Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

காணாமல் போனோர் விவகாரம் தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு பகுதியே!

காணாமல் போனோர் விவகாரம் தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு பகுதியே!
சி.அ.யோதிலிங்கம்

 

கடந்த 30ம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினம். இத்தினம் தமிழ்ப் பிரதேசங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. கிழக்கிலும், மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் கொழும்பிலும் நிகழ்வுகள் இடம்பெற்றன. வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் இப்பத்தியாளரும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் இணைந்து இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தார்.

மக்கள் பங்கேற்பு குறைவாக இருந்தாலும் நிகழ்வு உணர்வுபூர்வமாக இருந்தது. வவுனியா பஸ் நிலையத்திலிருந்து நகரசபை மண்டபம் வரை ஊர்வலம் இடம்பெற்றது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உறவுகளின் புகைப்படங்களோடு நிகழ்வில் கலந்து கொண்டனர். நகரசபையில் நினைவுகூரல் கூட்டம் இடம்பெற்றது. அனந்தி சசிதரன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மயூரன் போன்றோருடன் அரசியல் ஆய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் நிலாந்தனும் இப்பத்தியாளரும் உரையாற்றியிருந்தனர்.

காணாமல் போனோர் விவகாரம் தனித்து அவர்களின் உறவுகள் சம்பந்தப்பட்டது அல்ல. இது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மொத்த விவகாரத்தின் ஒரு பகுதி. மொத்த விவகாரம் என்பது வரலாற்று ரீதியாக மேற்கொள்ளப்படும் இன அழிப்புதான். இன அழிப்பு என்பது இப்பத்தியாளர் அடிக்கடி கூறுவது போல தமிழ் மக்கள் ஒரு தேசமாக தேசிய இனமாக இருப்பது அழிக்கப்படுவதுதான். நிலப்பறிப்பு, மொழிப்பறிப்பு, பொருளாதாரப் பறிப்பு, கலாச்சாரப் பறிப்பு என்பன இனவழிப்பின் ஆரம்பம். உயிர் அழிப்பின் உச்சம். காணாமல் போனவர்களது விவகாரம் இன அழிப்பின் உச்சத்தைக் காட்டிநிற்கின்றது.

எனவே காணாமல் போனவர்களது விவகாரத்தை இன அழிப்பு என்கின்ற மொத்த விவகாரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். அதாவது தமிழ்த் தேசிய அரசியல் என்கின்ற மொத்த அரசியலின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்காமல், மொத்த அரசியலோடு இணைக்காமல் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட முயற்சிகளாகவே இருக்கும். அது பெரிய விளைபயன்களைக் கொண்டு வந்துவிடாது. மக்களிடம் இது பற்றிய விழிப்பு இல்லாவிட்டால் சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலிற்கு பின்னால் இழுபட்டுச் செல்ல வேண்டிய நிலையே ஏற்படும்.

ஒரு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்புக்களுக்கும் தேவை இருக்கும்போதே பேரம் பேசலுக்கான வாய்ப்பும் ஏற்படும். விவகாரத்தில் தரப்புகளின் முக்கியத்துவத்திற்கேற்ப தரப்புகளின் பேரம் பேசும் பலமும் அதிகரிக்கும். இலங்கைத் தீவினை மையமாகக் கொண்ட புவிசார் அரசியல் போட்டியில் இந்தியா–அமெரிக்க சக்திகளுக்கு கிடைத்த துரும்பு தமிழ் மக்களின் விவகாரம்தான். இந்த விவகாரம் இல்லாவிட்டால் அவர்களால் இலங்கை மீது செல்வாக்குச் செலுத்துவது கடினம்.

துரதிஸ்டவசமாக இந்தப் புவிசார் அரசியல் தமிழ் மக்கள் மத்தியில் ஒழுங்காகப் பேசப்படவில்லை. தமிழ்க்கல்வியாளர்களிடம்கூட இது பற்றிய அறிவு மிகக் குறைவு. ஒரு பகுதியினரிடம் இதனைக் கிண்டலாகப் பார்க்கும் நிலையும் உண்டு. இந்திய-அமெரிக்க சக்திகளும் இவர்களுக்குப் பின்னால் இழுபட்டுச் செல்கின்ற சம்பந்தன் தலைமையும் இது பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கினறன.

பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகள் தமது சொந்த விவகாரங்களினால் இந்த துயரங்களைச் சந்திக்கவில்லை. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் என்கின்ற பொதுவிவகாரத்தினாலேயே இத்துயரங்களைச் சந்திக்கினறன. எனவே இவ்விவகாரத்தை பாதிக்கப்பட்டவர்களின் விவகாரமாகப் பார்க்காமல் முழுத் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விவகாரமாகப் பார்க்க வேண்டும். முழுத் தமிழ்ச் சமூகமும் இதனைப் பொறுப்பெடுக்க வேண்டும். அரசியல் ரீதியில் மட்டுமல்ல தார்மீக ரீதியிலும் இது முக்கியமானது.

அரசியல் ரீதியில் பொறுப்பெடுப்பது என்பது அரசியல் தலைமை பொறுப்பெடுப்பதைக் குறிக்கின்றது. அரசியல் தலைமை பொறுப்பெடுப்பது மூன்று வகைகளில் முக்கியமானது. அதில் ஒன்று விவகாரத்தின் அரசியல் தன்மையை வெளிப்படுத்துவதாகும். இது காணாமல் போனோர் விவகாரத்தை தமிழ் மக்களின் மொத்த விவகாரத்தோடு இணைக்கும். அதனூடாக விவகாரத்தின் பரப்பை பெரிதாக்கும். இரண்டாவது போராட்டத்தை பேரெழுச்சியாக மாற்றுவதற்கு உதவும். மக்களின் கவனத்தை விவகாரத்தின் பக்கம் குவிக்கும். மக்களைத் திரட்டும். மக்கள் திரள் தங்களுடன் நிற்கின்றனர் என்ற உணர்வும் பாதிக்கப்பட்டவர்களை உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்தும். மூன்றாவது அரசியல் தலைமை இவ்விவகாரத்தை உலகு தழுவிய அரசியல் தளங்களுக்கு கொண்டு செல்லும்.

காணாமல் போனோர் விவகாரம் தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு பகுதியே!

உண்மையில் காணாமல் போனோர் தினம் என்பது சர்வதேச ரீதியாக அனுஸ்டிக்கப்படுகின்ற தினமாக இருப்பதனால் சர்வதேச சமூகத்தின் கவனம் அதை நோக்கி குவிந்திருக்கும். அவற்றின் கவனத்தை எமது விவகாரத்திலும் குவிப்பதற்கு இதனை ஒரு பேரெழுச்சியாக மாற்றியிருக்க வேண்டும். அதற்கு முதலில் காணாமல் போனோர் அமைப்புக்கள் அனைத்தும் ஒரு ஐக்கிய முன்னணிக்குள் கொண்டுவரப்பட்டு ஒரு பொது வேலைத்திட்டத்தை உருவாக்கி இந்தத்தினத்தை அனுஸ்டித்திருக்க வேண்டும். அரசியல் தலைமை அதற்குப் பின்னால் நின்று இதனை வழிநடாத்தியிருக்க வேண்டும். தாயகத்தில் மட்டுமல்ல தமிழகம், புலம்பெயர் நாடுகள் என்பவற்றிலும் இதனைப் பேரெழுச்சியாக்கியிருக்க வேண்டும். இதற்கேற்ற வகையில் நிலம், புலம், தமிழகம் இணைந்த வகையில் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை உருவாக்கியிருக்க வேண்டும்.

துரதிஸ்டவசமாக சம்பந்தன் தலைமை இவ்வாறான வேலைத்திட்டத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. விவகாரத்தின் மையப்பொருளான தமிழ்த் தேசிய அரசியலை நீக்கி அரசியல் நீக்கம் செய்யப்பட்டு கொழும்பில் இடம்பெற்ற நிகழ்விலேயே சம்பந்தன் கலந்து கொண்டார். குறைந்த பட்சம் வடகிழக்கில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தால்கூட அதற்கு ஒரு அரசியல் தன்மை கிடைத்திருக்கும். தென்னிலங்கைச் சக்திகள் இவ்விவகாரத்தை தமிழ் மக்களுக்கு மட்டுமேயுள்ள, அதன் அரசியலுடன் இணைந்து தனித்த விவகாரமாகப் பார்க்காமல் முழு இலங்கைக்குமுரிய பொது விவகாரமாக சுருக்கிவிட முயல்கின்றனர். அதன் அரசியலை நீக்கம் செய்ய முயல்கின்றனர். சம்பந்தன் தலைமையும் அதற்கு துணைபோயிருக்கின்றது.

தார்மீக அடிப்படையில் இவ்விவகாரத்தை நோக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் சுமக்கக்கூடிய விவகாரமல்ல. அவ்வாறு அவர்களை தனித்து சுமக்க விடுவது சமூக அறமும் அல்ல. பாதிக்கப்பட்டவர்கள் தனித்து சுமக்கக்கூடிய வலுவான நிலையிலும் இல்லை. எனவே முழுத் தமிழ்ச் சமூகமும் இதனை இணைந்து சுமக்க முன்வரவேண்டும். இதனைச் செய்யாவிட்டால் தமிழ் மக்களைப் போல நன்றிகெட்ட சமூகம் உலகில் எதுவும் இருக்க முடியாது. நிலாந்தனின் வார்த்தையில் கூறுவதனால் 'விடுதலைக்கு தகுதியற்ற சமூகம்' என்ற நிலையிலேயே தமிழ்ச் சமூகம் இருக்கும்.

நடைமுறை உண்மை என்னவென்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டும் இச்சுமையை சுமக்கின்றனர். நூறு நாட்களுக்கு மேலாக நடைபெறும் போராட்டத்தை அவர்கள் மட்டுமே நடாத்துகின்றனர். அரசசார்பற்ற நிறுவனங்கள் பல தங்கள் நலன்களுக்காக பின்னால் நிற்கின்றன. அரசியல் தலைவர்கள் எப்போதாவது ஒரு நாள் வந்து புகைப்படமெடுத்துவிட்டு தமது கடமை முடிந்து விட்டது என திரும்பிச் செல்கின்றனர். சம்பந்தன் தலைமை மட்டுமல்ல, தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட இதற்கு விதிவிலக்காக இல்லை.

இந்த நிலை வெறுமனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டும் நெருக்கடியாக இருக்கப்போவதில்லை. முழு தமிழ்ச்சமூகத்திற்கும் அதன் அரசியலுக்கும் நெருக்கடியாக இருக்கப்போகின்றது. தாங்கள் தனித்து விடப்படுவோம் என்று தெரிந்தால் அரசியலுக்கு மட்டுமல்ல சாதாரண பொதுப்பணிகளுக்கு கூட எதிர்காலத்தில் எவரும் வரப்போவதில்லை. தமிழ் அரசியல் வரலாற்றிலேயே பங்கேற்பு அரசியல் இருக்கவில்லை என்பது உண்மைதான். பரந்துபட்ட மக்கள், போராட்ட அரசியலுக்கு வெளியே தான் நின்றனர். வாக்களிப்பதும் இயக்கங்கள் வந்ததும் நிதி கொடுப்பதும், நகை கொடுப்பதும் என்கின்ற விடயங்களோடு தமது பணியை சுருக்கிக் கொண்டனர். தொண்டர்களும் போராளிகளுமே பங்கேற்றனர். இன்று அவற்றிற்கு கூட பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 30ம் திகதி இடம்பெற்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட மக்களையும், அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்தவர்களையும், அரசியல் பிரமுகர்களையும் கழித்துவிட்டால் சாதாரண மக்கள் என விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே பங்கு பற்றியிருந்தனர்.

தமிழ் மக்களின் அரசியல் விவகாரமும் அதன் விளைவான காணாமல் போனோர் விவகாரமும் ஒரு உள்நாட்டு விவகாரமல்ல, சர்வதேச விவகாரமே! சர்வதேச ஒழுக்க விழுமியங்களுடன் தொடர்புடைய விவகாரம். இன்று இவை இரண்டும் சர்வதேசக் கவனிப்புக்குள்ளாகியுள்ளன. இவற்றைச் செயலுக்கு கொண்டுவருவது தான் மீதியாக உள்ளது. சர்வதேச அரசுகள் தமது நலன்களுக்கேற்ப செயற்படும் என சிலர் வாதிடலாம். அது உண்மைதான். சர்வதேச சக்திகள் என்பது வெறுமனவே அரசுகளை மட்டும் கொண்டதல்ல. சர்வதேச சிவில் சமூகத்தையும் கொண்டது. சர்வதேச அரசுகள் தமது நலன்களின்படி செயற்பட்டாலும் சர்வதேச சிவில் சமூகம் சர்வதேச ஒழுக்க விழுமியங்களின் அடிப்படையிலேயே செயற்படும். சர்வதேச சிவில் சமூகத்தின் மூலம் அழுத்தங்களைக் கொடுத்து அரசுகளையும் ஒரு வழிக்குக் கொண்டுவரலாம். புவிசார் அரசியலில் பங்காளராக மாறுவதன் மூலமும் அழுத்தங்களைக் கொடுக்கலாம். இருபக்க அழுத்தங்கள் சர்வதேச அரசுகளையும் எம்மை நோக்கி திரும்ப வைக்கும்.

எல்லாச் செயற்பாடுகளுக்கும் மையம் தமிழ் அரசியல் தலைமைதான். தற்போதுள்ள அரசியல் தலைமை எந்தவித சுயாதீனமுமற்ற அமெரிக்க இந்திய நிகழ்ச்சி நிரலிற்கு பின்னால் இழுபட்டுப் போகின்ற தலைமை. இந்தத் தலைமை தமிழ்த் தேசிய அரசியலை செங்குத்தாக கீழிறக்குமே தவிர ஒரு போதும் முன்னோக்கி நகர்த்தாது.

தற்போது தேவை புதிய தலைமையும், புதிய அரசியல் இயக்கமும். அது அரசியல் கட்சியல்ல, மாறாக தமிழ் மக்களின் அனைத்து விவகாரங்களையும் உலகு தழுவிய வகையில் கையாளக் கூடிய ஒரு தேசிய அரசியல் இயக்கமே!

இத் தேசிய அரசியல் இயக்கத்தை அமைப்பது நோக்கி முன்னேறிச் செல்வதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு தெரிவு எதுவும் இப்போது இல்லை. 

9/8/2017 1:53:40 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்