Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அறிவுசார் சர்வதேச அரசியல் அணுகுமுறைக்கு கால்கோளிட்டார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

<p>அறிவுசார் சர்வதேச அரசியல் அணுகுமுறைக்கு கால்கோளிட்டார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்</p>
மு.திருநாவுக்கரசு

 

தமிழ் மண்ணில் ஓர் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. ஒரு நூற்றாண்டிற்கும் மேலான வரலாற்றில் ஓர் ஈழத் தமிழ்த் தலைவரால் ஆய்வு மையம் ஒன்று உத்தியோகபூர்வமாய் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அரசியல் ஆய்வை பிரதானப்படுத்துகின்றதான 'மூலோபாய கற்கை நிலையம், திருகோணமலை' (Center for Strategic Studies, Triconamalee) என்ற பெயரிலான ஆய்வு மையம் வடமாகாண முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரனால் கடந்த 17ஆம் தேதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் திரு.தனபாலசிங்கம், அரச அறிவியல் துறைத் தலைவர் கலாநிதி. கே.ரி.கணேசலிங்கம் ஆகியோரும் உரையாற்றினர்.

ஒரு தமிழ்த் தலைவரால் உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அமைப்பு என்ற வகையில் ஈழத் தமிழ் மக்களின் அறிவுசார் அரசியலில் இது ஓர் அதிசயம் என்றுதான் கூறவேண்டும். நூற்றாண்டுக் கணக்கான தமிழரின் அரசியலில் தமிழ்த் தலைவர்கள் இதுபற்றி சிந்தித்ததே கிடையாது என்றவகையில் இதற்கு ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. காலத்தின் கட்டளை இவ்வாறு ஒரு நியதியை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லத் தோன்றுகிறது. இதனை ஆரம்பித்த திருகோணமலையைச் சேர்ந்த திரு. யதீந்திராவும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க பணியை தொடக்கியுள்ளனர் என்று துணிந்து கூறலாம்.

'தமிழர்களைப் பொறுத்தவரையில் உலகளாவிய அரசியல் சிந்தனைகள் அல்லது அரசியல் ஆய்வறிவு ஆகியன மிகக் குறைவாகவே கணக்கில் எடுக்கப்படுகின்றன. ஆனால் தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றி வருகின்றன' என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது தொடக்க உரையில் கூறியுள்ளார்.

இதில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருப்பது முற்றிலும் சரியானது. சிங்கள தரப்பைப் பொறுத்தவரையில் பிரித்தானியர் காலத்தில் ஒன்றேகால் நூற்றாண்டு இடைவெளியைத் தவிர அவர்கள் 2500 ஆண்டுகால தொடர்ச்சி குன்றாத இராஜதந்திர பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். 1815ஆம் கண்டி அரசு வீழ்ந்த பின்புங்கூட பௌத்த மஹாசங்க அமைப்பிற்கூடாக அவர்களின் இராஜதந்திர மரபு தொடர்ச்சியறாது உயிர்ப்புடன் இருந்தது என்பதும் கவனத்திற்குரியது.

<p>அறிவுசார் சர்வதேச அரசியல் அணுகுமுறைக்கு கால்கோளிட்டார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்</p>

எல்.பி.மென்டிஸ் எழுதிய Foreign Relations of Sri Lanka : From Earliest Times to 1965 என்ற நூலானது சிங்கள அரசின் 2500 ஆண்டுகால இராஜதந்திர பாரம்பரியத்தை தொடர்ச்சி குன்றாது காவிநிற்கின்றது. இப்படியொரு ஆய்வு நூல் இருப்பதே அவர்களுக்கு பலத்தையும் பெருமையையும் அளிக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.

சுதந்திர காலத்தையண்டி 1945ஆம் ஆண்டைத் தொடர்ந்து சிங்கள தரப்பில் நவீன இராஜந்திரத்திற்கான பலமான அடித்தளம் இடப்படுகிறது. குறிப்பாக இதன் மூளையாக சேர்.ஒலிவர் குணதிலக அமைகிறார். தலைவராக டி.எஸ்.செனநாயக காணப்பட்டார். இதற்கான அறிவியல் மூளையாக ஆங்கிலேயரான பேராசிரியர் ஐவர் ஜெனிங்ஸ் விளங்கினார். இந்த மூவரும்தான் இலங்கையில் நவீன இராஜதந்திரத்திற்கான அடித்தளமிட்டோராவர்.

இராஜதந்திர மதிநுட்பத்தில் ஒலிவர் குணதிலக முதன்மையான பாத்திரத்திற்குரியவர். இவரது ஆலோசனையை டி.எஸ்.செனநாயக சிக்கென பற்றிநின்றார். டி.எஸ்.செனநாயக்கவின் கல்வித்தரம் குறைவானது என்று கூறப்பட்டாலும் அவர் மிகுந்த சாமர்த்தியசாலி. பெரிதும் தலைமைப் பண்பு நிறைந்தவர். புத்தி கேட்கவும் ஒரு புத்தி வேண்டும் என்பதற்கு இணங்க ஒலிவரின் புத்தியைக் கேட்டு அதன்படி சுதந்திர இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை டி.எஸ்.செனநாயக்க வரைந்து கொண்டார். இதன் பின்னணியில் இராஜதந்திர அடித்தளம் வெளிவிவகாரம் பற்றிய செயல்முறைகள் போன்றதற்கான நிறுவன கட்டமைப்புக்கள் உருவாகின. இதில் அறிவியல் பிரதான இடத்தை வகித்தது.

<p>அறிவுசார் சர்வதேச அரசியல் அணுகுமுறைக்கு கால்கோளிட்டார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்</p>

இதன் வளர்ச்சிப் போக்கில் அறிவார்ந்த வகையில் 1965ஆம் ஆண்டு பேராசிரியர் எஸ்.யு.கொடிகார என்பவரால் எழுதப்பட்ட Indo-Ceylon Relations Since Independence என்ற நூல் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கைக்கான வேதாகமமாய் வடிவம் பெற்றது.

சிங்களத் தலைவர்களும், இராஜதந்திரிகளும் இந்தியாவை தமது பிரதான எதிரியாக அடையாளப்படுத்திக் கொண்டமை ஒருபுறமும் அதேவேளை இந்தியாவோடு ஒட்டி அதன் ஆதிக்கத்தை தணிப்பதும் இந்தியாவுடன் வெட்டி இந்தியாவின் எதிரிநாடுகளின் பலத்தைக் காட்டி தமக்கான பேரம் பேசலை அதிகரித்து இந்திய ஆதிக்கத்தை எதிர்கொள்வதும் என்ற இரட்டை நிலையை பதவிக்கு வரும் சிங்கள ஆட்சியாளர்கள் தருணங்களுக்கு ஏற்ப பின்பற்றும் தந்திரத்தை வகுத்தனர். 'முடிந்தால் குடிமியைப் பிடி, முடியாவிட்டால் காலைப்பிடி' என்ற சிங்கள பழமொழிக்கு இணங்க அவர்களது இராஜதந்திர கையாளல்கள் அமைந்தன. இந்த இருநிலை இராஜதந்திரத்தை ஒரே ஆட்சியின்கீழ் 1987 இலங்கை-இந்திய ஒப்பந்த கால அரசியலில் காணலாம்.

முதலமைச்சர் கூறுவதுபோல சிங்களத் தரப்பில் சர்வதேச அரசியல் மற்றும் இராஜதந்திரத்திற்கான கற்கை நெறிகளும், ஆய்வு நிலையங்களும் பல்கிப் பெருகியுள்ளன. கூடவே ஆய்வு அறிஞர்களும் பெருகியுள்ளனர். இன்றைய நிலையில் ஜெனரல் சேர்.ஜோன் கொத்தலாவல டிபேன்ஸ் யூனிவேர்சிட்டி இவ்வகையில் இத்தகைய கற்கைக்கும், ஆய்வுகளுக்குமான பிரதான மையமாக திகழ்கிறது. இது அரசின் செல்லப்பிள்ளையாய் பெரும் நிதி ஒதுக்கீட்டுடனும், அரச போஸிப்புடனும் பெருவளர்ச்சி அடைந்து செல்கிறது.

இவ்வகையில் பின்நோக்கிப் பார்க்கையில் சிங்களவர்களின் அறிவியல்சார் இராஜதந்திர மரபுடன் ஒப்பிடுகையில் தமிழர்கள் ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டு பின்தங்கியுள்ளனர் என்றே கூறவேண்டும்.

இப்படி பார்க்கையில் தமிழ்த் தரப்பில் ஏறக்குறைய வெறுமை நிலையே காணப்படுகிறது. இப்பின்னணியில் முதலமைச்சரால் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்ட இந்த ஆய்வு மையத்திற்கு ஒரு கால்கோல் முக்கியத்துவம் உண்டு. அவர் தனது தொடக்க உரையில் கூறிய சிலவற்றை இங்கு நோக்குதல் அவசியம்.

மேற்படி 'மூலோபாய கற்கை நிலையம் எமது மக்களின் அறிவுப் பசியை அரசியலிலும் சரி, பொருளாதார ரீதியிலும் சரி, நிறைவு செய்யக்கூடிய ஒரு நிலையமாக பரிணமிக்க வேண்டுமென நாம் யாவரும் விரும்புகிறோம். அதற்காக சம்பந்தப்பட்ட துறைகளில் வல்லுநர்களின் பங்களிப்புக்களைப் பெற்று சர்வதேச விடயங்களில் எம்மவருக்கு சிறந்த அறிவினை வழங்க முயற்சிக்க வேண்டும்.

'இன்றைய பூகோள அரசியல் மாற்றத்தில் இலங்கையை களமாகக் கொண்டு அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா, மேற்கத்தேச நாடுகள் போன்ற பல நாடுகளும் தத்தமது அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன.

'இன்று பூகோளம் சுருங்கலானது பல நன்மைகளையும், தீமைகளையும் தந்துவருகிறது. சீனாவில் மூக்குளைந்தால் அமெரிக்கா தும்புகிறது. அவர்களின் பூகோள அரசியல் எம்மையும் பாதிக்கிறது.' என்று கூறிய முதலமைச்சர் இதை ஆரம்பித்த யதீந்திராவின் முயற்சியை பெரிதும் வரவேற்கத் தவறவில்லை.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே தமிழ் அரசியல் தலைவர்கள் பகுதிநேர அரசியல்வாதிகளாயும், பொழுதுபோக்கு அரசியல் நடத்துபவர்களாயும், மண்ணோடு ஒட்டிய சிந்தனையற்றவர்களாயும், தமிழ் மொழி பற்றிப் பேசினாலும் தமிழ்த் தேசியம் பற்றிய போதிய புரிதல் அற்றவர்களாயும் காணப்பட்ட நிலையில், உள்நாட்டு அரசியலானது வெளிநாட்டு உறவுகளாலும் நிர்ணயிக்கப்படுகின்றது என்ற சிந்தனைக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்காதவர்களாய் காணப்பட்டனர்.

ஒரு சிறிய உதாரணத்தை இங்கு பதிவு செய்ய வேண்டியது அவசியம். 1965ஆம் ஆண்டு டட்லி செனநாயக்க அரசாங்கம் அமைக்கப்பட்ட போது அதில் தந்தை செல்வா டட்லியுடன் ஒப்பந்தம் வாயிலாக தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டார். அந்த ஒப்பந்தத்தில் சிங்களக் குடியேற்றம் ஒரு முக்கிய பிரச்சினையாக கருத்தில் எடுக்கப்பட்டிருந்தது. டட்லி செனநாயக்க தமிழ்ப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்படாது இருப்பதற்கான உத்தரவாதத்தை தந்தை செல்வாவிற்கு வழங்கினார். மாவட்ட சபைகள் அமைப்பதன் மூலம் குடியேற்ற அதிகாரம் மாவட்ட சபைகளுக்கு வந்துவிடும் என்றும் கூறப்பட்டது. இக்காலகட்டத்தில் சர்வதேச நிதிநிறுவனங்கள் டட்லி செனநாயக்க அரசாங்கத்திற்கு நிதியுதவி அளிக்க முன்வந்தன. அந்த நிதியின் நிபந்தனையாக 'பசுமை புரட்சியை' இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது முன்னிறுத்தப்பட்டது. அவ்வாறு நிதி உதவியைப் பெற்ற டட்லி செனநாயக்க அரசாங்கம் பசுமை புரட்சி என்பதன் பேரில் தமிழ்ப்பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை வெற்றிகரமாக அபிவிருத்திக்கு உள்ளாக்கியது. பசுமை புரட்சி என்பது மேற்குலம் நீட்டிய அதன் நவீன விவசாய சாதனங்களுக்கான சந்தையாகும். கூடவே அதற்கான பரிசோதனைக் களமாகவும் மேற்குலம் இலங்கையை தேர்ந்து கொண்டது.

ஏற்கனவே குடியேற்றப்பட்டிருந்த சிங்கள குடியேற்றவாசிகள் பெருமளவு விரத்தியுற்ற நிலையில் குடியேற்றங்களைவிட்டு தமது பழைய இடங்களை நோக்கி ஓடும் நிலை காணப்பட்டது. ஆனால் டட்லி செனநாயக்க இந்த நிதியைக் கொண்டுவந்து பசுமை புரட்சி என்பதன் பேரால் குடியேற்றப்பட்ட பகுதிகளை நவீன அபிவிருத்திக்கு உள்ளாக்கினார். வீதிகள், மின்சார வசதிகள், வீட்டு வசதிகள், அடிகட்டுமான வசதிகள் என பலவும் பெருகின. இதனால் குடியேற்றவாசிகளுக்கு கவர்ச்சி ஏற்பட்டு குடியேற்றங்கள் சிறப்புற ஸ்தாபிதம் பெற்றன. ஆனால் இந்த உண்மையை தமிழ் அரசியல் தலைவர்களால் சிறிதும் புரிந்து கொள்ளமுடியாது இருந்ததுடன் தமிழ் மக்கள் தலையில் குறிப்பாக கிழக்கில் அதுவே ஒருபெரும் சுமையாக அமைந்தது. இதுதொடர்பான ஆய்வுகளோ, நிபுணர் அறிக்கைகளோ தமிழர் தரப்பில் தயாரிக்கப்படும் நிலை இருக்கவில்லை.

இங்கு வெளிநாடுகள் நீட்டிய வாய்ப்பை தமிழ் மக்களுக்கு எதிரான குடியேற்றங்களை ஸ்தாபிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக சிங்களத் தலைவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற உண்மையை தமிழ்த் தலைவர்கள் அறிந்திருந்தார்களோ என்பதுகூடத் தெரியாது.

1981ஆம் ஆண்டைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் அறிவுசார் அரசியல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. இதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மறுமலர்ச்சிக் கழகம் அச்சாணியாய் அமைந்தது. 1982ஆம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இம்மறுமலர்ச்சிக் கழகம் சில விரிவுரையாளர்களையும், பல்கலைக் கழகத்திற்கு வெளியே உள்ள அறிஞர்களையும் சாத்தியமான வகையில் பயன்படுத்தி அறிவியல் கருத்தரங்குகளையும், சர்வதேச அரசியல் பற்றி வகுப்புக்களையும், நூல் வெளியீடுகளையும் மேற்கொண்டு வந்தது.

இந்த அமைப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு முன் 1981ஆம் ஆண்டு இதனுடன் தொடர்புள்ள மாணவர்கள் பலர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களை அணுகி மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பற்றிய ஒரு கருத்தரங்கு நிகழ தூண்டுகோலாய் அமைந்தனர்.

இந்த மாணவர்கள் குழாத்திலிருந்து உதித்த மறுமலர்ச்சிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சர்வதேச அரசியல் பற்றியும், உள்நாட்டு அரசியல் பற்றியும், அண்டைநாட்டு அரசியல் பற்றியும் தொடர்ச்சியாக கருத்தரங்குகளை நடாத்தி வந்தனர். குறிப்பாக வாராந்தம் சனி அல்லது ஞாயிறு தினங்களில் இரண்டரை மணிக்கு பல்கலைக்கழக மாணவர் பொது மண்டபத்தில் இரண்டரை மணியிலிருந்து இரவு ஏழரை எட்டுமணிவரை மேற்படி அரசியல்சார் அறிவியல் வகுப்புக்கள் நிகழும். இதில் குறிப்பாக சில பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இத்தகைய வகுப்புக்களை நடாத்த ஏற்பாடு செய்யப்படுவர்.

பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலை, விஞ்ஞானம், வர்த்தகம், மருத்துவம் எனப் பல பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும், பல்கலைக்கழத்திற்கு வெளியே உள்ள அறிவியல் விரும்பிகளும், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளும் இவ்வகுப்புக்களில் பங்கேடுப்பர். குறிப்பாக சுமாராக அரைப்பங்கினர் பெண்களாக இருப்பர் என்பது மகிழ்ச்சியுடன் நினைவுகூரத்தக்கது. இயக்கங்களுக்கிடையே அக்காலத்தில் போட்டிகளும், பேதங்களும் இருந்தாலும் இத்தகைய வகுப்புகள், கருத்தரங்குகள் என்பன அனைவருக்கும் பொதுவானவையாக அமைவதுடன் அதில் அனைவரும் அந்நியோன்னியமான ஒன்றுகூடலை பின்பற்றி ஒழுகினர் என்பதும் அடிக்கோடிட்டு கூறத்தக்கது.

தளிர் என்ற மாதாந்த சஞ்சிகையை மறுமலர்ச்சிக் கழகம் வெளியிட்டு வந்தது. 5000 பிரதிகளை அச்சிட்டு ஒருவாரத்தில் அனைத்தையும் வடக்கு-கிழக்கு முழுவதிலும் விநியோகிப்பதில் இவர்கள் வெற்றிபெற்றுவிடுவார்கள். இதில்தான் முதல்முறையாக சர்வதேச அரசியல் உறவுகள் பற்றிய கட்டுரைகளும், தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான சர்வதேச அரசியல் பற்றிய விழிப்புணர்வும் வெளிவரத் தொடங்கியது.

மறுமலர்ச்சிக் கழகத்தின் துணை அங்கமான சுகந்தம் வெளியீடு தமிழீழ விடுதலைப் போராட்டமும், இந்தியாவும் என்ற ஒரு நூலை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து இந்து மகா சமுத்திரமும் இலங்கையின் இனப்பிரச்சனையும் என்ற தலைப்பில் இத்தரப்பில் இருந்து ஒரு நூல் வெளியானது. இந்நூலின் வருகையோடு உலகளாவிய அரசியல் பற்றிய விழிப்புணர்வு பெரிதும் வளர்ச்சியடைந்தது. பூகோள அரசியல் எனப்படும் உலகளாவிய அரசியல், இந்துமாகடல் அரசியல், தென்னாசிய அரசியல், உள்நாட்டு அரசியல் என அனைத்தையும் இணைத்த வகையில் இந்நூல் வெளியானது. இது தமிழ் மக்கள் பக்கத்தில் சர்வதேச அரசியல் பற்றிய பார்வையில் ஒரு முக்கிய புள்ளியாய் அமைந்தது. துரதிஷ்டவசமாக இவ்வறிவியல் வளர்ச்சியானது தொடர் வளர்ச்சிக்கு போக முடியாது முறிவடைந்தது. 

1990ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை வெளியேறியதைத் தொடர்ந்து திரு.அ.கி. உதயகுமார் என்பவர் பெரிதும் தன் தனிப்பட்ட முயற்சியால் ஓர் ஆய்வு நிறுவனத்தை ஆரம்பித்து 'இலங்கை தமிழ்ப் பேசும் மக்களின் அரசியலும் - வல்லரசுகளின் ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கை தாக்கங்களும்' என்ற ஒரு நூலை வெளியிட்டமை இங்கு அக்கறையுடன் குறிப்பிடத்தக்கது. இவர் மேலும் ஒரு சில நூல்களை வெளியிட்டும் இருந்தார்.

இத்துடன் 1990ஆம் ஆண்டு சர்வதேச அரசியல் ஒழுங்கு பற்றிய இன்னொரு நூலும் மேற்படி மறுமலர்ச்சிக் கழகத்தின் வேரிலிருந்து வெளியானது. பின்பு வன்னியை மையமாகக் கொண்டு உதிரி வெளியீடுகளாக சமஸ்டியா – தனிநாடா என்ற நூலும், ஒற்றைமைய உலக அரசியலில் - போரும் சமாதானமும் என்ற நூலும் 2004ஆம் 2008ஆம் ஆண்களில் வெளியாகின.

முள்ளிவாய்க்காலின் பின்பு தமிழ் ஆய்வு மையம், பிரித்தானியா-இலங்கை என்ற அமைப்பால் யாப்பு என்ற நூல் 2016ல், அதே ஆய்வு மையத்தால் பூகோளவாதம் புதியதேசியவாதம் என்ற நூல் 2018ஆம் ஆண்டும் வெளியாகின. ஆயினும் இவை ஏறக்குறைய உதிரித்தன்மை வாய்ந்தனவே தவிர ஆய்விற்கான கட்டமைப்பையோ, நிதிவளத்தையோ சிறிதும் கொண்டவை அல்ல.

இந்நூல் வெளிவந்த ஒருமாதத்திற்குள் ஒருமுறைசார் வகையில் அதுவும் பெரும் மக்கள் ஆதரவைப் பெற்ற ஒரு தமிழ்த் தலைவரினால் மேற்படி ஆய்வு மையம் அங்குராப்பணம் செய்யப்பட்டுள்ளமை ஒரு நல்ல அறிகுறியாகும்.

தமிழ் மக்கள் மத்தியில் கல்விப் பாரம்பரியம் சிறப்பாக இருந்தாலும் சர்வதேச அரசியல்சார் அறிவியல் பாரம்பரியம் பெரிதும் பலவீனமுற்றே காணப்படுகிறது. ஒருவகையில் ஆய்வுரீதியான அரசியல் என்ற மனப்பாங்கு இன்னும் முக்கியத்துவம் பெறவில்லை. வண்டியையும் வாகனங்களையும் அறிவுபூர்வமாக வடிவமைப்பதை ஏற்றுக் கொள்ளும் மனம் அரசியலை அவ்வாறு அறிவுபூர்வமாக வடிவமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மருத்துத்தை அறிவுபூர்வமின்றி எவ்வாறு மேற்கொள்ள முடியாதோ அவ்வாறு அரசியலையும் அறிவுபூர்வமின்றி மேற்கொள்ள முடியாது என்ற மனப்பாங்கு எம்மிடம் பெரிதும் வளரவில்லை.

அறிவை விஞ்ஞானபூர்வமாக்க முற்பட்ட சாக்ரட்டீஸ் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டு 2500 ஆண்டுகளாகின்றன. இன்றும் அறிவிற்காக செயற்படுவோர் உயிருக்காக போராடவேண்டிய துர்ப்பாக்கியம் தொடரவே செய்கிறது. இத்தகைய பின்னணியில் அரசியல்சார் அறிவியலை மேற்கொள்வது என்பது பெரும் சவாலாகும். அரசியல் தரப்பினர் பலரும் தம் விருப்பத்தை ஆய்வு முடிவு கூறவேண்டும் என்று விரும்பும் துயரம் எம்மிடம் உண்டு. ஆய்வு என்பது விருப்பத்தை சொல்வதல்ல, காணப்படும் உண்மை விதியைச் சொல்வது. இது விருப்பு வெறுப்பிற்கு அப்பாலானது.

சாக்ரட்டீஸ் மன்னிப்பு கோரினால் அவருக்கு கருணை காட்டி மன்னிப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி சாக்ரட்டீஸிடம் கேட்டபோது 'என்னைப் புதைத்து என் கருத்தை வாழவிடுவதா அல்லது கருத்தைப் புதைத்து என்னை வாழவிடுவதா' என்ற கேள்வியைத்தானே நீங்கள் கேட்கிறீர்கள். என்னைப் புதையுங்கள் என் கருத்து வாழட்டும்' என்று கூறி மரணத்தை ஏற்றுக் கொண்டார் சாக்ரட்டீஸ். அதேபோல 'நீ சொல்வதை நான் ஏற்கவில்லையாயினும் அதை சொல்வதற்கான உனது உரிமைக்காக நான் போராடுவேன்' என்று பிரஞ்சு சிந்தனையாளர் வால்டயர் கூறியதும் இங்கு கவனத்திற்குரிது. அறிவியல் வளர வேண்டுமென்றால் சரி பிழைக்கு அப்பால் சிந்தனை சுதந்திரம் அவசியம். அத்தகைய உணர்வோடு இந்த ஆய்வு மையம் தன் காலடியை எடுத்து வைக்க வேண்டும்.

மேலும் பொதுவான சர்வதேச அரசியல் மற்றும் மூலோபாய ஆய்வுகள் என்பனவற்றுடன் கூடவே ஆளுமை ஆய்வு (Personality Studies), கொள்கை ஆய்வு (Policy Studies), தீர்மானம் எடுத்தல் (Decision Making) போன்ற துறைகள் சார்ந்த ஆய்விலும் மற்றும் தமிழ்த் தேசியத்தை கட்டியமைப்பது, பண்பாடு – கலை - இலக்கியம் - உணவு பழக்கவழக்கங்கள் சார்ந்த ஆய்வுகளிலும் தமிழ்த் தரப்பு கவனம் செலுத்த வேண்டும். எல்லாவற்றையும் மேற்படி யதீந்திரா தொடங்கியுள்ள ஓர் ஆய்வு மையத்தால் மட்டும் செய்யமுடியும் என்று நான் கூறவில்லை. இதுதொடர்பாக தமிழ்த் தரப்பு மேற்படி ஆய்வு விடயங்கள் அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இங்கு கூறப்படும் கருத்தாகும். ஆய்வு என்பது காலத்தை முந்தும் செயலும் அது காலத்தை உந்தும் செயலுமாகும். அந்த வகையில் அது எதிர்காலத்திற்கான ஒரு சக்திப் பொருளாகும்.

4/2/2018 9:31:10 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்