Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இந்திய - இலங்கை ஊடாட்டத்தில் தமிழ்மக்கள் வெறும் கருவி மட்டும்தானா?

இந்திய - இலங்கை ஊடாட்டத்தில் தமிழ்மக்கள் வெறும் கருவி மட்டும்தானா?
முத்துக்குமார்

 

மிகப் பெரும் ஆரவாரத்துடன் இலங்கைக்குப் பயணம் செய்த இந்தியப் பாராளுமன்றக்குழு நாட்டிற்குத் திரும்பிவிட்டது. கடந்த முறை வந்த தமிழக பாராளுமன்றக்குழுவின் அனுபவம் காரணமாக தமிழ்மக்கள் இந்தத்தடவை பெரிய எதிர்பார்ப்புகள் எதனையும் வைத்திருக்கவில்லை. தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க வும், அ.தி.மு.க வும் தமது உறுப்பினர்களை வாபஸ் பெற்றதுடன் இருந்த கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்புகளும் இல்லாமல் போய்விட்டன.

எனினும் பாரதீய ஜனதா கட்சியின் பிரமுகர் சுஸ்மா ஸ்வராஜ் குழுவிற்கு தலைமை தாங்கியதனால் சிலரிடம் அவர் தமிழ்மக்களுக்குச் சாதகமாக நடந்துகொள்வார் என்கின்ற நப்பாசை இருந்தது. அதுவும் பொய்த்துப் போய்விட்டது. மிக உயர்ந்த சான்றிதழை மகிந்தர் அரசிற்கு அவர் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். தி.மு.க, அ.தி.மு.க உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தால் தமிழக அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக சில உண்மைகளைக் கூறியிருப்பர். அதற்கும் வாய்ப்புக்கள் இல்லாமல் போய்விட்டது.

மகிந்தர் அரசு பாராளுமன்றக் குழுவை அனுப்புமாறு கேட்டதும், இந்திய அரசு அனுப்பியதும் தமிழ்மக்களின் நலன்களுக்காகவல்ல. தத்தம் நலன்களுக்காகவே. இந்திய மத்திய அரசு பல்வேறு அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவே ஜெனிவாப் பிரேரணையை ஆதரித்தது. தற்போது இலங்கையை தாஜா பண்ண விரும்புகின்றது. அதற்காகவே மேற்குலகின் அழுத்தத்தை குறைத்து இலங்கையை அரசினைப் பாதுகாப்பதும் அதன் நோக்கங்களில் ஒன்று.

இலங்கைக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் இந்தியா கவசம் போல நின்று பாதுகாப்பது வழக்கம். இந்தத் தடவையும் அதனை செய்திருக்கின்றது. ஜெனிவாப் பிரேரணையை ஆதரித்ததன் மூலம் இலங்கை தொடர்பாக எதிர்ப்பு அரசியல் என்ற கதவினை இந்தியா திறந்துவிட்டாலும் ஆதரவுக் கதவினூடாகவே தனது கருமங்களை ஆற்றி வருகின்றது. இலங்கையை எப்படியாவது வளைத்துப் பிடிக்கலாம் என்ற நப்பாசை இன்னமும் இந்தியாவிற்கு இருப்பதுபோலவே தெரிகின்றது.

ஏற்கனவே திறந்த கதவுகளை அவசரப்பட்டு மூடுவதில்லை என்பதும் பல கதவுகளைத் திறந்துவிடுவது என்பதும் நாடுகளுக்கிடையிலான இராஜதந்திரத்தில் ஒரு மரபுதான். யதார்த்தம் எக்கதவினை முன்னிலைப்படுத்துகின்றது என்பதைப் பொறுத்தே எதிர்காலத்தில் நகர்வுகள் இடம்பெறும்.

பெரிய நாடுகள் வெளியுறவுக் கொள்கையினை அடிக்கடி மாற்றுவதில்லை. இதனால் மாறி மாறி வருகின்ற ஆட்சியாளர்கள் இவ்விடயத்தில் வெளியுறவுப் பிரிவின் கொள்கை வகுப்பாளரின் பின்னால் இழுபட்டுச் செல்வதைத் தவிர வேறு எவற்றையும் செய்வதில்லை. தீர்க்கமான விடயங்களில் மட்டும் அரசியல் தலைமைகள் திருப்பங்களை ஏற்படுத்துவது உண்டு.

சுஸ்மா ஸ்வராஜ்யும் இந்தப்போக்கிற்கு தான் விதிவிலக்கில்லை என்பதையே காட்டியிருக்கின்றார். தன்னுடைய நடத்தை அடுத்த தடவை பாரதீய ஜனதாக் கட்சி அதிகாரத்திற்கு வரும்போது அதற்கு சங்கடங்கள் தருவதாக இருக்கக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்திருக்கிறார்

தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்தக்குழு பற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாமைக்கு பல காரணங்கள். அதில் ஒன்று இந்திய வெளியுறவுக் கொள்கை. இந்தியாவிற்கு முழு இலங்கைத்தீவும் தேவையாக இருப்பதனால் சிங்களதேசமா? தமிழ்த்தேசமா? என்ற நிலை வரும்போது அது சிங்கள தேசத்தின் பக்கமே இருக்கும். இது தமிழ் மக்களுக்கும் நன்றாகத் தெரியும். அநுபவபூர்வமாக இந்த உண்மையை அவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆனாலும் சிங்கள தேசம் முழுமையாக இந்தியாவைப் புறக்கணிக்கும்போது இந்தியாவிற்கு தமிழ் மக்கள் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு தெரிவில்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும். அக்காலம் வரும்வரை அவர்கள் பொறுமை காக்கின்றனர்.

இந்திய - இலங்கை ஊடாட்டத்தில் தமிழ்மக்கள் வெறும் கருவி மட்டும்தானா?

இரண்டாவது முன்னைய தமிழகப் பாராளுமன்றக்குழுவின் வருகை கொடுத்த அனுபவம். அரசின் விருந்தினர்களாக வந்த அவர்கள் அரசினைப் புகழ்ந்து விட்டே சென்றனர். திருமாவளவன் போன்ற ஒரு சிலர் மட்டுமே அதற்கு விதிவிலக்கு. இந்தத் தடவையும் இதுதான் நடைபெறும் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும்.

மூன்றாவது பயண நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தவர்கள் இலங்கை ஆட்சியாளர்களே. இந்தியத் தூதரகத்திற்கு இதில் பெரிய பங்கு இருக்கவில்லை. மெனிக்பாம் முகாமுக்கு செல்வதற்கு மட்டும் இந்தியத் தூதரகம் அனுமதி கேட்டிருந்தது. அதுவும் பெருந்தொகையானோர் முகாமில் இல்லை என்பதை அறிவிப்பதற்காகவே. ஆனாலும் மக்களின் பிரச்சினைகளைக் கொஞ்சமாவது வெளிக்கொண்டு வந்தது இந்த அகதி முகாம் பயணம் மட்டுமே.

குழுவின் பயணமும் சுயாதீனமாக இடம்பெற்றிருக்கவில்லை. படையினரும், புலனாய்வுப் பிரிவினரும் சூழவே இடம்பெற்றிருந்தது. அதனால் குழுவினைச் சந்தித்த மக்கள் கூட மனந்திறந்து பேச முன்வரவில்லை. மெனிக் பாம் முகாம் மக்கள் மட்டும் தவிர்க்க முடியாமல் சில உண்மைகளைக் கூற முன்வந்தனர்.

நான்காவது, தமிழ்த் தரப்பிடம் குறிப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் இந்த விவகாரம் தொடர்பாக சொந்த நிகழ்ச்சிநிரல் எதுவும் இருக்கவில்லை. இந்தியத் தூதரகத்துடன் கலந்தாலோசித்து வலுவான நிகழ்ச்சிநிரல் ஒன்றை அவர்கள் தயாரித்திருக்கலாம். அதற்கான துணிவோ, விருப்பமோ சம்பந்தன் தலைமையிடம் இருக்கவில்லை. இதுவிடயத்தில் சம்பந்தன் தலைமையிடம் இருந்ததெல்லாம் தங்களின் நிலைப்பாட்டிற்கு மாறான கருத்துக்கள் இந்தியக் குழுவினரை சென்றடையாமல் இருக்க வேண்டும் என்பதே! இதற்காகத்தான் குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தபோது சம்பந்தனும் பயணம் செய்திருக்கிறார்.

உண்மையான தமிழ் சிவில் சமூகம் வெளியில் இருக்கத்தக்கதாக தமிழ் சிவில் சமூகம் என்ற பெயரில் ஒரு குழு கலந்து கொண்டதாகவும் தகவல். இதனையும் திட்டமிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே மேற்கொண்டிருந்தது. தற்போது கூட்டமைப்புக்கு மிகப்பெரும் சவால் தமிழ்ச் சிவில் சமூகமே. அதனை உடைப்பதில் அல்லது தனிமைப்படுத்துவதில் கூட்டமைப்பு மும்முரமாக ஈடுபடுவதாகவே தகவல். தமிழ் சிவில் சமூகத்தை சந்திப்பதில் இந்தியாவும் அக்கறை காட்டவில்லை. தமிழ் சிவில் சமூகமும் அதனை விரும்பவில்லை. போலிச் சந்திப்புக்கள் பயன்கள் எவற்றையும் தராது என அவர்கள் சிந்தித்திருக்கக் கூடும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இருபிரிவுகளாகச் சந்தித்து தமது ஒற்றுமையின் சீத்துவத்தை பகிரங்கப்படுத்தவும் தவறவில்லை. ஆனந்தசங்கரி தலைமையில் ஒரு பிரிவினரும், சம்பந்தன் தலைமையில் ஒரு குழுவினரும் இந்தியக் குழுவினரைச் சந்தித்திருக்கின்றனர். இருதரப்பிற்குமிடையே கொள்கை வேறுபாடுகள் எதுவும் கிடையாது. அனைவரும் இந்தியாவின் சேவகர்களே! அப்போ இரு சந்திப்பு ஏன்? பதவிச் சண்டை தவிர வேறு எதுவும் இங்கில்லை.

தமிழ்க் கட்சிகளில் இந்தியச் செல்வாக்கிற்கு வெளியே உள்ள கட்சி கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே. இக் கட்சியை சந்திப்பதில் இந்தியக்குழுவினர் அக்கறை காட்டவில்லை. புது டில்லி மாநாட்டு அனுபவம் காரணமாக இருக்கலாம். கூட்டமைப்பும் இதனை விரும்பியிருக்காது. சில வேளைகளில் இவர்களுடனான தொடர்புகளுக்கு வேறு பொறிமுறைகளை இந்தியா வைத்திருக்கலாம். எதிர்ப்பு அரசியல் என்ற கதவினையும் இந்தியா திறந்து வைத்திருப்பதனால் இவர்களுடனான உறவுகளை முற்றாக நிராகரிக்க அதனால் முடியாது. இப்போது இந்தியாவின் பயணம் ஆதரவு அரசியல் என்ற கதவினுடாகவே நடைபெறுகின்றது. எதிர்காலத்தில் பயணங்களின் திசைகள் மாறும்போது இந்தியாவின் பார்வையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முக்கியத்துவம் பெறலாம்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரையும், தமிழ் சிவில் சமூகத்தினரையும் இந்தியக்குழுவினர் சந்தித்திருந்தால் இந்தியாவின் இலங்கை தொடர்பான நிலைப்பாடுகளுடன் முரண்படுகின்ற கூட்டம் ஒன்றும் இங்கு இருக்கின்றது. என்பதை அது அடையாளம் கண்டிருக்கும்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இலக்கும் கொள்கைகளும் உயர்ந்தவைதான். ஆனால் இவை மட்டும் போதுமானவையல்ல. முறையான வேலைத்திட்டங்களும் அவற்றை நகர்த்தக்கூடிய அமைப்பு வடிவங்களும் அவசியம். இவை வளரும்போதுதான் கட்சி தீர்க்கமான வகையில் முன்னேறக் கூடியதாக இருக்கும். இல்லையேல் தூய இலட்சியங்களைக் கொண்ட இடதுசாரிக் குழுவாக மட்டும் அதனால் இருக்க முடியும். வரலாற்றில் காத்திரமான ஊடுருவலை மேற்கொள்ள அதனால் முடியாது. கூட்டமைப்புத் தரும் அரசியல் வெளிக்குள் நின்று பணியாற்றுவது தன்னியல்பான வேலை முறையே தவிர இலக்கு நோக்கிய தீர்க்கமான வேலை முறையல்ல.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்தியக் குழுவினருடனான சந்திப்பின்போது பேராசிரியர் சிற்றம்பலம் மட்டும் 13வது திருத்தம் தமிழ்மக்களின் அபிலாஷைகளை தீர்க்கப் போதுமானதல்ல. அரசியல் தீர்வு அதைவிட மேலானதாக இருக்கவேண்டும் எனக் கூறியிருக்கின்றார். இது சம்பந்தன் தலைமைக்குப் பிடித்த ஒன்றல்ல. ஆனாலும் ஒரு பேராசிரியர் என்ற வகையில் அந்த உணமையைக் கூறாமல் விட அவரால் முடியவில்லை.

தற்போதைய நிலையில் தமிழ்மக்களுக்கு மூன்று பிரச்சினைகள் முக்கியமானவை. அரசியல் தீர்வு, போருக்குப் பின்னரான பச்சை ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்துதல், போரினால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வு என்பவையே அம்மூன்றுமாகும். இம்மூன்றும் பற்றிய ஆரோக்கியமான சந்திப்புக்களையும், கலந்துரையாடல்களையும் இந்தியக்குழுவினர் மேற்கொண்டிருந்தால் அவர்களின் பயணம் பயனுடையதாக இருந்திருக்கும். ஆனால் இது பற்றிய விருப்பமோ, அக்கறையோ இந்தியக்குழுவினருக்கு இருக்கவில்லை. கூட்டமைப்பினரும் அதனை ஊக்குவிக்கவில்லை.

அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியா தன்னிச்சையாகவே தமிழ் மக்கள் சார்பாக அதிகாரத்தைக் கையிலெடுத்து 13வது திருத்தம் தீர்வு எனக் கூறிவருகின்றது. தமிழ் மக்கள் சார்பில் இந்தியாவிற்கு எவரும் அதிகாரத்தைக் கொடுக்கவில்லை. குறிப்பாக கூட்டமைப்பு இதனை நிராகரித்திருக்க வேண்டும். ஆனால் அது இந்திய நிலைப்பாட்டிற்கு பின்னால் இழுபட்டுச் செல்லவே முயல்கின்றது. எஜமான் விசுவாசம் எதிர்க் கருத்துக்களை முன்வைக்க விடுவதில்லை. இந்தியக்குழுவினருடன இது பற்றி ஆரோக்கியமான கலந்துரையாடல்களை நடாத்தியிருக்கலாம். தனியே அரசியல் கட்சிகள் மட்டும் பங்குபற்றாமல் கல்விமான்களைக் கொண்ட குழுவின் தலைமையில் சந்திப்புக்களை மேற்கொண்டிருக்கலாம், இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதையும் உறுதியாகக் கேட்டிருக்கலாம்.

இந்தியக் குழுவினரின் பயணம் தொடர்பாக வலம்புரி பத்திரிகை தமிழ்த்தரப்பு இரு செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டும் என ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது. ஒன்று இந்தியக் குழுவைப் பகிஷ்கரித்திருக்க வேண்டும். தமிழகத் தரப்பினர் பகிஷ்கரித்ததினால் தமிழ்த் தரப்பிற்கும் அதனை மேற்கொள்ளவேண்டிய பொறுப்புண்டு. இந்தியக்குழுவினர் அரசாங்கத்துடன் வந்து சந்திப்புகளை நடாத்தினால் நடாத்திவிட்டுப் போகட்டும். தமிழ்மக்கள் சந்திக்கத் தேவையில்லை.

இரண்டாவது தவிர்க்கமுடியாது சந்திப்புகளை மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டால் தமிழ்மக்களின் அவலங்களை அவர்களுக்குக் கூறுவதை விட்டுவிட்டு அரசியல் தீர்வு, ஆக்கிரமிப்புகள் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு என்ன? எனபதைக் கேட்டிருக்க வேண்டும்.

உண்மையில் இவற்றை மேற்கொள்வதற்கு கூட்டமைப்பிடம் அரசியல் தீர்வு தொடர்பாக உறுதியான நிலைப்பாடு ஒன்று இருக்கவேண்டும். மக்களுக்கு ஒன்றும் இராஜதந்திரிகளுக்கு இன்னொன்றும் கூறுவது ஆரோக்கியமானதல்ல.

அடுத்தது ஆக்கிரமிப்புச் சம்பந்தமான விடயம். போருக்குப் பின்னர் தமிழ்மக்கள் ஒரு தேசமாக இருப்பதை சிதைக்கும் வகையில் பச்சை ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது. அபிவிருத்தி மாயைக்குள் ஒரு புற்றுநோய்போல இது வளர்ந்து கொண்டிருக்கின்றது. இவை பற்றி முழுமையான ஆவணங்களைத் தயாரித்து இந்தியக் குழுவினரிடம் கையளித்திருந்தால் பிராந்திய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் இவ்விடயம் பேசுபொருளாக்கப்பட்டிருக்கும். முன்னைய தமிழரசுக்கட்சிக் காலத்தில் இவ்வாறானதொரு வேலைத்திட்டம் இருந்தது. தற்போதைய கூட்டமைப்பிடம் இது எவற்றையும் காணமுடியவில்லை.

ஆக்கிரமிப்பு விடயத்தில் ஒரு தற்காப்புச் செயற்பாடு மிக அவசியம். டக்ளஸ் தேவானந்தாவின் இணக்க அரசியலினாலோ, கூட்டமைப்பின் இணக்கமும் இல்லாத, எதிர்ப்புமில்லாத சாம்பார் அரசியலினாலோ இந்தத் தற்காப்பினைப் பேணமுடியாது. சர்வதேச மட்டத்தில் இவற்றைப் பேசுபொருளாக்குவதன் மூலமும், எதிர்ப்புப் போராட்டங்களை நடாத்துவதன் மூலமுமே இவற்றை வெற்றிகொள்ள முடியும்.

மூன்றாவது பாதிக்கபபட்டவர்களின் மறுவாழ்வு பற்றியதாகும். இவர்களில் சிறைகளில் இருப்போர், காணாமற் போனோர், அங்கவீனர்கள் என்போர் முக்கியமானவர்கள். இவர்களை இந்தியக் குழுவினர் சந்திப்பதற்குரிய அழுத்தங்களைக் கொடுத்திருக்க வேண்டும். குறிப்பாக சிறைகளுக்குச் சென்று வருடக்கணக்காக அங்கு வாடுவோரை கண்டு பேசியிருக்க வேண்டும். காணாமல் போனோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வகையில் அவர்களின் துயரங்களைக் கேட்டிருக்க வேண்டும். இவை எதுவும் நடைபெறவில்லை. நடைபெற்றவையெல்லாம் இலங்கை அரசிற்குச் சாதகமான விடயங்களே. இந்திய அரசும், இலங்கை அரசும் சேர்ந்து தமிழர் தலையில் மீண்டும் மிளகாய் அரைத்துள்ளன.

இங்கு ஒன்றை நாம் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா இலங்கையுடன் இணக்க இராஜதந்திரத்தினை மேற்கொள்வதாயினும் சரி, அல்லது எதிர்ப்பு இராஜதந்திரத்தை மேற்கொள்வதாயினும் சரி, கருவியாகப் பயன்படுத்தப் போவது தமிழ் மக்களையே! வரலாற்றில் இதுவே நடந்துள்ளது. இந்தத் தடவை இலங்கையை தாஜா பண்ணுவதற்கும் தமிழ் மக்கள் என்ற கருவியையே பயன்படுத்தியிருக்கின்றது. எதிர்காலத்தில் இந்தியா- இலங்கை தேனிலவு முற்றாக முறிவடைந்து எதிர்ப்பு இராஜதந்திரத்தைப் பின்பற்ற முனைந்தாலும் பயன்படுத்தப்போவது தமிழ் மக்களையே!

இப்போது எழும் கேள்வி?

தமிழ் மக்கள் வெறுங்கருவிகளாக தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதை நாம் அனுமதிக்கப் போகின்றோமா?

4/28/2012 2:39:03 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்