Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அகச் சுயநிர்ணய உரிமையின் போலித்தனம்

<p>அகச் சுயநிர்ணய உரிமையின் போலித்தனம்</p>
தத்தர்

 

'உள்ளக சுயநிர்ணய உரிமை' என்று ஒரு நியாயப்படுத்தப்பட்ட அரசியல் கோட்பாட்டை தமிழ்த் தலைவர்கள் இப்போது கூறிவருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தகைய உள்ளக சுயநிர்ணய உரிமை பற்றி தேர்தல் காலங்களில் மிகவும் பரவலாக பேசிவந்தது. தற்போது அவர்கள் அதைக்கூட கைவிட்டுவிட்டாலும் இடையிடையே அதைப்பற்றிப் பேசுவது தொடர்கிறது. இந்நிலையில் உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற இக்கோட்பாட்டைப் பற்றி நாம் இங்கு விரிவாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

ஆங்கிலத்தில் Internal Self-determination ' என்று கூறப்படும் பதத்தை தமிழில் 'உள்ளக சுயநிர்ணய உரிமை' என்றும் 'அகச்சுயநிர்ணய உரிமை' என்றும் இருபதங்களாலும் அழைக்கும் நிலை உண்டு. 'அகம்' 'உள்' என்பன ஒரே அர்த்ததையே குறிக்கும். ஆதலால் உள்ளகம் என்று ஒரு சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமானதல்ல. நடுமையம், செக்கச் சிவந்தது என்று ஒரு பொருள்படும் சொல்லை இருமுறை இணைத்து அழைப்பதன் மூலம் அதற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு பழக்கம் தமிழ்ச் சொல் பிரயோகத்தில் உண்டு. ஆயினும் இங்கு இது ஒரு அரச அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப சொல் என்ற வகையில் இதற்கு ஒரு பொருள் கொள்ளும் இருசொல் இணைப்பு அவசியமில்லை.

ஆதலால் இக்கட்டுரையில் அகச்சுயநிர்ணய உரிமை என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் ' Internal ' என்பது 'அகம்' என்றும், 'external' என்பது 'புறம்' என்றும் பொருள் கொள்ளப்படும். தொழில்நுட்ப அர்த்தத்தில் இங்கு 'அகச்சுயநிர்ணய உரிமை' என்ற பதம் கருத்தில் கொள்ளப்படுகிறது.

‘Right of self-determination’என்பது வரலாற்று ரீதியாக தோன்றிய பிரிந்து செல்வதற்கான உரிமையுடன் கூடிய ஒரு பதமாகும். அதாவது பிரிந்து செல்வதற்கான உரிமையுடன் கூடிய இந்த சுயநிர்ண உரிமைக் கோட்பாடானது குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய சூழலில் முதன்மை பெற்றது. கிழக்கு ஐரோப்பாவில் மிகச் சிக்கலான பல்லினத்தன்மை கொண்ட அரசுகள் உள்ளன. குறிப்பாக ரஷ்ய பேரரசில் 100க்கும் குறையாத தேசிய, தேசிய சிறுபான்மையினங்கள் காணப்பட்டன. இந்நிலையில் அங்கு தேசிய யுகத்தில் இனப்பிரச்சனை என்பது ஒரு பூதாகரமான விடயமாக தலையெடுத்தது. ஆதலால் தேசிய இனங்கள் பற்றிய கோட்பாடு அங்கு பெரிதும் தோன்றுவதற்கான புறச்சூழல் காணப்பட்டது.

இயந்திர தொழில் வளர்ச்சியடைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஜனநாயக இயக்கங்களும் தேசிய இயக்கங்களும் பெரிதும் எழுந்தன. இந்நிலையில் அங்கு பலதேசிய இனங்களைக் கொண்ட அரசுகள் காணப்பட்ட இடங்களில் தேசிய இனப்பிரச்சனை பற்றிய ஜனநாயக ரீதியான சிந்தனையும், முன்னுதாரணங்களும் முதலில் எழுந்தன. ஆனாலும் அங்கு பல்லினத்தன்மை கொண்ட சிக்கல்வாய்ந்த அரசுகள் பெரிதும் காணப்படவில்லை.

சுவிட்சர்லாந்திலும், சுவீடனிலும், பிரித்தானியாவிலும் பல்லினத்தன்மை கொண்ட அரசுகள் காணப்பட்டன. இந்நிலையில் பிரிந்து செல்வதற்கான தேசிய இனப் போராட்டங்கள் இந்நாடுகளில் முதலில் எழுந்தன. அங்கு சுவிட்சர்லாந்து இலகுவாக பல்லினங்களை Canton systemத்தின் மூலம் ஒருங்கிணைத்துக் கொண்டது. ஆனால் சுவீடனில் இருந்து நோர்வே பிரிந்து செல்ல விரும்பியது. இவ்விருப்பமானது அங்கு இலகுவாக பொதுவாக்கெடுப்பின் மூலம் தீர்விற்கு உள்ளானது. இதன் மூலம் 'பொதுவாக்கெடுப்பின் வாயிலாக பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை' என்ற சுயநிர்ணய உரிமை கோட்பாடு நடைமுறையில் உருப்பெற்றது.

இதைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இதன் முன்னுதாரணம் பேசப்படலாயிற்று. குறிப்பாக ரஷ்யாவில் சோசலிச புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அங்கு மேற்படி நோர்வே பிரிந்து சென்ற உதாரணத்திற்கு அமைய தேசிய இனங்களின் பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணய உரிமை என்பது கோட்பாட்டு வடிவம் பெறலாயிற்று. சுவிடனில் மேற்படி பிரிந்து செல்லும் நிலை நடைமுறை ரீதியாக தோன்றிய போதிலும் அங்கு அது ஒரு கோட்பாட்டு வடிவத்தை பெறவில்லை. ஆனால் நோர்வே பிரிந்து சென்றதான முன்னுதாரணம் கிழக்கு ஐரோப்பாவில் ஒரு கோட்பாடாக வடிவம் பெற ஏதுவாக அமைந்தது.

ஆரம்பத்தில் சுயநிர்ண உரிமை கோட்பாடு என்பது அரசு சார்ந்த கோட்பாடாக காணப்பட்டது. ஓர் அரசிற்கு இருக்கக்கூடிய அல்லது ஒரு நாட்டிற்கு இருக்கக்கூடிய சுயநிர்ணயத்தையே அது கருத்தில் கொண்டிருந்தது. 1919ஆம் ஆண்டு உருவான சர்வதேச சங்கத்தில் (League of Nations) சுயநிர்ணய உரிமை கோட்பாடு ஒரு முக்கிய அடிப்படையாக வரையறுக்கப்பட்ட போதிலும் அது அரசுகளின் அல்லது நாடுகளின் சுயநிர்ணய உரிமையைத்தான் குறித்து நின்றதே தவிர, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையல்ல. ஆனால் ரஷ்யாவில் உருவான சோசலிச புரட்சியின் போதுதான் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது வரையறுக்கப்பட்டு பின்நாட்களில் அது ஒரு முக்கிய கோட்பாடாக அரசியலில் பிரயோகிக்கப்படலாயிற்று.

<p>அகச் சுயநிர்ணய உரிமையின் போலித்தனம்</p>

இது பொதுவாக ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் சுதந்திரத்தின் பின்னான காலகட்டத்தில் பல்தேசிய இனங்களைக் கொண்ட அரசுகளாக காணப்பட்ட நாடுகளில் முதன்மை பெறலாயிற்று. ஆயினும் ஐரோப்பிய நாடான பிரித்தானியாவிலும், வடஅமெரிக்க நாடான கனடாவிலும் இக்கோட்பாட்டின் அடிப்படையில் தேசிய இனங்கள் தம் உரிமைகளை வலியுறுத்திப் போராடின. பிரித்தானியாவில் இதன் அடிப்படையில் அயர்லாந்து பிரிந்து சென்றது. அத்துடன் இக்கோட்பாட்டின் அடிப்படையில் ஸ்காட்லாந்தும் போராட தலைப்பட்டது. அவ்வாறே கனடாவில் பிரன்சு இனத்தவர்களைக் கொண்ட கியூபெக் மாநிலமும் இவ்வுரிமையின் அடிப்படையில் போராடத் தொடங்கின. மேலும் ஸ்பெயினிலும் இவ்வாறான நிலைமைகள் தோன்றின.

ஆனாலும் கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளிற்தான் இதற்கான தேவை அதிகம் முனைப்பு பெற்றது. ஆனால் ஆசிய நாடுகளில் இக்கோட்பாடு மேற்குல நாடுகளின் நலன்களுக்கு பொருத்தமாக அரசியலை கையாள தடையாக இருந்தது. புதிதாக விடுதலை அடைந்த ஆசிய நாடுகளில் அரசியல் குழப்ப நிலைகள் மலிந்திருந்ததால் அந்த நாடுகளை அக்குழப்பங்களைப் பயன்படுத்தி தமது நலன்களுக்கு இசைவாக செயற்பட வைக்க மேற்குலகம் விரும்பியது. இந்நிலையில் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை பிரிந்து செல்வதற்கான உரிமையுடன் அப்படியே தக்கவைத்திருப்பது தமது நலன்களுக்கான கையாளல்களுக்கு இடையூறாகக் காணப்பட்டதை மேற்குலம் உணர்ந்து கொண்டது. இந்நிலையில் 'அகச்சுயநிர்ணய உரிமை' என்ற ஒரு உபபிரிவை சுயநிர்ணய உரிமையில் தோற்றுவித்தனர்.

சுயநிர்ணய உரிமை என்றாலே தமக்கு என்ன வேண்டும் என்பதை தாமே நிர்ணயிப்பதற்கான உரிமையாகும். ஆனால் பிரிந்து செல்ல முடியாது என்ற கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு பேசத்தக்க ஒரு சுயநிர்ணய உரிமையை மேற்குலம் வடிவமைத்தது. அதுவே Internal self-determination எனப்படும் அகச்சுயநிர்ணய உரிமையாகும்.

மேற்குலம் தனது ஆதிக்க நலன்களுக்கு ஏற்ப கிழக்கு ஐரோப்பாவை குறிப்பாக சோவியத் ரஷ்யாவை கையாள்வதற்குப் பொருத்தமாக பிரிந்து செல்வதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையைப் பிரயோகித்துள்ளது. ஆனால் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தமக்குச் சாதகமான அரசுகளில் அல்லது நாடுகளில் இனப்பிரச்சனைகள் தலையெடுத்து அங்கு பிரிந்து செல்லும் போராட்டங்கள் எழும் போது அவற்றை தமது நட்பு நாடுகளின் நலன்களுக்கு ஏற்ப கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பாக அகச் சுயநிர்ணய உரிமை என்ற ஒரு திரிபுபடுத்தப்பட்ட சுயநிர்ணய உரிமை கோட்பாட்டை வடிவமைத்தனர்.

இந்நிலையில் 'அகச்சுயநிர்ணய உரிமை' கோட்பாடு என்பதற்குப் பின்னால் ஓர் ஆழமான உள்நோக்கம் கொண்ட வரலாற்றுப் பின்னணி உண்டு. ஆயினும் பனிப்போரின் பின்னான காலத்திலும் பனிப்போரின் பின்பின்னான காலத்திலுந்தான் அதிகளவிலான தேசிய இனங்கள் பிரிந்து சென்ற வரலாறு நடைமுறையாகக் காணப்படுகிறது. குறிப்பாக பனிப்போர் முடிந்ததன் பின்னான 1990ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை 23 தேசிய இனங்கள் பிரிந்து சென்று சுதந்திர அரசுகளை மேற்படி பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை கோட்பாட்டின் அடிப்படையில் அமைத்துள்ளன.

எனவே எப்படியோ நடைமுறையில் பிரிந்து செல்வதுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு பலமாக உள்ளதை கடந்த கால்நூற்றாண்டுகால வரலாறு நிரூபித்து நிற்கின்றது. ஆயினும் தமக்கு வசதியான நாடுகளின் அரசுகளைக் காப்பாற்றுவதற்காக மேற்படி அகச்சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசும் ஒரு ஒடுக்குமுறைக் கோட்பாடு சுயநிர்ணய உரிமை கோட்பாட்டில் திரிபுபடுத்தப்பட்ட வகையில் வசதிக்கேற்ப பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதே இங்கு கவலைக்குரிய உண்மையாகும்.

12/21/2017 9:36:29 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்