Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

காலமிது காலமிது கண் உறங்கு மகனே

காலமிது காலமிது கண் உறங்கு மகனே
ஆழ்வாப்பிள்ளை

 

அன்றைய திரை உலகில் திலகங்களுக்குப் பஞ்சமே இல்லை. நடிகர் திலகம், நடிகையர் திலகம், மக்கள் திலகம், திரையிசைத் திலகம் என்று ஏகப்பட்ட திலகங்கள். அந்தத் திலக வரிசையில் இன்னும் ஒரு திலகம் இயக்குனர் திலகம். கேஎஸ்ஜி என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட கே.எஸ்.கோபாலகிருஸ்ணன்தான் அந்த இயக்குனர் திலகம்.

கே.எஸ்.கோபாலகிருஸ்ணனை இன்று எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்களோ தெரியாது. திரையுலகில் அறுபதுகளில் உச்சத்தில் இருந்தவர் இந்த கே.எஸ்.கோபாலகிருஸ்ணன். கூட்டம் கூட்டமாகப் படம் பார்க்க வந்தார்கள் என்பது இவரது படங்களுக்குப் பொருந்தாது. மாறாக குடும்பம் குடும்பமாகப் படம் பார்க்க வந்தார்கள் என்பதே சரியாக இருக்கும். ஐம்பது அறுபதுகளில் வந்த படங்கள் பெரும்பாலும் குடும்பப் பாணிகளைக் கொண்டவை. அதிலும் அனேகமானவை சோகங்களாகவே இருக்கும். படம் பார்க்க வருபவர்கள் தங்கள் தங்கள் வீட்டில் இருக்கும் சோகங்களையும் சேர்த்து தியேட்டர்களுக்குள்ளேயே இருந்து அழுது விட்டுப் போவார்கள். அப்படியான படங்களுக்கு இவர்தான் முன்னோடி. இவர் கதை வசன இயக்கங்களில் வந்த படங்களுக்கு குடும்பப் படம் என்று முத்திரைப் பதிவு நிச்சயம் இருக்கும்.

தம்பி என்றொரு கதையை ஓர் இளைஞரும், எதிர்பாராதது என்ற கதையை இன்னுமொரு இளைஞரும் எழுதி இருந்தார்கள். தயாரிப்புத் தரப்பில் இந்த இரண்டு கதைகளும் பரிசீலனையில் இருந்தன. இறுதியில் தெரிவு செய்யப்பட்ட கதை எதிர்பாராதது. எதிர்பாராதது கதையை எழுதியது சிறீதர். தம்பி கதை எழுதியது கே.எஸ்.கோபாலகிருஸ்ணன். கதை நிராகரிக்கப்பட்ட நிலையில் கே.எஸ்.கோபாலகிருஸ்ணனை தனக்குத் துணையாக சிறீதர் சேர்த்துக் கொண்டார். அந்தப் படத்தில் கே.எஸ்.கோபாலகிருஸ்ணன் காலத்தில் அழியாத ஒரு பாடலை எழுதியிருந்தார். ஏ.எம்.ராஜா ஜிக்கி இணைந்து பாடிய 'காதல் வாழ்வில் நானே கனியாத காயாகிப் போனேன் ...' என்ற பாடலே அது. பாடல்களை இவர் எழுத ஆரம்பித்ததால் இவருக்கு பட்டமும் வந்து சேர்ந்தது. குட்டைக் கவி என்பதே அப்பொழுது இவருக்குக் கிடைத்த பட்டம். உத்தம புத்திரன் படத்தில் 'உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதினாலே', அமரதீபம் படத்தில் 'நாணயம் மனுசனுக்கு அவசியம் ...' இரண்டுமே இவர் எழுதிய பாடல்களில் குறிப்பிடப்பட வேண்டியவை.

திரைப்படங்களுக்கு பாடல், கதை, வசனம் என்று இருந்தவரை இயக்குனர் ஆக்கியவர் கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசன். 1962இல் வெளிவந்த சாரதா என்ற வெற்றிப் படமே இவர் இயக்கிய முதல் திரைப்படம். ஆண்மை இழந்த ஒரு ஆண் தனது மனைவியை மறுமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளும் ஒரு புரட்சிகரமான விடயத்தை சாரதா திரைப்படத்தில் அறுபதுகளிலேயே இவர் துணிந்து கையாண்டு இருந்தார்.

பாடல், கதை, வசனம், இயக்கம் என்று ஒவ்வொரு படியாக ஏறி வந்தவர் அடுத்து தயாரிப்பாளர் ஆனார். இவர் தயாரித்த முதல்படம் தெய்வத்தின் தெய்வம். கற்பகம் திரைப்படம் இவரை உச்சத்துக்குக் கொண்டு போனது. அந்தத் திரைப்படத்தில் எல்லாப் பாடல்களையும் பி.சுசீலா பாடி இருப்பார். வாலி, மெல்லிசை மன்னர்கள் கூட்டில் 'மன்னவனே அழலாமா? கண்ணீரை விடலாமா?' 'அத்தைமடி மெத்தையடி ஆடி விளையாடம்மா', 'ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதலிரவு', 'பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் பிடிச்சான்' என்ற அற்புதமான பாடல்கள் கற்பகம் படத்தில் இருந்தன. கற்பகம் திரைப்படம்தான் கே.ஆர்.விஜயாவின் அறிமுகம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் கற்பகம் திரைப்படத்திற்கு முன்னரே அவர், 'மகனே உன் சமத்து', 'விளக்கேற்றியவள்' போன்ற திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பார். கே. எஸ். கோபாலகிருஸ்ணனின் கற்பகம் திரைப்படம்தான் கே.ஆர்.விஜயாவை பெரியளவில் இரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய படம். அந்த நன்றிக்காகத்தான் கே.எஸ்.கோபாலகிருஸ்ணன் கற்பகம் ஸ்ரூடியோவை ஆரம்பிக்கும் பொழுது கே.ஆர்.விஜயா தனக்குச் சொந்தமான நிலத்தை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.

பொதுவாகப் பெண்களை முன்வைத்தே கே.எஸ்.கோபாலகிருஸ்ணனின் திரைக்கதைகள் அமைந்திருக்கும். கைகொடுத்த தெய்வம், சித்தி, ஆயிரம் ரூபா, கற்கபம் என்று பல படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால் இவருக்கு பெண் இரசிகர்கள் அதிகம். ஒரு கட்டத்தில் பணமா பாசமா, குலமா குணமா, உயிரா மானமா என்ற பட்டிமன்றக் கேள்விகளுடனேயே இவரது படங்களுக்கான பெயர்கள் இருந்தன.

படப்பிடிப்புத் தளத்தில் இவரது உடை எளிமையாக இருக்கும். பனியன், நாலு முழவேட்டி என்பதே அங்கே இவரது அடையாளம். எளிமையான உடையாக இருந்தாலும் வலிமையான குணம் அவருக்கு. எந்த பெரிய நடிகர் ஆனாலும் தனது கருத்தைச் சொல்லி விடுவார். சங்கே முழங்கு படப்பிடிப்பில் எம்ஜிஆர், 'வசந்தா, வசந்தா' என்று வசனத்தை ஆரம்பிக்கும்; பொழுது, 'நீங்கள் வசந்தா ... வசந்தா என்று சொல்லும் பொழுது எனக்கு விசந்தா விசந்தா என்று காதில் கேட்கிறது' என்று கடிந்து கொண்டவர். கைகொடுத்த தெய்வம் திரைப்படத்தில் எஸ்எஸ்ஆர் எழுதிய கடிதத்தை தன் குரலில் வாசித்தால் நன்றாக வரும் என்று சிவாஜி சொல்ல, 'இது என் படம். நான்தான் டைரக்டர். நான் சொல்லுற படி நடியுங்கள்' என்று கட்டளை இட்டவர்.

பின்னாளில் தமிழ்த் திரையுலகம் நாடகபாணியில் இருந்து விலகிய பொழுது இவரது படங்கள் தோல்வியடைய ஆரம்பித்தன. இவர் கதை இயக்கத்தில் எஸ்.வி.ரங்கராவ், எஸ்.வி.சுப்பையா, பத்மினி நடித்து பெரு வெற்றியடைந்த கண்கண்ட தெய்வம் திரைப்படத்தை படிக்காத பண்ணையார் என்ற பெயரில் சிவாஜி, தேங்காய் சீனிவாசன் கே.ஆர்.விஜயா ஆகியோரை வைத்து இவர் 1985இல் தயாரித்த பொழுது அது தோல்வியாகிப் போனது.

இவர் தயாரித்த நாயக்கர் மகள் திரைப்படம் 1982இல் வெளிவந்தது. அந்தத் திரைப்படத்தை அப்பொழுது நான் திருச்சியில் ஒரு சினிமா அரங்கில் பார்த்தேன். அன்று இரசிகர்களின் கருத்தை அறிய கே.எஸ்.கோபாலகிருஸ்ணன் அவர்கள் அந்தத் திரையரங்குக்கு வந்திருந்தார். இரசிகர்களின் கருத்துக்கள் எதிர்மறையாகவே இருந்தன. அந்தக் கருத்துக்கள் அவருக்கு அன்று நிறைந்த மன வேதனையைத் தந்திருக்கும். அந்தப் படம் அவரது தோல்விப் படங்களில் ஒன்றாகிப் போனது.

அறுபதுகளில் அவர் நிறைய வெற்றிப் படங்களைத் தந்தார். காலத்துக்கு ஏற்ப அவர் மாறாததும், இயக்குனர் திலகம் என்ற நல்ல பெயருடன் ஒதுங்கி விடுவோம் என்று அவர் நினைக்காததும் பின்னாளில் அவரது சினிமா உலகில் தோல்விகளாகிப் போயின. ஆனாலும் அறுபதுகளில் அவரது திரைப்படங்களும் அதற்கு மேலாக அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களும் மிக வெற்றி பெற்றன. காலத்திலும் அழியாமல் இருப்பன.

சித்தி படத்தில் 'காலமிது காலமிது கண் உறங்கு மகளே... காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே..' என்ற பி.சுசிலா பாடும் ஒரு பாடல் இருக்கிறது.

அறுபதுகளில் எங்களை அதிகம் தன்பால் ஈர்த்த இயக்குனர் திலகத்திற்காக இப்பொழுது இப்படிச் சொல்லிக் கொள்கிறேன்

'காலமிது காலமிது கண் உறங்கு மகனே'

14.11.2015

11/15/2015 5:28:35 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்