Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

வெளிப்படுத்த முடியாத் துயரம்

வெளிப்படுத்த முடியாத் துயரம்
தர்சினி

 

01

மூன்று நாட்களுக்கு முதல், மழை பெய்து கொண்டிருந்த ஒரு பின்னேரத்தில் எதிர்பாராத விதமாக அந்தப் பெண்ணைச் சந்தித்தேன். அவளுக்கு முப்பது வயதிருக்கலாம். மழைக்காகத் தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் அவள் ஒரு கடைத்தொகுதியை ஒட்டிய பகுதியில் ஒதுங்கி நின்றாள். நின்றவள் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். கடுமையான மழைப்பொழிவு. பிள்ளைகள் மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டும் அதனுடன் விளையாடிக் கொண்டும் இருந்தனர். 

அவளுடைய முகம் தீராத துக்கத்தில் அமிழ்ந்திருப்பதைக் காட்டியது. கறுத்து வாடிய முகம். பிள்ளைகளின் வேடிக்கையும் விளையாட்டும் அவளுடைய கவனத்தில் இல்லை. அவர்களுக்கும் அவளுக்குமிடையில் பெரியதொரு இடைவெளி இருப்பது அப்படியே புலப்பட்டது.

நான் அவர்களுக்கருகிற் சென்று பிள்ளைகளுடன் பேச்சுக் கொடுத்தேன். அவர்கள் மழையோடு என்னையும் சேர்த்துக் கொண்டு விளையாட ஆரம்பித்தனர். இடையே அவர்களிடம் கேட்டேன்,

'உங்கட அப்பா எங்கே'

'அவர் செல்லடியில செத்திட்டார்'

இப்படிச் சொல்லும்போதே அவர்கள், என்னையும் தாயையும் மாறி மாறிப் பார்த்தனர்.

அவள் சட்டெனத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு என்னைப் பார்த்தாள். பிள்ளைகள் சொன்ன பதில் உண்மையில்லை என்று எனக்குப் பட்டது. தாங்கள் சொல்வது உண்மையில்லை என்று பிள்ளைகளுக்கும் தோன்றியிருக்க வேணும். அதனால்தான் அவர்கள் தாயையும் என்னையும் தயக்கத்தோடு பார்த்தனர்.

அவள் சற்றுக் கலவரமடைந்ததைக் கவனித்தேன். பிள்ளைகளைத் தன்னோடு அழைத்து அணைத்துக்கொண்டாள்.

சற்று நேரத்துக்குப் பிறகு, 'எங்க, எப்பிடி நடந்தது?' என்று அவளுடைய கணவரின் இறப்பைப் பற்றித் தொடர்ந்து கேட்டேன்.

அவள் எதுவும் பேசவில்லை. பிள்ளைகள் என்னையும் தாயையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

எனக்கு நிலைமை புரிந்தது. முன்னறிமுகமில்லாதவர்களிடம் எதையும் பேசினால், அது தேவையில்லாத பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடும் என்ற எச்சரிக்கை அது. அவ்வளவுக்கு சந்தேகத்தின் வலைகளைப் பின்னி வைத்திருக்கிறார்கள் படையினர்.

சற்று நேரம் வேறு விசயங்களைப் பற்றிப் பேசியபோது, அவளுக்குத் தெரிந்தவர்கள், எனக்கும் தெரிந்தவர்களாக இருந்தனர். இது அவளுக்கு என் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேணும்.

அவள் சொன்னாள், 'அவர் ஒரு மழையுக்குள்ளதான் வீரச்சாவடைஞ்சவர். மழையுக்குள்ளதான் இவரை விதைச்சது. மழைக்குள்ளதான் விளக்கும் ஏத்திறனாங்கள்... அதால மழையைப் பார்த்தால் எனக்கு எல்லாம் நினைவுக்கு வரும்'.

அவள் விம்மினாள். மழை அவளை துயரப்படுத்துகிறதா? அல்லது உருவாகியிருக்கும் நிலைமைகள் அவளைத் துக்கப்படுத்துகின்றனவா?

இடித்தழிக்கப்பட்ட கல்லறைகள்....

எருக்கலங் காடாகிய துயிலிடங்கள்....

எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசமுடியாத நிலைமைகள்....

மரித்தோருக்கு விளக்கேற்றவும் விதியற்ற வாழ்க்கை....

அவள் தொடர்ந்தாள், 'இப்ப நாங்கள் என்ன செய்யேலும்? அவருக்கு விளக்குக் கூட ஏத்தேலாது. அவற்றை கல்லறைகூட இல்லாமற் போயிற்று...'  அவளுடைய கண்களிலிருந்து விழுந்தது கண்ணீர்.

அவளுடைய நிலைமை எனக்குப் புரிந்தது.

யுத்தம் முடிந்து விட்டது என்ற மாபெரும் திரைக்குப் பின்னே –

அவளுடைய கேவல்களும் துக்கங்களும் நியாயமறுப்புகளும்....

மழை பெய்து கொண்டேயிருந்தது. நான் அடக்க முடியாத துயரில் விம்மினேன். எதையும் செய்வதற்கு வக்கற்றுப் போனோமா?

உள்ளுக்குள்ளே நெருப்பெரிகிறது. ஆற்ற முடியாத துக்கத்தை அடக்கிக் கொண்டிருக்கிறோம்.

மழை இன்னும் பெய்து கொண்டேயிருக்கிறது.

மண்ணின் வெம்மையடங்கப் பெய்கிறது மழை.

மனதின் வெம்மையடங்க?

02

அம்மா அழாதே!

பேச விதியற்ற வாழ்வொன்றைப் போக்க நான் செல்கிறேன்

வாழ விதியற்ற கதியை மாற்ற நான் போகிறேன்

யூலியஸ் பூஸ்க், பொபிஸான்ட்ஸ் போன்றோரின் மரணம் போல்

எனக்கும் மரணமொன்று நேர்ந்தால்,

நீ கலங்காதே!

எனக்காக நீ அழும் கண்ணீரைத் துடைப்பதற்கு

என்னுடைய தோழர்கள் வருவர்.

அவர்களுக்குச் சோறிடு

அவர்களை ஆதரி

அவர்கள் நாளை நிச்சயம் நமக்கென்றொரு வாழ்வைத் தருவர்

அம்மா!

என் நினைவாக ஒரேயொரு விளக்கையேற்றி விடு

நான்கைந்து செவ்வரத்தம் பூக்களைச் சாத்திவை

நான் மண்ணுக்கடியில் உன்நினைவோடும் தாயகக் கனவோடும் உறங்குவேன்...

- என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போன போராளிப் பிள்ளையின் கனவை நிறைவேற்ற முடியாமற் கதறும் தாயைக் கொண்டதிந்த நாடும் நாட்களும்.....

துயரம் முற்றிப் படர்கிறது காட்டுச் செடியாய்...

03

போரினாற் பாதிக்கப்பட்ட மக்களின் மனவடுக்களைப் போக்குவதற்கு ஊடகங்களும் படைப்பாளிகளும் பங்காற்ற வேண்டிய பொறுப்புகளைப் பற்றியும் முறைகளைப் பற்றியும் அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் ஒரு பட்டறையை இலங்கையில் அண்மையில் நடத்தியிருந்தனர்.

ஆனால், மனவடுக்களைப் பற்றியே எழுதவும் பேசவும் முடியாத ஒரு காலமும் ஒரு சூழலும் ஒரு நிலையும் உருவாகியிருக்கிறதே!

இதைப் பற்றி யார்க்கெடுத்துரைப்போம்!

04

மனவடுவைப் பற்றி....

தன்னுடைய துயரங்களைச் சொன்னால், அவற்றைக் கேட்பதற்கு யாருமே இல்லாத ஒரு றிக்ஷாக்காரனின் கதையின் மூலமாக உளவியற் பிரச்சினையை உலகத்திற்குச் சொன்னார், அன்ரன் செகோவ்.

ஆனால், அதே உலகம் இன்று துயரத்தோடிருக்கும் ஈழத்தமிழர்களுக்குச் சொல்கிறது 'பேசாதே வாய்திறந்து' என்று.

மேலும், ஈழத்தமிழர்களின் துயரங்களைக் கேட்பதற்கும் நியாங்களைக் கேட்பதற்கும் அது தயாருமில்லை என்றும்.

ஆனால், மன வடுக்களைப் பற்றித் தொடர்ந்தும் பேசுகிறார்கள். மனவடுக்களை நீக்குவதைப்பற்றி பட்டறைகளை நடத்துகிறார்கள். மனவடுவுக்குள்ளானவர்களைப் பற்றி ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். அவற்றைப் பற்றி அறிக்கையிடுகிறார்கள்.

இதனாற்தான் சொன்னார்களா, 'உலகமே ஒரு நாடகமேடை, பொய்களே அதில் நிதமும் அரங்கேறுகின்றன' என்று.

05

ஒரு காலம் துடைத்தழிக்கப்படுகிறது.

போராட்டத்தில் பங்கேற்றோரைப் புதைத்த இடங்கள் (மாவீரர் துயிலுமில்லங்கள்), அவர்களுடைய நினைவுச் சின்னங்கள், படங்கள் போன்றவை.

மேலும் போராட்ட அமைப்புகளினாலும் போராளிகளினாலும் உருவாக்கப்பட்ட அடையாளங்கள், சிறப்புகள், வேலைத்திட்டங்கள்.

மக்களுடைய கடந்த காலப் பெறுமதிகள், அடையாளச் சின்னங்கள்.

எல்லாமே மீட்கப்படவே முடியாத குழிக்குள் புதைக்கப்படுகின்றன. இது காயங்களை மேலும் அதிகரிக்கும். இதனாற் தனி மனிதர்கள் மட்டுமல்ல, சமூகமே பாதிப்படையும்.

இவ்வாறு பௌதீக நிலையில் சிலவற்றைத் துடைத்தழிக்கலாம். ஆனால், அகநிலையில் அது அதே தீவிரத்துடன், அதையும் விடத் தீவிரத்துடன் இருக்கும்.

இதுவும் ஒரு உளவியல் சார்ந்த விவகாரமே. கூட்டுமனதின் வெளிப்பாடாக எது உருக்கொள்கிறதோ அதுவே எதையும் தோற்கடிக்கிறது. எதையும் வெற்றியடைய வைக்கிறது.

06

வெளிப்படுத்த முடியாத துக்கத்தின் விளைவு எப்படியிருக்கும்?

'உளவியற் தாக்கம்', 'மனவடு' போன்றவற்றைப் பற்றி அதிகம் பேசப்படும் இன்றைய உலகில் வெளிப்படுத்த முடியாத துக்கம் பெரும் பாதிப்பையும் மோசமான விளைவுகளையுமே ஏற்படுத்தும். மேலும் அது ஒரு சமூகத்தையே சிதைத்து விடும்.

07.

மாண்டவரை நினைத்தல், மரித்தோரைக் கொண்டாடுதல் என்பதெல்லாம் சமூகச் சிறப்பான விசயங்கள். அதிலும் பிறருக்காய்த் தம்மை அர்ப்பணித்தோரை நினைத்தல் மிகச்சிறப்பான செயல்.

நாங்கள் என்ன செய்ய? எப்படி வாழ?

11/24/2011 6:55:55 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்