Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஜெனிவா அரசியல் – 2018

ஜெனிவா அரசியல் – 2018
யதீந்திரா

 

2009இல் யுத்தம் நிறைவுற்றதைத் தொடர்ந்து தமிழர் அரசியலுக்கு அறிமுகமான ஒரு புதிய சொல்தான் ஜெனிவா. அது இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் ஏதோ புதிதாக பிறந்த குழந்தை மாதிரி குதூகலத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 2012இல் அமெரிக்காவின் அனுசரணையுடன் இலங்கை மீது ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டது. அந்தப் பிரேரணையைத் தொடர்ந்தே இலங்கை அரசியலிலும் தமிழ்த் தேசிய அரசியலிலும் ஜெனிவா என்னும் சொல் ஒரு கவர்ச்சிமிக்க சொல்லாக மாறியது. 2012இல் குறித்த பிரேரணை வெளியானபோது அதனை பொதுவாக இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை என்றே பலரும் அழைத்தனர். ஆனால் உண்மையில் அது இலங்கைக்கு எதிரான பிரேரணை அல்ல, மாறாக இலங்கை மீதான பிரேரணை. அமெரிக்கப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஒரு சில மணித்தியாலத்தில் அப்போது அமெரிக்காவின் இராஜாங்கச் செயலராக இருந்த கிலாரி கிளின்டன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் இலங்கைக்கு ஒரு வலுவான சமிக்ஞையை வழங்கியிருக்கின்றது. அதாவது இலங்கை நின்று நிலைக்கக் கூடிய சமாதானத்தை அடைய வேண்டுமென்றால், அதற்கு உண்மையான நல்லிணக்கமும் பொறுப்புக் கூறல் முறையும் அவசியம். ஆனால் அமெரிக்காவின் வலுவான சமிக்ஞையை மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. ஒருவேளை ராஜபக்ச அதற்கு செவிசாய்த்திருந்தால் இப்போது ஜெனிவா தமிழர்களுக்கு கவர்ச்சியான ஒன்றாக இருந்திருக்காது. மேற்குலகிற்கு சவால் விடும் வகையிலான ராஜபக்சவின் அணுகுமுறை பிறிதொரு புறத்தில் கொழும்பின் மீதான அழுத்தங்கள் தொடர்வதற்கான புறச்சூழலை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டிருந்தது. இந்த அழுத்தங்கள் அதிகரிக்க அதிகரிக்க இலங்கைக்குள் சீனாவின் உள்நுழைவும் அதிகரித்துக் கொண்டிருந்தது.

இவ்வாறானதொரு சூழலில்தான் 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜெனிவா அரசியல் வேறு ஒரு தளத்திற்குச் சென்றது. அதாவது, ஜெனிவா அரங்கை முற்றிலுமாக எதிர்த்து நிற்கும் மகிந்தவின் அணுகுமுறைக்கு மாறாக, ஜெனிவாவை ஏற்றுக் கொண்டு பயணிக்கும் புதிய அணுகுமுறை ஒன்றை புதிய அரசாங்கம் கடைப்பிடித்தது. இதன் விளைவாகவே 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு கொழும்பு இணையனுசரணை வழங்கி அதனை அமுல்படுத்துவதாக வாக்குறுதியளித்தது. அந்தப் பிரேரணையே மீளவும் 2017இல் உறுதிப்படுத்தப்பட்டு, அதனை அமுல்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் வாக்குறுதியளித்தது போன்று அவற்றை நிறைவேற்றவில்லை என்பதுதான் தற்போதை ஜெனிவா அரசியல்.

மேற்படி தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் தொடர்பான ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் எழுத்து மூல இடைக்கால அறிக்கை தற்போது பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. குறித்த அறிக்கையில் ஆணையாளர் தெரிவித்திருக்கும் பின்வரும் பந்தி நமது கவனத்திற்குரியது: 'ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் பணியகத்துடன் ஆக்கபூர்வமான தொடர்புகளை சிறிலங்கா அரசாங்கம் பேணி வருவது மற்றும் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர்களின் பயணங்களுக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவது உள்ளிட்ட மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் இணங்கிச் செயற்படுவதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வரவேற்கிறது. எனினும், சிறிலங்காவில் நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் விடயத்தில் மெதுவான முன்னேற்றங்களே நிகழ்ந்திருப்பது குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் அதிக கவலையைக் கொண்டுள்ளது.

எந்த சட்ட வரைவுகளும் பகிரங்கப்படுத்தப்படாத நிலையிலும், அதற்கான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையிலும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள் தொடர்பாக எதிர்வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது சந்தேகமே' - 2019 மார்ச் மாதத்திற்குள்ளும் விடயங்களை நடைமுறைப்படுத்துவது சந்தேகமெனின் மனித உரிமைகள் பேரவையில் மேலும் கால அவகாசம் தொடர்பான விவாதமொன்று இடம்பெறப் போகின்றதா? அவ்வாறானதொரு நிலைமை ஏற்படின் தமிழர் தரப்பின் முக்கியமாக சம்பந்தன் - சுமந்திரன் தரப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? சம்பந்தன் - சுமந்திரன் தரப்பு என்பதில் தற்போது கத்தோலிக்க மதகுரு இம்மானுவேல், சுரேன் சுரேந்திரன் ஆகியோரும் சேர்ந்திருக்கின்றனர்.

ஜெனிவா அரசியல் – 2018

இந்தப் பின்புலத்தில்தான் மேற்குலக ராஜதந்திரிகளை சந்திக்கும் சுமந்திரன் தலைமையிலான குழுவில் பாதர் இம்மானுவேல், சுரேன் சுரேந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருக்கும் சுமந்திரன், இலங்கை தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறு அமெரிக்காவை கோரியதாக தெரிவித்திருக்கின்றார். ஆனால் இதே சுமந்திரன்தான் கடந்த ஆண்டு சிறிலங்காவிற்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பான விவாதங்களில் ஆதரவாக செயற்பட்டிருந்தார். உண்மையில் குறித்த கால அவகாசத்தை அரசாங்கம் சரியாக பயன்படுத்தியிருக்கவில்லை. தென்னிலங்கையில் இதற்கு சாதகமான சூழலும் இருந்திருக்கவில்லை. அதற்கு அப்பால், ஜனாதிபதியிடமோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமோ தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவற்கான தற்துணிவும் இருந்திருக்கவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் கூட்டரசாங்கத்தின் பலவீனத்தை தெளிவாக படம்பிடித்திருந்தது. இந்த நிலையில் 2019 மார்ச்சிற்குள் முன்னேற்றங்களை காண்பிப்பது சாத்தியமான ஒன்றா?

நிலைமைகளை அவதானித்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மேற்குலகத்தினதும் இந்தியாவினதும் விருப்புக்குரிய அரசாங்கத்திற்கு சாதகமாக இருந்திருக்கவில்லை. எவரை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் நோக்கில் இந்த அரசாங்கம் கொண்டுவரப்பட்டதோ, அந்த அரசாங்கத்தினது இருப்போ நாளுக்கு நாள் கீழ் நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. இது இலங்கைத் தீவின் அரசியலை தங்களின் நலனில் நின்று நோக்கும் சக்திகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் மாறியிருக்கிறது. எனவே இவ்வாறானதொரு சூழலில் கூட்டரசாங்கத்தால் எந்தவொரு விடயத்தையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. இதனை விளங்கிக் கொள்ள நாம் அதிக நேரத்தை செலவிட வேண்டியதில்லை. 2020 இல் ஒரு புதிய தேர்தலுக்கு முகம் கொடுக்கவுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ எந்தவொரு சிக்கலான விடயத்தையும் இனித் தீண்டப் போவதில்லை. இந்த இடத்தில் தமிழர் தரப்பினர் என்ன செய்யப் போகின்றனர்?

குறிப்பாக கூட்டமைப்பு என்ன செய்யப் போகின்றது? ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் ஏதோவொரு வகையில் அரசாங்கத்தை பாதுகாக்கும் செயற்பாடுகளைத்தான் சம்பந்தன் தரப்பினர் மேற்கொண்டு வந்தனர். சர்வதேச அளவிலும் அரசாங்கத்தை பாதுகாப்பதிலேயே சுமந்திரனின் பிரச்சாரங்கள் அமைந்திருந்தன. சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் மனிதவுரிமைவாதிகளும் எதைக் கூறிய போதிலும் இறுதியில் மக்கள் பிரதிநிதி என்னும் வகையில் சுமந்திரனின் கருத்துக்களே தமிழ் மக்களின் கருத்துக்களாக சர்வதேச அரங்கிற்குச் சென்றது. தற்போதும் அதுதான் நிலைமை. உண்மையில் ஜெனிவா அரங்கு தொடர்பில் தமிழர் தரப்பிடம் ஒரு கொள்கை நிலைப்பாடு இருக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து மைத்திரிபாலவும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரு விடயத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். அதாவது, இலங்கை படையினர் எந்தவொரு போர்க் குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை. நாம் எந்தவொரு வெளிநாட்டு தலையீட்டுக்கும் இடமளிக்க மாட்டோம். போர்க் குற்றங்கள் தொடர்பில் இதுதான் அவர்களது நிலைப்பாடு என்றால் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? இன்று நிலைமைகள் பாதமாகிக் கொண்டு செல்கின்றது என்றவுடன் சம்பந்தர் மீண்டும் சர்வதேசம் பற்றி பேசுகின்றார். விடயங்கள் அனைத்தையும் குறைவாக மதிப்பிட்டதன் விளைவுதான் இது. இலங்கைக்குள் ஏற்பட்டிருக்கும் நிலைமையை சரியாக மதிப்பீடு செய்யாமல் மேலும் அடியெடுத்து வைத்தால் தமிழரின் அரசியல் இருப்பு மேலும் பலவீனமடைவது நிச்சயம். இனி நடக்கப் போகும் அனைத்து விடயங்களும் 2020 தேர்தலை மையப்படுத்தித்தான் நகரும். இந்த நகர்வில் தமிழர் தரப்பு மீண்டும் சிக்கிக் கொள்ளப் போகிறதா அல்லது அதனை புத்திசாதுர்யமாக கையாளப் போகிறதா? ஒரு வலுவான தமிழ்த் தலைமையொன்று இல்லாவிட்டால் மீண்டும் பழைய கதைதான் தமிழர்களுக்கு கிடைக்கும். 

3/26/2018 3:53:28 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்