Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

எர்னஸ்டோ சே குவேரா: மோட்டார் சைக்கிள் டயரி - 2

எர்னஸ்டோ சே குவேரா: மோட்டார் சைக்கிள் டயரி - 2
யமுனா ராஜேந்திரன்

 

சே குவேரா: சுதந்திரன் மற்றும் நிரந்தரன் - தொடர் 7

சேகுவேரா பற்றியதும் பல்வேறு புரட்சிக்காரர்கள் பற்றியதுமான பிரச்சனை என்பதால் இதைச் சுற்றியிருக்கும் பிரமைகளை உடைப்பது இக்காலத்தில் தேவை என்று நினைக்க தோன்றுகிறது. போல் ஜோன்சன் எழுதிய Intellectuals எனும் புத்தகம் Panny Forester imusen Sutton தொகுத்த Daughters of de Beavoir புத்தகம், கார்ல் மார்க்ஸ் பற்றிய Encounter கட்டுரை, றோஸா லாக்ஸம்பர்க் பற்றி வந்திருக்கும் Letters of Rosa Luxamburg மாவோ நூற்றாண்டையொட்டி பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் திரையிடப்பட்ட, புத்தகமாக வெளிவந்த மாவோவின் அந்தரங்க மருத்துவரின் மாவோ பற்றிய நினைவுகள் போன்றவற்றைப் பற்றி இங்கு குறிப்பிடலாம். போல் ஜோன்சனின் புத்தகம் ரூஸோ தொடங்கி செல்லி, கார்ல் மாக்ஸ், இப்சன், டால்ஸ்டாய், ஹெமிங்வே, பெர்டோல்ட் பிரெக்ட், பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், சார்த்தர், வில்சன், விக்டர் கோலானஸ், லிலியன் ஹெல்மன் எனச் சென்று நோம்சாம்ஸ்தி நோர்மன் மெயிலர் வரை போகிறது.

கத்தோலிக்க அறவியல் அடிப்படையில் பாலுறவு, குடும்பப் பொறுப்பு, கற்பு, சுத்தம், உண்மை பேசல் போன்றவற்றின் அடிப்படையில் மேலே குறிப்பிட்ட அறிவாளிகளின் சீரழிவு, ஒழுக்கக்குறைவு, பொறுப்பின்மை பற்றிப் பேசுகிறது. ஜோன்சனின் இப்புத்தகம் முழுக்கவும், இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள் மீதான தாக்குதலாகவே எழுந்தது. இதே போல் ஜோன்சன், அன்னை தெரேசா பற்றிய தொலைக்காட்சிப்பட விவாதங்கள் பற்றிய christoper hitchens சந்தர்ப்பத்தில் மிகக் கேவலமான வசைகளுடன் இறங்குகிறார். கிச்சின்ஸ் தனது தொலைக்காட்சிப் படத்தில் தெரேசாவின் மேற்குலக, ஏகாதிபத்திய, மனித உரிமை மீறல் சார்பு அரசியலை விமர்சித்திருந்தார். போல் ஜோன்சன் தனது பத்திரிகைக் கட்டுரை ஒன்றில் தெரேசாவை சமப்பாலுறவாளர் என கிச்சின்ஸ் சொல்கிறார் என வசை பாடியிருந்தார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கிச்சின்ஸ் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ அல்லது அது பின்னர் கட்டுரையாகப் பிரசுரிக்கப்பட்டபோதோ அத்தகைய அவதூறு எதனையும் செய்யவில்லை.

போல் ஜோன்சன் தனது மதம் சார்ந்த மனிதர்களை எவராவது விமர்சித்தார்களானால் மிகக் கேவலமான வசையில் இறங்குகிறார். அதே சமயம் இடதுசாரிகளின் சொந்த வாழ்வை கேவலமானது என சித்தரிக்கும்போது, கிறிஸ்துவ மத அறவியல்வாதியாக மாறிவிடுகிறார். இதே புத்தகத்தில் வரும் சார்த்தர் பற்றிய செய்திகள் தான் மாறுபட்ட வடிவத்தில் Daughters of de Beavoir  புத்தகத்தில் வருகிறது. சார்த்தருக்கு இருந்த பல பெண்களின் தொடர்பு, பூவாவைச் சித்திரவதை செய்தமை, சார்த்தருக்காக பூவா தன்னைக் காதலித்தவரை மறுத்தமை என விடயங்கள் வருகின்றன.

கார்ல் மாக்ஸ் அசுத்தக்காரன். வேலைக்காரியோடு பெற்ற மகனை கடைசி வரை பார்க்காது உதாசீனப்படுத்தியவர் என்ற விமர்சனம் போல் ஜோன்சனுடையது. மிகக் கொச்சையான இவ் விமர்சனம் நிராகரிக்கத்தக்கது. கார்ல் மாக்ஸ் தனது மகனை மறுத்தது மட்டுமல்ல, ஹெலன் டெமூத் உறவை மறுத்தது மட்டுமல்ல, பொறுப்பை ஏங்கெல்சை ஏற்கச் செய்தார். Encounter கட்டுரை எலியனார் மார்க்ஸ் வரலாறு, Friends of highgate cemetry வெளியிட்ட மார்க்ஸ் பற்றிய பிரசுரம் முன்வைக்கும் வரலாற்று உண்மை இது. இது மனத்தடையற்று, ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை. றோசா லக்சம்பர்க் பற்றியும் இத்தகைய விமர்சனம் உண்டு. தன்னை விடவும் மிக இளைய வயதுடைய கிளாரா ஜெட்கினின் புதல்வரோடு கொண்ட உறவு பிரச்னைக்குரியதாகிறது. மாவோ பெண்களை மதிக்கச் சொன்னார் என புனிதப்படுத்தப்படுகிறது. மாவோ தனது அதிகாரத்தின் கீழ் பெண்களைப் பாவித்தார் என்கிறார் அவரது மருத்துவர்.

வலதுசாரிகள், மதவாதிகள், ஒழுக்கவாதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதல்ல பிரச்னை. இடதுசாரிகள் மற்றும் மார்க்சீயவாதிகள் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தான். வலதுசாரிகள் கேவலமாக வசைபாடுகிறபோது இவர்கள் அதிர்ச்சியுறுகிறார்கள். நாம் உருவாக்கி வைத்த புனிதம் கறைபட்டுப் போய் விடுவது போல கோபம் கொள்கிறார்கள். அத்தகைய சம்பவங்கள் எதுமே நடக்கவில்லை என்று பூசி மெழுகி அறத்தை, ஒழுக்கத்தை நிலைநாட்டுகிறார்கள். தமது கட்சிக்குள்ளேயே தமது அரசியல் எதிரிகள் என்று கருதுபவர்களை ஓரங்கட்ட இத்தகைய சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறார்கள். காந்தி தனது சத்திய சோதனையில் மிக நேர்மையாக பாலுறவு தொடர்பாக எழுதி வைத்த விடயத்தை அரசியலாக்கி, கொச்சைப்படுத்துகிறார்கள். இதே மாதிரியான கொச்சை நிலைப்பாட்டைத்தான் நேரு-மவுன்பேட்டன் மனைவி உறவு தொடர்பாக எம்.ஒ.மத்தாய் புத்தகம் எழுதி பணம் சேர்க்கப் பயன்படுத்தினார்.

சே குவேராவின் இந்த டயரி அவர் இறந்த 25 வருடங்கள் கழித்து வெளிவருவதற்கான காரணம் இடதுசாரிகள் புரட்சியாளர்களாக மனிதர்களைப் புனிதப்படுத்துவது தான். உன்னத புருஷர்களாக, தேவ தூதர்களாகச் சித்தரிக்கும் மனவோட்டம் தான். கார்ல் மாக்ஸ் ஜென்னி உறவை ராமன் சீதை உறவுக்கு ஒப்பிட்ட மார்க்சீயவாதிகள் அதிகம். இவர்கள் பலம். பலவீனம் நிறைந்த மனிதர்கள். பலம் பலவீனங்களை வாழ்ந்ததை வாழவிருப்பதை கடந்து போனதை புதிய மனிதனுக்கான விளைவை அந்தந்த மனிதனின் வாழ்வை நிகழ்ந்தபடி வைப்பதே மனித விமோசனத்துக்கான ஒரே வழி.

ஆஸ்கர் வைல்ட் சமப்பாலுறவாளர் என்பதற்காக தண்டிக்கப்பட்டதை எதிர்த்து பிரிட்டிஷ் நீதி அமைப்புக்கு எதிராக தற்போது சமப்பாலுறவாளர்கள் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். தனது தள்ளாத வயதில் தான் ஒரு சமப்பாலுறவாளர் என்று சொல்லிக்கொள்ள வேண்டிய நிலை கவிஞன் ஸ்ரீபன் ஸ்பென்டருக்கு நேர்ந்திருக்கிறது. டால்ஸ்டாயின் எழுத்தும், சர்த்சந்தரரின் தேடலும், காந்தியின் சத்திய சோதனையும், கர்த்தரின் புனித ஜெனேயும், றோசாவின் மூன்று காதலர்களுக்கான அவரது கடிதமும், ராகுல ராங்கிருத்தியாயனின் ஊர்சுற்றிப் புராணமும் மனித விடுதலையின் காயங்களை, கடைத்தேற்றங்களை, இழப்புக்களை, நேசத்தை தமக்குள் கொண்டிருக்கின்றன.

தன்னைப் புனிதனென்று கருதுகிற மனிதனே தனது ஆதர்ச மனிதர்களையும் புனிதனென்பான். The Last Temptation of Christ நாவலை எழுதியவருக்கும் இயக்குநர் மாட்டின் ஸ்கோர்செசுக்கும் இயேசு கிறிஸ்து விலைமாதிடம் சென்றவர், மணம் செய்து கொண்டவர், குழந்தை பெற்றவர், சுவிசேச உபதேசகர்களைப் பார்த்து, நீங்கள் பொய்யர்கள், இயேசு கடவுள் இல்லை. மனிதன் அது நான்தான் என்பவர்.

சே குவேராவின் இப்புத்தகம், தனது வாழ்க்கை முரண்பாடுகளை தன்னளவிலேயே - தனது நடவடிக்கைகள் மூலமே கடந்து போன ஒருவனின் டயரி. தெருத்தெருவாக அலைந்து பட்டினி கிடந்து, மலைப்புழுதிகளில் விழுந்த சிராய்ப்புகளுடன் நடந்து நாள் முழுக்கக் குடித்து, அடுத்த குடியிருப்புகளில் இருந்த மூன்று பெண்களுடன் வேண்டுமென்றே உரையாடி, வாத்துகளைச் சுட்டுண்டு, Adrenalin ஏற்றிக்கொண்டு, போதையில் தள்ளாடி, மச்சுபிச்சு மலைக்குன்றுகளுக்குப் போய் இன்கா மக்களின் போர்த் தந்திரத்தை வியந்து, வழியில் தென்படும் லாரி, டிரக் சாரதிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி இடம் பிடித்து, குளிரில் உறைந்து, பனிப்புல்லில் கிடந்து மரத்தில் கட்டிய ஊஞ்சலில் ஆடி, புரட்சிக்காரர்களோடு தொடர்பு கொண்டு, சுரங்கத் தொழிலாளர்கள் வறுமையோடு வாழ்ந்து, பூர்வகுடி இந்திய மக்களின் முடை நாற்றமெடுக்கும் உடுப்புகளை விமர்சித்து, கறுப்பு மக்கள் தொடர்ந்து குளிக்காததால் கறுப்பு நிறமாகிப் போனவர்கள் என கிண்டல் செய்து, வட அமெரிக்கர்களை ஏளனத்துடன் பேசி, தொழுநோயாளிகளோடு உண்டு உறங்கி, அவர்களோடு விளையாடி, ஒரே ஒரு டொலரை வைத்துக் கொண்டு 30 நாள்களைப் பட்டினியில் கழிந்து, கண்கண்ட இடத்திலெல்லாம் காட்டு நதிகளில் குளித்து, அவ்வப்போது வழியில் தென்படுபவர்களிடமெல்லாம் இரந்து ஊர்ஊராக கால் தேய நடந்து நடந்து...

சேகுவேரா முரண்பாடுகளுடன் வாழ்ந்ததை, வளர்ந்ததை, கற்றுக்கொண்டதை இந்த டயரி சொல்கிறது. கார்ல் மாக்ஸுக்கு முன்னரேயே சேகுவேராவின் ஆதர்ச மனிதன் அல்பேட் சுவைட்சர்தான். தொழுநோயாளிகளுக்கு தொண்டு செய்யும் கனவை விதைத்தவன் அவன் தான். மோட்டார் சைக்கிள் டயரி எழுதிய அதே குவேராதான் பொலிவியன் டயரியையும் எழுதினான். இதே குவேராதான் ஆபிரிக்க நாடுகளின் ஆயுத விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்க ஆப்பிரிக்க நாடுகளுக்குப் போனவன். ஆபிரிக்க மக்களை நெஞ்சாரத் தழுவியவன். இலத்தீன் அமெரிக்க பூர்வகுடிகளுடன் உண்டு உறங்கியவன். கொங்கோவில் திரிந்தவன். ஆசிய, ஆபிரிக்க, இலத்தீனமெரிக்க, மக்களின் ஒற்றுமைக்காக Tricontinental Cofference இல் முழங்கியவன்.

22 வயதில் குவேரா எழுதிய இந்த மோட்டார் சைக்கிள் டயரியைப் படித்து முடித்தபோது, குவேரா பற்றிய மதிப்பு இன்னமும் அதிகரித்தது. உண்மையில், வாழ்வையும் மனிதரையும் நேசிக்கும் ஒவ்வொரு மனிதரின் பின் நோக்கிய நினைவுகளும், முரண்பாடுகளை உள்ளபடி மறுபரிசீலனை செய்கிற மனமும் இவ்வாறுதான் வெளிப்பட முடியும். ஜாதீய சமூகத்திலிருந்தும், நிறவெறி சமூக அமைப்பிலிருந்தும், காலனியாதிக்க சமூகத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள முயன்ற - முயலும் மூன்றாம் உலக மனிதனொருவனின் - மத்திய தர வர்க்க மனிதனொருவனின் உள்முரண்களை சே குவேராவின் மோட்டார் சைக்கிள் டயரி ஒருவருக்கு ஞாபகமூட்டக்கூடும். தன்னை எவ்வெற்றிலிருந்து அறுத்துக் கொள்ள வேண்டும் என்கிற மறுபரீசீலனையையும் இது உணர்த்தும். மங்கலான என் சுயசித்திரம் எனும் தனது கவிதையில் சேகுவேரா நமக்குச் சொல்கிறான்.

நாடோடிகளின் சடங்குகளைச்

சுவீகரித்துக் கொண்டு

மைல்களைக் கடந்து

 

சிலுவையைப்போல என்

ஆத்மா உடம்புக் கூட்டைச்

சுமந்து கொண்டு

முரணான பிரதிமையோடு

வினோத இதயத்தோடு

 

நான் உங்களிடம் வருகிறேன்.

7/28/2011 3:15:10 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்