Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

புதிய அரசியல் யாப்பு: தமிழரை அழிக்கவல்லது மட்டுமல்ல, சீன ஆதிக்கத்திற்கும் ஆதாரமானது

புதிய அரசியல் யாப்பு: தமிழரை அழிக்கவல்லது மட்டுமல்ல, சீன ஆதிக்கத்திற்கும் ஆதாரமானது
மு. திருநாவுக்கரசு

 

எதிரியின் தொழில் அழிப்பதென்பதுதான். அதனை வெட்டியோ கொத்தியோ, ஆடியோ, பாடியோ, புகழ்ந்தோ, இகழ்ந்தோ, அணைத்தோ, ஆராத்தியோ, கையில் வாளேந்தியோ அல்லது தோளில் கைபோட்டோ எப்படியாயினும் அழித்தல் என்பதுதான் எதிரியின் பிரதான இலக்கும் தொழிலுமாகும்.

இன்றைய நிலையில் பெரும் சிந்தனை மாற்றம் ஒன்று ஏற்படாமல், ஓர் அறிவியல் புரட்சி ஏற்படாமல் தமிழ் மக்களின் வாழ்வில் விடிவேற்பட வாய்ப்பில்லை. வரலாற்றில் இருந்து தமிழ்த் தலைமைகள் நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை மாறாக எதிரியால் வென்றெடுக்கப்படுபவர்களாயும் இறுதி அர்த்தத்தில் தம்மை நம்பிய மக்களுக்கு தோல்விகளையே பரிசளிக்க வல்லவர்களாயுமே காணப்படுகின்றனர்.

ஓர் அரசியல் யாப்பிற்குரிய உள்ளடக்கத்தை புரிந்து கொள்வதிலிருந்தும், அந்த யாப்பு கொண்டிருக்கவல்ல இலக்கை கண்டறிவதிலிருந்துமே ஒரு யாப்பைப் பற்றிய மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும். இன்று நல்லாட்சி அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் அரசியல் யாப்பை அத்தகைய அடிப்படையில் இருந்து ஆராய்ந்து அறியவேண்டியது அவசியம்.

1931ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்பு உருவான காலகட்டத்தில் பொதுவாக தமிழ்த் தலைவர்கள் அதனை எதிர்த்தனர். அப்போது சிங்கள-பௌத்த தலைவராக இருந்த பரண் ஜெயதிலக ஓர் இலகுவான சூத்திரம் ஒன்றை முன்வைத்தார். அதாவது 'தமிழர் டொனமூர் யாப்பை எதிர்ப்பதால் அந்த யாப்பை சிங்களவர் ஆதரிக்க வேண்டும்' என்பதே அந்த சூத்திரமாகும். தமிழர் எதை ஆதரிக்கின்றார்களோ அதை எதிர்க்க வேண்டும், அவர்கள் எதை எதிர்க்கிறார்களோ அதை ஆதரிக்க வேண்டும் என்பதே அவரது இனவாதம் சார்ந்த அரசியல் சமன்பாடும், சூத்திரமுமாக நடைமுறை பெற்றது.

1947ஆம் ஆண்டு சோல்பரி யாப்பு உருவான காலத்தில் சிங்கள மக்களுக்கு சிறந்த இரண்டு தலைவர்கள் கிடைத்தார்கள். ஒருவர் டி.எஸ்.செனநாயக்க மற்றவர் டி.எஸ்.செனநாயக்கவின் மூளையாக செயற்பட்ட சேர்.ஓலிவர் குணதிலக ஆவார்.

டொனமூர் காலம் குடியேற்றவாத ஆதிக்கத்திற்குரிய சகாப்தமாக இருந்தது. ஆதலால் குடியேற்ற ஆதிக்கத்தை இந்துமாகடலில் நிலைநிறுத்துவதற்குப் பொருத்தமாக இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தைப் பேண வேண்டியது அவசியமாய் இருந்தது. இந்திய எதிர்ப்புவாதத்தின் பின்னணியில் சிங்களவர்களை அணைப்பதன்மூலம் அந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க இலங்கையை தமக்கு சாதகமாக பேணலாம் என்பதால் அதற்கேற்ப பெரும்பான்மை இனநாயகத்திற்கு வாய்ப்பான அரசியல் யாப்பை டொனமூர் உருவாக்கினார்.

சோல்பரி யாப்புக் காலம் குடியேற்ற ஆதிக்கம் முடிவடைந்து நவகுடியேற்ற ஆதிக்கம் தொடங்கிய காலம். ஆதலால் சுதந்திரம் அடையும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை அரசியல் இராணுவ ரீதியில் தமது சார்ப்பு நாடாக வைத்திருக்க வேண்டிய அவசியம் பிரித்தானியருக்கு இருந்தது. இந்நிலையில் இந்திய எதிர்ப்புவாத அச்சத்தை சிங்களத் தலைவர்களிடம் முன்னிறுத்தி பெரும்பான்மை இனமான சிங்கள – பௌத்தர்களை திருப்திபடுத்தவல்லதான நாடாளுமன்ற முறையிலான பெரும்பான்மை இனநாயகத்தை உறுதிப்படுத்தும் யாப்பை சோல்பரி உருவாக்கினார்.

அதேவேளை இன, மதம் சார்ந்த பிரச்சனைகள் நவீன இலங்கையின் அரசியலில் பெரிதும் தலையெடுத்திருந்ததை பிரித்தானியர் கண்கூடாக கண்டிருந்தனர். நவீன இலங்கையின் வரலாற்றில் முதலாவது இனக்கலவரம் 1883ஆம் ஆண்டு சிங்கள கிறிஸ்தவர்களுக்கு எதிராக பௌத்தர்களால் நடத்தப்பட்ட கலவரமாக அமைந்தது. அடுத்து 1915ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட கம்பளைக் கலகம் அமைந்தது.

புதிய அரசியல் யாப்பு: தமிழரை அழிக்கவல்லது மட்டுமல்ல, சீன ஆதிக்கத்திற்கும் ஆதாரமானது

மேலும் தமிழ் - சிங்கள முரண்பாடு இலங்கை அரசியலில் நீக்கமற இருந்தமை வெளிப்படையானது. கிறிஸ்தவர்களாக காணப்பட்ட சிங்கள அரசியல் குடும்பங்கள் அனைத்தும் பௌத்தர்களாக மாறாமல் அரசியல் செய்ய முடியாத யதார்த்தம் சோல்பரி காலத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது.

இவ்வகையில் பரண் ஜெயதிலக குடும்பம், S.W.R.D பண்டாரநாயக்க குடும்பம், D.S.செனநாயக்க குடும்பம், ஒலிவர் குணதிலக குடும்பம், சேர். ஜோன் கொத்தலாவல குடும்பம், வில்லியம் கோபல்லாவ குடும்பம், ஜே.ஆர்.ஜெயவர்த்தன குடும்பம் என்ற அனைத்து சிங்களத் தலைவர்களின் குடும்பப் பெயர்கள் கிறிஸ்தவ பெயர்களையே கொண்டிருந்தமை கவனிக்கத்தக்கது. ஆனால் இக் கிறிஸ்துவக் குடும்பங்கள் எல்லாம் பௌத்தத்தை நோக்கி மதம் மாறும் போக்கை பிரித்தானியர்கள் கவலையுடன் நோக்கத் தவறவில்லை.

தமிழர் பக்கம் இத்தகையப் போக்கும் இல்லையென்பது மகிழ்ச்சிக்குரியது. ஆதலாற்தான் ஒரு கிறிஸ்தவரான S.J.V.செல்வநாயகத்தால் 30 ஆண்டுகளாக 'தந்தை' என்ற மகுடத்துடன் தமிழ் மக்களுக்குத் தலைவராக இருக்க முடிந்தது. இப்போக்கை பிரித்தானியர் சரிவர புரிந்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை.

இப்பின்னணியில் கிறிஸ்தவர், முஸ்லிம், தமிழர் என்ற அனைவரையும் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் சிறுபான்மை இனங்களைப் பாதுகாப்பதற்கான 29ஆவது பிரிவை அரசியல் யாப்பில் சோல்பரி உருவாக்கினார். அத்துடன் இரண்டாவது சபையான செனட் சபையை உருவாக்கியதிலும் சிறுபான்மையினரின் உரிமைக்கான பாதுகாப்பு கருத்தில் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் பிரித்தானியர்கள் உருவாக்கிய பெரும்பான்மை இனநாயக அரசியல் யாப்பு மரபானது அவர்கள் விரும்பிய 29வது பிரிவையும் செனட் சபையையும் இலகுவாக விழுங்கி ஏப்பமிட்டது.

1972ஆம் ஆண்டு உருவான அரசியல் யாப்பு இருவகை இனவாத விருத்தியைக் கொண்டு அமைந்தது. முதல் இரண்டு அரசியல் யாப்பையும் உருவாக்கிய பிரித்தானியர்களின் பிரதான இலக்காக கேந்திர நலன் அமைந்திருந்தது. அந்த கேந்திர நலனை பிரித்தானியருடன் பரிமாறிய அதேவேளை தமக்கான பௌத்த பேரினவாத ஆதிக்கத்தை நாணயத்தின் மறுபக்கமென சிங்களத் தலைவர்கள் வெற்றிகரமாக இணைக்கத் தவறவில்லை.

இப்பின்னணியில் இலங்கையின் அரசியல் யாப்பு வளர்ச்சி என்பது முதலாவது குடியரசு அரசியல் யாப்பில் பெரிதும் பௌத்த இனவாத நலன்கள் முதன்மைப்படுத்தப்படுவதாகவும் ஏனைய இனங்கள் பின்தள்ளப்படுவதுமான இருநிலை வளர்ச்சிப் போக்கு காணப்பட்டது.

பண்டாரநாயக்க குடும்பத்தினர் தமது குடும்ப அரசியல் பரிமாணத்திற்கு ஊடாக ஒருபுறம் தம்மை இந்தியாவின் நண்பர்களாக காட்டிக் கொண்டு மறுபுறம் சிங்கள - பௌத்த மேலாதிக்கத்தையும் தமிழருக்கு எதிரான இன ஒடுக்குமுறையையும் அரங்கேற்றும் தந்திரத்தைப் பின்பற்றினர். 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பு இத்தகைய மூலோபாயத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.

சிறுபான்மை இனங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக சொல்லப்பட்ட 29ஆவது பிரிவு 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் நீக்கப்பட்டது. அத்துடன் இரண்டாவது சபையான செனட் சபை நீக்கப்பட்ட ஒருசபை ஆட்சிமுறை கொண்ட அரசியல் யாப்பாக அமைந்தது. ஒரு சபையைக் கொண்ட ஒற்றையாட்சி என்பது மேலும் சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்த இலகுவானதாக அமைந்தது.

மேற்படி இருவிடயங்களிலும் அரசியல் யாப்பு வளர்ச்சியடைவதற்குப் பதிலாக அது தேய்வடைந்தது. அதேவேளை பௌத்த பேரினவாதம் யாப்பில் தெளிவாக முன்னிறுத்தப்பட்டது. இதன்படி பௌத்தம் இலங்கையின் முதன்மையான மதம் என்றும் அதனைப் பேணிப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் அரசின் கடமையும் பொறுப்பும் என்றும் வரையப்பட்டது.

1978ஆம் ஆண்டு ஜெயவர்த்தனவால் உருவாக்கப்பட்ட 2வது குடியரசு அரசியல் யாப்பானது மேற்படி சிங்கள-பௌத்த ஆதிக்கத்தை உறுதிப்படுத்தி தமிழின அழிப்பை முன்னெடுக்கவல்ல யாப்பாக அமைந்தது. முதலாவது குடியரசு அரசியல் யாப்பு சட்டவாக்க சபை வாயிலான இன ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியது. ஆனால் 2வது குடியரசு அரசியல் யாப்பானது நிர்வாக வகையில் நிறைவேற்று அதிகாரம் சார்ந்த இன ஆதிக்கத்தை உறுதிப்படுத்தி இராணுவ ஆதிக்கத்தை நோக்கி வளர்வதற்கான நிலைமையை தோற்றுவித்தது.

நிர்வாக அர்த்தத்தில் ஜனாதிபதி ஏகப்பட்ட அதிகாரங்களுடன் இன ஒடுக்குமுறை செய்யவல்ல சர்வாதிகாரிக்குரிய அதிகாரங்களைக் கொண்டவரானார். 1977ஆம் ஆண்டு ஜெயவர்த்தன பதவியேற்கும் போது இலங்கை இராணுவம் 8000 படையினரைக் கொண்ட ஒரு சம்பிரதாயபூர்வ இராணுவமாகவே இருந்தது. ஆனால் அவர் 1979ஆம் ஆண்டு உருவாக்கிய 'பயங்கரவாத தடைச்சட்டத்தின்' கீழான இராணுவ ஆட்சி கட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து இலங்கை இராணுவம் தமிழருக்கு எதிரான யுத்தம் புரியும் நிறுவனக் கட்டமைப்பைக் கொண்டதாக மாறியது.

தமிழின எதிர்ப்பின் அடிப்படையில் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த பாரீய இராணுவ கட்டமைப்பை வளர்த்து இன்று 3 இலட்சம் படையினர் என்ற வகையில் அது பெருகியுள்ளது. அத்துடன் அந்த இராணுவத்தின் ஆடுகளமாக தமிழ் மண்ணே தொடர்ந்தும் காணப்படுகிறது.

இந்த யாப்பின் கீழ்தான் இராணுவம், புலனாய்வுத்துறை, S.T.F. எனப்படும் விசேட படைப்பிரிவு மற்றும் பொலிஸ், பொலிஸ் புலனாய்வுத்துறை என்பனவெல்லாம் தமிழின எதிர்ப்பின் பேரால் அசுர வேகத்தில் விருத்தியாகின.

இவ்வகையில் 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பானது இரத்தம் சிந்தும் இன ஒடுக்குமுறைக்குப் பொருத்தமான நிர்வாக மற்றும் இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்களை ஏற்படுத்திய யாப்பாக பரிணாமம் பெற்று அது இலங்கையின் அரசியலில் நீக்கமற கலந்துவிட்ட ஒரு யதார்தமாகக் காணப்படுகிறது.

இத்தகைய சர்வாதிகார மற்றும் இராணுவ புலனாய்வு சார்ந்த அரசியல் இன ஒடுக்குமுறையின் வடிவில் விருத்தியடைந்து இவை இலங்கையின் அரசியலில் பலமான அங்கங்களாகிவிட்டன. இத்துடன் ஏற்கனவே வளர்ந்து வந்த பௌத்த நிறுவன அரசியல் ஆதிக்கமும் இணைந்து இலங்கையின் அரசியலை இன ஒடுக்குமுறைக்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு யதார்த்தபூர்வமான கட்டமைப்பாக உருவாக்கிவிட்டன. இக்கட்டமைப்பின் கீழ்த்தான் இலங்கையில் தமிழ் மக்களை அரசால் இரத்தம் தோய்ந்த பேரழிவிற்கு உள்ளாக்க முடிந்தது.

இவற்றை நிராகரிக்கவல்ல ஒரு புதிய  அரசியல் யாப்பை சிங்கள ஆட்சியாளர்கள் இனிமேல் ஏற்படுத்தப் போவதில்லை. அவர்களால் அப்படி அது முடியவும் மாட்டாது. இந்நிலையில் மகாசங்கத்தினரதும், இராணுவத்தினதும் கட்டளையை மீறி ஜனாதிபதிகளினாலோ, பிரதமரினாலோ, அமைச்சர்களினாலோ செயற்பட முடியாது என்ற வளர்ச்சி நிலை ஏற்பட்டு விட்டது. எனவே தோற்றப்பாட்டடில் உள்ள அரசியல் யாப்பிற்கு அப்பால் செயல்பூர்வமான அர்த்தத்தில் மகாசங்கத்தினரும், இராணுவத்தினருமே உண்மையான அரசியலதிகாரம் கொண்ட அரசியற் சக்திகளாவர்.

நல்லாட்சி அரசாங்கம் என்பதின் பேரில் தமிழ் மக்களின் ஆதரவுடன் பதவிக்கு வந்த ஒரு புதிய அரசியல் யாப்பின் வாயிலாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், படுகொலைகளுக்கு அரசியல் தீர்வுகாணும் வகையிலான யாப்பு உருவாக்கப்படும் என்று சிறிசேன – ரணில் - சந்திரிக உட்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் தூண்களும், அவர்களுடன் கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களுக்கு உறுதியளித்தன.

அதன்படி போர்க்குற்ற விசாரணை, காணாமல் போனோருக்கான நீதி என்பனவும் வானைப் பிளக்கவல்ல உறுதிமொழிகளாக எழுந்தன. ஆனால் உயர்நிலை தளபதிகள் முதல், அடிநிலை இராணுவ வீரன் வரை எந்தொரு படையினரையும் உலகில் உள்ள எந்த நாட்டவரும் கைது செய்ய அனுமதிக்க மாட்டேன் என்றும் யுத்தக் குற்றச்சாட்டில் இருந்து படையினரை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் பலமாக உள்ளதென்றும், பலவாறாக ஜனாதிபதி சிறிசேன பிரகடனம் செய்யும் நிலையில் இந்த புதிய அரசியல் யாப்பு தமிழர்களுக்கான எத்தகைய நீதிக்கும் நியாயமான தீர்விற்கும் இடமில்லை என்பது புலனாகிறது.

இந்தவகையில் இலங்கையின் அரசியல் யாப்பு வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இந்த புதிய யாப்பின் உள்ளடக்கம் என்ன என்பதே பிரதான கேள்வியாகும்.

நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் இலங்கை அரசும், இலங்கை ஆட்சியாளர்களும், இலங்கை இராணுவமும் அபகீர்திக்கும், நெருக்கடிக்கும் உள்ளாகியுள்ளது. இந்த அபகீர்த்தியில் இருந்து தம்மை தற்காத்து அரங்கேற்றிய இனப்படுகொலையால் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட காயங்களை ஆற்றி அந்த இனப்படுகொலையை வெற்றியாக மாற்றுவதற்கு 'நல்லாட்சி' என்ற ஒரு ஆயுதத்ததை ஒரு கருவியாக கையில் ஏந்தினர். நல்லாட்சி, நல்லிணக்கம் என்பன மேலும் இன ஒடுக்குமுறை முன்னெடுப்பதற்கான புதிய வடிவங்களேயாகும்.

நல்லாட்சி, நல்லிணக்கம் என்பனவற்றின் ஓர் அங்கமாக புதிய யாப்பு பற்றிய விடயமும் முன்வைக்கப்படுகிறது.

சர்வதேச அரங்கில் தமக்கு ஏற்பட்டுள்ள அவமானங்களைக் களையவும், நெருக்கடிகளை தீர்க்கவும் ஏற்றவகையில் ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் நிர்வாக நிறுவனமட்டங்களிலான நடவடிக்கைகள் என்பனவற்றைக் காட்டி குறிப்பாக மேற்குலகின் ஆதரவைப் பெறுவது அதன் ஓர் இலக்காக உள்ளது. இவை இனப்பிரச்சனைக்கான தீர்வல்ல. வெறும் மனிதஉரிமைகள் பிரிச்சனையல்ல தமிழர்களின் பிரச்சனை.

அது ஆழமான தேசிய இனப்பிரச்சனையாகும். ஆனால் ஒரு மனித உரிமைகள் சார்ந்த விடயங்களை யாப்பில் உருவாக்குவதாக காட்டிக் கொண்டு அதனை ஒரு ஜனநாயக மீட்சி என்றும் அது தமிழ் மக்களுக்கான உரிமை வழங்கல் என்றும் அரசாங்கம் தன்னை சோடனை செய்வதற்கான தேவை இந்த யாப்பில் பூர்த்தி செய்யப்படுகிறது. இங்கு இனப்பிரச்சனைக்கு தீர்வோ, நியாயமோ, நீதியோ கிடையாது. பழைய 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆனால் அதற்குக் குறைந்த வடக்கு-கிழக்கு இணைப்பற்ற தீர்வை இந்த யாப்பில் அரசாங்கம் முன்வைக்கிறது..

சாப்பாட்டுக் கடைகள் சிலவற்றில் நேற்றைய பழங்கறிகளை ஒன்றாகச் சேர்த்து புதிதாக சில பூசணிக்காய் துண்டுகளை அதனுடன் சேர்த்து பழங்கறியை புதிய சாம்பாராக ஆக்குவது போல இந்த புதிய அரசியல் யாப்பும் பழங்கறிகளைக் கொண்ட ஏமாற்றுகரமான ஒரு புதிய சாம்பாராகும்.

மகாசங்கத்தினர் புதிய அரசியல் யாப்பிற்கான அவசியம் எதுவும் இல்லை என்று ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில் புதிதென்று எதுவும் உருவாக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட இனப்படுகொலை வடுவில் இருந்து தம்மை தற்காப்பதற்கு புதியதாக பழைய கறியுடன் சில புதிய பூசணிக்காய் துண்டுகளை கலந்துள்ளார்கள். இது உலகத்தை ஏமாற்றுவதற்கான வித்தை. இனப்பிரச்சனை அடிப்படையில் இதற்கு எந்தப் பெறுமானமும் கிடையாது.

அத்துடன் 2005ஆம் ஆண்டைத் தொடர்ந்து இனயுத்தத்தின் பேரால் சீனா இலங்கை அரசிற்கு பேருதவி புரிந்தது. 21ஆம் நூற்றாண்டில் இந்து மாகடலில் தனக்கான ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பும் சீனாவிற்கு இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலை யுத்தம் வரப்பிரசாதமாக அமைந்தது. சீனா ஆசியாவில் தலையெடுக்கும் முன்பு இலங்கை அரசு இந்திய ஆதிக்க அச்சத்திற்கு எதிராக குறிப்பாக பிரித்தானிய மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளை நம்பிய துணையை நாடியது.

ஆனாலும் நீண்டகால நோக்கில் இந்தியாவை பகைப்பது மேற்குலகிற்கு பாதகமானது என்பதால் மேற்குலம் எச்சரிக்கை கலந்த ஆதரவே இலங்கை அரசுக்கு அளித்து வந்தது. ஆனால் தற்போது ஆசியப் பேரரசாக சீனா எழுந்துள்ள நிலையில் அதுவும் அது தனது இந்து மாகடல் ஆதிக்க நலனுக்காக நிபந்தனையற்ற ஆதரவை இலங்கை அரசிற்கு வழங்கக்கூடிய நிலையில் இந்தியாவை எதிர்கொள்ளவல்ல ஒரு சக்தியாக நீண்டகால நோக்கில் சீனாவை இலங்கை பார்க்கிறது.

ஆதலால் ஐ.தே.க, சு.க என்ற பழைய பனிப்போர்கால கட்சி வேறுபாடுகளைக் கடந்து இருகட்சிகளும் சீனாவை ஆதரிக்கவல்ல நிலையைக் கொண்டுள்ளன. இந்நிலையில் இந்த புதிய அரசியல் யாப்பில் மேற்குலகத்தை சமாளிக்கவல்ல வகையில் மனிதஉரிமைகள் சம்பந்தமான ஏற்பாடுகள் ஒருபுறமும் அதேவேளை சீனாவின் ஆதரவைப் பெற்று மேற்குலகையும், இந்தியாவையும் எதிர்கொள்வதற்கான பலத்தை நிலைநிறுவத்துவது இன்னொரு புறமும் இவற்றின் பின்னணயில் இனஒடுக்குமுறையை முன்னெடுப்பதற்கான யாப்பை பலப்படுத்துவதும் இன்னொருபுறமுமென முப்பரிமாணம் கொண்ட மூலோபாயத்தை இந்த புதிய யாப்பு கொண்டுள்ளது.

பிரித்தானியர் உருவாக்கிய டொனமூர், சோல்பரி யாப்புக்கள் காலனிய ஆதிக்கம் மற்றும் நவகாலனிய ஆதிக்கம் என்பனவற்றிற்குப் பொருத்தமாக உருவாக்கப்பட்ட நிலையில் சிங்கள தரப்பை திருப்திபடுத்துவதற்கேற்ற பெரும்பான்மை இனநாயக யாப்பு மரபை பிரித்தானியா வளர்த்து அதனை இலங்கையின் அரசியல் நடைமுறையாக்கினர்.

அந்த தளத்தில் அடுத்துவந்த முதலாவது குடியரசு அரசியல் யாப்பு பௌத்த மேலாதிக்கம், மற்றும் இருந்த இன உரிமைகள் பற்றிய பழைய யாப்பின் ஏற்பாடுகளைப் பறித்தல் என்பனவற்றை செய்தது. இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு சட்டசபை ஆதிக்க வளர்ச்சிக்கு அப்பால் நிர்வாக ரீதியான ஆதிக்கத்தையும், இராணுவ கட்டமைப்பு புலனாய்வு ஆதிக்கத்தையும் வளர்த்து அவற்றை தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை அரசியல் யதார்த்தமாக்கியது

அப்பின்னணியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அரங்கேற்றப்பட்டு தமிழினம் பேரழிவிற்கு உள்ளாக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அவமானங்களையும், தடைகளையும் நீக்குவதற்கும் புதிய ஆசிய வல்லரசாக எழுந்துள்ளதும், உலக வல்லரசாக எழுவதுமான சீனாவுடன் கூட்டுச் சேருவதற்கும், இந்தியாவிற்கு எதிரான தமது அரணை சீனா வாயிலாக வளர்ப்பதற்கு ஏற்றதாகவும் ஒரு புதிய அரசியல் யாப்பு பற்றிய உத்திக்கு இலங்கை அரசு போய் உள்ளது.

இதில் வடக்கு-கிழக்கு இணைப்பற்ற தீர்வு என்பதன் வாயிலாக இனப்பிரச்சனைக்கான தனது ஒடுக்குமுறையை மேலும் திடமாக முன்னெடுக்கவும், வளர்ந்திருக்கும் இராணுவ கட்டமைப்பை தமிழர் மீதான ஆதிக்க சக்தியாக விரிவாக்கவும் ஏற்ற வகையில் இந்த யாப்பு உருவாகிறது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக் கொண்டு தமிழருக்கு எதிரான இனஒடுக்குமுறையை அது இன்னொரு கட்டத்திற்கு முன்னெடுக்கிறது.

இப்பின்னணியில் வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பானது மேலும் இன அழிப்பை இலகுபடுத்துவதற்கேற்ற ஒன்றாகவே அமைந்திருக்கின்றது. இத்தகைய வடக்கு-கிழக்கு இணைப்பற்ற மாகாணசபை கட்டமைப்பு என்பதும் இன ஒடுக்குமுறைக்கான ஒரு முக்கிய கருவியாக்கப்பட்டிருப்பதை தமிழ்த் தலைவர்கள் புரிந்து கொள்வதாக இல்லை.

காலணி ஆதிக்க காலத்தில் இந்தியாவுக்கு எதிராக பிரித்தானியாவுடன் கைகோர்த்து தமிழர்களைப் பலியெடுத்த சிங்கள ஆட்சியாளர்கள் பின்பு பனிப்போர் காலத்தில் இந்தியாவுக்கெதிராக அமெரிக்காவுடன் கைகோர்த்து தமிழர்களைப் பலியெடுத்தனர். தற்போது சீனா ஆசியப் பேரரசாக வளர்ந்துள்ள நிலையில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் சவாலாக சீனாவை முன்னிறுத்தி தமிழர்களைப் பலியெடுக்கும் இன்னொரு சர்வதேச ரீதியான தளத்திற்கு முன்னேறியுள்ளனர். ஆனால் தமிழ்த் தலைவர்கள் இவையெதிலும் உணர்வற்ற மேம்போக்கான அரசியல்வாதிகளாகவே காணப்படுகின்றனர்.

பேரரசாக எழுச்சி பெறும் சீனாவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி. அதனை வாய்ப்பான வகையில் இலங்கையில் முன்னிறுத்தி இந்தியாவையும், அமெரிக்காவையும் கட்டுப்படுத்தும் தந்திரத்தில் இலங்கை முன்னேறுவதனால் இதன்வாயிலாக தமிழருக்கான உரிமைகளை மறுப்பது இலங்கைக்கு இலகுவாகிறது.

மறுபுறம் சீனாவை இலங்கை முன்னிறுத்துவதனால் தமிழ்மக்களுக்கான உரிமை விடயத்தில் இந்தியாவையும், அமெரிக்காவையும் பின்தள்ளவும் இலங்கையால் முடிகிறது. இங்கு சீன - இந்திய – அமெரிக்க முக்கோணப் போட்டியை இலங்கை முற்றிலும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது. மொத்தத்தில் இதற்கு தமிழர்களே முதற்பலியாகிறார்கள்.

இறுதி அர்த்தத்தில் தமிழர்கள் பலியாகுவது என்பது இலங்கை முழுவதிலும் சீனா மேலோங்குவதும் அதன் வாயிலாக தென்னாசிய மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா நீண்டகால அடிப்படையில் மேலாதிக்கத்திற்கான வலுவைப் பெறமுடிகிறது.

நடந்து முடிந்த இனப்படுகொலைப் பின்னணியில், இந்து மாகடலில் ஏற்பட்டிருக்கும் புதிய வல்லரச ஆதிக்கப் போட்டியின் பின்னணியில் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் பேரம் பேசும் சக்தி வானளாவ உயர்ந்திருக்கிறது. அதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் பயன்படுத்தி தமிழ்மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பதற்குப் பதிலாக இப் பேரம்பேசும் சக்தியை ஆட்சியாளர்களின் விருப்பங்களுக்கு இசைவாக அவர்களின் காலடியில் ஒப்படைத்துவிட்டு அடிதொழும் அரசியலால் தமிழ் மக்களின் எதிர்காலம் மீளமுடியாத அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லப்படுகிறது. 

9/26/2017 1:27:42 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்