Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இனம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோர் எமது படத்திற்கு ஆதரவு தராதது ஏன்?

இனம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோர் எமது படத்திற்கு ஆதரவு தராதது ஏன்?
‘அமைதிக்காக’ படத் தயாரிப்பாளர்களுடன் ஒரு சந்திப்பு

 

அமைதிக்காக.... - இலங்கையில் புத்த பெருமானின் பெயரால் தமிழ் மக்கள் எவ்வாறு இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள், ஈழத்தில் இந்திய அமைதி காக்கும் படையினர் மேற்கொண்ட படுகொலைகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளை போன்றவற்றை பேசுபொருளாகக் கொண்ட படம்.

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இத்திரைப்படம் சிறந்த வெளிநாட்டுக்கான திரைப்பட விருதையும், சிறந்த திரைப்படத்துக்கான விருதையும் பெற்றிருந்தது.

அத்துடன், இந்தியா ருடே, பிபிசி மற்றும் கார்டியன் போன்ற சர்வதேச ஊடகங்களின் பாராட்டையும் இத்திரைப்படம் பெற்றிருந்தது.

ஈழவிடுதலைப் போராட்டம் தொடர்பில் புன்னகை மன்னனில் இருந்து அண்மையில் இனம் வரை பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

இவற்றுள் சில திரைப்படங்களில் ஈழவிடுதலைப் போராட்டம் கொச்சைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு தமிழின உணர்வாளர்களால் பலத்த எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஈழவிடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை பேசுபொருளாகக் கொண்ட இத்திரைப்படம் தமிழக திரைப்பட உலகின் கவனத்தைப் பெறாமை தொடர்பில் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான சாய் மற்றும் தாஸ் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினேன்.

இவர்களில் சாய் கேரளாவையும், தாஸ் ஈழத்தையும் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவர்கள் தற்போது இலண்டனில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இயல்பான ஒரு சூழ்நிலையில் அவர்களுடனான கலந்துரையாடலை ஆரம்பித்தேன்.

**

ஈழவிடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தி இத்தகையதொரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்ற உணர்வு உங்களுக்கு எப்படி வந்தது?

தாஸ்: இலங்கையை மாறிமாறி ஆட்சி செய்து வரும் அரசாங்கங்கள் தமிழ் பேசும் மக்களை எப்படி அடக்கி, ஒடுக்கி திட்டமிட்ட முறையில் அழித்து வருகின்றன என்பதை நான் அனுபவ ரீதியாக அறிந்தவன். இவைகள் பற்றி நண்பர் சாய்க்கு நான் எடுத்துச் சொல்வேன். இவ்விடயங்கள் அவரில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில் ஏற்கனவே திரைப்பட பின்னணியைக் கொண்ட சாய், ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவரும் வகையில் ஒருதிரைப்படத்தை தயாரிப்போம் எனக் கூறினார். இவ்வாறு தான் எமது இந்த முயற்சி ஆரம்பமானது.

இத்திரைப்படத்தின் கதையைத் தயாரித்து, மலையாள இயக்குனர் Rajesh Touchriver ஐச் சந்தித்து இத்திரைப்படத்தை இயக்கித் தரும்படி கேட்டிருந்தோம். அவரும் இணக்கம் தெரிவிக்கவே இத்திரைக்கதையை மேலும் விரிவுபடுத்தி ஈழத்து மக்கள் பலரைச் சந்தித்து பல ஆதாரங்களை திரட்டி, திரைப்பிரதியை தயாரித்து படம் எடுப்பதற்கான ஆரம்ப வேலைகளில் ஈடுபட்டோம்.

இத்திரைப்படத்தில் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதி தொடர்பில் உள்ளடக்கியமைக்கு காரணம் என்ன?

சாய்: ஆம்! நாங்கள் இந்தப் படத்தை எடுக்க முற்பட்ட காலப்பகுதி இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பி விட்டனர். அதேவேளை, இந்தியப் படையினர் ஈழத்தில் இருந்த காலத்தில் மேற்கொண்ட படுகொலைகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் தொடர்பில் தாஸின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்கள் பலர் மிகவும் பாதிப்புற்றிருந்தனர்.

தாஸ்(குறுக்கிட்டு): உண்மைதான். ஈழத்தில் இந்தியப் படையினர் இருந்த காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டநடவடிக்கைகளை சித்தரிப்பதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை (கண் கலங்குகிறார்).

சாய்: இந்தப் படத்தில் மூன்று விடயங்கள் தொடர்பில் பேசுவதை நாங்கள் விரும்பினோம். ஒன்று - பௌத்த மதத்தின் பெயரால் சிங்கள அரசு தமிழ் மக்களை எவ்வாறு திட்டமிட்டு அழித்து வருகிறது. இரண்டாவது - ஈழமக்களது விடுதலைப் போராட்டத்தின் நியாயம். மூன்றாவது - இந்தியப் படையினர் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகள்.

இந்த மூன்று விடயத்திலும் அமைதி காக்க எனச் சென்ற இந்தியப் படையினர், தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக ஒரு இந்தியனாக இருந்து நீதி கேட்கவேண்டும் என நான் உள்ளார விரும்பினேன்.

இந்தப் படத்துக்காக பலரைச் சந்தித்தோம். படத்தயாரிப்புக்காக பல இடங்களைப் பார்வையிட்டோம். இறுதியில் திரைப்படத்தை எடுப்பதற்கான எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு படத் தயாரிப்புக்களில் இறங்கினோம்.

இத்திரைப்படத்தில் சிறுவர்களை ஆயுதம் ஏந்திய போராளிகளாக சித்தரித்துள்ளீர்களே?

சாய்: சரி, பிழை என்பதை காரண, காரிய தொடர்புகளிலேயே வைத்து நாம் பார்க்க வேண்டும். சிறுவர்கள் ஆயுதம் ஏந்துவது சரி என நாம் இந்தப்படத்தில் சித்தரிக்கவில்லை. அவர்கள் எவ்வாறு ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பதையே நாம் சித்தரித்துள்ளோம்.

அவர்கள் ஆயுதம் ஏந்தியமைக்கான காரணத்தை ஆராயாமல் வெறுமனே குற்றம் சுமத்துவது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது.

எல்லாச் சிறுவர்களும் தமது எதிர்காலம் நல்லதாக அமைய வேண்டும், தான் பெரிய ஆளாக வரவேண்டும், தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புவார்கள். ஆனால் ஈழத்துச் சிறுவர்களுக்கு...... (பெருமூச்சு விடுகின்றார்)

அவங்களுக்கு அப்படிக் கனவைக் காண்பதற்கு, அப்படி வாழ்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அந்த கனவு காணும் உரிமையும், அந்த சந்தர்ப்பமும் அவர்களுக்கு திட்டமிட்டு மறுக்கப்பட்டது. இந்தநிலையில் அவன் என்ன செய்ய யோசிப்பான். அதனை எதிர்க்கவே முயற்சிப்பான். இதுதான் அவங்களுக்கு நடந்தது.

குற்றம் சுமத்துபவர்கள் குற்றம் சுமத்தட்டும். நான் இந்தச் சிறுவர்களின் பிரதிநிதியாக நிற்க விரும்புகிறேன். இந்தக் குழந்தைகளை இப்படி ஆக்கியவர்களுக்கு எதிராக குரல் எழுப்ப விரும்புகிறேன். இந்த பச்சிளம் குழந்தைகளின் வாழ்வை அழித்தவர்களுக்கு எதிரான நீதியையே நாம் கேட்கின்றோம்.

சரி! இந்த படத்தயாரிப்புக்கான நிதியை எங்கிருந்து பெற்றீர்கள்?

(இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்கின்றனர்)

சாய்: இந்தப் படத்தை எடுப்பது என முடிவு செய்துவிட்ட பின்னர் அதற்கான நிதி வளங்களை நாமே தேடினோம். எமது கடன் அட்டைகளில் இருந்து பணம் எடுத்தோம். வங்கிகளில் கடன் பெற்றோம். ஏன் நண்பர்களிடம் இருந்தும் கடன்பட்டோம். அது ஒரு கடினமான பணியாக இருந்தது. இத்தனை கடன்களுக்கும் இன்று வரை நாம் இருவருமே பொறுப்பாகவும் இருக்கின்றோம்.

இந்தப் படத்தை ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் எல்லாம் திரையிட்டீர்கள். ஆனால் இந்தியாவில் திரையிட நீங்கள் ஏன் முயற்சிக்கவில்லை?

சாய்: இந்தப் படத்தை இந்தியாவில் திரையிடுவதற்காக அப்போது நாங்கள் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இந்திய திரைப்பட தணிக்கைக்குழு எமக்கு அனுமதி தரவில்லை. அப்போது இலங்கையில் போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலம்.

இதற்குப் பின்னரும் இந்த படத்தை இந்தியாவில் திரையிடுவதற்கான எமது முயற்சிகளை நாம் கைவிடவில்லை. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போர் முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் துயரமான முடிவைச் சந்தித்திருந்தது.

ஆயினும் அந்த மக்களுக்கு இந்தியப் படையினரால் இழைக்கப்பட்ட கொடுமைகளை எனது நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதில் நான் அதிக கரிசனை கொண்டிருந்தேன்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் இந்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் சான்றிதழைப் பெறுவதற்காக நாம் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டோம்.

இதன்போது இந்தப் படத்தில் இருந்த சில காட்சிகளை நீக்கும்படி அவர்கள் எம்மிடம் கூறினார்கள்.

இந்திய திரைப்பட தணிக்கைக் குழுவினரால் நீக்கப்படச் சொன்ன காட்சிகளில் ஒன்று இந்தியப் படையினரால் ஈழத்துப் பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படும் காட்சி.

இதன்போது அது உண்மையாக நடந்த சம்பவம் என எமது தரப்பில் தெரிவிக்கப்பட்ட போது, அது கொடூரமானதாக இருப்பதாக இந்திய திரைப்பட தணிக்கைக் குழுவினர் தெரிவித்தனர். இந்தக் கொடுமையை தானே நம்மவங்க ஈழத்தில் செய்திருக்கிறார்கள்.

எனினும் இந்தப் படத்தை இந்தியாவில் திரையிட வேண்டும் என்பதற்காக நாம் அவர்களின் கோரிக்கைக்கு உட்பட்டு குறித்த காட்சிகளை நீக்கிய பின்னர், எமக்கு இந்திய திரைப்பட தணிக்கைக் குழுவினரால் அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர்...?

தாஸ்: இந்நிலையில் இந்த திரைப்படத்தை இந்தியாவில் திரையிடுவதற்கான முயற்சிகளை இந்தப் படத்துக்கு அழகாக இசையமைத்த ராஜாமணி மற்றும் நண்பர் ரவிக்கை சுவாமி ஆகியோர் ஊடாக மேற்கொண்டிருந்தோம்.

இந்த இடத்தில் எமது தரப்பில் ஒரு பிரச்சினையும் இருந்தது. இந்தியாவில் இத்திரைப்படத்துக்கு விளம்பரம் செய்து திரையிடுவதற்கான நிதிப்பலம் எம்மிடம் இருக்கவில்லை. இதனால் இந்திய பட வெளியீட்டாளர்களை நாடி அவர்களுக்கு இந்த திரைப்படத்தின் பிறிவியூவை போட்டுக் காட்டி இத்திரைப்படத்தை வெளியிட உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தோம்.

இந்த பிறிவியூவின் போது தமிழக முன்னணி அரசியல்வாதிகள், திரைப்பட மூத்த நடிகர்கள், முன்னணி இயக்குனர்கள், எழுத்தாளர்கள், தமிழ் திரைப்பட வெளியீட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் வந்திருந்தனர்.

படம் முடிந்ததும் எல்லோரும் அமைதியாக வெளியில் வந்தனர். ஒரு மூத்த நடிகர் சுவரில் சாய்ந்திருந்தபடி விம்மி விம்மி அழுததைக் கண்டோம். கேரளாக்காரனுக்கு வந்த உணர்வு ஒரு தமிழ்நாட்டுக்காரனுக்கு வரவில்லையே என தற்போதைய முன்னணி இயக்குனர் ஒருவர் சொன்னதைக் கேட்டோம். பலர் இசையமைப்பாளர் ராஜாமணியையும், நண்பர் ரவிக்கை சுவாமியையும் கடடிப்பிடித்து தழுவினார்கள். அவர்களிடம் வார்த்தைகள் எதுவும் அப்போது இருக்கவில்லை.

இதற்குப் பின்னர் இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்காக தமிழக திரைப்பட வெளியீட்டாளர்கள் சிலரை நாம் அணுகினோம். இத்திரைப்படத்துக்கான விளம்பரச் செலவு மற்றும் ஆரம்பச் செலவுகளுக்கான நிதியை தந்தால், படத்தை திரையிட்டு பின்னர் மீதியை பார்த்துக் கொள்ளலாம் என அவர்கள் எம்மிடம் சொன்னார்கள். ஆனால் அந்தக் காசைக் கொடுப்பதற்குரிய நிலைமையில் நாம் வலுவாக இருக்கவில்லை என்பதே நிஜம்.

சாய்(குறுக்கிட்டு): நான் ஒன்றைச் சொல்லவேணும். எனக்கு ஒன்று புரியுதில்லை. மதராஸ் கபே  மற்றும் இனம் போன்ற திரைப்படங்களில் ஈழமக்களின் விடுதலைப் போராட்டம் கொச்சைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு தமிழகத்தில் இருக்கின்ற தமிழின உணர்வாளர்கள் இப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்த பலர் அன்று நாம் போட்ட பிறிவியூவுக்கு வந்து எங்களின் படத்தை பார்த்து எம்மை பாராட்டினார்கள். ஆனால் அவர்கள் எவரும் இந்தப் படத்தை எம்மோடு இணைந்து ஏதோவொரு வகையில் குறைந்தபட்சம் தமிழகத்தில் ஆவது வெளியிட முன்வரவில்லை என்பதுதான் எமக்கு கவலை. அது ஏன் என்று எனக்கு விளங்குதுமில்லை.

இந்தப் படத்துக்காக நீங்கள் எவ்வுளவு செலவழித்தீர்கள்?

தாஸ்: இந்த திரைப்படத்துக்காக நாம் எவ்வுளவு செலவழித்தோம் என்பது குறித்து நாங்கள் கரிசனை கொள்ளவில்லை. ஆனால் இத்திரைப்படத்தை இந்தியாவில் குறைந்தபட்சம் தமிழகத்தில் வெளியிட எம்மால் முடியாமல் போய்விட்டது என்பதே எமது கவலை. ஆயினும் அது தொடர்பில் தொடர்ந்து முயற்சிப்போம்.

இந்தப் படத்தை எடுப்பதற்காக நீங்கள் இழந்த காசைப் பற்றி கவலைப்படுகின்றீர்களா?

நிச்சயமாக இல்லை. சாய் மற்றும் தாஸ் இருவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

தாஸ்: தமிழ் மக்களுக்காக எத்தனையோ பேர் தமது வாழ்க்கையை, ஏன் உயிரைக்கூடக் கொடுத்திருக்கிறார்கள். எத்தனையோ எமது சகோதரங்கள் எவ்வளவோ தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளார்கள். அந்த மக்கள் தமது எதிர்காலத்தையே கொடுத்திருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் அந்த மக்கள் இழந்ததுடன் ஒப்பிடும் போது நான் இழந்தது ஒன்றுமில்லை. (அவரின் கண்கள் குளமாகின்றன. சாய் தாஸின் கரங்களை இறுகப் பற்றிக்கொள்கிறார்)

(சற்று அமைதிக்குப் பின்னர்) இந்த செவ்வியுடன் உங்கள் இருவரின் புகைப்படத்தையும் பிரசுரிக்க விரும்புகிறேன்- தருவீர்களா என நான் கேட்டேன்.

தாஸ்: நாங்கள் யாரென தெரிய வேண்டும் என்பதற்காகவோ அல்லது புகழ் தேட வேண்டும் என்பதற்காகவோ நாங்கள் இந்தப் படத்தை எடுக்கவில்லை. எனவே எமது புகைப்படங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சாய்: எமக்குள் உலுப்பிக் கொண்டிருந்த விடயங்களை இந்தப் படம் மூலமாக வெளியில் கொண்டு வந்துள்ளோம், ஈழத்து மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுவே எமது பிரார்த்தனை.

அவர்கள் இருவரின் கரங்களையும் இறுகப்பற்றியபடி அவர்களிடம் இருந்து விடைபெற்றேன்.

***

நேர்கண்டவர்: கதிரவன்

4/25/2014 1:05:29 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்