Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா?

<p>கமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா?</p>
அரசு மாதவன்

 

Bigg Boss நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் கமல்ஹாசன் அரசியலில் குதிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. கமலின் நடத்தையும் இவ் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். சற்று உன்னிப்பாக அவதானித்தால் தான் முதலமைச்சராக வேண்டும் என்று விருப்பம் கமல்ஹாசனின் உள்மனதில் எழுந்துள்ளது போலவும் தெரிகிறது.

Bigg Boss தமிழின அரசியலை மாற்றுமா என்று கட்டுரையினை எழுதும்போது கமல் நேரடியாகத் தேர்தல் அரசியலில் குதிப்பதற்கான வாய்ப்புக் குறைவு என்ற அவதானிப்பே இக் கட்டுரையாளருக்கு இருந்தது. இதற்கு மூன்று காரணங்கள் இருந்தன.

முதலாவது, தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் தேர்தல் அரசியல் என்பது பெரும் கோடிகள் புரளும் அரசியற் தொழிலாகிவிட்டது. தேர்தல் அரசியலில் வெற்றி பெறவேண்டுமானால் பெரும் கோடிகளை, கமல் பேசும் அரசியல் அறநெறியையெல்லாம் மீறிய வகையில் அள்ளி வீச வேண்டும். இத் தொகை சினிமாவில் புரளும் கோடிகளை விட எத்தனையோ மடங்கு அதிகம். இக் கோடிகளுடன் புரளும் விளையாட்டை பணவிடயத்தில் கவனம் கொண்ட கமலால் செய்ய முடியுமா என்பது முதலாவது காரணம்.

இரண்டாவது, MGR, ஜெயலலிதா தவிர்ந்த எந்த நடிகர்களாலும் தமிழகத் தேர்தல் அரசிலில் வெற்றி பெற முடியவில்லை. இவர்கள் இருவரது அரசியற் பின்புலமும் கமலை விட வேறுபட்டது. MGR கட்டிய மாளிகையிலேயே ஜெயலலிதா குடிபுகுந்தார். கருணாநிதி பெருந்தலைவராக வளர்ச்சியடைய முன்னரே அவருக்குக் குறையாத செல்வாக்கை MGR தி.மு.க.வில் கொண்டிருந்தார். கருணாநிதி திமுக தலைவராக வந்ததற்கு MGR அவருக்கு வழங்கிய ஆதரவும் முக்கியமானதொரு காரணம். சினிமா ஊடாக ஒரு சமூகநீதிப் போராளி என்ற பிம்பத்தை MGR பெற்றிருந்தார். மிகவும் வலுவான இரசிக மன்றங்கள் அவருக்கு இருந்தன.  MGR க்கு இருந்த பலம் கமலுக்குக் கிடையாது. இதனை கமல் நன்றாகப் புரிந்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு இரண்டாவது காரணம்.

மூன்றாவது, தேர்தல் அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் முழு நேர அரசியலில் ஈடுபடுவது அவசியமானதாக இருக்கும். கமல் போன்ற கலைஞர்களால் சினிமாவை விட்டு முழு நேர அரசியலில் ஈடுபடமுடியுமா என்ற கேள்வி என்பது மூன்றாவது காரணம்.

கமல் தற்போது வெளிப்படுத்திவரும் கருத்துகள், அவர் நடந்து கொள்ளும் முறை தேர்தல் அரசியிலின்மீது அவருக்கு இருக்கும் நாட்டத்தை வெளிப்படுத்துகின்றன. தற்போது இருக்கும் அரசியல் தலைவர்களை விடத் தன்னால் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என அவர் நம்புவதாகத் தெரிகிறது. இருந்த போதும் அரசியலில் இறங்குவது மிகவும் சவால் மிகுந்தது என்பதனை அவர் உணர்ந்திருக்கிறார் என்பதனை உணர முடிகிறது. «மக்கள் விரும்பினால் வருவேன். மக்களுக்குப் பிடிக்காவிட்டால் போய் விடுவேன்» என்ற பாணியிலான கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்.

ஏதாவது ஒரு பெரிய அரசியல்கட்சி இவரைத் தத்தெடுத்து தலைமைப் பாத்திரம் கொடுத்தால் மட்டுமே இவர் வெளிப்படுத்தும் இக் கருத்துக்கள் பொருந்தக்கூடும். நடைமுறையில் அதற்கான வாய்ப்பேதும் இல்லை. இதனால் கமல் அரசியல் குதித்து நீந்தித்தான் தனக்கு மக்கள் ஆதரவு உண்டா என்பதனை கண்டு கொள்ள வேண்டி வரும். இது மிகவும் ஆபத்து நிறைந்த விளையாட்டு என்பது கமலுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இதனால் இவர் தேர்தல் அரசியலில் குதிப்பாரா என்பது குறித்த முடிவுகளுக்கு தற்போது முழுமையாகப் போய்விட முடியாத நிலையும் இருக்கிறது.

கமல் அரசியலில் குதிப்பது தொடர்பாக பல்வேறு ஊகங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவர் எதற்காக அரசியலில் இறங்குவதற்கு முயற்சிக்கிறார் என்பது தொடர்பாகப் பல்வேறு வகையான 'கதைகள்' உலவுகின்றன. இக் கதைகளின் பின்னணியில் பிரதானமாக இரு பிரிவினர் உள்ளனர்.

<p>கமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா?</p>

ஒரு பிரிவினர் கமலை நேர்மையுடையவராகவும் அவரது அரசியல் ஈடுபாட்டை சாதகமாகவும் அணுகுபவர்கள். கமல் அரசியலுக்கு வருவது தமிழக அரசியலுக்குச் சாதகமானது என இவர்கள் நம்புகிறார்கள். தமிழகத்தின் அரசியல் தலைவர்களிடம் ஊழல் மிகுந்திருப்பதால் புதிய அரசியல் தலைவர்களின் வருகையை எதிர்பார்ப்பவர்கள் இவர்கள். தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல் பின்னணியில் இவர்கள் கமலைத் தமிழ் பிராமணராகப் பார்க்கிறார்கள் அல்லது பார்பனிய எதிர்ப்பு அரசியலை இவர்கள் நிராகரிப்பவர்களாகவோ பொருட்படுத்தாதவர்களாகவோ இருக்கிறார்கள். கமலின் இரசிகர் மன்றத்தினருக்கு கமல் எது செய்தாலும் கொண்டாட்டமாகத்தான் இருக்கும். அவர் அரசியலுக்கு வருவதும் அவ்வாறுதான்.

கமலின் அரசியல் வருகையை இரசிக்காதவர்களும் எதிர்ப்பவர்களும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள். இவரது வருகையை இரசிக்காதவர்களுக்கு நல்லதொரு கலைஞர் அரசியலுக்கு வருவதனால் அந்தக் கலைஞனை இழந்து விடப் போகிறமோ என்ற கவலை இருக்கிறது. இவர்கள் கமல்மீது ஒரு கலைஞனாக நல்லபிப்பிராயம் கொண்டிருப்பர்கள்.

அடுத்த தரப்பினர் கமலின் அரசியலை எதிர்ப்பதனால் அவரது அரசியல் வருகையையும் எதிர்க்கிறார்கள். கமலின் அரசியல் வருகைக்குப் பின்னால் தமிழகத்துக்குள் கால்பதிக்க முயலும் பாரதிய ஜனதா கட்சியின் தொடர்பு இருக்கிறது என இவர்கள் கருதுகிறார்கள். நேரடியாக கமல் பாரதிய ஜனதா கட்சியுடன் தன்னை அடையாளப்படுத்தப் போவதில்லை என்றாலும் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் செல்வாக்கை வீழ்த்துவதற்கான முதற் கருவியாகக் கமல் பயன்படுத்தப்படுகிறார் என்ற கருத்தும் இவர்கள் மத்தியில் உண்டு. ரஜனியின் அரசியற் பிரவேசம் நடைமுறைச் சாத்தியம் குறைந்தது என உணர்ந்த பின்னரே கமல் அரசிலுக்குள் நுழைவதற்குத் தூண்டப்பட்டதாகவும் கதைகள் உலவுகின்றன.

எது என்னவாக இருந்தாலும் கமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா என்பது இன்றுவரை பலரும் ஆவலுடன் அவதானிக்கும் விடயமாகவே உள்ளது. கமல் அரசியலில் குதித்தாலும் அது அவரை சுட்டெரித்துவிடக்கூடிய வெப்பம் நிறைந்த வெளியாகத்தான் இருக்கும். இந்த வெப்பத்தைத் தாங்கக்கூடிய சக்தியும் மனவலிமையும் அவருக்கு உண்டா? திரைப்படத்தை பார்க்கும் இரசிகர்கள் பணம் கொடுத்துப் பார்த்து கரவொலி எழுப்புகிறார்கள். ரசிகர்களின் பாராட்டைப் பணமழையாக கமல் மாற்றி வந்திருக்கிறார். தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதானால் பணம் கொடுத்து வாக்காளர்களின் ஆதரவினைப் பெறவேண்டியிருக்கும். வாக்காளர்களின் விரல்களின் வாக்களிப்பு மையினை விட வேறு எந்தக் 'கறையும்'படாத அரசியற் பண்பாட்டை கமல் வலியுறுத்துகிறார். இத்தகைய அரசியற் பண்பாட்டை ஏற்படுத்துவதானால் மாபெரும் பண்பாட்டு பரட்சியினைச் செய்து அதனூடான பண்பாட்டு மலர்ச்சியினை ஏற்படுத்த வேண்டியிருக்கும்.

தேர்தல் அரசியலில் குதிப்பதனை விட தமிழக அரசியற் பண்பாட்டை மாற்றுவதற்கான பணியினை தேர்தல் அரசியலில் குதிக்காமல் செய்வதே கமல் தனது முகத்தினைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உகந்தவழியாக இருக்கும்.

கமல்ஹாசன் என்ன செய்யப் போகிறார்?

10/14/2017 4:03:34 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்