Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இலங்கையில் இரட்டை ஜனநாயகம் பின்பற்றப்படுகிறது! - ஜோசேப் ஸ்ராலின்

இலங்கையில் இரட்டை ஜனநாயகம் பின்பற்றப்படுகிறது! - ஜோசேப் ஸ்ராலின்
நேர்கண்டவர்: சி.அ.யோதிலிங்கம்

 

இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசேப் ஸ்ராலினுடன் ஒரு நேர்காணல் 

ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான இலங்கையின் அரசியல் சூழல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: ஆட்சிமாற்றத்தின் மூலம் ஜனநாயக சூழல் உருவாகும் என மக்கள் எதிர்பார்த்தனர். 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதற்குமான ஜனநாயக சூழல் கட்டியெழுப்பப்பட்டுள்ளது எனக் கூற முடியாது. வடக்கில் ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். அங்கு இன்னமும் கெடுபிடிகள் பெரியளவிற்கு குறைந்ததாகத் தெரியவில்லை. மாணவி வித்தியாவின் கொலைக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து இராணுவப் பிரசன்னம் அதிகரித்துள்ளது. படையினர் டாங்கிகளுடன் வீதி ரோந்தில் ஈடுபடுகின்றனர். தெற்கில் இவ்வாறான ஜனநாயக போராட்டங்களைத் தொடர்ந்து வீதி ரோந்துகள் இடம்பெறுகின்றனவா?

இங்கு தமிழ் மக்களுக்கு ஒரு ஜனநாயகமும் சிங்கள மக்களுக்கு இன்னோர் ஜனநாயகமும் பின்பற்றப்படுகின்றது. இது ஏற்கத்தக்கதல்ல. மைத்திரிபால சிறிசேன தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாக்குகளையும் பெற்றுத்தான் தெரிவாகினார். குறிப்பாக 2005 ஆம் ஆண்டுத் தேர்தலைப்போல தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஸ்கரித்திருந்தால் மைத்திரி தெரிவாகியிருக்க முடியாது. எனவே ஜனநாயகத்தில் வேறுபாடு காட்டப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

19 வது திருத்தத்தின் மூலமும் ஜனாதிபதிமுறை ஒழிக்கப்படவில்லை. ஜனாதிபதியின் அதிகாரங்களுக்குத் சில தடைகள் மட்டும் போடப்பட்டுள்ளன. ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்தால் பிரிவினைவாதம் வளரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி அதிகாரம் இழந்தால் வடகிழக்கில் தமிழ்த் தேசியவாதம் வளரும் என தமிழ் மக்கள் தொடர்பாக சந்தேகம் தெற்கில் கிளறப்பப்படுகின்றது. தமிழ் மக்களினது வாக்குகளின் மூலம் வென்றதனால் சந்தேகம் கொள்கின்றனர். தமிழ் மக்கள் திறந்த மனதோடு இருந்தாலும் சந்தேகத்தை வளர்க்கப் பார்க்கின்றனர். இது மிகவும் துரதிஸ்டவசமானது.

19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களில் மட்டுப்படுத்தல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் குறைந்தபட்சம் தென்னிலங்கையிலாவது ஜனநாயகச்சூழலை கொண்டுவரும் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: ஜனாதிபதி அரசாங்க முறைக்கு எதிராக என்.எம்.பெரேரா தொடக்கம் 37 வருடமாக பலர் போராடி வருகின்றனர். ஐக்கிய தேசியக்கட்சிதான் 1978 ஆம் ஆண்டு யாப்பு மூலம் இதனைக் கொண்டு வந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி உட்பட எல்லாக் கட்சிகளும் இதனை எதிர்த்திருந்தன. 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான சந்திரிகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி முறை ஒழிப்பது பற்றிக் கூறப்பட்டது. அன்று எதிர்த்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி இன்று ஒழிக்க வேண்டாம் எனக் கூறுகின்றது. இதற்குக் காரணமாக பிரிவினைவாதம் வளரும் எனக் கூறுகின்றது.

19 ஆவது திருத்தத்தில் நாம் நினைத்தது போல மாற்றங்கள் வரவில்லை. இதனால் எதிர்பார்த்த ஜனநாயகம் வரும் எனக் கூறமுடியாது. எனவே ஜனநாயகத்திற்கான எமது போராட்டத்தை இதனுடன் நிறுத்தக் கூடாது. 19 ஆவது திருத்தம் ஒரு சந்தி மட்டும்தான். போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அதனூடாக ஜனாதிபதி முறையினை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும். 19 வது திருத்தத்தின் குறைந்தளவு வெற்றியாவது கிடைக்குமா என்பதை நடைமுறையில்தான் பார்க்க வேண்டும்.

ஜனாதிபதி முறையை நீக்கி பாராளுமன்ற முறையை மீண்டும் கொண்டு வர விரும்புகின்றீர்கள். பாராளுமன்ற முறை முழுமையான ஜனநாயகத்தை பெற்றுத்தரும் என நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: ஆளும் கட்சியின் செல்வாக்கு பாராளுமன்றத்தில் அதிகரித்தால் ஜனநாயகம் இல்லாமல் போகும். செல்வாக்கு குறைந்தால்தான் ஜனநாயகம் வெளிவரும். பாராளுமன்ற முறையில் தனிநபரிடம் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்படாமல் ஒரு குழுவான அமைச்சரவையிடம் கையளிக்கப்படுகின்றது. அமைச்சரவை தான் மேற்கொள்ளும் அனைத்து கருமங்கள் தொடர்பாகவும் பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூறுகின்றது. அமைச்சரவை உறுப்பினர்களை கேள்வி கேட்கும் உரிமை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு. இதனால்தான் ஜனாதிபதி முறையை விட பாராளுமன்ற முறை ஜனநாயகத் தன்மை வாய்ந்தது எனக் கூறப்படுகின்றது.

ஆனால் பிரதமரே ஆளும் கட்சியின்தலைவராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் இருப்பதால் பாராளுமன்றத்தில் கட்சிக்கு வலுவான பெரும்பான்மை இருப்பின் பிரதமர் சர்வாதிகாரியாகத் தொழிற்படுவதற்கு பாராளுமன்ற முறையில் நிறையவே வாய்ப்புக்கள் உண்டு. எனவே பாராளுமன்ற முறையின் மூலம் முழுமையான ஜனநாயகம் வந்துவிடும் எனக் கூற முடியாது. மக்கள் விழிப்புடன் இருந்து அரசியல் செயற்பாடுகளிலும் பங்குகொள்கின்றபோதே இம்முறையினை சிறந்த ஜனநாயக முறையாக மாற்ற முடியும். இதைவிட பன்மைத்துவ சிந்தனையை அரசியல் நிறுவனங்கள் எல்லாவற்றிலும் கட்டியெழுப்ப வேண்டும்.

ஆட்சிமாற்றத்திற்குப் பின்னால் நின்று செயற்பட்டவை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும் இந்தியாவும்தான். இந்த ஆட்சிமாற்றம் மேற்குலகினதும் இந்தியாவினதும் காலனியாக இலங்கையை மாற்றிவிட்டது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. தயான் ஜயதிலக போன்ற சிங்கள புலமையாளர்கள் இதனை முன் வைக்கின்றனர். அவர்கள் ஆட்சிமாற்றத்தினை சர்வதேச சதி முயற்சி எனக் கூறுகின்றனர். இது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

பதில்:  மகிந்த ராஜபக்ஷவும் இதனைத்தான் கூறுகின்றார். அவருக்கு அவ்வாறு கூறுவதற்கு உரிமையில்லை. அவர் போரை நடத்துவதற்காக மேற்குலகினதும், இந்தியாவினதும் உதவிகளைத் தாராளமாகவே பெற்றிருக்கின்றார். அமெரிக்கா புலிகளின் கப்பல்கள் தொடர்பான துல்லியமான புலனாய்வுத் தகவல்களை வழங்கியிருந்தது. அதுவே புலிகளின் கப்பல்களை மூழ்கடிப்பதற்கு உதவியாக அமைந்தது. இந்தியா நேரடியாகவே ராடர் உதவிகளை வழங்கியதோடு நேரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. இந்த இரு தரப்பினரதும் உதவிகள் கிடைத்திருக்காவிட்டால் போரில் ஒருபோதுமே வெற்றியடைந்திருக்க முடியாது.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திற்கும் இந்தியாவிற்கும் இலங்கையில் சீனாவின் அதிகரித்த செல்வாக்கு, அரசின் ஊழல், ஜனநாயகமின்மை என்பவற்றால் ஆட்சிமாற்றம் ஒன்று அவசியமாக இருந்தது. அதற்காக கடுமையாகச் செயற்பட்டு ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றன.

இன்று தாம் உருவாக்கிய ஆட்சிமாற்றத்தை பாதுகாப்பதில் முனைந்துள்ளன. அதற்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை வெளிவருவதையும் பிற்போட்டு தமிழ்மக்களை ஏமாற்றியுள்ளன. இந்தச் சக்திகளின் கட்டுப்பாட்டில் இலங்கை தற்போது இருக்கின்றது என்பது உண்மைதான். இது ஒரு காலனி நாட்டிற்குரிய தன்மையைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சர்வதேச சக்திகள் தங்கள் நலன்களிலிருந்துதான் செயற்படும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே! அதேவேளை தென்னிலங்கை சக்திகளுக்கு ஒரு ஜனநாயக சூழல் தேவைப்பட்டது. தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கு மகிந்தரின் இனவாத ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.

இந்த இடத்தில்தான் சர்வதேச சக்திகள், தென்னிலங்கை ஜனநாயக சக்திகள், தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் 'மகிந்தரை அகற்றுதல்' என்கின்ற ஒரு புள்ளியில் இணைந்தனர். இனிவரும் காலத்தில் அமெரிக்கா இந்திய ஆக்கமிரமிப்பிலிருந்து இலங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பும் உள்நாட்டுச் சக்திகளுக்கு உண்டு. இங்கு கொதிநீருக்குள் இருந்து எண்ணெய்ச் சட்டிக்குள் விழுந்ததாக நாம் இருக்கக் கூடாது.

ஆட்சிமாற்றம் தென்னிலங்கை ஜனநாயக சக்திகளினதும், தமிழ், முஸ்லிம் மலையக மக்களினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவில்லை என்பதை நாம் ஏற்றேயாக வேண்டும். நான் மீண்டும் கூறுகின்றேன். இது ஒரு சந்திதான். நாம் தொடர்ந்தும் மேலே செல்ல வேண்டும்.

மகிந்த ராஜபக்ச மீண்டும் எழுச்சியடைவது போல ஒரு தோற்றம் தெரிகின்றது. அவரது ஆதரவாளர்கள் அதற்காகக் கடுமையாகச் செயற்படுகின்றனர். சீனாவும் தனது நலன்களுக்காக இதனை ஊக்குவிக்கின்றது. மகிந்த ராஜபக்ஷவும் தனது மீள் எழுச்சிக்கேற்ற வகையில் பகிரங்கமாகவே காய்களை நகர்த்தி வருகின்றார். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் நிலைத்து நிற்கும் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: பேரினவாத சக்திகள்தான் மகிந்த ராஜபக்சவினை ஆதரித்து நிற்கின்றன. அவரும் அதற்கேற்ற வகையில் தமது பிரசாரங்களாக பௌத்த விகாரைகளைப் பயன்படுத்துகின்றார். தமது இருப்பிற்கு வேறு தெரிவில்லாத விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தனா, வாசுதேவ நாணயக்கார போன்றவர்களும் பக்கபலமாக நிற்கின்றனர். சீனாவும் தனது நலன்களிருந்து அதனை ஊக்குவிக்கின்றது. தயான் ஜயதிலக போன்றவர்கள் இச்செயற்பாட்டிற்கு புலமைப் பின்பலம் கொடுக்கின்றனர்.

இன்னோர் பக்கத்தில் மைத்திரிபால சிறிசேனாவின் கட்டுப்பாட்டின் கீழ் சிறீலங்கா சுதந்திரக் கட்சி இல்லை. மைத்திரிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதுதான் ஓரளவு செல்வாக்கு உள்ளது. மகிந்த ராஜபக்ச மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்கள் மீது அதிக செல்வாக்கினைக் கொண்டுள்ளார்கள். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மைத்திரியின் செல்வாக்கு வளர்கிறதா? இல்லையா? என்பதும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மக்கள் திருப்தியடைகின்றார்களா? இல்லையா என்பதும் பேரினவாத கருத்துக்கள் எடுபடுவதற்கான சூழல் இருக்கின்றதா? இல்லையா? என்பதும்தான் மகிந்தரின் எழுச்சியைத் தீர்மானிக்கும் என நினைக்கின்றேன்.

ஐக்கிய  தேசியக் கட்சி பலவீனமடைந்து வருவது போல ஒரு தோற்றம் தெரிகின்றது. இது உண்மையா? கட்சிக்கு தலைமை கொடுக்கக்கூடிய ஆற்றல் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இருக்கின்றது என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: ஐக்கிய தேசியக் கட்சி பலவீனமடைந்து வருகின்றது என்பது  உண்மைதான். இன்று அக்கட்சியினை தமிழ், முஸ்லீம், மலையக மக்கள்தான் தாங்கிப் பிடிக்கின்றனர். இதற்கு கொள்கை காரணமல்ல. மகிந்தர் ஆதிக்கத்தினை நீக்க வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கின்றனர். சிங்கள மக்களினதும் 30 தொடக்கம் 35 வீதமான வாக்கு வங்கி ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்தது. ஆனால் மகிந்தரின் போர் வெற்றியினால் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையான வாக்குகள் மகிந்தரை நோக்கி நகர்ந்தன. போர் முடிவடைந்து சிலஆண்டுகளாக சிறிது கூட ஐக்கிய தேசியக் கட்சியினால் எழும்ப முடியவில்லை. நடைபெற்ற தேர்தல்களில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளின் அரைவாசி வாக்குகளைக் கூட ஐக்கிய தேசியக் கட்சியினால் பெறமுடியவில்லை. ஆனால் கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. மகிந்தரின் ஆட்சி மீதான வெறுப்பினால் மகிந்தருக்குச் சென்ற  ஐக்கிய தேசியக் கட்சியின்  கணிசமான வாக்குகள் பழைய இடத்திற்கு திரும்பின. ஜனாதிபதி தேர்தலிலும் அதனைப் பார்க்க முடிந்தது. ரணில் விக்கிரமசிங்க ஜனவரி 7 ஆம் திகதி தனக்கு அரசாங்கம் கிடைக்கும் எனக் கடைசிவரை நினைத்திருக்கமாட்டார். ஒரு அதிஸ்ரம் போலவே அவரின் கைகளுக்கு அரசாங்கம் வந்தது. இது ஒரு தற்காலிக செழிப்பே.

ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஒரு சிறப்பம்சம் இருந்தது. அது முதலாளித்துவ கட்சியாக இருந்தாலும் எல்லா இனங்களையும் மதங்களையும் உள்வாங்கிய பன்மைத்துவப் பண்பு கொண்ட பன்மைத்துவக் கட்சியாக இருந்தது. அண்மைக்காலமாக அதன் பன்மைத்துவப் பண்பு குறைந்துகொண்டே செல்கின்றது. இனவாதப் பண்புகளை அது சுவீகரிக்க முயல்கின்றது.

தற்போது ஆட்சியைத் தீர்மானிப்பது இனவாதம்தான். தமது தொடர் தோல்விக்கு காரணம் இனவாதம்தான் என ஐ.தே.க நினைக்கப் பார்க்கின்றது. இதனால்தான் இனவாதத்தை சுவீகரிக்க முயல்கின்றது. ரணில் விக்கிரமசிங்க மிகவும் சிரமப்பட்டு தன்னை ஒரு இனவாதியாகக் காட்ட முனைகின்றார். இந்தப் போக்கு தொடர்ந்தால் தமிழ், முஸ்லிம் மலையக மக்கள் வேறு தெரிவுகளை நாட வேண்டி வரும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னடைவிற்கு புறக்காரணிகள் பல இருந்தாலும் ரணில் விக்கிரமசிங்க தான் பிரதான காரணம். ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றிலேயே மிகவும் பலவீனமான தலைவராக அவரேயிருக்கின்றார். கட்சியின் பின்னடைவிற்கு பொறுப்பேற்று பதவி விலகவும் அவர் தயாராக இல்லை. இதனால் வேறு ஆளுமையுள்ள தலைவர்கள் பொறுப்பேற்பதற்குரிய சூழலும் இல்லாமல் இருக்கின்றது. வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவது கடினமாக இருக்கும் என்றே நினைக்கின்றேன்.

ஜனாதிபதி தேர்தலில் கட்சி வெற்றி பெற்றதனால் கட்சியின் கட்டுப்பாட்டை ரணில்தன் கைகளில் வைத்திருக்கின்றார். பாராளுமன்றத் தேர்தலில் கட்சி தோல்வியடைந்தால் ரணில் கட்டுப்பாட்டை இழக்கக் கூடும்.

8/16/2015 10:32:12 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்