Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மீட்பர்களையே மாய்ப்பவர்களாக்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் வீதி வரைபடம்

<p>மீட்பர்களையே மாய்ப்பவர்களாக்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் வீதி வரைபடம்</p>
மு. திருநாவுக்கரசு

 

எங்கெல்லாம் போராட்டங்கள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் கிளர்ச்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் புரட்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் போர்கள் நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் கருப்பையில் பிள்ளைகளைச் சுமந்த தாய்மார்களின் இதயங்கள் நெருப்பை சுமக்கும் துயரம் நிகழும்.

ஆதலாற்தான் போர்ச்சூழலை பிரதிபலிக்கும் இலக்கியங்கள், சிந்தனைகள் என்பன தாய்மாரை தலையாய பாத்திரங்களாக சித்தரிக்கத் தவறுவதில்லை. ரஷ்ய புரட்சியின் போது மார்க்கிம் கார்க்கி எழுதிய 'தாய்' என்ற நாவல் இதற்கு நல்லதொரு உதாரணம். ஈழப் போராட்டக் காலத்தின் ஆரம்பத்தில் திரு.ரஞ்சகுமார் எழுதிய 'கோசலை' என்ற சிறுகதையும் இந்த வகையில் இலக்கியவாதிகளால் நல்லுதாரணமாய்க் கூறப்படுவதுண்டு.

இந்தவகையில் தாய்மார்களின் துயரங்களைப் பற்றிப் பேசாமல், போராட்டத்திற்கான நியாயங்களைப் பற்றிப் பேசாமல், போராட்டத்தின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புக்களைப் பற்றியும், தியாயகங்களைப் பற்றியும் பேசாமல், ஏற்பட்ட பேரழிவைப் பற்றிப் பேசாமல், நீதி - நியாயம், தர்மம் - ஜனநாயகம் போன்ற எதனைப் பற்றியும் பேசமுடியாது. காரணத்தைப் பற்றிப் பேசாமல் காரியத்தைப் பற்றிப் பேசமுடியாது.

இலங்கையில் நிகழ்ந்து வருவது ஒரு திட்டவட்டமான Structural Genocide – சமூக அமைப்புமுறையிலான தொடர் இனஅழிப்பாகும். இந்திய எதிர்ப்புவாதத்தின் அடிப்படையில் சிங்கள-பௌத்த மேலாதிக்கவாத மனப்பாங்குடன் இலங்கையின் அரசியல் - சிந்தனை கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாடு, ஒரு மக்கள் - ஓர் இனம், ஓர் அரசு, ஓர் எல்லை, ஓர் இராணுவம் என்ற சிந்தனையுடன் இன அழிப்புக் கொள்கை இலங்கையில் வடிவம் பெற்றுள்ளது. இந்த வடிவம்தான் Structural Genocide எனப்படும்.

முள்ளிவாய்க்காலில் துப்பாக்கிகளும், பீரங்கிகளும், வெடிகுண்டுகளும், விமானக் குண்டுவீச்சுக்களும் கொண்டு நடாத்தப்பட்ட இரத்தம் தோய்ந்த இனப்படுகொலை அரங்கேறியது. பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய  Structural Genocide இல் இத்தகைய இரத்தம் தோய்ந்த மனிதப்படுகொலை என்பது ஓர் அங்கம் மட்டுமே.

நீருக்குள் இருக்கும் மீனுக்கு நீர் இயல்பானது போல இனவாத - அரசியல் - அறிவியல் - கல்விச் சூழலுக்குள் இருக்கும் சிங்கள மக்களுக்கு தமிழர்களின் உரிமைகள் அநீதியானவையாகவே தோன்றுகின்றன. இதனால் தமிழ் மக்களுக்கு எதிரான எந்த அநீதியையும், படுகொலைகளையும் ஆதரித்தும், ஏற்றும் அதற்கேற்ப செயற்படும் யதார்த்தத்தை சிங்கள மக்கள் கொண்டுள்ளனர். இதன்படி தமிழரை தமக்கு எதிரானவர்களாக, எதிரிகளாக பார்க்கும் அரசியல் பாரம்பரியத்தின் நிமித்தம் தமிழ் மக்களுக்கு எதிரான நடைமுறைகளையே அரசியல் அர்த்தத்தில் சிங்கள மக்கள் பின்பற்றுகின்றனர். அதன்படி தமிழினத்தை அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி அழிப்பதுதான் சிங்கள இனத்தின் விடுதலைக்கும், வாழ்விற்குமான ஒரே வழியென்ற எண்ணம் வேரூன்றியுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதுதான் சிங்கள-பௌத்த அமைப்புக்களினதும், ஊடகங்களினதும், அரசியல் தலைவர்களினதும் பணியாகும். ஆதலாற்தான் முள்ளிவாய்க்காலில் பெருந்திரளாக வகைதொகையின்றி தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்காக கண்ணீர் சிந்த, அனுதாபம் தெரிவிக்க எந்தொரு சிங்கள நீதிமானாலும் முடியவில்லை.

மேற்படி தாய்மார் தங்கள் இதயங்களில் நெருப்பென துயரங்களை சுமக்கிறார்கள், தண்ணீராலன்றி கண்ணீரால் தமது முகங்களை கழுவுகிறார்கள். ஒரு சமூகத்தில் அநீதி நிகழும் போது அடிப்படையில் நீதியின்பால் ஈர்க்கப்படும் இளைஞர்கள், சமூக நல்லுணர்வு கொண்டவர்கள் முதன்மையாய் போர்க்களம் புகுவது இயல்பு. இத்தகைய மாந்தர்களை இலக்கு வைத்து எதிரி தனது அழிப்புக்களைத் தொடங்குவதே நடைமுறை.

ஓர் இனத்தை வாள்கொண்டு பூண்டோடு அழிப்பது இலகுவான காரியமல்ல. ஆதலால் இன அழிப்பாளர்கள் Structural Genocide ஐ அதற்கான மூலோபாயமாகக் கொள்வர். உதாரணத்திற்கு ஆயிரக்கணக்கான மக்களை கும்பல் கும்பலாக அழிப்பதைவிட அந்த மக்கள் மத்தியிலுள்ள குடும்பங்களுக்கான உழைப்பாளிகளை (Bread winners) தேர்ந்தெடுத்து கொல்வதன் மூலம் அந்த குடும்பம் பொருளாதார அர்த்தத்தில் உழைப்பாளியற்று சீரழியும். கலாச்சார அர்த்தத்தில் அப்படுகொலையின் வாயிலாக பெண் விதவையாக நேரும் போது அது சமூக சீரழிவுகளுக்கும் வழிவகுத்து இன அழிப்பை துரிதப்படுத்தும். இவ்வகையில் ஈழத் தமிழர்கள் மத்தியில் காணப்படும் 90,000 விதவைகளும் Structural Genocide திட்டத்தின் ஓர் அங்கமாகும். இது பெரிதும் இராணுவ-பொலிஸ் கட்டுபாட்டைக் கொண்ட கிழக்கிலேயே பெரிதும் நிகழ்ந்தது. இதிலும் துயரம், சுமை, பழிச்சொல் என்பன தாய்மார் பக்கமே சேர்கின்றன.

<p>மீட்பர்களையே மாய்ப்பவர்களாக்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் வீதி வரைபடம்</p>

முள்ளிவாய்க்கால் பெருந்துயரின் பின்பு தமிழ்த் தலைவர்கள் தமக்கு விமோசனம் அளிப்பார்கள் என்று தமிழ் மக்கள் நம்பியதற்கு மாறாக தமிழ்த் தலைவர்களையே தமது Structural Genocide – திட்டத்தின் ஓர் அங்கமாக்கி தமது இன அழிப்பை முன்னெடுக்க வேண்டுமென்ற திட்டம் சிங்களத் தலைவர்களின் கையில் நடைமுறையாய் காணப்படுகிறது.

சிந்திய இரத்தத்தையும், படும் துயரத்தையும் தமிழ் மக்கள் தமது விமோசனத்திற்கு முதலீடாக்குவதற்குப் பதிலாக, அவற்றை தமிழ்த் தலைவர்கள் தமது பதவி மற்றும் பணந்தேடும் நலன்களுக்கான கருவிகளாக ஆக்குவதற்கேற்ற அரசியலை நல்லாட்சி அரசாங்கம் வெற்றிகரமாக வடிவமைத்துள்ளது.

அரசியலை அதன் சாராம்சத்தில் பார்க்க வேண்டும். அதனை வெளிப்பக்கமாக அன்றி உட்பக்கமாய் புரிந்து கொள்ள வேண்டும். இதன்படி நல்லாட்சி அரசாங்கத்தின் உள்ளடக்கத்தையும், தமிழ் மக்களின் அரசியல் சம்பந்தமாக அவர்கள் கொண்டிருக்கும் வீதி வரைபடத்தையும் (Road map) தெளிவாக அடையாளங்காணாமல் தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பற்றி கணிப்பீடு செய்ய முடியாது.

வீதி வரைபடத்தின் முதலாவது அங்கம் இப்படித்தான் அமைகிறது. அதாவது சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் ஒன்றாகவும் உள்ளன. அவை இரண்டாகவும் உள்ளன. தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்தை மேம்படுத்த அவை ஒன்றாக உள்ளன. அவை தங்களுக்கு ஏற்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணை மற்றும் சர்வதேச நெருக்கடிகளை எதிர்கொள்ளவும் ஒன்றாக உள்ளன. அதேவேளை தமிழ் மக்களுக்கான நீதி, அரசியல் தீர்வுகள் என்று வரும்பொழுது அவை இரண்டாக உள்ளன. இது உலக அரங்கில் இதுவரை முன்னுதாரணமற்ற ஒரு வினோதமான சேர்கையாகும்.

அத்துடன் தமிழ்த் தலைவர்களை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு இந்த சேர்கை கட்டமைக்கப்பட்டுள்ளது.

காலத்திற்குக் காலம் தமிழ்த் தலைவர்களை ஏதோ ஒருவகையில் தம் பக்கம் வைத்திருப்பதன் மூலம் தமது அரசியல் சித்துவிளையாட்டை ஐக்கிய தேசிய கட்சி வெற்றிகரமாக நிறைவேற்றும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

ஆனால் முள்ளிவாய்க்கால் இன அழிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழலில் அதிதிறமையான அரசியல் நிபுணத்துவத்துடன் இதனைக் கையாளவேண்டிய அவசியம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. ஒரு கட்சி ஆதரிக்கும் போது அதனை இன்னொரு கட்சி எதிர்ப்பதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகள் அழித்தொழிக்கும் பொறிமுறையை சிங்கள அரசியல் அதுவரை கொண்டிருந்தது. ஆனால் முள்ளிவாய்க்கால் ஏற்படுத்திய அசாதாரண சூழலானது இருகட்சிகளும் ஒன்றிணைவதன் மூலம் அதனை எதிர்கொள்வதற்கான சிந்தனையை ஏற்படுத்தியது.

இந்த வகையில் இருகட்சிகளும் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்ட ஆட்சிப் பொறியமைப்பில் தமிழ்த் தலைமையை ஓர் அங்கமாக்கினர். தமிழ்த் தலைவர்களை எழுமாத்திரத்தில் கையாண்டுவந்த கடந்தகால அரசியலுக்குப் பதிலாக அதிநிபுணத்துவம் மிக்க திட்டமிடலின் கீழ் தமிழ்த் தலைமையை தமது அரச இயந்திர பொறியமைப்பில் ஒரு பாகமாக்கினர்.

தமிழின அழிப்பிற்கான Structural Genocide இல் தமிழ்த் தலைமையை மிகப் புத்திபூர்வமான முறையில் ஒரு பங்காளியாக்கினர். அதனை வைத்துக் கொண்டு சர்வதேச அரங்கில் போர்க்குற்ற விசாரணை என்ற மிகப்பெரும் இடையூறைத் தாண்டுவதில் வெற்றிகரமாக முன்னேறினர்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மே மாதம் முற்பகுதியில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தம்மால் நடைமுறைப்படுத்த முடியாது என்று ஆரம்பத்திலேயே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அல்-ஹுசைனிடம் உறுதிபடக் கூறிவிட்டோம் என்று பேசியபோது நாடாளுமன்றத்திற்கு உள்ளே எந்தவொரு தமிழ்த் தலைவர்களும் அதனை கேள்விக்குள்ளாக்கவும் இல்லை, ஆட்சேபிக்கவும் இல்லை. அப்படியே மே மாதம் இறுதிவாரத்தில் (21ஆம் தேதி) போர்க்குற்ற விசாரணைக்கு ஒருபோதும் இடமளியோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் பேசுகையில் அங்கு எந்தவொரு தமிழ்த் தலைவரும் அதனை ஆட்சேபிக்கவில்லை.

தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஆளும் கட்சி ஆதரிக்க, எதிர்க்கட்சி அதனை எதிர்ப்பது என்ற சூத்திரத்தின் அடிப்படையில் சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக செயற்பட்ட அரசியல் சித்துவிளையாட்டின் உச்சமாக இரு கட்சிகளும் ஒன்றிணைந்து தமக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை எதிர்கொள்ளும் பொறியமைப்பில் தமிழ்த் தலைமையையும் ஓர் அங்கமாக்கியதன் வெற்றியை ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அரங்கேற்றியதில் இருந்து இலங்கை நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்துவதன் மூலம் சிங்கள ஆட்சியாளர்கள் அதில் வெற்றியீட்டியுள்ளனர் என்பதை மேற்போர்ந்த நிகழ்வுகள் நிரூபித்துள்ளன.

முன்னைய காலங்களில் டி.எஸ்.செனநாயக, ஜே.ஆர். ஜெவர்த்தன போன்ற சிங்கள ஆட்சியாளர்கள் உதிரியாக நின்று தமிழ்த் தலைவர்களை தம்வயப்படுத்தினர். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அப்படியான ஓர் உதிரி நிலையையும் தாண்டி உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் நிபுணத்துவத்துடனும், உதவியுடனும் தமிழ்த் தலைமையை தம்பக்கம் வைத்துக் கொண்டு அரசியலை அரங்கேற்றவல்ல ஒரு நிறுவன வகைப்பட்ட நிபுணத்துவத்தை சிங்கள அரசியல் அடைந்துள்ளது.

இந்த அரசியல் வீதிவரைபடமும் அதற்கான பொறியமைப்பும் பின்வருமாறு படிக்கட்டுக்களாய் அமைந்துள்ளன.

முதலாவதாக இரு கட்சிகளும் ஒன்றாக இருப்பதும், அதேவேளை அவை இரண்டாக இருப்பதுமான கட்டமைப்பு.

இரண்டாவதாக அதற்காக தமிழ்த் தலைமையை தம் பக்கம் வென்றெடுத்து அவர்களின் மூலமாக தமக்கு ஏற்பட்ட இடர்களை நீக்குவது.

மூன்றாவதாக தமிழ்த் தலைவர்களை இரண்டாகப் பிளந்து மோதவிடுவதன் மூலம் தமது இன அழிப்பிற்கான இலக்கை ஈட்டுவது.

ஏதிரியை வென்றெடுத்தல் என்ற 'Win Over' தந்திரத்தின் மூலம் முதற்கட்ட வெற்றியை ஈட்டிக்கொண்டு எதிரியை பிரித்தாளுதல் 'Divide and Rule' தந்திரத்தின் கீழ் தமிழ்த் தலைவர்களை இரண்டாக்கி மோதவிடுதல், தமிழ் - முஸ்லிம்களுக்கு இடையே பிளவை வளர்த்தல் என்பதை இன்னொரு அங்கமாகவும் கொண்டு மிகத் திறம்பட இந்த வீதி வரைபடம் வரையப்பட்டு அதன் அடிப்படையில் 'நல்லாட்சி அரசாங்கம்' என்ற அரசியல் கட்டுமானம் எழுப்பப்பட்டுள்ளது. தமிழ்த் தலைவர்களை கையாள்வதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியலை நிர்மூலமாக்கி இன ஒடுக்குமுறையை முன்னேற்றுவதும், தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியில் பிளவை கட்டியெழுப்பி தமது இன அழிப்பு அரசியலை முன்னேற்றுவது என்ற மிக நேர்த்தியான அரசியல் திட்டத்தை நல்லாட்சி அரசாங்கம் வகுத்துக் கொண்டது.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசியல் அறுவடைகளை பார்க்கும் போது சிங்களத் தலைவர்கள் தமது திறமையையும் வெற்றியையும் நிரூபித்துள்ளனர். தமிழ்த் தலைவர்கள் தமது இயலாமையையும், தோல்விகளையும் தோளில் சுமந்தவண்ணம் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்றவாறு தமது மீசைகளை முறுக்குகின்றனர்.

சர்வதேச தளத்திலும், உள்நாட்டுத் தளத்திலும் போர்க்குற்ற விசாரணைக்கு எதிரான வெற்றியை ஈட்டியுள்ளதுடன் சிங்கள அரசுக்கு உலக அரங்கில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகளைத் தாண்டி சர்வதேச ஆதரவையும், உதவிகளையும் பெறும் நிலையை அடைந்துவிட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோர் என்ற தடையையும் வெற்றிகரமாக தாண்டிவருகின்றனர்.

தமிழ் மக்களின் அரசியலுக்கான முதலீடாய் எதிர்மறை அர்த்தத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும், காணாமல் போனோர் விவகாரமும் காணப்பட்டன. ஆனால் இதனை முதலீடாக ஆக்கவிடாமல் தமிழ்த் தலைவர்களை அணைத்து இவற்றை அடி ஆழத்தில் புதைத்துவிடும் அரசியலில் சிங்களத் தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒருவர் என்ன பேசுகின்றார் என்பதல்ல முக்கியம். அவரது செயல் யாருக்கு சேவை செய்கின்றது என்பதே முக்கியம். இதன்படி தம் எதிரிகளான தமிழ் மக்களின் தலைவர்களைத் தமக்கு சேவகர்களாக்கும் வித்தையை சிங்களத் தலைவர்கள் திறம்பட நிறைவேற்றியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் இனபடுகொலையின் வாயிலாகப் பெற்ற இராணுவ வெற்றி என்பது தமிழினத்தை தொடர்ந்து அழிப்பதற்கான ஒரு அனுமதிச் சீட்டே (License) தவிர அது சமாதானத்திற்கான ஏற்பாடல்ல. அதன்படி இராணுவ வெற்றியின் நீட்சியாக தமிழ் மண்ணை முற்றிலும் இராணுவ மயமாக்கும் அரசியல் வீதி வரைபடம் திட்டமிடப்பட்டது. இராணுவம் துப்பாக்கியால் சுடுவது மட்டும் இராணுவ நடவடிக்கையல்ல, தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் இராணுவ இருப்பே ஒரு இராணுவ நடவடிக்கைதான். இலங்கை இராணுவம் வெளிநாடுகளுடன் போரிடுவதற்காக கட்டமைக்கப்பட்டதல்ல. அது தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டது. இத்தகைய தமிழின எதிர்ப்பு உணர்வு மிக்க இராணுவத்தின் பிரசன்னமானது தமிழ் மக்களின் ஆக்கத் திறன் அனைத்தையும் இயல்பாகவே அழித்துவிடவல்லது. இராணுவத்தின் இருப்பினால் ஏற்படும் ஒரு மௌனத் தோற்றம் மட்டுமே மக்களின் ஆக்கத்திறனை அழிப்பதற்குப் போதுமானது. ஆக்கத்திறன் அழிப்பே ஓர் இனப்படுகொலையாகும்.

தமிழர் பிரச்சனை பொறுத்து அதில் இராணுவத்தை தன்னியல்பான ஓர் அங்கமாக சிங்களத் தலைவர்கள் வளர்த்தெடுத்துள்ளனர். ஒவ்வொரு அரசியல் தீர்மானத்திற்கு பின்னாலும் இராணுவத்தின் அனுமதி வேண்டும் என்பது இலங்கையின் அரசியலாகிவிட்டது, அதாவது பாதுகாப்பு தொடர்பான விடயங்களை இராணுவம் முடிவெடுக்கும், அதை இராணுவத்தைக் கேட்டே செய்யலாம் என்ற நடைமுறையை நல்லாட்சி அரசாங்கம் ஒரு விதியாக ஆக்கி அதனை அப்பட்டமாக கடைபிடித்து வருகிறது. இதன்படி தமிழ் மண் தெளிவாக இராணுவ ஆட்சியின் கீழேயே உள்ளது.

இரு கட்சிகள் ஒன்றாவும், இரண்டாகவும் இருக்கும் நிலை, சுயேட்சையான இராணுவ அரசியல், பௌத்த மதநிறுவன அரசியல், சிங்கள ஊடகங்கள், தமிழ்த் தலைமையை அணைத்து வைத்திருத்தல் என்னும் அனைத்தையும் ஒன்றிணைத்த வகையில் தமிழினத்திற்கு எதிரான நல்லாட்சி அரசாங்க கட்டமைப்பு விளங்குகிறது. இதற்கு வெளிநாட்டு சக்திகளும் துணையாக்கப்பட்ட வகையில் திறமையுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

அத்துடன் நிர்வாக அதிகாரிகள் விடயத்தில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் நல்லிணக்கத்திற்கான நிர்வாக வழிமுறை என்ற நிலையில் தமிழினத்திற்கு எதிரான நிர்வாக ஏற்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அது நல்லிக்கணத்திற்கான ஏற்பாடல்ல, சிங்கள மயமாக்கலுக்கான ஏற்பாடாகும். அதில் காணப்படும் ஆபத்துக்களையும் அநீதிகளையும் சுட்டிக்காட்டினால் அது நிர்வாக இயந்திரத்தில் ஏற்படக்கூடிய இயல்பான தவறுகளே தவிர திட்டமிடப்பட்ட பிழைகள் அல்ல என்று பதிலளிப்பர். கூடவே நிர்வாக முறைமையில் ஏற்படவல்ல ஒரு சிவப்பு நாடா (Red-tapism) தவறு என்று சாக்குப் போக்கை சொல்லி சிங்கள மயமாக்கலை முன்னேற்றிவிடுவர்.

தமிழர்களை அணைத்து தமிழர்களை அழிக்கும் அரசியலின் உச்சக்கட்டமாக தமிழ்த் தலைமைகளை இரண்டாகப் பிளந்து மோதவிடும் அரசியலை தற்போது வடமாகாணசபை அரசியலில் இன்றைய அரசாங்கம் அரங்கேற்றியுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சிங்கள-தமிழ் பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக தமிழ்-தமிழ் மோதலை ஏற்படுத்தி சிங்கள மேலாதிக்கத்திற்கான இன அழிப்புப் பயணத்தை மேம்படுத்துவது என்பது வெற்றிகரமாக முன்னேறும் காலகட்டம் இதுவாகும். இது இரண்டரை ஆண்டுகளுக்கு முன் தீட்டப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.

இறைமையுடன் கூடிய வடக்கு-கிழக்கை ஓர் அலகாகக் கொண்ட சமஸ்டி ஆட்சி முறையிலான தீர்வு என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழ்-தமிழ் மோதலினால் கடந்து செல்வதே அரசாங்கத்தின் திட்டமாகும். அதற்கான அரசியலே வடமாகாணசபை அரசியலில் அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆதலாற்தான் வடமாகாண முதல்வர் திரு.விக்னேஸ்வரன் 'தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு முரணாகச் செயற்பட மாட்டேன்' என்று தன் நிலையை பிரகடனப்படுத்தும் அவசியம் உருவாகியுள்ளது.

முள்ளிவாய்க்கால் போர்க்குற்றத்திற்கான நீதியின்றி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியின்றி தமிழ் மக்களுக்கான நீதி என்ற ஒன்று இருக்க முடியாது.

கம்பராமாயணத்தில் கைகேயிக்கு எடுத்துரைப்பது போல மந்தரையின் வாயால் கவிச்சக்கரவர்த்தி கம்பர் கூறிய வார்த்தைகள் இங்கு கவனத்திற்குரியவை. அதாவது சந்திரனை இராகு-கேது பாம்புகள் கவ்வும் போது அதனை உணராது சந்திரனின் மறுபக்கம் ஒளிவிடுவது போல உன்னை கேடு கவ்வும் போதும் நீ அதை உணராது சந்திரனின் ஒளிகுன்றாப் பக்கம் போல நீ காணப்படுகிறாய் என்று அந்த கவிதை நீள்கிறது.

அதாவது

'அணங்கு வாள் விட அரா

அணுகும் எல்லையும்

குணம் கெடாது ஒளி விரி

குளிர் வெண் திங்கள் போல்

பிணங்கு வான் பேர் இடர்

பிணிக்க நண்ணவும்,

உணங்குவாய் அல்லை, நீ

உறங்குவாய்?'

என்று கூறப்பட்டதற்கு ஒப்பாக தமிழ் மக்களும் தமக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பேரிடரை உணராது இருக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் பச்சை இரத்தம் இன்னும் உறையாத நிலையிலும் தாய்மாரினது இதயம் சிறிதும் ஆறாத நிலையிலும், மாறா வடுவுடனும், தீராத துயரத்துடனும் தமிழ் மக்கள் காணப்படும் நிலையிலும் இரத்தத்தை பணமாக்க எப்படித் தமிழ்த் தலைவர்கள் துணிகிறார்கள் என்பதையோ இதற்கு எப்படி அவர்களுக்கு மனம் வருகிறது என்பதையோ புரிந்து கொள்ள முடியவில்லை.

உரிமைகளை மீட்க வந்த மீட்பர்களே, மக்களையும், உரிமைகளையும் மாய்க்க வல்லவர்களாய் இந்த யுகம் எப்படி மாறியது என்ற கேள்வியே இங்கு ஆழமானது. இந்தக் கேள்விக்கு தமிழ்ப் பண்பாட்டின் பேரால் எத்தகைய பதிலை தமிழ் மக்கள் காணப்போகிறார்கள் என்பதே அடுத்து எழும் பிரதான கேள்வியாகும். 

7/1/2017 9:44:18 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்