Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இந்தியா கூட்டமைப்பை அழைத்தமை ஐ.நா.விசாரணையைப் பலவீனப்படுத்தவா?

<p>இந்தியா கூட்டமைப்பை அழைத்தமை ஐ.நா.விசாரணையைப் பலவீனப்படுத்தவா?</p>
அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கத்துடன் ஒரு நேர்காணல்

 

இலங்கை அரசாங்கம் போர் வெற்றிக்கு பின்னர் வருடாவருடம் பாதுகாப்பு மாநாட்டினை நடாத்தி வருகின்றது. இந்தத்தடவையும் நடாத்தியுள்ளது இது பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

இலங்கை அரசாங்கம் வருடாவருடம் நடாத்தும் பாதுகாப்பு மாநாட்டினை இந்த வருடமும் வெற்றிகரமாக நடாத்தி முடித்திருக்கின்றது. 'இலங்கை: எழுச்சிபெறும் நாட்டின் சவால்கள்' என்பதே மாநாட்டின் தலைப்பாகும். இந்தியப் பிரதிநிதிகள் தான் இந்தத் தடவை மாநாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தனர். இலங்கை அரசாங்கமும் இந்தியாவை குளிரவைப்பதிலேயே அதிக கவனம் செலுத்தியிருந்தது. ஜனாதிபதி தனது சர்வதேச  ஊடகவியலாளர் மாநாட்டிலும் இந்தியாவை குளிரவைக்கும் வகையில் நரேந்திர மோடி இலங்கை வருவதை எமது மக்கள் விரும்புகின்றனர் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் புதிய அரசாங்கம் தமிழர் விவகாரம் தொடர்பில் அடக்கி வாசிப்பதும் தமிழ்நாட்டு  எதிர்பார்ப்புகளை கணக்கெடுக்காததுமே இலங்கையின் சந்தோச துள்ளலுக்கு  காரணங்களாகும்.

இந்த மாநாடு தொடர்பாக அரசிற்கு பல இலக்குகள் இருக்கின்றன. அதில் முதலாவது போர் வெற்றியை பறைசாற்றுவது, பயங்கரவாதத்தை வென்றோம் என மார்தட்டுவது  என்பவையாகும். போர் வெற்றியையே அரசியல் முதலீடாக  கொண்டிருக்கும் அரசிற்கு  வெற்றியை தொடர்ந்தும் கொண்டாடுவதும் தொடர்ந்தும் தொடர்ந்தும் நினைவூட்டுவதும்  தவிர்க்கமுடியாத ஒன்று தான். அரசின் இருப்பிற்கு தற்போது ஆதாரமாக இருப்பவை இனவாத  அரசியலும் இராணுவ இறுக்கமும் தான். இவற்றை நியாயப்படுத்துவதற்கும் இவ்வாறான  மாநாடுகள் தேவையாக இருக்கின்றன.

இரண்டாவது, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் விசாரணைக்கு எதிராக ஒரு சர்வதேச வலைப்பின்னலை உருவாக்குவதாகும். மாறிவரும் உலக ஒழுங்கும் இவ் வலைப்பின்னலுக்கு உதவுகின்றது. புதிய உலக ஒழுங்கானது வல்லரசுகளும் பிராந்திய அரசுகளும் செல்வாக்கு செலுத்தும் பல் அரங்க உலக ஒழுங்காக உள்ளது. இந்த உலக ஒழுங்கில் தனக்கான  வெளியைக் கண்டுபிடித்து பலப்படுத்த அரசாங்கம் முனைகின்றது. பிரிக்ஸ் அமைப்பின் தோற்றமும் அதன் முன்னெடுப்புகளும் இன்னோர் வகையில் இலங்கைக்கு உதவுகின்றது. ஏற்கனவே அரசிற்கு ஆதரவான வலைப்பின்னலில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா, சில  மத்தியகிழக்கு நாடுகள், சில ஆபிரிக்கநாடுகள் என்பன உள்ளன.

இந்தியா ஒரு பிராந்திய வல்லரசாக தென்னாசியாவில் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளதால் அதனை தனது வலைப்பின்னலில் சேர்க்கும் முயற்சியில் அரசாங்கம் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. அதனுடன் சேர்த்து ஜப்பானையும் கொண்டுவர முயற்சிக்கின்றது. இந்த  பாதுகாப்பு மாநாடானது அதற்கான ஒன்று கூடலுக்கு வாய்ப்பினைக் கொடுத்திருக்கின்றது என்றே கூறவேண்டும்.

மூன்றாவது, போருக்குப் பின்னரான தனது அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பிரச்சாரப்படுத்துவதாகும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு எதிராக  அரசாங்கத்தினால் தனது பக்க நியாயங்களுக்காக முன்வைக்கக் கூடியவை இந்த  அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மட்டுமே. குறிப்பாக வீதிகள் அமைத்தல், வர்த்தக நிலயங்களை உருவாக்குதல் என்பவற்றையே முன்வைக்கின்றது. பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பவை தொடர்பாக பெரிய முன்னேற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த அபிவிருத்தித் திட்டங்களை பிரச்சாரப்படுத்துவதற்கு ஒரு மேடையாக அரசாங்கம் இந்த பாதுகாப்பு மாநாட்டினை பயன்படுத்தியுள்ளது.

நான்காவது, படைவீரர்களை உற்சாகப்படுத்துவதாகும். போருக்கு பின்னர் கட்டிடவேலை, விவசாயம், கழிவகற்றல் எனப் பல கீழ்மட்ட வேலைகளில் படையினரை அரசாங்கம் ஈடுபடுத்தப்படுகின்றது. இதனால் படையினர் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான  மாநாடுகள் அவர்களின் உளவியல் ரீதியான வீழ்ச்சியை தடுக்க உதவும் என அரசாங்கம் நினைக்கின்றது.

ஐந்தாவது, சர்வதேச நாடுகளுடன் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களை  செய்துகொள்வதாகும். குறிப்பாக படையினருக்கு உயர்மட்ட பயிற்சிகளை வழங்குதல் போன்ற விடயங்களை இந்த மாநாடு மூலம் மேற்கொள்ள முயல்கின்றது.

<p>இந்தியா கூட்டமைப்பை அழைத்தமை ஐ.நா.விசாரணையைப் பலவீனப்படுத்தவா?</p>

ஆறாவது, சிங்கள வாக்கு வங்கியினை அதிகரிப்பதாகும். சர்வதேச மாநாடுகள் சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் பிம்பத்தை உயர்த்தும். பொதுநலவாய மாநாடும் அதனை  உயர்த்தியிருக்கின்றது. அதுவும் வெற்றிப் பெருமிதத்தை பறைசாற்றும் பாதுகாப்பு மாநாடும்  அந்த பிம்பத்தை அதிகம் உயர்த்தும். அமெரிக்கா ஆட்சிமாற்றத்திற்கான நடவடிக்கைகளை   நேரடியாகவே முடுக்கிவிட்ட நிலையில் தனது பிம்பத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம்  அரசிற்கு இருக்கின்றது.

இந்த இலக்குகள் பலவற்றில் அரசாங்கம் வெற்றிகண்டுள்ளது என்றே கூற வேண்டும். அரசாங்கத்தின் போர் வெற்றியையும் வீதித்திட்டங்களையும் புகழாத நாடுகளே இல்லையென்று கூறலாம்.

இங்கே நாம் இன்னோர் விடயத்தையும் கவனிக்க வேண்டும். போர், இராணுவத்தையும் ஓர் அரசியல் சக்தியாக்கியது. அதனுடன் கலந்தாலோசிக்காமல் எந்த சமாதான  செயற்பாட்டிற்கும் போகமுடியாத நிலை போர்க்காலத்தில் இருந்தது. அரசியல் சக்திகள் சர்வதேச உள்நாட்டு நிர்ப்பந்தங்கள் காரணமாக சமாதானம் பற்றிய தீர்மானங்களை  எடுத்தாலும் இராணுவம் ஒரு எல்லைக்கு அப்பால் ஒத்துழைப்பதில்லை.

ரணில் விக்கிரமசிங்க, பிரபாகரன் ஒப்பந்தம் இராணுவம் ஒத்துழைக்காததினால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. அந்த  ஒப்பந்தத்தில் காலகட்டங்கள் பிரிக்கப்பட்டு  ஒப்பந்த கடப்பாடுகள் சுமத்தப்பட்டிருந்தன.

போர் வெற்றிக்கு பின்னர் இராணுவமே அரசாக மாறிவருகிறது. ஆளுநர் பதவிகளுக்கு முன்னாள் இராணுவத்தளபதிகள் நியமிக்கப்படுகின்றனர். வெளிவிவகாரப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். பல முன்னாள் தளபதிகள் வெளிநாட்டுத் தூதுவர்களாகவும் பதவி வகிக்கின்றனர். நகரஅபிவிருத்தி அதிகாரசபை பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுகின்றது. இராணுவத்தினர் நகர நிர்மாணப் பணிகளில் ஈடுபடுகின்றனர். அரசு சாரா அமைப்புகளை பாதுகாப்பு அமைச்சு கட்டுப்படுத்துகின்றது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தலைமைத்துவ பயிற்சியை வழங்குகின்றது. மக்களோடும் இராணுவம் நெருக்கமாகச் செயற்படுகின்றது.

எனவே இந்த மாநாட்டினை வளர்ந்துவரும் இராணுவ ஆட்சியின் ஓர் அங்கமாகவும் பார்க்கவேண்டும்.

இலங்கையின் பாதுகாப்பு மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது பற்றி தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியிருந்தது. ஆனாலும் இந்தியா கலந்து கொண்டது. தனது பிரதிநிதியாக  தமிழ்த்தேசிய எதிர்ப்பாளரும் ஜனாதிபதியின் நண்பருமான சுப்பிரமணிய சுவாமியை அனுப்பியிருந்தது. இந்தியாவின் இந்த பங்கேற்பை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தியா முன்னைய வருடங்களில் நடைபெற்ற மாநாடுகளில் கலந்துகொண்டது போலவே இந்தத்தடவையும் கலந்துகொண்டது. இந்தத்தடவை அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டமை தான் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. அதுவும் தமிழ்த் தேசிய எதிராளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நண்பருமான சுப்பிரமணியசுவாமி இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டமை தான் அதிகளவில் பேசுபொருளாக்கியுள்ளது.

பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களில் இந்தியா அரசியலைக் கணக்கெடுப்பதில்லை. அரசியல் எதிர்ப்புகளையும் பொருட்படுத்துவதில்லை. தமிழ்நாட்டில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சிகள் அளிப்பது தொடர்பாக எதிர்ப்புக்கள் வந்தபோது, ஒன்றில் இரகசியமாக பயிற்சிகளைக் கொடுத்தது அல்லது தமிழ்நாட்டிற்கு வெளியேயுள்ள மாநிலங்களில் அதனைக் கொடுத்தது. தமிழக எதிர்பார்ப்புகளுக்காக ஒருபோதும் பாதுகாப்புத் தொடர்புகளை கைவிடவில்லை.

காங்கிரஸ் அரசாங்கம் தி.மு.கவின் தயவில் தங்கியிருந்தபோதே இந்தியா இந்த பயிற்சிகளை வழங்கத் தவறவில்லை. தற்போதைய மோடியின் அரசாங்கம் தமிழ்நாட்டின் எந்தக் கட்சிகளிலும் தங்கியிருக்கவில்லை. இதனால் அழுத்தங்களைப் பற்றி பெரியளவிற்கு கவலை கொள்ளாது தன்னுடைய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

பொதுவாகவே வெளிவிவகாரங்களில் மாநில அரசுகள் தலையிடக்கூடாது என்ற பொதுக்கருத்து தமிழ்நாட்டிற்கு வெளியே வலிமையாக உண்டு. மேற்கு வங்காளம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அதுவும் பாதுகாப்பு விடயங்களில் இக்கருத்து அதிகம் உண்டு. எனவே இந்த பொதுக்கருத்தும் மத்தியஅரசின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும். பாதுகாப்புடன் தொடர்பில்லாத மாநில முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு வெளி மாநிலங்களிலும் ஆதரவு கிடைக்கலாம்.

ஜெயலலிதாவையும் பிரதமரையும் ஆபாசமாக தொடர்புபடுத்தி இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட செய்திக்கு பலத்த எதிர்ப்பினை தமிழ்நாடு கட்சி வேறுபாடில்லாமல் காட்டியது. பாராளுமன்றத்தின் இரு சபைகளையும் செயற்பட விடாது தமிழ்நாட்டு பிரதிநிதிகள் தடுத்தனர். இறுதியில் மத்திய அரசாங்கம் விருப்பமில்லாத நிலையிலும் இந்தியாவுக்கான இலங்கை தூதுவரை அழைத்து கண்டனம் தெரிவித்தது.

பொதுவாக பாதுகாப்பு மாநாடு என்பதற்கப்பால் இலங்கை இந்தியாவின் பாதுகாப்பு எல்லைக்குள் இருப்பதாக இந்தியா கருதுவதால் சிறப்புக் கவனம் உண்டு. இலங்கைக்குள் இந்தியாவிற்கு எதிரான சக்திகள் காலூன்றினால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இடைஞ்சல் ஏற்படும் என அது நினைக்கின்றது.

அண்மைக்காலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இலங்கையை இடைத்தங்கு முகாமாக பயன்படுத்துகின்றனர் என்ற செய்திகள் வருவதால் இலங்கை தொடர்பாக இரட்டிப்பு கவனம் இந்தியாவிற்கு உண்டு.

இவை தவிர இந்தியா ஒரு பிராந்திய வல்லரசாகவே தன்னைக் கருதுகின்றது. இதனால் பாகிஸ்தான் மட்டுமல்ல அமெரிக்கா தலமையிலான மேற்குலகமோ சீனாவோ இலங்கையில் செல்வாக்கு செலுத்துவதை இந்தியா விரும்புவதில்லை. பாரதீய ஜனதாக்கட்சி ஒரு தீவிர இந்திய தேசியவாதக் கட்சியாக இருப்பதால் இந்த விருப்பமின்மை காங்கிரஸ் கட்சியை விட அதிகமுண்டு. அது பாதுகாப்பாக இருந்தாலும் சரி, பொருளாதாரமாக இருந்தாலும் சரி (பொருளாதார விடயங்களில் சர்வதேச விழுமியங்களுக்காக சற்று அடக்கிவாசித்தாலும்) ஒரே நிலைப்பாடுதான். பாதுகாப்பு விடயங்களில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடம்கொடுக்காது.

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதுவராலயத்தில் கடமையாற்றிய உளவுப்பிரிவு அதிகாரியை உடனடியாக வெளியேற்றுமாறு இந்தியா கட்டளையிட்டது. இலங்கையும் அதனை ஏற்றுக்கொண்டு உடனடியாக வெளியேற்றியது. சீனா திருகோணமலையில் விமானங்கள் பழுதுபார்க்கும் நிலையம் அமைக்க முயற்சித்த போது வெளிநாட்டமைச்சர் பீரிசிடம் இந்தியா அது தொடர்பாக விளக்கம் கேட்டது.

பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்கா சீனாவினைவிட, பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்பாகத்தான் இந்தியா மிகவும் கவனமாக இருக்கின்றது. இதற்காகத்தான் இலங்கையிலுள்ள இந்தியத் தூதுவராலயத்தில் இராணுவ அதிகாரி ஒருவரையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

புதிய மோடி அரசாங்கம் கொழும்பினை தன்பக்கம் வளைக்கவே விரும்புகின்றது. அதற்காக தமிழ்த்தேசிய வாதத்தை அழிக்கவும் தயாராக உள்ளது. தமிழ்நாட்டு அழுத்தங்களையும் கணக்கெடுக்காது விடுகின்றது.

ஜெனிவாவில் இந்தியா நடுநிலை வகிப்பது என எடுத்த தீர்மானம், இலங்கை- இந்திய உறவுக்கு பலம் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சின்கா இலங்கை - இந்திய நட்புறவுச் சங்கத்தில் ஆற்றிய உரை, இந்தியாவின் இதயங்களில் இலங்கைக்கு எப்போதும் தொடர்ந்து விசேட இடமுண்டு என சுதந்திரதின விழாவில் ஆற்றிய உரை, ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரும் தமிழ்த்தேசிய எதிர்ப்பாளருமான சுப்பிரமணிய சுவாமியை அரசாங்கம் பிரதிநிதியாக அனுப்பிவைத்தமை போன்றன மோடி அரசாங்கத்தின் அணுகுமுறையினை தெளிவாக கோடிட்டுக் காட்டுகின்றது.

இலங்கை தொடர்ந்தும் நழுவிச்செல்வதும் தமிழ்நாட்டின் எழுச்சியும் தான் தற்போதைய இந்தியாவின் முயற்சிகளை தடுத்து நிறுத்தும் கருவிகளாக இருக்கும்.

அமெரிக்கா தமிழர் விவகாரத்தை பயன்படுத்தி ஆட்சி மாற்றம் ஒன்றினைக் கொண்டுவர முயற்சிக்கின்றது. இந்தியா அதனை பயன்படுத்தி இலங்கையை தனது செல்வாக்கின் கீழ் கொண்டுவர முயற்சிக்கின்றது. இரண்டு தரப்பின் அணுகுமுறையினாலும் தமிழ் மக்களே பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முகம்கொடுக்க தமிழ் மக்கள் என்ன செய்யலாம்?

இங்கே ஒன்றை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். நாடுகள் குறிப்பாக வல்லரசுகள் தங்கள் நலன்களிலிருந்தே செயற்படும். அதற்காக ஒரு மக்கள் கூட்டத்தை பயன்படுத்துவதற்கோ அழிப்பதற்கோ அவை ஒருபோதும் தயங்கமாட்டாது. அரசியல் அறநெறிகள் எல்லாம் அவற்றிற்கு இரண்டாம் பட்சமான விடயங்கள். அவை தமது நலன்களிலிருந்து செயற்படும் போது தமிழர் தரப்பும் தனது நலன்களிலிருந்தே செயற்பட வேண்டும். அமெரிக்காவும் இந்தியாவும் தமது நலன்களுக்காக தமிழர் விவகாரத்தையே பயன்படுத்துகின்றன.

இது மிகவும் வெளிப்படையானது. அதற்காக திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலை நகர்த்துகின்றன. நாமும் அந்த நிகழ்ச்சிநிரல்களுக்குள் எமது நலன்களைச் சேர்க்க முயற்சிக்க வேண்டும். இதற்கு எமக்கென ஒரு வலுவான அரசியல் நிலைப்பாடு இருக்க வேண்டும். அந்த அரசியல் நிலைப்பாடு எமது மக்களின் தேவைகளிலிருந்து எழுந்ததாக, எமது மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்கவேண்டும். வெறுமனே அமெரிக்காவினதும் இந்தியாவினதும் நிகழ்ச்சிநிரல்களுக்கு பின்னால் இழுபட்டுச்செல்வதாக எமது அரசியல் இருக்கக்கூடாது. உண்மையில் இழுபட்டுச்செல்லும் அரசியலைச் செய்வதற்கு ஒரு தலைமை தேவையில்லை. அது அடிமைக்கூட்டங்கள் செய்கின்ற வேலை.

துரதிஷ்டவசமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அந்த அரசியலையே செய்கின்றது. தமிழ்த்தரப்பு ஒத்துழைக்காவிட்டால் ஒருபோதுமே அமெரிக்காவினாலும் இந்தியாவினாலும் தமது நலன்களை அடைந்து கொள்ளமுடியாது.

சர்வதேச மட்டத்தில் பணிகளை நகர்த்துவதற்கு தமிழ் மக்களுக்கென தனியான வெளிநாட்டுக்கொள்கை அவசியம். இங்கு சட்டரீதியான அரசுகளுக்கு மட்டும் தான் வெளிநாட்டுக்கொள்கை அவசியம் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் அவசியம்.

சொந்தக்காலில் நின்று சுயாதீனமாக செயற்படுகின்ற அரசியல் இயக்கமில்லாமல் இந்தப்பணிகளை ஒருபோதும் வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியாது.

நீங்கள் இப்படிக் கூறினாலும் வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ் மக்களினது நிகழ்ச்சி நிரலைச் சேர்க்க பல்பக்க அழுத்தங்கள் தேவை. அந்த பல்பக்க அழுத்தங்களுக்கான வாய்ப்பு தமிழ் மக்களுக்கு இருக்கின்றதா?

சவால்கள் இருக்கும் போது வாய்ப்புகளும் இருக்கும் என்பதே வரலாறு. தமிழ்நாடும் டயஸ்போறாவும் தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய பலம். இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க தமிழ்நாடும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திற்கு அழுத்தம். டயஸ்போறாவும் தமிழ் மக்களுக்கு மிகப்பெரியளவில் உதவும்.

தமிழ் நாட்டில் அண்மைக்காலமாக இரண்டு பெரிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று தமிழர் விவகாரம் அங்கு பொதுக்கருத்தாக வளர்ச்சியடைந்துள்ளது. அதனை நிராகரித்து செயற்படுவதற்கு எந்த கட்சியும் அங்கு தயாராக இல்லை.

இரண்டாவது தமிழ்நாட்டின் படித்த மத்தியதர வர்க்கம் எங்கள் விவகாரத்தில் வலுவான கவனத்தைக் குவிக்கத் தொடங்கியுள்ளது. அதில் டாக்டர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் என பலர் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் வெறும் உணர்ச்சி நிலையில் அல்லாது அறிவு நிலையில் எமது விவகாரத்தை அணுகத் தொடங்கியுள்ளனர். தங்களால் இந்த வளர்ச்சியடைந்த போராட்டத்தை பாதுகாக்க முடியவில்லையே என்ற குற்றவுணர்வு அவர்களிடம் ஆழமாக உள்ளது.

இவர்களினால் வலிமையான அழுத்தங்களை மத்திய அரசிற்கு கொடுக்கமுடியும். ஏற்கனவே பல அழுத்தங்களைக் கொடுத்து அவர்கள் வெற்றியும் கண்டிருக்கின்றனர். இரண்டு தடவை ஜெனிவாவில் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்கச் செய்தனர். திராவிட முன்னேற்றக்கழகத்தினை காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறச் செய்தனர். பொதுநலவாய மாநாட்டிற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கினை செல்லவிடாது தடுத்தனர். ஆனால் விக்கினேஸ்வரன் கணவன்-மனைவி உறவிற்குள் தமிழ்நாடு தலையிடத்தேவையில்லை என அறிவித்ததினால் அவர்களது செயற்படுவேகம் தணிந்தது என்பது உண்மையே. இதனால் தான் மூன்றாவது ஜெனிவாவில் இந்தியா நடுநிலை வகித்தபோது அதனைத் தடுக்க அவர்களினால் முடியவில்லை.

அடுத்தது டயஸ்போறாவின் பலம். யார் என்னதான் கூறினாலும் சர்வதேச விசாரணை ஒன்று நடைபெறுவதற்கான சூழலை உருவாக்கியதில் பெரும்பங்கு டயஸ்போறாவிற்கே உண்டு. பலர் தமது சொந்தக் குடும்பங்கள், சொந்த வேலைகள் எல்லாவற்றையும் கவனிக்காமல் முழுநேரமும் சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்குவதற்காக செயற்படுகின்றனர். அவர்களிடையே பல பிளவுகள்  உண்டு என்பது உண்மை தான். ஆனாலும் அவர்கள் செயற்படுகின்றனர்.

இந்த இருதரப்பும் வினைத்திறனுடன் செயற்படுவது தாயகத்திலுள்ள அரசியல் இயக்கத்தின் பலத்திலேயே தங்கியுள்ளது. தாயகத்தில் வலுவான அரசியல் நிலைப்பாட்டுடன் அரசியல் செயற்பாடு இடம்பெற்றால் தமிழ்நாடும், டயஸ்போறாவும் பெரிய பிளவுகள் இல்லாமல் வேகமாகவும் வினைத்திறனுடனும் செயற்படும். வழிகாட்டல்கள் உண்மையில் தாயகத்திலிருந்தே அவர்களுக்கு செல்லவேண்டும். நிலமும், புலமும், தமிழகமும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்திற்குள் வருமானால் தமிழ்த்தேசிய அரசியலின் எழுச்சி உலகம் தழுவிய வகையில் வீறுகொண்டதாகவே வளர்வதற்கு வாய்ப்புக்கள் உருவாகும்.

இவற்றைவிட தமிழ் மக்களின் விவகாரம் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாகியிருப்பதனால் உலகெங்கும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் எமக்கு பக்கபலமாக இருப்பர்.

அண்மைக்காலமாக இந்தியா இலங்கை அரசினைத் தனக்கு சார்பாக திருப்பும் முயற்சியிலேயே இறங்கியிருந்தது. அதற்காக தமிழ்த்தேசியவாதக் கோரிக்கைகளை கைவிட அழுத்தம் கொடுத்திருந்தது. தற்போது திடீரென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை அழைத்து பேசியிருக்கின்றது. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என நான் நினைக்கின்றேன். அதில் முதலாவதும் பிரதானதுமான காரணம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணையை பலவீனப்படுத்துவதே. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை விசாரணைச் செயற்பாடுகள் தொடர்பாக பல புதிய விதிகளையும் சேர்த்துள்ளது. விசாரணைக் காலப்பரப்பினை அதிகரித்துள்ளது. இந்தக் காலத்திற்கு முன்னர், பின்னரான விடயங்களும் பதிவுசெய்யப்படும் எனக் கூறியுள்ளது. விசாரணைச் செயற்பாட்டிற்கு வெளிநாட்டு அரசாங்கங்களின் ஒத்துழைப்பையும் பெற இருக்கின்றது. ஆதாரங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

ஐ.நா மனித பேரவை முயற்சிகளுக்கும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் வேண்டுகோள்களுக்கும் இலங்கை செவிசாய்க்காததினால் அது தனது செயற்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. தனது முயற்சிகளுக்கு இலங்கை இணங்காததினால் அமெரிக்கா தலமையிலான மேற்குலகமும் இதற்கு ஆதரவளிக்கின்றது. நரேந்திர மோடி அரசாங்கம் மேற்குலகிலிருந்து சற்று விலகிச் செல்வதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

இந்தியா இரண்டு காரணங்களுக்காக ஐ.நாவின் கடுமையான விசாரணைகளை விரும்பவில்லை. ஒன்று சர்வதேச விசாரணையை துரும்பாகப் பயன்படுத்தித்தான் இலங்கையை தனக்கு சார்பாக வளைக்க முயற்சிக்கின்றது. விசாரணை கடுமையாகிச் செல்லுமானால் துரும்பைப் பயன்படுத்துவதும் கடினமாகிவிடும். இரண்டாவது, சர்வதேச விசாரணை மேற்குலகின் குறிப்பாக அமெரிக்காவின் தலையீட்டை இலங்கையில் அதிகரிக்கும். இதனை இந்தியா விரும்பவில்லை. அதுவும் மோடி அரசாங்கம் பிரிக்ஸ் அமைப்பினை முன்னிலைப்படுத்த முற்படுவதால் இதனை அறவே விரும்பவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடமிருந்து எழுந்த நிர்ப்பந்தங்கள் காரணமாக சாட்சியங்களை வழங்குவதற்கான ஒழுங்குகளைச் செய்ய முயல்கின்றது. சுமந்திரன் இது விடயத்தில் பல்டி அடித்தாலும் கூட்டமைப்பிற்கு ஒரு கட்டாயம் தோன்றியுள்ளது. அதுவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பகிரங்கமாக சாட்சியங்களை திரட்டும் முயற்சியில் இறங்கிய நிலையில் கூட்டமைப்புக்கு இது தவிர்க்கமுடியாதது. உள்நாட்டிலிருந்து வரும் சாட்சியங்கள் விசாரணையின் நம்பகத்தன்மையை பலப்படுத்தும் என்பதால் இந்தியா அதனை தவிர்க்க முயற்சிக்கலாம். கூட்டமைப்பிடம் இதுபற்றி அடக்கி வாசிக்கும் படி கூறியிருக்கலாம்.

கூட்டமைப்பினை இந்தியா அழைத்ததற்கு இரண்டாவது காரணம், இலங்கைஅரசினை சற்று அச்சுறுத்துவதாகும். இலங்கைக்கு பிடித்த சுப்பிரமணிய சுவாமியை தூது அனுப்பியே மகிந்தர் மசியவில்லை. இலங்கை மசியாவிட்டால் கூட்டமைப்பினை நாம் பலப்படுத்துவோம் என்ற செய்தியை வழங்க இந்தியா முயற்சித்திருக்கலாம். முகத்திற்கு நேரடியாகவே தனது சிபார்சில் உருவாக்கப்பட்ட 13வது திருத்தத்தின்படி பொலிஸ் அதிகாரத்தை வழங்கமாட்டேன் என மகிந்தர் கூறியிருப்பது இந்தியாவிற்கு கடும் சினத்தினை உருவாக்கியிருக்கலாம்.

மூன்றாவது தமிழ்நாட்டை சிறிதளவாவது திருப்திப்படுத்துவதாகும். இலங்கை அரசாங்கத்தின் பச்சை ஆக்கிரமிப்புக்கள், வடமாகாணசபையை செயற்படவிடாமை என்பன தமிழகமக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. அதுவும் இவற்றை கணக்கெடுக்காமல் தமிழ்த்தேசியத்திற்கு மட்டுமல்ல, திராவிட அரசியலுக்கே எதிரியான சுப்ரமணிய சுவாமியை மகிந்தரிடம் தூது அனுப்பியமையும், அவர் தமிழ்நாட்டின் முக்கியத்துவத்தை இழிவுபடுத்தியமையும் தமிழ்நாட்டு மக்களின் அதிருப்தியை இரட்டிப்பாக்கியுள்ளது. இந்தஅதிருப்தியினால் அதிகம் நெளிந்தவர்கள் தமிழ்நாட்டின் பாரதீய ஜனதா கட்சியினர் தான்.

எனவே தமிழ்நாட்டை ஓரளவிற்காவது திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்காகவும் கூட்டமைப்பினரை அழைத்திருக்கலாம்.

நான்காவது, அரசியல் தீர்வை 13வது திருத்தத்திற்குள் தொடர்ந்தும் முடக்கிவைத்திருப்பதாகும். வட மாகாணசபையின் தோல்வியினால் 13வது திருத்தம் எந்தவகையிலும் உதவப்போவதில்லை என்பதை தமிழ்மக்கள் அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளனர். அதனைக் கைவிடவேண்டும் என்ற அழுத்தமும் கூட்டமைப்புக்கு வரத்தொடங்கியுள்ளது. இதனால் கூட்டமைப்பினரும் பகிரங்கமாக பல இடங்களில் 13வது திருத்தம் தோல்வியடைந்துவிட்டது. அது தமிழ்மக்களின் அபிலாசைகளைத் தீர்க்கப்போவதில்லை எனக் கூறிவருகின்றனர்.

ஆனால் இந்தியாவினால் 13வது திருத்தத்தினை ஒருபோதும் கைவிடமுடியாது. அது இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் வழியாக வந்தது. இவ் ஒப்பந்தம் தான் இலங்கை மீது செல்வாக்குச் செலுத்துவதற்கு இந்தியாவிற்குள்ள ஒரேயொரு சர்வதேச ஆவணம். கூட்டமைப்பினை இதற்குள்ளேயே வைத்திருக்கத்தான் இந்தியா விரும்புகின்றது. இந்திய வெளிநாட்டமைச்சின் செயலாளர் கூட்டமைப்பினருக்கு இதனை நேரடியாகவே சொல்லிவிட்டார். நரேந்திர மோடியும் 13வது திருத்தத்தினையே வலியுறுத்தியிருக்கின்றார்.

ஐந்தாவது, தமிழ் அரசியலை தனதுசெல்வாக்கு மண்டலத்திற்கு வெளியே செல்லாமல் தடுத்து வைத்திருப்பதாகும். அண்மைக்காலமாக மோடி அரசாங்கத்தின் அணுகுமுறை தமிழ் மக்களை வெகுவாகவே அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. அந்த அதிருப்தி கூட்டமைப்பு மீதும் பாயத் தொடங்கியுள்ளது. இரண்டாவது மருமகன் வந்த பின்னர் தான் மூத்த மருமகனின் அருமை தெரியும் என்ற முதுமொழிக்கிணங்க காங்கிரஸ் பரவாயில்லை என்று கூட சிலர் பேசத்தொடங்கியுள்ளனர்.

எனவே தமிழ் அரசியலை தொடர்ந்தும் தனது செல்வாக்கின் கீழ் வைத்திருப்பதற்காகவும் கூட்டமைப்பை அழைத்திருக்கலாம்.

நேர்கண்டவர்: நந்தன்         

8/30/2014 4:30:14 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்