Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சீனாவுடனான ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடும் இந்தியாவும்

சீனாவுடனான ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடும் இந்தியாவும்
யதீந்திரா

 

கடந்த 29ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்பாடு கைச்சாதானது. தொழிற்சங்கங்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே இந்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் துறைமுகத்தின் 70 வீதமான அதிகாரம் சீனாவின் வசமாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கால வரையறை 99 வருடங்களாகும். ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஒரு காலத்தில் சீனர்கள் மற்றும் அராபியர்களால் பயன்படுத்தப்பட்ட பட்டுப்பாதையின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது. சீனா ஒரு உலக அதிகாரமாக எழுச்சியடைந்து வருகின்ற சூழலில் மீண்டும் ஹம்பாந்தோட்டையை தன்வசப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான் மேற்படி உடன்பாடு சர்வதேச ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இது பற்றி அறிக்கையிட்டிருக்கும் போர்ப் சஞ்சிகை, ஐரோப்பிய அதிகாரங்களின் நுட்பமான நடவடிக்கையால் இழந்துபோன துறைமுகமொன்றை சீனா மீண்டும் தன்வசப்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றது. இதன் மூலம் இலங்கை, சீனாவின் ஒரு அரைக் கொலனியாக (Semi colony) மாறியிருப்பதாகவும் குறித்த சஞ்சிகை குறிப்பிடுகின்றது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் யோசனை முதன்முதலாக ரணில் விக்கிரமசிங்கவினால்தான் முன்வைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில்தான் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும் இது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை இதற்கு சாதகமாக அமைந்திருக்காமையால் இந்த யோசனை கைவிடப்பட்டது. ஆனால் ராஜபக்சவின் வருகையைத் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட யோசனை மீளவும் மேசைக்கு வந்தது. துறைமுகத்தை கட்டும் பொறுப்பு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சீனா இந்தத் துறைமுகத்துக்குள் நுழைந்த கதை இதுதான்.

இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விடயம் இருக்கிறது. சீனா இந்தத் துறைமுகத்திற்கான கட்டுமான பணிகளை ஆரம்பித்த 2008 என்பது இலங்கை அரசியலில் ஒரு தீர்க்கமான காலப்பகுதியாகும். மூன்று தசாப்தகாலமாக யுத்த களத்தல் பிரகாசித்துக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு கடும் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளை எந்த வகையிலாவது அழித்துவிட வேண்டுமென்பதில் வெறியாக இருந்த ராஜபக்சவின் ஆர்வத்தை சீனா பயன்படுத்திக் கொண்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஆயுதங்கள் வழங்குவதை இந்தியா தவிர்த்திருந்தது. இந்த நிலையில் மகிந்தவிற்கு முன்னால் சீனா ஒன்றே ஒரேயொரு தெரிவாக இருந்தது. இந்த அடிப்படையில்தான் இறுதி யுத்தத்தின் போது சீனா ஆயுதங்களை வாரி வழங்கியது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான மகிந்தவின் வெற்றியில் சீனாவிற்கு கணிசமான பங்குண்டு. யுத்தத்திற்கு பின்னரான சூழலில் கொழும்பு - பெய்ஜிங் உறவு மேலும் பலமடைந்தது. வரலாற்றில் என்றும் இல்லாதவாறு சீனாவின் செல்வாக்கு இந்தியாவின் கொல்லைப் புறத்தில் அதிகரித்துச் சென்றது. இந்தக் காலத்தில் கொழும்பு எதிர்கொண்ட சர்வதேச அழுத்தங்களையும் சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. சீனா அதனது கடன்களால் இலங்கையை சுற்றிவளைத்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இன்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் உடன்பாடு தொடர்பில் ஒரு தெளிவான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில்தான் அதனோடு தொடர்புடைய ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பை இங்கு தருகிறேன். ஆட்சி மாற்றத்தின் இலக்கு சீனாவை ஒரங்கட்டுவதாகவே இருந்தது. இது தொடர்பில் அப்போது பரவலாக எழுதப்பட்டுமிருக்கிறது. ஆனால் அது விவாதிக்கப்பட்ட அளவிற்கு இலகுவான ஒன்றாக இருக்கவில்லை. ஒரு சில மாதங்கள் அப்படியானதொரு தோற்றம் தெரிந்திருந்தாலும் கூட, அது நடைமுறையில் வெற்றியளிக்கவில்லை. அந்தளவிற்கு சீனா இலங்கையில் காலூன்றியிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் சீனாவின் கொழும்பு நகரத் திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியிருந்தது. தற்போது ஹம்பாந்தொட்டை துறைமுகத்திற்கான உடன்பாடும் கைச்சாத்தாகியிருக்கிறது. இதன் மூலம், இனி, சீனா இலங்கையின் விவகாரங்களில் எவராலும் தவிர்த்துச்செல்ல முடியாதவொரு சக்தியாகவே இருக்கும்.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட ஓகஸ்ட் 29ம் திகதி என்பது இந்திய - இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்ற திகதியாகும். கடந்த யூலை 29ம் திகதியுடன் 1987இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்று 30 வருடங்கள் முடிந்துவிட்டன. முப்பது வருடங்களின் பின்னர் மீண்டுமொரு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமொன்றில் இலங்கை கைச்சாத்திட்டிருக்கிறது. ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை இந்திய- இலங்கை ஒப்பந்தத்துடன் ஒப்பிட முடியாது. இரண்டினதும் அரசியல் முக்கியத்துவம் முற்றிலும் வேறுபட்டது. ஆனால் கொழும்பு குறித்த திகதியை தெரிவுசெய்தமையானது தற்செயலான ஒன்றா அல்லது உள்நோக்கம் கொண்ட ஒன்றா?

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்பாட்டில், குறித்த துறைமுகத்தை இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது என்னும் ஒரு வாசகம் சேர்க்கப்பட்டிருக்கிறது. 1987இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை உடன்பாட்டில் இடம்பெற்றிருந்த ஒரு விடயம் இந்த இடத்தில் முக்கியமானது. அதாவது, திருகோணமலை துறைமுகம் அல்லது இலங்கையின் வேறு எந்தவொரு துறைமுகங்களையும் இந்தியாவின் தேசிய நலன்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வழங்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த விடயத்தை கருத்தில் கொண்டுதான் சீனாவுடனான மேற்படி ஒப்பந்தத்திலும் குறித்த வசனங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனவா? இதனை குறிப்பால் உணர்த்தும் நோக்கில்தான் இந்திய - இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்ற அதே நாள் தெரிவு செய்யப்பட்டதா?

ஆனாலும் ஆட்சி மாற்றத்தின் பின்னரான சூழல் இந்தியாவிற்கு முற்றிலும் திருப்திகரமானது என்று சொல்லக் கூடியவாறான விடயங்களை காணமுடியவில்லை. கொழும்பை பொறுத்தவரையில் இந்தியாவையும் சீனாவையும் ஒரே வகையில் திருப்திப்படுத்த முற்படுவதாகவே தெரிகிறது. தெற்கில் காலூன்றுவதற்கு சீனாவிற்கும், வடக்கு கிழக்கில் காலூன்றுவதற்கு இந்தியாவிற்கும் இடமளிப்பதன் ஊடாக இரண்டு சக்திகளையும் ஒரு நேரத்தில் சமாளிக்கும் உக்தியையே கொழும்பு கடைப்பிடித்து வருகிறது. ஆனால் இந்தியா விடயத்தில் கொழும்பு எந்தளவிற்கு உண்மையாக இருக்கிறது என்பது ஒரு கேள்விக்குறியே! பொதுவாக இந்தியாவின் திட்டங்களே சிங்கள தேசியவாத சக்திகளால் கடுமையாக எதிர்க்கப்படுகின்றன. அந்தவிற்கு சீனாவின் திட்டங்கள் எதிர்க்கப்படவில்லை. திருகோணமலை எண்ணைக் குதங்களை இந்தியாவிற்கு வழங்கும் விடயத்திலும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. திருகோணமலை எண்ணைக் குதங்களை இந்தியாவிடம் கையளிப்பது தொடர்பான உடன்பாடும் விரைவில் கைச்சாத்திடப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில் கொழும்பின் கிழக்கு கொள்கலன் முனையத்தை எவரிடமும் வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால அறிவித்திருக்கின்றார். முன்னர் இதனை இந்தியாவிடம் வழங்கவுள்ளதாகவே கூறப்பட்டிருந்தது.

ஆட்சி மாற்றம் ஆரம்பத்தில் சுமூகமாக இருப்பது போன்றதொரு தோற்றம் தெரிந்தாலும் கூட நாளடைவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்னும் அடிப்படையில்தான் அரசாங்கம் இயங்கிவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரையில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒரு தெளிவான கருத்தியல் பின்னணியை கொண்டவர். அவருக்கு ஆலோசகர்கள் இருந்தாலும் கூட அவருக்கென்று சுயாதீனமான நிலைப்பாடுகள் உண்டு. ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாறு என்பது முற்றிலும் மேற்குலகு சார்ந்த ஒன்று. இது அனைவரும் அறிந்த ஒரு விடயமும் கூட. ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைமை அப்படியல்ல. ஒப்பீட்டடிப்படையில் மைத்திரிபால சிறிசேன ஒரு புத்திஜீவியோ அல்லது வலுவானதொரு அரசியல் பின்புலத்தில் இருந்து வந்தவருமல்ல. ராஜபக்ச இருக்கும் வரையில் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடந்த ஒருவர். இதனால் அவர் பெருமளவிற்கு மற்றவர்களால் கையளப்படுவதற்கான வாய்ப்பே அதிகம்.

சீனாவுடனான ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடும் இந்தியாவும்

பொதுவாக ஆட்சியாளர்களை வழிநடத்துவதில் அவர்களின் ஆலோசகர்களுக்கு பெரும் பங்குண்டு. ஆலோசகர்களின் சார்புநிலைகளும் அவர்களது தெரிவுகளும் பெருமளவிற்கு ஆட்சியாளர்களை கட்டிப் போடுவதுண்டு. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் இந்த நிலைமை அதிகம். அந்த வகையில் மைத்திரியின் சில அறிக்கைகளுக்கு பின்னால் அவரது ஆலோசகர்கள் இருக்கவும் கூடும். சீனாவுடனான உடன்பாடு கைச்சாத்திடப்பட்டிருக்கும் நிலையில் கொழும்பு கொள்கலன் முனையத்தை எவருக்கும் வழங்கப் போவதில்லை என்னும் நிலைப்பாட்டை மைத்திரியாக எடுத்தாரா அல்லது அவரது ஆலோசகர் ஒஸ்ரின் பெனாண்டோ அப்படி எடுக்க வைக்கின்றாரா? கிழக்கு மாகாண ஆளுனராக இருந்த ஒஸ்ரின் பெண்டாண்டோ அப்பதவியிலிருந்து விலக்கப்பட்டு ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் ஆளுனராக இருந்த போதே ஜனாதிபதியின் ஆலோசகராகவும் இருந்தவர். விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது இவர் பாதுகாப்புச் செயலராக இருந்தார்.

அரசாங்க சேவையில் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கும் ஒஸ்ரின் தனது அனுபவங்களை ஒரு நூலாக வெளியிட்டிருக்கின்றார். அதன் பெயர் எனது வயிறு தூய்மையானது (My Belly is White). இந்த நூலில் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் போதான தனது அனுபவங்களையும் அவர் பதிவு செய்திருக்கிறார். அதாவது, இந்தியா அல்லது வேறு எந்தவொரு ராஜதந்திர தலையீடும் எப்போதும் உண்மைக்கு மாறாகவும், நாசவேலையாகவும், மோசடியாகவும்தான் இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். எங்கள் தட்டுக்களில் நல்லதோ அல்லது கெட்டதோ ஒரு முறை விழுந்துவிட்டால் அதன் பின்னர் அதனை வெளியக சக்திகளே தீர்மானிக்கின்றன. அவ்வாறாயின் ஒஸ்ரினின் பார்வையில் சிறிலங்காவின் ராஜதந்திரம் நேர்மையானதா? கொழும்பு தமிழ் மக்கள் விடயத்தில் கடைப்பிடித்துவரும் ராஜதந்திரம் நேர்மையானதா? ஒஸ்ரின் தன்னை ஒரு தாராளவாதியாக காண்பித்துக் கொண்டாலும் கூட, அவருக்குள் ஒரு இந்திய எதிர்ப்பு சிங்களத் தேசியவாதி இருக்கின்றார் போலும். அவருக்குள் அப்படியொரு உணர்வு இருக்கிறது என்பதையே மேற்படி வரிகள் இனம்காட்டுகின்றன.

இவ்வாறான ஒருவரால் ஜனாதிபதி மைத்திரிபால கையாளப்படும் போது, அவரது இந்தியா தொடர்பான நிலைப்பாடுகள் எவ்வாறு அமைந்திருக்கும் என்பது கேள்விக்குறியே. இவையெல்லாம் இந்தியாவும் அறியாததல்ல. அண்மையில், சீனாவின் தலையீடு தொடர்பில் உரையாற்றிய முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இலங்கை விடயத்தில் இந்தியா தவறிழைத்துவிட்டதாக தெரிவித்திருப்பதையும் இந்த இடத்தில் நோக்கலாம். ஆனால் இந்தியா – சீனா – அமெரிக்கா என்னும் ஒரு முக்கோண வியூகத்துக்கள் இலங்கை அகப்பட்டுவிட்டது என்பதில் ஐயமில்லை. இதனை கொழும்பு இதுவரை சிறப்பாகவே கையாண்டு வருகிறது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் ராஜதந்திர அணுகுமுறையை ஹப் ராஜதந்திரம் (Hub Diplomacy) என்று வர்ணித்திருந்தார். அவ்வாறாயின் தமிழர் தலைமையின் ராஜதந்திரம் என்ன? தமிழர்களிடம் ராஜதந்திரம் என்று ஒன்று இருக்கிறதா? அப்படியொன்று இருக்கிறதென்றால் அதனை ஹக் ராஜதந்திரம் (Hug Diplomacy) என்றுதான் கூற வேண்டும். அதாவது அரசாங்கத்தை கட்டிணைத்துக் கொண்டிருப்பது. ஏதாவது தரும்போது பெற்றுக் கொள்வது.   

8/6/2017 2:26:19 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்