Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பேச்சுவார்த்தை குறித்த சில கேள்விகள் - 04

பேச்சுவார்த்தை குறித்த சில கேள்விகள் - 04
மதியழகன்

 

இனப்பிரச்சினையின் தீர்வுக்கு பேச்சுவார்த்தையைத் தவிர வேறு என்ன மார்க்கங்கள் உண்டு?

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர், மிஞ்சியிருக்கும் வழிகள் என்ன?

இந்த இரண்டு கேள்விகளும் முக்கியமானவை. எனவே இவற்றுக்கு முதலில் விடைகாண வேண்டும்.

போருக்கு முன்னரும் சரி, போர்க்காலத்திலும் சரி, போருக்குப் பின்னரும் சரி இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை என்பது முக்கியம் என்ற நிலைப்பாடு இருந்தது. இதன்படி இந்தக் காலப்பகுதியில் அரசியல் அரங்கில் முதன்மைப் பாத்திரத்தை வகித்த அத்தனை தரப்பினரும் பேச்சு அரங்கிற் கலந்து கொண்டேயுள்ளனர்.

ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழீழத்தை அடையலாம் என்று முழுதாகவே நம்பிக்கைகொண்டிருந்த – 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' என்று முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த விடுதலைப் புலிகளே பேச்சுவார்த்தை மேசையைப் புறக்கணிக்க முடியவில்லை. இந்தியா உட்பட பிராந்திய சக்திகளும் மேற்கு உள்ளிட்ட சர்வதேச சமூகமும் பேச்சுவார்த்தையையே ஆதரிக்கின்றன.

ஆனால், பொதுச் சூழலும் பொது நிலையும் இப்படி இருக்கும் போது, பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்வதை ஓர் ஆரோக்கியமான வழிமுறையாக தமிழர்கள் கொள்ளத் தயங்குகின்றனர்.

பேச்சுகளில் முன்னேற்றங்கள் ஏற்படாமையும் பேச்சுகள் நம்பிக்கையான வழிமுறையாக மாறத் தவறியமையும் பேச்சுகளில் எட்டப்பட்ட தீர்மானங்களை அரசாங்கம் நிறைவேற்றப் பின்னின்றமையும் உடன்படிக்கைகளை முறித்தமையும் தமிழ்த் தரப்பிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இலங்கையில் ஆட்சியில் இருந்த சிங்களத் தலைமைகள் இனப்பிரச்சினையையும் பேச்சுவார்த்தையையும் தங்களின் நலன்களுக்காகவே பயன்படுத்தியிருக்கின்றன, பயன்படுத்தி வருகின்றன, பயன்படுத்த முனைகின்றன.

ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அவை இனப்பிரச்சினையை - இனவாதத்தை ஒரு முதலீடாக்குகின்றன. அதேபோல ஆட்சியில் நெருக்கடிகள் ஏற்படும்போது அந்த நெருக்கடியைத் தணிப்பதற்காக அவை பேச்சுவார்த்தையைப் பயன்படுத்துகின்றன. இத்தகைய ஒரு கொடுமையான யதார்த்தத்தில் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து கலந்து கொள்வதில் எந்த நன்மையும் கிட்டப்போவதில்லை என்ற அனுபவம், ஒரு முன்னுணர்வு தமிழ்த்தரப்பிடம் ஏற்படுகிறது. இது தவிர்க்க முடியாதது.

தமிழ்த்தரப்பின் இந்தக் கசப்பான அனுபவத்தை பிராந்திய சக்திகளும் நன்றாகவே அறியும். சர்வதேச சக்திகளும் நன்றாக அறியும். ஆனாலும் அவை இதைக் குறித்து எதுவும் செய்வதும் இல்லை. எதையும் சொல்வதும் இல்லை. பதிலாக இனப்பிரச்சினைக்குப் பேச்சுகளின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று ஒரு வாய்பாடையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றன. விடுதலைப் புலிகள் போரிட்டுக் கொண்டிருந்த காலத்திலும் அவை இந்த வாய்பாட்டையே ஒப்புவித்தன. புலிகள் இல்லாத சூழலிலும் அவை இதையே சொல்கின்றன. ஆனால், எந்த அடிப்படையும் இல்லாமல் எப்படி ஒரு விடாப்பிடியான – ஒடுக்குமுறைச் சிந்தனையுடைய அரசுடன் பேச்சுகளை நடத்த முடியும் என அவை சிந்திப்பதாக இல்லை.

இதேவேளை பேச்சுவார்த்தையை விட்டால் தமிழர்களுக்கு வேறு எத்தகைய அரசியல் அணுகுமுறை தற்போதில்லை. பேச்சுவார்த்தைக்கு அப்பால் மக்களை ஒரு சக்தி மிக்க அரசியல் இயக்கமாகக் கட்டமைப்பற்கான உளப்பாங்கும் ஆளுமையும் அரசியற் சிந்தனையும் இன்றிருக்கும் எந்த அரசியற் சக்திகளிடமும் இல்லை. ஆனால், அதற்காக வேறு மார்க்கங்கள் கிடையாது என்று அர்த்தம் இல்லை. அந்த மார்க்கங்கள் இப்போது உடனடிச் சாத்தியங்களைக் கொண்டனவாக இல்லை. எனவேதான் பொருத்தமே இல்லை என்ற சூழலிலும் இலங்கை அரசாங்கத்தின் தேர்தல் நிகழ்ச்சி நிரல்களுக்குள்ளும் பேச்சுவார்த்தை என்ற நடவடிக்கையினுள்ளும் தமிழர்களின் அரசியலும் சிக்குண்டிருக்கிறது.

எனவே இருக்கின்ற அமைப்பு முறைக்குள் அரசியலை முன்னெடுக்க வேணும், இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றால்.... அதற்கான ஒரு பொறிமுறையைப் பற்றிச் சிந்தித்தே ஆகவேண்டும். இதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்குச் செல்லக் கூடிய சூழல் களத்தில் இல்லை. களத்துக்கு வெளியே ஈழம் என்ற அடையாளத்தை வலுப்படுத்துவதற்கான தமிழ் அரசியல் முன்னெடுக்கப்பட்டாலும் அது தேறி வருவதற்கான அக புறச் சூழல்களும் அந்த அரசியலை முன்னெடுக்கும் தரப்புகளின் குறைநிலை அணுகுமுறைகளும் பாதகமாகவே தெரிகின்றன.

எனவே இத்தகைய நிலையில் தமிழர்கள் - குறிப்பாக களத்திலிருக்கும் தமிழர்கள் பேச்சுவார்த்தை என்ற ஒரு அணுகுமுறையைத் தற்போது ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். ஆனால், இதைச் சற்று வேறு விதமாகக் கையாண்டால் தமிழ்த் தரப்புக்கு வெற்றியாகவும் அரசுக்கு நெருக்கடியாகவும் மாற்றக் கூடிய நிலைமையை உருவாக்கலாம்.

எதிர்த்தரப்பை வெல்ல வேண்டும் என்றால் அது எதிர்பார்க்காத திசைகளால், எதிர்பார்க்காத வழிமுறைகளால் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு இதுவரையான பேச்சுகளை ஒரு முறை மீளாய்வு செய்ய வேண்டும். அதாவது, விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நிதானமான முறையில் ஒரு அறுவைச் சிகிச்சை செய்ய வேணும்.

இதுவரையான அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் ஒற்றைப்படைத் தன்மையானவையாகவே அமைந்துள்ளன. அதாவது தமிழ்த் தலைமைகளும் சிங்களத் தலைமைகளும் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளன. ஒரு கட்டத்தில் இந்தியா, நோர்வே போன்ற பிற தரப்புகள் நடுப்பங்களிப்புகளை வழங்க முற்பட்டிருந்தாலும் பேச்சுகளை நகர்த்தி வெற்றி பெற வைப்பதற்கு இவற்றால் முடியவில்லை.

பேச்சுகளின் வெற்றி என்பது தென்னிலங்கைச் சக்திகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலமே சாத்தியமாகும். சிங்களத் தலைமைகள் தங்களை ஒழித்துக் கொள்ளும் இடம் சிங்கள இனவாதத்திடமே. பண்டா செல்வா உடன்படிக்கைக் காலத்திலிருந்து நோர்வேயுடன் புலிகள் நடத்திய பேச்சுகள் வரையில் இனவாதத் தரப்புகளைத் தூண்டி விட்டு பேச்சுகளில் முன்னேற்றம் ஏற்படாது பார்த்துக் கொண்டது சிங்களத் தலைமை. அதாவது, அது இனவாதத்திடமே ஒளித்துக் கொள்கிறது.

எனவே இனிமேல் நடத்தப்படவுள்ள பேச்சுகள் சிங்களத் தலைமைகளுடன் மட்டும் நடத்தப்படாமல், அதற்கு அப்பால், நடத்தப்பட வேண்டும். அரசுடன் தமிழ்த் தலைமைகள் பேச்சை நடத்தும்பொழுது சமகாலத்திலேயே சிங்களச் சமூகத்துடனும் முஸ்லிம் மற்றும் மலையகச் சமூகங்களுடனும் சிங்கள – முஸ்லிம், மலையக் கட்சிகளுடனும் தொடர் உரையாடலை மேற்கொள்ள வேண்டும். மேலும் சிங்கள ஊடகங்கள், சிங்களப் புத்திஜீவிகள், சிங்கள மதத்தலைவர்கள், மாணவர்கள் என்று சகல தரப்புடனும் உரையாட வேண்டும். அவ்வாறே முஸ்லிம் தரப்பிலும் மலையத் தரப்பிலும் உரையாடல்களைச் செய்ய வேண்டும்.

இதைத் தனியே அரசியற் கட்சிகள் மட்டும் செய்து எதுவும் ஆகிவிடப்போவதில்லை. தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் அலகுகள் அத்தனையும் தங்களின் சாத்திய எல்லைகளை அறிந்து தங்களை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொள்வது அவசியம்.

இதற்கான சந்தர்ப்பமும் இதுவே. இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினையால் நாடு பேரழிவைச் சந்தித்திருக்கிறது. அந்த அழிவில் அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. நாடு பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி, சமூக நெருக்கடி, தனிமனித செயற்பாடுகளுக்கான நெருக்கடி என முற்றுமுழுதான நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. போர் முடிந்த பின்னரும் பொருளாதார அரசியல் நிலைமைகளில் எத்தகைய முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற அடிப்படையான புரிதல்களை ஏற்படுத்துவதன் மூலம் இந்த உரையாடலை நாம் வளர்த்துச் செல்ல முடியும்.

ஏனென்றால், தமிழர்களுக்கு இனப் பிரச்சினை எவ்வாறு பிரதான பிரச்சினையாக உள்ளதோ அதேமாதிரிச் சிங்களத்தரப்புக்கு பொருளாதாரம் மற்றும் பிரதேச ரீதியான ஒதுக்கல்கள்வரையில் பிரச்சினைகள் உள்ளன.

எனவேதான் தமிழர்களுக்கு முன்னரே சிங்கள இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராட வேண்டியேற்பட்டது. அதுவும் இரண்டு தடவைகள். சிங்கள மக்களின் பிரச்சினைகளுக்காகவும் சிங்கள இளைஞர்கள் இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். அவர்களுடைய போராட்டமும் குருதி ஒழுக ஒழுக மிகக் குரூரமாக ஒடுக்கப்பட்டது. ஆகவே தமிழர்கள் பட்ட காயத்தைப் போல சிங்களச் சமூகத்திடமும் காயமும் வலியும் அரசின் மீதான கோபமும் உண்டு.

ஆனால், இனவாதத்தை வளர்த்து இந்த இரண்டு தரப்பையும் மிக நுட்பமாகப் பிரித்து வைத்திருக்கிறது சிங்கள அதிகாரத்தரப்பு. இங்கே நாம் செய்ய வேண்டியது அரசின் தந்திரோபாயத்துக்கு எதிராக – சிங்களச் சமூகத்தின் உளவியலைக் கையாள்வதே. காயங்களோடும் வலியோடும் இருக்கும் ஒரு சமூகத்தின் உளவியலைக் கையாள்வது இலகுவானது. அது தன்னுடைய நேரடி அனுபவங்களுக்கூடாகத் தன்னையும் தன்னுடைய சூழலையும் அறிந்து கொள்ளும்.

ஆகவே, அப்படிக் கையாள முற்படும்போது சிங்கத் தீவிரநிலையுடைய சக்திகள் பலவீனப்படும். ஆனால், இதெல்லாம் இலகுவானதல்ல. சிங்களச் சமூகத்தின் உளவியலைக் கையாளும் நிலையொன்றைத் தமிழ்த்தரப்பு ஏற்படுத்தக்கூடாது என்பதிலும் முஸ்லிம்களுக்கும் தமிழ்த்தரப்புக்கும் இடையில் உறவு நிலை ஏற்படக்கூடாது என்பதிலும் சிங்கள அதிகாரத் தரப்பு மிகக் கவனமாக இருக்கிறது. அதேபோல தமிழ்த்தரப்பின் உளவியலைச் சிங்கள மாற்றுத் தரப்புகள் வென்றெடுக்கக் கூடாது என்பதிலும் அரசு மிகக் கவனமாக உள்ளது.

இதன்படியே அது உள்நாட்டில் சமூகங்களை இணைய விடாமல், சமூகச் சக்திகளை கண்காணித்து வருகிறது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து லலித், குகன் என்ற இரண்டு அனைத்துப் பல்கலைக்கழக மாணர்கள் கடத்தப்பட்ட நிகழ்ச்சியானது சொல்லும் எச்சரிக்கை இதன்பாற்பட்டதே. இத்தகைய நிலை தமிழ்த்தரப்பிற்கும் ஏற்படும்.

தமிழ்த் தரப்பிலிருந்து தென்பகுதிக்குச் சென்று இயங்கினாலும் இத்தகைய ஒரு அபாய நிலையைத்தான் அரசு ஏற்படுத்தும். அரசுகள் என்பவை எப்போதும் அப்படியே இயங்கும். அவற்றுக்கு அவற்றின் நலனும் அதிகாரமுமே முக்கியம். அவற்றுக்கு எதிராக எந்தத் தரப்பு வந்தாலும் அது தனக்கெதிரான தரப்பு என்றே பார்க்கும். அதன்படியே அது அதை அணுகும். ஆனால், இதைக் கடந்து செயற்பட வேண்டும். வலிகளின் வலி என்பது மிகப் பயங்கரமானது. தாங்கிக் கொள்ளவே முடியாதது. ஆனால் அது கடக்கப்பட வேண்டியது. கடந்து செல்ல முடிந்தது. மனிதன் நினைத்தால் எல்லாமே நடக்கும்.

ஒரு கடக்க முடியாத கடந்த காலத்தை வைத்துக் கொண்டு நிகழ் காலத்திலும் நிம்மதியாக வாழ முடியாமல், எதிர்காலத்திற்கும் பயணிக்க முடியாமல் அந்தரித்துக் கொண்டிருப்பது கொடுமையான அனுபவம். ஆகையால் வலிகளைக் கடக்கும் ஒரு அரசியலுக்குச் சென்றே ஆகவேண்டும் என்று உணர்த்துவது இன்றைய நிலையில் முன்னெப்போதையும் விட இலகுவானது.

இதைச் செய்யும்போது அரசு திணறிப்போகும். அரசுக்கெதிரான ஒரு நிலை அல்லது அரசு கையாள முடியாத ஒரு நிலையை நாம் உருவாக்க வேணும். அப்படிச் செய்தால் அரசு ஒரு தரப்பை – இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனியே கையாள முடியாது. தனியே தான் நினைத்த மாதிரி அவர்கள் மதிப்புத் தருவர்கள் என்றும் இல்லை. எனவே இன்றைய பேச்சுகள் அல்லது இனிவரும் பேச்சுகள் என்பது பன்முகப்பட்ட நிலையில் பல்விதமான அணுகுமுறைகளில் பல தரப்புடனும் நிகழ்த்தப்பட வேண்டும். அதுவே ஏமாற்ற முடியாத ஒரு நிலைமையைத் தரும்.

இதற்கு ஒரு வலுவான பொறிமுறை அமைக்கப்பட வேண்டும். அந்தப் பொறிமுறையே மிக முக்கியமானது. பகைமை குறித்த அச்சத்தைப் போக்குவதற்கான உளநிலையைக் கையாள்வது என்பது சாதாரணமானதல்ல. அதேவேளை வலுவான அரசொன்றின் எதிர்ப்பையும் சமநேரத்திலேயே சந்திக்க வேண்டிய நிலையில். ஆனாலும் காயங்களும் வலிகளும் இலங்கைச் சமூகங்கள் அத்தனைக்கும் பொதுவாகவே இருப்பதனால், இந்த உளவியலைக் கட்டமைக்க முடியும். இப்போது தேவை பொறிமுறையே! இந்தப் பொறிமுறையானது தனியே அரசியற்கட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு உருவாக்கி விடமுடியாது. அல்லது அரசியற் கட்சிகளால் மட்டும் இதைச் சாத்தியப்படுத்தி விடவும் முடியாது.

ஈழப்போராட்டத்திலும் அதனுடைய அரசியற் போராட்டங்களிலும் மையப் பகுதியை வளப்படுத்துவதற்குச் சமூக நிலைப்பட்ட சிந்தனையாளர்கள் முன்வருவது குறைவு. இதற்கான சூழலைத் தலைமைச் சக்திகள் உருவாக்கிக் கொடுப்பதும் இல்லை. இதனால் வரையறுக்கப்பட்ட அளவுக்கு அப்பால் அவற்றால் பொதுப்பரப்பை நோக்கிச் செல்ல முடிவதில்லை. ஒரு அரசியற் கட்சியின் தொடர்பாடலுக்கும் பொது அமைப்புகளின் தொடர்பாடலுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உண்டு.

யுத்த காலத்திலும் சரி, யுத்தத்துக்குப் பின்னரும் சரி மக்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை வெளிநாடுகளின் பிரதானிகள் யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் சந்தித்திருக்கின்றனர். இது எதற்காக? இந்தச் சந்திப்பு முறைகளினூடாக அவர்கள் ஒரு சேதியைச் சொல்கின்றனர்.

அதாவது, பொதுநிலைப்பட்டவர்கள் அரசியல் நலன்களுக்கு அப்பால் மக்களின் பிரச்சினைகளைக் குறித்தும் உண்மையான நிலைமையைக் குறித்தும் அக்கறை கொள்வர். அந்த அக்கறையைப் பகிரங்கப்படுத்துவதற்கு ஒரு செயல் முறையைக் கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் சொல்லாமல் உணர்த்துகின்றனர்.

ஆனால், பிரதானிகளைச் சந்திப்பதுடன் அவரவர் கலைந்து சென்றுவிடும் ஒரு நிலையே தொடர்ந்தும் காணப்படுகிறது. அதற்கப்பால், அந்த அமைப்பின் பிரதிதிகள் ஒரு செயற்திட்டத்தை வகுத்து, அதனடிப்படையில் தொடர்ந்த உரையாடலை இலங்கையின் பிறசமூகத்தினருடனும் வெளியரங்கிலும் நடத்துவதில்லை.

புத்திஜீவிகள், மதத்தலைவர்கள் போன்றோர் நல்லெண்ண முயற்சிகளை ஏற்படுத்தும் விதமாகத் தொடர்பாடல்களையும் சந்திப்புகளையும் செய்ய வேண்டும். அப்படிப் பல நிலையாளர்களும் இயக்கமுறத் தொடங்கும்போது – உரையாடல் நிகழுமிடத்து அரசுக்கு அப்பால், அதனுடைய அணுகுமுறைகளுக்கு அப்பால் நிலைமைகள் வேறு வண்ணங்கொள்ளும். இவ்வாறு செய்யும்போது அரசு இலகுவில் பேச்சுவார்த்தையைத் தவறான திசைகளை நோக்கி இழுக்கவும் முடியாது. காலத்தைக் கடத்தவும் முடியாது. அவ்வாறு நிகழும்போது அதைக் குறித்த கேள்விகளை பொதுவெளி எழுப்பும். தனியே தமிழ்த்தரப்பை மட்டும் குற்றம் சொல்லும் சந்தேகிக்கும் நிலையும் இருக்காது.

ஆனால், அதிகாரத் தரப்பினர் தங்களின் பிடியையும் நலனையும் இலகுவில் விட்டுக் கொடுப்பதற்கு இலேசில் அனுமதிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். இதில் தமிழ் அரசியலாளர்களும் சிங்களத் தலைமைகளும் அடக்கம். ஆனாலும் இதைக் கடந்தே தீரவேண்டும். எந்த வெற்றிக்கும் கடுமையான அர்ப்பணிப்பும் கூரிய சிந்தனையும் கூட்டுச் செயற்பாடும் அடிப்படையானவை. இதையே இன்றைய தமிழ் பேசும் மக்களின் அரசியற் சூழலும் எதிர்காலமும் எதிர்பார்த்திருக்கின்றன.

இது விழிப்படைய வேண்டிய காலம். பேரழிவுகளுக்குப் பிறகு புதிய சூழலின் பிறப்பு நிகழ்வது வழமை. இலங்கையில் அது?

3/2/2012 3:54:16 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்