Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இணக்க அரசியல் தோல்வியடைந்துள்ளது

<p>இணக்க அரசியல் தோல்வியடைந்துள்ளது</p>
சமூக ஆய்வாளர் நிலாந்தனுடன் ஒரு நேர்காணல்

 

ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான தென்னிலங்கை அரசியல் சூழலையும் தமிழர் அரசியல் சூழலையும் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

தென்னிலங்கை அரசியல் சூழல் ஸ்திரமற்றதாக மாறியிருக்கின்றது. அதேநேரம் அது அதிகம் வெளிச்சக்திகளுக்குத் திறந்து விடப்பட்டதாகவும் மாறியிருக்கின்றது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்படும் 2009 மே மாதத்திற்கு முன் வரையிலும் இலங்கையில் தமிழ் அரசியல் ஒரு வகையில் மூடப்பட்டதாக இருந்தது. அதாவது வெளிச்சக்திகள் எளிதில் கையாள முடியாததொன்றாகவும், வெளிச்சக்திகளால் கையாளப்பட முடியாததொன்றாகவும் வெளிச்சக்திகளின் தலையீடுகளுக்கு வரையறுக்கப்பட்ட ஒரு பரப்பாகவும் காணப்பட்டது. 2009 மே மாதத்திற்குப் பின்னர் அது முற்றுமுழுதாக வெளிச்சக்திகளிற்கென்றே திறக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், வெளிச்சக்திகள் நினைத்தபடி நிலைமையைக் கையாள முடியாத கள யதார்த்தம் அங்கே காணப்படுகின்றது. எவ்வாறெனில் சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் ராஜபக்ஷ குடும்பம் என்பது நவீன துட்டகைமுனுவைப் போன்றவர்கள். வெல்ல முடியாது எனக் கருதப்பட்ட எதிரியை அவர்கள் வென்று கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் சிங்கள மக்கள் ராஜபக்ஷ குடும்பத்தை எப்போதுமே மறக்கப் போவது கிடையாது.

நடந்து முடிந்த தேர்தலைப் பொறுத்தவரையிலும் ராஜபக்ஷக்கள் பலமான நிலையிலேயே காணப்படுகின்றார்கள். அவர்களைத் தோற்கடித்தது தமிழ்மக்களும், முஸ்ஸிம்களும், மலையகத்தமிழர்களும்தான். இதன்படி பெரும்பான்மையினரால் தெரிவு செய்யப்பட்டதொரு ஜனாதிபதியை சிறுபான்மையினர் தோற்கடித்த நிகழ்ச்சிதான் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல். ராஜபக்ஷவுக்கு தற்பொழுதும் சிங்களக் கடும் போக்காளர்களின் மத்தியில் ஆதரவுத்தளம் உடையாமலேயிருக்கிறது. அதேநேரம் தமிழ்மக்களைப் பொறுத்தவரையிலும் அவர்கள் ராஜபக்ஷக்களுக்கு எதிரான மனநிலையோடுதான் தொடர்ந்தும் காணப்படுகின்றார்கள். ஏனெனில் இதற்கு முன்னிருந்த சிங்களத் தலைமைகள் தமிழ் மக்களிற்கு எதிராகப் படை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறான படை நடவடிக்கைகளின்போது தமிழ் மக்கள் இடம்பெயரவோ, சேதங்களிற்குள்ளாகவோ, தோற்கடிக்கப்படவோ கூடிய நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் பிந்திய நிலைமைகளில் தமிழ் மக்கள் தமக்குத் துன்பத்தை விளைவித்த சிங்களத் தலைமைகளிற்கெதிராக யுத்தகாலங்களில் வெற்றிகளைப் பெற்றிருக்கின்றார்கள். இதன் மூலம்  குறிப்பிட்ட அரசாங்கத்தை யுத்த களத்தில் மட்டுமல்ல தேர்தலிலும் தோற்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளார்கள். முன்னர் ஆட்சியில் இருந்த அனைத்துச் சிங்கள ஆட்சியாளர்களையும் தமிழ்மக்கள் தரப்பிலிருந்த ஆயுதப் போராட்டம் காரணமாக யுத்தகளங்களில் எதிர்கொண்டு வெற்றிகொள்ளவோ, முறியடிக்கவோ கூடிய சூழ்நிலையிருந்தது.

ஆனால், ராஜபக்ஷக்களைப் பொறுத்தவரை அவர்கள் தமிழ்மக்கள் தரப்பில் ஆயுத எதிர்ப்பு என்று காணப்பட்ட தரப்பையே இல்லாமல் செய்துவிட்டார்கள். ராஜபக்ஷ குடும்பத்துக்கெதிரான  கோபம் என்பது தமிழ்மக்கள் தரப்பின் மீது பல தசாப்த காலம் நீடிக்கும். சில வேளைகளில் அவர் மீதுள்ள கோபம் தலைமுறைகள் தோறும் நீடிக்கும். இந்த நிலையில் தமிழ்மக்கள் எப்போதும் ராஜபக்ஷக்களிற்கு எதிராகத்தான் சிந்திப்பார்கள், வாக்களிப்பார்கள். சிங்களக் கடும் போக்காளர்கள் எப்பொழுதும் ராஜபக்ஷக்களிற்கு ஆதரவாகவே செயற்படுவார்கள். இந்த இரு மாறா நிலைமைகளும் இலங்கைத் தீவின் அரசியலில் செல்வாக்குச் செலுத்தப்போகின்றன.

இந்த நிலையில் ராஜபக்ஷவுக்கிருக்கும் சிங்களக் கடும் போக்காளர்கள் மத்தியிலான ஆதரவுத் தளத்தை உடைப்பது, தமிழ்மக்கள் மத்தியிலிருக்கக்கூடிய கோபத்தைத் தணிப்பது. இந்த விடயங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தாத வரையில் இலங்கைத்தீவின் அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வருவது கடினம்.

மாற்றத்தை உருவாக்கித் தத்தெடுத்த மேற்கத்தைய தரப்புகள் தற்போது கடும்போக்காளர்கள் ஒரு தரப்பிலும் எழுச்சி பெறக்கூடாது என்று சிந்திப்பதாகத் தெரிகின்றது. சிங்களத்தரப்பைப் பொறுத்தவரை ராஜபக்ஷாக்களின் கட்சியை உடைப்பது ஆதரவாளர்களைக் கழட்டுவது, உள்ளூரிலேயே அவருக்குக் கவசமாக இருக்கக்கூடியவர்களை விலைக்கு வாங்குவது இது  ஒரு பக்கம். இன்னொரு பக்கம் போர்க்குற்றம் தொடர்பாக அவருடைய நெருங்கிய வட்டத்திலுள்ளவர்களின் இரட்டைப் பிரஜாவுரிமையைப் பயன்படுத்தி அவர்கள் மீது அச்சுறுத்தல்களைக் கொண்டு வருவது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் சிங்களக் கடும் போக்காளர்களுக்கு அவர் தலைமை தாங்கும் நிலைமையிலிருந்து அவரை பின்னுக்குக் கொண்டு செல்லும் செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடுகின்றார்கள்.

அதேவேளை தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் விடுதலைப்புலிகள் மீதான தடையைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளில் நீடிக்கிறார்கள். புலிகளிற்கெதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடும் போக்காளர்களை ஏதாவதொரு விதத்தில் தணியச் செய்யும் வகையிலான செயற்பாடுகள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் உள்நாட்டிலும் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் மக்களது நலன்களில் எவ்வித அக்கறையுமில்லாத தமிழ் மிதவாதிகளாலேயே தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுக்கப்படுவதை மேற்கத்தைய நாடுகளும் இந்தியாவும் விரும்புகின்றன.

தமிழ் மக்கள் மத்தியில் ராஜபக்ஷ குடும்பத்துக்கெதிரான மாறாக்கோபம் காணப்படுகின்றது. அதே நேரம் சிங்களக் கடும் போக்காளர்கள் மத்தியில் ராஜபக்ஷ மீதான மாறாத அனுதாபம் காணப்படுகின்றது. இந்த இரண்டுக்குமிடையில் தான் இலங்கைத் தீவின் அரசியல் இருக்கப் போகின்றது.

<p>இணக்க அரசியல் தோல்வியடைந்துள்ளது</p>

ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் தமிழர் அரசியல் சூழல் பலவீனமாக இருந்தபோதும் சர்வதேச ரீதியான புறச்சூழல் மட்டும் சாதகமாக இருந்தது. தற்போது அந்த புறச்சூழலும் இல்லாத நிலையில் தமிழ் அரசியலை எவ்வாறு முன்நோக்கிக் கொண்டு செல்வது?

ஆட்சி மாற்றத்திற்கு முன்னரும் தமிழ்மக்களின் அரசியல் பலவீனமாகவிருந்தது என்று கூறமுடியாது. ஏனெனில் உள்நாட்டில் தமிழ் மக்களின் அரசியல் தேக்க நிலையிலிருந்தது உண்மை. ஆனால், அனைத்துலகத் தரப்பில் தமிழர் அரசியல் பலமாகவிருந்தது. பேசுபொருளாகவிருந்தது. தமிழ்மக்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் பெருமளவில்  வெளியில் கொண்டு வரப்பட்டன. அதுமட்டுமன்றி அவை ஆவணப்படுத்தப்பட்டன. இதனை அவர்கள் தமிழ் மக்களுக்காகச் செய்யவில்லை. ஆட்சி மாற்றத்திற்காகச் செய்தார்கள். ஏற்கனவே ஆட்சியிலிருந்த அரசாங்கத்திற்கு அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்காக அவர்கள் செய்தார்கள். அவர்கள், தங்களுடைய நோக்கு நிலையில் நின்று செய்தாலும் தமிழ் மக்களுக்குச் சாதகமானதொரு புறச்சூழல் காணப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் தமிழ் மக்களுக்குச் சாதகமான சூழ்நிலைகள் நிலவினாலும் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் தமிழ் மக்களுக்குச் சாதகமான விடயங்களில் தளம்பல் நிலை காணப்படுகின்றது. தமிழ் மக்களின் வெளிப் பேரம்பேசும் சக்தி ஒப்பீட்டளவில் குறைந்திருக்கின்றது.

இருந்தாலும் அதனை முழுமையாகக் குறைந்து விட்டது எனக் கருதமுடியாது. ஏனெனில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களையும் இணைத்துக்கொள்ளாமல் பொது எதிரணி வெற்றிபெற முடியாது. வெளிச்சக்திகளின் ஆதரவையும் பெறுகின்ற ஒரு கூட்டரசாங்கம் தான் இதில் வெற்றிபெற முடியும். ராஜபக்ஷ தற்போதும் பலமாகவேயிருக்கின்றார். நடந்து முடிந்த அவருக்குச் சார்பான மூன்று கூட்டங்களிலும் இதுதான் வெளிக்கொணரப்பட்டுள்ளது. ஆகவே ராஜபக்ஷக்களை இனியும் தோற்கடிக்க முடியாது.

இந்தச் சூழ்நிலையில் இனிவரும் காலங்களிலும் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகத் தமிழ் மக்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை மேற்கு நாடுகளிற்கும் இந்தியாவிற்கும் இருக்கின்றது.

இலங்கைத் தீவிலே தற்போது இரு மாறா அம்சங்கள் காணப்படுகின்றன. ஒன்று சிங்களக் கடும்போக்காளர்கள் எப்போதும் மகிந்தவிற்கு ஆதரவாகவே சிந்திப்பார்கள். தமிழ் மக்கள் பெரும்பாலும் மகிந்தருக்கு எதிராகவே சிந்திப்பார்கள். தமிழ் மக்கள் மகிந்தருக்கு எதிராகச் சிந்திப்பார்கள் என்கிற மாறாக் காரணியை வைத்துக்கொண்டு மேற்குலக நாடுகளும் இந்தியாவும் எப்போதும் தமிழ்மக்களை மகிந்தருக்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என நம்புகின்றது. ஆனால், அவ்வாறில்லாமல் மகிந்தருக்கெதிராகவுள்ள தமிழ் மக்களின் கோபத்தைத் தமிழ்த் தரப்பு சரியான வகையில் பயன்படுத்தவேண்டும். அதனையொரு பேரம் பேசும் சக்தியாக மாற்றவேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மாத்திரம் தான் தமிழர் தரப்பு இந்தியாவுடனும், மேற்குலக நாடுகளுடனும் பேரம்பேசி தங்களுக்குக் கிடைக்கக்கூடிய உச்சபட்ச தீர்வினைப் பெறலாம்.

இதற்கு மாறாகத் தான் கடந்த ஆறு ஆண்டு காலங்கள் கடந்து சென்றிருக்கின்றன. தமிழ்மக்களின் கோபம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்குத் தமிழ்த் தரப்பிலுள்ளவர்களே பொறுப்பாளிகள்.

இந்தியாவும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் தாம் உருவாக்கிய  ஆட்சிமாற்றத்தைப் பாதுகாப்பதிலேயே அக்கறையாக உள்ளன. தமிழ் அரசியலின் எந்த முன்னெடுப்பையும் சகித்துக் கொள்ளாத போக்கேயுள்ளது. இதற்கு எவ்வாறு முகம் கொடுப்பது?

ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் இலங்கைத்தீவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திவிட்டோமென நம்புகிறார்கள். ஆனால் முன்னிருந்த நிலைமையை விடவும் தற்போது ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது என்பதே உண்மை. ஆனாலும் அது மேற்குக்குச் சாதகமான வலுச்சமநிலையை ஏற்படுத்தக் கூடிய தளம்பல் நிலையில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் இந்தத் தளம்பல் நிலையைப் பயன்படுத்தி மேற்குக்கும், இந்தியாவுக்கும் சார்பான வலுச்சமநிலையை உருவாக்குவதற்கு அவர்கள் விரும்புகின்றனர். இந்த வலுச்சமநிலையைக் குழப்பும் வகையில் தமிழ்மக்கள் எதுவும் செய்யக் கூடாது என  அவர்கள் எண்ணுகின்றனர். இதற்காகத்தான் அவர்கள் தமிழ்மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் புலிகள் மீதான தடையை நீடிக்க வைக்கின்றனர். அத்துடன் முன்னிருந்த இறுக்கமான சில நடைமுறைகளைச் செயற்படுத்துவதன் மூலம் தமிழ்மக்கள் மத்தியில் தீவிரமான சக்திகள் எழுச்சி பெறக்கூடாது என்பதில் கவனம் செலுத்துகின்றார்கள். அதேவேளை உள்நாட்டிலும் கூட தீவிரமான சக்திகளைத் தலையெடுக்க விடாது மிதவாதிகளிடமே அரசியல் காணப்பட வேண்டுமென்பதில் குறியாகச் செயற்படுவதாகச் தெரிகிறது.

இந்த நிலைமையில் அவர்கள் ஆட்சி மாற்றத்தின் பங்காளிகளாகத் தமிழ்மக்களைத் தொடர்ந்தும் வைத்திருக்கவே விரும்புவர். இந்தச் சூழ்நிலையிலும் தமிழர் தரப்பு செய்ய வேண்டியது என்னவெனில் அவர்கள் எங்களை ஆட்சி மாற்றத்தின் பங்காளிகளாகத் தொடர்ந்தும் வைத்திருக்க விரும்புகின்றனர் என்கிற உண்மையைப் புரிந்து கொண்டு தமிழ் மக்கள் தங்களது பேரம் பேசும் சக்தியை உணர்ந்து செயற்படவேண்டும். பேரம் பேசும் சக்தியை வளர்த்துக் கொள்வதற்கான உபாயத்தைக் கண்டு பிடிக்க வேண்டும்.

இதுவரை காலமும் ஈ.பி.டி.பி செய்த இணக்க அரசியலைத் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்ய ஆரம்பித்துள்ளது. இந்த இணக்க அரசியல் சாத்தியமானது எனக் கருதுகிறீர்களா?

இலங்கைத் தீவின் அரசாட்சியைப் பொறுத்தவரையில் இணக்க அரசியல் சாத்தியமாகாது. தமிழ்மக்களுடன் மட்டுமல்ல முஸ்லிம்களுடனும் சரி வராது. மலையகத் தமிழர்களுடனும் சரிவராது. முஸ்லிம்களின் இணக்க அரசியல் தோல்வியுற்றதன் விளைவுதான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்தது. மலையகத்தில் இணக்க அரசியல் தோல்வியுற்றதன் விளைவுதான் கொஸ்லந்த மண்சரிவின் பின்னர் மக்கள் நடுத்தெருவில் விடப்பட்டமை. மலையகத்தில் நடந்த கோரமான அந்த மண்சரிவு இணக்க அரசியலின் இயலாமையை கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. கையாலாகாத்தனம் நிரூபிக்கப்பட்டதன் விளைவாகத் தான் மலையக மக்கள் சற்றும் எதிர்பாராத வகையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்தார்கள். இந்த நிலையில் இணக்க அரசியல் வடக்கு கிழக்குத் தமிழ் பேசும் மக்களிடம் மாத்திரம்தான் செயலற்றுப் போனது என்றில்லை. இலங்கைத் தீவு முழுவதுமே இணக்க அரசியலுக்குச் சாதகமற்றதொரு சூழ்நிலையே காணப்படுகின்றது. ஏனெனில் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதமென்பது தனக்குப் புறத்தியானவர்களின் அச்சத்தின் மீதே எப்பொழுதும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

இந்த அச்சம் துட்டகைமுனு காலை மடக்கிக் கொண்டு உறங்கியதாகக் கூறப்படும் கதையிலிருந்து ஆரம்பிக்கின்றது. ஒரு பக்கம் தமிழர் மறுபக்கம் கடல். தான் எவ்வாறு காலை நீட்டி உறங்க முடியும் என்று கேட்டானாம். அந்தக் காலை மடக்கிக் கொண்டு உறங்கும் அரசியல் இன்றுவரை காணப்படுகிறது. குறண்டிக்கொண்டு படுக்கின்ற மனநிலை இப்பொழுதும் காணப்படுகிறது. அது வெளியாருக்கு அஞ்சுகிறது. இந்த அச்சத்தின் பிரதான காரணம் இந்தியாதான். தனக்கு அருகிலிருக்கும் ஒரு பெரிய பனிப்பாறை எந்த வேளையிலும் உருகித் தம்மை மூழ்கடித்து விடும் என்ற அச்சத்தில் சிங்கள மக்கள் வாழ்கின்றார்கள் என சேர்.ஐவர் ஜெனின்ஸ் கூறியுள்ளார். அதேபோலத்தான் மற்றொரு மேற்கத்தைய புலமையாளர் இலங்கைத் தீவில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினருக்குரிய மனச்சிக்கலுடனும், பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்குரிய உளச் சிக்கலுடனும் வாழ்ந்து வருகின்றனர் என்றார்.

இது எவ்வாறு உருவாகிறது என்றால் சிங்கள மக்கள் தமிழர்களை இந்தியாவுடன் சேர்த்துப் பார்க்கிறார்கள். இந்தியாவின் ஒரு பகுதிதான் தமிழ் மக்கள் என்கிற எண்ணத் தோற்றப்பாடு காரணமாக அதற்காக அச்சப்படுகிறார்கள். அந்தப் பயம்தான் அவர்களைப் பிறர் மீதான அச்சமாக மாற்றுகிறது. சிங்கள, பௌத்த மேலாதிக்கவாதமென்பது எப்பொழுதுமே இந்தச் சிறிய தீவை தன்னுடையதாக எண்ணுகிறது. இதனால் அது மற்றைய அனைத்தையும் எதிரியாகப் பார்க்கிறது. முன்னர் தமிழ் - சிங்களத் தரப்பினரிடையே ஆயுத ரீதியான மோதல்கள் இருந்து வந்தன. அதிலே தமிழ் மக்களின் ஆயுதம் ஏந்திய போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் எதிரியாக முஸ்லிம்களை அவர்கள் கருதினார்கள். தமிழ் மக்கள் தங்களுக்குள்ளேயே ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலப்பகுதியில் முஸ்லிம்கள் தென்னிலங்கையில் பெருமளவு நகரங்களில் வர்த்தக ரீதியாக ஆதிக்கம் செலுத்தியதொரு நிலை காணப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் முதலில் நிலத்தை மீட்பதற்காகத் தமிழ் மக்களைத் தோற்கடித்தார்கள்.

பின்னர் சந்தை வாய்ப்பை மீட்பதற்கு போரை முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தினார்கள். மொத்தத்திலேயே சிங்கள பௌத்த மேலாதிக்க வாதமென்பது எப்பொழுதும் வெளியாருக்கு அஞ்சுகிற போக்கே காணப்படுகிறது. அந்த அச்சத்தின் மீதே சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில் இந்த அரச கட்டமைப்பை வைத்துக் கொண்டு இணக்க அரசியல் செய்ய முடியாது. இணக்க அரசியலென்பது இரு தரப்பும் தங்களது பலங்களை பரஸ்பரம் ஒப்புக் கொள்ள வேண்டும். பலவீனங்களை ஒப்புக்கொள்ளவேண்டும். இணக்கமென்பது விட்டுக் கொடுத்தல். எனவே விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும். தோற்கடிக்கப்பட்ட தரப்பு அல்லது சிறிய தரப்பு விட்டுக் கொடுக்க வேண்டும் என்றில்லை. இதிலே வென்ற தரப்பு தோற்கடிக்கப்பட்ட தரப்பு, சிறிய தரப்பு, பெரிய தரப்பு என்பதை விடவும் உயர்வான இலட்சியத்துக்காக இரு தரப்பும் விட்டுக்கொடுக்க வேண்டியது அவசியம்.

இலங்கைத் தீவில் ஆயுதமோதல் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட வென்றவர்களும் தோற்றவர்களும் பிளவுண்டு தான் காணப்படுகிறார்கள். ஆகவே நான் பெரியவன் நீ சிறியவன் என்ற பேதம் பார்த்தால் அங்கே இணக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசியலில் பலம், பலவீனம் என்று வரும்போது அது சரணாகதி அரசியல் தான். இலங்கைத் தீவின் அரசியல் கட்டமைப்பு என்பது இணக்க அரசியலுக்கு ஏற்றதாகத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே இணக்க அரசியல் என்பது வடக்குக் கிழக்கில் மட்டுமல்ல, முஸ்லிம்கள் மத்தியிலும் தோற்றுவிட்டது. மலையக மக்கள் மத்தியிலும் தோற்றுவிட்டது. ஆகவே இணக்க அரசியல் என்ற சொல்லுக்குப் பதிலாக நாம் சரணாகதி அரசியல் என்ற வார்த்தையையே நாம் பயன்படுத்த வேண்டும்.

நேர்கண்டவர்: செல்வநாயகம் ரவிசாந்

5/9/2015 3:16:05 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்