Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்: கொதிநிலத்தில் பகலவனை தேடும் குடிகள்!

<p>புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்: கொதிநிலத்தில் பகலவனை தேடும் குடிகள்!</p>
தெய்வீகன்

 

'புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்' ஆவணப்படம் தொடுக்கும் விசாரணைகளை முன்வைத்து.

நீண்ட வரலாறுடைய நாடொன்றின் பெறுமதிகளை தீர்மானிக்கும் முக்கிய அளவீடுகளில் அதன் நிலப்பரப்பு எனும் விடயம் அதிமுக்கியமானது. பண்டைய வரலாறுகள் முதல் இன்றைய அரசியல்வரை அனைத்து பிரச்சினைகளினதும் பிரதான புள்ளிகள் நிலமும் அது சார்ந்தவையுமாக இருக்கின்றன.

ஓர் இனத்தின் ஆழமான இருப்பும் அதன் பாரம்பரிய பெறுமானங்களும் நிலத்தை மையமாக கொண்டுதான் வரையறை செய்யப்படுகிறது. அதை தக்கவைத்திருக்கும் இனத்துக்கும் கைப்பற்றிய மன்னர்களுக்கும் இந்த வரலாறு வீரம் என்ற உயரிய மாண்பை பொருத்தி பார்த்திருக்கிறது. அவர்களை உதாரண மக்களாக முன்னிறுத்தியிருக்கிறது. அதேபோல, எதிர்மறையாக பார்த்தால், நிலத்தை இழந்தவர்களையும் அடைய முடியாதவர்களையும் இதே வரலாற்றின் ஒவ்வொரு காலப்பகுதியும் ஏளனம் செய்திருக்கிறது. அல்லது பரிதாபமான பாத்திரங்களாக சித்திரித்திருக்கிறது.

தமிழர்களது ஆயுதப் போராட்டம்கூட நிலங்களை பிடித்தல் என்ற கோட்பாட்டின் ஊடாக வளர்ச்சியடைந்ததுதான். அதன் அடிப்படையில்தான் முக்கியமான பேரங்கள் பேசப்பட்டன. அவை முறிவடையும்போது – நீதி யார் பக்கம் இருந்தது என்பதற்கு அப்பால் - அதிக நிலங்களுக்கு உரித்துடையவர்களைத்தான் மக்களே சார்ந்திருக்கிறார்கள்.

இன்றைய அரசியல் நீரோட்டம்கூட காணி உரிமைகளை பெற்றுக்கொள்ளுதல் என்ற பொறிமுறையின் முக்கியமான திருப்பத்தில்தான் இடறி விழுந்துபோய் கிடக்கிறது.

ஓர் இனத்தின் அரசியல் உரிமைகளை பாரதீனப்படுத்துவதற்கு பரந்த சிந்தனைத்திறன் உடைய சமூகம் எவ்வளவு முக்கியமாகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த சமூகத்தின் வாழ்வாதாரத்துக்கு செழுமையான நிலப்பரப்பும் அவசியமாகிறது. வளங்கள் எதுவுமற்ற வரண்ட பிரதேசங்களாக அல்லாமல் எல்லா வகையிலும் 'புண்ணியபூமியாக' நிலைக்கவல்ல வாழ்நிலங்கள் இனக்குழுமங்களின் நிரந்தர சொத்துக்களாக அமைவது வரலாற்றில் மிகப்பெரிய அதிஷ்டம். அப்படிப்பட்ட செழிப்பான நிலங்கள் கிடைத்தும் கை தவறுவது என்பது அந்த இனத்தின் மிகப்பெரிய பரிதாபம்.

இந்த பொதுப்புள்ளிகளை இணைத்து வரையப்பட்டுள்ள மிகக் கனதியான ஆவணப்படம் - 'புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்'

மிகப்பெரும் அழிவிலிருந்து தம்மை காப்பாற்றிக்கொள்வதற்காக ஆயுதமேந்தி போராடிய தமிழினம், இன்று அந்த போராட்டத்தினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து எழுந்து வருவதற்காக மீண்டும் போராடிக்கொண்டிருக்கிறது. மொத்தத்தில், போராட்டம் என்பது தமிழினத்தின் நிரந்தர தழும்பாகிவிட்டது. ஆகவே, எதிர்காலத்திலும் இதன் அடையாளங்கள் அனைத்தும் இந்த போராட்டத்தின் பங்குபொருட்களாகவே இருக்கப்போகின்றன.

<p>புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்: கொதிநிலத்தில் பகலவனை தேடும் குடிகள்!</p>

இந்த பேருண்மையை தனது ஆவணப்படத்தில் அலாரம் அடித்துக் காண்பித்திருக்கும் இயக்குநர், இதனை எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய மிகப்பெரிய ஆபத்துக்கான குறியீட்டு பதிவாகவும் முன்வைத்திருக்கிறார்.

ஈழத்தின் வடமேற்கு பிரதேசத்திலுள்ள ஏழு சிறு தீவுகளின் ஒரு தீவான புங்குடுதீவினை தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் போர் தின்னும்போது அதிலிருந்து சுமார் இருபதினாயிரம் பேர் இடம்பெயர்ந்து போகிறார்கள். ஐந்து வருடங்களாக ஆளரவமற்ற பேய் நிலமாகக் கிடக்கும் அந்த தீவுப்பகுதி 95 ற்கு பின்னர் மீண்டும் புதுவனப்பை பெற்றுக்கொள்கிறது. ஆனால், முன்னர் இடம்பெயர்ந்தவர்களில் இருபது சதவீதமானவர்கள்தான் மீண்டும் அங்கு குடியமர்கிறார்கள். மீதிப்பேர் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் தங்கள் வாழ்விடங்களை மாற்றியமைத்துக்கொள்கிறார்கள்.

இந்த நிலைமாறு கட்டத்தை இன்னொரு வடிவத்தில் குறிப்பிடுகின்ற ஒரு பாத்திரம் இப்படி சொல்கிறது.

'1991 ஆம் ஆண்டு இடப்பெயர்வுக்கு முன்னர் இங்கு வாழ்ந்த மக்களில் 85 சதவீதமானவர்கள் உயர்சாதியினர். ஆனால், 96இல் மீளக்குடியமர வந்த மக்களை பார்த்தால், அவர்களில் 15 சதவீதமானவர்கள் மாத்திரமே உயர்சாதியினர்'

இந்த சாதிப்பிளவுகளும் அங்கிருந்து வெளிக்கிளம்பிய மக்கள் எவ்வாறு இதனை ஊதி வளர்த்திருக்கிறார்கள் என்ற பரிதாபகர நிலையையும் இந்த காணொளியின் முதற்பாதி மிகத்துணிச்சலுடன் பதிவு செய்திருக்கிறது.

மீளக்குடியமர்ந்த மக்கள் தமக்கான வணக்கத்தலங்களை நாடிச்செல்லும்போது அங்கு சாதி அடிப்படையில் விலத்திவைக்கப்படுகிறார்கள். சில சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் ஒரு சில வருடங்களில் மீண்டும் புறந்தள்ளப்படுகிறார்கள். இவர்கள் தமக்கெதிரான அடக்குமுறையை எதிர்த்து தமது தகுதிகளை நிரூபணம் செய்ய தலைப்படுகிறார்கள். 'அவர்கள் சார்ந்த' புலம்பெயர்ந்த உறவுகளின் உதவிகள் வந்து குவிகின்றன. அதன் விளைவாக ஒவ்வொரு சாதிக்குழுமங்களும் 'தங்களது கட்டுப்பாட்டில்' தாங்கள் சென்று வருவதற்கு சுதந்திரமான வணக்கத்தலங்களை உருவாக்குகிறார்கள். மரத்தடியில் கிடந்த சாமி சிலைகளுக்கு எல்லாம் மண்டபங்கள் முளைத்தன. குளத்தடியில் வைத்து கும்பிட்ட சாமிகள் எல்லாம் கும்பாபிஷேக தகுதியை பெற்றுக்கொண்டன.

ஆண்டவர்களின் இந்த பரிணாம நீட்சிக்கு ஆதாரமாக காணொளியில் தகவல் சொல்லும் ஒருவர் 'வருடமொன்றுக்கு புங்குடுதீவிலுள்ள கோவில்களை புனருத்தாரணம் செய்வதற்கு வெளிநாடுகளிலிருந்து மாத்திரம் 20 கோடி ரூபா பணம் வந்து குவிகிறது'– என்கிறார்.

கனடாவில் முப்பது வருடங்கள் வாழ்ந்த பெரியவர் ஒருவர் தனது மனைவிக்கு ஏற்பட்ட ஞாபக மறதி நோயை குணப்படுத்துவதற்கு, சொந்த ஊரான புங்குடுதீவுக்கு சென்று அங்கு நிரந்தரமாக குடியேறுகிறார். தனது மனைவிக்கு பழைய நினைவுகள் திரும்புவதற்கு அந்த ஊர் காட்சிகள் ஒரு மருந்தாகலாம் என்ற நம்பிக்கையுடன் இன்னமும் அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் இவர் இந்த ஆவணப்படத்தின் உரையாடலை தாங்கிச்செல்லுகின்ற முக்கியமான கதை சொல்லியாகும்.

அவர் உட்பட அனைத்து கதை சொல்லிகளும் புலம்பெயர்ந்த மக்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகின்றனர்.

முதலாவது இடப்பெயர்வுக்கு முன்னர் எல்லா வகையிலும் தன்னிறைவு கொண்ட செழுமையான தீவாக விளங்கிய புங்குடுதீவு இன்று குடிதண்ணீருக்கு கூட வெளியிலிருந்து வரும் பௌசர் வண்டிகளுக்கு எதிர்பார்த்திருக்கவேண்டியிருக்கிறது என்கிறார்கள்.

மூன்றடி தோண்டினால் நன்னீர் கிடைத்த அந்த தீவில் இன்று நல்ல தண்ணீர் கிடைப்பது சிரமமாக மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் அங்கு விவசாயம் செய்யும் நிலை படிப்படியான குறைந்துவிட்டது. கால்நடைகளை பராமரிப்பதற்கு தீவிலே ஆட்கள் இல்லாமல், கட்டாக்காலிகளின் வளர்ச்சி பெருகிக்கொண்டே செல்கிறது. இவற்றுக்கென்று ஒரு பண்ணை எதுவும் இல்லாத காரணத்தால் நெற்செய்கை முதல் எதையும் புங்குடுதீவில் தொடர்ச்சியாக செய்வது மிகவும் கடினமாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் ஒருபோகத்திற்கு பெயர்போன தீவு வெங்காய பயிர்ச்செய்கை இன்று சாத்தியமே இல்லாத ஒன்றாக மாறிவிடும் நிலமைக்கு புங்குடுதீவின் நிலமும் வளமும் கைவிடப்பட்டு வருகிறது. இவற்றை மீறி மேற்கொள்ளப்படும் விவசாயத்தினை கட்டாக்காலிகள் மேய்ந்து அழித்துவிடுகின்றன.

மரங்களை காவாத்து பண்ணி பராமரிக்கும் வேலைகளோ பனை தென்னைகளின் பயன்களை சரியாக பேணிக்கொள்வதற்கான வேலைகளோ எதுவுமே மேற்கொள்ளப்டுவதில்லை.

புலம்பெயர்ந்த அனைத்து நாடுகளிலும் இந்த ஊரின் பெயரில் அமைப்புக்களை வைத்திருப்பவர்கள் கோடிக்கணக்கில் இங்கு பணத்தை இறைத்து ராஜகோபுரங்களை கட்டி மணிமண்டம் முதல் மடப்பள்ளிவரை தங்களது பெயர்களை பொறித்து அழகு பார்க்கிறார்கள். தங்களது சொந்த வீடுகளையும் காணிகளையும் வந்து பார்த்துவிட்டு படமெடுத்துக்கொண்டு போகிறார்கள். ஆனால், யாருக்கும் அதனை கொடுக்கவோ அல்லது தாங்களாவது பராமரிப்பதற்கோ ஆவன செய்வதில்லை. இந்த சிறு தீவின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு செயற்படுவதில்லை. இந்த மண்ணையும் மக்களையும் இங்கு வற்றிப்போகும் வளங்களையும் நூதனப்பொருட்களாக கண்டு களிப்பதற்கே அவர்கள் விரும்புகிறார்கள்.

மறுபுறத்தில், பல ஆபத்துக்களால் இந்த தீவு தற்போது சூழ்ந்துகொண்டிருக்கிறது.

1) இந்த தீவுக்கு படையெடுக்கும் சிங்கள மக்கள், சிங்கள தொழிலாளர்கள் அனைவரும் இந்த மண் மீதான தங்களது மிகுந்த ஈடுபாட்டினை நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக காண்பித்த வண்ணமுள்ளனர்.

2) இங்குள்ள வெறுமையான காணிகள் மற்றும் கைவிடப்பட்ட வீடுகள் - வெளிநாடுகளிலுள்ளவர்களின் சொத்துக்கள் என்று அனைத்தும் அரசாங்கத்தினால் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.

3) இங்குள்ள மக்களே வெற்றுக்காணிகளை வெளிநாட்டிலுள்ளவர்கள் தராவிட்டால் தாங்களே அடாத்தாக கையகப்படுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை. அவ்வாறான ஒரு கட்டத்தில் 'வெவ்வேறு காரணிகளை' முன்வைத்து கலவரங்கள் மூண்டெரிவதற்கு வாய்ப்புக்கள் உண்டு.

4) எல்லாவற்றிற்கும் மேலாக இங்கு நடைபெறும் குற்றச்செயல்கள் எதற்குமே பொலிஸார் உடனடியாக வருவதில்லை. பத்து நாட்கள் கழித்துதான் 'குசலம்' விசாரிக்க வருகிறார்கள்.

இப்படி இந்த காணொளியில் ஏகப்பட்ட பிரச்சினைகளை உண்மைகள் கொதிக்க கொதிக்க படம்பிடித்திருக்கிறார் இயக்குனர்.

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம், இந்த தீவின் மக்கள் வாக்களித்த அரசியல்வாதிகளின் பதில் என்ன, இந்த பிரதேசத்தில் அரசியல்வாதிகள் செலுத்திவரும் வகிபாகம் என்ன என்பவை எல்லாம் படத்தில் முற்றாக தவிர்க்கப்பட்டிருப்பது ஒரு குறையாக காணப்பட்டாலும் -

முன்னிலைப்படுத்தப்படும் ஆபத்தும் அபாயமும் மக்களால் முறியடிக்கப்படவேண்டிய கூட்டுப்பொறுப்பு என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

இங்கு படையெடுக்கும் சிங்கள மக்களின் ஆர்வம் குறித்து யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் கருத்து கூறுகையில் -

'சிங்கள மக்கள் முதலில் இப்படியான பிரதேசங்களை சுற்றுலா தலமாக பார்வையிடுவர். பின்னர், தங்கள் மதவழிபாட்டு தலமாக மாற்ற முனைவர். அதற்கு பின்னர், தங்கள் வாழ்விடங்களாக மாற்றிக்கொள்வர். ஏனென்றால், அவர்களுக்கு கடலுணவு மிகவும் பிடிக்கும்' – என்றார்.

'புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்' – தற்போதைய வரலாற்றில் ஒவ்வொரு தமிழனும் எதிர்கொள்ளும் யதார்த்த வலிகளின் ஒற்றை உதாரணம். இந்த ஆவணக் காணொளி ஒவ்வொரு ஊருக்கும் பொருந்தும். சொல்லப்போனால், முழு தமிழ் நிலத்துக்கும் பொருந்தும்.

ஏகாதிபத்தியத்திடம் உரிமைகளை அடித்துப்பெறவேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் முதலில் எங்களின் மடியில் உக்கிச் சீரழிந்துகொண்டுபோகும் உரிமைகளை சீர்படுத்தவேண்டும் என்று முகத்திலறைவதற்கு இந்த காணாளி எம்மை நோக்கி கை நீட்டுகிறது.

அந்த குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ளவேண்டிய புள்ளியில்தான் இன்றுவரை அனைத்து தமிழர்களும் கூடிக்கிடக்கிறோம்.

மாடுகளுக்கு குறி சுடுவதைப்போல எழுதி வைத்துவிட்டு வளங்களை உரிமை கோருவதால் எந்த பயனும் இல்லை. அவற்றை விருத்தி செய்வதில்தான் செழுமை தங்கியிருக்கிறது.

ஆவணப்படம் - புங்குடுதீவு சிதைவெறும் நிலம்

இயக்குனர் - தங்கேஸ் பரஞ்சோதி

காட்சி மற்றும் உருவாக்கம் - ஞானதாஸ் காசிநாதன்

10/22/2016 9:59:41 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்