Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் போராட்டம் வெற்றிபெறுமா?

பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் போராட்டம் வெற்றிபெறுமா?
முத்துக்குமார்

 

சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி முடுக்கிவிட்டுள்ளது. தேசியதின, துக்கதின போராட்டத்தை தொடர்ந்து தற்பொழுது கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மீண்டும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று, ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்குமிடையே ஒரு அதிகாரச் சமநிலையை உருவாக்குதல். இரண்டாவது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமைக்கு எதிராக நடாத்தப்படுகின்ற உட்கட்சிப் போராட்டத்தை திசைதிருப்புதல்.

மேற்குலக சக்திகளும் எப்பாடுபட்டாவது ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்குமிடையில் அதிகாரச் சமநிலையினைக் கொண்டு வருகின்றன. அதன் வளர்ச்சியில்தான் ஓர் ஆட்சி மாற்றத்தை எதிர்காலத்தில் கொண்டுவரலாம் என அவை கருதுகின்றன. தென்னாசிய மட்டத்தில் ஒரு அதிகாரச் சமநிலையினைக் கொண்டு வருவதற்கு இது அவசியம் என்பது அதன் அபிப்பிராயமாகும்.

போர் வெற்றி ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான அதிகாரச் சமநிலையினை ஜனாதிபதி மகிந்தருக்கு சார்பாக மோசமாகச் சரித்திருத்திருந்தது. இது பற்றி எனது முன்னைய புதிய பண்பாடு கட்டுரையினும் கூறியிருக்கின்றேன். இந்தச் சரிவைச் சமநிலைப்படுத்த போர் வெற்றிப் பங்காளரான சரத் பொன்சேகாவினால்தான் முடியும் என மேற்குலகம் கருதுகின்றது.

இதன் அடிப்படையில்தான் மேற்குலகம் ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்தது. தேர்தலுக்கான சகல வசதிகளையும் வழங்கியிருந்தது. ஆனாலும் சிங்கள மக்கள் தளபதியை விட மன்னரை விரும்பியமையால் மகிந்தரை வெற்றிபெறச் செய்தனர்.

சரத் பொன்சேகா தேர்தலில் தோல்வியடைந்தாலும் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதன் மூலம் ஜனாதிபதியின் போர் வெற்றி அதிகாரத்திற்கு சவாலாகவே விளங்கினார். பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் ஆட்சியாளர்களை திக்குமுக்காடச் செய்தன. ஊடகங்களும் ஒரு கதாநாயக அந்தஸ்துடன் சரத் பொன்சேகாவிற்கு முக்கியத்துவத்தைக் கொடுத்தன. ரணில் தனக்கு ஒரு போதும் சவாலான எதிரியாக வரப்போவதில்லை. சரத் பொன்சேகாவே சவாலாக இருப்பார் எனக் கருதியே ஜனாதிபதி சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தார். அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் பறிமுதல் செய்தார்.

தற்போது மேற்குலக சக்திகள் நேரடியாகவே சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளன. அமெரிக்கா அதிலும் ஒரு படி மேலே சென்று சரத் பொன்சேகாவை விடுதலை செய்யாவிட்டால் ஐ.நா மனிதஉரிமைக் கவன்சிலில் நெருக்கடிகளைச் சந்திக்கவேண்டிவரும் என எச்சரித்ததாகவும் தகவல். அமைச்சர் மைத்திரிபால சிறீசேனாவிடம் அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் நேரடியாக எச்சரித்தாகவும் தகவல்கள் வருகின்றன.

எனவே உள்நாட்டு மட்டத்திலிருந்து போராட்ட அழுத்தமும் சர்வதேச மட்டத்திலிருந்து எச்சரிக்கை அழுத்தமும் கூட்டாக வருகின்ற போது சரத் பொன்சேகா விடுதலை செய்யக்கூடிய சூழல் ஏற்படும் என்பது மேற்குலகத்தின் கருத்தாக உள்ளது.

இரண்டாவது காரணம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் போராட்டத்தை திசைதிருப்புவதாகும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ரணிலை எதிர்த்து கரு ஜெயசூரியா போட்டியாளனாக பகிரங்கமாக அறிவித்ததும் உட்கட்சிப் போராட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தனக்கு சார்பான புதிய செயற்குழு உறுப்பினர்களை நியமிப்பதன் மூலம் போட்டியில் வெற்றிபெறுவதற்கு ரணில் முயற்சிக்கின்றார். ஆனால் அதுவும் வெற்றிபெறும் சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. கட்சிக்குள் இருக்கின்ற நடுநிலையாளர்கள் கட்சியின் தலைவராக கரு ஜெயசூரியாவும் எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்காவும் இருக்கட்டும் என ஒரு மாற்று யோசனையை முன்வைத்துள்ளனர். மகாநாயக்க தேரர்களும் இவ்யோசனையை ஆதரித்துள்ளனர். ஆனாலும் கட்சிக் கட்டப்பாடு தன்னிடம் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினால் எந்தப் பயனுமில்லை எனக்கருதியதால் ரணில் அதற்கு உடன்படவில்லை என்றே தகவல்.

சஜித் பிரேமதாசா தான் தலைவராக வருவதற்கான போராட்டத்தை முன்னெடுத்தபோது ரணில் தலைமையினால் அதனைப் பலவீனப்படுத்த முடிந்தது. மரபு ரீதியான சிங்கள உயர்குழாமிற்குள் பிரேமதாசா குடும்பம் இல்லாததே அதற்கு காரணம்.

பிரேமதாசாவிற்கும் அந்தப் பிரச்சிரனை இருந்தது. ஆனால் அவர் கடின உழைப்பினூடாக சிங்கள அடிநிலை மக்களையும் தென்னிலங்கை தமிழ், முஸ்லிம், மலையக மக்களையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டியதனால் வரலாற்றில் அவரை புறந்தள்ள ஐ.தே.க உயர் குழாமினரால் முடியவில்லை.

கொழும்பு மத்தி அவரது அரசியல் இருப்பிற்கான பிரதேசமாக இருந்தது. அங்கு வாழ்ந்த சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் அடிநிலைமக்களாக இருந்தமையினாலும் அத்தொகுதி ஒரு பல்லினத்தொகுதியாக இருந்தமையினாலும் அத்தொகுதி அவரை எவரும் வெல்ல முடியாத தலைவராக்கியிருந்தது. மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட பல்லினத்தொகுதியில் பிரேமதாசா எப்பொதும் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராகவே தெரிவு செய்யப்பட்டார்.

அவர் வீடமைப்பு அமைச்சராக வந்த பின்னர் நாடுதழுவிய ரீதியில் அவர் அமைத்த வீடமைப்புத் திட்டங்கள் அவரை சிங்கள அடிநிலை மக்கள் மத்தியில் நிகரற்ற கதாநாயகனாக்கியது. வீடுகளில் தெய்வப்படங்களோடு பிரேமதாசாவின் படத்தையும் வைத்து வணங்கும் அளவிற்கு அவரது கதாநாயக அந்தஸ்து உயர்ந்தியிருந்தது. அவரது எளிமையான தோற்றமும் அடிநிலை மக்கள் மீது கொண்ட நெருக்கமும் அக்கறையும் மக்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது. சாதாரண தொழிலாளர்களை பெயர் கூறி அழைக்கும் அளவிற்கு தனது ஆதரவாளர்கள் பற்றிய ஞாபக சக்தியும் அவருக்கு அதிகமாக இருந்தது.

உயர்குழாம் கட்சி எனக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினை அடிநிலை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவரும் அவரேயாவார். இதன் மூலம் கொழும்பு போன்ற நகரப்பகுதிகளில் இடதுசாரிகளின் செல்வாக்கினை சரித்தவரும் இவரேயாவார். கட்சிக்கு போனஸாக கிடைத்த இந்த மக்கள் செல்வாக்கு அவர் தலைமைக்கு வருவதை புறக்கணிக்க முடியாத ஒரு நிலையினை உருவாக்கியது.

அவர் இறந்தபோது பின்தங்கிய சமூகத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு வரும் முதல் நபராகவும் கடைசி நபராகவும் பிரேமதாசா இருப்பார் என ஒரு ஆய்வாளர் குறிப்பிட்டார். அவரது அரசியல் வளர்ச்சி திடீரென உயர்ந்ததாக இருக்கவில்லை. ஒரு படிநிலை வளர்ச்சியாகவே இருந்தது.

கொழும்பு மாநகரசபை உறுப்பினராக அரசியலுக்குள் புகுந்தவர், கொழும்பு மத்தியின் 1வது பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, பிரதமராக, இறுதியில் ஜனாதிபதியாக உச்சத்திற்கு வளர்ந்து சென்றார். தன்னை ஒரு தூய சிங்கள பௌத்தர் என அடையாளம் காட்டவும் அவர் தவறவில்லை. சிங்கள அடிநிலை மக்களின் ஆதரவினைப் பெறுவதற்கு அவ் அடையாளம் அவருக்கு அவசியமாக இருந்தது. அதேவேளை தனது தொகுதி ஒரு பல்லின தொகுதியாக இருந்தமையினால் அங்கு வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுடன் நெருக்கத்தை பேணவும் அவர் தவறவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எப்போதும் ஒரு தாராண்மை முதலாளித்துவ முகமும் பௌத்த சிங்கள முகமும் இருந்தது. அதில் பௌத்த சிங்கள முகத்;தை பிரேமதாசா பிரதிநிதித்துவப்படுத்தினார். ஏனைய சமூகங்களின் ஆதரவு மேற்குலகின் ஆதரவு என்பவற்றினால் எல்லாக் காலங்களிலும் பௌத்த சிங்கள முகம் வெளிவருவதில்லை. மேற்குலகு சார்ந்த தாராள முதலாளித்துவ முகமே வெளியில் தெரிந்தது. இனவிவகாரம் பற்றி குறிப்பான தீர்மானங்கள் வரும்போதுதான் பௌத்த சிங்கள முகம் வெளிப்பட்டது.

பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்த ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் கண்டியாத்திரை, இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்த பிரேமதாசாவின் ஆர்ப்பாட்டங்கள், சந்திரிக்காவின் தீர்வுப்பொதியினை ஆதரித்த ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கடத்தல்கள் என்பன பௌத்த சிங்கள முகத்தை தெளிவாகக் காட்டின. தமிழ் ஆய்வாளர் ஒருவர் இதனை வடிகட்டின இனவாதம் எனக் குறிப்பிட்டார். மறைந்த குமார் பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சியினை தமிழர்களின் முதுகில் குத்தும் கட்சி என வர்ணித்தமை இதன் அடிப்படையிலேயே ஆகும்.

பிரேமதாசா ஜனாதிபதியாக வந்தமை ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்குழாமினருக்கு சகிக்க முடியாததாகவே இருந்தது. ஜே.ஆர் ஜெயவர்த்தனா, காமினி திசநாயக்கா, லலித் அத்துலத் முதலி என கட்சியின் உயர்குழாமினர் பலரும் அவரை வீழ்த்த முயற்சித்தனர். எனினும் வெற்றி கிடைக்கவில்லை. ஜே.வி.பி கிளர்ச்சியினை அடக்க அவர் கையாண்ட வழிமுறைகளே அவரைப் பலவீனமாக்கியது.

1990ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி ஆமர்வீதிக் குண்டு வெடிப்பில் அவர் இறந்த பின்னர் அவரது துணைவியாரான ஹேமா பிரேமதாசா அவரது இடத்திற்கு வர முயன்றபோது ஐ.தே.கட்சியின் உயர்குழாம் தலைமை அதனை அனுமதிக்கவில்லை. அவரும் அவருக்கு துணையாக இருந்த முன்னாள் அமைச்சர் சிறிசேன கூரேயும் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டனர்.

இந்நிலையில் தந்தையாரின் பிறந்த இடம் எனக் கருதி ஐ.தே.கட்சிக்கு அதிகம் செல்வாக்கில்லாத அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தனது அரசியல் தளத்தினை சஜித் பிரேமதாசா உருவாக்கினர். தனது செல்வாக்கினை சிறிது சிறிதாகக் கட்டி எழுப்பி இன்று தலைமைக்கு போட்டியிடும் நிலைக்கு வளர்ச்சி அடைந்துள்ளார்.

நீண்ட நாட்கள் காத்திருந்தபோதும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை கைப்பற்ற அவரால் முடியவில்லை. இதனால் மேலும் சிலகாலம் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான் தந்திரோபாய நடவடிக்கையாக உயர்குழாம் பிரிவைச் சேர்ந்த கரு ஜயசூரியாவை ரணிலுக்கு போட்டியாக சஜித் பிரேமதாசா இறக்கியிருக்கின்றார்.

சஜித் பிரேமதாசாவுடனான மோதலில் வெற்றி பெற்ற ரணிலுக்கு கரு ஜயசூரியாவை வெற்றி பெறுவது கடினமாக உள்ளது. ஐ.தே.கட்சி உயர்குழாம் ஆதரவும் கரு ஜயசூரியாவிற்கு உண்டு. இந்நிலையில்தான் ஆபத்தை திசைதிருப்ப சரத் பொன்சேகா போராட்டத்தை ரணில் கையில் எடுத்திருக்கின்றார்.

தென்னிலங்கையில் மூன்றாவது கட்சியாக கருதப்படுகின்ற ஜே.வி.பி ஐக்கிய தேசியக் கட்சியின் போராட்டத்தில் இணைந்து கொள்ளவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி வற்புறுத்தி கேட்டபோதும் அதனைத் தவிர்த்தே வந்தது. கட்சி தற்போது பெரும் பிளவினைச் சந்தித்துள்ளமையினால் கட்சியின் இருப்பினை காப்பாற்றவே அது திணறிக்கொண்டிருக்கின்றது. கட்சியின் தீவிர இயங்கு சக்திகள் மாற்றுக்குழுவுடன் நிற்கின்றமையும் அதன் ஆற்றலை பலவீனப்படுத்தியுள்ளது.

மாற்றுக்குழு முன்வைத்த குற்றச்சாட்டுகளில் தேர்தலில் சரத் பொன்சேகாவுடன் கூட்டுச் சேர்ந்தமையும் இருக்கின்றமையினால் சரத் பொன்சேகாவை முன்னிலைப்படுத்தி போராட்டங்களை நடாத்த ஜே.வி.பி சற்று தயக்கம் காட்டுவது போலவே தெரிகின்றது.

விக்கிரமபாகு தலைமையிலான நவசமாஜக் கட்சியும், சிறிதுங்க தலைமையிலான ஐக்கிய சோசலிசக் கட்சியும், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும் போராட்டத்தில் பங்குபற்றி வருகின்றன. சரத் பொன்சேகா விடுதலையுடன் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையும் அரசியல் தீர்வுப் பிரச்சினையையும் கோரிக்கைகளில் இணைக்க ஐ.தே.க தலைமை உடன்பட்டதனாலேயே தாம் இணைந்து கொண்டதாக அவை கூறியுள்ளன.

எனினும் தற்போது அக்கூட்டிலும் விரிசல்கள் ஏற்பட்டுளளதாக தகவல். கடந்த 6ம் திகதி ஐ.தே.கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் சிரால் லக்கதிலகவின் வீட்டில் இடம்பெற்ற கூட்டத்தில் பயங்கரவாதத்தை ஒழித்த சரத் பொன்சேகாவை விடுதலை செய் என்ற கோரிக்கையை மட்டும் முன்வைக்க வேண்டும் என சஜித் பிரேமதாசா கூறியதனால் விக்கிரமபாகுவிற்கும் சஜித் பிரேமதாசாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் தகவல்.

வாக்குவாதம் முற்றி சஜித் பிரேமதாசா கூட்டத்தை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் வந்துள்ளன. அதேவேளை இது ஒரு சிங்கள பௌத்தக் கூட்டம் எனக்கூறி ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்காவும் வெளியேறியதாக தகவல். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்டபோதும் அவர் வாக்குவாதத்தில் பங்கெடுக்கவில்லை.

ரணில் அணியினர் தமிழ், முஸ்லிம் வாக்குகளைத் தக்கவைக்க வேண்டும் என்பதற்காகவும் மேற்குலகத்தினர் வெறுப்பைச் சம்பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் தமது சிங்கள பௌத்த நிலைப்பாட்டை சற்று அடக்கி வாசிக்க முற்படுகின்றனர். ஆனால் சஜித் பிரேமதாசா இவ் அடக்கி வாசித்தலுக்கு தயாராக இல்லை. மகிந்தருடனும் ரணிலுடனும் அதிகாரத்திற்காக போட்டியிடுவதற்கு வேறுதெரிவு அவருக்கு இருக்கவில்லை.

இப்பொழுது எழும் மிகப் பெரிய கேள்வி சரத் பொன்சேகாவினை விடுதலை செய்வதற்கான போராட்டம் வெற்றி பெறுமா? அது ஆட்சி மாற்றத்திற்கு வித்திடுமா?

அரசு இப்போது இருக்கும் நிலையில் இருந்து பலவீனப்படாமல் இவ் இரண்டு வெற்றிகளும் இடம்பெறப் போவதில்லை. ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிகுமிடையிலான அதிகாரச் சமனிலை தமிழ் அரசியலுக்கும் சிங்கள அரசியலுக்குமிடையிலான சமநிலையிலேதான் தங்கியிருக்கின்றது. இதன் அர்த்தம் இரண்டாவது சமநிலை உருவாகாமல் முதலாவது சமநிலை உருவாகாது என்பதேயாகும். மேற்குலக அழுத்தங்கள் உள்நாட்டில் மகிந்தரின் அதிகாரத்தை பலப்படுத்துமே தவிர பலவீனப்படுத்த மாட்டாது.

பௌத்த சிங்களப் பேரினவாதமானது தமிழின எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, மேற்குலக எதிர்ப்பு என்பவற்றின் அடித்தளத்திலேயே கட்டப்பட்டுள்ளது. அதனால்தான் இந்தியா தற்போது அழுத்தம் கொடுப்பதையே நிறுத்திவிட்டது.

இந்நிலையில் தமிழ் அரசியலுக்கு கிடைக்கின்ற சில வெற்றிகள் மட்டும் மகிந்தரின் அதிகாரத்தை பலவீனப்படுத்தக் கூடியதாக இருக்கும். அதுதான் சிங்கள அரசியலுக்கும்-தமிழ் அரசியலுக்குமிடையே அதிகாரச் சமநிலையினை உருவாக்க அதன் வழி தென்னிலங்கையில் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்குமிடையே அதிகாரச் சமநிலையை உருவாக்கும். இந்த அதிகாரச் சமநிலைகள் தான் மெல்ல மெல்ல மகிந்தாவின் அதிகாரத்தையும் பலவீனப்படுத்த அது ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலும். மேற்குலகமும் இந்தியாவும் தமிழ் மக்கள் ஒரு தனியானதேசம் என்பதையும் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதனையும் பகிரங்கமாக அங்கீகரித்தாலே மகிந்தரின் அதிகாரம் மளமளவென சரியத்தொடங்கும்.

இந்த உண்மை மகிந்தருக்கு மட்டும்தான் தெளிவாகத் தெரியும். மேற்குலகத்திற்கோ இந்தியாவிற்கோ குறைந்த பட்சம் சம்பந்தனுக்கோ தெரிந்துள்ளது எனக் கூறமுடியாது.

12/16/2011 2:11:08 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்