Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

'ஜெனீவாவை' விளங்கிக் கொள்ளல்

வி.ரி.தமிழ்மாறன்

 

என்றுமில்லாத அளவுக்கு இன்று 'ஜெனீவா' பற்றிய பேச்சு இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்கள் மத்தியிலும் களைகட்டியுள்ளது. வெறுமனே தூரத்து நடப்புகளாகப் பார்க்கப்பட்டவை இன்று ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கும் கொடும்பாவி எரிப்புக்கும் உட்பட்ட விடயமாக மாறிவிட்டமை ஆச்சரியமே. இலங்கை தொடர்பான தீர்மானமொன்று ஜெனீவாவிலுள்ள ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட உள்ளமை தொடர்பாகவே இந்த ஆரவாரங்கள் பலமாகக் கேட்கின்றன. அத்தீர்மான வரைபு தற்போது பகிரங்கமாக்கப்பட்டுள்ளது. போதாதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போவதாக இருந்து பின்னர் போகாது விட்டதன் 'மர்மம்' பற்றியும் பலவாறாகப் பிய்த்து உதறப்படுகின்றது. ஆனால் இந்தச் செயற்பாடுகள் எந்தளவுக்குச் சரியான புரிதலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதே இங்கு அக்கறைக்குரியதாகின்றது.

மனித உரிமைகள் பேரவை என்பது என்ன? அதனது அதிகாரங்களும் பணிகளும் எப்படிப்பட்டவை? அதனால் எதனைச் சாதிக்க முடியும் அல்லது முடியாது என்பதையெல்லாம் விளங்கிக் கொண்டுதான் நாங்கள் முழக்கமிடுகின்றோமா? அரசுகள் மட்டுமே பங்குபற்றுவதற்குரிய களமொன்றில் நடைபெறும் விடயங்கள் யாருடைய நலன்களின் அடிப்படையில் அமைந்தவையாக இருக்கும்? இவை பற்றிய சரியான எடைபோடல் நம்மிடம் உள்ளதா என்பதை ஆராய்தலே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மனித உரிமைகள் என்பது பிரசைக்கும் அரசுக்கும் இடையிலான உறவு தொடர்பானது என்றளவில் அரசியல் சம்பந்தப்பட்டது என்பதில் ஐயமில்லை. அங்ஙனமே, அரசுகளே ஒன்று சேர்ந்து ஐ. நா. மட்டத்தில் ஓர் அமைப்பை உருவாக்கி, அது அரசுகளின் மீறல்களை ஆராய்கின்றது என்றால் அதற்கு சர்வதேச அரசியல் என்பதைவிட வேறு பெயர் இருக்க முடியாது. இதனை அடிப்படையில் விளங்கிக் கொண்டால்தான் ஏனையவற்றைப் பற்றிப் பேசமுடியும்.

ஐ.நா. வின் உறுப்புரிமை காரணமாக, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துதவதற்குமான கடப்பாடுகளை எல்லா அரசுகளும் ஏற்றுள்ளன. ஆனால் இவற்றை எங்ஙனம் நிறைவேற்றுதல் என்பதில்தான் இரண்டு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

ஐ.நா. பட்டயத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கும் பல்வேறு அமைப்புகளின் துணையுடன் உரிமைகளைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் என்பது ஒரு வழிமுறை. உறுப்பு நாடுகள் ஏற்று அங்கீரிக்கும் பெருந்தொகையான உரிமைகள் உடன்படிக்கைகளின் வழியாகப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் என்பது மற்றொரு வழிமுறை.

இதில் மனித உரிமைகள் பேரவை என்பது முதலாவது வகைப்பட்டதாகும். 1947 இலிருந்து 2006 வரை செயற்பட்டுவந்த மனித உரிமைகள் ஆணைக்குழு மீதான பலத்த கண்டனங்களுக்கும் ஏளனங்களுக்கும் பதிலளிக்கும் வகையிலேயே இப்பேரவை உருவாக்கப்பட்டது. ஆணைக்குழுவில் 53 உறுப்பினர்கள் அரசாங்கப் பிரதிநிதிகளாக அங்கம் வகித்து வந்த போதிலும் அவர்கள் பக்கச்சார்பாகவும் மூடிமறைப்பு முயற்சியிலுமே ஈடுபட்டு வந்தனரே ஒழிய மனித உரிமைகள் மீறப்படுவதைத் தடுக்கும் வகையில் உருப்படியாகச் செயற்பட்டிருக்கவில்லை என்ற பலத்த குற்றச்சாட்டிருந்தது.

ஐ.நா. தனது 60வது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் வேளையில் ஏதாவது குறிப்பிடத்தக்க வகையில் செய்தேயாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாகவும் ஆணைக்குழு அகற்றப்படவும் புதிய அமைப்பொன்றை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டது. அதன் விளைவாகவே ஐ. நா. பொதுச்சபைத் தீர்மானம் 60/151 இன் மூலம் 15 மார்ச் 2006 இல் மனித உரிமைகள் பேரவை உருவாக்கப்பட்டது. இத்தீர்மானமே பேரவைக்குரிய பணிகளையும் தத்துவங்களையும் விரிவாகக் குறிப்பிடுகின்றது.

இத்தீர்மானத்தின் 5(ஈ) வது வாசகத்தின்படி, மனித உரிமைகள் கடப்பாடுகள் தொடர்பில் ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் செயற்படும் விதத்தினைக் கண்காணிக்கும் பொறுப்பு பேரவைக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் அண்டில் தானே நிறைவேற்றிய 5/1 ஆம் இலக்கத் தீர்மானத்தின்படி, தனது செயற்பாட்டு விதிமுறைகளைத் தனக்கென வகுத்துக் கொண்டுள்ளது.   

இதன் 47 உறுப்பினர்கள் பொதுச்சபையினால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மூன்று வருடங்களுக்குமென உறுப்புரிமை புதுப்பிக்கப்படும். ஓர் அரசு அடுத்தடுத்து இரு தடவைகளுக்கு மேல் உறுப்புரிமை பெறமுடியாது. உறுப்புரிமை பிராந்திய ரீதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுகளுக்கிடையிலான பல்வேறு முறைமை வேறுபாடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டே உறுப்புரிமை பகிர்ந்தளிக்கப்படுகின்றது. சுயவிருப்பில் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள், உறுதியுரைப்புகள், கடந்தகாலச் செயற்பாடுகள் எல்லாம் கவனத்தில் கொள்ளப்பட்டே வாக்களிப்பு நடைபெறும்.

ஆசியப் பிராந்தியத்துக்கென ஒதுக்கப்பட்ட உறுப்புரிமைகளில் ஒன்றை இலங்கை 2006 இல் பெற்றுக்கொண்டது. ஆனால் இரண்டாம் முறை 2009 இல் போட்டியிட்டு பஃஹரினிடம் தோற்றுப்போனது. 2009 இல் தான் அமெரிக்கா உள்ளே வந்தது. 

வருடத்துக்கு மூன்று தடவைகள் என்றவாறாக, குறைந்தது 10 வாரங்களுக்காவது இது ஜெனிவாவில் கூடி மனித உரிமைகள் நிலைமைபற்றி ஆராய்கின்றது. பாரியதும் திட்டமிட்ட முறையிலமைந்ததுமான உரிமை மீறல்கள் குறித்து இது கூடிய கவனம் செலுத்துகின்றது. குறிப்பிட்டதொரு நாடு அல்லது உரிமை விடயம் தொடர்பாக விசேட அமர்வுகளை நடாத்தவும் முடியும். பாலஸ்தீனம், லெபனான், மியன்மார், சூடான் தொடர்பில் இத்தகைய விசேட அமர்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.

இதன் அமர்வுகள் நடைபெறும்போது உறுப்பு நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகள் அவதானிப்பாளர்களாகக் கலந்து கொள்ளலாம். இவை தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள், அவை ஐ.நா.வின் மற்றொரு அங்கமான பொருளாதார, சமூகப் பேரவையில் பதிவுரிமை பெற்றிருந்தால் மட்டுமே பார்வையாளர்களாகக் கலந்துகொள்ள முடியும்.

மனித உரிமைகளை அரசொன்று மீறுவது குறித்து ஏனைய அரசுகள் ஒன்றுகூடி ஆராய்வதும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் சற்றே வேடிக்கையான விடயந்தான். இதில் எந்தளவுக்கு மனித உரிமைகள் மீது உண்மையான அக்கறை இருக்கும் என்பதும் அரசியல் எவ்விதம் கொடிகட்டும் என்பதும் சொல்லி விளங்க வேண்டிய விடயமல்ல.

முள்ளிவாய்க்கால் முடிவு வரும் மட்டும் மௌனமாக இருந்தவர்கள் தற்போது எதற்காகவோ முயற்சிக்கின்றார்கள் என்றால் அது முற்றுமுழுதாக நீதிக்கான குரலாகவோ அல்லது தமிழினத்தவரின் சுயாட்சிக்கான அக்கறைத் தொனியாகவோ எந்தளவுக்குக் கொள்ளப்படலாம் என்பது பற்றி உள்ளுர யோசிக்காமலிருக்க முடியாது.

ஆனாலும் கூட்டமைப்பினரின் வாஷிங்டன் விஜயத்தின் பின்னர் இத்தகைய தீர்மானம் ஒன்றைக் கொடுவருவதான முடிவை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எடுத்தது. தங்கள் செயற்பாட்டுக்கான ஒரு நெறிமுறைத்தன்மையை (legitimacy) கூட்டமைப்பினரின் விஜயத்தின் மூலம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அதாவது, இந்தச் செயற்பாடு முற்றுமுழுதான சுயநலன் சார்ந்ததாக அன்றி, பாதிக்கப்பட்டோரின் கோரிக்கைகளையும் செவிமடுத்து முன்னெடுக்கப்படுவதே என்பதை வெளியுலகுக்குக் காட்ட வேண்டியதன் தேவையை அமெரிக்கா நிறைவேற்றிக்கொண்டது.

ஆனால், இதை மட்டும் வைத்துக்கொண்டு ஏதோ பெரிதாகக் கைகளில் கிடைக்கப்போகின்றது என்ற கனவில் மிதப்பதற்கு நம்மில் பலர் தயாராகிவிட்டார்கள். ஏதோ பெரிய திட்டம் உள்ளதாக இலங்கை அரசு சித்தரிப்பதில் அதற்கு உள்நாட்டு அனுகூலங்கள் உள்ளன. எது கிடைத்தாலும் அதன் பலன் தீர்மானத்தைக் கொண்டு வரும் நாட்டுக்கே முதலில் உரித்தாகும். அதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதும் அந்த நாட்டையே பொறுத்தது. தமிழ் மக்கள் இதில் பக்க விளைவுக்காரர்களாகவே இருப்பார்கள்.

ஜெனீவாவில் நடக்கும் அரசியல் சதுரங்கத்தில், குறிப்பிட்ட 47 நாடுகள் மட்டுமன்றி ஐ.நா. வின் ஏனைய உறுப்பு நாடுகளும் விரும்பின் அவதானிப்பாளர்களாகக் கலந்துகொள்ள முடியும். எனவே மற்றைய நாடுகளும் இந்த 47 நாடுகளின் மீது செல்வாக்குச் செலுத்த முயற்சிக்கும். இந்த முயற்சி என்பது பலரும் நினைப்பதுபோல வர்த்தக அல்லது பொருளாதாரம் சார்ந்து பெரிதான பேரப்பேச்சாக அமைவதில்லை. மனித உரிமைகள் விடயத்தில் தத்தமது சொந்த 'சாதனைகள்' தொடர்பில் மறைப்பினை மேற்கொள்வதற்கான பேரப்பேச்சாகவே இது இருக்கும்.

எனவே, 193 உறுப்பினர்களில் எதனது 'சாதனை' களங்கத்துக்குரியதோ அதுவே முன்னின்று இத்தகைய பேரப்பேச்சினை முன்னெடுப்பது வழக்கம். ஐ.நா. வின் இத்தகைய செயற்பாடுகளை வர்ணித்து எழுதிய பேராசிரியர் ஒருவர் 'திருடனைப் பிடிப்பதற்கு நியமிக்கப்பட்ட திருடர்களால் மக்கள் முட்டாள்களாக்கப்படுவது தவிர்க்க முடியாததாகும்' என்று எழுதியுள்ளார். இது எத்துனைதூரம் நமக்குப் பொருந்துகின்றது என்பதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

ஆனாலும் அண்மைக்காலங்களில் அமெரிக்கா பல்வேறு நாடுகளில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்கள் அதன் மீது பரவலாக முன்வைக்கப்படும் நிலையில் துணிவாக அத்தகையதொரு குற்றச்சாட்டை இன்னொரு நாடு மீது சுமத்தி ஒரு தீர்மானத்தை அது முன்மொழிகின்றது என்றால் தமிழினத்தின் சுயாட்சிக் கோரிக்கைக்கும் அப்பால் ஏதோவொன்றுக்கான அத்திவாரக் கல் நாட்டப்படுவதாக மட்டும் இப்போதைக்குப் புரிகின்றது. ஆகவே அதனது பிரச்சாரம் எதனை மையப்படுத்தியதாக இருக்கும் என்பது இப்போதைக்குப் பகிரங்கமாகவும் தெரியவரப்போவதில்லை.

இந்த நிலையில் தான் கூட்டமைப்பின் ஜெனீவா விஜயத்தை அமெரிக்கா ஏன் ஊக்குவிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். கூட்டமைப்பின் ஜெனீவா பிரசன்னம் தீர்மானத்தை முன்மொழிபவரைச் சங்கடத்தில் ஆழ்த்தும் என்று தெரியவரும்போது வீம்புக்காக ஜெனீவா விரைந்து கூட்டமைப்பு எதனைச் சாதிக்க முடியும் என்பதை நேரமெடுத்து நாம் யோசித்தேயாக வேண்டும்.

ஜெனீவா போவதாக முதலில் வந்த அறிவிப்புக்கும் பின்னைய மாற்று நிலை அறிக்கைக்குமிடையில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை கூட்டமைப்புக்குத் தெரிவித்திருக்கும் என்பதை ஊகித்தல் சிரமமன்று. சாதக பாதகங்களை எடைபோட்ட பின்னர் எடுக்கப்பட்ட முடிவே பின்னர் பலமான கண்டனத்துக்குள்ளானது.

'போவதற்கு ஆலோசிக்கின்றார்கள்' என்ற தகவலே போவதற்கு முடிவெடுத்து விட்டார்கள் என்றவாறாகச் செய்தியாகிவிட்டது எனக் கூட்டமைப்பின் தலைமைப் பீடம் குறிப்பிடுகின்றது. கூட்டமைப்பின் பங்குபற்றல் அமெரிக்காவின் விருப்பின் மீதன்றி இருக்குமாயின் அதனால் சாதகமான பலன்கள் விளையாது என்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

வழக்கறிஞர்கள் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப்படும் நீதிமன்ற நடபடியில், பாதிக்கப்பட்ட கட்சிக்காரர் ஒருவர் தூரத்தே நின்று கூக்குரல் இடுவதால் ஏற்படும் விளைவு என்னவாக இருக்கும்? அந்தக் கூக்குரலில் எந்தளவுக்கு நியாயமிருப்பினும் சிலவேகைளில் அது அந்தக் கட்சிக்காரரின் வாதத்துக்குக் குந்தகமேற்படுத்துவதாவும் அமையக்கூடும். குறிப்பிட்ட கட்சிக்காரரை சாட்சிக் கூண்டில் ஏற்றி அவரது சாட்சிகளை அந்த வழக்கறிஞர் நெறிப்படுத்தும் நிகழ்வல்ல இது. 

இதிலுள்ள சிக்கல் யாதெனில் மறு கட்சிக்காரர் தாராளமாகப் பிரச்சாரம் செய்கையில் நாமும் ஏன் அதேபோன்று முயற்சிக்கக் கூடாது என்பதுதான். அதுவே பலரதும் விருப்பமாகவும் உள்ளது. இதற்காகவே ஆரம்பத்தில் சில நடபடி விடயங்கள் பற்றிக் குறிப்பிட்டேன்.

இத்தகைய அரங்குகளில் அரசுக்கு இருக்கும் அந்தஸ்து வேறு. அரசல்லாத குழுக்களுக்கு இருக்கும் அந்தஸ்து வேறு. பின்னையவை ஏதாவதொரு அரசினூடகத் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அதாவது வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். இந்த நியமனம் பணத்தினாலன்றி அரசியல் நலன் எனும் அக்கறையினால் இடம்பெறுவதாகும். அல்லது அரசுகள் மீது செல்வாக்குச் செலுத்தவல்ல அரசாங்க சார்பற்ற நிறுவனங்களனினூடாகப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

மனித உரிமைகள் விடயத்தில் வேறு நாடுகள் கேள்வியெழுப்பும்போது பொதுவாக முன்வைக்கப்படும் பதில் உள்நாட்டு விவகாரத்தில் தலையீட்டுக்கு முற்சிக்கப்படுகின்றது என்பதேயாகும். அதை மறுதலிப்பதாயின் பொதுவான அக்கறை காரணமாகவே கண்டனம் தெரிவிக்கப்படுவதாக மற்றவர்களை நம்பவைக்க வேண்டும்.

கூட்டமைப்பு என்பது ஓர் அரசுக்குள் செயற்படும் அரசியல் கட்சி என்றளவில் 'சர்வதேசப் பிரச்சனையொன்றில்' அதன் பிரசன்னம் விடயத்தை உள்நாட்டு விடயமாக்கிவிடாதா என்பதை ஏன் நாம் சிந்தித்துப் பார்க்கக் கூடாது? 

ஆகக் கூடியது இந்த விடயம் சர்வதேச அரசாங்க சார்பற்ற நிறுவனங்களின் கரங்களில் விடப்பட வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் தெளிவுபடுத்தல்கள் தேவைப்பட்டால் அதனைக் கூட்டமைப்பு செய்து கொடுத்திருக்க வேண்டும். இதில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக அறிகின்றேன். அத்தகைய நிறுவனங்களின் பிரச்சாரத்துக்கு இருக்கும் பலம் சம்பந்தப்பட்ட கட்சிக்காரரது தனிப்பட்ட முயற்சிகளுக்கு இருக்காது.

மேலும் பேரவையின் அமர்வுகள் நடைபெறும் வேளையில், அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் பகிரங்க (சமாந்தர) அமர்வுகள் சிலவற்றை நடாத்த முடியும். பேச்சாளர்களை அவர்களே தேர்ந்தெடுப்பார்கள் என்றளவில் வேறு சிலரும் இதில் கலந்து கொள்ளலாம் என்றாலும் இது நேரம், விடயப்பரப்பு போன்ற கண்டிப்பான சில வரையறைகளுக்கு உட்பட்டது. பேச்சாளர்களது நடத்தைக்கான முழுப்பொறுப்பையும் சம்பந்தப்பட்ட நிறுவனமே ஏற்க வேண்டும். இதனால் பல நிறுவனங்கள் விடயத்தைத் தாங்களே பொறுப்பெடுத்து வாதிக்க விரும்பகின்றனவே தவிர 'வெளியாரைக்' கொண்டுவர முனைவதில்;லை. விடயத்தைப் 'போட்டுடைத்துவிடக் கூடாது' என்பதிலேயே அவர்கள் அக்கறை காட்டுவார்கள். 

இன்னொரு விதத்தில், அமெரிக்கா முன்னெடுக்கும் பிரச்சார உத்திகளுக்கு மேலாகக் கூட்டமைப்பின் பிரசன்னம் கூடுதல் செல்வாக்கை எந்த அரசுப் பிரதிநிதி மீதும் செலுத்திவிடும் என்ற நம்பிக்கை அவ்வளவாக எனக்கில்லை. வெறுமனே பிரபல்யம் தேடுவதற்கான வழியாக இதனைப் பார்க்கக் கூடாது. இது ஆரியக் கூத்தையும் கடந்து காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டிய விடயமில்லையா?

இப்போதுங்கூட, வழக்கறிஞர் அழைப்பின் கட்சிக்காரர் போவதில் ஏதாவது பிரயோசனம் இருக்கலாம். எதிர்க்கட்சிக்காரரின் நகர்வைப் பொறுத்து வழக்கறிஞர் என்ன முடிவை எடுப்பாரோ தெரியவில்லை.

3/10/2012 4:35:48 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்