Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

காணி நிலம் வேண்டும் - நிரந்தரப் படைமுகாம் அமைக்க...

காணி நிலம் வேண்டும் - நிரந்தரப் படைமுகாம் அமைக்க...
செ.விக்னேஸ்வரன்

 

'காணி நிலம் வேண்டும் பராசக்தி, காணி நிலம் வேண்டும்' என்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கவிதை பாடினார் பாரதியார். பிறகு, இந்தக் கவிதையைப் பாடலாக்கிச் சினிமாவில் பயன்படுத்தினார்கள். சினிமாவில் வந்த பிறகு, இந்தப் பாடல் பிரபலமாகி இப்போது எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். வேண்டப்படும் போதெல்லாம் இதைப் பாடியும் சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறியும் வருகிறார்கள் பலரும்.

ஆனால், பாரதியாருக்குச் சொந்தமாகக் காணியும் வீடும் இருந்ததா என்று தெரியவில்லை. அதைப் பற்றிய யாரும் சிந்தித்ததாகவும் இல்லை. காணியில்லாதவர்களைப் பார்த்து அவர் பாடினாரா? அல்லது சொந்த நிலம் (சொந்தத் தேசம்) விடுதலை பெறவேண்டும் என்ற வேட்கையில் அவர் பாடினாரா என்றெல்லாம் தெரியாது.

ஆனால் நிச்சயமாக அவர் பிறருடைய துயரைப் பார்த்தே – குந்தியிருக்க ஒரு குடிநிலம் இல்லாத நிலையைப் பார்த்துத்தான் பாடியிருப்பார் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், அந்த மாதிரி பொதுமைப்படுத்தப்பட்ட மனம் அவருடையது.

இதெல்லாம் வேறு சங்கதிகள். இங்கே, இலங்கையில் இப்பொழுது, 'காணிநிலம் வேண்டும் பராசக்தி...' மன்னிக்கவும்...

'காணி நிலம் வேண்டும் - நிரந்தரப் படைமுகாம் அமைக்கக் காணி நிலம் வேண்டும்' என்று படையினர் காணிகளைக் கேட்கின்றனர்.

படையினர் என்றால் தனித்தனியாக உள்ளவர்கள், அதாவது, போரில் ஈடுபட்டவர்கள், தங்களின் சொந்தத் தேவைக்காக – குடும்பங்களுக்காக தனிப்பட்ட முறையில் காணிகளை அரசாங்கத்திடம் கேட்கிறார்கள் என்றெல்லாம் கருதிவிட வேண்டாம்.

இங்கே பிரச்சினை வேறு கோணத்தில் உள்ளது.

வடக்குக் கிழக்கில் நிலைகொண்டிருக்கும் படைகள் தமக்குத் தேவையான காணிகளைக் கோருகின்றன. இதற்காக ஒவ்வொரு படையணிகளும் தனித்தனியாகக் காணிகளுக்கு விண்ணப்பித்துள்ளன. இந்தப் படையணிகள் தங்களின் இருப்பிடங்களை நிரந்தரமாக உறுதி செய்வதற்காக இந்தக் காணிகளைக் கோருகின்றன.

காணி நிலம் வேண்டும் - நிரந்தரப் படைமுகாம் அமைக்க...

இதற்காக அந்தந்தப் பிரதேசங்களில் உள்ள உதவி அரசாங்க அதிபர்களிடமும் மாவட்ட அரசாங்க அதிபர்களிடமும் இந்தக் கோரிக்கைகளை அவை விடுத்துள்ளன. (படையணிகள் இப்படிக் காணிகளைச் சுயாதீனமாகக் கேட்க முடியாது. அப்படிக் கேட்பதற்குச் சட்டத்தில் இடமில்லை. வேண்டுமானால், பாதுகாப்பு அமைச்சு தனக்கான காணிகளைக் கோர முடியும். ஆனால், அதுவும் வரையறுக்கப்பட்ட அளவில்தான் கேட்கமுடியும் என்று கூறுகிறார்கள் காணி தொடர்பான மூத்த அதிகாரிகள்).

சில அரசாங்க அதிபர்களும் பல உதவி அரசாங்க அதிபர்களும் இந்தக் காணிகளில் பலவற்றை வழங்குவதற்காக இரகசியமாக ஒப்புதல்களை அளித்து, அதற்கான ஆவணங்களை வழங்கி விட்டதாகவும் தெரிகிறது. (இதைவிட தெற்கில் இருந்து வரும் தொழில் அதிபர்களுக்கும் கொம்பனிகளுக்கும் கூடத் தாராளமாகக் காணிகளை - ஏக்கர்க் கணக்கில் - வழங்குகிறார்கள் இந்த அரசாங்க அதிபர்களும் உதவி அரசாங்க அதிபர்களும்).

இதையெல்லாம் இவர்கள் இரகசியமாகவே செய்து விடுகிறார்கள். இதற்காக இவர்கள் பெறுகின்ற சில்லறைகள் அதிகம். தங்கள் சட்டைப் பையை நிரப்பிக் கொள்வதற்காகவும் தங்களின் பதவி, செல்வாக்கு போன்றவற்றை உயர்த்திக் கொள்வதற்காகவும் இந்தக் காரியங்களைச் சத்தமில்லாமலே செய்து விடுகிறார்கள்.

ஆனால் குடியிருப்பதற்குக் காணியில்லாத நிலையில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. அதுவும் நீண்டகாலமாகவே இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வரும் குடும்பங்கள். ஏனைய காணிகளுக்கு விண்ணப்பித்த நிலையில் கோரிக்கைக் கடிதங்கள் உள்ளன.

'நாட்டின் பாதுகாப்புக்காகவே இந்தக் காணிகள் தேவைப்படுகின்றன. இது தேசிய பாதுகாப்பை முதன்மைப்படுத்திய கொள்கையின் அடிப்படையிலானது' என்று இதற்கு விளக்கம் சொல்கிறார் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ.

'ஒரு இறைமையுள்ள அரசு என்ற அடிப்படையில் நாட்டின் எந்தப் பகுதியிலும் அரசாங்கம் படை முகாம்களை அமைக்கலாம். அதற்காகவே அது பெருமளவு நிதியைக்கூட ஒதுக்குகிறது' என்று அவர் மேலும் இது தொடர்பாக விளக்கமளிக்கிறார். அவருடைய கோணத்தில் இதற்கு மேலும் அவர் விளக்கமளிக்கலாம். அந்த விளக்கங்களின் அடிப்படையில் மேலும் காணிகளும் நிதியும் ஆளணியும் பிற தேவைகளும் சட்டங்களும் தேவைப்படலாம்.

குறிப்பாக படைப்புலனாய்வுக் கட்டமைப்பை உச்சநிலையிற் பலப்படுத்தவும் அவர்கள் சிந்திக்கலாம். அப்படித்தான் இப்போது சிந்திக்கிறார்கள்.

மீண்டும் நாட்டில் வன்முறையோ, யுத்தமோ ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கையின் காரணமாக அதைத் தடுப்பதற்காக இந்த முன்னேற்பாடுகளை நிரந்தரமாகவே பேணவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு உள்ளது என்று இதைச் சிலர் நியாயப்படுத்தவும் கூடும்.

ஆனால், வரலாற்றின் உண்மைகளும் அனுபவங்களும் வேறுவிதமாகவே உரைக்கின்றன.

எத்தகைய கண்காணிப்பையும் எத்தகைய சட்டங்களையும் கடந்ததே மனித விதி. மனிதர்கள் எத்தகைய தடைகளையும் கட்டுப்பாடுகளையும் கடக்கும் இயல்பைக் கொண்டவர்கள். அடக்குமுறையை எப்படித்தான் வன்மையாகக் கடைப்பிடித்தாலும் அந்த அடக்கு முறைக்கு எதிராகக் கிளம்புவரே தவிர, அவற்றை அனுசரித்துப் போவர் என்றில்லை.

இதை வரலாறு பல தடவைகள் நிரூபித்துள்ளது. மீண்டும் மீண்டும் நிரூபித்தும் வருகிறது.

அடக்குமுறைக்கும் அதிகாரத்துக்கும் எதிரான ஜனநாயகப் போராட்டங்களும் ஜனநாயகத்தை நோக்கிய நகர்வுமே இறுதி வெற்றியாக அமைந்து விடுகின்றன.

இதையெல்லாம் இலங்கை அரசு புரிந்து கொள்வதாக இல்லை. இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இவை தெளிவாகுவதில்லை.

படைப் பெருக்கத்துக்கும் கண்காணிப்புக்கும் பெருந்தொகையாகச் செலவழிப்பதற்குப் பதிலாக, அமைதிக்காகவும் மக்களின் முன்னேற்றத்துக்காகவும் முயற்சிக்க வேணும் என்று இவர்கள் உணரவில்லை.

எனவேதான் சட்டங்களை மேலும் உருவாக்கி அவற்றின் மூலம் சனங்களை இறுக்குவதைப் பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்கிறார்கள். படைகளைப் பெருக்கி அவற்றைப் பலப்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு வகையான உளவியற் குறைபாடே. புரியாமையின் அடியில் இருந்து எழும் அச்சத்தின் வெளிப்பாடே.

மக்களுக்குரிய உரிமைகளை வழங்கி, அவர்களுடைய வாழ்க்கைக்கான பொருளாதார அடிப்படைகளைச் சீர்ப்படுத்துவதன் மூலமாக அரசுக்கும் நாட்டுக்கும் உருவாகும் அபாயங்களை நீக்கி விடலாம். இதைத் தான் செய்யவேண்டும்.

இதைச் செய்யாதபடியாற்தான் உள்நாட்டில் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் வன்முறைகளும் யுத்தமும் உருவாகின. இதைச் செய்யாத காரணத்தை வைத்தே அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்தி, வெளிச் சக்திகள் தலையீடுகளையும் அழுத்தங்களையும் அரசாங்கத்துக்கு ஏற்படுத்துகின்றன.

சொந்த மக்களின் அதிருப்தியே ஒரு அரசுக்கான பேராபத்து என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். மக்களின் அதிருப்தியை வைத்தே பிற சக்திகள் ஒரு நாட்டில் தங்களின் மூக்கை நுழைக்கின்றன. அப்போது அந்த நாட்டின் இறைமை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. பலவீனமடைந்து விடுகிறது.

இங்கே துயரமான நிலை என்னவென்றால், இந்த உண்மையை விளங்கும் நிலையில் இலங்கை அரசு இல்லை. இலங்கையின் அரசியல் யதார்த்தம் முற்றிலும் வேறான ஒரு யதார்த்தத்தளத்தில் நிலைகொண்டுள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட ஜே.வி.பி யின் இரண்டு கிளர்ச்சிகளையும் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தையும் ஆயுதமுனையில் அடக்கி வெற்றி கண்ட – ருஸி கண்ட அனுபவத்தையே சிங்கள அதிகார வர்க்கம் தன்னுடைய அரசியற் பாதையாக்கியுள்ளது. ஆகவே அது அந்த வெற்றியின் ருஸிவழியேதான் தொடர்ந்தும் சிந்திக்கிறது, சிந்திக்க முற்படுகிறது.

இதுதான் பேரவல நிலையும் பேராபத்துக்குரிய விசயமுமாகும். இந்த நிலையில் இருந்து அரசையும் அதனுடைய ஆளும் வர்க்கத்தையும் மீட்டெடுப்பதென்பது மிகக் கடினமான காரியம்.

எனவேதான், தான் வெற்றிகண்ட படைவழியான பலத்தையும் அதன் அவசியத்தையும் அந்த வழிமுறையையும் இலங்கை தொடர முயற்சிக்கிறது. சிங்கள அதிகாரத்தரப்பு அடக்குமுறை இயந்திரத்தின் மீதே தன்னுடைய இருப்பைத் தக்க வைத்துள்ளது. இதைப் பாதுகாப்பதற்காக அது ஜனநாயக மூலாமைப்பூசியுள்ளதே தவிர, அடிப்படையில் அது உச்ச அடக்குமுறையைத் தன்னுடைய உள்ளடக்கத்திற் கொண்ட ஒரு அரச இயந்திரமாகும்.

தென்னாசியப்பிராந்தியத்தில் உச்சமான அடக்குறையைக் கொண்ட நாடாக இலங்கை உள்ளது.

இலங்கையின் சமூக அடித்தளமே அடக்குமுறையின் வேர்களைத் தாராளமாகக் கொண்டது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். சாதி, பிரதேச, மத வேறுபாடுகளும் அவற்றின் அடையாளங்களின் வழியான அடக்குமுறையும் தொடர்ந்து நிகழும் ஒரு தேசம் இலங்கையாகும்.

ஆகவேதான், இலங்கை தன்னுடைய சுதந்திரத்துக்காக ஒரு துளி இரத்தத்தையும் சிந்தவில்லை. ஒரு உயிரைக்கூட இழக்கவில்லை.

ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகான இலங்கையில், இலங்கையர்களால் ஆளப்படுகின்ற இலங்கையில், 1948 – 2012 வரையில் சுமார் நான்கு லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல தலைவர்கள் வன்முறையாற் பலியாகியுள்ளனர். பல கோடி ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்களும் இயற்கை வளங்களும் அழிவடைந்துள்ளன.

இலங்கையில் உள்ள சமூகங்களிடையே பெரும் பிளவுகளும் முரண்பாடுகளும் நம்பிக்கையீனங்களும் ஏற்பட்டுள்ளன. இவையெல்லாம் ஏன் நடந்தன என்று சிந்திக்க முடியாத அளவிற்தான் இலங்கை உயர்பீடங்களின் உணர்திறனும் அரசியலறிவும் உள்ளது.

எனவேதான், அவை திரும்பத்திரும்ப இராணுவ பலத்தில் அதிகமாக நம்பிக்கை வைக்கின்றன. அதற்காகவே அதிக நிதியும் அதிக ஆளணியும் காணிகளும் கவனங்களும் தேவைப்படுகின்றன.

ஆனால், உண்மையில் இவற்றுக்குப் பதிலாக, அமைதிக்காகவும் அரசியல் உரிமைகளைப் பகிர்ந்தளிப்பதற்காகவும் மக்களுடைய பொருளாதார விருத்திக்காகவும் இலங்கை சிந்திக்க வேண்டும். அதை நோக்கிய தன்னுடைய காலடிகளை அரசு முன்வைக்க வேண்டும்.

அதுவே நிரந்தரப் பாதுகாப்பை வழங்கும். அதுவே நிரந்தர அமைதியையும் நாட்டின் இறைமையையும் மக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்கும். உண்மையில் அதுவே தேசிய பந்தோபஸ்தாகும்.

00

'காணி நிலம் வேண்டும் பராசக்தி... காணி நிலம் வேண்டும்...'

இன்னும் இந்தப் பாடலை நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். பாடிக் கொண்டிருக்கிறோம். காணி நிலம் வேண்டும் என்று இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் அரசாங்கத்திற்கு விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சனங்களுக்குக் காணிகளை நினைத்த மாத்திரத்தில் தம்மால் வழங்க முடியாது என்று சுற்று நிருபங்களையும் சட்டங்களையும் முன்வைத்துத் தங்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர் அரச உயர் அதிகாரிகள். இவர்களைத் தட்டிக் கேட்பதற்கு யாரும் இல்லை. இந்த நிலையைச் சுட்டிக்காட்டுவதற்கும் யாரும் கிடையாது.

'காணி நிலம் வேண்டும் பராசக்தி... காணி நிலம் வேண்டும்...'

காணி நிலம் இல்லாத ஆயிரக்கணக்கான சனங்களுக்கு இந்தப் பாட்டுத் தேனாக இனிக்கும். அல்லது பாகற்காயாகக் கசக்கலாம்.

அவர்கள் தங்களுக்கு ஒரு காணித்துண்டு, குந்தியிருப்பதற்கு ஒரு குடிநிலம் வேணும் என்று ஓயாமற் கேட்கிறார்கள். காணியில்லை என்றால் வீடில்லை. காணியும் வீடும் இல்லையென்றால் ஒழுங்கான வாழ்க்கையில்லை.

ஒழுங்கான வாழ்க்கையில்லை என்றால்....? நாடும் சமூகமும் சிதைந்து விடும். அவலமும் துயரமும் பெருகிவிடும்.

தமிழர்கள் இலங்கையின் பூர்வ குடிகள் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இன்று இந்தப் பூர்வ குடிகளின் தொடர்ச்சியாக இருக்கும் பலருக்கும் குந்தியிருப்பதற்கு ஒரு குடிநிலம் இல்லை.

'காணி நிலம் வேண்டும் பராசக்தி... காணி நிலம் வேண்டும்...'

1/29/2012 3:18:56 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்