Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

Big Boss தமிழக அரசியலை மாற்றுமா?

<p>Big Boss தமிழக அரசியலை மாற்றுமா?</p>
அரசு மாதவன்

 

Big Boss நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டபோது இது தமிழக அரசியலை மாற்றுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தால் இதென்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கேள்வி என வாசகர்கள் பலர் நினைத்திருந்திருக்கக்கூடும். Big Boss ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி. இதனைக் கொண்டு போய் அரசியலுடன் முடிச்சுப் போடுவதில் அர்த்தம் ஏதும் உண்டா என்றும் சிலர் எரிச்சலடைந்திருக்கக் கூடும். ஆனால் இக் கேள்வி எழுவதற்கான காரணம் தற்பொழுது வாசகர்கள் பலருக்குப் புரிந்திருக்கும். இதற்கான காரணங்கள் பற்றிப் பேசுவதற்கு முன்னர் Big Boss பற்றி சில விடயங்களை தொட்டுச் செல்வோம்.

இக்கட்டுரை ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது தினமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் Big Boss தமிழ் பற்றியே பேசுகிறது. நெதர்லாந்தைச் சேர்ந்த John De Mol உருவகப்படுத்திய Big Brother தொலைக்காட்சி நிகழ்ச்சியின் அடிப்படைகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட இந்த Big Boss நிகழ்ச்சி இந்தியாவில் முதலில் இந்தி மொழியிலேயே ஒளிபரப்பானது. இந்தி மொழியில் 11 தடவைகள் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியிருக்கிறது. தமிழில் இவ் வருடம் ஆனி மாதம் 26 ஆம் திகதி முதற்தடவையாக ஒளிபரப்பாகத் தொடங்கிய இந் நிகழ்ச்சியினை நடிகர் கமல்காசன் தொகுத்து வழங்கி வருகிறார். 100 நாட்கள் இந் நிகழ்ச்சி ஒளிபரப்பாகப் போகிறது.  இக் கட்டுரையினை எழுதும்போது இந் நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்து விட்டது. இக் கட்டுரை இந் நிகழ்ச்சி பற்றிய விபரங்களைப் பற்றிப் பேசவோ அல்லது விமர்சனங்களை முன்வைக்கவே முனையவில்லை.

Big Boss தமிழ் ஆரம்பித்த முதல் 2 வாரங்கள் நிகழ்ச்சி பெரிதாக சூடுபிடிக்கவில்லை. இந் நிகழ்ச்சி தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்றதொன்றல்ல என்ற விமர்சனங்களும் எழுந்தன. வர்த்தகர்கள் பலரும் விளம்பரங்களை வழங்குவதற்குத் தயங்கினார்கள். விளம்பர நேரத்தை தொலைக்காட்சியின் தொடர்கள் பற்றிய விளம்பரங்களைப் போட்டு நிரப்பினார்கள். தமிழக நண்பர்கள் சிலர் நிகழ்ச்சி தோல்வியடைந்து விடும் என்றும் எதிர்வு கூறினார்கள். ஆனால் நிகழ்ச்சி மெல்ல மெல்ல சூடுபிடித்து இன்று இந் நிகழ்ச்சி குறைந்தது 2 கோடி பார்வையாளர்களைத் தாண்டி விட்டது என்று கூறுகிறார்கள். விஜய் தொலைக்காட்சியின் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்தமை சண் தொலைக்காட்சியினையே அதிரச் செய்திருப்பதாக உட்தகவல்கள் சில தெரிவிக்கின்றன. Big Boss மக்கள் ஆதரவினைப் பெற்றதற்கு கமல்காசனுக்கும் ஓவியாவுக்கும் முக்கிய பங்குண்டு. Big Boss நிகழ்ச்சியினை பொதுவெளியில் விமர்சித்துக் கொண்டு வீட்டில் நிகழ்ச்சியினை ரசித்துப் பார்க்கும் பலர் எம் மத்தியில் உண்டு.

Big Boss அரசியல் பரிமாணத்தைப் பெறுவதற்கு கமல்காசனே முக்கிய பங்காற்றுகிறார். அண்மைக்காலத்தில் நடிகர்கள் அரசியல் பற்றிப் பேசுவதும் நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்து பேசப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதற்கு இரண்டு முக்கியமான காரணங்களைக் கூறலாம்.

முதலாவது தமிழ் அரசியல் தற்போது 'பெருந்தலைவர்கள்' அகன்ற களமாக மாறியிருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக தமிழக அரசியல் கலைஞர் கருணாநிதி ஆதரவு – எதிர்ப்பு அரசியலாகவே இருந்து வந்தது. கலைஞரைத் தோற்கடித்தவர்களாக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வரலாற்றில் தம்மை பதிவு செய்திருந்தனர். எம்.ஜி.ஆரை அவரது ஆயுட்காலத்தில் கலைஞரால் தோற்கடிக்க முடியவில்லை. ஜெயலலிதாவை கலைஞர் தோற்கடித்திருக்கிறார். எனினும் ஜெயலலிதா இயற்கை எய்திய போது கலைஞரைத் தோற்கடித்தவராகவே காலம் ஆகினார். ஜெயலிதாவின் இயற்கை மறைவும் கலைஞரின் அரசியல் மறைவும் தமிழகத்தில் புதிய தலைவர்கள் உருவாகுவதற்கான வாயப்பை உருவாக்கியிருக்கிறது. இரண்டாவது கடந்த 50 வருடங்களாக இருந்து வருகின்ற அரசியல் போக்கில் மாற்றம் ஏற்படவேண்டிய காலகட்டம் தமிழகத்தில் இயல்பாகவே உருவாகியிருக்கிறது. இதனால் புதிய தலைவர்கள் பற்றிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாயிருக்கிறது. இக் காரணங்கள் ரஜனி, கமல் போன்றோர்களின் அரசியற் பிரவேசம் குறித்த ஆர்வத்தை இவர்களது இரசிகர்களின் மத்தியில் உருவாக்கியிருக்கிறது.

Big Boss தமிழ் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு அது பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற எல்லையினைக் கடந்து தீவிர அரசியல் பேசும் நிகழ்ச்சியாகவும் இருக்கிறது என்பதனை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்கள் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்று மிகவும் கோபம் அடையும் பார்வையாளர்களிடம், ஏன் இந்தக் கோபத்தை அரசியல்வாதிகளிடம் காட்டவில்லை எனக் கமல் கேட்கிறார். இந்தக் கோபத்தைத் தேக்கி வையுங்கள். நேரம் வரும்போது அதனைக் காட்ட வேண்டும் என்கிறார். விருந்தாளியாக வந்த ஸ்ரீபிரியா இப்போதுதான் நாம் உண்மையானவர்களை அடையாளம் கண்டு வாக்களிக்க பழகி வருகிறோம் என Big Boss மக்களின் வாக்களிப்பு முறையில், வாக்களிப்புக்காகச் சிந்திக்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது என்ற எண்ணத்தை உருவாக்குகிறார்.

நீட் (NEET) தேர்வு முறையால் தனது மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டதை எதிர்த்து தன்னைத்தானே அழித்துக் கொண்ட மாணவி அனித்தா சண்முகம் குறித்து Big Boss நிகழ்ச்சியில் மிகவும் பரிந்து பேசிய கமல், கல்வி மாநிலங்களின் கைகளில் இருக்க வேண்டும் என்று ஒரு முக்கியமான கல்விக்கொள்கைக்கு ஆதரவினைப் பிரகடனப்படுத்துகிறார். நீட் தேர்வுமுறைக்கு எதிரான கருத்துருவாக்கத்தில் கமல் எடுத்த நிலைப்பாடும் அதனை Big Boss நிகழ்ச்சியின் ஊடாக மக்கள்மயப்படுத்தியதும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன என்று கூறலாம். Big Boss இல் ஒரு கட்டத்தில் ஒரு பெட்டியுடன் வந்த கமல், பெட்டியையும் அரசியல்வாதிகளையும் இணைத்துக் கிண்டல் பண்ணுகிறார். இவற்றின் எல்லாம் உச்சமாக தெளிந்த சுத்தமான சிந்தனையும் செயற்பாடும் கொண்டவர்களுக்கு வாக்களிக்கத் தயாராகுங்கள் என்ற கருத்தை முன்வைத்து நுனிவிரலில் கறைபடத் தயாராக இருங்கள் என்கிறார்.

Big Boss தமிழ் பேசும் அளவுக்கு ஏனைய Big Boss நிகழ்ச்சிகள் அரசியல் பேசும் என எண்ணுவதற்கில்லை. பலரும் எதிர்பார்ப்பதுபோல கமல் நேரடியான அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்ப்பதற்குமில்லை. இருந்த போதும் Big Boss தமிழகத்தின் அரசியல் போக்கில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான விதைகளைத் தூவுகின்றது தெளிவாகத் தெரிகிறது. கமல்காசனின் விருப்பத்திற்கு தொலைக்காட்சி நிறுவனம் இடம் கொடுக்கிறதா அல்லது இது ஒரு பெருந்திட்டத்தின் ஒரு பகுதியா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. Big Boss தூவும் விதை வளர்ந்து விருட்சமாகுமா என்பது நாளைக்கான ஒரு கேள்வி.

<p>Big Boss தமிழக அரசியலை மாற்றுமா?</p>

தமிழ்நாட்டு அரசியல் ஒரு மாற்றத்தை வேண்டி நிற்கிறது. அந்த மாற்றம் ஏற்பட வேண்டுமானால் ஒரு பெருந்திரள் அரசியல் (Mass politics) வளர வேண்டும். அரசியல் கட்சிகளை கேள்விக்குட்படுத்தும் மக்கள் இயக்கங்கள (Social movements) வளர வேண்டும். இதற்கு மக்களை தமது பிடிக்குள் வைத்திருக்கும் 'பொழுது போக்கு' ஊடகங்கள் முற்போக்கான தீவிர அரசியல் பேசுவது உதவும். Big Boss கமல் பேசும் அரசியலுக்கான நோக்கம் குறித்து தெளிவாகத் தெரியாவிடினும் அவர் பேசும் பல விடயங்கள் தமிழ்நாட்டுக்குத் தேவையாக இருக்கின்றன.

தானே முதன்மை விவசாயியாக நின்று கலப்பை பிடிக்கும் நோக்குடன் கமல் தமிழ்நாட்டு அரசியலுக்கு நீர் பாய்ச்சுவதாகத் தெரியவில்லை. இவர் பாய்ச்சும் நீரை எவர் பயன்படுத்தப் போகிறார்களோ? இது தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வருமா? மிகுதி மக்கள் கையில்! 

9/23/2017 2:44:17 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்