Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் அமைப்பாக உருவாக்க வேண்டும்! 

கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் அமைப்பாக உருவாக்க வேண்டும்! 
யதீந்திரா செவ்வி

 

உங்களின் அரசியல் பிரவேசத்துக்கான காரணம் என்ன?

முதலில் 'அரசியல் பிரவேசம்' என்பதை 'தேர்தல் அரசியல்' என்று திருத்திக் கொள்வோம். ஏனெனில் என்னுடைய அரசியல் பிரவேசம் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒன்று. இதுவரை அரசியலில் ஒரு கருத்துருவாக்கவாதியாக (Opinion maker), விமர்சகனாக செயற்பட்டுவந்த நான், முதன் முதலாக தேர்தல் அரசியலுக்குள் பிரவேசித்திருக்கின்றேன். நான் ஏன் தேர்தல் அரசியலுக்குள் பிரவேசிக்க நேர்ந்தது? இந்தக் கேள்விக்கான பதிலை காண்பதற்கு இன்னொரு கேள்விக்கான பதில் உதவியாக அமைகிறது. அதாவது, நான் ஏன் ஓர் அரசியல் எழுத்தாளனாக இயங்கிக் கொண்டிருக்கிறேன்? நான் சொல்ல நினைப்பதை, எழுதுவதை மற்றவர்களால் எழுத முடியவில்லை. இதன் காரணமாகவே நான் எழுதுகின்றேன். மற்றவர்கள் சொல்லத் தயங்குகின்ற விடயங்களை சொல்ல வேண்டும் என்னும் ஆர்வத்தின் விளைவாகவே நான் தொடர்ந்தும் எழுத வேண்டுமென்னும் உத்வேகத்தையும் பெறுகின்றேன். என்னுடைய தேர்தல் அரசியல் பிரவேசமும் அவ்வாறானதொரு தலையீடுதான்.

நான் அரசியல் ஆய்வுத் துறையில் ஈடுபடத் தொடங்கிய காலத்திலிருந்து திருகோணமலை அரசியலை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வந்திருக்கிறேன். நான் பல்வேறு புதிய விடயங்கள் குறித்து சிந்தித்தும் வந்திருக்கிறேன். இப்படியெல்லாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் நடந்துகொள்ள வேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். ஆனால் நான் எண்ணியதற்கு ஏற்ப எதுவும் நடக்கவில்லை. நகர்ப்புற மக்களுக்கும் கிராமப்புற குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கும் இடையில் எண்ணத்திலும் சிந்தனையிலும் பெரிய வேறுபாடு காணப்படுகிறது. இதற்கு காரணம் நகர்ப்புற மக்கள், தங்களின் வாழ்வாதாரத்திற்காக, பொருளாதார ஏற்றத்திற்காக எந்தவொரு தமிழ் அரசியல்வாதியையும் நம்பியிருக்கவில்லை. ஆனால் பின்தங்கிய பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் தங்களின் எதிர்காலத்திற்காக அவர்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் எதையாவது செய்யமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் அரசாங்கத்தின் அங்கமல்ல. அதன் அங்கமாக நாங்கள் மாறவும் முடியாது. நாங்கள் ஒரு விஞ்ஞாபனத்தின் அடிப்படையில்தான் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம். எங்களுடைய விஞ்ஞாபனத்தில் எந்தவொரு இடத்திலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது மற்றும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பது தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக கூட்டமைப்பால் செயற்படவும் முடியாது.

ஆனால், தங்களின் மூலோபாய நலன்களுக்காக இலங்கையின் மீது அக்கறை செலுத்திவருகின்ற அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பொருளாதார உதவிகளை பெற்று பின்தங்கிய பகுதிகளை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ள முடியும். முயற்சி செய்தால் இது முடியாத காரியமல்ல. இப்படியான பல விடயங்களை கருத்தில் கொண்டுதான் நான் தேர்தல் அரசியலில் பிரவேசிக்க வேண்டுமென்று முடிவுசெய்தேன். நாங்கள் அரசியலை படித்து, அதன் ஆழ அகலங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதால் மட்டும் மாற்றங்களை கொண்டுவந்துவிட முடியாது. மாறாக, நாங்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்கள் நிகழ வேண்டுமாயின் அந்த முயற்சியில் எங்களையும், நாங்கள் ஈடுபடுத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும். இந்த தேர்தலில் போட்டியிடுவதனால், என்னைப் பற்றிய அபிப்பிராயங்கள் மாற்றமடையலாம். நான் சில விமர்சனங்களை எதிர்கொள்ளவும் நேரிடலாம். ஆனால் அதுதான் நான் அரசியலுக்காக எடுக்கும் ரிஸ்க். அந்த ரிஸ்க்கை எடுக்க நான் பின்நிற்கவில்லை. பின்நிற்கவும் மாட்டேன்.

ஒரு அரசியல் ஆய்வாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நீங்கள், அரசியல் பிரவேசத்துக்கான களமாக கூட்டமைப்பை தெரிவு செய்தது ஏன்?

இந்த இடத்திலும் ஒரு திருத்தத்தை செய்ய வேண்டியிருக்கிறது. நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்தேன் என்று ஒரு வரியில் சொல்லுகின்ற போது, அது நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்டேன் என்பது போன்றதொரு கருத்து மயக்கத்தை ஏற்படுத்திவிடலாம். நான் விமர்சித்தேன் என்பது உண்மை. ஆனால் ஏன் விமர்சித்தேன்? நீங்கள் சொல்லுவது போன்றுதான் சிலரும் சொல்லி வருகின்றனர். நான் திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக களமிறஙங்கிய பின்னர் சிலர் இவ்வாறானதொரு கேள்வியை எழுப்பியதாக நான் அறிந்தேன். உங்களுக்கும் அவ்வாறானவர்களுக்குமான என்னுடைய பதில் இதுதான் - நான் கடந்த ஐந்து வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்ய வேண்டுமென்று வாதிட்டு வருகின்றேன். ஏன் அதனைச் செய்தேன்? தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான் எங்கள் முன்னாலிருந்த ஒரேயொரு அரசியல் அமைப்பு. ஆனால் அந்த அமைப்பும் உள்ளுக்குள் முரண்பாடுகளை கொண்டதொரு அமைப்பாகவே தெரிந்தது. விடுதலைப் புலிகள் இருக்கும் வரை தங்களுக்குள் யார் பெரியவர் என்னும் கேள்விகளை எப்போதுமே கேட்காதவர்கள், விடுதலைப் புலிகள் இல்லையென்றவுடன் தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டனர். உள்ளுக்குள் முரண்பாடு இருப்பது கூட பிச்சினையான விடயமல்ல. ஒரு ஜனநாயக அரசியல் அமைப்புக்குள் அப்படியான முரண்பாடுகள் இருப்பது சாதாரணம்தான். ஆனால் இங்கு நடந்ததோ வேறு. உள் முரண்பாடுகள் வெளிப்படையாக தெரிந்தன. இவ்வாறானதொரு சூழலில்தான் நான் கூட்டமைப்பிற்குள் தலையீடு செய்ய வேண்டி ஏற்பட்டது.

இன்று நான் ஒரு வேட்பாளராக களமிறங்கியதும், இவர் முன்னர் கூட்டமைப்பை விமர்சித்தவர்  என்று முணுமுணுப்பவர்கள், நான் எந்த அடிப்படையில் அதனைச் செய்தேன் என்று சொல்லுவதில்லை. ஒருவேளை இது தனிப்பட்ட காழ்ப்புணர்வின் விளைவாகவும் இருக்கலாம். நான் கூட்டமைப்பை விமர்சித்து உண்மை. கடந்த ஐந்து வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சட்ட ரீதியாக பதிவு செய்து, ஒரு வலுவான தமிழ்த் தேசிய அமைப்பாக கட்டியெழுப்ப வேண்டுமென்று வாதிட்டு வந்திருக்கிறேன். இதனை கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் நன்கறிவர். இது தொடர்பில் பல கலந்துரையாடல்களை செய்திருக்கிறேன். கூட்டமைப்பின் தலைவர்கள் சிலரும் முன்னர் இராணுவ ஆய்வாளர் சிவராம் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னால் இருந்ததை போன்று, நீங்கள் ஏன் கூட்டமைப்பை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடக் கூடாது என்றும் கேட்டிருந்தனர். கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் அனைவரும் எனது நண்பர்களாகவும் இருப்பதால் அவர்களுடன், கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் தொடர்ச்சியாக வாதிட்டு வந்திருக்கிறேன். கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதற்கு எவரெல்லாம் தடையாக இருந்தவர்களோ அவர்களை விமர்சிக்க நான் ஒரு போதும் பின்நின்றதில்லை.

நான் இந்த தேர்தலில் போட்டியிடுவதால் என்னுடைய நிலைப்பாடு மாறிவிடப் போவதுமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பாக உருவாக்க வேண்டுமென்னும் என்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் ஒரு மாற்றமும் இல்லை. அது தொடரும். எனவே கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் அமைப்பாக உருவாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என்கின்ற போது, அதன் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு, நான் ஏன் தயக்கம் காண்பிக்க வேண்டும். இதுவரை வெளியில் இருந்து சொல்லியவற்றை இனி உள்ளுக்குள் இருந்தும் சொல்லுவேன். ஒரு வலுவான தமிழ்த் தேசிய அமைப்பு இல்லாமல், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒரு போதும் வெற்றிகொள்ள முடியாது. இதில் எவரும் என்னுடன் முரண்படமாட்டார்கள் என்றே நம்புகிறேன். 

8/16/2015 10:36:29 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்