Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமிழ்மக்களுக்குள்ள தெரிவு மாற்று அரசியலும், மாற்று அரசியல் இயக்கமுமே!

<p>தமிழ்மக்களுக்குள்ள தெரிவு மாற்று அரசியலும், மாற்று அரசியல் இயக்கமுமே!</p>
சி.அ.யோதிலிங்கம் நேர்காணல்

 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிச் சபைகளில் வரவு - செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படுவது பற்றி?

அண்மைக்காலமாக அடுத்தடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தில் இருக்கும் உள்ளூராட்சிச் சபைகளில் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டு வருகின்றது. வடக்கில் ஆரம்பமான இப்போக்கு கிழக்கிலும் மிகவேகமாக பரவத் தொடங்கியுள்ளது. வடக்கில் வலி-கிழக்குப் பிரதேச சபையிலும், வல்வெட்டித்துறை நகரசபையிலும் வரவு-செலவுத்திட்டம் முதலில் தோற்கடிக்கப்பட்டது. இந்தக் காய்ச்சல் கிழக்கிற்குப் பரவியபோது, அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேசசபையிலும், காரைதீவு பிரதேசசபையிலும், திருக்கோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேசசபையிலும் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இங்கெல்லாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே அரசாங்கக்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்த்து வாக்களித்து தோற்கடிக்கச் செய்துள்ளனர். வல்வெட்டித்துறை நகரசபையில் எதிர்த்து வாக்களித்த அனைவரும் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களே.

வரவு - செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படலாம் எனக் கருதி, தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை.சேனாதிராஜா அம்பாறை மாவட்டத்திற்குச் சென்றிருந்தார். அவர் இணக்கமுயற்சிகளை மேற்கொண்டபோதும், அது வெற்றியளிக்காத சூழலில் நாவிதன்வெளி பிரதேசசபையில் இது முதலில் நிகழ்ந்தது. ஆலையடிவேம்பு பிரதேசசபையிலும், இது நிகழக்கூடிய வாய்ப்பு இருந்தபோதும், மாவை ஒருவாறு இணக்கத்தைக் கொண்டுவந்தார். இதே இணக்கம் காரைதீவு பிரதேசசபையில் ஏற்படவில்லை. அங்கு தலைவரைத்தவிர, ஏனைய அனைவரும் எதிர்த்து வாக்களித்திருந்தனர். தொடர்ந்து வெருகல் பிரதேசசபையிலும் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

இவ்வாறு தொடர்ந்து தோற்கடிக்கப்படுவதனால் கூட்டமைப்பின் தலைமை வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தது. வவுனியாவில் நடைபெற்ற கூட்டமைப்பின் மாநாட்டிலும், இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. எனினும் அவையெல்லாம் பெரிய பயனைத் தரவில்லை. இந்தத் தீர்மானம் நிறைவேற்றியபின்தான் காரைதீவு பிரதேசசபையில் இரண்டாவது தடவையாகவும் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அங்கு பிரதேசசபைத் தலைவர் இராசையா இராஜினாமா செய்துள்ளார்.

வல்வட்டித்துறை நகரசபையில் இரண்டாவது வாக்கெடுப்பின்போது, தலைவர் பொதுமக்களைக் கொண்டு எதிர்ப்பவர்களை சபை மண்டபத்திற்குள் வரவிடாமல் தடுத்து, மூன்றுபேருடன் மட்டும் வரவு-செலவுத்திட்டத்தை நிறைவேற்றினார். இந்தத் தகராறினைத் தீர்க்க இறுதியில் பொலிஸ் கூட வரவேண்டியநிலை இருந்தது. தற்போது தடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபை ஆணையாளரிடம் முறையிட்டுள்ளனர். தடுக்கப்பட்டமை தவறென ஆணையாளர் தீர்மானித்தால், நிறைவேற்றப்பட்ட வரவு-செலவுத்திட்டமும் செல்லுபடியற்றதாகிவிடும்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் வல்வெட்டித்துறை நகரசபைக் குழப்பத்திற்கு தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரான குலநாயகமும், வலி-கிழக்கு பிரதேசசபைக் குழப்பத்திற்கு ஈ.பி.டி.பியுடன் இணைந்த தமிழரசுக் கட்சிக்காரருமே காரணம் எனக் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் அனந்தராஜ் இரண்டாவது வாக்கெடுப்பின்போது இடம்பெற்ற குழப்பத்திற்கு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கமே காரணமென குற்றஞ்சாட்டியிருக்கின்றார். ஓர் உள்ளூராட்சி சபையினையே கொண்டு நடாத்த முடியாத உங்களுக்கு, எதற்கு தனிநாடும், சுயாட்சியும் என வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கிண்டலடித்திருக்கின்றார்.

வலி-தெற்கு பிரதேசசபையில் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படலாம் எனக்கருதி, தலைவர் ஜெபநேசன் முன்கூட்டியே இராஜினாமா செய்ததினால், தப்பிப்பிழைத்தது. அங்குங்கூட ஒரு கூட்டமைப்பு உறுப்பினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இன்னொருவர் எதிர்த்து வாக்களித்திருந்தார்.

அதேவேளை உள்ளூராட்சிச்சபை தலைவர்களின் கெட்டித்தனத்தால், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக வரவு-செலவுத்திட்டத்தினை நிறைவேற்றிய பிரதேச சபைகளும் உண்டு. திருக்கோணமலை பட்டணமும், சூழலும் பிரதேசசபையிலும் ஆலையடிவேம்பு பிரதேசசபையிலும், இவ்வாறு இடம்பெற்றுள்ளது. திருக்கோணமலை பட்டினமும், சூழலும் பிரதேசசபையில் அரசாங்க கட்சியினைச் சேர்ந்த மூவரும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதேபோல நாவிதன்வெளி பிரதேசசபையில் எதிர்ப்புக்காட்டியிருந்த பிள்ளையானின் கட்சியும், அரசாங்கக்கட்சியும் ஆலையடிவேம்பில் ஆதரவு தெரிவித்திருந்தது. இங்கு மாவையின் முயற்சி ஒரு காரணமாக இருந்தாலும், பிரதேசசபைத் தலைவரின் கெட்டித்தனமே முக்கிய பங்களிப்பையாற்றியிருந்தது.

தற்போது மேலும் பல உள்ளூராட்சிச் சபைகளின் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படலாம் என்ற கலக்கத்தில் கூட்டமைப்பின் தலைமை இருக்கின்றது. ஆனாலும், இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆரோக்கியமான நடவடிக்கைகள் எதனையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இதற்கான ஆற்றலும் கூட்டமைப்பின் தலைமைக்கு இருப்பதாக கூறமுடியாது.

கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளில் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படுவதற்கு என்ன காரணம் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

பல காரணங்கள் உண்டு என்றே நான் கருதுகின்றேன். அதில் முதலாவது கூட்டமைப்புத் தலைமையின் வழிகாட்டல் எதுவும் இல்லாமையாகும். கட்சியின் ஆளுகைக்குட்பட்ட நிர்வாக அமைப்பொன்று சிறப்பாகச் செயற்படுவதற்கு, தலைமையின் தொடர்ச்சியான வழிகாட்டலும், தொடர்ச்சியான கண்காணிப்பும் அவசியமாகும். கூட்டமைப்பின் தலைமை இவை எவற்றையும் செய்யவில்லை. செய்வதற்கு வழிகாட்டக்கூடிய கொள்கைகளோ, அமைப்புப் பொறிமுறைகளோ கூட்டமைப்பிடம் இருக்கவில்லை.

கூட்டமைப்பிடமே இலக்கு, கொள்கை, அமைப்புப் பொறிமுறை என்பன இல்லாதபோது, அதன்கீழுள்ள நிர்வாகத்தில் அவற்றை எவ்வாறு எதிர்பார்க்கமுடியும். சம்பந்தன் தனது தனித்த ஓட்டத்திற்கு இலக்கு, கொள்கை, அமைப்புப் பொறிமுறை என்பன தடையாக இருக்கும் என்பதால் அவற்றை ஒருபோதும் விரும்பியது கிடையாது. இன்று இதன் பாதிப்பு உள்ளூராட்சிச்சபைகளிலும் தெரிகின்றது. இந்தச்சபைகள் எந்த வழிகாட்டலும் இல்லாமல் தாம் நினைத்தபடியேதான் செயற்படுகின்றன. இதனால் ஜனநாயகச் செயற்பாடு அங்கு எதுவும் இல்லாததோடு ஊழலும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. சபையின் வினைத்திறனும் பாரியளவில் வீழ்ச்சிகண்டுள்ளது,

இரண்டாவது, உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களது தனித்த ஓட்டமாகும். உள்ளூராட்சி சபை என்பது ஒரு கூட்டுவாழ்க்கையை வேண்டிநிற்கின்ற ஒரு சபையாகும். சபையின் செயற்பாடுகளில், தீர்மானங்களில் சகல உறுப்பினர்களும் பங்குபற்றக்கூடிய வாய்ப்புகள் இருக்கவேண்டும். அதற்கு ஜனநாயக விழுமியங்கள் அங்கு பேணப்படல் வேண்டும். ஆனால் கூட்டமைப்பின் பெரும்பாலான சபைகளில் இவை மருந்துக்குகூட பேணப்படுவதில்லை. தலைவர் ஒருவித சர்வாதிகாரத்துடன் தனித்தே செயற்படுகின்றார். சம்பந்தன் தனித்து தீர்மானங்களை எடுக்கும் போது, தாம் ஏன் அவ்வாறு எடுக்கக்கூடாது எனத் தலைவர்கள் கருதியிருக்கலாம்.

மூன்றாவது, தலைவருக்கும், உபதலைவருக்கும் இடையேயான முரண்பாடாகும். அனேக உள்ளூராட்சிச் சபைகளில் இதுவே காரணமாக இருந்திருக்கின்றது. நாவிதன்வெளி பிரதேசசபையின் தலைவராக இருந்த கலையரசன் கிழக்குமாகாணசபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். அவ்வெற்றிடத்திற்கு உபதலைவரும், அடுத்த அதிகப்படியான விருப்பு வாக்குகளையும் பெற்ற ஆனந்தன் வரவிரும்பியிருந்தார். ஆனால் கலையரசனின் சிபார்சினூடாக கூட்டமைப்பின் தலைமை இன்னொருவரை தலைவராக தெரிவுசெய்திருந்தது. இதனால் நீண்டகாலமாகவே முரண்பாடு வளர்ந்திருந்தது. ஆனந்தன் தருணம் பார்த்து அதனைப் பயன்படுத்தியிருக்கின்றார்.

வல்வெட்டித்துறை நகரசபையிலும் சிவாஜிலிங்கம் தலைவராக வர விரும்பியிருந்தார். தேர்தல் காலத்திலும் அவ்வாறே பிரச்சாரம்  செய்தார். ஆனாலும் விருப்புவாக்கில் சிவாஜிலிங்கத்தைவிட அனந்தராஜ் கூடுதலான வாக்குகளைப் பெற்றமையினால், தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். இதனை சிவாஜிலிங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. அன்றிலிருந்தே சிவாஜிலிங்கம் கோஸ்டி சேர்த்துக்கொண்டு, அனந்தராஜின் தலைமைக்கு எதிராகச் செயற்படுகின்றார். மாகாணசபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னரும், அனந்தராஜிற்கு எதிரான நடவடிக்கைகளை அவர் நிறுத்தவில்லை.

நான்காவது, கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கிடையிலான முரண்பாடாகும். உள்ளூராட்சி சபைகளிலும் இம்முரண்பாடு பிரதிபலித்தது. வடக்கில், குறிப்பாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், தலைவர்களாக இல்லாத உள்ளூராட்சிச் சபைகளில் இது அதிகமாக உள்ளது. வலிகிழக்குப் பிரதேசசபையின் தலைவராக சுரேஷ் பிரேமச்சந்திரனின் செயலாளர் உதயகுமார் இருக்கின்றார். இதனால் ஏனைய தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் அவருடன் ஒத்துழைப்பது குறைவு. வல்வெட்டித்துறை நகரசபையிலும் தலைவர் அனந்தராஜ், சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஆளாகவே பார்க்கப்படுகின்றார். குலநாயகமும், சிவாஜிலிங்கமும் அவருடன் ஒத்துழையாமைக்கு இவை காரணமாக இருக்கக்கூடும். கிழக்கு உள்ளூராட்சிசபைகளில் கட்சிமுரண்பாடுகள் எவ்வளவிற்குப் பங்களித்தன என்பதை அறியமுடியவில்லை.

ஐந்தாவது, தமிழ்ச்சமூக அமைப்பின் குறைபாடாகும். தமிழ்ச்சமூகம் ஒரு ஜனநாயக சமூகமல்ல. ஜனநாயக சமூகமாக வளர்வதற்கு முதலாளித்துவப் பொருளாதாரமும் அவர்கள் மத்தியில் வளர்ந்திருக்கவில்லை. இதனால் அரைகுறை நிலப்பிரபுத்துவ பண்புகளைக்கொண்ட, அதிகாரப்படிநிலை சமூகமாகவே, தமிழ்ச்சமூகம் காணப்படுகின்றது. நீண்ட காலனித்துவ ஆட்சியும் இதனை வளர்த்திருக்கின்றது. இதனால்தான், தமிழ்மக்கள் மத்தியில் செயற்பட்டிருந்த அரசியல்கட்சிகள் என்றாலும் சரி, பின்னர் வந்த விடுதலை இயக்கங்கள் என்றாலும் சரி, அவற்றிடம் ஜனநாயகப் பண்புகள் போதியளவு இருக்கவில்லை. சிறியளவில் ஜனநாயகப் பண்பைக் கொண்டிருந்த, ஈ.பி.ஆர்.எல்.எப் தொடர்ச்சியாக சிதையும் நிலையே தோற்றம் பெற்றது. இராணுவ நிர்வாகத்தைக்கொண்ட புலிகளும், ஈ.பி.டி.பியும் மட்டும் நிலைத்திருக்க முடிந்தது.

இன்று ஈ.பி.டி.பியின் கட்டுப்பாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் பிரச்சினைகள் பெரியளவிற்கு எழவில்லை. யாழ் மாநகரசபையில் மட்டும், சில முரண்பாடுகள் இருப்பதாகக் கேள்வி, ஏனைய சபைகளில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஈ.பி.டி.பி ஓர் இராணுவ நிர்வாகமாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடமும், எந்த ஜனநாயகப் பண்பும் கிடையாது. ஜனநாயகப் பண்பைப் பேணினால், சம்பந்தனால் தனித்து ஓடவும் முடியாது. இன்றைய தமிழ்ச்சூழலில் ஜனநாயகரீதியான தலைவர்கள் இல்லை. மாறாக, ஜனநாயகரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட சர்வாதிகாரத் தலைவர்களே உள்ளனர். ஜனநாயகப் பண்புகள் இல்லாமையினால் தமிழ் அரசியலில் கூட்டுவாழ்க்கையை நினைத்தே பார்க்கமுடியாது. கூட்டுவாழ்கையும், அதன் அடிப்படையில் அமைந்த, கூட்டுச்செயற்பாடுகளும் இல்லாமல், தமிழ்மக்கள் ஒருபோதும் விடுதலையடைய முடியாது.

உள்ளூராட்சிச் சபைகளில் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படுவதைத் தடுக்க என்ன செய்யலாம் என நீங்கள் கருதுகிறீர்கள்?

தமிழ்த்தேசிய அரசியல் இயக்கத்தை ஒரு பிரக்ஞைபூர்வ அமைப்பாக மாற்றுவதன் மூலம்தான் இதனைத் தடுக்க முடியும் என நான் கருதுகின்றேன். மேல்மட்டத்தில் பிரக்ஞைபூர்வ அமைப்பு இல்லாமல், கீழ்மட்டத்தில் அவை இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. தமிழ்மக்கள் பேரினவாத ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலைபெறுவதற்கும், சுயநிர்வாகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், பிரக்ஞைபூர்வ அமைப்பு அவசியம். பிரக்ஞைபூர்வ அரசியல் இல்லாமல், பிரக்ஞைபூர்வ அமைப்பு ஒருபோதும் எழுச்சியடைய மாட்டாது. பூசணிக்கொட்டையை நட்டுவிட்டு, அவரைக்காய் காய்க்கும் என எதிர்பார்க்கமுடியாது.

பிரக்ஞைபூர்வ அரசியலுக்கு தெளிவான இலக்கு, உறுதியான கொள்கை, அர்ப்பணிப்புள்ள தலைமை என்பன அவசியம். கூட்டமைப்பிடம் இவை எதுவும் கிடையாது. அது இந்தியாவிற்கு சேவகம் செய்யும் ஒரு எடுபிடிஅமைப்பு. இன்னொன்றின் எடுபிடியாக இருக்கும் ஓர் அமைப்பிடம், பிரக்ஞைபூர்வ அரசியலை ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது. பிரக்ஞைபூர்வ அரசியல் இல்லாமல், பிரக்ஞைபூர்வ அமைப்பையும் கட்டியெழுப்ப முடியாது. கூட்டமைப்பிடம் உள்ள எல்லாக் கோளாறுகளுக்கும் காரணம், அதனிடம் பிரக்ஞைபூர்வ அரசியல் இல்லாமையே.

பிரக்ஞைபூர்வ அரசியலும், அதனை முன்னெடுக்கும் அமைப்பும் இருந்துவிட்டால், உள்ளூராட்சிசபை பிரச்சினைகள் எல்லாம் சிறிய பிரச்சினைகளே. இவ்வமைப்பைக் கட்டியெழுப்பிவிட்டால், ஒரு ஜனநாயகபூர்வ சமூகமாக தமிழ்ச்சமூகத்தைக் கட்டியெழுப்பி அதன் குறைபாடுகளையும். சிறிது சிறிதாகத் திருத்தமுடியும். கட்சிப் பிரச்சினைகளை கட்சிப் பொறிமுறைகள் மூலம் தீர்த்துக்கொள்ளவும் முடியும். ஒரு இலட்சியத்திற்காக ஆயிரக்கணக்கில் உயிர்களைக் காவுகொடுத்த மக்களிடம், இவற்றை ஏற்படுத்துவது கடினமான காரியமல்ல.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் திருந்தப் போவதில்லை. திருந்துவதற்கான பொறிமுறைகளும் அங்கு கிடையாது. ஒரு எடுபிடி அமைப்பிடம், இதனை எதிர்பார்க்கவும் முடியாது. பிரக்ஞைபூர்வமான மாற்று அரசியலுடன் ஒரு மாற்று அரசியல் இயக்கத்தை, கட்டியெழுப்புவதன் மூலமே மேற்கூறிய குறைபாடுகளை நிவர்த்திசெய்யமுடியும்.

இன்று தமிழ் மக்களுக்குள்ள ஒரேயொரு தெரிவு மாற்றுஅரசியலும், மாற்று அரசியல் இயக்கமுமே.

நேர்கண்டவர் - நந்தன்

1/2/2014 6:46:48 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்