Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஜெனீவாவுக்குப் போன தமிழர்கள்

ஜெனீவாவுக்குப் போன தமிழர்கள்
நிலாந்தன்

 

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஜெனீவாவிற்குப் போதல் எனப்படுவது தமிழ்த்தரப்பின் ஒரு பகுதியினருக்கு ஒரு சடங்கைப் போலாகிவிட்டது. மற்றொரு பகுதியினருக்கு அது அரசியற் சுற்றுலா ஆகிவிட்டது. மிகச்சிறிய பகுதியினருக்கே அது அரசியல் அடர்த்தி மிக்க ஒரு பயணமாக காணப்படுகிறது. சில ஆண்டுகளிற்கு முன் ஓர் அரசசார்பற்ற நிறுவனத்தால் அழைத்துச் செல்லப்பட்ட பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் ஜெனீவாவில் அரசியல் தஞ்சம் கோரினார்கள். இம்முறையும் ஒரு கிறிஸ்தவ மதகுரு அரசியல் தஞ்சம் கோரியதாக ஒரு தகவல் உண்டு. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு மூத்த ஊடகவியலாளர் இது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் எழுதும் பொழுது இம்முறை ஜெனீவாவிற்குப் போன எத்தனை பேர் சொந்தக் காசில் போனார்கள்? என்று கேள்வி கேட்டிருந்தார். மற்றொரு டயஸ்பொறா அரசியல் விமர்சகர் கொழும்பு ரெலிகிராஃவில் இது தொடர்பில் எள்ளளோடு விமர்சித்திருந்தார்.

ஜெனீவாவிற்குப் போகும் எல்லாருமே சொந்தக் காசில்தான் போக வேண்டும் என்றில்லை. செயற்பாட்டு இயக்கங்கள், அரச சாரா அமைப்புக்கள், டயஸ்பொறா அமைப்புக்கள், இன உணர்வாளர்கள் போன்ற தரப்புக்கள் நிதி உதவி செய்வதுண்டு. யார் காசு கொடுத்து ஜெனீவாவிற்குப் போகிறார்கள் என்பதை விடவும் அங்கே போய் எதைச் சாதிக்கிறார்கள் என்பதே இங்கு முக்கியமானதாகும். கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறு ஜெனீவாவிற்குப் போகும் தமிழர்கள் அங்கே சாதித்தவை எவை? இது தொடர்பில் ஏதாவது மதிப்பீடுகள், மீளாய்வுகள் செய்யப்பட்டுள்ளனவா?

ஜெனீவாவிற்குப் போகும் தமிழர்கள் அவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிறுவனங்களினாலும், தனிநபர்களினாலும் நெறிப்படுத்தப்படுவதாக ஒரு பொதுவான அவதானிப்பு உண்டு. இந்நிறுவனங்களுக்கிடையிலும் தனி ஓட்டம் ஓடும் தனி நபர்களுக்கிடையிலும் போதியளவு ஒருங்கிணைப்பு இல்லை. ஒரு நாட்டின் பிரதிநிதியைத் தமிழ்த்தரப்பில் பலர் சந்திக்கிறார்கள். ஒரே விடயத்தையே திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். சில நாடுகளின் பிரதிநிதிகளை சில சமயங்களில் யாருமே சந்திப்பதில்லை. இது தொடர்பில் ஒட்டு மொத்த வழி வரைபடம் தமிழ்த்தரப்பிடம் இல்லை. அப்படியொரு வழி வரைபடம் இருந்தால் அதற்கேற்ப ஒரு நிகழ்ச்சி நிரல் வகுக்கப்படும். அதன்படி வேலைகள் பகிர்ந்தளிக்கப்படும். தமிழ் நிதியும், தமிழ் சக்தியும் விரயமாகாது. அப்படியொரு ஒட்டு மொத்த வழி வரைபடம் ஏன் வரையப்படவில்லை?

வட மாகாணசபை இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் அதன் அடுத்த கட்டமாக இனப்படுகொலையை நிறுவும் விதத்தில் செயற்படத் தேவையான ஒரு பொறிமுறையை அது கண்டு பிடிக்கவேயில்லை. குறைந்த பட்சம் தகவல் திரட்டும் ஒரு பொறிமுறை கூட அவர்களிடம் இல்லை. மாகாணசபை உறுப்பினர்கள் உதிரிகளாக ஜெனிவாவிற்குப் போகிறார்கள்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஒவ்வொரு ஆண்டும் கிரமமாக ஜெனீவாவிற்குப் போகிறார்கள். இம்முறை கஜேந்திரகுமார் பிரான்ஸைத் தளமாகக் கொண்டியங்கும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் சார்பாக ஜெனீவா அரங்கில் உரையாற்றியுள்ளார். மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசேய்னுடைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் எட்டு அரசு சாரா நிறுவனங்கள் அது தொடர்பில் கருத்துக் கூற அனுமதிக்கப்பட்டன. அதில் ஒருவராக உரையாற்றிய கஜேந்திரகுமார் பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசாங்கத்ததின் விசுவாசத்தைக் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ஹுசேய்ன் பதில் கூறியும் உள்ளார். மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இவ்வாறு ஓர் அரச சார்பற்ற அமைப்பின் பிரதிநிதி எழுப்பிய கேள்விகளை கவனத்தில் எடுத்து மனித உரிமைகள் ஆணையாளர் பதில் கூறியது ஓர் அரிதான நிகழ்ச்சி என்று கருதப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தைக் கையாள்வதில் நாங்கள் முற்றிலுமாக எல்லாத் தெரிவுகளையும் இழந்துவிட்டதாகக் கருதவில்லை என்று ஹுசேய்ன் பதில் கூறியுள்ளார்.

இவ்வாறு ஜெனீவாவிற்குப் போன மக்கள் பிரதிநிதிகள், கட்சிப் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் போன்றோர் தமது பயணத்திற்கு முன் இது தொடர்பில் ஒன்று கூடிக் கதைத்திருக்கவில்லை. என்ன செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பில் ஒட்டு மொத்தத் திட்டம் எதுவும் வரையப்பட்டிருக்கவுமில்லை. கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட லொபி தொடர்பில் ஒட்டு மொத்த மதிப்பீடோ, மீளாய்வோ செய்யப்படவுமில்லை. ஏற்கெனவே டயஸ்பொறா அமைப்புக்களில் சில அரசுகளின் நிலைப்பாட்டை அனுசரித்துப் போகும் ஒரு பின்னணியில் அரசற்ற தரப்பாகிய ஈழத் தமிழர்கள் தங்களுக்கிடையில் ஐக்கியத்தையும், கூட்டுழைப்பையும் நிரூபிக்காத ஒரு சந்தர்ப்பமாகவே இம்முறையும் ஜெனீவா அரங்கு காணப்பட்டது. இதற்குக் காரணம் என்ன?

காரணம் மிகவும் எளிமையானது. தாயகத்தில் மக்கள் ஆணையைப் பெற்ற கட்சியானது ஜெனீவாவைக் கையாள வேண்டும் என்ற ராஜீயத் தரிசனம் இன்றிக் காணப்படுவதே அதற்குக் காரணம் எனலாம். தமிழ்த்தரப்பை ஒருங்கிணைப்பது என்பது தாயகத்தில் இருந்துதான் செய்யப்பட வேண்டும். தாயகம், தமிழகம், டயஸ்பொறா ஆகிய மூன்றையும் தாயகம் என்ற மையத்திலிருந்துதான் ஒருங்கிணைக்க வேண்டும். யுத்த காலங்களில் அப்படித்தான் நடந்தது. ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபின் எல்லாமே சிதறிப் போய் விட்டது. மையம் டயஸ்பொறாவிற்கு நகர்த்தப்பட்டு விட்டதாக ஒரு தோற்றம் உருவாகியது. ஆனால் மையம் தாயகத்தில் தான் இருக்க முடியும். தாயகத்தில் மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு கட்சி அல்லது வெகுசன அரசியலை வெற்றிகரமாக முன்னெடுக்கும் ஓர் அமைப்பு போன்றவைதான் தாயகம், தமிழகம், டயஸ்பொறா ஆகிய மூன்று தரப்புக்களையும் ஒருங்கிணைக்க முடியும். ஜெனீவாவைக் கையாள வேண்டும் என்ற தரிசனம் தாயகத்தில் இல்லையென்றால் அது வேறெங்கு இருந்தாலும் பொருத்தமான விளைவுகளைத் தராது.

ஜெனீவாவைக் கையாள்வது எப்படி? ஜெனீவாவைக் கையாள்வது என்றால் முதலில் ஜெனீவாவை விளங்கிக் கொள்ள வேண்டும். ஜெனீவாவை விளங்கிக் கொள்வது தொடர்பில் தமிழில் எத்தனை கட்டுரை எழுதப்பட்டுள்ளன? எத்தனை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன? எத்தனை கருத்தரங்குகள் நடாத்தப்பட்டுள்ளன? ஜெனீவா ஓர் அரசுகளின் அரங்கு. ஆனால் இந்தப் பூமி அரசுகளிற்கு மட்டும் சொந்தமானது அல்ல. அரசற்ற தரப்புக்களே இப் பூமியில் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன. இப்படிப் பார்த்தால் ஜெனீவா எனப்படுவது முழு உலக சமூகத்தையும் முழுமையாக பிரதிபலிக்காத ஓர் அரங்குதான். இது முதலாவது.

ஜெனீவாவுக்குப் போன தமிழர்கள்

இரண்டாவது மனித உரிமைகள் ஆணையகம் எனப்படுவது ஐ.நாவின் ஓர் உறுப்புத்தான். அதுவே ஐ.நாவாகி விடாது. இப்படிப் பார்த்தால் ஜெனீவா மட்டுமே ஐ.நா அல்ல. இது இரண்டாவது.

மூன்றாவது மனித உரிமைகள் ஆணையகம் எனப்படுவது ஒரு நாட்டின் பிரச்சினைகளை மனித உரிமைகள் என்ற நோக்கு நிலையில் இருந்தே பார்க்கும். இதனால் ஒரு நாட்டின் பிரச்சினைகள் அவற்றின் அரசியல் அடர்த்தி நீக்கப்பட்டு மனித உரிமைகள் என்ற ஒரு சட்டகத்திற்குள் வைத்தே அணுகப்படும். மேலும் மனித உரிமைகள் ஆணையகமானது ஒரு நாட்டின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஓர் அமைப்பும் அல்ல.

கடந்த சில ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கைககள் மற்றும் பேச்சுக்களுக்கும் ஐ.நா தீர்மானங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாகக் காணப்படுகிறது. ஹுசேய்ன் மனித உரிமைகள் என்ற சட்டகத்திற்குள் நின்று சிந்திக்கிறார். ஆனால் ஐ.நா தீர்மானங்களோ அரசுகளின் நீதியைப் பிரதிபலிக்கின்றன.

எனவே ஈழத்தமிழர்கள் தமது பிரச்சினையை அதன் அரசியல் அடர்த்தியோடு முன்னெடுப்பதாக இருந்தால் மனித உரிமைகள் ஆணையகத்தையும் தாண்டி ஐ.நா பொதுச்சபை, பாதுகாப்புச்சபை போன்றவற்றிற்குப் போக வேண்டும். இங்கேயும் பிரச்சினைகள் உண்டு. ஐ.நா பாதுகாப்புச் சபையால் நிறைவேற்றப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான பல தீர்மானங்களை அந்த நாடு மதிக்கவில்லை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அவ்வாறு மதிக்காமல் விடுவதற்குரிய துணிச்சலை இஸ்ரேல் எங்கிருந்து பெற்றது? அமெரிக்காவிடமிருந்தே பெற்றது. எனவே ஐ.நாவைத் தீர்மானிப்பது ஜெனீவா மட்டுமல்ல. வொஷிங்டன், மொஸ்க்கோ, பீஜிங் போன்ற தலைநகரங்கள்தான். இப்படிப் பார்த்தால் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை ஐ.நாவைக் கையாள்வது என்பது வொஷிங்டனையும், புதுடில்லியையும் கையாள்வதுதான். இது மூன்றாவது.

நான்காவது அரசற்ற தரப்புக்களுக்கும் ஜெனீவாவில் இடமுண்டு. அவற்றின் பிரதிநிதிகள் மைய அரங்கில் சில நிமிடங்கள் பேசலாம். பக்க அரங்குகளில் உரையாற்றலாம். விவாதங்களிலும் ஈடுபடலாம். அதோடு தாம் தயாரித்த அறிக்கைகளை நிழல் அறிக்கை என்ற பெயரில் சமர்ப்பிக்கலாம். ஆனால் இறுதி முடிவை அரசுகளே எடுக்கின்றன.

இதுதான் ஜெனீவா. இதைச் சரியாக விளங்கிக் கொண்டால்தான் ஜெனீவாவைக் கையாள்வதற்கு வேண்டிய வழி வரைபடத்தையும் வரையலாம். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களை ஜெனீவாவோடு பிணைத்து விட்டமை என்பது இலங்கை அரசாங்கத்திற்கும் வெற்றிதான், மேற்கு நாடுகளிற்கும், இந்தியாவிற்கும் வெற்றிதான். ஈழத்தமிழர்கள் ஜெனீவாவைத் தாண்டியும் போக வேண்டும். இராஜதந்திரப் போர் எனப்படுவது அதன் சரியான பொருளில் அதுதான்.

எனவே ஜெனீவாவை அல்லது உலக சமூகத்தை வெற்றிகரமாகக் கையாள்வது என்றால் ஈழத் தமிழர்கள் பின்வரும் தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது.

முதலாவதாக பொருத்தமான ராஜீய தரிசனத்தைக் கொண்ட தரப்புக்கள் தங்களுக்கிடையில் கொள்கை ரீதியிலான ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஐக்கியப்பட்ட தரப்பு தாயகத்தில் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற வேண்டும். அல்லது வெற்றிகரமான ஒரு வெகுசன இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும்.

இரண்டாவதாக மேற் சொன்ன தரப்பானது தமிழகத்தையும், டயஸ்பொறாவையும் பொருத்தமான விதங்களில் ஒருங்கிணைக்க வேண்டும்.

மூன்றாவது இது வரையிலுமான ஜெனீவா லொபி தொடர்பில் காய்தல், உவத்தலற்ற ஒரு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

நாலாவது அந்த மதிப்பீட்டின் அப்படையிலும், புவிசார் அரசியல் நிலமைகளின் அடிப்படையிலும் ஒட்டுமொத்தத் திட்டம் ஒன்று வரையப்பட்டு அதற்குரிய வழி வரைபடமும், நிகழ்ச்சி நிரலும் உருவாக்கப்பட வேண்டும்.

ஐந்தாவது அந்த வழிவரைபடத்தின் பிரகாரம் வேலைகள் பகிந்தளிக்கப்பட வேண்டும்.

மேற்சொன்ன ஐந்து படிமுறைகளுக்கூடாகவும் ஈழத்தமிழர்கள் ஒரு மையத்திலிருந்து சிந்திக்கும் ஒரு மகத்தான வளர்ச்சிக்கு போவார்களாக இருந்தால் உலக சமூகத்தை வெற்றிகரமாகக் கையாள முடியும்.

ஓர் அரசுடைய தரப்பாகிய சிங்கள மக்கள் எப்படி ஒற்றுமையாக செயற்படுகிறார்கள் என்பதிலிருந்து ஈழத்தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு புறம் ரணில் மைத்திரி அரசாங்கமானது முகமூடி அணிந்து கொண்டு ஜெனீவாவிற்கு போகிறது. அது மனித முகமூடி அணிந்த இனவாதமாகும். அதே சமயம் லிபரல் ஜனநாயகவாதிகளான ஜெகான் பெரேராவைப் போன்றவர்களும், சிவில் சமூகத்தவர்களும் நல்லிணக்க முகமூடியோடு ஜெனீவாவிற்கு போகிறார்கள். சிங்களபௌத்த அரசுக்கு வெள்ளையடிப்பது இவர்களுடைய வேலை.

இவர்களைத் தவிர ஒரு புதிய தோற்றப்பாடாக முன்னாள் கடற்படைத்தளபதி வீரசேகரவும் இம்முறை ஜெனீவாவிற்கு போயிருந்தார். புலிகள் இயக்கத்திற்கு எதிரான ஆவணத் தொகுப்பு ஒன்றை அவர் எடுத்துச் சென்றிருக்கிறார். அவருக்குப் பக்க பலமாக தண்டுசமத்தான ஆட்கள் சிலர் விறைப்பான முகத்தோடு அவரோடு காணப்பட்டிருக்கிறார்கள். தோற்றத்திலும், நடை உடை பாவனைகளிலும் அவர்கள் படைத்தரப்பினரைப் போலக் காணப்பட்டார்களாம். இதனால் ஜெனீவாவிலும் எங்களுக்கு பாதுகாப்பில்லையோ என்று யோசிக்க வேண்டியிருந்தது என்று ஒரு மக்கள் பிரதிநிதி கூறினார். வீரசேகர அணி ஒரு தமிழரை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டு வந்திருக்கிறது. புலிகள் இயக்கத்திற்கு எதிரான சாட்சியத்தை அவர் வழங்கியிருக்கிறார். ஆனால் கூட்டத்தொடர் முடிந்த பின் அந்த நபர் கால்களால் நடந்து போனதை சிலர் கண்டதாக ஒரு தகவல் உண்டு.

வீரசேகரவின் விஜயம் உடனடிக்கு தமிழ் மக்களுக்கு பாதகமானதாகத் தோன்றலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் பார்த்தால் அது தமிழ் மக்களுக்கு சாதகமான ஒன்றுதான். ஏனெனில் அது முகமூடி அணியாத இனவாதம். ஏற்கெனவே மனித முகமூடியுடனும், லிபரல் ஜனநாயக முகமூடியுடனும் ஜெனீவாவிற்கு வரும் இனவாதத் தரப்போடு ஒப்பிடுகையில் வீரசேகர ஒரு வெளிப்படையாக தரப்பு எனலாம். முகமூடி அணியாத இனவாதமானது அதன் மூர்க்கம், அவையடக்கமின்மை போன்றவை காரணமாக தன்னை அறியாமலேயே முகமூடி அணிந்த இனவாதத்தையும் அம்பலப்படுத்தி விடும். அதோடு ஓர் இனப்படுகொலையை நியாயப்படுத்த முற்படும் அத்தரப்பை தமிழ்த்தரப்பானது வெற்றிகரமாக அறிவுபூர்வமாக எதிர் கொள்ள முடியும். ஓர் இனப்படுகொலையைச் செய்து விட்டு உலக அரங்கில் வெட்கப்படாது போய் நிற்பது கடினமானது என்ற ஒரு நிலமையை தமிழர்கள் கெட்டித்தனமாக உருவாக்கலாம். இப்படிப் பார்த்தால் வீரசேகரவின் விஜயம் எனப்படுவது இனவாதம் தன்னைத்தானே அம்பலப்படுத்தும் ஓர் எத்தனந்தான்.

ஆனால் முகமூடி அணிந்தோ அணியாமலோ ஜெனீவாவிற்குப் போன தென்னிலங்கைத் தரப்பானது ஒரே இறுதி இலக்கை முன்வைத்துத்தான் செயற்பட்டது. ஓர் ஒட்டு மொத்த வழி வரைப்படத்தின் வெவ்வேறு கூறுகளே அவை. அது ஓர் அரசுடைய தரப்பு. அதே சமயம் ஒரு பொது நிகழ்ச்சி நிரலின் கீழ் ஒற்றுமையாக செயற்படுகிறது. இப்படிப் பார்த்தால் அரசற்ற தரப்பாகிய தமிழர்கள் எப்படியெல்லாம் திட்டமிட்டு தீர்க்கதரிசனத்துடன் செயற்பட வேண்டும்? ஓர் ஒட்டு மொத்த வழிவரைபடம் இன்றி தமிழ் மக்கள் உலக சமூகத்தை எதிர்கொண்ட கடைசி ஜெனீவாக் கூட்டத் தொடராக இவ்வாண்டின் கூட்டத் தொடர் அமையுமா? 

4/9/2017 4:08:36 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்