Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஏழ்வர் விடுதலையை தீர்மானிக்கும் உரிமை தமிழக அரசுக்கு உண்டு  

ஏழ்வர் விடுதலையை தீர்மானிக்கும் உரிமை தமிழக அரசுக்கு உண்டு  
வழக்கறிஞர் துரைசாமி நேர்காணல்

 

கடந்த பிப்ரவரி 18ம் தேதியன்று, மூவர் தூக்கை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், அவர்களை விடுதலை செய்யும் முடிவை மாநில அரசு எடுக்கலாம் என்கிற வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை உச்சநீதிமன்றம் வழங்கியது. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பட்டாசுகளை வெடித்து மக்கள் கொண்டாடினர். சென்னை கோயம்பேடு செங்கொடி மன்றத்தில் நடிகர் சத்யராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன், மரண தண்டனைக்கு எதிரான கூட்டமைப்பினர், பெரியார் திராவிடர் கழத்தினர், தமிழ் தேசிய நண்பர்கள் என பலரும் கூடி அற்புதம்மாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். அந்த மகிழ்ச்சி அடுத்த நாள் தமிழக முதலமைச்சர் சட்டசபையில் மூவர் உட்பட, ஆயுள் தண்டைனை கைதிகள் நால்வரையும் சேர்த்து மூன்று நாட்களுக்குள் விடுதலை என்று அறிவித்தவுடன் இரட்டிப்பானது. ஆனால், அந்த மகிழ்ச்சியை தவிடு பொடியாக்கும் வண்ணம், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தொடுத்தது. இதனால் மாநில அரசு இந்த ஏழ்வர் விடுதலையில் மத்திய அரசை கலந்து ஆலோசிக்கவில்லை என்று குற்றச்சாட்டை சுமத்தி விடுதலையை தள்ளிப்போட்டது.

இந்த சூழ்நிலையில், கடந்த 23 ஆண்டுகளாக ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்காக வாதாடி வரும், போராடி வரும் மூத்த வழக்கறிஞர் துரைசாமி அவர்களை சந்தித்தோம். இவ்வழக்கை ஆதியிலிருந்து கையாண்டு வரும் அவருடன் இந்த வழக்கு குறித்து விரிவான உரையாடலை மேற்கொண்டோம்.

***

எதன் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்று நீங்கள் போராடி வருகீறீர்கள்?

(புன்முறுவலுடன்) கொலையை அவர்கள் செய்யவில்லை என்கிற அடிப்படையில் (பின் சட்ட நுணுக்கங்களுடன் அதனை விவரிக்க ஆரம்பித்தார்). இராஜீவ் காந்தியை கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகள் சிவராசன் மற்றும் தனு. தனு அந்த இடத்திலேயே உடல் சிதறி இறந்து போய்விட்டார் என்பது காங்கிரசுக்காரர்கள் உட்பட அனைவரும் அறிந்ததே. 302வது பிரிவின்படி தான் ஒருவருக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது. அதன்படி கொலை செய்தவனுக்கு கொலைத் தண்டனை என்பது நமது சட்டத்தின் சாரம். அந்த வகையில் கொலை செய்தவன்தான் இறந்து விட்டானே. கொலையில் நேரடியாக ஈடுபடாத பேரறிவாளன் உட்பட அனைவருக்கும் மரண தண்டனை விதிப்பது முறையாகாது. 2003- ம் ஆண்டு கே.ஆர். நாராயணன் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த போது, கொலையில் நேரடி பங்களிப்பு இல்லாத பேரறிவாளன் உட்பட மூவருக்கு மரண தண்டனை விதிப்பது எந்த வகையில் சரியாகும் என்று அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானியிடம் விளக்கம் கேட்டார் என்பது பதிவு. அதற்கு அப்போதைய உள்துறை அமைச்சகம் பதில் சொல்லவே இல்லை. இப்போதைய உள்துறை அமைச்சகத்திடமும் பதில் இல்லை. அதற்கு பிறகு, அப்துல் கலாமும் கே.ஆர்.நாராயணன் அவர்களுடைய கருத்தை முன்மொழிவதைப் போல அமைதி காத்தார். ஆக, இவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தது சரியாகாது என்பதை நான் சொல்லவில்லை. இரண்டு முன்னாள் குடியரசுத் தலைவர்களே கூறியிருக்கிறார்கள் என்பதை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பேரறிவாளன் உட்பட மூவரை விடுவிப்பது இந்திய இறையாண்மையை பாதிக்கக்கூடிய செயல் என்று காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனரே?

91-ம்ஆண்டிலே நளினியின் தாயார் பத்மாவை மருத்துவ தேவைக்காக பிணையில் விடுவிக்க நான் கோரிக்கை விடுத்த போது, இந்திய இறையாண்மை பாதிக்கப்பட்டுவிடும் என்கிற பல்லவியை பாடினர். ஆனால் 99-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பத்மாவை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்தே தீர்ப்பளித்தது. பத்மா வெளியில் வந்து இத்தனை ஆண்டுகளில் எத்தனை குண்டுகள் வெடித்தன? நாடு அமைதியாகத்தானே இருக்கிறது. நான் சொல்வதை அப்படியே போட்டு கொள்ளுங்கள்.. இந்திய இறையாண்மை என்று இவர்கள் புலம்புவது சுத்த பைத்தியக்காரத்தனம்.

இந்த வழக்கு தடா சட்டத்தின் கீழ்தானே தொடுக்கப்பட்டது?

ஏழ்வர் விடுதலையை தீர்மானிக்கும் உரிமை தமிழக அரசுக்கு உண்டு  

ஆம். 1991-ம் ஆண்டு மே 30-ம் தேதி தடா சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. சூன் 15-ம் தேதியே இந்த வழக்கு தடா சட்டத்தின் கீழ் வராது என்று நான் வாதிட்டேன். ஏனென்றால், ஒரு நாட்டிற்கு எதிராகவோ அல்லது ஒரு அரசையோ கவிழ்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றால்தான் அது தடா சட்டத்தின் கீழ் வரும். நாங்கள் சொன்ன இதே கருத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாமஸ், வாத்வா, காதிர்ஜா ஆகியோரும் வலியுறுத்தி, இந்த வழக்கு தடா சட்டத்தின் கீழ் வராது என்று தீர்ப்புரைத்தனர். அது மட்டுமல்ல, முன்னாள் பிரதமர் ஒருவரின் கொலை மட்டுமல்ல, இன்னாள் பிரதமர் ஒருவர் இறந்தால் கூட அது தடா சட்டத்தின் கீழ் வராது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதிபட கூறினர். ஆக இந்த வழக்கு தனிமனிதன் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக நிகழ்த்தப்பட்டதேயன்றி, இந்திய அரசின் மீது நிகழ்த்தப்பட்டதல்ல என்பதை உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியிருக்கிறது.

காலதாமதம் மட்டுமே விடுதலைக்கு காரணமாக முடியாது. அவர்கள் நிராபராதி கிடையாது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறதே?

நமது இந்திய சிறைகளில் 15 வருடங்கள் அல்லது 20 வருடங்களுக்கு மேல்  இருப்பவர்கள் யாரும் கிடையாது, இந்த ஏழ்வர் தவிர. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஒன்று தருகிறேன். இந்தியாவின் தேசத் தந்தை என்று போற்றப்படுபவர் மகாத்மா காந்தி. அவரைக் கொன்ற வழக்கில் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே, 15 வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து விட்டேன். ஆகையால், என்னை விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார். உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்கிறது. ஆனால், மாநில அரசு கோபால் கோட்சேவை விடுதலை செய்கிறது. அந்த மாநில அரசை (மகாராஸ்டிர அரசை) காங்கிரசு கண்டிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அந்த மாநில அரசும் காங்கிரஸ் அரசு என்பதுதான் இங்கு சிறப்பு. மகாத்மா காந்தியின் கொலை வழக்கிலேயே 15 ஆண்டுகள் சிறையில் இருந்ததை காரணம் காட்டி விடுதலையாகி இருக்கும் செய்தி இந்த வழக்கிற்கு மிகச் சிறந்த முன்னுதாரணம்.

முன்னாள் பிரதமர் கொலை வழக்கு, சாமான்ய மனிதன் கொலை வழக்கு என நமது சட்ட அமைப்பில் பாகுபாடு உள்ளதா?

இராகுல் காந்தி கூட, சமான்ய மனிதன் வேறு ராஜீவ் காந்தி வேறு என்று பேசிவருகிறார். இது குறித்து ஆங்கில ஊடகம் என்னை பேட்டி கண்ட போது, 'ராஜீவ் காந்தியும் ஒண்ணுதான், இந்த நாட்டில இருக்கிற பிச்சைக்காரனும் ஒண்ணுதான்' என்று நேரலையிலேயே பேசினேன். நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் எல்லாருக்கும் சமமான வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆக, இராகுல் காந்தி இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக பேசிவருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிரதமரைக் கொன்றாலும் 302தான், பிச்சைக்காரனைக் கொன்றாலும் 302தான்.

உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றமே தடைவிதித்துள்ளது முரணாக இருக்கிறதே?

குற்றவியல் சட்டம் 432 ஜ பயன்படுத்தி மாநில அரசிற்கு விடுதலை செய்யும் அதிகாரம் இருக்கிறது. இருப்பினும், 435 இன் படி மத்திய அரசு தொடுத்த வழக்கிலிருந்து விடுவிக்க அவர்களின் ஆலோசனையை கேட்க வேண்டும். இதனைத்தான் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

மாநில அரசு இந்த ஏழ்வர் விடுதலையில் சட்டப்படியான நடவடிக்கையில் ஈடுபடவில்லையா?

தமிழக அரசு மத்திய அரசிற்கு இவர்களின் விடுதலை குறித்து கடிதம் அனுப்பியிருக்கிறது. பதில் சொல்ல மூன்று நாள் கால அவகாசமும் கொடுத்தது. தனது முடிவை பொதுக்கூட்டத்திலோ, அரங்ககூட்டத்திலோ அறிவிக்கவில்லை. முறைப்படி சட்டமன்றத்தில்  அறிவித்தது. இருப்பினும், மத்திய அரசு மாநில அரசு தெரிவிக்கவில்லை என்றும், முறைப்படி நடவடிக்கை இல்லை என்றும் குற்றம்சாட்டுகிறது. இது முழுக்க முழுக்க அரசியல். வேறென்ன சொல்ல.

தேசியக் கட்சிகள் மூவர் தூக்கிற்கு எதிராகவே இருக்கின்றனவே. நேற்று ஆரம்பித்த ஆம் ஆத்மி கூட மூவர் விடுதலைக்கு எதிராக குரல் கொடுக்க காரணம் என்ன?

எல்லா தேசிய கட்சிகளும் வட இந்திய நலன் மட்டும் பேணும் கட்சிகளே. ஆக, அவை தேசிய கட்சிகள் கிடையாது, வட இந்திய கட்சிகள். அவைகள் என்றும் தமிழர் நலனிற்கு எதிரான நிலைப்பாட்டைத் தான் எடுக்கும். உதாரணத்திற்கு முல்லைப் பெரியாறு, ஈழம் மற்றும் காவேரி பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அனைத்து தேசிய கட்சிகளும் துரோகம் செய்ததை நாம் அறிவோம். அதன் தொடர்ச்சியே இந்த மூவர் தூக்கிலும் பிரதிபலிக்கிறது.

வட இந்திய ஊடகங்களுக்கு மூவரை தூக்கிலிடுவதற்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?

வட இந்திய ஊடகங்கள் தமிழர் விரோத மனப்பான்மை கொண்டவை. (கோபமாக).. Entire hindi speaking people are against tamils. மூவர் தூக்கிற்கு எதிரான எழுச்சி தமிழகத்தில் 2009க்கு பிறகுதானே ஏற்பட்டது.

ஏன் அதற்கு முன் இருந்த 18 ஆண்டுகள் இந்த எழுச்சி ஏற்படவில்லை?

ஆம். உண்மைதான். ஈழ அவலத்திற்கு பிறகு 2009 க்கு பிறகுதான் தமிழ்நாட்டில் இந்த எழுச்சி ஏற்பட்டது. 91-ம் ஆண்டில் இந்த வழக்கில் இவர்கள் கைதான போது, இவர்களுக்காக வாதாடக்கூட யாரும் முன்வரவில்லை. அப்போது, திராவிடர் கழகத்திலிருந்த நான் மட்டுமே முன் வந்தேன். அப்போது திமுக மீது ராஜீவ் கொலைப் பழி விழுந்திருந்த்து. திமுக வை அந்த தேர்தலில் தோற்கடிப்பதற்கு மிகப்பெரிய ஆயுதமாக இராஜீவ் கொலை பயன்பட்டது. ஆக, திமுகவும் முன்வரவில்லை, வேறு எந்தக் கட்சியும் முன்வரவில்லை. மதிமுக என்று ஒரு கட்சியே அப்போது தமிழகத்தில் உருவாகியிருக்கவில்லை. தமிழகம் இவர்களுக்கு ஆதரவான குரலை கொடுப்பதில் மயான அமைதி காத்தது.

98க்கு பிறகு பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன் போன்றோர் 26 பேரின் உயிர்காப்பு குழுவை உருவாக்கினர். அதற்கு புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் நிதி கொடுத்து உதவினர். ஒரு 8 வயது குழந்தை தனது பாக்கெட் மணியை கொடுத்த சம்பவம் என் கண்ணுக்குள்ளே நிற்கிறது (நெகிழ்கிறார்). 2009க்கு பிறகு, ஈழப் பிரச்சனையை மையப்படுத்தி புது புது இயக்கங்கள் உருவாகின. பல்வேறு தமிழ் தேசிய அமைப்புகள் வீரியமாக இயங்க ஆரம்பித்தன. அந்த சமயம், 2011-ம் ஆண்டு, ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டிலும் மூவரின் கருணை மனுவை நிராகரிக்க, தமிழகத்தில் போராட்டம் வெடித்தது. ஆக, கடந்த 18 ஆண்டுகளாக இல்லாத எழுச்சி, கடந்த நான்கு வருடங்களாக  தமிழகத்தில் ஏற்பட காரணம் ஈழப் போராட்டமே.

இனி, மாநில அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

161-வது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இவர்களின் விடுதலையை தீர்மானிக்கும் உரிமை மாநில அரசிற்கு உண்டு. அதன்படி, விடுதலை செய்யலாம்.

நேர்கண்டவர்: ஜீவசகாப்தன்

3/7/2014 2:14:40 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்