Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமக்கு சார்பான அரசிற்கு நெருக்கடி கொடுக்க மேற்குலகோ, இந்தியாவோ தயாரில்லை

<p>தமக்கு சார்பான அரசிற்கு நெருக்கடி கொடுக்க மேற்குலகோ, இந்தியாவோ தயாரில்லை</p>
நேர்காணல்: சட்டத்தரணி வி.மணிவண்ணன்

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணன் சிறிலங்காவில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னான புதிய நிலைமைகள் தொடர்பில் வழங்கிய நேர்காணல்

***

ஆட்சிமாற்றத்திற்கு பின்பான தமிழ்அரசியல் சூழல் பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

எம்மைப் பொறுத்தமட்டில் கடந்த ஜனாதிபதி தேர்தல் என்பது மகிந்தவிற்கும் மைத்திரிக்கும் இடையிலான தேர்தல் என்பதைவிட இந்திய மேற்குலகுக் கூட்டிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஓர் பலப்பரீட்சையாகும். சீனாவின் பிடிக்குள் இருந்த மகிந்த அரசை வீழ்த்தி தமக்குச் சார்பான ஓர் அரசை இலங்கையில் நிறுவ வேண்டிய கட்டாய தேவை இந்தியாவிற்கும் மேற்குலகிற்கும் தத்தம் நலன் சார்ந்து இருந்தது. சீனாவின் பிடிக்குள் இருந்து மகிந்த அரசை வெளியகற்றவே மகிந்தவிற்கு பல்வேறு சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. அதிற் சில தான் ஜெனீவாத் தீர்மானங்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணை பற்றிய அறிவிப்புக்கள் ஆகும். அத்தகைய அழுத்தங்கள் மகிந்த அரசை வழிமாற்றாததன் காரணமாகத்தான் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பெரும்பாடுபட்டு உருவாக்கிய ஆட்சிமாற்றத்தினை என்ன விலைகொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய தேவை மேற்கிற்கும் இந்தியாவிற்கும் உள்ளது. இதனால் போர்க்குற்ற விசாரணை பற்றியோ, இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றியோ கதைத்து புதிய அரசிற்கு நெருக்கடி கொடுக்க மேற்குலகோ இந்தியாவோ தயாரில்லை. இதன் முதல் அங்கம் தான் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படவிருந்த விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையும், உள்ளக விசாரணை என்கின்ற கதைகளும். இது தமிழ் மக்களிற்கு ஆட்சிமாற்றத்தின் முன்பிருந்த சாதகமான நிலைமைகளை நீண்டதூரம் பின்னகர்த்தி இருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.

தற்போது இந்த அரசும் சீனாவின் பிடியில் இருந்து வெளிவர முடியாத பட்சத்தில் தமிழ் மக்களிற்கு இருக்கின்ற சர்வதேச வாய்ப்பு மீண்டும் அதிகரிக்கும்.

தமிழ்மக்கள் தங்களுக்கு சாதகமாக இருந்த புறச்சூழலை விலையாகக் கொடுத்தே (சர்வதேச விசாரணை, புவிசார் அரசியல்போட்டி) ஆட்சிமாற்றத்தினைக் கொண்டு வந்திருக்கின்றார்கள். இதனால் தமிழ்மக்களுக்கு ஏதாவது கிடைக்குமா?        

இன்றுவரை நடைபெறவில்லை என்பதுதான் உண்மை. ஆகக்குறைந்தது ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதில் ஒரு சதுர மீற்றர் நிலம் கூட இதுவரை விடுவிக்கப்படவில்லை. ஒரு அரசியற்கைதி கூட இதுவரை விடுவிக்கப்படவில்லை. அரசியற் தீர்வு பற்றி ஒரு வார்த்தையும் தற்போது பேசப்படுவதில்லை. ஆகக் குறைந்தது கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்கக்கூட புதிய அரசு இடமளிக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. ஆகவே காலாகாலமாக இருந்த அரசுகள் என்ன செய்தார்களோ அதையே தான் இந்த அரசும் எமக்கு செய்யப்போகின்றது. இன்று இந்த அரசைக் காப்பாற்றுபவர்கள் பலர் மிகப்பெரிய இனவாதிகள். அவர்கள் எமக்கு எதையும் செய்ய விடுவார்களா என்கின்ற வினா எம்முன் எழுகின்றது. தற்போதைய அரசின் போட்டியாளரான மகிந்த மிகப்பெரும் இனவாதப் பரப்புரையில் ஈடுபட்டுவரும் நிலையில் புதிய அரசும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தன்னை ஒரு மிகப்பெரிய இனவாதியாக காட்டிக்கொள்ள முனையுமே தவிர தமிழ் மக்களிற்கு எதையும் கொடுக்க முன்வராது.

எமக்கு கிடைத்திருந்த ஓர் மிக அரிய சந்தர்ப்பம் கடந்த ஜனாதிபதித் தேர்தலாகும். அதை நாம் சரிவரப் பயன்படுத்தாது கைநழுவ விட்டுவிட்டோம் என்பதை மறுக்க முடியாது.

அகச்சூழல் தமிழ்மக்களுக்கு சாதகமாக இல்லை. புறச்சூழலும் சாதகமாக இல்லை. இந்நிலையில் தமிழ்த்தேசிய அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது

நாம் எமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச சக்திகளின் நலன் சார் போட்டிகளை மட்டுமே நம்பி இருக்க முடியாது. காரணம் அது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். எமக்கு இருக்கின்ற நிலையான பலம் என்ன என்பதை சரியாக புரிந்து கொண்டு எமது மக்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை முன்னெடுப்பதுதான் எமக்கு இருக்கக்கூடிய சிறந்த வழி. அதை நாம் செய்ய வேண்டும். எமது பலம் என்பது புலம்பெயர்ந்து வாழும் மக்களும் தமிழக உறவுகளுமாகும். இவர்களின் செயற்பாடுகள் அவர்கள் வாழும் நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கையை மாற்றுமளவிற்கு உச்சம் பெற வேண்டும். அதை நோக்கி எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இலங்கை அரசு தானாக முன்வந்து எமக்கு எதையும் தரப்போவதில்லை.

சிலர் ஆட்சிமாற்றத்தின்மூலம் ஒரு ஜனநாயகவெளி கிடைக்கும், அதனை நாம் பயன்படுத்தலாம் எனக் கூறியிருக்கின்றார்கள். (மனோகணேசன் உட்பட) உண்மையில் ஜனநாயகவெளி என்பது கிடைத்திருக்கின்றதா? அதனைப் பயன்படுத்தக்கூடிய சூழல் உள்ளதா?                                   

உண்மையில் ஒரு ஜனநாயக வெளி கிடைத்திருக்கின்றதா என்றால் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் மக்கள் ஒப்பீட்டளவில் சற்று பய மனோநிலையில் இருந்து விடுபட்டிருக்கின்றார்கள் என்றுதான் நான் நினைக்கின்றேன். ஆனால் ஜனநாயக ரீதியாக எமது உரிமைகளிற்காக போராடக்கூடிய அளவிற்கு ஜனநாயக இடைவெளி ஏற்படவில்லை. உதாரணமாக நாம் கூழாவடிப் பிரதேசத்தில் காணி சுவீகரிப்பிற்கு எதிராக போராட்டம் நடாத்த முற்பட்ட போது புலனாய்வாளர்களால் அப்பகுதி மக்கள் அச்சுறுத்தப்பட்டிருந்தார்கள். இவ்வாறான சம்பவங்கள் நிஜமான ஜனநாயகவெளி எமக்கு ஏற்படவில்லை என்பதையே காட்டுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியில் பங்கேற்றல் என்ற அரசியலை தொடக்கிவைத்திருக்கின்றது. இதனை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

இது நாம் ஏற்கனவே, அதாவது 2010 ஆம் ஆண்டிலேயே கூறியவை தான். கூட்டமைப்பினர் இவ்வாறான பாதையில் செல்வதென முடிவெடுத்த போது தான் அதில் இருந்து வெளியேறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கினோம். நாம் அப்போது கூட்டமைப்பின் முடிவை கடுமையாக ஆட்சேபித்து வெளியேறியதால் உடனடியாக அவர்கள் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த முடியவில்லை. எனினும் காலப்போக்கில் மெதுவாக தமது முடிவை நோக்கி மக்களை இழுத்துச் செல்ல முற்படுகின்றார்கள். இதன் ஓர் அங்கம் தான் சுதந்திர தின நிகழ்வில் பங்கு கொண்டமையும் சிங்கக் கொடி பிடித்தமையும், போர்க்குற்றங்களிற்கும் இனவழிப்பிற்கும் உள்ளக விசாரணையை ஏற்போம் எனக் கூறுவதும் ஆகும். தமிழ் மக்கள் இந்த போக்கில் இருந்து விழித்தெழுந்து ஓர் மாற்றத்தினை உருவாக்க தயாராக வேண்டும். இல்லையேல் நாம் மீட்க முடியாத அரசியல் புதைகுழிக்குள் சென்று விடுவோம். என்னைப் பொறுத்தவரையில் அண்மைக்காலங்களில் நாம் சந்தித்து வரும் மக்கள் ஓர் பாரிய அரசியல் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்திருக்கின்றார்கள் என்பது தெளிவாக உணரமுடிகின்றது.

சர்வதேச விசாரணைக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும்?          

சர்வதேச விசாரணைக்கு என்ன நடக்கும் என்பதை எதிர்வு கூறுவதைவிட என்ன நடக்கக்கூடாது என்பதே முக்கியம். நான் ஏற்கனவே கூறியது போன்று சர்வதேச விசாரணை கைவிடப்படும் அபாயம் உள்ளது. நாம் சர்வதேச விசாரணை நீர்த்து போகாதவாறு பாதுகாக்க எமது செயற்பாட்டினை வலுப்படுத்தி முன்னெடுக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினத்தில் சிங்கக் கொடி ஏற்றிய சம்பந்தன் தற்போது சுதந்திர தினத்திலும் பங்கேற்றிருக்கின்றார். இவருடைய நடத்தை தமிழ்த்தேசிய அரசியலை பாதிக்காதா?               

நிச்சயமாக ஈடுசெய்யப்பட முடியாத அரசியற் பின்னடைவை ஏற்படுத்தும். நாம் ஒரு விடயத்தை செய்து விட்டால் அதில் இருந்து பின்னகர முடியாது. சட்டத்தில் சொல்லுவார்கள் முரண்தடை (estopple) என்று. அதுவும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் செய்யும் போது அதற்கான பெறுமதி மேலும் அதிகரிக்கும். தேர்வு செய்த மக்கள் தற்போது கூறமுடியாது நாம் இவர்கள் இவ்வாறான செயற்பாட்டினை செய்ய இவர்களிற்கு வாக்களிக்கவில்லை என்று. உண்மையில் இவர்களின் இத்தகைய செயற்பாட்டினை மக்கள் அங்கீகரிக்கவில்லை எனில் இவர்கள் எதிர்காலத்தில் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்படும் பட்சத்திலேயே மக்கள் தமது நிலைப்பாட்டினை மீண்டும் வலியுறுத்தி உறுதியாக பதிவு செய்ய முடியும். அல்லது மக்கள் தேர்தல் வரை காத்திராது வெளிப்படையாக இச்செயற்பாடுகளிற்கு எதிராக அணிதிரண்டு போராட வேண்டும்.

முன்னர் மகிந்தர் அரசாங்கம் மாத்திரம் தமிழ்த்தேசிய சக்திகளுக்கு எதிரியாக இருந்தது. தற்போது மைத்திரி அரசாங்கம், இந்தியா, அமெரிக்கா என மூன்று எதிரிகள் வந்துள்ளனர். இவற்றுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது?

என்னைப் பொறுத்த மட்டில் சர்வதேச அரசியலில் எவரும் எதிரிகளும் இல்லை நண்பர்களும் இல்லை. ஒவ்வொரு அரசுகளும் தமது நலன் சார்ந்தே இயங்குகின்றார்கள். நாமும் எமது மக்களின் நலன் சார்ந்து இயங்க வேண்டும். ஆனால் கூட்டமைப்பின் தலைமை அவ்வாறு செயற்படவில்லை என்பது தான் எமது குற்றச்சாட்டு. எனவே எந்தவொரு சர்வதேச சக்தியையும் எதிரியாக நாம் பார்க்கவில்லை. இந்த பூகோள அரசியற் சதுரங்கத்தில் நாம் எம்மக்களின் நலன் சார்ந்து காய் நகர்த்த வேண்டும். எம்மைப் பொறுத்தமட்டில் கூட்டமைப்பின் தலைமையை சர்வதேச சக்திகள் தமது நலனை அடைய பயன்படுத்துகின்றார்கள். இவர்களும் மக்களின் நலனை பின்னகர்த்தி வெளிசக்திகளின் விருப்பிற்கு செயற்படுகின்றார்கள்.

ஏன் இவர்கள் வெளிச்சக்திகளின் பிடிக்குள் இருக்கின்றார்கள் அல்லது அவர்களின் விருப்பங்களை மட்டுமே செய்கின்றார்கள் என்று கூறுகின்றீர்கள்

கூட்டமைப்பின் தற்போதைய கூட்டணிக் கட்சிகளை பாருங்கள், உங்களுக்கு ஓர் உண்மை புரியும். தமிழரசுக் கட்சியாக இருக்கலாம், ஈ.பி,ஆர்.எல்.எப் ஆக இருக்கலாம், புளொட்டாக இருக்கலாம், ரெலோவாக இருக்கலாம். இவர்கள் எல்லோரும் 2001 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு எதிரான நிலைப்பாட்டில் நின்று செயற்பட்டவர்கள். அவர்கள் அவ்வாறு புலிகளுடன் முரண்பட்டது சரியா தவறா என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை. ஆனால் இது வரலாறு. அவ்வாறு விரும்பியோ விரும்பாமலோ புலிகளோடு முரண்பட்டவர்கள் தமது பாதுகாப்பிற்க்காக இலங்கை அரசாங்கத்தோடும் இந்தியாவோடும் இணைந்து நெருங்கி செயற்பட்டார்கள். அவர்களின் பாதுகாப்பில் வாழ்ந்தார்கள். அதனால் அவர்கள் அவர்களின் பிடியில் இருந்து மீள முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.

தமிழ்த்தேசியத்தை தனித்து அரசியலில் பின்பற்றினால் போதுமா? அதனை ஒரு வாழ்வு முறையாக பின்பற்ற வேண்டாமா? அப்படியாயின் நாம் என்ன செய்ய வேண்டும்?          

நிச்சயமாக அது ஓர் வாழ்வு முறையாக பின்பற்றப்பட வேண்டும். அதற்கு மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டும். நாம் எமது ஒவ்வொரு மக்கள் சந்திப்பிலும் சர்வதேச அரசியலையும் எமக்கான அரசியல் தீர்வு என்பது எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் நாம் ஏன் மாகாண சபைகளை நிராகரிக்கின்றோம் என்பதையும் விலாவாரியாகக் கூறிவருகின்றோம். இதன் மூலம் மக்களை அரசியல் மயப்படுத்தி அணிதிரட்ட முயன்று வருகின்றோம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலுவான கொள்கை நிலைப்பாட்டினை கொண்டிருந்தாலும் நடைமுறைச் செயற்பாடு பெரிதாக இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இதற்கு என்ன கூறுகின்றிர்கள்?     

இந்தக் குற்றச்சாட்டினை ஓரளவு ஏற்றுக் கொள்கின்றேன். இதற்கு காரணம் எமக்கு போதிய நிதிவளம் மற்றும் ஆட்பலம் என்பன இல்லாமல் இருந்தமையே ஆகும். ஆனால் நான் ஏற்கனவே மேலே கூறியது போல் மக்கள் முன்னர் பயப்பீதியில் ஆழ்ந்திருந்ததனால் எம்முடன் சேர்ந்து இயங்க தயங்கினார்கள். ஆனால் தற்போது மக்கள் சற்று பயத்தில் இருந்து வெளிவருவதனால் எம்முடன் பெருவாரியாக கைகோர்த்து வருகின்றார்கள். இது எமக்கு பெரும் உற்சாகத்தினை ஏற்படுத்தி இருக்கின்றது. தற்போது நாம் பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களையும் யுவதிகளையும் எமது கட்டமைப்புக்குள் உள்வாங்கி பிரதேச ரீதியாக கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றோம். சமூகம் ஓர் அரசியல் மாற்றத்திற்கு தயாராகி வருவதை உணர முடிகின்றது. அடுத்துவரும் மாதங்களில் இக்குற்றச்சாட்டுக்களிற்கு நாம் நிரந்தர முற்றுப் புள்ளி வைப்போம்.

நேர்கண்டவர் : சி.அ. யோதிலிங்கம்

2/28/2015 7:00:50 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்