Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அரசியற் கைதிகள் விவகாரத்தின் பின்னால் அரசின் பெரும் சூழ்ச்சி இருக்கிறது!

<p>அரசியற் கைதிகள் விவகாரத்தின் பின்னால் அரசின் பெரும் சூழ்ச்சி இருக்கிறது!</p>
குணா கவியழகன் நேர்காணல்

 

இனப்படுகொலை விவகாரத்தை இராணுவ அத்துமீறலாகச் சுருக்கும் முனைப்புடன் அரசியற் கைதிகள் விடுவிப்புத் தொடர்பான விவகாரம் சிறிலங்கா அரசாங்கத்தினால் கையாளப்படுவதாக எழுத்தாளர் குணா கவியழகன் பொங்குதமிழுக்குத் தெரிவித்துள்ளார்.

கடந்த சனியன்று தனது 'விடமேறிய கனவு' நாவல் அறிமுக அரங்கில் பங்கேற்பதற்காக குணா கவியழகன் நோர்வேக்கு வருகை தந்திருந்த போது அரசியற் கைதிகள் விவகாரம் தொடர்பாக அவருடன் நேர்காணல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம்.

அரசியற் கைதிகள் விடுதலை பற்றிய வாக்குறுதிகள் சில மாதம் முன்னரே வழங்கப்பட்டிருந்தன. ஆட்சிமாற்றத்தின் பின் இலகுவில் நடந்துவிடுமென நம்பப்பட்ட இச்சிறு விடயம், இப்பொழுது சர்ச்சைக்குரியதாகவும் இலங்கை அரசியலின் மைய விவகாரமாக்கப்பட்டுள்ளதன் பின்னணி தொடர்பாகவும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

பொங்குதமிழுக்காக நேர்கண்டவர் ரூபன் சிவராஜா

***

அரசியற் கைதிகள் விடுதலை பற்றிய வாக்குறுதிகள் சில மாதம் முன்னரே வழங்கப்பட்டிருந்தன. ஆட்சிமாற்றத்தின் பின் இலகுவில் நடந்துவிடுமென நம்பப்பட்ட இச்சிறு விடயம், இப்பொழுது சர்ச்சைக்குரிய விவகாரமாக்கப்பட்டுள்ளதன் பின்னணி என்ன?

சரி தான், அது இன்றைய அரசியலின் மைய விவகாரமாகிவிட்டது. முன்னர் வாக்குறுதி வழங்கப்பட்டதென்பது, இணக்க அரசியலின் வெளித்தெரியாத இயல்பான நடவடிக்கை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்தவர்கள் அல்லது அவர்கள் ஆட்சிக்கு வருவதற்குத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தன் மக்களைத் திருப்பியதால் அந்த மக்களுக்கு நன்மையாகக் காட்டக்கூடிய ஒன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை கூட்டமைப்பிற்கு உண்டு.

ஓர் இணக்க அரசியல் வழிமுறையில் மூடிய அறையில் நடக்கக்கூடிய இருதரப்பு உரையாடலில், இருதரப்பு நலன்கள் பற்றியே பேசப்படும். கூட்டமைப்பு தன் மக்களுக்கு வெற்றியாகக் காட்டக்கூடிய எதனை நல்க முடியுமென்று விவாதிக்கப்படும். இந்த உரையாடலில் அரசதரப்பு உடன்படக்கூடிய விவகாரமாக, அரசியற் கைதிகள் விவகாரம் உடனடிக்கு இருந்திருக்கும். மூடிய அறைக்குள் இந்த உடன்பாடு எட்டப்பட்ட பின்னரே, கூட்டமைப்பு பகிரங்கமாக அரச தரப்பை நோக்கி இந்தக் கோரிக்கையை முன்வைக்கும்.

தாங்கள் கோரிக்கை வைத்ததன் மூலம்தான் இந்தக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்பதாகக் காட்சிப்படுத்துவதே இங்கு நோக்கம். அரசு அப்படிச் செய்யாவிட்டால், ஒரு போராட்டத்தை நடாத்தப்போவதாக திட்டமிட்டு ஒரு அறிவிப்பும் விடுத்திருந்தது கூட்டமைப்பு. தங்களுடைய பெரும் பிரயத்தனத்தின் மூலமே, அரசியற் கைதிகளை மீட்டெடுத்தோம் என்பதுதான் இங்கு காட்ட விரும்பும் அரசியல் வெளிப்பாடு. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இவர்களை இப்படித் தூண்டி விட்டு, தனது அடுத்து கட்ட நலனுக்குச் சென்றுவிட்டது.

அடுத்த கட்ட நலன் என்று எதனைக் கருதுகிறீர்கள்? ஒரு கைதி விடுவிப்பு விவகாரத்தில் என்ன வகையான அரசியல் நலன்கள் இருக்க முடியும்? அல்லது இதற்குப் பின்னால் ஓர் அரசியல் சூழ்ச்சி இருக்கக்கூடுமா?

கண்டிப்பாக. முள்ளிவாய்க்காலோடு எல்லாம் முடிந்துவிட்டதாகத் தமிழர்கள் நினைக்கிறார்கள். ஆனால் சிங்கள அரசாங்கம் அவ்வாறு நினைக்கவில்லை. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான நிகழ்ச்சித்திட்டம் என்றும் ஒன்று உண்டு. கைதிகள் விவகாரத்தைக் 'கைதி அரசியல்' என்றும் சொல்லலாம் போலிருக்கிறது. இதனை இன்றைய இலங்கை மைய அரசியல் விவகாரத்தோடு சிறிலங்கா அரசாங்கம் இணைத்து விடப்போவதுதான் இதிலுள்ள பெரும் சூழ்ச்சி.

தமிழர்களிடமிருந்து ஓர் அரசியல் போராட்டத்தினை அல்லது அரசியல் பிரயத்தனத்தினை அரசாங்கமே தூண்டுகிறது. அத்தகைய பெரும் பிரயத்தனத்தின் பின்பு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதில்தான் அரசாங்கத்திற்கு இலாபமுண்டு. துரதிஸ்ரவசமாக இது கூட்டமைப்பிற்கும் இலாபகரமாக அமைந்துவிடப் போகிறது. ஒரு எதிர்ப்பரசியலின் மூலம் தம்மால் வென்றெடுக்கப்பட்ட கேடயமாக கைதிகள் விவகாரத்தைக் கூட்டமைப்பு கொண்டுவரப்போகிறது. தம்மைப் போராட்ட நாயகர்களாகக் காட்டப்போகிறது.

ஏற்கனவே இனப்படுகொலை என்பது, போர்க்குற்றமாகத் திசைமாற்றப்;பட்டுவிட்டது. போர்க்குற்றம் என்பதுகூட சரியான வரையறையற்ற வழுக்கலான சொல்லுத்தான். இப்போது புதிய அரசாங்கம் பதவியைப் பிடித்ததும், போர்க்குற்றம் என்பதை இராணுவ அத்துமீறல் என்பதாகத் தாழ்த்தி வியாக்கியானப்படுத்தியுள்ளது. விசாரணைப் பொறிமுறை அதற்கு ஏற்றாற்போலவே அமைவதாகத் தெரிகிறது.

இராணுவ அத்துமீறல், போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை விளக்கத்திற்கும் அரசியற் கைதிகள் விவகாரத்திற்கும் இடையில் என்ன தொடர்பிருக்கிறது?

இனப்படுகொலை என்றால் அதன் பொறுப்பாளி அரசாங்கம். குற்றம் அரசினது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும். அதுவே நீதியின் பொறிமுறை.

ஆனால் இராணுவ அத்துமீறல் என்பது தனிமனித ஒழுக்கமீறல் பிரச்சினை. நாட்டின் சட்டத்தை ஒரு தனிமனிதன் மீறிவிட்டான் என்றளவில்தான் அதன் அர்த்தம். எனவே அந்த இழைக்கப்பட்ட குற்றத்திற்கான பொறுப்பாளி தனிமனிதனான சிப்பாய்தான். அரசு அல்ல என்றாக்கப்பட்டுவிடும். இங்கு இழைக்கப்பட்ட குற்றத்திற்கான நீதி என்பது தனிமனிதனைத் தண்டிப்பதுதான். அரசியல் தீர்வு அல்ல.

இந்த அரசியற் கைதிகளை நீதித்துறை நடவடிக்கையின் ஊடாக விடுதலை செய்ய முடியாதவர்களாகக் காட்டுவதன் மூலம், இலங்கையின் நீதித்துறை பூரண சுதந்திரமானது என்று காட்டப்படுகிறது. இந்தச் சுதந்திரமான நீதித்துறை, பின்னர் போரில் இடம்பெற்ற 'இராணுவ அத்துமீறல்களை' விசாரித்து வழங்கும் தீர்ப்பும் சரியானதென்று ஆகிவிடும். இப்போது அரசியற் கைதிகள் நீதித்துறைக்கு வெளியே ஓர் அரசியல் தீர்மானத்தின் மூலம் விடுவிக்கப்படுவர். அப்படியென்றால் போரின் போது அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படப்போகும் இராணுவத்தினருக்கும் ஒரு அரசியல் தீர்மானத்தின் மூலம் பொதுமன்னிப்பு வழங்கப்படுவது சரியென்றாகிவிடும்.

அரசே தமிழ்த்தரப்பைத் போராடத் தூண்டி, அரசியற் கைதிகள் விடுவிக்கப்பட்ட பின்னர், சிங்கள இனவாதத்தரப்பையும் குற்றம் சாட்டப்படும் இராணுவத்தினருக்கு ஆதரவாகப் போராடத் தூண்டி அவர்களை விடுவித்துவிடலாம்.

அவ்வாறாயின் போர்க்குற்ற விசாரணை தொடர்பான சர்வதேசத் தலையீடு என்பது இந்த விவகாரத்தில் என்னவாகிப் போகும்?

இப்போதுள்ள சர்வதேசத் தலையீடு என்பது ஒரு மாயை. பல நாட்டு நீதிபதிகள் பங்குபற்றுவதனால் அது சர்வதேசத் தலையீடு ஆகாது. அது அதிகாரமற்ற அங்கீகாரமற்ற கோறைப் பொறிமுறை. இதுவும்கூட உலக ஊடகங்களின் கண்களிலிருந்து மெல்லென மறைக்கப்பட்டுவிடும். விசாரணை காலவரையறையின்றி நீளும். தீர்ப்புகள் கிடப்பில் போடப்படும். உலக ஊடகங்களும் திட்டமிட்டு இதனை மறக்கடித்துவிடும்.

சில இராணுவத்தினர் இறுதியிலும் இறுதியாக குற்றவாளிகளாகக் காணப்பட்டாலும், அவர்கள் சத்தம் சந்தடியின்றி, ஒருவேளை உள்ளூர் ஊடகங்களின் கவனத்தினைக்கூடப் பெறாமல் விடுவிக்கப்படக்கூடும்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஒரு நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் கூறியிருந்தீர்கள். அது என்னவகையான நிகழ்ச்சி நிரல்?

போரில் தோற்கடிக்கப்பட்ட தமிழர்களை இறுதியிலும் இறுதியாக அவர்களின் அரசியல் போராட்டத்திலும் தோற்கடிக்க வேண்டும். தமிழர்களின் அரசியல் போராட்டம் ஆயுதப்போராட்டத்திற்கு முன்பும் இருந்தது. எனவே ஆயுதப்போராட்டத்தின் பின்பும் இருக்கும். அதனை எப்படி முறியடிப்பது என்பதற்கு ஒரு திட்டம் உண்டு. அது தமிழ் இன அடையாள அரசியலை இல்லாமல் செய்வது தான் அதன் இறுதியிலும் இறுதியான குறிக்கோள்.

அதற்கான நிகழ்ச்சி நிரலின் செயற்திட்டங்கள் சிங்களத்தரப்பினைப் பொறுத்தவரையில் செம்மையாக நகர்கின்றன.

தமிழ் அரசியலின் இன்றைய நிலையும் எதிர்காலமும் எப்படியிருக்கும்?

கருவியாகிக் கருவியாகிக் கெட்டழியும் ஒரு தற்கொலை அரசியல் தான். மேற்கு இறுதியாகக் கூட்டமைப்பினைக் கருவியாக்கி, புதிய அரசாங்கத்தினைக் கொண்டு வந்தது. புதிய அரசாங்கத்தின் கருவியாகி, தவிர்க்க முடியாது உலக முக்கியத்துவம் பெற்ற இனப்படுகொலை விவகாரத்தை இராணுவ அத்துமீறலாகவும் ஒரு தனிமனித ஒழுக்கமீறல் பிரச்சினையாகவும் குறுக்கியுள்ளார்கள். இந்தக் கருவி நிலையே நாளை அவர்கள் காணாமல் போகவும் வழிவகுத்துவிடும்.

சிங்கள அரசாங்கம் தான் போரில் வென்ற தமிழர்களைப் போராட்டத்திலும் வெற்றி கொள்வதற்கான அணுகுமுறையைக் கொண்டிருக்கின்றது. அப்படியென்றால் போரில் தோற்ற தமிழர்கள் போராட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வற்கான ஒரு நிகழ்ச்சி நிரலை வகுக்க வேண்டும்.

11/19/2015 1:25:39 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்