Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்!

ஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்!
நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா

 

புங்குடுதீவு: சிதைவுறும் நிலம் - ஆவணப்பட இயக்குனர் தங்கேஸ் பரம்சோதியுடன் ஒரு நேர்காணல்

'புங்குடுதீவு சிதைவுறும் நிலம்' எனும் ஆவணப்படம் அண்மையில் வெளிவந்துள்ளது. ஈழத்தின் யாழ் மாவட்டத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள சிறுதீவாகிய புங்குடுதீவு நிலத்தைப் பற்றிப் பேசுகிறது இந்த ஆவணப்படம். கிழக்கு இலண்டன் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையில் கலாநிதி ஆய்வுக் கற்கையை மேற்கொண்டு வரும் தங்கேஸ் பரம்சோதி அவர்கள் இந்த ஆவணப்படத்தினை உருவாக்கியுள்ளார்.

நிலம் என்பது எந்தவொரு மக்களினதும் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு வாழ்வியலில் காத்திரமான செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது மறுக்கமுடியாத ஒன்று. அந்த வகையில் 'புங்குடுதீவு: சிதைவுறும் நிலம்' எனும் ஆவணப்படத்தில் முன்வைக்கப்படுகின்ற பேசுபொருள், அது எழுப்புகின்ற கேள்விகள், கோரிநிற்கின்ற விளைவுகள் சார்ந்து காத்திரம் மிக்கவையாக உள்ளன.

தமிழ்ச்சூழலில் சமூக ஆய்வு, ஆவணப்படுத்தல், ஆவணப்பட உருவாக்கம் போன்றவற்றிற்குப் பெரும் வறுமை நிலவுகின்றது. அவ்வப்போது மட்டுமே இவை சார்ந்த சில நல்ல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு 'மாற்றம் அமைப்பு', 'நிலமும் நாங்களும்' என்ற ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருந்தது. தமிழர் தாயகப் பகுதியின் வட மாகாணத்தின் காணி உரிமை சார்ந்த விவகாரம், இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருக்கும் மக்களின் காணிகள், அதனால் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் சமூக, அரசியல், பொருளாதார, வாழ்வியல் பிரச்சினைகள் பற்றிய விரிவான ஆய்வறிக்கை அது.

அதனைத் தொடர்ந்து, காத்திரமான ஒரு உருவாக்கமாக இந்த ஆவணப்படத்தினைப் பார்க்க முடிகிறது. அந்த நிலம் பற்றிய, அதன் சிதைவுகள் பற்றிய, மக்களின் சமூக வாழ்வியல் பற்றிய, சாதிய அடுக்குகளைத் தாங்கி நிற்கின்ற காரணிகள் பற்றிய யதார்த்தங்களைக் கூர்மையாகவும் வெளிப்படையாகவும் முன்வைக்கின்றது.

மார்ச் மாதம் 05ம் திகதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் ஏற்பட்டில் இதன் திரையிடல் இடம்பெற்றது. பரந்துபட்ட மக்கள் இந்த ஆவணத்தைப் பார்வையிட்டனர். திரையிடலைத் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. திரையிடலைத் தொடர்ந்து தங்கேஸ் பரம்சோதி அவர்களுடன் இந்த உரையாடலை மேற்கொள்ள முடிந்தது.

***

ஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்!

உங்களுடைய கலாநிதி ஆய்வுக் கற்கைக்கான கள ஆய்வில் புங்குடுதீவு நிலம் தொடர்பாகவும் அதன் வளங்கள் மற்றும் சமூக, பொருளாதார வாழ்வியல் மற்றும் அதனுடைய சிதைவுகள் தொடர்பான காரணிகள் பற்றி ஆய்வு செய்துள்ளீர்கள். கல்வி சார் ஆய்வு ஒன்றினை வெகுமக்கள் பார்வைக்குரிய வகையில் ஆவணப்படமாக உருவாக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது? அதற்கான செயல் வடிவம் எங்கிருந்து தொடங்கியது?

பொதுவாக மானிடவியலில் ஆய்வு செய்பவர் தனது ஆய்வுக்களமாக குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தை எடுக்க வேண்டிய தேவை எழுகின்றது. குறிப்பாக கலாநிதிப் படிப்பிற்குரிய மானிடவியல் கற்கையிலும் ஆகக்குறைந்தது ஒரு வருட கால ஆய்வை மேற்கொள்ள வேண்டும். நான் எனக்கான ஆய்வின் பரந்த பரப்பானது புலம்பெயர்வும் அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்களும் ஆகும். இந்த ஆய்வானது தற்போது சாதிக்கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் பார்க்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் எனது ஆய்வுக் களமாக, இலண்டனிலுள்ள புங்குடுதீவு நலன்புரிச் சங்கம், காரைநகர் சங்கம், கரவெட்டிச் சங்கம் போன்ற பல சங்கங்களை ஆய்விற்கு உட்படுத்தினேன். அத்துடன் யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு மற்றும் மல்லாகம் போன்றவற்றை எனது ஆய்விற்கான பிரதேசங்களாகத் தெரிவு செய்தேன். இதனை Multi-Faceted Ethnographic research எனக் கூறலாம். அதாவது எமது களங்கள் வெவ்வேறு பிரதேசங்களை மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட தலைப்பிற்குள் ஆய்வை மேற்கொள்வதாகும்.

அந்த வகையில் எனது ஆய்வுக் களமாக புங்குடுதீவையும் தெரிவு செய்தேன். ஆய்வை மேற்கொள்வதற்காக கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக இலண்டனிலும் கிட்டத்தட்ட ஒரு வருடத்தை புங்குடுதீவு மற்றும் மல்லாகம் போன்ற பிரதேசங்களிலும் செலவழித்திருந்தேன். இக்காலப்பகுதியில் ஆய்விற்குத் தேவையான தகவல்களைத் திரட்டினேன். வழமையாக இவ்வாறான தரவுகளைத் திரட்டி அவற்றை ஆய்வுக் கட்டுரைகளாகவும் ஆய்வு அறிக்கையாகவும் வெளியிடுவோம். எமது படிப்பிற்காகவும் பட்டம் பெறுவதற்காகவும் எமது தனிப்பட்ட பதவி உயர்வுகளுக்காகவும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அனைத்து ஆய்வு மாணவர்களும் இவற்றைச் செய்வார்கள். ஆனால் நாம் செய்கின்ற ஆய்வை சமூகப் பொது நோக்கத்திற்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் சமூக அபிவிருத்திக்காகவும் செய்யவேண்டிய தேவை இருக்கின்றது. இதனைத் தனியே கல்வி சார் கலந்துரையாடல்களுக்கு அப்பால் இதனை எவ்வாறு அபிவிருத்தி சார் கலந்துரையாடல்களாகவும் ஆரோக்கியமான சமூக மாற்றத்திற்கான கலந்துரையாடலாகவும் மாற்ற வேண்டிய தேவையை நான் புங்குடுதீவில் இருந்த போதும் அதற்கு முந்திய ஆய்வுகளைச் செய்யும் போதும் உணர்ந்திருந்தேன்.

நாங்கள் ஆய்வைச் செய்து ஆய்வு அறிக்கையை வெளியிடும் போது அதனைக் கல்வி மட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாசிப்பார்கள். இதனைத் தமிழில் எழுதினாலும் தமிழில் வாசிப்பவர்கள் கூட ஒரு வகையில் இதனுடன் தொடர்புபட்டவர்கள் மற்றும் இதில் ஆர்வமுள்ளவர்களாகவே இருப்பார்கள். இந்தப் பின்புலத்தில் புங்குடுதீவில் வாழும் சாதாரண குடிமகனிடம் அல்லது வெளியிலிருக்கும் சாதாரண மக்களிடம் இந்த ஆய்வை ஒரு காணொளி வடிவத்தில் கொண்டு வருவதன் ஊடாகவே அது சாத்தியப்படும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். அந்தவகையில், புங்குடுதீவில் வாழ்ந்த மக்கள் பாரியதொரு இடப்பெயர்விற்கு முகங்கொடுத்த சூழ்நிலையில் புங்குடுதீவு மண் எதிர்நோக்கும் பிரச்சினை என்ன, அதற்கான தீர்வுகள் எவ்வாறானதாக இருக்க முடியும் என்பதன் அடிப்படையில் இந்த ஆவணப்படத்தைத் தயாரிக்க வேண்டிய தேவையிருந்தது. இந்த ஒரு பின்னணியில் தான் நானும் என்னுடன் சேர்ந்த ஞானதாஸ் என்பவரும் அவருடன் இணைந்த குழுவும் இணைந்து இத்திரைப்படத்தை ஆறுமாத காலமாக ஒரு குழு முயற்சியாக வெளிக்கொண்டு வந்துள்ளோம். இதுவே இதனுடைய நோக்கமாகும்.

கலாநிதி ஆய்வுக்கற்கையில் நீங்கள் மேற்கொண்டுள்ள இந்தச் செயற்பாடானது அறிவுசார் மேம்பாடு, கல்வி சார் கலந்துரையாடல் போன்ற பயன்பாட்டுத் தளங்களைத் தாண்டி ஆரோக்கியமான சமூக மாற்றத்திற்கான மற்றும் சமூக அபிவிருத்திக்கான கலந்துரையாடலாகவும் நகர்த்திச் செல்வதற்கான சாதகமான வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது உங்களுடைய ஒரு நோக்கமாகவும் இருந்துள்ளது. ஏளைரயட ஆநனரைஅ என்று சொல்லப்படுகின்ற இந்த ஊடகத்தை உங்களுடைய நோக்கத்திற்காகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளீர்கள். தங்களின் ஆய்வுவிளைவுகள் சாதாரண மக்களிடம் போய்ச் சேர்வதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.

இதில் தமிழ்ச் சூழலில் பேசாப் பொருளாக இருந்து வந்துள்ள சாதிய அடுக்குகள் பற்றி மிகக் கூர்மையாகவும் நுண்ணுர்வோடும் பேசப்பட்டுள்ளது. இந்த விடயத்தினைக் கையாள்வதற்கு ஒரு துணிச்சலும் பக்குவமான அணுகுமுறையும் அவசியம். இதனைக் கையிலெடுக்கும் போது அல்லது பேச விளையும் போது எதேனும் தயக்கம் உங்களுக்குள் ஏற்பட்டதா?

நல்ல கேள்வி. பொதுவாகவே அனைவரும் இதனையொரு பேசாப்பொருளாகவே வைத்திருக்கிறோம். இதனைப் பேசாமல் விடுவதன் ஊடாக அதனைத் தீர்க்க முடியும் என நம்புகின்றோம். இலங்கை அரசாங்கமும் இதைத் தான் கூறுகின்றது. அதாவது தமிழர்கள் தமது அரசியல் உரிமைகள், தமது நிலப்பிரச்சினைகள், தமக்கென்றொரு அரசியற் தீர்வு என்ற விடயத்தை பேசாது இருப்பார்களேயானால் அந்தப் பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வு காணலாம் என்பதை சிங்கள அதிகாரத்துவ சமூகமும் சிங்கள அதிகாரத்துவ அரசியல்வாதிகளும் தமது அணுகுமுறையாகக் கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட இதையொத்த அணுகுமுறையையே நாங்களும் சாதி விடயத்தில் கையாளுகின்றோம். அதாவது சாதியம் தொடர்பாக பேசாமலும் எழுதாமலும் இருப்பதே சிறந்த தெரிவு என நாம் கருதுகிறோம். இதை நாம் நீண்ட காலமாகவே ஒரு எழுதப்படாத கொள்கையாகக் கடைப்பிடித்து வருகிறோம். இது தொடர்பில் எமக்குள் பல முரண்பாடுகள் இருக்கின்றன. அவற்றைப் பேசி அவை தொடர்பில் ஆரோக்கியமான முடிவுகளை எடுத்து அதன் ஊடாகப் பல மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்பதில் நான் வலுவாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். 

அந்த அடிப்படையில் எமது போராட்டம் மற்றும் தமிழ்த் தேசியமானது ஒரு முற்போக்கான தேசியவாதமாக மாறவேண்டுமானால் நாங்கள் எமக்கு உள்ளே காணப்படும் அகமுரண்பாடுகளையும் அக ஏற்றத்தாழ்வுகளையும் பேசவேண்டும். அதாவது பிறப்பு அடிப்படையில் நாங்கள் பார்க்கின்ற முரண்பாடுகளைப் பேசவேண்டும். அதனூடாக நாங்கள் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை எவ்வாறு பார்க்கின்றோம், அவர்களுக்கும் உரிமைகள் இருக்கின்றன என்பதை நாங்கள் எவ்வாறு உணர்கின்றோம் என்ற அடிப்படையில் எமக்குள்ளே உள்ள அகமுரண்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடி அவை தொடர்பில் ஆரோக்கியமான சில முடிவுகளை எடுப்பதன் ஊடாக எமது தேசிய சிந்தனையிலும் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இந்த வகையில் இதனை நாம் பேசாப் பொருள் எனக் கூறுவதன் மூலம் ஒரு வகையான மறுப்பினைத் தெரிவிக்கின்றோம். இவ்வாறு மறுப்பினைத் தெரிவிப்பதன் மூலம் நாங்கள் எதையும் சாதிக்கப்போவதில்லை என்பதே உண்மையாகும். இந்த அகமுரண்பாடுகளைப் பேசுவதன் ஊடாக நாங்கள் ஒரு குழுவாக, ஒரு இனமாகப் பரிணமிப்பதற்கு வழிகோலப்படும். அதற்கான ஒரு தளமாக நான் இதனைப் பார்க்கின்றேன். இந்த விடயத்தை நாங்கள் எவ்வாறு பேசவேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

இந்தச் சிக்கலைப் பொதுவெளியில் பேசுவதில் சவால்களுள்ளன. இதன் மூலம் அக முரண்பாடுகள் கூர்மையடையும் ஆபத்து இருக்கிறதா?

இந்த ஆவணப்படத்தை நாங்கள் முரண்பாட்டை நோக்கிக் கூட நகர்த்தியிருக்கலாம். ஆனால் இது முரண்பாட்டை நோக்கி நகர்த்துவதற்கான ஆவணப்படமாக அமையவில்லை. ஒரு விடயத்தை நாங்கள் எவ்வாறு பேசுகின்றோம் அல்லது நாங்கள் அதனை எவ்வாறு ஒப்புவிக்கிறோம் என்பதிலேயே அந்த முரண்பாடுகள் வளருமா அல்லது அந்த முரண்பாடுகள் இல்லாமல் போகுமா என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். இத்திரைப்படத்தை நாங்கள் ஒவ்வொன்றாக தொகுக்கும்போது (எடிற்), அதாவது ஒவ்வொரு வார்த்கைளையும் மிக ஆழமாக நாம் தொகுத்த போது நானும் ஞானதாசும் மிகவும் பொறுமை காண்பித்தோம். அதாவது இந்த வார்த்தையை ஆவணப்படத்தில் உட்சேர்க்கலாமா அல்லது இந்தக் காட்சியை இதில் சேர்க்கலாமா இவற்றைச் சேர்ப்பதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது தொடர்பாக நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டோம்.

திரைப்படத்தைத் தொகுக்கும் செயற்பாட்டிற்குப் போவதற்கு முதல் இரண்டு கிழமைகளாக நானும் ஞானதாசும் எம்மிடமிருந்த காட்சிகள் தொடர்பாக ஆழமாக ஆராய்ந்தோம். அதாவது இந்தக் காட்சியைச் சேர்ப்பதா அல்லது சேர்க்காமல் விடுவதா அல்லது சேர்த்தால் என்ன விளைவு ஏற்படும் மற்றும் சேர்க்காவிட்டால் என்ன விளைவு ஏற்படும் என்பது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்தோம். ஆரோக்கியமான மாற்றமே இதன் நோக்காக இருந்தது. நாங்கள் செய்யும் வேலையானது ஆரோக்கியமான மாற்றத்தைத் தடைபண்ணக் கூடாது என்பதில் கவனம் செலுத்தினோம். இந்த எண்ணத்தை செயலுருவாக்கும் போது மக்களும் அதனை ஏற்றுக்கொள்கிறார். மக்கள் அதனை வரவேற்கிறார்கள். இந்த ஆவணப்படத்தை நாங்கள் இலண்டனில் காட்சிப்படுத்திய போது மக்கள் அது தொடர்பாக வெளிப்படையாக கருத்துக்களைத் தெரிவித்தனர். இது போன்று வேறு இடங்களிலும் கூட மக்கள் திறந்த மனதுடன் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இதனை ஒரு ஜனநாயக அடிப்படையில் கதைப்பதற்குக் கூட அவர்கள் முயல்கின்றனர். அவர்கள் ஜனநாயக வெளியைத் திறக்கின்றனர். அந்த வெளியை நாங்கள் இதனூடாகத் திறக்கலாம் என்றே நினைக்கின்றேன்.

அகமுரண்பாடுகளை எமக்கிருக்கக் கூடிய ஜனநாயக வெளியைப் பயன்படுத்தி வெளிப்படையாக பேசுதலும் அதற்கூடாக தீர்வை நோக்கிச் செல்லுதலும் தமிழ்த் தேசியத்தினுடைய முற்போக்கான வகிபாகத்திற்கு மிகவும் தேவையான ஒன்று என்பதை நீங்கள் வலியுறுத்துகிறீர்கள். இந்த வகையில் இந்த ஆவணப்படுத்தல் அவ்வாறான அகமுரண்பாட்டிற்கான பேசுபொருள் உரிய முறையில் முன்வைக்கப்பட்டுள்ளமை கவனத்தைப் பெறுகின்றது. இந்த ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் புங்குடுதீவு நிலத்திற்கு மட்டுமே உரியதா அல்லது தமிழர் தாயகத்தின் ஏனைய பிரதேசங்கள் சார்ந்த நிலம் சார்ந்த காணி விவகாரங்கள், வளங்கள், சமூக வாழ்வியல் சார்ந்து ஏனைய தமிழ் பிரதேசங்களுக்குரிய பொதுமையான பிரதிபலிப்பு இதில் வெளிப்படுத்தப்படுகிறதா அவ்வாறு பொருத்திப் பார்ப்பது பொருத்தமானதா?

புங்குடுதீவைப் பொறுத்தளவில் இரண்டு வகையான இடப்பெயர்வை நாங்கள் பார்க்கின்றோம். அதாவது 1980களில் ஏற்பட்ட இடப்பெயர்வு. அது யுத்தத்திற்கு முந்தையது எனக் கூறலாம். 1990இல் தான் பாரியதொரு இடப்பெயர்வு ஏற்பட்டது. இதற்கு முன்னர் புங்குடுதீவை விட்டு வெளியேறியவர்கள் வியாபார நோக்கை அடிப்படையாகக் கொண்டு வெளியேறினார்கள். புங்குடுதீவின் வருமானம் என்பது, புங்குடுதீவில் பெரிய கல்வீடுகள் கட்டப்பட்டமை, பெரியளவில் விவசாயம் செய்யப்பட்டமை போன்றமை அந்த நிலத்தில் உழைத்து மேற்கொள்ளப்படவில்லை.  புங்குடுதீவிலிருந்து கொழும்பு, கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் மலேசியா போன்ற இடங்களை நோக்கிச் சென்றவர்கள் தமது வருவாயை ஈட்டிக்கொண்டதன் மூலமே புங்குடுதீவில் பாரிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டன. யுத்தத்திற்கு முன்னான காலப்பகுதியில் புங்குடுதீவில் வாழ்ந்த குடும்பத் தலைவர்கள் மட்டுமே அங்கிருந்து வெளியேறினார்களே தவிர, அவர்களது குடும்பங்கள் அங்கு தொடர்ந்தும் வாழ்ந்தன. இதனால் இவர்கள் உழைக்கும் பணத்தை புங்குடுதீவுக்குக் கொண்டு சென்று புங்குடுதீவை அபிவிருத்தி செய்தனர். புங்குடுதீவை குட்டிச் சிங்கப்பூர் என ஒருவர் இந்த ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார். ஆகவே இவ்வாறாகவே பாரிய அபிவிருத்தி அங்கு ஏற்பட்டது. ஆனால் 90ம் ஆண்டிற்குப் பின்னர், புங்குடுதீவில் எதிர்மறையான மாற்றம் ஏற்பட்டது. 90ம் ஆண்டு இடப்பெயர்வின் போது புங்குடுதீவில் வாழ்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறியதால் புங்குடுதீவை அபிவிருத்தி செய்ய வேண்டும், அங்கு வீடு கட்டவேண்டும் என்கின்ற தேவையில்லாமல் போனது. ஆகவே இது ஒரு எதிர்மறை மாற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கு முன்னரான இடப்பெயர்வு நேர்மறையான மாற்றத்தையும் 90ம் ஆண்டு இடப்பெயர்வு எதிர்மறையான மாற்றத்தையும் ஏற்படுத்தியது. இது தீவகத்திற்கும் பொருந்துகிறது. காரைதீவு, வேலணை, நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு போன்ற தீவுகளுக்குப் பொதுவாகப் பொருந்துகிறது.

எமது நிலத்தைக் கைவிட்டு விடுவதனால் எதிர்காலத்தில் இந்த நிலத்திற்கு என்ன நடக்கும் என்ற விடயத்தையும் நாங்கள் இங்கு கடைசியாக முன்வைக்கிறோம். நாங்கள் நிலத்தைப் பராமரிக்காது விடும் போது, எதிர்காலத்தில் இந்த நிலத்தை இலங்கை அரசு தமது தேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக் காணப்படுகிறது. நிலம் என்பது அரசிற்குச் சொந்தமான வளமாகும். கைவிடப்பட்ட அல்லது வளமான நிலங்களை அரசு பயன்படுத்தாது விடப்போவதில்லை. ஏனெனில் தமது நாட்டை தமது நிலத்தை வளர்க்க வேண்டிய தார்மீகக் கடமை ஒன்று அரசிற்கு உள்ளது. இந்த அடிப்படையில் அரசு இந்த நிலங்களை அணுக முயற்சிக்கலாம். வருடக்கணக்காக நாங்கள் இந்த நிலங்களைப் பயன்படுத்தாது கைவிடும் போது அதனை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்படலாம். இந்த மாற்றத்தின் ஊடாக புங்குடுதீவிலும் குடியேற்றங்களும் இடம்பெறலாம். ஏனெனில் நயினாதீவு அருகில் உள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து புங்குடுதீவுக்கு தரைப்பாதை உள்ளது. புங்குடுதீவில் மக்கள் குடியேறும் போது நயினாதீவுக்குச் செல்வதற்கான வாய்ப்பும் தரைப்பாதைகளைப் பயன்படுத்துவதற்குமான வாய்ப்பும் காணப்படுகிறது. ஆகவே புங்குடுதீவு என்பது சிறந்ததொரு இடமாக உள்ளது. இங்கு சிங்களவர்கள் நிலத்தை விலைக்கு வாங்கி குடியேறுவதற்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் சிலவேளைகளில் வலுக்கட்டாயமான குடியேற்றங்கள் இடம்பெறும் என்பதையே நான் இங்கு கூறுகிறேன். பொதுவாகவே இவற்றுக்காகவே நாங்கள் போராடுகிறோம். இவற்றுக்கு முன்னுதாரணங்களும் இருக்கின்றன. ஆகவே இப்பிரச்சினைகளைப் பார்க்கும் போது நாங்கள் முற்கூட்டியே சில முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை தென்படுகிறது. ஆகவே இது தீவகத்திற்கு பொதுவாக பொருந்தக் கூடியவாறு காணப்படுகிறது.

குடியேற்றத் திட்டங்கள் என்று பார்க்கும் போது அவை பொதுவாக எல்லா இடங்களுக்கும் பொருந்தும். உதாரணமாக வன்னிப் பிரதேசத்திலும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வன்னிப் பிரதேசத்தில் சில இடங்களுக்கு சிங்களப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. ஆகவே கண்ணுக்கு முன்னாலேயே இவ்வாறான மாற்றங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் தென்படுகின்றன. ஆகவே இந்த மாதிரியை யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பிரதேசங்களுக்கும் பிரயோகிக்கலாம் என நான் கூறவில்லை. இதற்கான தனிப்பட்ட பிரச்சினையும் உள்ளது. அதேவேளையில் இங்கு பேசப்பட்ட பொதுவான விடயங்களும் உள்ளன. யாழ்ப்பாணத்தின் வடபகுதியிலுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் புங்குடுதீவுக்குப் பொருத்தமானதாக இருக்காது. அதாவது உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள நிலங்கள் வலுக்கட்டாயமாக இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சில மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இடத்தை மாற்றிக் குடியேற்றுவதும் இடம்பெறுகிறது. அதனைப் பிறிதொரு வகையிலேயே நாம் அணுகவேண்டும்.

புங்குடுதீவின் நில உரிமை சார்ந்த விடயங்கள் யாருடைய கைகளில் உள்ளன. அவற்றை ஒழுங்கமைக்கும் அணுகுமுறை என்னவாக இருக்க வேண்டும்?

புங்குடுதீவு நிலத்தின் அபிவிருத்தியானது எமது மக்களின் கையில் இருக்கிறது. அதனைச் செய்யாது விடும்போது, அதற்கான முழுப் பொறுப்பையும் எமது மக்கள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்தாகும். ஆனால் யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள நிலங்கள் இராணுவத்தினர் வசம் உள்ளதால் இதற்கு இலங்கை அரசாங்கமே பதில் சொல்ல வேண்டிய தேவையுள்ளது. புங்குடுதீவின் இன்றைய நிலைக்கு யுத்தமானது பாரியதொரு பின்விளைவாக இருந்தாலும், இனிமேற் காலத்தில் புங்குடுதீவில் அசாதாரண நிலை ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பை புங்குடுதீவு வாழ் மக்களே சொல்ல வேண்டும். அந்த வகையில் ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்ட சில விடயங்கள் பொதுவாகப் பொருந்துகிறது. பல விடயங்கள் புங்குடுதீவு போன்ற தீவகப் பிரதேசங்களுக்குப் பொருந்தும். அதனைக் கையாளவேண்டிய பொறுப்பும் எமது கைகளில் உள்ளன.

இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டது போன்று 90களில் புங்குடுதீவில் 20,000 வரையான மக்கள் வாழ்ந்தனர். இன்று நான்காயிரம் வரையான மக்கள் குடியிருக்கின்றனர் என்ற வகையிலே இங்கு பேசப்படுகின்ற விடயம் நிலமற்றவர்கள் தொடர்பாகப் பேசப்படுகிறது. அத்தோடு பராமரிப்பற்ற நிலங்கள், நில உரிமையாளர்கள் புங்குடுதீவில் இல்லாது இவர்கள் ஏனைய இடங்களில் அல்லது புலம்பெயர்ந்து வாழும் சூழல் காணப்படும் நிலை குறித்தும் உங்களின் ஆவணப்படத்தில் பேசப்படுகின்றது. இந்த வகையில் இதற்கான தீர்வும் எங்களுடைய மக்களின் கைகளில் உள்ளன என்பதை நீங்கள் கூறியுள்ளீர்கள். அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் புங்குடுதீவைச் சேர்ந்த எமது மக்களின் கைகளில் கணிசமானளவு இருக்கின்றது என்ற வகையில் அவர்களுடைய கடமையாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள், வலியுறுத்துகிறீர்கள்?

இதில் சில தீர்வுகளை நாங்கள் ஆணித்தரமாகச் சொல்லாவிட்டாலும், சிலவற்றைக் கூறியுள்ளோம். புங்குடுதீவை விட்டு வெளியேறியவர்கள் வசதியுடன் உள்ளனர். கஸ்ரப்பட்டு உழைத்து தமது குடும்பத்தை முன்னேற்றி ஒரு வியாபாரத்தைத் தொடங்கி அதனூடாக தமது இரண்டாம் தலைமறையை வளமாக உருவாக்கி, பாரியதொரு வேலைத்திட்டத்தை வெளியில் மேற்கொண்டு வருகின்றனர். புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டாம் தலைமுறையினர் புங்குடுதீவில் சென்று தங்கப்போவதில்லை. ஆகவே புங்குடுதீவைச் சேர்ந்த முதலாம் தலைமுறையினருக்குத்தான் தமது காணிகள் எங்கே இருக்கின்றன எல்லைகள் எங்கே இருக்கின்றன என்பது தெரியும். ஆகவே தமக்குச் சொந்தமான நிலத்தில் என்ன செய்யப்போகிறோம் என்கின்ற பாரிய பொறுப்பை முதலாம் தலைமுறையினர் கொண்டுள்ளனர். இதனை அவர்கள் தான் முடிவெடுக்கவேண்டும். அதாவது தமது நிலத்தைப் பராமரித்து, வேலைத்திட்டத்தை மேற்கொள்வதா அல்லது இந்த நிலத்தைப் பயன்படுத்த முடியாத நில உரிமையாளர்கள் நிலத்தின் உரிமையை தம்மிடம் வைத்துக் கொண்டு வேறு நபர்கள் நிலத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதா என்பதை முதலாம் தலைமுறையினர் தீர்மானிக்க வேண்டும்.

கிட்டத்தட்ட 1100 குடும்பங்கள் வாழும் புங்குடுதீவில் கிட்டத்தட்ட 350 குடும்பத்தினருக்கு சொந்த நிலமில்லை. ஆகவே இந்த மக்கள் நிலத்தில் விவசாயத்தைச் செய்வதற்கும் மாட்டுப் பண்ணைகளை உருவாக்குவதற்கும் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்குமான அனுமதியை புங்குடுதீவைச் சேர்ந்த முதலாம் தலைமுறையினர் வழங்கலாம். இதனை நீண்ட கால அடிப்படையில் வழங்கலாம் அல்லது அவர்கள் பணத்தைச் செலுத்தினால் நிலத்தை விலைக்கு விற்கலாம். இந்தத் திட்டத்தை குழுவாக அன்றி தனிப்பட்டவர்கள் தமது சொந்த விருப்பின் பேரில் செய்யலாம். திரைப்படத்தில் கூட கனடாவிலிருந்து வந்த ஒருவர் தனது நிலத்தை வேறொருவருக்கு விற்றுள்ளதையும் அதை வாங்கியவர் அந்த நிலத்தைப் பண்படுத்தி வருவதையும் பார்க்கலாம். ஆகவே இவ்வாறான நபர்களையும் குடும்பங்களையும் அடையாளங்கண்டு புங்குடுதீவின் ஒரு பகுதியை அல்லது முற்றுமுழுதாக அபிவிருத்தி செய்வதற்கான முயற்சியில் இறங்கலாம். இது நடைமுறைக்குச் சாத்தியமான அணுகுமுறையாகும். அதனை நாங்கள் திரைப்படத்தில் கூறியுள்ளோம். இது நில உரிமையை அவர்கள் தங்களது கைகளில் வைத்திருக்கும் அதேவேளையில், அந்த நில உரிமையின் ஒரு பகுதியை வேறொருவர் பயன்படுத்துவதற்கு அனுமதித்தலாகும். நில உரிமை எனக்கு உள்ளது என்பதை ஒருவர் உணரும் போது அதில் சில வேலைத்திட்டங்களைத் தாமாகவே செய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த அடிப்படையில் நில உரிமையை அந்த மக்களுக்கு கொடுப்பது முக்கியம் என்பதை நான் பார்க்கின்றேன். இதையே எங்களது தீர்வாகவும் அதில் முன்வைக்கிறோம். இதேபோன்று நில உரிமையாளர்கள் வேறு வேறு தீர்வுகளையும் தமக்கிடையே வைத்திருக்கலாம். அந்தத் தீர்வுகளையும் அவர்கள் அமுல்படுத்துவது நன்மை பயக்கும்.

புங்குடுதீவின் நிலத்தை மையப்படுத்திய இந்த பிரச்சினைக்குரிய தீர்வானது அந்த இடத்தைச் சேர்ந்த மக்களின் கைகளில் இருக்கின்றது என்கின்ற அடிப்படையில் இந்த ஆவணப்படத் திரையிடலை புலம்பெயர் நாடுகளில் வாழும் புங்குடுதீவு வாழ் மக்களின் ஊடாகத் திரையிடவும் கலந்துரையாடவும் நீங்கள் விரும்புகிறீர்கள். அதில் நியாயம் இருக்கின்றது என்ற அடிப்படையில், பிரித்தானியா, நோர்வே போன்ற நாடுகளில் ஏற்கனவே திரையிடல் இடம்பெற்றிருக்கிறது. இது தொடர்பில் எவ்வாறு வரவேற்பு மற்றும் அனுபவத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள்?

உண்மையில் நாங்கள் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியில் கொண்டு வந்ததன் பின்னர், புங்குடுதீவு மக்கள் தமது ஆதரவை வழங்குகின்றார்கள். பிரித்தானியாவிலுள்ள புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் இதற்காக 1500 தொடக்கம் 2000 பவுண்ட்ஸ் பணத்தைச் செலவிட்டு இத்திரைப்படத்தைத் தரமாக வெளியிட்டார்கள். கிட்டத்தட்ட 130-150 வரையானவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. தொடர்ந்து 4-5 மாத இடைவெளியின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல பிரதேசங்களில் நான் இந்தத் திரைப்படத்தைக் காண்பித்தேன்.

இந்தவொரு பின்னணியில், நோர்வே புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பாலசிங்கம் யோகராஜா (பாஸ்கரன்) ஊடாக என்னை அணுகியிருந்தனர். பின்னர் அவர்களின் ஊடாக நோர்வேயில் நாம் இதனைத் திரையிட்டோம். அவர்களும் தங்களால் இயன்ற முயற்சிகளைச் செய்துள்ளனர். கிட்டத்தட்ட இதில் 100 பேர் வரை கலந்துகொண்டிருந்தனர். நோர்வேயில் இந்தளவு ஆர்வலர்கள் கலந்து கொள்வதென்பது குறைவு. ஆனால் இந்த ஆவணத்திரைப்படத்தைப் பார்ப்பதற்காக இவ்வளவு பேர் வந்தனர் என்பது பெரிய விடயமாகும். அந்த அடிப்படையில் பார்க்கும் போது நல்ல தளத்தை அவர்கள் தருகிறார்கள். இந்த வேலைத்திட்டத்தை அடுத்த கட்டம் எவ்வாறு கொண்டு செல்லலாம். புங்குடுதீவு வாழ் மக்கள் ஜனநாயக ரீதியில் செயற்படுகின்றனர். சில உள் முரண்பாடுகளை நாங்கள் பேசினாலும் கூட அவை பேசப்பட வேண்டிய விடயம் என்பதை அந்த மக்கள் புரிந்துகொள்கின்றனர். இதன் மூலம் மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என அவர்கள் உணர்கின்றனர். ஆனால் சில இடங்களில் தவறான புரிதல்கள் உள்ளன. அவற்றை நாங்கள் பேசித் தீர்க்கலாம்.

சில இடங்களில் நான் நேர்காணலை வழங்கும் போது புங்குடுதீவின் பிரதான தொழில் மீனவத் தொழில் எனக் குறிப்பிட்டிருந்தேன். புலம்பெயர்ந்து வாழும் புங்குடுதீவு வாழ் மக்கள் அதனை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது. புங்குடுதீவில் மீன்பிடித் தொழில் முக்கிய தொழிலல்ல. வெளியில் சென்று சம்பாதிப்பதுவும், விவசாயத்தில் ஈடுபடுவதுமே அதிகம் எனக் கூறியிருந்தார்கள். அவ்வாறு அவர்கள் இதனை உணர்வு ரீதியாகப் பார்க்கின்றார்கள். தற்போது புங்குடுதீவில் வாழும் மக்கள் உடனடியாகச் செய்யக் கூடிய தொழிலாக கடற்தொழில் மட்டுமே காணப்படுகிறது. இத்தொழிலை அங்குள்ள மக்களில் சிலர் செய்கின்றனர். மீன்பிடி பிரதான தொழில் என நான் கூறியது புங்குடுதீவைச் சேர்ந்த மக்களுக்குப் பிடிக்கவில்லை. நான் தவறான தகவலை வழங்குவதாக அவர்கள் கூறுகின்றனர். அது அவர்களுக்கு மனசங்கடத்தைக் கொடுத்திருக்கலாம். இந்தத் தகவலை அவர்கள் அவ்வாறு தவறாகக் கருதியமைக்கு நான் மனம் வருந்துகிறேன். இது தொடர்பில் அவர்கள் மனம் வருந்தினால் அதற்கு மன்னிப்புக் கேட்கவும் நான் தயாராக உள்ளேன். இதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

தவறான முறையில் நான் அந்தக் கருத்தை முன்வைக்கவில்லை எனவும் நான் கூறியிருந்தேன். அவர்களும் அதை விளங்கிக் கொண்டார்கள். இவ்வாறான சில காரணங்களுக்காக நாங்கள் எமது ஒட்டுமொத்தப் பார்வையையும் அதற்குள்ளேயே குவிக்கக் கூடாது. நாங்கள் நிலம் சார்ந்து, நிலத்தின் மாற்றம் சார்ந்து, நிலத்தின் முன்னேற்றகரமான தேவை சார்ந்து, அதனுடைய அபிவிருத்தி சார்ந்து யோசிக்கும் போது, இப்படியான சில விடயங்கள் எம்மைப் பின்னுக்குத் தள்ளக்கூடாது. அந்த விடயங்கள் பெரிதாக, பூதாகரமாகி அனைத்திற்குமே முற்றுப்புள்ளி வைப்பதாக அமையக்கூடாது என நான் பார்க்கிறேன். அவ்வாறானதொரு புரிதல் இருந்தால் இப்புரிதல் தவறு. இதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் நாங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அதற்காக அவர்கள் இதனைத் தவறாகப் புரியத் தேவையில்லை எனப் பார்க்கின்றேன்.

முக்கியமானதொரு ஆவணப்படத்தை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள் என்ற அடிப்படையில் அதனுடைய உள்ளடக்கம் சார்ந்தும் அதன் கோரிக்கைகள் சார்ந்தும் விளைவுகள் சார்ந்தும் நிறைய விடயங்களை நீங்கள் பகிர்ந்து கொண்டீர்கள். இந்த ஆவணப்படம் கருத்தியல் சார்ந்த முக்கியத்துவத்திற்கு அப்பால், இதனுடைய தொழில்நுட்பம் மற்றும் கலைத்துவ வெளிப்பாடு கூட மிகவும் காத்திரமானதாக இருக்கின்றது. இதனைக் கருத்தியல் சார்ந்த விடயத்தை முன்வைக்கின்ற ஆவணப்படமாக மட்டுமில்லாமல், அழகியலை அதற்குள் கொண்டு வருவதற்கான பரிச்சயம் எவ்வாறு கிடைத்தது? அதற்கான முன் அனுபவங்கள் உங்களுக்கு இருக்கின்றதா? இதில் தங்களுடன் பங்களித்தவர்கள் தொடர்பாகவும் கருத்துக்களைக் கூறமுடியுமா?

நான் ஊடகத்துறையில் 4-5 வருடங்கள் வேலை செய்தேன். கமரா மற்றும் படத்தொகுப்பு தொடர்பாக அடிப்படை அறிவு எனக்கு உள்ளது. ஆனால் காட்சிகளை ஆவணப்படுத்தி அதனைத் தரமாக வெளிக்கொண்டு வருவதற்கான அனுபவம் என்னிடம் இல்லை. ஆய்வு செய்திருக்கிறேன். கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். ஆனால் காணொளி ஒன்றைத் தயாரித்து வெளிக்கொண்டு வந்த அனுபவம் என்னிடம் இல்லை. ஆனால் திரைப்படங்களைப் பார்த்து அவை தொடர்பில் கருத்துக்களைக் கூறக்கூடிய அறிவைக் கொண்டிருந்தாலும், விமர்சிப்பதென்பது இன்னொரு களம், அதனை உருவாக்குவதென்பது பிறிதொரு களமாகும்.

இந்தச் சூழ்நிலையில் தான் நான் காசிநாதர் ஞானதாசைத் தொடர் கொண்டேன். அவர் இந்தத் துறையில் நீண்டகாலமாகவே ஈடுபட்டுவருபவர். இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஊடகத் துறையில் முதுநிலைமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவரது பிரதான துறை திரைக்கதை வசனம் எழுதும் பிரதியாக்கத்துறையாகும். எம்மிடையே குறைபாடாகவுள்ள துறை இது. நாங்கள் திரைக்கதையில் அதிக கவனத்தைச் செலுத்துவதில்லை. மாறாக ஒளிப்படக்கருவியையும் தூக்கிக் கொண்டு காட்சிகளை எடுப்பதற்காகச் சென்றுவிடுவோம். இந்நிலையில் நான் ஞானதாசைத் தொடர்பு கொண்டு இவ்வாறானதொரு முக்கிய விடயத்தை வெளிக்கொண்டு வரவேண்டும், ஆனால் எம்மிடம் போதியளவு பணவலு இல்லை, என்னிடம் உள்ள குறைந்தளவு சொந்தப்பணத்தில் தான் தான் இத்திரைப்படத்தை எடுக்க வேண்டும் எனவும் கூறினேன்.

அவரும் அந்தவேளையில் பி.பி.சியுடன் ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அதை முடித்துவிட்டு எமது திரைப்படத்தை ஆரம்பிப்போம் எனக் கூறினார். அதன் பின்னர் நாங்கள் இந்தப் பணியை ஆரம்பித்தோம். ஞானதாஸ் ஊடாக ஏனைய தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்தவர்களையும் தொடர்புகொண்டேன். ஒளிப்படப்பிடிப்பாளராக சுரேந்திரகுமாரைத் தெரிவு செய்தோம். அவரிடம் சிறிய ஒளிப்படக்கருவி தான் இருந்தது. ஆனால் கடுமையாகப் பணியாற்றினார். அவருக்குக் கொடுத்த பணத்தை விட மேலதிகமாக வேலை செய்தார்.

மதீசன் தனபாலசிங்கம் என்பவர் இசைப்பதிவை மேற்கொண்டார். தொலைக்காட்சியில் பணிபுரியும் ஜே என்பவர் படத்தொகுப்பை மேற்கொண்டார். உதவியாக டிலோன் என்பவரும் தர்மலிங்கம் என்பவர் தமிழ் மொழி சார்ந்த பணிக்காகவும் என ஐந்து பேர் கொண்ட குழு ஆவணப்படுத்தலில் ஈடுபட்டது. இந்த ஆவணப்படம் காத்திரமான பல விடயங்களை பேசுகிறது. பேசப்படாத பல விடயங்களைப் பேசுகிறது. இதனை நல்ல நோக்கிற்காகப் பயன்படுத்தலாம் என்கின்ற கருத்து அவர்களிடமிருந்து வெளிப்பட்டது. இதில் பணியாற்றிய எவருமே தமக்கான கொடுப்பனவைப் பற்றிப் பேசவில்லை. இது உங்களின் படமல்ல, இது எங்களின் படம் என்கின்ற முடிவிற்கு அவர்கள் வந்தார்கள்.

ஞானதாஸ் கூட 'நீ தாற காசு பெரிய காசில்லை. இது உன்ரை படமில்லை. இது என்ர படம்' எனக் கூறினார். ஒளிப்பதிவாளரும் இவ்வாறே கூறினார். எல்லோருமே இதனை எங்களுடைய படம் என்கின்ற உரிமையை எடுத்து செய்யத் தொடங்கிய போது, அதன் கலைப்பண்புகள் அதற்குள்ளிருந்து ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியன.

ஒளித்தொகுப்பு மேசையில் வைத்துத் தான் நாங்கள் இந்தக் கதையைக் கூட உருவாக்கினோம். எல்லா இடமும் சென்று மக்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொண்டோம். ஒரு சிலரிடம் இரண்டு மூன்று நாளாக அவர்களின் பின் சென்று தகவல்களை சேகரித்து ஒருங்குபடுத்தினோம். ஒருவரிடம் பல மணித்தியாலங்கள் ஒளிப்பதிவு செய்தோம். ஆகவே நாம் எடுத்த ஒளிப்படங்களை ஒரு மணித்தியாலமாக மாற்ற வேண்டும் என்பதற்கான காட்சிகளிலிருந்து கதைகளை வெளியிலெடுத்துத் தொகுத்தோம்.

இதற்காக நானும் ஞானதாசும் சேர்ந்து இரண்டு கிழமைகளாகப் பணியாற்றி கதையைத் தொகுத்தோம். கதையை அழகாக நகர்த்தியமையில் முற்றிலும் ஞானதாஸ் அவர்களின் பங்கு காத்திரமானது.

5/13/2017 10:51:47 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்