Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

திரிசங்கு சபைகள்: குப்பைகளை அகற்றுமா அல்லது குப்பைகளைச் சேர்க்குமா?

திரிசங்கு சபைகள்: குப்பைகளை அகற்றுமா அல்லது குப்பைகளைச் சேர்க்குமா?
நிலாந்தன்

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை பின்வருமாறு பொழிவாகக் கூறலாம்.

1. கூட்டமைப்பின் ஏகபோகம் சோதனைக்குள்ளாகியுள்ளது.

2. ஒரு சிறிய சைக்கிள் அலை வீசியிருக்கிறது.

3. தமிழ் வாக்குகள் சிதறிப்போய் உள்ளன.

4. சில சபைகளைத் தவிர பெரும்பாலான சபைகளில் தொங்கு நிலை தோன்றியுள்ளது.

5. தெற்கில் அது மகிந்தவின் பலத்தை நிரூபித்திருக்கிறது.

6. ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்து எட்டு ஆண்டுகளின் பின்னரும் குறிப்பாக ஆட்சி மாற்றம் நடந்து மூன்று ஆண்டுகளின் பின்னரும் இனவாதம் இப்பொழுதும் தென்னிலங்கையில் பலமாகத்தான் காணப்படுகிறது.

7. இனவாதத்தை மென்வலு அணுகுமுறை என்று கூறிக்கொண்டு கையாள முற்பட்ட கூட்டமைப்பினால் இனவாதத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

திரிசங்கு சபைகள்: குப்பைகளை அகற்றுமா அல்லது குப்பைகளைச் சேர்க்குமா?

8. அது மட்டுமல்ல நிலைமாறுகால நீதிப் பொறிமுறைக்கூடாக சிங்கள – பௌத்த இனவாதத்தைக் கையாள முற்பட்ட ஐ.நாவின் அணுகுமுறைகளும் பின்னடைவிற்குள்ளாகியுள்ளன.

9. மகிந்தவின் எழுச்சியால் எஸ்.எல்.எவ்.பி மீள இணைவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. இது மைத்திரியை பலவீனப்படுத்தும்.

10. பிளவுண்டிருக்கும் எஸ்.எல்.எவ்.பி மீள இணைந்தால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது கடினம். எனவே புதிய யாப்பை உருவாக்குவதும் கடினம். யாப்புருவாக்கம் உட்பட நிலைமாறுகால நீதிச் செய்முறைகள் அனைத்தும் இனிப் பின்னடைவுக்குள்ளாகும்.

11. ஏற்கெனவே சீனாவிற்கு சார்பாகக் காணப்பட்ட ராஜபக்ச தன் பலத்தை மீள உறுதிப்படுத்தியிருப்பதனால் ஆட்சி மாற்றத்தின் பின்னரான புதிய உள்நாட்டு வலுச்சமநிலையும், பிராந்திய வலுச்சமநிலையும் அனைத்துலக நிகழ்ச்சி நிரல்களும் குழம்பக்கூடும்.

12. வலுச்சமநிலையில் ஏற்படக் கூடிய தளம்பலானது சில சமயம் தமிழ் மக்களுக்கு புதிய தெரிவுகளைத் தரக் கூடும்

எனவே மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எனப்படுவது கட்சிகளுக்குள்ளும், நாட்டுக்குள்ளும், பிராந்தியத்திற்குள்ளும் புதிய அரசியல் சுற்றோட்டங்களுக்கான வாய்ப்புக்களைத் திறந்துவிட்டுள்ளது. இங்கு இக்கட்டுரையானது தமிழ் அரசியல் பரப்பில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கங்களின் மீதே தன் கவனத்தைக் குவிக்கின்றது.

உருவாகியிருக்கும் தொங்கு சபைகள் பிரதானமாக இரண்டு காரணிகளின் விளைவாகும். முதலாவது கூட்டமைப்பின் ஏகபோகம் உடைந்தமை, இரண்டாவது கலப்புத் தேர்தல் பொறிமுறை. கூட்டமைப்பின் ஏகபோகத்தை கஜன் அணி மட்டும் கேள்விக்குள்ளாக்கவில்லை. சுரேஸ்–சிவகரன்-சங்கரி அணியும், ஈ.பி.டி.பியும், சுயேட்சைக் குழுக்களும், தென்னிலங்கை மையக் கட்சிகளும் அதைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. எனவே ஒட்டுமொத்த விளைவைக் கருதிக் கூறின் தமிழ் வாக்குகள் சிதறியுள்ளன என்பதே சரி. எந்த அடிப்படையில் அவை சிதறியுள்ளன என்பதையும் இங்கு பார்க்க வேண்டும்.

சுயேட்சைக் குழுக்களும், ஈ.பி.டி.பியும் தென்னிலங்கை மையக் கட்சிகளும் அதிகபட்சமாக நலிவுற்ற அல்லது விளிம்பு நிலை மக்களின் வாக்குகளையே பெற்றிருக்கின்றன. தீவுப் பகுதியிலும், வலிகாமத்தின் ஏனைய பகுதிகளிலும் ஈ.பி.டி.பியும், காரைநகரில் சுயேட்சைக் குழுவும், கிளிநொச்சியில் சுயேட்சைக்குழுவும் பெற்ற வாக்குகளில் அதிகபட்சமானவை சமூகத்தில் ஆதிக்கம் பெற்றிருக்கும் பிரிவினருக்குரியவை அல்ல. வலிகாமத்தில் மயானப் பிரச்சினையை முன்வைத்துப் போராடிய சுயேட்சைக்குழு மூன்று ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. அதேசமயம் நலன்புரி நிலையங்களில் வசிக்கும் இன்னமும் மீளக்குடியமராத விளிம்பு நிலை மக்களுடைய வாக்குகளும் ஈ.பி.டி.பிக்கும், தென்னிலங்கை மையக் கட்சிகளுக்கும்தான் கணிசமான அளவிற்கு விழுந்துள்ளன. வடமராட்சியிலும் மேற்படி கட்சிகளுக்கு விழுந்த வாக்குகளில் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகள் குறிப்பிட்ட சமூகங்களை இலக்கு வைத்து இக்கட்சிகள் செயற்பட்டதன் விளைவுதான்.

இது ஒரு உள்ளூராட்சி சபைத் தேர்தல். எனவே வாக்காளர்கள் சாதி பார்த்து, சமயம் பார்த்து, சொந்தம் பார்த்து சலுகை பார்த்து வேறு பல உள்ளூர் காரணிகளையும் பார்த்து வாக்களித்திருக்கிறார்கள். வாக்காளர்கள் இவ்வாறு சாதியின் பேராலும், சமயத்தின் பேராலும் வேறு பல உள்ளூர் விசுவாசங்களின் பெயராலும் சிதறிப் போவதை தமிழ்த்தேசியம் பேசும் தரப்புக்களால் தடுக்க முடியவில்லை.

எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்ப ஒன்றைச் சொல்வதுண்டு. தேசியம் எனப்படுவது அதன் செயல் வடிவத்தில் மக்களை திரளாக்குவதுதான். ஒருவர் மற்றவருக்கு கீழானவரோ மேலானவரோ அல்ல. அனைவருமே சமமானவர்கள் என்ற ஜனநாயக அடிச்சட்டத்தின் மீது மக்களை ஒரு திரளாகக் கட்டியிருந்தால் அவர்கள் இப்படிச் சிதறிப் போயிருக்க மாட்டார்கள். தேர்தல் முடிவுகளிலிருந்து மெய்யான தமிழ்த்தேசியத் தரப்புக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பாடம் இது.

ஒரே நாடு ஒரே தேசம் என்ற சுலோகத்தை முன்வைத்து உள்நுழையும் கட்சிகள் காசை அள்ளி வீசி சலுகைகளை வழங்கி சாதியை, மதத்தை இலக்கு வைத்து மக்களை சிதறடிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இனிவரும் தேர்தல்களில் மேலும் அதிகரிக்கக்கூடும். தமிழ்த்தேசியச் சக்திகள் விட்ட வெற்றிடத்தைத்தான் அதாவது தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கப் போதாமையால் ஏற்பட்ட வெற்றிடத்தைத்தான் ஏனைய கட்சிகள் பயன்படுத்தியிருக்கின்றன.

உதாரணமாக, இமையாணன் பகுதியில் ஒரு வட்டாரத்தில் கூட்டமைப்பு அமைப்பாளர் அந்த வட்டார மக்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரை நிராகரித்து விட்டு தனது உறவினர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியதையடுத்து அவ்வட்டார மக்கள் தென்னிலங்கை மையக் கட்சி ஒன்றுக்கே வாக்களித்திருக்கிறார்கள். கிளிநொச்சியில் அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு சமூகத்தைக் குறித்து இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பிரயோகித்ததாக எழுந்த சர்ச்சையானது அங்கே கூட்டமைப்பின் வாக்குத் தளத்தைப் பாதித்திருக்கிறது. எனவே தமிழ் வாக்குகள் ஏன் இவ்வாறு சிதறின என்பதைக் குறித்து மெய்யான தமிழ்த்தேசிய சக்திகள் நீண்டகால நோக்கு நிலையிலிருந்து ஆராய வேண்டும்.

கலப்புத் தேர்தல் முறைமையும் வாக்குச் சிதற ஒரு காரணம்தான். வட்டாரத் தெரிவு முறையின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களில் அநேகர் மொத்த வாக்குகளின் முப்பது வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றிருப்பதாகவும் அதேசமயம் தெரிவு செய்யப் படாத ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மொத்தமாக எழுபது விகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பதாகவும் மன்னாரைச் சேர்ந்த ஓர் அரசியற் செயற்பாட்டாளர் சுட்டிக் காட்டுகிறார். இது எந்த வகையான ஜனநாயகம் என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார். அதேசமயம் சில வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு கட்சி வென்றாலும் கூட தோல்வியுற்ற கட்சியானது பெற்றிருக்கக் கூடிய மொத்த வாக்குகளின் அடிப்படையில் அதற்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. அதாவது வாக்காளர்களின் விருப்பங்களை ஆகக் கூடிய பட்சம் இது பிரதிபலிக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் இக்கலப்பு முறையின் விளைவே தொங்கு சபைகளுக்கும் காரணமாகியது.

இப்பொழுது தொங்கு சபைகள் எப்படி இயங்கப் போகின்றன? ஆகக் கூடியபட்ச ஜனநாயகச் செழிப்பை கற்றுக் கொண்டால் தவிர தொங்கு சபைகளை கொண்டோட முடியாது. உள்ளூர் அபிவிருத்திக்காக கட்சித் துவேசங்களைக் கடந்து சிந்திப்பதன் மூலம் தமது ஜனநாயகச் செழிப்பை கட்சிகள் நிரூபிக்கலாம். ஆனால் இதன் அர்த்தம் அடிப்படைகளற்ற ஐக்கியம் அல்ல.

தமது கட்சிக்கு கிடைத்த வீழ்ச்சியை அடுத்து கூட்டமைப்பின் கீழ்மட்டப் பிரமுகர்கள் முகநூலில் தமது தலைவர்களையும், அமைப்பாளர்களையும் குறைகூறிப் பதிவுகளையிட்டு வருகிறார்கள். தொங்கு சபைகளை நிர்வகிப்பதற்கு ஏதோ ஒர் ஐக்கியம் தேவை என்பது உணரப்படுகின்றது. ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால் எந்த அடிப்படையில் புரிந்துணர்வை அல்லது ஐக்கியத்தை ஏற்படுத்துவது என்பதுதான். கொள்கைப் பிரச்சினைகளால்தான் பிளவுகள் ஏற்பட்டன. எனவே ஒர் ஐக்கியத்தை ஏற்படுத்துவது என்றால் அதைக் கொள்கை அடிப்படையில்தான் ஏற்படுத்தலாம்.

பலமான அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்படாத எந்தவொரு கூட்டும் ஏற்கெனவே பலமாய் இருக்கும் ஒரு கட்சியால் ஏனைய சிறிய கட்சிகள் உறிஞ்சிச் சக்கையாக்கப்படும் ஒரு நிலையைத்தான் தோற்றுவிக்கும் என்பதற்கு வவுனியா மாவட்ட தேர்தல் முடிவுகளை எடுத்துக் காட்டலாம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் ஆகக் கூடிய சனத்தொகையைக் கூட்டியது சிவசக்தி ஆனந்தன்தான். பல ஆண்டுகளாக அந்த மாவட்டம் அவருடைய அசைக்கப்பட முடியாத கோட்டையாகக் காணப்பட்டது. ஆனால் கூட்டமைப்பை விட்டு விலகி உதயசூரியனின் கீழ் போட்டியிட்ட பொழுது அவருடைய ஆதரவுத் தளம் உடைந்து போய்விட்டது. ஏனெனில் சிவசக்தி ஆனந்தன் வீட்டுச் சின்னத்தை நோக்கியே தனது வாக்குத் தளத்தைக் கட்டியெழுப்பி வந்திருக்கிறார். அவர் சின்னத்தை மாற்றியது அவருடைய ஆதரவாளர்களைப் போதியளவு சென்றடையவில்லை. எனவே ஐக்கியம் அல்லது கூட்டு எனப்படுவது கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்.

2009ற்குப் பின்னரான தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்திற்கு மேலுயர்த்த வல்ல ஒரு கொள்கையை முன்வைத்து அதற்கான வழிவரைபடத்தையும் முன்வைத்து கட்சிகளும், நபர்களும் ஒன்று சேரலாம். அதன் ஒரு பகுதியாக தந்திரோபாய கூட்டுக்களைப் பற்றி வேண்டுமானால் சிந்திக்கலாம். இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் ஒரு சமூகம் எவ்வளவிற்கு எவ்வளவு பெருந்திரளாகிறதோ அவ்வளவிற்கவ்வளவு போராடும் சக்தியும் பெருகும். எனவே ஈழத்தமிழர்கள் சிதறக்கூடாது. ஆகக் கூடியபட்சம் பெருந்திரளாக வேண்டும்.

கிடைக்கின்ற செய்திகளின்படி கஜன் அணி ஐந்து சபைகளைக் கைப்பற்ற முயற்சிப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக யாழ் மாநகர சபையில் ஒரு போட்டித் தவிர்ப்பிற்கு போக அவர்கள் தயாரில்லை என்றும் கூறப்படுகிறது. வெளித் தோற்றத்திற்கு இது ஒரு வீம்புக்காக மேற்கொள்ளப்படும் குழப்ப நடவடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் உத்திபூர்வமாக இதை ஒரு பொறி என்றும் வர்ணிக்கலாம். ஏனெனில் போட்டி என்று வரும்பொழுது அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு கூட்டமைப்பினர் யாரோடு கூட்டுச் சேர்கிறார்கள் அல்லது யார் அவர்களை மறைமுகமாக ஆதரிகிறார்கள் என்பதை வாக்கெடுப்பு காட்டிக் கொடுத்துவிடும். அதிகாரத்தை பெறுவதற்காக அவர்கள் ஈ.பி.டி.பி.யுடன் கூட்டுச் சேர்ந்தால் அல்லது தென்னிலங்கை மையக் கட்சிகளுடன் கூட்டை வைத்தால் அது அவர்களுடைய அரசியல் எதிர்காலத்தை மேலும் பாழாக்கி விடும். இப்படிப் பார்த்தால் கஜன் அணியின் அறிவிப்பானது அதிகம் உத்திபூர்வமானது.

கூட்டமைப்பிற்கு பிரதானமாக இரண்டு தெரிவுகளே உண்டு. முதலாவது அதிகாரத்தை பெறுவதற்காக அவர்கள் ஈ.பி.டி.பி.யுடன் அல்லது தென்னிலங்கை மையக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்வது. அதன் மூலம் தமது வீழ்ச்சியை மேலும் துரிதப்படுத்துவது அல்லது தனிப் பெரும் கட்சியாக ஆனால் பலவீனமான பெரும்பான்மையோடு தளம்பித் தளம்பி நிர்வாகத்தைச் நடாத்துவது. இதுவும் அடுத்த தேர்தலில் அதன் வாக்கு வங்கியை உடைக்கக் கூடியது. இது போலவே வடக்கில் பெரும்பாலான சபைகளில் கொள்கைக் கூட்டா அல்லது சந்தர்ப்பவாதக் கூட்டா என்பதைக் கூட்டமைப்பே தீர்மானிக்க வேண்டியிருக்கும். இப்படி பார்த்தால் வடக்கில் ஒரு சபையையும், கிழக்கில் ஒரு சபையையும் தவிர பெரும்பாலான சபைகளை வெற்றிகரமாக நிர்வகிப்பது கூட்டமைப்பிற்கு பெரிய சவாலாகவே இருக்கும்.

முன்னைய உள்ளூராட்சி சபைகளின் போது நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் இம்முறை நடக்க முடியாது. ஏனென்றால் எதிரணி பெரும்பாலான சபைகளில் பலமாகக் காணப்படுகிறது. இப்படிப் பார்த்தால் ஆகக் கூடிய பட்சம் நேர்மையாகவும், விசுவாசமாகவும் உழைக்கும் ஒருவர் தான் எதிர்க்கட்சிகளிடமிருந்து தப்பி எதையாவது செய்யக்கூடியதாகவிருக்கும். அங்கேயும் கூட குழப்புவது என்று தீர்மானித்து ஏனைய கட்சிகள் நெருக்கடிகளைக் கொடுத்தால் விமர்சனத்திற்கு அஞ்சி பெரும்பாலானவர்கள் துணிந்து முன்போகத் தயங்குவார்கள். இப்படிப் பார்த்தால் தேர்தல் முடிவுகளின்படி உள்ளூராட்சி சபைகளில் ஒப்பீட்டளவில் ஜனநாயகச் சூழல் அதிகரித்திருப்பது போலத் தோன்றும். ஆனால் இந்த அதிகரித்த ஜனநாயகமானது அபிவிருத்திக்கு உதவுமா என்ற கேள்விக்கு தமிழ்க் கட்சிகள்தான் விடை சொல்ல வேண்டும்.

தென்னிலங்கையில் மகிந்த பெற்ற வெற்றிக்கு இனவாதம் மட்டும் காரணமல்ல. ரணில் -மைத்திரி அரசாங்கத்தின் செயலின்மையும் ஒரு காரணம்தான். ஆனால் ராஜபக்சவின் செயற்திறன் எனப்படுவது அவருடைய ஜனநாயகமின்மையின் ஒரு பகுதிதான். அவருடையது கணிசமான அளவிற்கு இராணுவத்தனமான ஓர் ஆட்சி. உலகில் அவ்வாறான ஆட்சிகளின் கீழ் துரிதமாக முடிவுகள் எடுக்கப்பட்டன. உறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டன. விரைவாக அபிவிருத்தி நடந்திருக்கிறது. ஆனால் அவற்றிற்காக பலியிடப்படுவது ஜனநாயகமாகும். 'சிங்கள மக்கள் ஓர் அரசனைத்தான் விரும்புகிறார்கள்' என்று முகநூலில் ஒரு முஸ்லிம் நண்பர் எழுதியிருந்தார். இப்பொழுது தேர்தல் முடிவுகளின் படி உள்ளூராட்சி சபைகளில் யாருமே அரசர்களாக நடந்து கொள்ள முடியாது. இது ஒரு நல்ல அம்சம். அதே சமயம் நிர்வாகத்தையும் கொண்டிழுக்க முடியாது.

இந்தச் சபைகள் குப்பைகளை அகற்றுமா அல்லது குப்பைகளைச் சேர்க்குமா? ஆயுத மோதல்களுக்குப் பின் இரு கட்சி ஜனநாயகத்தை நோக்கி அடி எடுத்து வைக்கும் ஒரு சமூகம் எதிர் கொள்ளும் தவிர்க்கபடவியலாத ஒரு முதற் கண்டம் இதுவா?

2/17/2018 3:04:58 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்