கல்வியில் பாரபட்சம், மொழிப் பாரபட்சம், அரச உத்தியோகத்தில்  பாரபட்சம் என பல்வேறு பாரபட்சங்களுக்கும் அவர்கள் முகம்கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான தேசிய இன ஒடுக்குமுறைக்கு அப்பால் வர்க்க ஒடுக்குமுறைகளும் அவர்களைக் கசக்கிப் பிழிகின்றன. வறுமையே அவர்கள் வாழ்வின் வரலாறாக உள்ளது. அடிப்படை தேவைகளை சிறிதும் கூட பூர்த்தியாக்காத ஊதியத்தினை அவர்கள் பெறுவதனால் கல்வி கற்க வேண்டிய வயதிலுள்ள சிறுவர்களைக் கூட வீட்டு வேலைகளுக்கு அனுப்ப வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையில் அவர்கள் உள்ளனர்.

ஏனைய சமூகங்களுக்கு வழங்குகின்ற வாய்ப்புகளை மலையக மக்களுக்கு வழங்கினால் கூட அவர்களால் முன்னேற முடியாது. அந்தளவிற்கு ஏனைய சமூகங்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் அவர்கள் உள்ளனர். அவர்களை மேன்நிலைக்கு கொண்டு வர வேண்டுமானால் அவர்களுக்கென சிறப்புத் திட்டங்கள் தேவை. ஆனால் சிங்கள அரசு ஏனையவர்களுக்குள்ள வாய்ப்புகளையே வழங்காத போது, சிறப்புத் திட்டங்களை உருவாக்கும் என எதிர்பார்க்க முடியாது.

நாடாளுமன்றக் குழுவினர் இந்த விடயங்களையெல்லாம் நுணுக்கமாக ஆராய்ந்திருக்க வேண்டும். மக்களிடமிருந்தும், கல்வியாளர்களிடமிருந்தும் மற்றும் மலையக அரசியல் தலைவர்களிடமிருந்தும் விபரங்களைக் கேட்டறிந்திருக்க வேண்டும். மக்களின் குடியிருப்பான லயன்களை மட்டுமல்ல, மலையக மக்களின் கூட்டிருப்பினைச் சிதைக்கின்ற மேல்கொத்மலைத் திட்டம் போன்ற நீர்ப்பாசனத் திட்டங்களையும் நேரடியாகப் பார்த்திருக்க வேண்டும். மலையகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியங்கள் வேலைத்தளங்களில் அவர்கள் எதிர்நோக்குகின்ற கஷ்டங்கள் என்பவற்றையெல்லாம் அவர்கள் கேட்டறிந்திருக்க வேண்டும். ஜனாதிபதியை சந்தித்தபோது மலையக மக்கள் பற்றியும் அழுத்தங்கள் கொடுத்திருக்க வேண்டும். தமிழக முதலமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தபோதும் மலையக மக்களின் பிரச்சினைகளையும் அதில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஆனால் இக்குழுவினர் அவை எவற்றையும் செய்யவில்லை. வவுனியா அகதி முகாம்களில் ஐந்து மணி நேரத்தினை மட்டும் செலவிட்டிருந்த இவர்கள், மலையகத்தில் ஒரு நாளையே செலவிட்டிருந்தனர். இது ஒரு உல்லாச செலவீடாக இருந்ததே தவிர, மலையக மக்களுக்கு உரியதாக இருக்கவில்லை. மலையகத்திற்கு அழைத்துச் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், இவ்விடயத்தில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஓரிடத்தில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் அதற்கான முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை. பொகவந்தலாவ பிரதேசத் தோட்டத் தொழிலாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்காக எதிர்பார்த்திருந்தும், அதற்கான சந்தர்ப்பம் கிட்டவில்லை. ஏதோ மலையக மக்கள் சுகபோக வாழ்க்கையினை வாழ்கின்றனர் என்ற ஒரு தோற்றமே ஆறுமுகன் தொண்டமானால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

இதுபற்றி இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதித் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தாம் வெளியிட்ட அறிக்கையில், 'இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப்பேரவலம் வடக்கிலே நடந்தது போல, இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனித அடிமைத்தனம் மலையகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் பிரச்சினைகளில்  இந்தியாவோ, தமிழகமோ காத்திரமான பங்களிப்பினை கடந்த காலங்களில்  நல்கவில்லை. இதற்குப் பிரதான காரணம் இலங்கையில் இந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தலைமைகள், மலையக மக்கள் தொடர்பான தகவல்களை தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் எடுத்துச் செல்லாமையே' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இங்கு வந்திருக்கும் தமிழக நாடாளுமன்றக் குழு மலையக மக்களின் பிரச்சினைகளில் கவனத்தினைச் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. மலையகத்தில் நோர்வே அரசாங்கம் அமைத்துக் கொடுத்த தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் இருக்கின்றது. ஜேர்மன் அரசால் அமைத்துக் கொடுக்கப்பட்ட ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி இருக்கின்றது. ஆனால் இந்தியாவின் பங்களிப்போடு நவீன தொழில்நுட்பத்துடன் அமைத்துக் கொடுப்பதாக ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட டிக்கோயா வைத்தியசாலை இன்னமும்  முற்றுப்பெறவில்லை.  இந்த வைத்தியசாலையைப் பார்வையிடுவதற்கும், அது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்காகவும் இந்திய நாடாளுமன்றக் குழுவினை அங்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.

தோட்டப் பாடசாலைகள் அங்கு கற்கும் மாணவர்களின் நிலைமை, மலையக இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள் போன்றவற்றை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவை எதுவும் நடைபெறவில்லை.

மீண்டும் ஒரு தடவை மலையக மக்களின் பிரச்சினைகள் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. மலையக மக்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பது போன்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சில மலையக அரசியல்வாதிகள் தமது இழந்துபோன செல்வாக்கில் சரிகாட்டல்களை ஏற்படுத்துவதற்காக மலையக மக்களின் பிரச்சினைகளை இரும்புத் திரைப்போட்டு மறைத்திருக்கின்றனர். மொத்தத்தில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மலையக விஜயம் மலையக மக்களுக்கு ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

மலையக தேசிய தொழிலாளர் சங்கத்தின் செயலாளரும், நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சருமான பி. புத்திரசிகாமணி இந்திய நாடாளுமன்றக் குழுவின் மலையக விஜயம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், 'வடகிழக்கு மக்களின் நிலையைக் கண்டறிய வந்த இந்தியத் தூதுக்குழுவின் மலையக விஜயம் ஒரு உல்லாச விடயமாக தான் இருந்ததோடு, ஒரு சில அரசியல்வாதிகளின் பிரசாரத்திற்கு ஒரு கருவியாகவும் இருந்தது. இருநூறு வருடங்களுக்கு மேல் இந்நாட்டின் மலையகப் பிரதேசங்களுக்கு வந்து குடியேறி வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நலனில் எந்த அக்கறையையும் இந்தியத் தமிழக அரசுகள் காட்டியிருக்கவில்லை. இந்தியக் குழுவினர் தங்கள் விஜயத்தின் கடப்பாடுகளை மறந்து விட்டு மலையகத்திற்கு உல்லாசப் பயணத்தினை மேற்கொண்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கதாகும்.

சிலரின் அழைப்பின் பேரில் மலையக மக்களின் பிரச்சினைகளை சிலருடன் மட்டும் பேசுவதும், ஆராய்வதும் சுயநல அரசியலுக்கே துணை போவதாக அமையும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எத்தனை பேர் இந்திய வம்சாவளி மக்களின் சார்பில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர் என்ற எண்ணிக்கையே இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திற்கு தெரியாது. இதனால் அந்நாட்டின் பிரதிநிதிகளுக்கு உண்மையான தகவல்களைக் கூற இந்திய தூதரகம் தவறி விடுகின்றது.

இந்தியப் பிரதிநிதிகளின் மலையக விஜயம் ஒரு அரசியற் கட்சியின் நலனுக்கும், அவர்களின் அரசியலுக்கும் துணை போகின்றதே தவிர அங்கு வாழும் மக்களின் நலனுக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை.

இந்தியத் தூதுக்குழு மலையகத்தில் பணியாற்றும் ஏனைய பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசுவதற்கு ஒழுங்குகளை செய்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத விஜயம் ஒரு முழுமையான விஜயமாக இருக்க முடியாது. மாறாக அது ஒரு உல்லாசப் பயணமாகவே இருக்கும். மலையகப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு இந்திய தூதரகமே ஒழுங்குகளைச் செய்திருக்க வேண்டும். சில அரசியல்வாதிகளின் கைகளில் மலையக விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரலைக் கையளித்திருக்கக் கூடாது.

இருநூறு வருடங்களாக வாழும் மலையக மக்களுக்கு இந்திய அரசு பெரிதாக உதவி செய்ததாக வரலாறில்லை. இந்தப் பயணமும் அவ்வாறாக இல்லாது மத்திய, மாநில அரசுகளுக்கு உண்மை நிலையை எடுத்துக் கூறுவதாக இருந்திருக்க வேண்டும்.

இந்தியத் தூதுக்குழுவினரின் விஜயத்தின் போது எத்தனை தோட்டங்களுக்குச் சென்றார்கள்? எத்தனை தொழிலாளர்களைச் சந்தித்து உரையாடினார்கள்? மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தூதுக்குழுவினர் என்ன செய்யப்போகின்றனர்? இவையெல்லாம் கேள்விகளாகும்.

பூர்வீக தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கைக்கு வந்தமை பாராட்டக் கூடியதே. எனினும் தமது தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லிக் கொள்ளும்  மலையக மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிப்பதாக இருந்தால் மலையகத்தின் எல்லாப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியிருக்க வேண்டும். ஒரு சிலருக்கு மட்டும் மகுடம் சூட்டுவது போல் நடந்து கொள்வது எமக்கு கவலையளிக்கின்றது' எனக் குறிப்பிட்டிருந்தார்.

புத்திரசிகாமணியின் கருத்துக்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும், அதன் செயலாளரான ஆறுமுகன் தொண்டமானையும் தாக்குவதாக இருந்தது. ஆறுமுகன் தொண்டமானின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இந்தியக் குழுவினரின் மலையக விஜயம் இடம்பெற்றமையை புத்திரசிகாமணியைப் போன்று ஏனைய தலைவர்களும் விரும்பியிருக்கவில்லை.

இந்தியக் குழுவினர் மலையகத்திற்கு விஜயம் செய்வதற்கு முன்னரே முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை தொழிலாளர் தேசிய சங்கத்தின் குழுவினரை கொழும்பில் சந்தித்துப் பேசினர். இதன் தலைவர் திகாம்பரம் உட்பட அரசியல் துறைச் செயலாளர் திலகராஜா மற்றும் மத்திய மாகாண உறுப்பினர் எம்.உதயகுமார் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியக் குழுவினர் முன்னிலையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிகள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

• மலையகத்தில் மாற்றுத் தொழிற்துறையின் வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் உதவ வேண்டும்.

• இந்திய அரசாங்கத்தினால் தற்பொழுது வழங்கப்படும் கடல் கடந்து வாழும் இந்தியர்களுக்கான நிரந்தர விசா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இதற்கேற்ற வகையில் விசாவிற்கான கட்டணங்களைக் குறைப்பதோடு, ஆவணச் சான்றிதழ்களின் கடினத்தன்மையையும் குறைத்தல் வேண்டும். இதற்கென சிறப்பு ஏற்பாடுகளை உருவாக்க வேண்டும்.

• இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கல்விசார் புலமைப்பரிசில்கள் மலையகம் சார் கல்வியியலாளர்கள், புலமையாளர்களை ஊக்குவிப்பதாகவும் அமைதல் வேண்டும்.

• மலையக கலை இலக்கிய சக்திகளுக்கும், தமிழகக் கலை இலக்கிய சக்திகளுக்கும் இடையே உறவுப் பாலத்தினை ஏற்படுத்தி இந்திய உறவின் அடையாளத்தை பலப்படுத்தல் வேண்டும். இதற்காக பொதுவான கலைச்சங்கம்  ஒன்றை உருவாக்குவதுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களுக்கும் ஏற்பாடு செய்தல்  வேண்டும். அதேவேளை வருடாந்தம் இலக்கிய மாநாடு ஒன்றை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்தல் வேண்டும்.

• தொழில் ரீதியாக தேயிலைத் தொழிலில் ஈடுபடும் இந்திய தொழிலாளர்களுக்கும், இலங்கைத் தேயிலை தொழிலாளர்களுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வினை ஏற்படுத்தி, தமது தொழில் சார் அபிவிருத்தி விடயங்களில் பகிர்வுகளைச் செய்து கொள்ளும் வகையில் இருநாட்டின் தொழிற்சங்கங்களுக்கிடையில் உறவுப் பாலமொன்றை உருவாக்குதல் வேண்டும்.

• இந்தியாவிலிருந்து வருகை தந்த காலத்திலிருந்து இன்று வரை எமது மக்களின் வாழ்க்கைப் பரிமாணங்களின் வளர்ச்சியினைப் பதிவு செய்யும் ஒரு ஆவணக் காப்பகம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கு உதவுதல் வேண்டும்.

• மலையகப் பகுதிகளுக்கு விஜயம் செய்யும்போது மலையக மக்களின் வாழ்விடங்களைப் பார்வையிட்டு, அவர்களின் அவலங்களைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

தொடரும்

4/27/2012 3:34:11 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்