Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பொங்குதமிழுக்கு அகவை இரண்டு!

பொங்குதமிழுக்கு அகவை இரண்டு!
ஆசிரியர் குழு

 

தமிழர் திருநாளாம் இப்பொங்கல் நாளில் பொங்குதமிழ் மூன்றாவது ஆண்டில் காலடி வைக்கிறது.

2009 மே 18 இற்குப் பின்னான அரசியற் சூழலில், ஈழஅரசியல் குறித்த நம்பிக்கைகள் சிதைந்து எமது இனத்தின் ஆன்மா காயம்பட்டுநின்ற ஒரு பொழுதில்தான் - எதிர்காலத்தின் மீது ஒரு புதிய நம்பிக்கையை விதைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவராய் பொங்குதமிழுக்கு முதல் விதை தூவினோம். 2010 ஜனவரி 14 ம் நாள் பொங்குதமிழ் தன் முதற் காலடியை எடுத்து வைத்தது.

இணையப்பரப்பில் அதுவரை நிலவிய ஊடகக் கலாச்சாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு, ஒரு முன்மாதிரியான பாத்திரத்தை வகிக்க வேண்டுமென்ற பெருவிருப்பு எம்மிடமிருந்தது.

தமிழ் இணையச் சூழலில் பொங்குதமிழ் தன் காலடிகளைப் பதிக்கும்வரை தமிழ்த் தேசிய அரசியல் குறித்த ஆழமான விவாதங்களும் கருத்துப் பகிர்வுகளும் மாற்று அரசியற் சக்திகளின் ஊடக நடைமுறையாகவே இருந்து வந்தது.

விடுதலைப் புலிகளையும் தேசியத்தையும் ஆதரித்து நின்ற ஊடகங்கள் மத்தியில் போராட்டம் குறித்த விவாதங்களுக்கான வெளியென்பது முற்றிலும் அந்நியமான ஒன்றாகவே இருந்தது. வரலாற்றின் பெரும் கனவுகளுடனும் நம்பிக்கைகளுடனும் முன்னெடுத்த ஆயுத தாங்கிய போராட்டம் ஒரு சடுதியான முடிவுக்கு வந்த நிலையில்கூட நாம் எங்கு தோற்றோம், ஏன் தோற்றோம், எப்படித் தோற்றோம் என்ற ஆய்வினைச் செய்ய யாருமே முன்வரவில்லை. தோல்விகளுக்கான பழியை யார்மீது போடலாம் என்பதிலேயே எம்மவர் காலம் கழிந்தது.

இவ்வாறான ஒரு புறநிலையில்தான் கடந்துபோன வரலாறு குறித்து விவாதிப்பதும் அதனை மீளாய்வு செய்வதும்கூட தேசியத்தை பலப்படுத்தும் ஒரு முயற்சிதான் என்ற புரிதலோடு பொங்குதமிழ் இணையப்பரப்பில் தன் முதற்காலடியை எடுத்து வைத்தது.

பிளவுண்டுபோயிருந்த புலம்பெயர் அரசியலை மிகுந்த பொறுப்புணர்வுடன் அணுகவேண்டிய அவசியத்தையும் நாம் உணர்ந்திருந்தோம். இனத்தின் ஆயுதமேந்திய அரசியல் தோற்கடிக்கப்பட்டாலும்கூட அரசியற் தளத்தில் புலம்பெயர் சமூகம் ஆற்றவேண்டிய பணிகள் நிறையவே உண்டு என்பதிலும் எமக்கு நம்பிக்கையிருந்தது. இதற்கான வெளிகளை அடையாளம் காட்டும் அரசியல் ஆய்வுகளை நாம் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தோம்.

கடந்த இரண்டு வருடங்களில், ஈழ அரசியலின் முன்னோடி அறிஞர்களதும் வரலாற்று ஆய்வாளர்களதும் துணையோடு பொங்குதமிழ் காத்திரமான ஒரு பணியை ஆற்றியிருப்பதாகவே நாம் உணர்கிறோம்.

ஆனாலும் தமிழ் சமூகத்தின் ஊடகச் சூழலும் அரசியல் கலாச்சாரமும் எமக்கு பெரும் ஏமாற்றம் தருவதாக இருப்பதையும் சொல்லியே ஆகவேண்டும். புலம்பெயர் அரசியலில் பிளவுபட்டு நிற்கும் சக்திகள் ஒருவர்மீது ஒருவர் சேறடிக்கும் களமாகவும் புழுதிவாரித் தூற்றும் இடமாகவுமே இணையப் பரப்பு மாறிவருகிறது.

யாரும் யாரைப்பற்றியும் எதுவும் எழுதலாம் என்கிற வரைமுறையற்ற இந்த ஊடக வன்முறை குறித்து யாரும் குரலெழுப்புவதாயில்லை. மேற்குலகின் ஜனநாயக மையத்துள் நின்றுகொண்டு எதையும் கற்றுக்கொள்ளாத ஓர் இனமாக வாழ்வது பற்றி யாரும் கவலைப்பட்டதாயும் தெரியவில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய சில ஊடகங்கள் தவிர, பல ஊடகங்கள் இந்த விஷ கலாச்சாரத்திற்குள்ளேயே சிக்குண்டு கிடக்கின்றன. இந்த சூழலுக்குள் 'மீன் சந்தையில் பூ விற்கப் புறப்பட்டவர்கள்போல' பொங்குதமிழும் இயங்க வேண்டிய நிலை மகிழ்ச்சி தருவதாயில்லை.

பொங்குதமிழ் குறித்து முன்வைக்கப்படும் நியாயமான விமர்சனங்களை நாம் வரவேற்கிறோம். பொங்குதமிழின் ஆரம்பவேகம் கடந்த ஆண்டில் குறைவடைந்திருப்பதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம். 2012 இல் வேகத்தை விட நிதானத்துடன் பொங்குதமிழ் தன் காலடிகளை எடுத்துவைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. வியாபார நோக்கமற்ற பொங்குதமிழின் இந்த ஊடகப் பணியில் இணைந்து பணிபுரிய விரும்பும் அனைவரையும் நாம் அன்புடன் வரவேற்கிறோம்.

எமது சமூகத்தின் ஆய்வாளர்கள், புலமையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பொங்குதமிழ் அமைத்துக் கொடுத்த களத்தின் ஊடாக கடந்த ஈராண்டுகளில் பங்காற்றியிருப்பதையிட்டு நாம் பெருமகிழ்வடைகின்றோம். கடந்த ஈராண்டில் கட்டுரைகள், கவிதைகள், விவாதங்கள் என 712 ஆக்கங்களையும் நடப்பு அரசியல் சார்ந்த 225 கருத்துப்படங்களையும் வெளியிட்டிருப்பது குறித்து மனநிறைவடைகின்றோம்.

இப்பணியில் எம்முடன் துணைநின்ற புலமையாளர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள் என அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எமது மனமகிழ்வையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொங்குதமிழின் இரண்டாவது ஆண்டில், அரசியல் ஆய்வுகளுக்கு அப்பால், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் போன்றோரது விடுதலை குறித்தும், தினக்குரல் பத்திரிகையின் ஊழியர் பிரச்சனை குறித்தும் நாம் சமூக அக்கறையோடு எழுதியும் போராடியும் வந்திருக்கிறோம் என்பதில் மகிழ்வடைகிறோம். நியாயங்களுக்கான எம் குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்.

போர்முடிந்து இரண்டரை ஆண்டுகளாகியும் தாயகத்தில் யுத்த வடுக்களோடும் வறுமையோடும் வாழ்ந்துவரும் எண்ணற்ற போராளிகளதும் மாவீரர் குடும்பங்களதும் வாழ்வாதாரத் திட்டங்களுக்கு புலம்பெயர் சமூகம் இன்னும் ஆற்றவேண்டிய பணிகள் நிறையவே உண்டு. குறைந்தது ஒரு வருடத்திற்காவது இந்த குடும்பங்கள் தம் சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்கும் அளவுக்கு உதவிகளை வழங்க முன்வருமாறு எம் வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம். இவ்வாறான உதவி வேண்டும் குடும்பங்களின் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தித்தர பொங்குதமிழ் தயாராகவே உள்ளது என்பதையும் அறியத் தருகிறோம்

வாசகர்களின் ஆதரவோடும் நம்பிக்கையோடும் பொங்குதமிழ் தொடர்ந்தும் தன் கடமையை தொடரும்.

அனைவருக்கும் எம் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

1/14/2012 4:35:26 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்