Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பொருத்தமானது எதுவோ அதுவே சரியானது

<p>பொருத்தமானது எதுவோ அதுவே சரியானது</p>
நிலாந்தன்

 

ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்களின் 'பூகோளவாதம் புதிய  தேசியவாதம்' என்ற புதிய நூலுக்கு நிலாந்தன் அவர்கள் எழுதியுள்ள பதிப்புரை

***

இந்நூலுக்குரிய முகப்பு அட்டையை வடிமைப்பதற்கு ஈழத் தமிழர்களின் ஆதி வேர்களைக் குறிக்கும் ஒரு தொல்லியல் சான்றின் ஒளிப்படத்தைப் பயன்படுத்துவதென்று முடிவெடுத்தோம்.

ஆனைக்கோட்டை அகழ்வாராட்சியில் கண்டெடுக்கப்பட்ட ஆனைக்கோட்டை முத்திரையின் ஒளிப்படத்தை பிரசுரிப்பது என்று தீர்மானித்தோம். இந்நோக்கத்தோடு ஆனைக்கோட்டை முத்திரையை தேடிச்சென்றபோது ஒரு விடயம் வெளிவந்தது. அம் முத்திரை எங்கே இருக்கிறது என்பது ஒரு மர்மமாகவே பேணப்படுகிறது. இலங்கைத்தீவின் தொல்லியல் துறை மத்திய அரசாங்கத்தின் கீழ் வருகிறது. எனவே தொல்லியல் சான்றுகளும் மத்திய அரசாங்கத்தின் கட்டுபாட்டுக்குள்தான் வரும். வல்லிபுரச்செப்பேட்டை இலங்கைத் தொல்லியல் துறை கையாண்ட விதம் காரணமாக ஆனைக்கோட்டை முத்திரையை இரகசியமாகப் பேணவேண்டிய ஒரு தேவை ஏற்பட்டதென்று தெரியவருகின்றது. அம்முத்திரையோடு கண்டெடுக்கப்பட்ட ஆனைக்கோட்டை மனிதனின் எலும்புக்கூட்டை போர்க்காலத்தில் பாதுகாக்க முடியாது போன ஒரு பின்னணியில் அம்முத்திரையைப் பாதுகாப்பது தொடர்பில் அதிகம் எச்சரிக்கையுணர்வோடு சிந்தித்திருக்கலாம்.

இது தொடர்பில் ஆகப்பிந்திய ஓர் உதாரணத்தை இங்கு குறிப்பிடலாம். அண்மையில் யாழ் நகரப்பகுதியில் அமைந்திருக்கும் விகாரையின் அதிபதி இறந்தபோது, அவரது உடலை நகரத்தின் முற்றவெளியில் தகனம் செய்வதற்கு படைத்தரப்பு முயற்சி செய்தது. யாழ் முற்றவெளியானது யாழ் கோட்டைக்கு அருகே அமைந்திருப்பதால் அது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றது. எனவே அங்கு யாருடைய உடலை தகனம் செய்வது, செய்யாது விடுவது என்று முடிவெடுக்கும் அதிகாரம் யாழ் நகரசபைக்கு இருக்கவில்லை. அதை மத்திய அரசாங்கமே தீர்மானித்தது. அதற்கெதிராக தமிழ்த்தரப்பு வழக்குத் தொடுத்தது. எனினும் வழக்கின் தீர்ப்பு அரசாங்கத்துக்கு சார்பாக அமைந்தது. பிக்குவின் உடல் முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வாறானதோர் அனுபவத்தின் பின்னணியில் தமது தொல்லியல் சான்றுகளை பாதுகாப்பதற்காக தமிழ் மக்கள் இப்பொழுதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. உலக சமுகம் இலங்கைத்தீவில் நிலைமாறுகால நீதியை ஸ்தாபிக்கப்போவதாகக் கூறிக்கொள்கிறது. எனினும்   சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத்தமிழர்கள் தமது ஆதிவேர்களை குறிக்கும் தொல்லியல் சான்றுகளை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு பயப்படும் ஒரு நிலையே தொடர்கிறது. அதாவது ஈழத்தமிழர்கள் தொடர்ந்தும் கட்டமைக்கப்பட்ட ஓர் இனப்படுகொலைக்கு உள்ளாகி வருகிறார்கள் என்று பொருள்.

அதே சமயம் மு. திருநாவுக்கரசு இந்நூலில் வரும் ஆசிரியர் குறிப்பில் பின்வருமாறு கூறுகிறார்.... 'இன-மத-மொழி-குழுவாத ஒடுக்குமுறையாளர்கள், ஆட்சியாளர்கள், அத்தகைய அதிகார வர்க்கத்தவர்கள், வெறும் நம்பிக்கைவாதிகள், மாறாவாத கோட்பாட்டாளர்கள், விசுவாசிகள், முற்கற்பிதம் கொண்டோர், வெறுப்புணர்வு கொண்டோர், காழ்ப்புணர்வு கொண்டோர் என பலதரப்பட்டவர்களும் தத்தம் நலன்களுக்குகேற்ப நீட்டும் கூரிய வாள்களுக்கு  மத்தியிற்தான் அரசியல், வரலாறு, பண்பாடு சார்ந்த சமூக விஞ்ஞான அறிவியல் பயணிக்க வேண்டியிருக்கிறது... எப்படியோ மேற்கூறப்பட்ட கூரிய வாள்களுக்கு மத்தியில் நெருப்பாற்றுக்கு ஊடாக அறிவியல் பயணிக்க வேண்டிய யதார்த்தம் உள்ளது. அத்தகைய யதார்த்தத்தை இந்நூல் கருத்திலெடுத்தே நகர வேண்டியுள்ளது. ஆதலால் யதார்த்தத்திற்கு முகங்கொடுத்து, ஆங்காங்கே வளைகோட்டில் பயணிக்க நேர்ந்ததாலும், சுயதணிக்கைக்கு உள்ளாக நேர்ந்ததாலும் சொல்லத் தவறிய விடயங்கள் உண்டு. அப்படி சொல்லத் தவறிய விடயங்கள் உண்டென்றாலும் சொல்லிய எவையும் தவறாகச் சொல்லப்படவில்லை.' 

இப்படியாக, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை, அகத்தணிக்கை ஆகிய இருதரப்பு நெருக்கடிகளுக்கும் மத்தியில் தான் ஈழத்தமிழர்களின் அறிவாராட்சித்துறை தன்னைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து எட்டாண்டுகள் ஆன பின்னரும் ஈழத்தமிழர்கள் தமது தோல்விகளைக் குறித்து போதியளவு பிரேத பரிசோதனை செய்யமுடியாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். செல்வச் செழிப்புமிக்க ஒரு டயாஸ்போராவை கொண்டிருந்த போதிலும் தமிழகம் என்ற பின்தளத்தைக் கொண்டிருந்த போதிலும். ஈழத்தமிழர்களால் இன்றளவும் இறந்த காலத்தை வெட்டித்திறந்து, அதிலிருந்து போதியளவு கற்றுக்கொள்ள முடியவில்லை.

<p>பொருத்தமானது எதுவோ அதுவே சரியானது</p>

இவ்வாறானதோர் அகப்புறச்சூழலுக்குள்தான் மு.திருநாவுக்கரசுவின் இந்நூல் வெளிவருகிறது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கான அறிவியல் பங்களிப்பு என்று பார்த்தால் மு.தி. பின்வரும் காரணங்களுக்காக முதன்மையானவர் தனித்துவமானவர்.

1.1980 இல் இருந்து தொடர்ச்சியறாமல் எழுதி வரும் ஒருவர் அவர். தனது எழுத்துக்களுக்காக இரண்டு தடவைகளுக்கு மேல் அஞ்ஞாதவாசம் இருந்திருக்கிறார். அக்காலகட்டங்களிலும் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை.

2. சுமார் 3 தசாப்தங்களுக்கு மேலாக, ஒப்பிட்டளவில் அதிக நூல்களையும், கட்டுரைகளையும், சிறு பிரசுரங்களையும், உட்சுற்று வாசிப்புக்கான  கொள்கை ஆய்வுக் கட்டுரைகளையும், மூலோபாய ஆய்வுக்கட்டுரைகளையும், தந்திரோபாய ஆய்வுக்கட்டுரைகளையும் அதிகம் எழுதியவர் அவரே. 

3. அவர், எந்தவோர் ஆயுத போராட்ட இயக்கத்திலும் உறுப்பினராக இருந்ததில்லை. ஆயுதம் ஏந்திய நடவடிக்கைகள் எதிலும் சம்பந்தப்பட்டதில்லை. ஆனால் தனது மக்களின் விடுதலைக்காக தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

4. பேராசிரியர் அனஸ் கூறுவது போல அவரிடம் எப்பொழுதும் முழு உலகுதழுவிய ஒரு பார்வை இருக்கும். பூகோளவாதத்தையும் உலக மையமாதலையும் தேசியவாதத்தையும் புவிசார் அரசியலையும் அவர் அந்த உலகளாவிய நோக்குநிலையிலிருந்தே பார்ப்பார்.

5. அவருடைய எழுத்திலிருந்து அவருடைய வாழ்கையை பிரிக்கமுடியாது. அவருடைய அறிவிலிருந்து அவருடைய அரசியலைப் பிரிக்கமுடியாது. அவருடைய சொல் வேறு செயல் வேறு அல்ல. அதனால்தான் அவர் அதிகம் இழக்கவும் துறக்கவும் வேண்டி வந்தது. இரண்டு தடவைகளுக்கு மேல் அஞ்ஞாதவாசம் புகவேண்டி வந்தது. அவருக்கென்று ஓர் நிரந்தர தொழிலில்லை. வசிப்பிடமில்லை. அறிவாராய்ச்சி என்பது அவரைப் பொறுத்தவரை ஒரு தொழிலல்ல. ஒரு வாழ்க்கை முறை. அதன் பொருட்டாக ஈழத்தமிழ்ப் பரப்பில் அதிகம் இழந்த, துறந்த ஒரே புலமைச்செயற்பாட்டாளர் அவர்தான். அவருடைய தாயார் மரணப்படுக்கையிலிருந்தபோதும், இறந்தபோதும் இவரால் அவரைத் தரிசிக்க முடியவில்லை.

6. ஈழத்தமிழர்களின் புவிசார் அமைவிடம் தொடர்பாகவும் அவர்களுக்குள்ள புவிசார் கேந்திர முக்கியத்துவம் தொடர்பாகவும் அதிகம்  ஆராய்ந்திருப்பவர் அவர்தான்.

இது அவருடைய இரண்டாவது அஞ்ஞாதவாச காலத்தில் வெளிவரும்  இரண்டாவது நூலாகும். இது பொது வாசிப்பிற்குரியது எனினும் வரலாறு, பொருளாதாரம், அரசியல் விஞ்ஞானம், தத்துவம், புவிசார் அரசியல் போன்ற பல துறைசார் ஒழுக்கங்களின் கூட்டு ஒழுக்கமாக இந்நூல் காணப்படுகின்றது. அவரிடமுள்ள பிரபஞ்ஞப் பார்வையே அவருடை கூட்டு ஒழுக்கத்திற்கும், முழுமையாக்கப்பட்ட (Holistic) பார்வைக்கும் அடித்தளமாகும்.

வரலாறுதான் அவருடைய அடிப்படை ஒழுக்கம். வரலாறை அவர் எப்பொழுதும் 'புறவளமாக பார்ப்பதில்லை, உள்வளமாகவே பார்ப்பார்'. நீரில் அசையாது மிதந்து கொண்டிருக்கும் ஒரு வாத்தை அவர் நீருக்கடியில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கும் அதன் கால்களுக்கூடாகவே வியாக்கியானம் செய்வார். இவ்வாறு வரலாற்றை அதன் உள்ளோட்டங்களுக்கூடாக அவர் வாசிக்கும் பொழுது அது ஒரு கணிதமாக மாறும். நன்கு திட்டமிட்டு எழுதப்பட்ட சுவாரஸ்யமான ஒரு நாடக எழுத்துருபோல எம் முன் விரியும். இந்நூலிலும் அவர் மனித வரலாற்றை அதன் முழுநீளத்திற்கும் ஆங்காங்கே தொட்டுச் செல்கிறார். வரலாற்றை, அரசியல் பொருளாதாரத்தை, புவிசார் அரசியலை - எல்லாவற்றையும் அவற்றுக்கேயான கட்டமைப்புக்களுக்கூடாக ஆராயும் அவர் தன்னுடையது கட்டமைப்பு சார் (Structural analysis) ஆய்வு ஒழுக்கம் என்று கூறுகிறார்.

வரலாறே அவருடைய அடிப்படை ஒழுக்கம் என்ற போதிலும் ஒரு புவிசார் அரசியல் ஆய்வாளராகவே அவர் அதிகம் கவனிப்பைப் பெற்றார். 1980 களின் முற்கூறிலிருந்து தொடங்கி ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை அதன் புவிசார் அரசியல் யதார்த்தத்திற்கூடாக அதிகம் வாசித்தவர் அவர்தான் எனலாம். 'இந்தியா ஒரு நாள் ஈழப்போராட்டத்தை தத்தெடுக்கப் பார்க்கும்' என்று அவர் இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு முன்னரே எழுதியிருந்தார்

நாலாம் கட்ட ஈழப்போர் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்னதாக அவர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் 'புரிந்துணர்வு உடன்படிக்கை முறிந்து யுத்தம் வெடிக்குமிடத்து காணப்படும் சர்வதேசச் சூழலின் கீழ் இந்துமா சமுத்திரம் ரத்த சமுத்திரமாக மாறக் கூடிய பேராபத்து உண்டு' என்று கூறினார். புரிந்துணர்வு உடன்படிக்கையை பாதுகாத்தால்தான் போராட்டத்தை, மக்களை, போராட்ட அமைப்பை பாதுகாக்கலாம் என்றும் வழியுறுத்தினார். பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் நலன்களுக்கும் தேவைகளுக்கும் யுத்தம் ஒரு தெரிவாகக் காணப்படுவதை விளங்கப்படுத்தி, அவ்வாறு ஒரு யுத்தம் வெடிக்குமிடத்து அது ஒரு பேரழிவாக முடியும் என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசியும் எழுதியும் வந்தார்.

இதே கருத்தை போர் தொடங்கிய பின் கிளிநொச்சி நுண்கலைக் கல்லூரியில் வைத்தும் கூறினார். 2007 யூன் 01ஆம் திகதி யாழ் நூலக எரிப்பை நினைவு கூர்ந்து ஒரு கருத்தரங்கு கிளிநொச்சி நுண்கலைக் கல்லூரியில் இடம்பெற்றது. இதில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதிகம் அதிர்வை ஏற்படுத்திய அந்த உரையில் அவர் புரிந்துணர்வு உடன்படிக்கை பாதுகாக்கப்படாவிட்டால் அந்த மண்டபத்தில்  அமர்ந்திருந்தோரில் எவருமே உயிருடன் தப்புவதற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாக இருக்கும் என்று கூறினார். அத்தகைய ஒரு பின்னணியில் யுத்தத்தில்.... 'இனி வென்றாலும் தோல்விதான் தோற்றாலும் தோல்விதான்' என்றும் 'பேரழிவைத் தவிர்ப்பதற்கும் கையிலிருப்பவற்றை பாதுகாப்பதற்கும் உடனடி யுத்த நிறுத்தம் அவசியம்' என்றும் கூறினார்.

ஈழப்போர்க்களத்தில் அவருடைய எழுத்துக்களையும் அரசியல் தீர்மானங்களையும் அவற்றின் விளைவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் ஒருவர் புவிசார் அரசியல் பரப்பில் அவருடைய தீர்க்கதரிசனங்களை விளங்கிக்கொள்ளலாம். தனது புவிசார் அரசியல் ஆராய்ச்சிகளுக்கூடாக அவர் முன்னுணரும் பல விடயங்கள் முதலில் கற்பனையோ என்று கருதத்தோன்றும். அவ்வாறு கருதிய பலரும் அவரை விமர்சித்தும் இருக்கின்றார்கள். ஆனால் வரலாறு அவருடைய எழுத்தைப் பெரும்பாலும் நிரூபித்தே வந்துள்ளது.

இந்நூலிலும் அவர் ஒரு வரலாற்றியளாளராகவும் புவிசார் அரசியல் விற்பன்னராகவும் மிளிரக்காணலாம். வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் புவிசார் அரசியலை அவர் ஒரு பிரயோக விஞ்ஞானமாகவே வாசித்துச் செல்கின்றார். அதிலும் குறிப்பாக அதை பொருத்தமான பிரயோக விஞ்ஞானமாக முன்வைக்கிறார்.

'இந்நூல் தூய சரி பற்றிப் பேசாமல் காலம், இடம், சூழல் என்பனவற்றிற்குப் பொருத்தமான வகையில் எது பொருத்தமானதோ அதையே சரியென்று கூறிப் பயணிக்கின்றது. சட்டை போட வேண்டும் என்பது சரி என்பதற்காக 3 வயதுப் பிள்ளைக்கு 30 வயது நபரின் சட்டையைப் போடமுடியாது. அப்படியே 30 வயது நபருக்கு 3 வயதுப் பிள்ளையின் சட்டையைப் போடமுடியாது. அதாவது பொருத்தமானது எதுவோ அதுவே சரியானது. இத்தகைய நிலைப்பாட்டைக் கொண்ட கருத்தியலையே இந்நூல் முன்னெடுத்துச் செல்கிறது. பொருந்தாத சரியென்பது எல்லாம் பிழையானது. அது வெறும் கற்பனாவாதமாகவும், தூய்மைவாதமாகவுமே அமையமுடியும். இந்த வகையில் அனைத்துவகை கற்பனாவாதிகளும், தூய்மைவாதிகளும் இறுதி அர்த்தத்தில் எதிரியின் சேவகர்களாவர் என்பதே இந்நூலின் நிலைப்பாடாகும்' என்று மு.தி. தன்னுடைய ஆசிரியர் குறிப்பில் கூறுகிறார்.

இவ்வாறு அவர் பொருத்தமென்று கருதிய தந்திரோபாய மற்றும் புவிசார் ஆய்வுக்கட்டுரைகள் பலவற்றைக் காலத்துக்குக் காலம், கொள்கை முடிவுகளை எடுக்க வல்ல அதிகாரத்தோடு காணப்பட்ட தரப்புக்களுக்கு அவ்வப்போது வழங்கியிருக்கிறார், உட்சுற்று வாசிப்பிற்கும் விட்டிருக்கிறார்.

2010 ஆம் ஆண்டு அவர் பொங்குதமிழ் இணையத்தளத்தில் ஜனாதிபதித் தேர்தலையொட்டி ஒரு கட்டுரை எழுதினார். தனபாலசிங்கம் என்னும் பெயரில் அக்கட்டுரை எழுதப்பட்டது. தமிழ் மக்கள் தமது தரப்பிலிருந்து ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அவர் அதில் கேட்டிருந்தார். அவ்வாறு நிறுத்துமிடத்து, இரண்டு தென்னிலங்கை மைய வேட்பாளர்களும் 50 விகிதத்திற்கு மேலான வாக்குகளைப் பெறுவது கடினமாக இருக்கும்.  ஏனெனில் தமிழ்மக்களின் பெரும்பாலன முதலாவது விருப்பத்தெரிவு வாக்குகள் தமிழ் வேட்பாளருக்கே விழும். அப்பொழுது அரசுத் தலைவரைத் தெரிந்தெடுப்பதற்காக இரண்டாவது சுற்று வாக்குக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியிருக்கும். அப்பொழுது தமிழ் மக்கள் தமது இரண்டாவது விருப்பத்தெரிவு வாக்கை எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கு அளிக்கிறார்களோ அவரே வெல்ல முடியும். எனவே யாருக்கு இரண்டாவது விருப்பத்தெரிவை அளிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தலைமைகள் சிங்களத் தலைமைகளோடு பேரம் பேசலாம். அதன் மூலம் யார் அரசுத்தலைவராக வருவதென்பதை தமிழ் மக்களே அதிகபட்சமாக தீர்மானிக்கலாம் என்று மு.தி. எழுதினார்.

அக்கட்டுரையை தமிழ் தலைவர்களில் எத்தனைபேர் வாசித்திருப்பார்களோ தெரியவில்லை. ஆனால் துயரம் என்னவென்றால் அதே கட்டுரையை சிறு மாற்றங்களோடு அதே இணையத்தளத்தில், ஆனால் வேறு ஒரு பெயரில் 2015 ஆம் ஆண்டும் அவர் எழுதினார் என்பதுதான். இது தொடர்பாக நோர்வேயில் வசிக்கும் ஒரு தமிழ்ப்புலமையாளர் அவரிடம் கேட்டபோது, அதற்கு அவர் சொன்னாராம் 'என்ன செய்வது ஐந்து ஆண்டுகளின் பின்னரும் ஈழத்தமிழர்களின் அரசியல் அப்படியேதானே இருக்கிறது' என்று

இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் யாப்புருவாக்க முயற்சிகள் வெற்றிபெறத் தவறின் மறுபடியும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் 2020 இலோ 2021 இலோ தமிழ் மக்களின் முன் வந்து நிற்கும். அப்பொழுதும் மு.திருநாவுக்கரசு அதே கட்டுரையை திரும்பவும் எழுதவேண்டியிருக்குமா?

திருநாவுக்கரசுகள் தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் அரசியலோ தன்போக்கில் அப்படியே போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் அரசியலும் தமிழ் அறிவியலும் ஒன்று மற்றதிலிருந்து பிரிக்கப்படவியலாத ஓரு பிணைப்பை எப்பொழுது அடையப்போகின்றன? தமிழ் நிதியும் தமிழ் அறிவும் இணைந்து ஆராய்ச்சி மையங்களையும், சிந்தனை குழாம்களையும் எப்பொழுது கட்டியெழுப்பப்  போகின்றன? ஆயுதப் போராட்டக் காலகட்டத்திலும் தமிழ்மக்களிடம் சிந்தனைக் குழாம்கள் இருக்கவில்லை. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரும் மிதவாத அரசியல் களத்திலும் சிந்தனைக்குழாம்கள் போதியளவு தோன்றவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நவிப்பிள்ளை அம்மையார் கனடாவில் யோர்க் பல்கலைக்கழகத்தில் பேசியபோது, 'தமிழ் மக்கள் தமது அரசியலை அறிவியல்மயப்படுத்தத் தவறிவிட்டார்கள்' என்று கூறியிருக்கிறார். தமிழ் அரசியலை இயன்றளவுக்கு அறிவியல்மயப்படுத்தும் நோக்கத்தோடு இந்நூல் முன்வைக்கப்படுகின்றது. இது திருநாவுக்கரசுவினது நரேற்றிவ். இது போல மேலும் பல நரேற்றிவ்கள் வரவேண்டும்.

ஒரு வெடிகுண்டுத் தாக்குதலுக்கு வெடி மருந்து வாங்க காசு கேட்டால் அள்ளிக் கொடுக்க பல கைகள் உண்டு. ஆனால் அறிவாராய்ச்சி மையத்திற்கோ அல்லது சிந்தனைக்குழாத்திற்கோ காசை அள்ளிவழங்க எத்தனைபேர் உண்டு? அல்ஜசீராவைப் போல ஓர் இருமொழி ஊடகத்தை ஏன் தமிழர்களால் கட்டியெழுப்ப முடியவில்லை? தமிழ் கோப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் தமிழ் ஊடகங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அடையாளம்  என்ற கொள்கை ஆய்வு மையத்தை ஒரு நல்ல தொடக்கமாக கூறலாம். அது போல பல கொள்கை ஆய்வு மையங்கள் குறிப்பாக புவிசார் அரசியலைக் குறித்து பொருத்தமான முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான தந்திரோபாய ஆய்வு மையங்கள் தாயகத்திலும் தமிழகத்திலும், தமிழ் டயஸ்போராவிலும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

மு.தி அடிக்கடி கூறுவார் 'ஈழத்தமிழர்களின் பேரம் எனப்படுவது அவர்களுடைய புவிசார் அரசியல் அமைவிடம் தான்' என்று. ஆனைக்கோட்டை மனிதனின் எலும்புக்கூட்டையும் விட்டுவைக்காத ஒரு பேரரசின் பலப்பிரயோக வீச்செல்லைக்குள் வாழும் மிகச்சிறிய மக்கள் கூட்டமே ஈழத்தமிழர்கள். ஆனைக்கோட்டை மனிதனோடு கண்டெடுக்கப்பட்ட ஆனைக்கோட்டை முத்திரையானது ஈழத் தமிழர்களின் வேர்களை சிந்துச் சமவெளியுடன் தொடுக்கிறது. ஒரு உபகண்டப் பண்பாட்டின் படர்சியாகக் காணப்படும், மிகச் சிறிய ஈழத்தமிழர்களின் ஆதி மனிதனின் எலும்புக்கூட்டை அதே உபகண்டப் பண்பாட்டைப் பகிரும் ஒரு பிராந்தியப் பேரரசு சிதைத்தழித்திருக்கிறது.  

எனவே பொருத்தமான புவிசார் அரசியலைக் குறித்து ஈழத் தமிழர்கள் மேலும் ஆழமாக உரையாட வேண்டும். அரை நூற்றாண்டுக்கும் மேலான பகைப் பிராந்திய யதார்த்தத்துள் ஈழத்தமிழ் அரசியல் சிக்குண்டிருக்கிறது. இச்சிக்கினை அவிழ்க்கத் தேவையான ஆய்வுப் பரப்பினை அகட்டவும் ஆழப்படுத்தவும் இது போன்ற நூல்கள் அவசியம். தமது அரசியலை இயன்றளவுக்கு அறிவியல்மயப்படுத்தும் போதே ஈழத்தழிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கான வழிகளும் வெளிக்கும்.

தை - 2018

2/17/2018 1:10:17 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்