Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

எழுக தமிழ் நிகழ்வின் வெற்றி அரசியல் பெறுமானம் உடையது!

<p>எழுக தமிழ் நிகழ்வின் வெற்றி அரசியல் பெறுமானம் உடையது!</p>
எழுத்தாளர் குணா கவியழகன் நேர்காணல்

 

'எழுக தமிழ்' நிகழ்வின் வெற்றி அரசியல் பெறுமானம் உடையது. இந்தப் புள்ளி தான் கூட்டமைப்புக்குக் கிடைத்துள்ள பேரப்புள்ளி. எழுக தமிழால் பெற்ற பேரப்புள்ளி. இதனைக் கூட்டமைப்பு சரியான முறையில் தமிழ் மக்களின் நலன் கருதிப் பிரயோகிக்க வேண்டும். இது தரக்கூடிய விளைவில் இருந்துதான் 'எழுக தமிழ்' செயலை விளக்க வேண்டும் என எழுத்தாளர் குணா கவியழகன் தெரிவித்துள்ளார். 'எழுக தமிழ்' நிகழ்வு தொடர்பிலும் தற்கால அரசியல் போக்குகள் குறித்தும் பொங்குதமிழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இணக்க அரசியல் என்பது இருதரப்பிற்கும் உள்ள அரசியல் நெருக்கடியின் நிமித்தமாக, முரண்பாட்டுத் தளத்தில் மேலும் முன்னேற முடியாத புறநிலையில், தத்தம் கைகளிலுள்ள பேரப் பலத்திற்கிசைவாய் பெற்றும், இல்லாத பலத்திற்கிசைவாய் விட்டும் உடன்பட்டுக் கொள்ளும் பரஸ்பர நலன்களின் அறுவடையாகும். பெற்றுக்கொண்டதில் பாதுகாப்பையும், விட்டுக்கொண்டதில் அச்சமின்மையையும் அது உருவாக்கும் போது ஏற்படுவதே இணக்கம்.

ஆக, இணக்க அரசியல் என்பது பேரத்தை அடிப்படையாகக் கொண்டது. பேரத்தைக் கண்டடையாத தரப்போ அல்லது கைவிடும் தரப்போ இணங்கிப் போவதால் இணக்க அரசியலை உருவாக்க முடியாது. அது சரணாகதி அரசியலில் போய் முடியும். நம்பிக்கை, விசுவாசிப்பு என்பதெல்லாம் சரணாகதி அரசியலே. சரணாகதியில் பெற்றுக் கொள்வதற்கு எதுவும் இருக்காது. அது அரசியல் பலிபீடத்தில் இனத்தை வைப்பதற்கு ஒப்பானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குணா கவியழகன் வழங்கிய செவ்வியை முழுமையாக இங்கே தருகிறோம்.

'எழுக தமிழ்' நிகழ்வால் இணக்க முயற்சிகளும் அரசியல் தீர்வும் குழம்பப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தரப்பு கருதுவதாகத் தெரிகிறது. கனிந்துவரும் இணக்க சூழலை இது கரையேற்றாது, மாறாக பாடையேற்றிவிடும் என்பதான பார்வை விதைக்கப்படுகின்றது. அறுவடையாக இவர்கள் எதிர்பார்ப்பது என்ன?  உண்மையில் எழுக தமிழ் விளைவிக்கப் போகும் தாக்கம் தான் என்ன? குட்டையைக் குழப்பப் போகின்றதா? தமிழ் ஒற்றுமையைக் குழப்பப் போகின்றதா?

எழுக தமிழால் இணக்க அரசியல் குழம்பப் போகின்றதா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இணக்க அரசியலால் வெற்றியை ஈட்டுவதற்கான மார்க்கம் என்ன என்பதை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைமை மக்கள் முன் வைக்கவேண்டியது தான் அவசியமானது. அதற்கான தர்க்கம் என்ன என்பது முன்வைக்கப்பட்டிருந்தால், எழுக தமிழ் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. நடத்துபவர்களின் உள்நோக்கம் எதுவாக இருப்பினும் மக்கள் அதனை ஆதரித்திருக்க மாட்டார்கள். மக்களே அவர்களை நிராகரித்தும் காட்டியிருப்பார்கள். ஒரு அரசியல் கட்சியால் நிராகரிக்கப்படுவதை விட, மக்களால் நிராகரிக்கப்படுவதில் தானே பெறுமதி உள்ளது, பயன் விளைவுள்ளது. கூட்டமைப்பு செய்திருக்க வேண்டியதும் அதுவே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் விவகாரங்களைக் கையாள்கின்ற எம்.ஏ சுமந்திரன் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில், '60 வருடங்களாகத் தமிழ் மக்கள் ஏமாற்றப்படவில்லையா? இன்னொருமுறை நிகழ்ந்தால் கேடொன்றும் இல்லை' என்பதாக இந்த இணக்க முயற்சிக்கு வாதம் செய்திருந்தார். அந்த பதிலில் நம்பிக்கை தான் தங்கள் அரசியல் முயற்சியின் அடிப்படை என்பது பொருளாக இருந்தது. உலகில் நிகழ்ந்த எந்த நாடுகளின் இணக்க முயற்சிகளும் நம்பிக்கையால் நிகழ்ந்தவையல்ல. விட்டுக்கொடுப்புகளால் நிகழ்ந்ததும் அல்ல. அது ஒரு தோற்ற மாயை தான். அதிகாரத்தினால் காண்பிக்கப்படும் தோற்ற மாயை அது. வெகுஜன பொதுப்புத்தியைக் கவரும் மாயத் தோற்றம் அது. அதனால் அறிவார்த்தமான கேள்விகளை எதிர்கொள்ள முடியாது. ஏனென்றால் அதில் மெய் இல்லை. சுமந்திரனின் பதிலில் தெரிவது துணிச்சலல்ல, குருட்டுத்தனம் தான்.

அரசியல் இணக்க முயற்சிகளுக்கு அடிப்படையாகக் கொள்ளக்கூடியது எது? அதன் சாத்தியங்களை எங்கிருந்து தேடுவது? இலங்கைத் தீவின் அரசியலில் இணக்க முயற்சியே அபத்தமானது என்கிறீர்களா? அல்லது அதன் அடிப்படைகளாக வேறு எதனையும் கொள்ள வேண்டுமென்கிறீர்களா?

<p>எழுக தமிழ் நிகழ்வின் வெற்றி அரசியல் பெறுமானம் உடையது!</p>

நான் சொன்னதன் பொருள், இலங்கைத் தீவில் இணக்க முயற்சி அபத்தமானதென்பதல்ல. மாறாக நீங்கள் கேட்பது போல அதன் அடிப்படை, எதிர்த்தரப்பை நம்பிக்கை கொள்வதோ, விசுவாசிப்பதோ அல்ல. அது இருதரப்பிற்கும் உள்ள அரசியல் நெருக்கடியின் நிமித்தமாக, மேலும் முரண்பாட்டுத் தளத்தில் முன்னேற முடியாத புறநிலையில், தத்தம் கைகளிலுள்ள பேரப் பலத்திற்கிசைவாய் பெற்றும், இல்லாத பலத்திற்கிசைவாய் விட்டும் உடன்பட்டுக் கொள்ளும் பரஸ்பர நலன்களின் அறுவடையாகும். பெற்றுக் கொண்டதில் பாதுகாப்பையும், விட்டுக்கொண்டதில் அச்சமின்மையையும் அது உருவாக்கும் போது ஏற்படுவதே இணக்கம்.

ஆக, இணக்க அரசியல் என்பது பேரத்தை அடிப்படையாகக் கொண்டது. பேரத்தைக் கண்டடையாத தரப்போ அல்லது கைவிடும் தரப்போ இணங்கிப் போவதால் இணக்க அரசியலை உருவாக்க முடியாது. அது சரணாகதி அரசியலில் போய் முடியும். நம்பிக்கை, விசுவாசிப்பு என்பதெல்லாம் சரணாகதி அரசியலே. சரணாகதியில் பெற்றுக் கொள்வதற்கு எதுவும் இருக்காது. அது அரசியல் பலிபீடத்தில் இனத்தை வைப்பதற்கு ஒப்பானது.

ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்த் தரப்பில் பேரத்தை எங்கிருந்து கண்டடைவது? எதைப் பேரப் பலமாக்கிக் கொள்வது? இந்தத் தோல்வி மனப்பாங்குதானே எதற்கும் இணங்கிப் போதலை இணக்க அரசியலாகப் புரிந்து கொள்ள வைக்கிறது அல்லவா? இன்னமும் தமிழர்களிடம் பேரப்பலம் இருக்கிறது என்கிறீர்களா? அல்லது உருவாக்கப்பட வேண்டுமென்கிறீர்களா?

போர் என்பதே அடிப்படையில் பேரப்பலத்தை உருவாக்கும் மார்க்கம் தான். அகப் புற அரசியல் நிலைமையில் பேரப்பலம் இல்லாத தரப்பு போராட்டத்தின் மூலம் அதனை உருவாக்க முனைகிறது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது சர்வதேச அரசியல் புறநிலையினால் தான். அதேநேரம் எதிர்த்தரப்பான மகிந்த அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதும் சர்வதேச அரசியல் புறநிலையில் தான். ஆக, சர்வதேச அதிகார சக்திகள் தமக்கு வேண்டாத இருதரப்பை இலங்கை அரசியலில் இருந்து அகற்றின. மகிந்த அரசாங்கத்தை அகற்றுவதற்குத் தமிழர் தரப்புத்தான் அந்தச் சக்திகளுக்குத் தேவைப்பட்டது. அப்போது தமிழர்களின் பேரப்பலம் உச்சத்தில் இருந்தது. அதனைத் தமிழ்த்தரப்பு முறையாகப் பயன்படுத்தவில்லை என்றுதான் சொல்ல முடியும். மாறாக நம்பிக்கை, விசுவாசிப்பு என்ற மார்க்கத்தில் அந்தப் பேரம் கெட்டழிக்கப்பட்டுவிட்டது. இப்போது போர்க்குற்றம் என்ற பேரமும் காணாமல் போகிறது. இருதரப்பு சமாதான உடன்பாட்டை மீறியது யார் என்ற விசாரணையைக் கோருவதன் மூலம் புதிய சமாதானத்தை இரு சமதரப்பு ஒப்பந்தத்தில் இருந்து தொடர்ந்திருக்க முடியும். அதைத் தமிழ்த் தலைமைகள் செய்யவில்லை. ஆயுதப் போராட்டம் அதன் அழிவின் பின்னாலும் ஏற்படுத்திக் கொடுத்த பேரத்தை அரசியல் குருடர்களாகக் கைவிட்டார்கள். இனப்படுகொலை என்ற விசாரணையைக் கூட தம் பேரத்தைக் கொண்டு கோரவில்லை. போர்க்குற்றம் என்பதாக அது சுருங்கியது.

இனப்படுகொலை போர் தொடங்குவதற்கு முன்னரும் இருந்தது. பின்னரும் இருந்தது. போர் முடிந்த பின்னும் இருக்கிறது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு இனப்படுகொலையில் இருந்து பேசப்படத் தொடங்க வேண்டும். போர்க்குற்றத்தில் இருந்தல்ல. தமிழர்கள், சிங்கள மக்கள் மீது போர் தொடுக்கவில்லை. போரிடவும் இல்லை. சிறிலங்கா அரசுதான் தமிழர்கள் மீது போர் புரிந்தது. தமிழர்கள் தம் தாயகத்தில் தற்காப்புத் தரப்புத்தான்.

ஆனால் புலிகளைத் தோற்கடிக்க வேண்டுமென்ற சர்வதேச சக்திகளின் நலன் உருவானபோது, சிறிலங்கா அரசு தனக்கு உருவாகிய பேரத்தை நன்கு பயன்படுத்தி தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்தது. இனப்படுகொலையையும் நிகழ்த்தி முடித்தது. தமிழர் தரப்பு தனது பேரப்பலத்தை சரணாதி அரசியலால் என்ன செய்தது? சரி இப்போது, தனக்குத் தேவையற்ற இருதரப்புகளையும் அகற்றி, தேவையான இரு தரப்பை அரசியலில் பேணவேண்டியுள்ளது மேற்கிற்கு. அதில் ஒரு தரப்பான தமிழ் மிதவாத தலைமைத்துவமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அச்சுறுத்தலான சவாலான நிலமை தோன்றினால் கூட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டி இச்சக்திகள் ஏதேனும் செய்தாக வேண்டும் இல்லையா? இங்கே கூட்டமைப்பு மூலம் தமிழர்களுக்குரிய ஒரு பேரத்தைக் கண்டடைய முடியுமல்லவா?

எழுக தமிழை அந்த அர்த்தத்தில் பார்க்க வேண்டும் என்கிறீர்களா?

கண்டிப்பாக! அந்த அர்த்தத்தில் அதனைப் பிரயோகிக்கவும் வேண்டும். தரப்போகும் விளைவில் இருந்து செயலை நிறுக்க வேண்டும். 'எழுக தமிழ்' நிகழ்வின் வெற்றி அரசியல் பெறுமானம் உடையது. கூட்டமைப்பினால் புலிகளின் காலத்திற்குப் பின் இத்தகைய ஒரு பேரணியை எதற்காகவும், திரட்ட முடியவில்லை. அவர்களால் இயலவில்லை. கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்குப் போட்டது புலிகளின் அரசியல் தொடர்ச்சி அவர்கள் என்பதே. ஆனால் தமிழ் மக்கள் பேரவையானது இராணுவ, புலனாய்வு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மக்களை அணிதிரட்டியிருக்கிறது. இது அதன் அரசியல் பிரக்ஞையைக் காட்டுகிறது.

இந்த நிலைமை கூட்டமைப்பினை தமிழ்த் தலைமைத்துவமாகப் பேண நினைக்கும் சக்திகளுக்கு உவப்பற்றது. எனவே இதற்கு எதிராகக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டிய தேவை அவற்றிற்கு அவசியமாகிறது. எப்படிப் பலப்படுத்துவது? கூட்டமைப்பின் கையில் அரசியல் வெற்றியைக் கொடுக்க வேண்டும். கூட்டமைப்பினால் அந்த வெற்றி சாதிக்கப்பட்டதாகக் காட்ட வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களின் செல்வாக்குள்ள தலைமையாக அதனை நீடிக்க முடியும். இந்தப் புள்ளி தான் கூட்டமைப்பு பெற்றுள்ள பேரப்புள்ளி. எழுக தமிழால் பெற்ற பேரப்புள்ளி. இதனைக் கூட்டமைப்பு சரியான முறையில் தமிழ் மக்களின் நலன் கருதிப் பிரயோகிக்க வேண்டும். இது தரக்கூடிய விளைவில் இருந்துதான் 'எழுக தமிழ்' செயலை விளக்க வேண்டும். தமிழ் மக்கள் பேரவையும் மக்களும் உருவாக்கிக் கொடுத்த மற்றுமொரு பேரப்புள்ளி இது.

இது சிங்கள இனவாத சக்திகளைத் தூண்டி நல்லிணக்கத்திற்கு நெருக்கடியை உருவாக்குகிறது என்றும், சர்வதேச சமாதான அனுசரணை சக்திகளை அதிருப்தி கொள்ள வைக்கிறது என்றும் சொல்லப்படும் வாதம் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

எழுக தமிழுக்கு முன்னரும் சிங்கள இனவாத சக்திகள் கூச்சலிட்டபடிதான் இருக்கிறார்கள். இத்தீவின் அரசியலில் இணக்க முயற்சிகளுக்கான சூழல் உருவாகும் போதெல்லாம் இனவாதிகள் கொக்கரிப்பார்கள். இது அவ்வப்போது ஆட்சியில் இருந்து தம்மை மிதவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் கட்சிகளாலேயே தூண்டி விடப்படுவது. அதனைக் காட்டி, அதனைப் பேரமாக்கி உடன்பட்டதை உதறி விடுவதும், ஒப்புக்கொண்டதை ஒத்துக்கொள்ளாமல் விடுவதும் காலம் காலமாக நிகழ்வதுதான். ஐம்பதுகளில் பண்டாரநாயக்காவில் இருந்து 2006இல் சாதாரண சுனாமி பொதுக்கட்டமைப்பு வரை இதுதானே நிகழ்ந்தது. இனவாதிகளைத் தானே பேரப்புள்ளியாக்கிக் கொண்டது அரசு. அறுபது ஆண்டுகளாக அவர்கள் செய்ததைக் கற்றுக் கொண்டேனும் ஒருமுறை நாங்கள் செய்தால் என்ன? இதில் எங்கே குழப்பம் வரப்போகின்றது? பேரச்சக்தி தான் உருவாகும்.

மகிந்த தரப்பை இது தூண்டுவதாக அமைந்து, சிங்கள இனவாதிகளை மேலெழச் செய்யும் காரியமாக 'எழுக தமிழ்' அமைந்துவிட்டதாக வைக்கப்படும் பார்வை தவறு என்கிறீர்களா?

மகிந்த ராஜபக்ச தரப்பை எழுக தமிழ் தூண்டுகிறதா? அரசியல் அறிவைக் கொண்டு பார்த்தால் இதைப்போல விகடமான வாதம் வேறேதுமாக இருக்காது. ராஜபக்சவை அரசியல் களத்தில் தூண்டி வைத்திருப்பதே மேற்குலகின் கூட்டுச்சதிதான்.

மேற்குலகின் கூட்டுச் சதியா? எப்படிச் சொல்கிறீர்கள்?

ஓம். பழையதை நினைவுகூர்ந்து பாருங்கள். ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியுற்ற போது நிலமை எவ்வாறு இருந்தது. மகிந்த ஆட்சியை ஒப்படைப்பாரா இல்லையா என்ற பதட்டம் இருந்தது. ஒப்படைக்காமல் இருப்பது தொடர்பாக மகிந்த தரப்பு ஆலோசித்தமை அம்பலமாகியது. அதேபோல மகிந்த ஒப்படைத்த போது தன்னை சர்வதேச நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்வார்கள். குறைந்த பட்சம் சிறிலங்காச் சிறையில் உடனடியாக அடைப்பார்கள் என்று அஞ்சினார். அவர் அலரி மாளிகைக்கு ரணிலை அழைத்து பாதுகாப்புத் தருமாறு கெஞ்சினார். இப்படி இருந்த நிலையில் ராஜபக்ச அரசியலில் இயங்க முடிகிறது என்றால் அதன் அடிப்படை என்ன என்று சிந்திக்க வேண்டும்.

மகிந்த ராஜபக்சவையும் இனவாதத்தையும் களத்தில் வைத்திருக்கும் வரை பொதுஜன ஐக்கிய முன்னணியை இரண்டாகப் பிளந்து வைத்திருக்க முடியும். அல்லது அதன் பலமான தரப்பான மைத்திரி தரப்பிற்கு அச்சுறுத்தல் கொடுத்தவண்ணம் வைத்திருக்க முடியும். இந்நிலையைப் பராமரிப்பதன் மூலம்தான் மைத்திரியைத் தனித்து இயங்க முடியாத, தனித்துத் தேர்தல்களை எதிர்கொள்ள முடியாத தரப்பாக்கி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்து வைத்திருக்க முடியும். சந்திரிகா சுதந்திரக்கட்சியைக் கைப்பற்றாமல் பார்த்துக் கொள்ள முடியும். மிகப் பலவீனமான உள்ளடக்கமற்ற ஒரு எதிர்க்கட்சியைப் பாராளுமன்றத்தில் வைத்திருக்க முடியும். இத்தகைய சூழ்ச்சிகள் நிறைந்த பெரு நன்மைகளை அறுவடை செய்ய மகிந்தவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஒரு அரசியல் வெளியைக் கொடுத்து வைத்திருப்பது அவசியம். எனவே இது சர்வதேச சக்திகளின் நலன்சார்ந்த கூட்டுச் சதி என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இன்னொரு பக்கத்தில் உருப்படியான அரசியல் தீர்வைத் தராது தவிர்ப்பதற்கு ரணில் அரசாங்கம் இந்த மகிந்த தரப்பைக் காட்டித் தப்பித்துக் கொள்ளும்.

நீங்கள் சுட்டிக்காட்டும் விடயங்கள் ஆர்வமூட்டும் பார்வையாக உள்ளது. த.தே.கூட்டமைப்பு 'எழுக தமிழை' சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று நம்பலாமா?

கட்சிக்கு வெளியே இருந்த விக்னேஸ்வரனை வட மாகாண தலைமைத்துவமாகத் தெரிவு செய்ததில் த.தே.கூட்டமைப்பிற்கு இருந்தது அரசியல் சுயநலம் இல்லாத சாணக்கியம் என்றால், அது இந்த விடயத்திலும் தன்னை அறிவுபூர்வமாக வெளிப்படுத்தும். இல்லையேல் மறுவளமாக இருக்கும்.

10/1/2016 11:33:38 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்