Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

விக்னேஸ்வரன் - தமிழரசுக் கட்சி பனிப்போர் எதுவரை செல்லும்?

விக்னேஸ்வரன் - தமிழரசுக் கட்சி பனிப்போர் எதுவரை செல்லும்?
சி.அ.யோதிலிங்கம்

 

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சியினருக்குமிடையிலான பனிப்போர் மீண்டும் உச்சநிலைக்குச் சென்றுள்ளது. விக்னேஸ்வரன் மிகக் கவனமாக காய் நகர்த்தி தமிழரசுக்கட்சியைத் தனிமைப்படுத்தியுள்ளார். கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் அனைத்தும் விக்னேஸ்வரனுக்குப் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றன. கூட்டமைப்புக்கு வெளியே தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பவற்றின் ஆதரவும், அதற்கப்பால் பரந்துபட்ட தமிழ் மக்களின் ஆதரவும் அவரை ஒரு வலுவான அரசியல் சக்தியாக்கியுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்கு அப்பால் 2009க்குப்பின்னர் ஏற்பட்ட இரண்டு அரசியல் போக்குகளும் விவகாரத்தின் கனதியை உச்சமாக்கியுள்ளன. தமிழரசுக் கட்சிக்கு விவகாரத்தை தன்வயமாக்குவதற்கு தன்னை பெரியண்ணனாக நினைப்பது தடையாக உள்ளது.

2009ஆம் ஆண்டு ஆயுதப் போர் முடிவுக்கு வந்த பின்னர் இரு அரசியல் போக்குகள் தெளிவாகத் தொடங்கியிருந்தன. ஒன்று இதுவரைகாலம் பின்பற்றி வந்த தமிழ்த் தேசிய அரசியலை ஏதோ ஒரு வகையில் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வது. இரண்டாவது தொடர்ச்சியாக பின்பற்றி வந்த தமிழ்த் தேசிய அரசியலை சர்வதேச வல்லரசுகளினதும் இந்தியாவினதும் நிகழ்ச்சி நிரலிற்கேற்ப கைவிட்டு இணக்க அரசியலுக்குள் செல்வது.

முதலாவது அரசியல் நிலைப்பாட்டை கஜேந்திரகுமார் எடுத்தார். இரண்டாவது அரசியல் நிலைப்பாட்டை சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தது. மிக மெதுவாக இருந்தாலும் இந்த இரண்டு அரசியல் போக்குகளை தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்நாடுகளிலும், தமிழகத்திலும் வளர்ந்தது. வாதப்பிரதிவாதங்கள், ஏட்டிக்குப் போட்டியான செயற்பாடுகள் இந்த மூன்று தளங்களிலும் தொடர்ந்தன.

கஜேந்திரகுமார் தனது அரசியல் வாழ்வை விலையாகக் கொடுத்தே இந்த நிலைப்பாட்டை எடுத்தார். இதற்காக புலிகளினால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் என்போரையும் இணைத்து தமிழத்தேசிய மக்கள் முன்னணி என்ற அமைப்பை உருவாக்கிச் செயற்பட்டார். இவருடைய விலகலுக்கு ஆசன பேரம் பேசலின் தோல்வியை தமிழரசுக்கட்சிக்காரர் காரணமாகக் கூறியிருந்தாலும் அது உண்மையல்ல. கொள்கை முரண்பாடே இதற்குக் காரணம். நெருக்கடியான ஒரு நேரத்தில் தமிழ்த் தேசிய அரசியலை கருநிலையிலாவது பாதுகாத்த பெருமை இவரையே சாரும். இவரது கட்சிக்கு வெளியே தமிழ் கல்வியியலாளர்கள் உருவாக்கிய தமிழ் சிவில் சமூகமும் இவரது கொள்கை நிலைப்பாட்டையே பிரதிபலித்தது. இரண்டினதும் கொள்கை இணைவு பலவீனமான நிலையிலாவது ஒரு அரசியல் தளம் உருவாவதற்கு வழிவகுத்தது. தாயகத்திற்கு வெளியே புலத்திலும் தமிழகத்திலும் செயற்பட்ட தேசிய சக்திகள் ஆதரவு வழங்க இந்த அரசியல் தளம் பலவீனமான நிலையிலாவது செயற்படத் தொடங்கியது.

உண்மையில் இந்த முதலாவது அரசியல் போக்கு தேர்தலில் கூத்தடிக்கின்ற அரசியல் கட்சியை அல்ல, மாறாக தமிழ் மக்களினது அனைத்து விவகாரங்களையும் உலகு தழுவி கையாளக்கூடிய ஒரு தேசிய அரசியல் இயக்கத்தையே வேண்டி நின்றது. அது மக்கள் அமைப்புக்களையும் அரசியல் கட்சிகளையும் இணைத்ததாக, அதேவேளை மக்கள் அமைப்புக்களின் மேலாதிக்கம் உள்ளதாக இருக்க வேண்டியிருந்தது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் அந்த நிலை நோக்கி வளர முடியவில்லை. அது இன்று வரை ஒரு குழு நிலைக்கு கூட வளர்ச்சி பெறவில்லை.

இந்த இடத்தில்தான் மக்கள் அமைப்புக்களையும், அரசியல் கட்சிகளையும் இணைத்ததாக தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றது. விக்னேஸ்வரன் அதற்கு தலைமை கொடுக்க முன் வந்தமை அதனை கவர்ச்சிமிக்கதாக்கியது. இரண்டு 'எழுக தமிழ்' ஆர்ப்பாட்டத்தின் வெற்றியும், அரசியல் தீர்வுப்பொதியும் அதற்கு ஒரு வலுவான அடையாளத்தை கொடுத்தன. ஆனால் தமிழ் மக்கள் பேரவையிலுள்ள மக்கள் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் அரச ஊழியர்களாகவும் வெகுஜன அரசியல் அனுபவமற்ற மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும், விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விட்டு வெளியேவர முடியாதவராகவும், பேரவையில் இணைந்து கொண்ட அரசியல் கட்சிகள் கூட்டுக்குள் வராதவர்களாகவும் இருந்த நிலை, தமிழ் மக்கள் பேரவையின் முன்னோக்கிய செயற்பாட்டை பெரிதும் முடக்கியது.

இந்த பலவீனமான நிலை மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தின்போது தெளிவாக தெரிந்தது, காணாமல் போனவர்களும், நிலப்பறிப்புக்கு உள்ளானவர்களும் தன்னெழுச்சியாக போராடியபோது அதற்கு தலைமை கொடுக்க தமிழ் மக்கள் பேரவையினாலும் முடியவில்லை. கூட்டமைப்பு இணக்க அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் நிற்பதால் இப்போராட்டங்களுக்கு அதனால் தலைமை கொடுக்க முடியாது. தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசிய அரசியல் பாதையை தேர்ந்தெடுத்ததினால் அதுவே தலைமை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதன் அக நிலமை அதற்கு ஏற்றதாக இருக்கவில்லை. இறுதியில் பேரெழுச்சியாக இடம்பெற்றிருக்க வேண்டிய போராட்டங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலாகவும், பாதிப்படைந்தோர் மட்டும் நடாத்தும் போராட்டமாகவும் சுருங்கிப்போயின.

விக்னேஸ்வரன் - தமிழரசுக் கட்சி பனிப்போர் எதுவரை செல்லும்?

தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொண்ட அரசியல் கட்சிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர ஏனையவை கொள்கை நிலைப்பாடு காரணமாக தமிழ் மக்கள் பேரவையில் இணைந்தன எனக் கூற முடியாது. கொள்கை நிலைப்பாடு காரணமாக இருப்பின் கஜேந்திரகுமார் வெளியேறிய போது அவையும் வெளியேறியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் அனுபவத்தில் கூட்டமைப்பின் தவறு என்று தெரிந்த பின்னராவது வெளியேறியிருக்கலாம். அவை அதைச் செய்யவில்லை. ஆனால் கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சி ஏகபோக நிலை வகித்ததும், தனித்து தீர்மானம் எடுப்பதும், அடிமைக்கூட்டங்களாக இக்கட்சிகளை நடாத்துவதும், கூட்டமைப்புக்குள் இவற்றின் இருப்பு நிலையை கேள்விக்குட்படுத்தின. இதனால் இருப்பைப் பாதுகாப்பதற்காகவும், கூட்டமைப்புக்குள் தங்கள் பேரம் பேசும் பலத்தை அதிகரிப்பதற்காகவுமே தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளில் பங்கேற்க முனைந்தன. இந்த நிலை காரணமாகத்தான் எங்கே நிற்பது என்ற உறுதியான முடிவை எடுக்காதவாறு இன்றும் தடுமாறுகின்றனர். இந்த தடுமாற்ற நிலை பேரவையையும் பலவீனப்படுத்தி அதனூடாக அதன் அரசியல் நிலைப்பாட்டையும் பலவீனப்படுத்துகின்றது. இரண்டு அரசியல் போக்குகள் மட்டும் களத்தில் இருக்கின்ற நிலையில் பேரவைக்கு வந்தபின் பேரவையின் அரசியல் நிலைப்பாட்டை ஏற்பதும் அவற்றை நியாயப்படுத்துவதும் இக் கட்சிகளுக்கு தவிர்க்க முடியாததாகியது.

இந்த கட்சிகளின் இரண்டக நிலை சம்பந்தனுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் நெருக்கடிகள் முற்றுகின்ற போது இவர்களை அணைப்பது போன்று நடிப்பதும், சாதாரண நிலையில் கைவிடுவதும் என்ற விளையாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார். அவருக்குள்ள கவலையெல்லாம் இந்த விளையாட்டுக்கு தமிழரசுக்கட்சியினர் தடையாக இருக்கின்றனர் என்பதே! சம்பந்தன் நீண்டகால அரசியல்வாதியாக இருப்பதால் தங்களது பலமும் பலவீனமும் அவருக்கு நன்றாகவே தெரியும். கூட்டமைப்பு பல கட்சிகளின் ஐக்கிய முன்னணியாக இருப்பதினால்தான் அதிருப்தியின் மத்தியிலும் மக்கள் ஆதரிக்கின்றனர் என்பதும், தனித்து ஒரு கட்சியாக இருந்தால் மக்கள் கைவிட்டு விடுவார் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும். இதனால் தான் இந்த கட்சிகள் வெளியே போகப்போகின்றது என்று தெரிகின்றபோது உடனடியாகவே சமரசத்திற்குச் சென்று சமாதானப்படுத்துகின்றார். இந்த கட்சிகளுக்கு தற்போது விக்னேஸ்வரன் கிடைத்துள்ளதால் அவர்களது பேரம் பேசும் நிலை உயர்ந்துள்ளது எனலாம்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் ஒரு சுயமரியாதைக்காரர் என்பதால் ஆரம்பகாலம் தொட்டே கூட்டமைப்புக்குள் சமத்துவத்திற்காகப் போராடினார். அவரை அடக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சிக்காரர் அவரை தோற்கடிக்கச் செய்தனர். அவரது வேட்பாளர்களை வென்றபின் தமக்குள் உள்ளீர்த்தனர். தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம் சுரேஸ் பிரேமச்சந்திரனையும் சற்று பலப்படுத்தியுள்ளது. இதனால் இந்த தடவை அவர்கள் சற்று உறுதியாக நிற்கின்றார். கூட்டமைப்புக்குள் சமத்துவம் ஒருபோதும் நிலவப்போவதில்லை என்பதை அவர் தெளிவாகவே உணர்ந்துள்ளார். கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளுக்கு சுயமரியாதை எதுவும் கிடையாது. தமிழரசுக்கட்சிக்காரர்கள் தாழ்வாரத்தில் ஒதுங்க விட்டாலே போதுமென்ற நிலை. தற்போது அவர்களுக்குள்ள பிரச்சினை தாழ்வாரத்திலும் ஒதுங்கவிடாமல் துரத்துகின்றார்கள் என்பதே!

இந்த கட்சிகளின் இரண்டாம்மட்டத் தலைவர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பிலிருந்து விலகி தனியாக அணி அமைத்து போட்டியிடுவது எனத் தீர்மானித்த உடனேயே சம்பந்தன் ஓடிச்சென்று சமாதானப்படுத்த முயன்றார். விக்னேஸ்வரனை மையமாக வைத்து சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டது. விக்னேஸ்வரன் இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி வடமாகாண சபையில் தனது அதிகாரத்தை தமிழரசுக்கட்சியின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பதில் வெற்றி கண்டார். தனக்கு பாதுகாப்பாக ஏனைய கட்சிகளின் நிலையையும் உயர்த்தினார். 

சம்பந்தனின் விட்டுக்கொடுப்பு தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பிரிவினரை எரிச்சலடையச் செய்தது. தங்கள் ஏகபோகத்திற்கு சம்பந்தன் ஆப்பு வைக்கின்றார் என்பதே இதற்குக் காரணம். அவர்கள் சம்பந்தன் இல்லாமலேயே கூட்டத்தை கூட்டி மாகாண அமைச்சர் சத்தியலிங்கத்தை இராஜினாமாச் செய்ய வைத்ததோடு, அமைச்சர் பதவிகளை தமிழரசுக் கட்சி பெற்றுக் கொள்வதில்லை என்ற தீர்மானத்தையும் எடுத்தனர். ஆனால் அவைத்தலைவர் சிவஞானம் பற்றியோ, பிரதித்தலைவர் பற்றியோ எந்த முடிவும் எடுக்கவில்லை. சம்பந்தன் அவர்களைச் சமாதானம் செய்தும் சரிவராத நிலையில் குழப்பம் விளைவிக்காமல் இருங்கோ எனக் கூறியிருக்கின்றார்.

தமிழ் அரசியலில் ஏகபோகத்தை விரும்பும் தமிழரசுக்கட்சிக்காரர்கள் வடமாகாண சபையில் மாற்றுக்கட்சிகளின் ஆதிக்கம் மேலோங்குவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இதனால் தொடர்ந்தும் எதிர்க்கட்சியாக தொழிற்பட்டு விக்னேஸ்வரனுக்கு தொல்லைகளை கொடுப்பதற்கே முயற்சிப்பர். இந்த தொல்லைகள் விக்னேஸ்வரனையும் மாற்றுத் தரப்பினையும் மேலும் பலப்படுத்துமே தவிர ஒருபோதும் பலவீனப்படுத்தாது. சம்பந்தனுக்கு இது நன்கு விளங்கியுள்ளதனால்தான் குழப்பம் விளைவிக்காமல் இருங்கோ எனக் கூறி நிலைமையை தற்காலிகமாக சமாதானப்படுத்தியிருக்கின்றார்.

விக்னேஸ்வரன் தமிழத் தேசிய அரசியல் பக்கம் இருக்கும் வரை அவரை எவரும் பலவீனப்படுத்த முடியாது. அவருடைய ஆன்மீகமுகமும், சுத்துமாத்து இல்லாத நேர்மையான கருத்துக்களும், தமிழ்த்தேசிய அரசியல் மீதான உறுதி நிலையும், தமிழ் மக்கள் மத்தியில் அவரை செல்வாக்குமிக்க நிலைக்கு உயர்த்தியுள்ளது. முகத்தோற்றத்திலும் இன்னோர் தந்தை செல்வாவாகவே அவர் தோற்றமளிக்கின்றார். தமிழ் மக்களும் அவரை அவ்வாறே பார்க்கின்றனர்.

விக்னேஸ்வரனும், மாற்றுத் தரப்புகளும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். தேக்க நிலையில் இருந்தால் மக்கள் அதிருப்திப்படவே முயற்சிப்பர். தேர்தல் அரசியலுக்கப்பால் தமிழ் மக்களின் அனைத்து விவகாரங்களையும் உலகு தழுவிய வகையில் கையாளக் கூடிய ஒருதேசிய அரசியல் இயக்கத்தை வலுவாகக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்க வேண்டும். அவ்வியக்கம் மக்கள் அமைப்புக்களையும் அரசியல் கட்சிகளையும் கொண்டதாக ஆனால் மக்கள் அமைப்புக்களின் மேலாதிக்க நிலை உள்ளதாக இருத்தல் வேண்டும்.

இதற்கப்பால் அரசியல் இலக்கை சென்றடைவதற்கான வழிவரைபடத்தையும் தெளிவாக முன்வைக்க வேண்டும். தமிழ்த்தேசிய அரசியலைப் பொறுத்தவரை இலக்கும் வழிவரை படமும் தேசம், இறைமை, சுயநிர்ணயம், சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளுதல், புவிசார் அரசியலில் பங்காளிகளாகுதல், அடிப்படைச் சக்திகளான தாயக மக்களையும் அதன் நீட்சியாக உள்ள புலம்பெயர் மக்களையும், சேமிப்புச் சக்திகளான மலையக மக்கள், தமிழக மக்கள் உட்பட உலகம்வாழ் தமிழக வம்சாவழி மக்களையும், நட்புச்சக்திகளான சிங்கள முற்போக்கு சக்திகள் உட்பட உலகம்வாழ் முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பின்னால் அணிதிரட்டுதல், இதற்கேற்ற வகையில் நிலம், புலம், தமிழகம் என்பற்றுக்கிடையே ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல், மக்கள் பங்கேற்பு அரசியலை வலுப்படுத்தல், சர்வதேச சமூகத்தை எமக்குச் சார்பாக திருப்புதல், சமூக அதிகார மையம் ஒன்றை உருவாக்குதல் என்பவைதான்.

வரலாறு ஒருபோதும் வெற்றிடங்களை விடுவதில்லை

8/12/2017 10:07:46 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்