Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ராஜபக்சவின் சுதந்திரதின உரை: நில ஆக்கிரமிப்பு - தமிழின அழிப்புக்கான கொள்கைப் பிரகடனம்

ராஜபக்சவின் சுதந்திரதின உரை: நில ஆக்கிரமிப்பு - தமிழின அழிப்புக்கான கொள்கைப் பிரகடனம்
சுதர்சன் அம்பலவாணர்

 

'எந்தொரு குறித்த இனத்திற்குமென எந்தொரு குறித்த பிரதேசத்தையும் வழங்க முடியாது. முழு இலங்கையும் எல்லா இனங்களுக்குமான சொந்தத் தாயகம்' என்று தனது சுதந்திர நாள் உரையில் ஸ்ரீலங்க அதிபர் ராஜபக்ச குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில் வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய எந்தொரு தீர்வு முயற்சியையும் தான் நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.

முதலாவதாக அவர் தமிழ் மக்களின் தாயக் கோட்பாட்டை இதில் தெளிவாக நிராகரிப்பதுடன் தமிழர்களது தேசியத் தனித்துவத்தையும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அத்துடன் இக்கூற்று முஸ்லிம் மக்களுக்கும் அதேயளவு பொருந்தும் வண்ணம் அவரால் கூறப்பட்டுள்ளது என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது.

ஒரே மக்கள், ஒரே ஒற்றையாட்சி அரசு என்ற தனது சிங்கள பௌத்த ஓரின, ஓரரசக் கோட்பாட்டை அவர் இவ்வாறு மீண்டும் கூறியுள்ளார் என்பது புலனாகிறது. இக்கோட்பாட்டை அவர் ஏற்கனவே கொண்டுள்ளவர் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு.எஸ்.எம்.கிருஷ்ணா அண்மையில் கொழும்பிற்கு அரசமுறைப் பயணத்தை மேற்கொண்ட போது 'இனப்பிரச்சினைக்கான தீர்வை 13வது திருத்தச் சட்டத்திற்கு மேற்சென்று காணவேண்டும்' என அங்கு நின்று தெரிவித்தார். இதனை நிராகரித்து தனது பழைய இன மேலாதிக்கக் கோட்பாட்டை வற்புறுத்தும் வகையிலேயே ராஜபக்சவின் மேற்கண்டவாறான உரை அமைந்தது. அதாவது இந்திய அரசிற்கு குறிப்பாகவும், ஈழத்தமிழர்களின் குறைந்தபட்ச நியாயங்களை வற்புறுத்தும் உலகின் ஏனைய நாடுகளுக்குமான பதிலாகவே அவரது சுதந்திரதின உரை அமைந்திருந்தது.

ஈழத்தமிழரின் தலையாய முதலாவது பிரச்சினையே அவர்களது தேசிய தனித்துவத்தை பாதுகாப்பதற்கான அவர்களது பாரம்பரிய தாயகப் பிரதேசம் பற்றிய பிரச்சினைதான். இலங்கையில் தமிழரின் இரத்த ஆறு ஓடத்தொடங்கிய முதலாவது சம்பவம் கிழக்கில் அவர்களது தாயக பூமியில் இடம்பெற்றது. 1949-ம் ஆண்டு கல்லோயாத் திட்டத்தின் கீழ் அரசால் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேறிகள் 1956-ம் ஆண்டு யூன் மாதம் 5-ம் திகதி அப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த 156 தமிழ் விவசாயிகளை அரச மற்றும் பொலிஸ் அனுசரணையுடன் இனப்படுகொலை செய்தனர். இதுவே முதலாவது இரத்தக் களறியாக அமைந்தது.

இங்கு இன அழிப்பானது பிரதேச ஆக்கிரமிப்பில் ஆரம்பமாகி உள்ளதென்பதை தெளிவாகக் காட்டும் முதற் சம்பவமாக இது அமைந்தது. தனித்துவமான நிலம் இல்லையேல் தேசிய தனித்துவத்திற்கு இடமில்லை. தேசியம் என்பது ஒரு குறித்த நிலத்தின் மீதான தனித்துவமான வாழ்விலிருந்தே கட்டி எழுப்பப்படுகிறது. ஈழத்தமிழர் மீதும், முஸ்லிம்கள் மீதுமான சிங்கள மேலாதிக்க இன ஆக்கிரமிப்புக் கொள்கையை வெளிப்படையாக பிரகடனப்படுத்தும் வகையிலான அரசின் ஒரு கொள்கைப் பிரகடனமாகவே ஜனாதிபதியின் இவ்வுரை அமைந்துள்ளது.

பல்லின அரச சமூகத் தன்மை வளர்ந்துள்ள 21-ம் நூற்றாண்டில் சிங்கள அரசும், சிங்களத் தலைவர்களும் அருவருக்கத்தகுந்த ஓரின, ஒருமைவாதக் கோட்பாட்டை முன்வைத்து நியாயப்படுத்தும் அளவிற்கு அவர்களின் அரசியல் கலாச்சாரமும், மனிதப் பண்பாடும் சென்றுள்ளது. இது ஒரு நாகரீக உலகிற்கு பொருத்தமான கோட்பாடோ, செயலோ அல்ல. இதற்கான மாற்று வழியாக பிரிந்து சென்று சுதந்திர தேசிய தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதைத் தவிர வேறு வழி எதனையும் தமிழீழ மக்களுக்கும் உலகளாவிய ஜனநாயக விழுமியத்திற்கும் வரலாறு விட்டு வைக்கவில்லை.

அடுத்து அவரது உரையில் உள்ள இரண்டாவது கருத்தைப் பரிசீலிப்போம்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வெளிநாடுகளின் பரிந்துரைகளையும் வெளிநாட்டு மாதிரிகளையும் நிராகரிப்பதாக அது அமைந்துள்ளது. இது ஒரு நவீன உலகம். ஒரு மனிதன், ஓர் இனம், ஓர் அரசு, ஓர் உலகம் என ஒரு மனிதனின் வாழ்வு அனைத்துடனும் பின்னிப் பிணைந்து செல்கிறது. ஆதலால் ஒரு மனிதனை அவனது தேசிய இனத்திலிருந்தும், அரசிலிருந்தும், உலகிலிருந்தும் பிரிக்க முடியாது. உலகில் உள்ள எந்தொரு அரசும் பூகோள வாழ்விற்கு உட்பட்டு சர்வதேச வலைப்பின்னலின் ஒரு பகுதியாகி விட்டது. குறிப்பாக 16-ம் நூற்றாண்டிலிருந்து கடந்த 5 நூற்றாண்டுகளில் மனிதன் இடையறாது பூகோளத் தன்மை அடைந்துள்ளான்.

சிந்தனை, கருத்துக்கள், கல்வி, அறிவு, தொழில்நுட்பம், பொருளாதாரம், மொழி, அரசியல், சமூகம், இராணுவம், கலாச்சாரம், விளையாட்டு, நிறுவனங்களென உலக அளவில் பரிவர்த்தனைகள் வளர்ச்சி பெற்றுவிட்ட காலமிது. எந்தொரு தனித்தேசிய இனமும், எந்தொரு இனமும், எந்தொரு அரசும் இதிலிருந்து விதிவிலக்காய் இருக்க முடியாது.

இலங்கையில் இன்று காணப்படும் அரசியல் நிறுவனங்கள் அனைத்தும் மேற்குலகிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவைதான். கல்வி, கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அவ்வாறு மேற்கிலிருந்து கொண்டுவரப்பட்டவைதான். அறிவு, தொழில்நுட்பம், வண்டிகள், வாகனங்கள், கருவிகள், ஆயுதங்கள், தளபாடங்கள் என அனைத்தையும் இலங்கை அரசு வெளிநாடுகளில் இருந்துதான் பெறுகிறது. ஊசி முதல் கப்பல் வரை வெளிநாடுகளில் இருந்துதான் இலங்கை அரசு பெறுகிறது. குறைந்த பட்சம் பல்லுக் குத்தும் குச்சியில் இருந்து மலம் துடைக்கும் தாள் ஈறாக இலங்கை அரசு வெளிநாடுகளில் இருந்துதான் பெறுகிறது என்பதை கருத்தில் எடுக்கத் தவறக்கூடாது.

இவ்வாறு யதார்த்தம் இருக்கையில் வெளிநாடுகளில் இருந்து அரசியல் தீர்வு பரிந்துரைக்கப்படக் கூடாது என்று கூறுவது முற்றிலும் நடைமுறைக்கு மாறானது. வெளிநாட்டுக் கட்சி முறைகளை வைத்திருக்கலாம், வெளிநாட்டிலிருந்து வரும் அறிவைப் பெறலாம், வெளிநாட்டிலிருந்து உருவான அரசியல் நிறுவனங்களை வைத்திருக்கலாம். ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு மட்டும் வெளிநாடுகளில் காணப்பட்டது போல் இலங்கைக்கு காணப்படக்கூடாது என்று கூறும் நடைமுறைக்குப் பொருந்தாத சிங்கள இன விதண்டாவாதத்தை எப்படி வர்ணிப்பது?

இவ்வாறு வெளிநாடுகளை நிராகரிப்பது என்றால் கோவணமும் அம்பும் வில்லும்தான் இலங்கைக்கு மிஞ்ச முடியும். 

இதனை இன்னொருபடி மேலே சென்று பார்ப்போம். ஈழத்தமிழரை இராணுவ ரீதியில் ஒடுக்குவதற்கு சிங்கள அரசு முற்றிலும் வெளிநாடுகளிலேயே தங்கியிருந்தது. ஈழத்தமிழரை ஒடுக்குவதற்கு வெளிநாடுகளில் இருந்து இராணுவ, ஆயுத உதவிகளைப் பெற்றுக்கொண்ட சிங்கள அரசு அரசியற் தீர்வுக்கு வெளிநாடுகளின் உதவியை நிராகரிக்கிறது. ஒடுக்க வெளிநாடுகளின் ஆயுத உதவிகளைப் பெற்ற அரசு, தீர்வுக்கு அத்தகைய வெளிநாடுகளின் உதவியை நிராகரிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்றதின் பெயரில் சிங்கள அரசிற்கு இராணுவ, ஆயுத உதவிகளைச் செய்த வெளிநாடுகளுக்கு ஈழத்தமிழர் தம் தேசிய உரிமையை நிலைநாட்ட உதவ வேண்டிய தார்மீகப் பொறுப்பு உண்டு.

ஒரு தேசிய இனம், உலகளாவிய பல தேசிய இனங்கள், இந்தத் தேசிய இனங்களுக்கு இடையேயான உறவு என்பதே சர்வதேச அரசியல் எனப்படும். ஆதலால் ஒரு தேசிய இனமான ஈழத்தமிழர்கள் சர்வதேசியத்தின் ஒரு பகுதியினராவர். தேசிய இனம், தேசம், தேசிய அரசு, பல்தேசிய இன அரசு என்பனவெல்லாம் நவீன உலகத்திற்குரிய புதிய இயல்பும், பண்புமாகும். ஆதலால் தேசியம் என்று வந்தவுடனேயே அது சர்வதேசியத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதாகிறது. தேசிய இனம் என்பது நவீன சர்வதேச பண்புக்குரிய ஒன்று என்பதனால் சர்வதேச வடிவத்தினால ஒரு தீர்வு ஈழத்தமிழ் தேசிய இனத்திற்கு விதிவிலக்காக முடியாது.

இலங்கை அரசும், சர்வதேச அரசியலின் ஓர் அங்கம் என்ற வகையில் வெளிநாட்டு வடிவங்களிலான, அல்லது உதவிகளிலான ஒரு தீர்வை அது நிராகரிக்கவும் முடியாது. இலங்கை அரசு இந்த பூமிக்கு வெளியே அண்ட வெளியில் எங்காவது தொங்கிக் கொண்டிருந்தால் அது வெளிநாடுகளின் தொடர்பை நிராகரிப்பதில் பொருள் இருக்கலாம். மாறாக இலங்கை அரசு உலகளாவிய அரசியல் சமூக பொருளாதார அமைப்பின் ஓர் அங்கம்தான். ஆனால் இதனை ராஜபக்ச விளங்காமல் கூறவில்லை. அவர் உலக நாடுகளிலிருந்து அனைத்து வகையான உதவிகளையும் பெற்றுக் கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் மட்டும் உலகநாடுகளின் உதவியை நிராகரிக்கிறார். அதாவது அவர் தமிழர்களை சர்வதேச உலக அரசியலில் இருந்து தனிமைப்படுத்திவிட்டு அழித்தொழிப்பதற்கான ஓர் உபாயமாகத்தான் தன் கருத்தைக் கூறியுள்ளார்.

ஒரு வசனத்தில் கூறுவதென்றால் தமிழர்களை முற்றிலும் அழித்தொழிப்பதற்கு ஏதுவாக, தமிழரை உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்தி அழிப்பதற்காக அவர் மேற்படி ஒரு இனஅழிப்பு கோட்பாட்டு வாதத்தை முன்வைத்துள்ளார்.

தேசிய அரசியல் என்பதே சர்வதேச அரசியல்தான். சர்வதேச அரசியல் இன்றி தேசிய அரசியல் இல்லை. தேசியம் இருப்பதாற்தான் சர்வதேசியம் இருக்கிறது. ஆதலால் தேசியம் சர்வதேசியத்திற்கு அடிப்படையாயும், முன் நிபந்தனையாகவும் அமைவதுடன் சர்வதேசியத்தின் ஓர் அங்கமாகவும் அமைந்துவிடுகிறது. எனவே தமிழ்த் தேசியத்தை சர்வதேச அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்கவும் முடியாது. பிரித்துப் பார்க்கவும் கூடாது. ஈழத்தமிழ் மக்கள் நேரடியாக வெளிநாட்டு அரசியலுடன் சம்மந்தப்படும் இடம் இன்று நேற்று உருவானது அல்ல. அதேபோல சிங்கள இனமும், சர்வதேசத்துடன் சம்மந்தப்படும் இடம் இன்று நேற்று உருவானது அல்ல. வெளி அரசுகளுடனும், வெளிப் பிராந்தியங்களுடனுமான நீண்ட பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால அரசியல், பொருளாதார சமூக, கலாச்சார பரிவர்த்தனையின் மூலமே இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்கள் உருப்பெற்றன.

அதேவேளை ஈழத்தமிழர் மீதான சிங்கள இன ஒடுக்குமுறையின் விளைவாகச் சிங்கள அரசை வெளிநாடுகள் தட்டிக்கேட்கும் அரசியல் 1950களில் தோற்றம் பெற்றது. அதாவது 1958-ம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தமிழர் மீது கட்டவிழ்த்துவிட்ட பாரிய 1958 இனப்படுகொலை இடம் பெற்றுக்கொண்டிருந்தபோது அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இலங்கைப் பிரதமரான பண்டாரநாயக்காவிடம் கட்டளை நிறைந்த தொனியில் இனக்கலவரத்தை நிறுத்துமாறு கோரினார். இனப்படுகொலை ஆரம்பித்து முதல் நான்கு நாள்வரையும் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்த மறுத்த பண்டாரநாயக்கா நேருவின் தலையீட்டின் பின்பு அவசரகாலச் சட்டத்தின் கீழ் கவர்னர் ஆட்சியைப் பிரகடனப்படுத்தினார். அப்போது இலங்கையின் கவர்னராக இருந்த ஒலிவர் குணதிலக அவசரகாலத்தின் கீழ் ஒரிரு நாட்களுக்குள் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.

1983 கறுப்பு யூலை இனப்படுகொலையின் போது நேருவைவிடவும் பலபடிகள் முன்சென்று தமிழர் மீதான இனப்படுகொலையை நிறுத்துமாறும், அவ்வாறு நிறுத்த முடியாதுவிட்டால் அவ்வாறு நிறுத்த இந்திய அரசு நேரடியாகத் தயாராக இருப்பதாகவும் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி இலங்கை ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தாவிடம் கூறினார். இதனுடன் கூடவே அன்றைய இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவை இலங்கைக்கு அனுப்பி நேரடியாக நிலைமைகளை பார்வையிட்டு கட்டுப்படுத்த இந்திராகாந்தி வழிசெய்தார். இப்படி இலங்கையின் இனஅரசியல் பிராந்திய மற்றும் வெளிநாட்டுப் பரிமாணங்களை எப்போதோ பெற்றவிட்டது.

முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்துள்ள இனப்படுகொலையை தற்போது குறிப்பாக மேற்கு நாடுகளும், பொதுவாக சர்வதேச சமூகமும் கண்டித்துக் குரல் எழுப்பிவரும் பின்னணியில் சர்வதேச எதிர்ப்பு வாதத்தைச் சிங்கள அரசு பேசுகிறது. சிங்கள அரசு தான் நினைத்தபடி தமிழரைக் கொன்று குவிக்க லைசன்ஸ் வழங்குமாறு சர்வதேச சமூகத்தை கோருகிறது என்பதே உண்மை. அது முன்வைக்கும் சர்வதேச அரசியல் தீர்வுக்கு எதிராக சிங்கள அரசு முன்வைக்கும் சர்வதேச எதிர்ப்பு வாதத்தின் உட்பொருளாய் அமைந்திருப்பது இன அழிப்பிற்கு சர்வதேச அனுசரணையைக் கோருவதாகவே உள்ளது. அதாவது தீர்வுக்கு சர்வதேச எதிர்ப்பு, இன அழிப்பிற்கு சர்வதேச அழைப்பு என்பதே ராஜபக்சாவினது சுதந்திரதின உரையின் உள்ளடக்கமாகும். அதாவது சர்வதேசத்தை எதிர்ப்பதுபோல் காட்சியளித்தாலும், அழிப்பிற்கு சர்வதேச உதவியை அழைப்பதாகவே அது அமைந்துள்ளது.

பொதுவாக 1972-ம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியல் யாப்பையும், 1978-ம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பையும் தொடர்ந்து இனப்பிரச்சனை சர்வதேச கவனத்தையும், பங்கையும் பெறத் தொடங்கியது. குறிப்பாக 1980-ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தலில் அரசு மேற்கொண்ட இன வன்செயல்களையும், அமைச்சர் காமினி திசநாயக்க தலைமையில் நிகழ்ந்த யாழ் நூலக எரிப்பு அனர்த்தத்தையும் தொடர்ந்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரான திரு.அ.அமிர்தலிங்கம் அன்றைய இந்தியப் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியைச் சந்தித்து முறையிட்டபோது, இந்தியப் பிரதமர் எடுக்கத் தொடங்கிய அரசியல் நகர்வுகளோடு இலங்கையின் இனப்பிரச்சினை இணைக்கப்படல் ஆயிற்று. பின்பு அது படிப்படியாகப் பிராந்தியம் கடந்த முழு அளவிலான சர்வதேச பரிமாணத்தைப் பெற்றுக் கொண்டது.

உள்நாட்டில் தீர்வு காணும் முயற்சிகளில் அன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ் மக்களின் பரந்த ஆதரவைப் பெற்றவரும், தந்தை செல்வா என அழைக்கப்படுபவருமான திரு. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மாறிமாறிப் பதவிக்கு வரும் இரு பெரும் சிங்களக் கட்சிகளின் பிரதமர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா, டட்லி செனநாயக்கா என்போருடன் உள்நாட்டுப் பரிமாணத்தில் பேசிய, எழுதிய ஒப்பந்தங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதன் பின்பு திம்புப் பேச்சுவார்த்தை, ஒஸ்லோப் பேச்சுவார்த்தைகள், பாங்கொக் பேச்சுவார்த்தைகளென பிராந்திய, ஆசிய, ஐரோப்பிய, உலகப்பரப்புகளை எட்டியது. இனி அந்த வரலாற்றிலிருந்து பின்நோக்கிச் செல்ல முடியாது.

இன்று ராஜபக்ச அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பின்னடைவை கண்டுள்ள நிலையில் சர்வதேச மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேண்டுமென மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு யோசப் அடிகளாரை முதன்மையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட யாழ்ப்பாண சிவில் சமூகத்தின் விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ளது. சர்வதேச தொடர்பின்றி, சர்வதேச உதவியின்றி, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்பதை வரலாறு பிரகடனப்படுத்தி தெளிவாக மூன்று தசாப்தங்கள் கடந்து விட்டன. இனியும் உள்நாட்டுப் பிரச்சினை என்று ஈழத்தமிழர் விவகாரத்தை அழைப்பது முற்றிலும் தவறாகும்.

பேச்சுவார்த்தையின் மூலம் வெளிநாட்டு உதவியுடன் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணலாம் என்ற நம்பிக்கையையும், கடந்த மூன்று தசாப்த அனுபவமும், அரசியல் நடைமுறைகளும் நிரூபித்துவிட்டன. ஆதலால் கடந்த மூன்று தசாப்த அனுபவத்தின் விளைவு தமிழீழம் பிரிந்து சுதந்திர அரசாக உருவாக வெளிநாடுகள் ஈழத்தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெதனையும் வரலாறு விட்டுவைக்கவில்லை. ஒரு தேசத்தின் விடுதலையில் இருந்து, சர்வதேச தொடர்பை பிரித்துப்பார்க்க முடியாது.

ராஜபக்ச மேற்கொண்ட இனப்படுகொலை சர்வதேச தொடர்பில் நிகழ்ந்தது போலவே ஈழத்தமிழரின் விடுதலையும் சர்வதேச தொடர்பிலும், பரிமாணத்திலும்தான் நிகழ முடியும். அதாவது ஒடுக்குமுறைக்கு ஆயினும் சரி, விடுதலைக்கு ஆயினும் சரி சர்வதேச தொடர்பு தவிர்க்க முடியாது. ஆதலால் சர்வதேச அரசியலில் இருந்து தேசிய இனத்தின் அரசியல் பிரிந்து நிற்கும் ஒன்றல்ல. இங்கு சர்வதேச அரசியலில் இருந்து இனப்பிரச்சினையை ராஜபக்ச பிரித்துக் காட்டுவதன் நோக்கம் சர்வதேச அரசியலில் தமிழரை தனிமைப்படுத்தி ஒடுக்கி அழிப்பதற்கே தவிர வேறொன்றும் இல்லை. இதன் உள்ளடக்கம் என்னவெனில் இன அழிப்பிற்கான சர்வதேச வியூகத்தை தனதாக்கிக் கொள்கிறாரே தவிர வேறில்லை. வெளிநாடுகளின் அனுசரணையோ, அன்றி மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தமோ தேவையில்லை என்று யாராவது கூறுவார்களேயானால் அவர்கள் தமிழின அழிப்பிற்கான ராஜபக்சவின் குரலாகச் செயற்படுகிறார்கள் என்பதே அர்த்தம். ராஜபக்சவின் பேச்சை வரவேற்கும், பத்திரிகைகளும், மற்றும் ஊடகங்களும், அறிவுஜீவிகளும், அரசியல்வாதிகளும் இந்தவகைக்கே உரியவர்களாவர்.

தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசம், தமிழ் மக்களின் தாயகக் கோட்பாடு என்பவற்றை நிராகரிப்பதும், வெளிநாடுகளின் அனுசரணைகளை நிராகரிப்பதும் இன அழிப்பு ஒடுக்குமுறைக்கான ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும்.

2/9/2012 2:56:20 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்