Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

நல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம்

<p>நல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம்</p>
மு.திருநாவுக்கரசு

 

சிங்களத் தலைவர்கள் மிகவும் தெளிவானவர்கள். அவர்களது அரசியல் மிகவும் தெளிவானது. அவர்கள் கொள்கை தவறாதவர்கள். கீறிய கோடு தாண்டாதவர்கள்.

தமது இலட்சியத்தை அடைவதற்கு இராஜதந்திரத்தை பிரதான ஆயுதமாக கொண்டவர்கள். 'யானைக்கு புயம் பலம், எலிக்கு வளை பலம்' என்ற விளக்கம் உடையவர்கள். 'முடிந்தால் குடுமியைப் பிடி, முடியாவிட்டால் காலைப் பிடி' எனும் இயல்பைக் கொண்டவர்கள்.

சமாதானத்திற்கான யுத்தம் என்று தமிழ் மக்கள் மீது யுத்தம் புரிந்தவர்கள். யுத்தம் முடிந்ததும் 'சமாதானத்தை' கைவிட்டு 'நல்லிணக்கத்தை' கையில் எடுத்துக் கொண்டார்கள்.

நல்லிணக்கம் என்பது சிங்கள அரசிற்கு ஏற்பட்ட இனவழிப்பு யுத்த வடுவிலிருந்து சிங்கள அரசையும், சிங்களத் தலைவர்களையும், சிங்கள இராணுவத்தினரையும் பாதுகாத்து சிங்கள-பௌத்த பேரினவாதத்தை மேலும் முன்னெடுப்பதற்கான ஓர் உபாயமும், தந்திரமும் நிறைந்த கூரிய ஆயுதமாகும்.

நெருக்கடிகள் வரும்போதெல்லாம் சிங்களத் தலைவர்கள் சமாதானம் பற்றி பெரிதாக பேசுவார்கள். வாக்குறுதிகளை வழங்குவார்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். ஆனால் செயற்பாடு என்று வரும்போது இலட்சுமணன் ரேகை தாண்டியது போல் அவர்கள் இனவாதக் கோடு தாண்டமாட்டார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளாக நல்லிணக்கம் பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாண்டு மே-18ஆம் தேதி தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு எதிரான துக்க தினத்தை அனுஷ்டித்த வேளை அவர் இராணுவ வீரர்களுக்கு விழா எடுத்து அவர்களை புகழ்ந்து பாராட்டியதுடன் இராணுவம் யுத்த குற்றங்கள் எதிலும் ஒருபோதும் ஈடுபடவில்லையென்று அடித்துக் கூறினார். அத்தோடு 'நல்லிணக்கம்' பற்றிய அவர்களது புளுகுப் பெட்டகமும் அடிபட்டு பொடியாய் பறந்தது. 

தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் சாம்பல் மேட்டில் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்த வேளை தமிழரின் வாக்குகளாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாலும் ஜனாதிபதியாக மகுடம் சூடப்பட்ட மைத்திரிபால சிறிசேன இனப்படுகொலை புரிந்த சிங்கள இராணுவத்தினருக்கு வெற்றிக் கீரீடங்களை சூடிக் கொண்டிருந்தார்.

சிங்களத் தலைவர்கள் இவ்வாறு செய்வதில் வியப்பு எதுவும் இல்லை. அவர்கள் தமக்கான தமிழின அழிப்பை செவ்வனே செய்கிறார்கள். அதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்கிறார்கள். யுத்தம் நிகழ்ந்த இறுதிநாட்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவிப்பதற்கான பத்திரங்களில் கையெழுத்திட்டவர் மைத்திரிபால சிறிசேன. இவரிடமிருந்து நீதி விசாரணையை எதிர்பார்ப்பதற்கு எந்தவித அடிப்படையும் இருக்க முடியாது.

<p>நல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம்</p>

'அடிப்படை தர்மத்திலிருந்து வழுவியவனுடன் நியாயம் பேசுவதில் அர்த்தமில்லை' என்றொரு கிரேக்க கூற்றுண்டு. எனவே மைத்திரிபால சிறிசேனவிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?

அரியாலை-செம்மணி புதைகுழி படுகொலைக்களுக்கு பொறுப்பாக இருந்த அன்றைய ஜனாதிபதி திருமதி. சந்திரிகா பண்டாரநாயக்கவிடம் எவ்வாறு நீதியையும், நல்லிணக்கத்தையும் எதிர்பார்க்க முடியும்.

1977 ஆகஸ்டு இனப்படுகொலை கலவரம், 1983 கறுப்பு ஜுலை கலவரம் உட்பட ஜெவர்த்தனாவின் மற்றும் பிரேமதாசாவின் அனைத்து இனப்படுகொலையுடனும் இணைந்து அமைச்சராய் தொடர்ந்து பணியாற்றிய ரணில் விக்ரமசிங்காவிடம் நீதியையும், நல்லிணக்கத்தையும் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

இப்போது நல்லிணக்கத்திற்கு தலைமை தாங்கும் ஜனாதிபதி வெளியேறிவிட்டதற்கான அறிவித்தலை தெளிவாக பிரகடனப்படுத்திவிட்டார். அதேவேளை தனக்கும் ஜனாதிபதி சிறிசேனவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சந்திரிகா அவருடனான தனது உறவுகள் முறிவதான காட்சிகளை காட்டத் தொடங்கி அவருடனான உரையாடல்களின்போது வெளிநடப்புக்கள் செய்யத் தொடங்கியுள்ளார்.

இதன் மூலம் நல்லிணக்கம் என்ற நாடகத்திலிருந்து தான் வெளியேறும் காட்சியை அவர் அரங்கேற்றுகிறார். அதாவது அவர்களுக்கிடையே கோபதாபம் ஏற்படுவதாக காட்டி நல்லிணக்கம், அரசியல் தீர்வு என்ற பொறுப்பில் இருந்து தான் வெளியேறுவற்கான நியாயத்தை காட்சிப்படுத்துகிறார். இது ஒரு சுத்த ஏமாற்று. இதேபோல தனக்கு ஆதரவு தர ஜனாதிபதியும் சந்திரிகாவும் மறுத்துவிட்டதாகக் காட்டி நல்லிணக்க பொறுப்பில் இருந்து ரணில் வெளியேறுவார். ஆனாலும் ரணிலிடம் நல்லிணக்கத்திற்கான திட்டம் இருப்பதாக அண்மையில் திரு. ஆர்.சம்பந்தன் சொல்லியிருப்பது சிங்களத் தலைவர்களின் ஏமாற்றைவிடவும் மிகப்பெரும் ஏமாற்றாகும். இது தமிழ் மக்களுக்கு இழைக்கும் ஒரு வஞ்சக ஏமாற்றாகும்.

'நல்லிணக்கம்' பற்றிய திட்டவரைக்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றி தமிழ் மக்கள் தெளிவுற புரிந்தாக வேண்டும். அதனை ஒரு தனிக் கட்டுரை வாயிலாக இனிவரும் நாட்களில் நோக்குவோம்.

தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இடரைத் தாண்டுவதற்கு ஒரு பாலமாக 'நல்லிணக்கத்தை' சிங்களத் தலைவர்களும், சிங்கள அறிவு ஜீவிகளும் வடிவமைத்தனர். அதனை ஒரு பலம் பொருந்திய இராஜதந்திர நாகாஸ்திரமாக உபயோகிக்கத் தொடங்கினர். அப்போதே எந்தவித போர்க்குற்ற விசாரணைக்கு எந்தொரு சிங்களத் தலைவனையோ, சிங்களத் தளபதிகளையோ, சிங்கள இராணுவத்தினரையோ உட்படுத்துதில்லை என்பதில் உறுதியான முடிவுடன் இருந்தனர். ஆனால் போர்க்குற்ற விசாரணை, நல்லிணக்கம் என்பது பற்றி வானளாவ பேசுவதில் அக்கறையாக இருந்தனர். அதன் மூலம் உலகின் கண்களை கட்டினர். தமது அநியாயங்கள் அனைத்தையும் அதன் மூலம் மறைப்பதில் வெற்றி பெற்றனர். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உறுதுணையாக்குவதற்கான திட்டங்களை வகுத்தனர். துயரகரமான வகையில் விலைபோகும் அரசியல் வெற்றிபெறத் தொடங்கியது.

தென் ஆப்பிரிக்காவில் இன நல்லிணக்கம் ஏற்பட்டதைப் பற்றியும் அதன் மாதிரியைப் பற்றியும் அத்தியாயக் கணக்கில் பேசத் தொடங்கினர். அதற்கான தென் ஆப்பிரிக்கா நோக்கிய பயணங்களை எல்லாம் மேற்கொண்டனர். அரசியல் தீர்வு காண்பதற்காக இனப்பிரச்சினை நிலவும் நாடுகளில் உள்ள அரசியல் யாப்புக்களை ஆராய குழுக்களை அனுப்பினர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அங்கமாய் இணைந்து கண்டங்கள் கடந்து பயணித்தனர்.

அரசியல் தீர்வு, இன நல்லிணக்கம் என்பதெல்லாம் நடைபெறப் போகும் உண்மைகள் போல இவற்றின் மூலம் காட்சிப்படுத்தினர். சர்வதேச சமூகத்தை நம்பவைப்பதிலும், ஏமாற்றுவதிலும் வெற்றிபெற்றனர்.

இங்கு ஒரு சிறிய உண்மையை நோக்குவோம். தென்னாப்பிரிக்காவை ஆண்ட வெள்ளை சிறுபான்மையினம் மிக மோசமான இனப்படுகொலைகளையும், மனிதகுல தீங்குகளையும் இழைத்தது. ஆனால் 85 வீதத்திற்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்களின் கைக்கு ஆட்சி மாறியதும் அந்த கறுப்பினத்தவர்கள் வெள்ளையினத்தவர்களை இன ஐக்கியத்திற்கு அழைத்தனர். அதாவது அதிகாரத்தில் உள்ள கறுப்பர்கள் அதிகாரம் பறிக்கப்பட்ட வெள்ளையர்களுடன் இன நல்லிணக்கத்திற்கு தயாராகினர். இது அதிகாரத்தில் உள்ள கறுப்பர்கள் படுகொலை புரிந்த வெள்ளையர்களை மன்னித்து தமக்கான அதிகாரத்தை நிலைநாட்டினர்.

ஆனால் தமிழர்கள் மீது இனப்படுகொலை புரிந்த சனத்தொகையில் 75 வீதத்தினரைக் கொண்ட சிங்களவர்கள் அந்த இனப்படுகொலை நிகழ்ந்த பின்பும் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கிறார்கள். இவர்கள் கேட்பது இனப்படுகொலைக்கு உள்ளான மக்களை நீதி கேட்காமல் அமைதியாக இருங்கள். அப்படி இன அடிமையாக இருப்பதற்குப் பெயர்தான் அவர்கள் கூறும் இன நல்லிணக்கமாகும். ஆதலால் தென்னாப்பிரிக்காவோடு இதனை ஒப்பிட முடியாது.

இவ்வாறு தமக்கு சாதகமான உதாரணங்களை முன்னிறுத்தி தமக்கு சாதகமான வகையில் கருத்துருவாக்கம் செய்து இனப்படுகொலை புரிந்த சிங்கள ஆட்சியாளர்களையும், இராணுவத்தினரையும் பாதுகாத்துவிட்டு அதற்குரிய தமது இலக்கை எட்டியதும் இப்போது அப்பட்டமாக ஜனாதிபதி இன நல்லிணக்கத்திற்கு எதிராக இராணுவத்தினரையும், படுகொலையாளர்களையும் போற்றி இனப்படுகொலை அரசியலை மேலும் இன்னொரு கட்டத்திற்கு முன்னெடுக்கிறார்.

இங்கு 'நல்லிணக்கம்' என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இராஜதந்திர நாகாஸ்திரம் என்ற வகையில் அந்த அஸ்த்திரம் தனக்குரிய இலக்கை அடைந்துவிட்டது. இங்கு இவர்களுடைய அஸ்த்திரத்தைப் பற்றி நாம் அதிசயப்படுவதற்கில்லை. அப்படி அதிசயப்படுவோமானால் அரசியல்-இராஜந்திர அறிவியல் பொறுத்து நாம் வளர்ச்சியடைவில்லை என்பதே அர்த்தம். ஆனால் இவற்றை முன்கூட்டியே நாம் உணர்ந்திருக்கிறோம் என்பதற்கு ஆதாரமாக பல நூல்களும் கட்டுரைகளும், பேச்சுக்களும், உரையாடல்களும் கடந்த நான்கு ஆண்டுகளில் பெருமளவு வெளியாகியுள்ளன.

எதிரியின் இராஜதந்திர நகர்வுகள் அறிவியல் அர்த்தத்தில் எமக்கு வியப்பளிக்கவில்லை என்றாலும் அந்த இராஜதந்திர வலைக்குள் தமிழ் அரசியல் சிக்குண்ண தவறவில்லை என்பது வேதனைக்குரிய உண்மையாகும். இப்போது எமது பிரச்சினை எதிரியை திட்டிச் சபிப்பதற்கு அப்பால், ஒப்பாரி வைப்பதற்கு அப்பால் எதிரியின் அனைத்துவகை இராஜதந்திர நகர்வுகளையும் தகர்க்கவல்ல அரசியல் வியூகத்தை தமிழ்த் தரப்பு எவ்வாறு வகுக்கப் போகிறது என்பதுதான்.

முள்ளிவாய்க்காலின் பின்னான ஒன்பது ஆண்டுகளாய் அதற்கான வியூகத்தை அமைப்பதில் நாம் சிறிதும் வெற்றிபெறவில்லை என்பதுடன் எம்மை நாம் திரும்பிப் பார்த்து, எம்மை நிலைமைக்குப் பொருத்தமாக தகவமைத்து எமது மக்களை தற்காப்பதற்குரிய, விடுதலைக்கு வழி தேடுவதற்குரிய பணியை எவ்வாறு நிறைவேற்றப் போகிறோம் என்பதுதான்.

இதற்கான அகரவரிசையை எதிரியின் இராஜதந்திர அனுபவத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. எம்மை எப்படி தகவமைக்கப் போகிறோம் என்ற கேள்விக்கு தமிழ் அறிஞர்களும், அரசியல் ஆர்வலர்களும் பதில் காணவேண்டும்.

**

நன்றி: ஈழமுரசு கனடா

6/2/2018 3:48:33 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்