Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இங்கு விமர்சனம் வருவதற்குக் கூட தகுதி தேவைப்படுகிறது

<p>இங்கு விமர்சனம் வருவதற்குக் கூட தகுதி தேவைப்படுகிறது</p>
எழுத்தாளர் அசதா நேர்காணல்

 

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், கவிஞர் என்று பன்முகத்தன்மை கொண்டவரான அசதா, விழுப்புரம் மாவாட்டம் முகையூரைச் சேர்ந்தவர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது முதல் கவிதை 1995இல் கணையாழியில் வெளியானது. 1996இல் இவரது முதல் மொழிபெயர்ப்பு சிறுகதையும் கணையாழியில் வெளியானது. அதன் பிறகு கவிதை, மற்றும் கதைகள் மொழிபெயர்ப்பில் பிரதானமாக இயங்கிவருகிறார். இவர் மொழிபெயர்த்த கவிதைகள் மற்றும் சிறுகதைகள், கணையாழி, கல்குதிரை, புது எழுத்து, தீராநதி உள்ளிட்ட இலக்கிய இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.

தற்போது நடந்துமுடிந்துள்ள சென்னை புத்தகக் கண்காட்சியில் இவரது மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பு 'நீல நாயின் கண்கள்' என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் அஜயன் பாலாவின் நாதன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இது இவரது ஐந்தாவது புத்தகமாகும். இவர் சொந்தமாக எழுதிய சிறுகதை மற்றும் கவிதை தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. இவர் தமிழில் மொழிபெயர்த்த இரண்டு நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

சென்னை புத்தக் கண்காட்சியில் அசதாவை சந்தித்து உரையாடியதிலிருந்து சில துளிகள்:

மொழிபெயர்ப்பின் மீதான ஆர்வம் வந்தது எப்படி?

பள்ளியிறுதி வகுப்புகளில் ஆங்கிலத் துணைப்பாடநூல் கதைகளைத் தமிழில் எழுதிப் பார்ப்பேன். அதன் பிறகு ஆங்கில வாசிப்பு, தமிழ் சிறுபத்திரிகை வாசிப்பு, உலக இலக்கியங்கள் மீதான ஆர்வம் ஆகியவை என்னை மொழிபெயர்ப்பின்பால் ஈர்த்தன. என் முதல் கவிதை கணையாழியில் வெளியானது. அதற்கு அடுத்த ஆண்டு என் முதல் மொழிபெயர்ப்பு சிறுகதை வெளியானபோது எனக்கு 22 வயது. தொடர்ந்து சிறுபத்திரிகைகளில் என் படைப்புகளும் மொழிபெயர்ப்புப் படைப்புகளும் வெளியாகின.

ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பளராவதற்கான பயிற்சி என்ன?

என்னைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்புக்கு என்று சிறப்பான பயிற்சி எதுவும் இல்லை. ஆர்வமும், அடிப்படை மொழியறிவும் முக்கியம். ஒரு பிரதியை மொழிபெயர்க்கும்போது எதிர்கொள்ளும் சவால்கள்தான் மொழிபெயர்ப்புக்கான பயிற்சி. சில பிரதிகளை மொழிபெயர்க்கும்போது ஒரு குறிப்பிட்ட வார்த்தையோ வரியோ உங்கள் பணியைத் தொடரவிடாமல் நிறுத்திவிடும். அதுதான் மிகப் பெரிய சவால். அந்தச் சவாலை எதிர்கொண்டு வெல்லும் வழிகளைக் கண்டறிவதன் மூலம் மொழிபெயர்ப்பில் தேர்ச்சியடைய முடியும். இது தவிர்த்து மூத்த மொழிபெயர்ப்பாளர்களின் பிரதிகளை வாசிப்பதும் அவசியம்.

நீங்கள் முன்னோடியாகப் பின்பற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் யார்?

பலர் இருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், பிரம்மராஜன், சா.தேவதாஸ், அமரந்தா, லதா ராமகிருஷ்ணன், ஜி.குப்புசாமி ஆகியோர். இவர்களின் மொழிபெயர்ப்புப் பிரதிகளைப் படித்து நான் என்னை வளர்த்துக்கொண்டேன் என்று சொல்லலாம்.

ஆங்கிலப் பிரதியைத் தமிழில் மொழிபெயர்ப்பதோடு தமிழ்ப் பிரதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவராகவும் இருக்கிறீர்கள். இது எப்படிச் சாத்தியமானது?

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மிகக் குறைவாகவே மொழிபெயர்த்திருக்கிறேன். என் எல்லையறிந்து சில சிறுகதைகளும் கவிதைகளும் மட்டுமே. ஆனால் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். தமிழ் எழுத்துக்கு உலக வாசகப் பரப்பில் உரிய இடம் இல்லாததற்குத் தேர்ந்த ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறை முக்கியக் காரணம். ஆனால் இதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. ஆங்கிலப் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் அணுக முடியாத தூரத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த சில எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புக்களை மட்டுமே வெளியிடுகிறார்கள். Elite few என்று சொல்வார்களே அதைப் போல. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பவர்களும் மிகக் குறைவானவர்களே. எனவே தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்களை அடையாளம் கண்டு பரவலாகப் படைப்புகளை ஆங்கிலத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

புனைவுகளையும் அபுனைவுகளையும் மொழிபெயர்ப்பதில் உள்ள வேறுபாடுகள் என்ன? எது சவால் நிறைந்தது?

பொதுவாக பிரதியின் கடினத்தன்மை மொழிபெயர்ப்புக்கான சவாலை நிர்ணயிக்கிறது. என்னளவில் புனைவு அபுனைவு என்று வருகையில் மொழிபெயர்ப்பில் உள்ள சவால் பிரதியின் கடினத்தன்மையைப் பொறுத்து அமைவதில்லை. புனைவெழுத்து, மொழிபெயர்ப்பாளனை வாசகனாக இழுத்துக்கொண்டு விடுகிறது. எனவே புனைவை மொழிபெயர்ப்பது எனக்கு ஒப்பீட்டளவில் எளிமையாக இருக்கிறது. ஆனால் அபுனைவுக்கு இந்த இயல்பு இல்லாததால் அதிக மெனக்கிடல் தேவைப்படுகிறது. இக்கருத்து என் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. ஆளுக்கு ஆள் வேறுபட வாய்ப்பிருக்கிறது.

எழுத்தை முழு நேரத் தொழிலாகக் கொண்டு இயங்கும் சூழல் இன்று இல்லை. தமிழின் மிகப் பிரபலமான எழுத்தாளர்களே எழுத்தை உபதொழிலாகத்தான் செய்துவருகிறார்கள். மொழிபெயர்ப்பை ஒரு முழு நேரத் தொழிலாக எடுத்துக்கொண்டு இயங்கும் சூழல் இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது என்று சொல்வேன். சொல்லப் போனால் இலக்கிய மொழிபெயர்ப்பை மட்டுமே முழுநேரத் தொழிலாக வைத்துக்கொண்டு ஒருவர் இயங்க முடியும். பதிப்பகங்கள் மொழிபெயர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டன. என் தோரயமான கணக்கின்படி தமிழில் வெளியாகும் (தீவிர இலக்கிய நூல்கள்) ஜந்தில் ஒரு நூல் மொழிபெயர்ப்பு நூல்.

குறிப்பாகத் தீவிர இலக்கிய வாசகர்கள் மத்தியில் மொழிபெயர்ப்புப் பிரதிகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.இதற்குக் காரணம் என்ன?

தீவிர இலக்கிய வாசிப்புக்கு சிறு பத்திரிகைகள்தான் அரிச்சுவடி. தமிழில் மொழிபெயர்ப்புப் பிரதிகளுக்கு சிறு பத்திரிகைகள்தான் அதிக இடம் கொடுத்துவருகின்றன. தீவிர இலக்கிய வாசகர்களுக்கு மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களை சிறு பத்திரிகைகள் அறிமுகப்படுத்துகின்றன. அதில் ஈடுபாடு கொள்ளும் வாசகர்கள் தமது வாசிப்பின் தொடர்ச்சியாக மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய நூல்களையும் வாங்கு வாசிக்கிறார்கள்.

வெகுஜன தளத்தில் மொழிபெயர்ப்பு நூல்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

வெகுஜன தளத்திலும் மொழிபெயர்ப்பு நூல்களுக்குத் தேவை இருப்பதாகவே தெரிகிறது, குறிப்பாக சுயமுன்னேற்ற நூல்களைச் சொல்லலாம். ஆனால் இலக்கிய வாசகர்கள் விரும்பும் மொழிபெயர்ப்பு நூல்களுக்கும் வெகுஜன வாசகர்கள் விரும்பும் மொழிபெயர்ப்பு நூல்களுக்கும் இடையிலான கோடு தெளிவாக இருக்கிறது. இரண்டு தளங்களிலும் மொழிபெயர்ப்பு நூல்களுக்கான வரவேற்பு இருக்கிறது.

இன்றைய சூழலில் ஒருவரின் வாசிப்புப் பழக்கத்துக்கு சமூக வலைதளங்கள் அதிகப் பங்காற்றுகின்றன. சமூக வலைத்தளங்கள் தீவிர எழுத்தை ஊக்குவிக்கிறனவா?

இணையத்தில் தீவிர எழுத்து எழுதப்படுவதில்லை. பல இலக்கியவாதிகள் இணையம், தீவிர வாசிப்புக்கான இடமில்லை என்று நினைக்கிறார்கள். இணைய வாசகர்கள் தீவிர எழுத்தின் வாசகர்கள் அல்ல என்ற அவர்களது முன்முடிவு இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஆனால் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் தீவிர எழுத்தைச் சார்ந்த விவாதங்கள் நடப்பதையும் பகிரப்படுவதையும் பார்க்க முடிகிறது. ஆனால் தீவிர இலக்கிய எழுத்தாளர்கள் முழுமையாகப் பங்கேற்பதற்கான இடமாக அது மாறவில்லை. அச்சு இதழ்களுக்கு ஒரு மாற்றாக இணையம் மாறும் காலம் அண்மையில் இல்லை.

சமூக வலைத்தளங்களால் எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையிலான இடைவெளி குறைந்திருக்கிறதா?

ஒரு வகையில் குறைத்திருக்கிறது என்று சொல்லலாம். இணையம் உடனடித் தன்மை கொண்டது (instantaneous). இதனால் தன் எழுத்து வாசிக்கப்படுவதையும் அதற்கான எதிர்வினைகளையும் எழுதியவர் உடனடியாக தெரிந்துகொள்ள முடிகிறது.

எல்லோரும் வாசகர் கடிதம் எழுதிவிடுவதில்லை. இதனால் தன் எழுத்து வாசிக்கப்படுகிறதா என்பதே எழுதியவருக்குத் தெரியாத சூழல் ஒரு காலத்தில் இருந்தது. இணையம் அதை மாற்றியிருக்கிறது. வாசகர் கடிதம் எழுதத் தயங்கியவர்கள் இணையத்தில் எழுதிவிடுகிறார்கள்.

முன்பு பலரது எழுத்துக்களும் நூல்களும் கண்டுகொள்ளப்படாமலே மறதியின் இருட்டைச் சென்றடைந்திருக்கின்றன. இந்த நிலை இப்போது மாறியிருக்கிறது.

ஒருவரின் டுவிட்டர் பதிவுகள் ஒரு புத்தகமாக வெளிவருவதும், தன் கதைப் புத்தகமாக வெளியாகும் முன் அதை முகநூலில் வெளியிட்டதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒருவர் இதைத்தான் எழுத வேண்டும் இதைத்தான் வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்க நமக்கு உரிமையில்லாதபோது டுவிட்டர் பதிவுகளையும் முகநூல் பதிவுகளையும் புத்தகங்களாக வெளியிடுவதை விமர்சிக்க முடியாது. உலக அளவில் எழுத்தாளர்கள் சாதாரணமாக கிறுக்கி வைத்த நாட்குறிப்பு போன்றவைகள் இலக்கியமாகியிருக்கின்றன. டுவிட்டர் பதிவுகளும் முகநூல் பதிவுகளும் இலக்கியமாக இருக்கின்றனவா என்பதுதான் இங்கு கேள்வி. பிரதியைப் படித்துவிட்டு அதனடிப்படையில் விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது.

இணையத்தால் நூல் விமர்சனச் சூழல் செறிவடைந்திருக்கிறதா?

இணையத்தால் நூல் விமரச்னம் அல்லது மதிப்புரை அதிகரித்திருக்கிறது என்று சொல்லலாம். இது வரவேற்கத்தக்க விஷயம்தான்.

ஆனால் இணையத்தில் விமர்சனங்கள் செறிவடையவில்லை. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலை இருக்கிறது. தீவிரமிக்க கறாரான விமர்சனங்கள் இணையத்தில் அரிதாகவே எழுதப்படுகின்றன. இணைய விமர்சனம் செறிவடைய வேண்டுமென்றால் செறிவாக எழுதுபவர்கள் இணையத்துக்கு வரவேண்டும். எதுவுமே இல்லாத இடத்தில் இந்த அளவாவது இருப்பது பரவாயில்லை என்று திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இணைய வெளிக்கு அப்பாற்பட்ட விமர்சனச் சூழல் எப்படி இருக்கிறது?

இங்கு விமர்சனம் வருவதற்குக்கூடத் தகுதி தேவைப்படுகிறது. செல்வாக்கு மிக்க எழுத்தாளர்கள், குறிப்பிட்ட குழுக்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கவனம் பெறுகிறார்கள். அவர்களது எழுத்துக்கள்தான் கவனிக்கப்படுகின்றன. உதிரிகளை அனேகமாக யாரும் கவனிப்பதில்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான் இணையத்தின் பங்கை நாம் கொண்டாட வேண்டியிருக்கிறது. 80,90களில் இருந்த விமர்சன நெறியும், தீவிரமும் இப்போது இல்லை.

இணையத்தால் இளம் வாசகர்கள் பெருகியிருக்கிறார்கள் என்ற கருத்துக்கு இடமிருக்கிறது. அந்த இளம் வாசகர்களை தீவிர வாசிப்பை நோக்கி நகர்த்துவதில் இணையம் பங்காற்றுகிறதா?

ஒருவருக்குத் தீவிர எழுத்தை அறிமுகப்படுத்தலாம். படிக்கவைக்க முடியாது. எழுத்தின் மீது வாசகருக்கும் பிடிப்பு ஏற்பட வேண்டு, அதுதான் அவரைத் தொடர வைக்கும்.

உங்கள் அடுத்த திட்டங்கள் என்ன?

சிறுகதை எழுத்து என் விருப்பத்துக்குரியது. ஆனால் மொழிபெயர்ப்பு என் அதிகப்படியான நேரத்தை எடுத்துக்கொண்டுவிடுவதால் எழுதுவதில் கவனம் செலுத்த முடிவதில்லை. இனி அதிக சிறுகதைகள் எழுத விரும்புகிறேன். ஒரு நாவல் எழுதத் தொடங்கியிருக்கிறேன்.

சந்திப்பு: கோபால்

1/23/2014 2:46:15 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்