Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஆட்சிமாற்றம் தமிழ் மக்களுக்கு வெறும் நிறமாற்றமே!

<p>ஆட்சிமாற்றம் தமிழ் மக்களுக்கு வெறும் நிறமாற்றமே!</p>
அருட்தந்தை மா.சக்திவேலுடன் ஒரு நேர்காணல்

 

கண்டி, பேராதனைக்கு அண்மையிலுள்ள பெருந்தோட்டம் ஒன்றில் பிறந்த அருட்தந்தை சக்திவேல் பாடசாலைக் கல்விக் காலத்திலேயே சமூக அரசியல் பணிகளில் அக்கறையுடன் ஈடுபட்டவர். க.பொ.த உயர்தர வகுப்பு படிக்கும்போது மலையக மக்கள் இயக்கத்தின் கண்டிக்கிளையின் பொருளாளராக செயற்பட்ட இவர், வடபகுதியில் செயற்பட்ட மாணவ இளைஞர் இயக்கங்களோடும் தொடர்புகளைக் கொண்டிருந்தார். தற்போது மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளராக பணியாற்றுவதோடு அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், காணிப்பறிப்பு விவகாரம், விவசாயிகள், தொழிலாளர்கள் விவகாரம் என்பவற்றிலும் அக்கறை கொண்டு அவற்றிற்காக செயற்படும் அமைப்புகளோடு இணைந்து பணியாற்றுகின்றார்.

***

தற்போதுள்ள அரசியல் சூழல்பற்றியும், ஆட்சி மாற்றத்திற்கான சூழல்பற்றியும் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?

இனவாதம், சிங்கள பௌத்த மதவாதம் இவற்றிற்கு மத்தியில் யுத்த வெற்றியின் தனியாள் சிந்தனை என்பவற்றோடு 18ம் அரசியல் யாப்பு திருத்தத்திற்கு பின்னர் சர்வாதிகாரத்தின் உச்ச பிடிக்குள் நாடு சிக்கியுள்ளது. நீதித்துறையும் பராளுமன்றமும் சர்வாதிகாரத்தின் காலடியில் துவம்சமாகின்றன. இவைகளைத் தொடர்ந்து வைத்திருப்பதற்காக இராணுவமயம் எல்லா மட்டங்களிலும் வியாபித்து வளர்கின்றது.

உதாரணமாக அழுத்கம, பேருவளை சம்பவத்தை எடுத்துக்கொண்டால் அங்கு இனவாதம், சிங்கள பௌத்த ஆதிக்கம் என்பவற்றோடு சர்வாதிகாரத்தின் மறைமுக பாதுகாப்பும், ஆதரவும் தெளிவாக தெரிந்தன. பௌத்த சமயம் அஸ்கிரிய, மல்வத்த போன்ற சமய அதிகார பீடங்களில் இருந்து பிடுங்கப்பட்டு, சிங்களபௌத்த தனியார் அமைப்புக்களின் வசமாகியுள்ளது. பராளுமன்றமும், நீதித்துறையும் வெறும் கட்டிடங்களாக மட்டுமே தெரிகின்றன.

பொதுவாக கறுப்பு பொருளாதார கொள்கையை ஆட்சிக் கூட்டம் கடைபிடித்து அலங்கார அபிவிருத்தியை மக்கள் முன் காட்சிப்படுத்தி ஆட்சியாளர் சுகம் காண்கின்றனர். நாட்டில் எதிர்கால சந்ததியினரும் தமக்கு தொடர்பில்லாத கடன் சுமையை சொந்தமாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வடக்கிலே இராணுவத் தேவைக்காக அரச மற்றும் தனியார் காணிகள் இராணுவத்தால் கையகப்படுத்தப்படுவது போல தெற்கிலும் அதே இராணுவத்தால் அரச காணிகளும், தனியார் காணிகளும் அபிவிருத்தி எனும் போர்வையில் கொள்ளையிடப்படுகின்றன.

இத்தகைய அரசியல் பொருளாதார அடக்குமுறையின் பின்னணியில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தென்மாகாணசபை, வடமேல் மாகாணசபை, ஊவா மாகாணசபை ஆகியவற்றில் ஆட்சியாளர்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளனர். தமிழ் முஸ்லிம்  கட்சிகள், இடதுசாரி கட்சிகள், அரசுக்குள்ளேயே இயங்கும் யாப்பு திருத்தத்தை விரும்பும் கட்சிகள் நடைபெறப்போகும் தேர்தலில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்குமாயின் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறீர்கள். ஆட்சி மாற்றம் தமிழ் மக்களுக்கு சாதகமானதாக அமையும் என நீங்கள் கருதுகிறீர்களா?

<p>ஆட்சிமாற்றம் தமிழ் மக்களுக்கு வெறும் நிறமாற்றமே!</p>

சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்திலேயே மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. பிந்திவந்த ஆட்சியாளர்களால் ஒரளவுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டமை வாக்கு வங்கிகளாக இவர்களை தொடர்ந்திருக்க செய்யவதற்கே. இதனைவிட எத்தகைய அடிப்படை அரசியல் உரிமைகளும் கொடுக்கக் கூடாது என்ற மனநிலையிலேயே எல்லா ஆட்சியாளர்களும் செயல்பட்டனர். அதைப் போன்று வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான அகிம்சை போராட்டங்களெல்லாம் ஆட்சியாளர்களின் அடக்கு முறையால் அடக்கப்பட்டதோடு தமிழ் மக்களின் கரங்களில் ஆயுதம் திணித்து போராட்டத்திற்கு அழைத்தார்கள். நடந்த ஆயுத போராட்டத்திலும் அதன் வெற்றியிலும் தொடர்ந்து பேரினவாதம் குளிர்காய்கின்றது.

இலங்கையின் பாராளுமன்ற ஆட்சியிலும், ஜனாதிபதி ஆட்சியிலும் அவைகளால் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் யாப்புக்களிலும் தமிழ் மக்கள் ஒரங்கட்டப்பட்டு இரண்டாந்தர பிரஜையாக்கப்பட்டு இனச்சுத்திகரிப்பு பல்வேறு வடிவங்களிலே வேகமாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆட்சி மாற்றம் என்பது வெறும் நிறமாற்றமே தவிர தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் தெற்கினை இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை.

மேற்குலகிற்கு சார்பான ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வரும்போது சர்வதேசத்தின் செயற்பாடுகள் ஓய்வு நிலைக்குச் செல்லலாம். தமிழர் ஆதரவு வெளிநாட்டு சக்திகள் தமது செயற்பாடுகளை மாற்றி அமைத்துக் கொள்வதற்கு காலம் எடுக்கலாம். இந்நிலையில் நடக்கப்போகின்ற ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் தெற்கின் அரசியலை புடமிட்டு காட்டுவதற்கு ஒரு களமாக பாவிக்கலாம். இது பற்றி தமிழ்  அரசியல் சக்திகள் ஆரோக்கியமான கலந்துரையாடல் நல்லது என்று நினைக்கின்றேன்.

மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளராக இருக்கின்றீர்கள். அதன் நோக்கம் இதுவரை கால பணிகள் பற்றி கூறுவீர்களா?

மலையக மக்கள் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள். தேயிலை, இறப்பர், தென்னை எனும் பெருந்தோட்டத்துறை இவர்களின் உழைப்பால் உருவானது. திறந்த பொருளாதாரம் உருவாகும்வரை நாட்டின் பொருளாதாரத்தை சுமந்தார்கள். இவர்களுடைய உழைப்பால் நாடு அபிவிருத்தி கண்டது. இதனையும் விட மலையகம் எனும் தேசத்தை உருவாக்கி 200 வருடங்களாக அதே பிரதேசத்தில் தமக்கேயுரிய தனித்துவ தேசிய அடையாளங்களோடு வாழ்ந்து வருகின்றனர். இன்று இவர்களை அழைத்து வந்த பிரித்தானியா கைவிட்டுவிட்டது. பூர்வீக நாடான இந்தியாவும் இம்மக்களின் அரசியல் உரிமைகளில் அக்கறையின்றி வெறும் சலுகைகளில் மட்டும் அக்கறை காட்டுகின்றது. வடக்கின் புகையிரத பாதை அமைக்க செலவிட்ட பணத்தில் எத்தனை வீதத்தினை இந்த மக்களுக்காக ஒதுக்கியுள்ளது என இச்சந்தர்ப்பத்தில் கேள்வி கேட்கவேண்டியுள்ளது.

மேலும் மலையகத்தின் தொழில்சார் மக்களில் பெரும்பாலானோருக்கு இந்தியா தெரியாது. இவர்கள் இந்நாட்டு குடிகளே. இந்நாட்டில் வாழும் இன்னுமொரு இனப்பிரிவினராவர். இவர்களின் கௌரவம் காக்கவும், தேசிய இனத்துவ அடையாளம் காக்கவும், வாழ்வுரிமைகளைப் பெறவும் ஏற்ற செயற்பாடுகளை நகர்த்துவதே சமூக ஆய்வு மையத்தின் நோக்கமாகும். இதற்காக கலந்துரையாடல்கள் மூலம் களப்பணியாளர்களை உருவாக்குகின்றோம். உரிமைகளுடனான வாழ்வை தெளிவுபடுத்தவும், அதற்கான செயற்பாடுகளிலே மக்களை இணைத்துக் கொள்ளவும் தொழிலாளர் திருவிழா, பொங்கல் பெருவிழா, மலையக மண் மீட்புக்காக உயிர் நீத்தவர்களின் நினைவு நாள் என்பவற்றை கலாச்சார பண்புகளுடன் நடாத்துகின்றோம். இவ்விழாக்களின் போது 'நடுகல்' கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தி பங்குபற்றுவோருக்கு மண்முடிப்பு வழங்குகின்றோம். மலையக மக்களுக்கான ஆதரவை பரந்துபட்ட ரீதியில் பெற்றுக் கொள்ளுமுகமாக 'பெரட்டுக்களம்' எனும் காலாண்டு சஞ்சிகையை வெளியிடுகின்றோம். எமது பணி போராட்டமிக்கது. உள்ளக எதிரிகளை சமாளிப்பதே பெரும்பாடாக உள்ளது.

உள்ளக எதிரிகள் என்கிறீர்கள். அது பற்றி  கொஞ்சம் விரிவாகக் கூறமுடியுமா?

இந்திய ஆதிக்க அரசியலுக்கு துணைபோகும் அரசியல் சக்திகள். இவர்களுக்கு துணை போகும் முதலாளித்துவ சிந்தனையாளர்கள். மலையகத்தில் இருந்து தமது ஆணிவேரை பிடுங்கிக் கொண்டவர்கள். மலையக மக்களின் பிரச்சனைகளை தமது புகழுக்காக ஆக்கவடிவிலே வெளிக்கொணர்பவர்கள். அமைதிநிலை புத்திஜீவிகள் என பலவடிவம் கொண்டுள்ளனர். இவர்களை இனம் காண்பதும் இவர்கள் சமூகத்தின் புல்லுருவிகள் என அடையாளமிட்டு அகற்றுவதும் பெரும் சவால்மிக்கது.

இன்றைய மலையக அரசியல் சூழலை எப்படி பார்க்கின்றீர்கள்?

இன்றைய மலையக அரசியலில் மலையக மக்களின் அரசியல் பேசப்படுவதில்லை. பெருந்தோட்டத்துறையானது தனியார் கம்பனிகளிடம் உள்ளன. இவை பிரதேச சபைக்குள்ளோ, மாகாண சபைக்குள்ளோ உள்வாங்கப்படவில்லை. இதனால் இவற்றின் சேவைகளை மலையக மக்கள் பெறமுடியாது. திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், பெருந்தோட்டப் பொருளாதாரச் சிதைப்பு, தமிழ்மொழி புறக்கணிப்பு என ஆக்கிரமிப்புக்கள் தீவிரமாக அரங்கேறுகின்றன. இந்த அடையாளச் சிதைப்புகள் பற்றி மலையக அரசியல்வாதிகளிடம் எந்த வித அக்கறையினையும் காணோம். இதன் காரணமாக மலையகத்தில் அரசியல் என்பது ஆரம்ப புள்ளியைத் தானும் தாண்ட முடியாத நிலையிலேயே உள்ளது.

மலையக கட்சி அரசியல்வாதிகள் மண்ணிலே பல்வேறு நிறங்களிலே பிரிந்து நின்று அரசியல் நடத்தினாலும் ஆளும் கட்சியில் சரணாகதியடைகின்றனர். பதவிக்காகவும், சுயநல சுயபோகத்திற்காகவும் ஆட்சியாளர்களோடு ஒட்டிக்கொண்டு சலுகைகளுக்கு மட்டும் கையேந்துகின்றனர். கவர்ச்சி அரசியலை இவர்கள் நடாத்துவதால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். உதாரணமாக மலையக அரசியல்வாதிகளால் பெரும் கோவில்களும், கலாச்சார மண்டபங்களும் கட்டப்படுகின்றன. இவற்றின் விழாக்களின் போது மாலைகள் தாராளமாக இவர்களுக்கு சூட்டப்படுகின்றது. மலையகத்தின் கலையும், கலாச்சாரமும் இயற்கையோடு ஒட்டிய பக்திவாழ்வும் பறிக்கப்படுவதை மக்கள் அறியாதிருக்கின்றனர். மலையக அரசியல் என்பது இருண்ட நிலையிலேயே உள்ளது. மலையகத்தின் புத்திஜீவிகள் என கூறிக்கொள்வோரின் பலர் இத்தகைய அரசியல்வாதிகளுக்கு தாமரை வீசுவதை தொழிலாக கொண்டுள்ளனர். இதுவே வேதனை மிகுந்தது.

மலையக மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர்வதற்கு எதிர்க்கட்சி அரசியலை நகர்த்துவது அவசியம். மலையக கட்சிகள் எல்லாம் அரசாங்கத்துடன் சேர்ந்திருக்கும் போது இதனை எவ்வாறு சாத்தியமாக்கலாம்?

மலையகத்தில் தொழிற்சங்க அரசியலும் கட்சி அரசியலும் ஒன்றோடொன்று இணைந்தே பயணிக்கின்றது. கட்சி அரசியலின் தலைமைத்துவமே தொழிற்சங்க அரசியலையும் நடத்துகின்றது அல்லது கட்சி அரசியலின் தலைமைத்துவம் தொழிற்சங்க அரசியலின் தலைமைத்துவத்தை அடிமை நிலையிலேயே வைத்திருக்கின்றது. மலையக கட்சிகளும் தொழிற்சங்கங்களும் முதலாளித்துவ கட்சிகளிடம் சரணடைந்துள்ள நிலையில், தொழில்சார் உரிமை விடயங்களில் முதலாளித்துவ கம்பனிகளிடம் இணக்க நிலையை கடைப்பிடிக்கின்றன. எதிர்க்கட்சி அரசியலை நடத்துவதாயின் கட்சி அரசியலும் தொழிற்சங்க அரசியலும் பிரிக்கப்படல் வேண்டும். தொழிற்சங்கங்கள் சுயமாக இயங்குகின்ற போதே மக்கள் சக்தியினால் கட்சி அரசியலை எதிர்க்கட்சி அரசியலை நோக்கி நகர்த்தமுடியும். தொழிலாளர் வர்க்கம் விழிப்பு நிலையை அடைய மலையக சமூக அமைப்புகளும் அரசசார்பற்ற நிறுவனங்களும் மக்கள் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கவேண்டும். தொழிலாளர் வர்க்க நன்மை கருதி புதிய அரசியல் பாதையை நிர்ணயித்து மக்கள் மத்தியிலே சென்றால் எதிர்க்கட்சி அரசியலுக்கு வழி வகுக்கலாம்.

மலையகத்தின் அடிப்படை பிரச்சனைகள் என நீங்கள் எவற்றை அடையாளம் காண்கின்றீர்கள்?

மலையக மக்கள் பலநூற்றுகணக்கான உயிர்களை தியாகம் செய்து மலையகமென்னும் பெரும் நிலப்பரப்பை உருவாக்கி கடந்த 200 ஆண்டு காலமாக வாழ்வுக்கான போராட்டத்தை நடாத்தி வருகின்றனர். இந்த மக்கள் இந்நாட்டின் முழுமையான குடிமக்களாக இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. மலையக மக்கள் இந்த நாட்டில் வாழும் இன்னுமொரு தேசிய இனமாகும். இதன் வளர்ச்சிக்கண்டு பயந்த சிங்கள அரசாங்கங்கள் பெருந்தோட்ட மக்களை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் சுற்றி வளைத்துள்ளன. நகரங்களுக்கு அண்மையில் சிங்கள கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

1992ம் ஆண்டளவில் ஒரு லட்சத்து அறுபதாயிரம் ஹெக்டர்யாராக இருந்த பெருந்தோட்டங்கள் இன்று ஒரு லட்சத்து இருபத்துமுவாயிரம் ஹெக்டர்யாராக குறைவடைந்துள்ளன. 1995ல் மூன்று லட்சமாக இருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு சற்று குறைவாகவே உள்ளனர். பெருந்தோட்டத்துறையிலிருந்து தொழிலாளர்கள் திட்டமிட்டு அப்புறப்படுத்தப்படுகின்றனர்.

சிறுதோட்டங்கள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. சுமார் நான்கு லட்சம்பேர் சிறுதோட்ட உரிமையாளர்களாக இருக்கின்றனர். எதிர்வரும் காலங்களில் இதன் தொகை அரசாங்கத்தின் மானியங்களோடு அதிகரிக்கலாம். தாழ்நில பிரதேசங்களில் காணப்படும் நிலை மலையகத்தின் ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படுமாயின் தற்போதைய மலையக சந்ததி அழிந்துவிடும். மலையகத்தின் தேசிய அடையாளங்களாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் என்பவற்றிற்கு ஏற்பட்டிருக்கின்ற அச்சுறுத்தல்களையும், பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நெருக்கடிகளையுமே அடிப்படைப் பிரச்சினைகளாகப் பார்க்கின்றேன்.  

மலையகத்திற்கான அரசியல் தீர்வு எவ்வாறு அமையவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

மலையக மக்கள் இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அரசியல் யாப்பிலே பாதுகாப்பு உறுதிபடுத்தப்படவேண்டும். மலையக மக்கள் செறிவாக வாழும் பிரதேசம் ஒரு தனி அலகாக்கப்பட்டு அதனோடு ஏனைய இடங்களில் வாழும் மலையக மக்களின் பிரதேசங்கள் மேற்கூறிய அலகோடு இணைக்கப்பட வேண்டும். மலையக பிரதேசத்தின் காணிகள் இப்பிரதேசத்தை உருவாக்கிய மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். இது வெறுமனே வீடு கட்டுவதற்கு மட்டுமே போதுமான காணியாக அல்லாது எதிர்கால சந்ததிக்கும் பாதுகாப்பை வழங்ககூடிய அளவு உரித்தாக்கப்படல் வேண்டும். பிரதேச சபைகளும், மாகாண சபைகளும் புதிதாக எல்லை வகுக்கப்பட்டு மலையக பிரதிநிதிகள் உள்வாங்கப்படல் வேண்டும். அவற்றின் சேவைகள் மலையக மக்களுக்கு கிடைக்கவேண்டும். இப்பிரதேசங்களில் தமிழ்மொழி அரச கருமமொழியாக நடiமுறைப்படுத்தப்படல் வேண்டும்.

மலையகம் மற்றும் வடக்கு கிழக்கு அரசியல் சக்திகளுக்கிடையே புரிந்துணர்வும் ஒருங்கிணைந்த வேலை திட்டமும் அவசியமாக உள்ளது. இதனை எப்படி சாத்தியமாக்கலாம்?

1970ல் இவ்வாறான ஒரு வேலைத்திட்டம் இருந்தது. இதனை சிங்கள ஆட்சியாளர்கள் திட்டமிட்டே பிரித்துவிட்டனர். ஆயுத போராட்டம் நிலவிய காலகட்டத்திலும் இதற்கான அடித்தளம் இடப்பட்டது. தமிழர்களின் துரதிஸ்டம் இதுவும் சிதைந்துவிட்டது. வடக்கும் கிழக்கும் இருவேறு மாகாண சபைகளாக பிரிந்துள்ள நிலையில் எல்லா அரசியல் சக்திகளாலும் மலையகம் கைவிடப்பட்டு அநாதரவாகவுள்ள இக்கால கட்டத்தில் ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் வேகமாக முன்னெடுக்கப்படல் வேண்டும். இன்று மலையக அரசியல் சக்திகள் ஆட்சியாளர்களுக்குப் பயந்து மலையகத்தின் அரசியலை பேசுவதை தவிர்த்து சலுகைகளுக்காக கையேந்துகின்றனர். மலையக மக்களின் அடிப்படை பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டால் பயங்கரவாத முத்திரை குத்தப்படும் எனக் கருதி அதைத் தவிர்த்து அமைதி காக்கின்றனர். ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட மலையகத்திற்கான சிவில் சமூக அமைப்பு உருவாக்கப்படல் வேண்டும். இவ்வமைப்பு வடகிழக்கு சிவில் சமூக அமைப்போடு ஒரு புரிந்துணர்விற்கு வருவதன் மூலமே ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்திற்குள் அவர்களை இழுத்து வரக்கூடியதாக இருக்கும்.

மலையகத்திற்கென பல்கலைக்கழகம் உருவாக்கப்படல் வேண்டும் என்ற இயக்கத்தையும் முன்னெடுத்து வருகின்றீர்கள். அது பற்றி கொஞ்சம் கூற முடியுமா?

மலையகப் பல்கலைகழகம் என்பது நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும். இதற்கான முயற்சிகளிலே பேராசிரியர் சந்திரசேகரன், பேராசிரியர் தை. தனராஜ் ஆகியயோர் முன்னர் முயற்சித்திருந்தனர். இன்று மலையக தேசியம் காக்கும் அமைப்பான மலையக சமூக ஆய்வு மையம் அவசரமாக இதை மீண்டும் புத்திஜீவிகள் மத்தியிலும், அடிமட்ட மக்கள் மத்தியிலும் கொண்டு செல்கின்றது. பல்கலைக்கழகத்தின் தேவை குறித்த கருத்தாடலை ஆரம்பித்ததன் நோக்கம் பல்கலைக்கழகம் என்பது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும், சமூக விடுதலைக்கும் முக்கிய பங்காற்றுகின்றது. எங்கெல்லாம் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டனவோ அங்கு அந்த சமூகம் தமது வரலாற்றைக் காக்கவும் அது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளவும், ஆய்வுகள் காப்பகத்தை செயற்படுத்த முடிகின்றது.

மலையக சமூகம் இழந்து வரும் தனது இனத்துவ அடையாளங்களை காக்கவும் எதிர்வரும் சந்ததிக்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கவும் பல்கலைக்கழகத்தின் தேவை முக்கியமாகும். மலையக பல்கலைக்கழகம் நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களை போலல்லாது பாடநெறிகளில் மலையக கலை, பண்பாடு, தொடர்பான விடயங்களையும் உள்ளடக்கியதாக அமையவேண்டும். இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கிட்டத்தட்ட 15 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இது தவிர பாளி பல்கலைக்கழகம், பௌத்த சமயசார் பல்கலைக்கழகம், தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பாதுகாப்பு அமைச்சின்கீழ் கொத்தலாவல பல்கலைக்கழகம் போன்றனவும்  உள்ளன. இத்தகைய பின்னணியில் 200 வருட வரலாற்றைக் கொண்ட இந்நாட்டின் தனித்துவ இனமாக வாழ்ந்துவரும் மலையக மக்களின் பாதுகாப்பிற்கு பல்கலைக்கழகத்தின் தேவை இன்றியமையாதது எனலாம்.

வடகிழக்கு பல்கலைக்கழகங்களில் சிங்கள மயமாக்கல் முனனெடுக்கப்படுகின்றது. இந்நிலையில் மலையகத்தை மையப்படுத்திய பல்கலைகழகம் எவ்வாறு சாத்தியமாகும்?

சிங்களமயமாக்கல் அல்லது பௌத்த சிங்களமயமாக்கல் என்பது இந்நாட்டில் சிங்கள ஆட்சியாளர்களால் அதிதீவிரமாக முன்னெடுக்கப்படடு வருகின்றது என்பது உண்மைதான். இன்று மலையகத் தமிழ் மக்களும், சிங்கள பௌத்தமயமாக்கலுக்கு மத்தியிலே மூச்சிழந்து நிற்கின்றார்கள் என்பதே உண்மை. இந்த சூழ்நிலையிலேயே மலையக பல்கலைக்கழகத்தை நாம் உற்று நோக்கவேண்டும். மாணவர்கள் உள்வாங்கபடுதலிலே, பாடநெறிகளிலே, நிர்வாக முறையிலே கலைகளின் காப்பகங்கள் விடயங்களிலே மலையக சமூகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.

மலையக மக்களின் பிரச்சனைகள் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக்கப்படல் வேண்டும். இதற்கு என்ன செய்யலாம் என கருதுகிறீர்கள்?

மலையக மக்களின் பிரச்சனைகள் மலையகத்திற்குள்ளேயே இன்னமும் பேசுபொருளாக இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். பேசுபொருளாக எடுத்துக் கொள்வோர்களும் ஓய்வுநேர பொழுதுபோக்கு விடயமாகவே எடுத்துக் கொள்வதும் தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்லாமையும் கவலைக்குரியது. மலையகத்தின் தொண்டு நிறுவனங்களும், சமூகநலன்புரி அமைப்புகளும் பேசுபொருளாக்குவதற்கு தயக்கம் காட்டுகின்றன. பயத்தின் காரணமாக தமக்குத் தாமே சுயகட்டுப்பாட்டையும் விதித்துள்ளன. பொதுப்பணி மன்றங்களும் அறநெறி மன்றங்களும் கட்சி அரசியல்வாதிகளின் சலுகைகளை எதிர்பார்த்து அவர்களின் காலடியில் விழுவதால் நமக்கேன் வம்பு என நழுவிக்கொள்கின்றன.

இன்னுமொரு பக்கம் அரச புலனாய்வாளர்களின் செயற்பாடும், இராணுவ மயமாக்கலும் யுத்தத்திற்கு பின்னரான இக்கால பகுதியில் மலையகம் எங்கும் விரிந்துள்ளதால் செயற்பாடுகளை பகிரங்கமாக நடாத்த முடியாத சூழ்நிலை உள்ளது. மலையக நகரங்களிலும், தலைநகரத்திலும் உரையாடல்களை நடாத்துவதன் மூலம் மலையக பின்புலத்தை பலப்படுத்திக் கொள்ளலாம். இந்நிகழ்வுகளை பொறுப்புடன் ஊடகங்கள் வெளியிட்டால் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லலாம். கட்சி அரசியல் கலப்பற்ற, மலையக மக்கள் அரசியலை மையமாகக் கொண்ட அச்சு ஊடகத்தின் தேவை அவசரமாக உள்ளது. இதன் மூலமும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேசுபொருளாக்கலாம்.

பெருந்தோட்ட தொழில் வேறு எந்தெந்த நாடுகளில் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் அவர்களோடு உறவுகளை ஏற்படுத்துவதன் மூலமும் அங்கு இயங்கும் அமைப்புக்களோடு கருத்து பரிமாற்றம் செய்வதன் மூலமும் இதனை சாத்தியமாக்கலாம். ஆரம்ப கட்டமாக இந்தியாவின் பெருந்தோட்ட பிரதேசங்களில் மலையக ஆதரவு சக்திகளோடு தொடர்புகளை ஏற்படுத்தி ஒருங்கிணைந்த பணிகளை மேற்கொள்ளலாம். உலகெங்கும் செயற்படுகின்ற பல்வேறு இணைய வலைத்தளங்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.

விஷேடமாக வட, கிழக்கு அரசியல்வாதிகள் வடக்கின் பிரச்சனையோடு மலையக பிரச்சனைகளையும் சமகாலத்திலேயே சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசெல்லலாம். ஏனெனில் நாட்டின் இன்னொரு மூலையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வாழ்விழந்து நிற்கையில் வட-கிழக்கிற்கான தீர்வு முழுமை அடையமுடியாது. வட கிழக்கு அரசியல்வாதிகள் தயக்கம் காட்டுவார்களாயின் வடகிழக்கு மக்களது அரசியல் அபிலாஷைகளையும் முழுமையாய் முன்னெடுக்கமுடியாது. அனுபவிக்கவும் முடியாது.

நேர்கண்டவர்: சி.அ.யோதிலிங்கம்.

11/26/2014 2:25:30 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்