Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தாமரை மொட்டினால் தமிழீழம் மலருமா?

தாமரை மொட்டினால் தமிழீழம் மலருமா?
சி.அ. யோதிலிங்கம்

 

தாமரை மொட்டினால் தமிழீழம் மலரும் என சம்பந்தன் பாராளுமன்றத்தில் கூறிய கூற்று இன்று பலத்த வாதப்பிரதிவாதங்களை கிளப்பியுள்ளது. ஒவ்வொரு தரப்பும் தாம் பின்பற்றும் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப அதற்கு விளக்கம் கொடுக்கின்றன. இது விடயத்தில் தொண்டமானின் பாணியை சம்பந்தனும் பின்பற்றுகின்றார் போலத் தெரிகின்றது. தொண்டமான் எப்போதாவது இருந்துவிட்டு ஒரு கூற்றைக் கூறுவார். பேரினவாதப் பத்திரிகைகள் எல்லாம் அதனைத் தூக்கிப் பிடித்து விளக்கங்கள் கொடுக்க முற்படும்.

ஒரு தடவை தொண்டமான் பிரபாகரனை 'பகவத்சிங்' உடன் ஒப்பிட்டுப் பேசினார். உடனடியாகவே பேரினவாதப் பத்திரிகைகள் அதனைக் கண்டித்து செய்திகளை வெளியிட்டன. தொண்டமான் அதற்கு 'பகவத்சிங்குடன் ஒப்பிட்டது தவறு சுபாஸ் சந்திரபோஸ் உடன் ஒப்பிட வேண்டும்' எனக் கூறி களத்தைச் சூடாக்கினார். இன்னோர் தடவை அவரது பொதுக்கூட்டத்திற்கு நுவரெலியாவில் கல்லெறி விழுந்த போது 'கல்லெறிந்தவுடன் கலைந்து செல்வதற்கு மலையக மக்கள் காக்கைக் கூட்டங்கள் அல்ல' எனக் கூறினார்.

இங்கு தொண்டமானுடன் சம்பந்தனை ஒப்பிடுவது பொருத்தமில்லாமல் கூட இருக்கலாம். தொண்டமானின் துணிவு சம்பந்தனுக்கு இருக்கின்றது என்று கூறிவிட முடியாது. தொண்டமானுக்கு பக்கபலமாக பெரும் தொழிற்சங்க பலம் இருந்தது. ஒரு போராட்டப் பாரம்பரியம் இருந்தது. அவை தவிர சம்பந்தனின் இக்கூற்று ரணிலைக் காப்பாற்றுவதற்கே ஒழிய, தமிழ் மக்களின் நலன்களைப் பேணுவதற்காக அல்ல என்ற ஒரு விமர்சனமும் இருக்கின்றது.

சம்பந்தனின் இக்கூற்று மூன்று விடயங்களை களத்தில் விவாதப் பொருளாக்கியுள்ளது. ஒன்று இந்தக் கூற்றின் இலக்கு யாது? இரண்டாவது இதற்குப் பின்னாலுள்ள புவிசார் அரசியல், மூன்றாவது சிங்கள தேசத்தின் பிரதான கட்சிகளுக்கும் தமிழ்த்தரப்பிற்கும் இடையே இருக்க வேண்டிய உறவு என்பவையே அவையாகும்.

இந்தக் கூற்று தொடர்பாக சம்பந்தனின் இலக்கு மிகவும் தெளிவானது. மகிந்தர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ரணில்-சம்பந்தன் உறவினால் தமிழீழம் மலரப் போகின்றது என சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். அந்தப் பிரச்சாரம் தென்னிலங்கையில் ரணில்-மைத்திரி வாக்குவங்கியைப் பெரிதும் பாதித்திருந்தது. எதுவுமே இல்லாத இடைக்கால அறிக்கையையும் மகிந்தர் பெருப்பித்து பிரச்சாரம் செய்தார். ரணில்-மைத்திரி கூட்டினால் தமிழீழம் மலராது மகிந்தரின் செயற்பாட்டினால்தான் மலரும் எனக் கூறுவதன் மூலம் ரணில்-மைத்திரியை அவர் காப்பாற்ற முற்படுகின்றார். இவ்வாறு கூறுமாறு இந்திய -அமெரிக்க சக்திகளும் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.

சம்பந்தனைப் பொறுத்த வரை எதிர்கட்சித் தலைவர் பதவியைப் பாதுகாக்க வேண்டும் என்பதே இலக்கு! தார்மீக அடிப்படையில் இப்பதவி சம்பந்தனுக்குரியதல்ல. ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்குரியது. சிறிலங்கா சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கத்தில் இருப்பதனால் அக்கட்சியில் போட்டியிட்டு வென்றவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொள்ள முடியாது என்ற தர்க்கம் முன்வைக்கப்பட்டு அது மறுக்கப்பட்டது. ஆனால் யதார்த்தத்தில் அரசாங்கத்திற்கு வெளியேதான் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் உள்ளனர். நாட்டில் எதிர்க்கட்சிக்கான செயற்பாட்டை அவர்களே முன்னெடுக்கின்றனர். இரண்டாவது பெரும்பான்மையாகவும் அவர்களே உள்ளனர்.

ரணில்-மைத்திரி நல்லாட்சிக்கு பின்னால் நிற்கும் இந்திய-அமெரிக்கச் சக்திகள் மகிந்தர் மேலெழக் கூடாது என்பதற்காகவும், மறுபக்கத்தில் தமிழ் தேசிய அரசியல் நீர்த்துப் போக வேண்டும் என்பதற்காகவும் சம்பந்தனை எதிர்கட்சிப் பதவியில் இருத்தினர். இந்தப் பதவியினால் சம்பந்தன் உண்மையான எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்க முடியவில்லை, தமிழ் மக்களின் தலைவராகவும் இருக்க முடியவில்லை. அரசாங்கக் கட்சியின் ஒரு அங்கமாகவே இருந்தார். அரசாங்கத்தின் அங்கம் எதிர்க்கட்சியாக இருப்பது என்ற புதிய கலாச்சாரத்தை இதன் மூலம் அவர் தொடக்கி வைத்தார்.

தற்போது தேர்தல் முடிவுகளினால் சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. மகிந்தரின் தற்போதய இலக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியே ஒழிய பிரதமர் பதவி அல்ல. அரசாங்கம் கோமா நிலையில் இருப்பதால் எதிர்க்கட்சித்தலைவர் பதவியும் கோமா நிலையிலேயே இருக்கின்றது. இந்தியாவும், அமெரிக்காவும் ஒட்சிசனேற்றி தற்காலிகமாக உயிர் நிலையில் வைத்திருக்கின்றன. ஒட்சிசன் குழாய்களைக் கழற்றி எடுத்து விட்டால் இரண்டு நாட்களில் இரண்டுமே மரணித்து விடும். சம்பந்தனின் கூற்று பதவி பறிபோகப் போகின்றது என்ற பயத்தின் வெளிப்பாடுதான்.

தாமரை மொட்டினால் தமிழீழம் மலருமா?

இரண்டாவது சம்பந்தனின் கூற்று வெளிப்படுத்தும் புவிசார் அரசியல். இக்கூற்றைப் பொறுத்த வரை இதுதான் முக்கியமானது. துரதிஸ்டவசமாக தமிழ் அரசியல் சூழலில் இப்புவிசார் அரசியல் பற்றி பெரிதாக பேசப்படவில்லை. இதனை அரசியல் களத்தில் அழுத்தமாக முன்வைக்கின்ற கஜேந்திரகுமாரையும் கிண்டலாகப் பார்க்கும் நிலையே உண்டு. ஆனால் யதார்த்தத்தில் இப்புவிசார் அரசியலே இலங்கைத்தீவினது அரசியல் போக்கின் செல்நெறியைத் தீர்மானிப்பதாக உள்ளது. புலிகள் அழிக்கப்பட்டமைக்கும், மகிந்தர் வீழ்த்தப்பட்மைக்கும் இப்புவிசார் அரசியலே காரணம்.

இலங்கைத் தீவு கேந்திர இடத்தில் இருப்பதனால் இத்தீவு மீது யார் செல்வாக்குச் செலுத்துவது என்பது தொடர்பாக வல்லரசுகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது. குறிப்பாக இந்திய-அமெரிக்க சக்திகளுக்கும், சீனாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகின்றது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலக சக்திகளுக்கு இது கேந்திரப் பிரச்சினை மட்டும்தான். ஆனால் இந்தியாவிற்கு கேந்திரப் பிரச்சினையுடன் தேசியப் பாதுகாப்பு பிரச்சினையுடன் கூட. இதனால் இந்தியா இப்புவிசார் அரசியலில் இரட்டிப்பாக அக்கறை கொள்கிறது. சீனாவின் முத்துமாலைத் திட்டத்தில் இலங்கைத் தீவு முக்கிய இடத்தை வகிப்பதால் அதற்கு இது முக்கிய வாழ்வாதார மூலமாக உள்ளது.

இலங்கைத்தீவு கேந்திர இடத்தில் இருப்பதால் தமிழர் தாயகமும் கேந்திர இடத்தில்தான் இருக்கின்றது. தமிழர்தாயகம் கடல் எல்லைகளைக் கொண்டிருப்பதால் கேந்திர இடம் மேலும் வலிமையாகின்றது. இங்கு தமிழர் தாயகம் மட்டுமல்ல தமிழகமும் கேந்திர இடத்தில்தான் இருக்கின்றது. இந்த இரண்டு கேந்திரப்பலமும் இணைகின்ற போது தமிழர்களின் கேந்திரப் பலம் இரட்டிப்பாகின்றது. இந்தக் கேந்திரப்பலம் காரணமாக இப்புவிசார் அரசியலில் தமிழ் மக்களுக்கும் கௌரவமான இடம் உண்டு. புலிகள் இருந்த காலத்தில் இப்புவிசார் அரசியல் பலத்தினை கவனமாகப் பேணினர். இலங்கைத் தீவை ஒட்டிய அதிகார சமநிலையை தீர்மானிப்பதில் அவர்களும் பங்காளிகளாக இருந்தனர். இதனால் தமிழர் அபிலாசைகளை ஒதுக்கிவிட்டு எந்தச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாத நிலையில் வல்லரசுகள் இருந்தன.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ் வல்லரசுகள் தமிழ் மக்களின் பங்கினை பலவந்தமாகப் பறித்துவிட்டு தமிழ் மக்களை புவிசார் அரசியல் போட்டி மைதானத்திற்கு வெளியே தள்ளினர். தமிழர் தலைமையை தமது நிகழ்ச்சி நிரலை நகர்த்துவதற்கான எடுபிடிகளாக வைத்திருந்தன. தமது நிகழ்ச்சி நிரலை இலகுவாக நகர்த்துவதற்காகவே எதிர்க்கட்சித்தலைவர் பதவியையும் வழங்கின. உள்ளூராட்சிச்சபைத் தேர்தல் முடிவுகள் தமிழர் அரசியலில் இருகட்சி முறைப் போக்கை உருவாக்கியுள்ளதால் புவிசார் அரசியலில் அவர்களுக்கான பங்கு மீளவும் கிடைக்கப்போகின்றது.

சம்பந்தர் தான் கூறிய கூற்றின் முலம் சொல்ல வந்த செய்தி இதுதான். 'மகிந்தர் தனது செயற்பாட்டின் மூலம் சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கையைக் கொண்டு வரப் போகின்றார். இதனை அமெரிக்காவும், இந்தியாவும் ஒருபோதும் அங்கீகரிக்காது. இந்நிலையில் அவ்விருதரப்பும் இணைந்து தமிழீழத்தை உருவாக்கும். இதற்கு நீ துணைபோகாதே.'

சம்பந்தனின் இலக்கு என்னவாக இருந்தபோதும் புவிசார் அரசியல் பற்றிய உரையாடலை மீண்டும் களத்திற்கு அவர் கொண்டு வந்திருக்கின்றார். இதற்காக தமிழ்த்தேசிய சக்திகள் அவருக்கு நன்றி கூறியேயாக வேண்டும்.

மூன்றாவது தமிழ் அரசியலைப் பொறுத்தவரை இதுவும் மிக முக்கியமான ஒன்றுதான். சிங்கள தேசத்தின் பிரதான கட்சிகளுடன் தமிழ்த்தரப்பின் உறவுகள் எவ்வாறு இருக்கவேணடும் என்பதே அது. தமிழ் அரசியல் வரலாற்றை ஆராயின் சிங்கள தேசத்தின் இரு பிரதான கட்சிகளும் இன அழிப்பை மேற்கொள்வதில் ஒன்றிற்கொன்று சளைத்தவையல்ல. குமார் பொன்னம்பலம் ஒன்று நெஞ்சில் குத்தும் கட்சி, மற்றையது முதுகில் குத்தும் கட்சி என இதனை தெளிவாகவே வர்ணித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியை நெஞ்சில் குத்தும் கட்சி என்றும் ஐக்கிய தேசியக் கட்சியை முதுகில் குத்தும் கட்சி என்றும் குறிப்பிட்டார். இதனால் ஆயுதப் போராட்டக் காலத்தில் விடுதலை இயக்கங்கள் இரண்டு கட்சிகளையும் சமதூரத்திலேயே வைத்திருந்தன.

விடுதலை இயக்கங்களின் இந்த நிலைப்பாடு பாராளுமன்ற அரசியல் கட்சிகளிடம் இருந்தது எனக் கூறிவிட முடியாது. வர்க்க நிலை காரணமாகவும், கொழும்பு தமிழ் சக்திகளின் ஆதிக்கம் காரணமாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பாக ஆதரவுப் போக்கு அணுகுமுறையே இக்கட்சிகளினால் கடைப்பிடிக்கப்பட்டது. முதுகில் குத்தும் கட்சியை இலகுவில் அடையாளம் காண முடியாததினால் தமிழ் மக்களிடமும் இந்த ஆதரவு நிலை இருந்தது. எனினும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்ற காலத்தில் தமிழ் மக்களிடம் தேசிய உணர்வு வலுவாக இருந்ததினால் அரசாங்கத்தில் பங்கு பெறுதல் என்ற நிலை இருக்கவில்லை. 1965-1968 காலகட்டம் இதற்கு விதிவிலக்காக இருந்தது. தற்போது சம்பந்தன் தலைமை பங்கு பெறுதல் என்ற நிலைக்கு சென்றபோது 1965-1968 காலம் போல பலத்த அடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அடி காரணமாக தமிழரசுக்கட்சி - ஐக்கியதேசியக்கட்சி காதல் காதலாக தொடர்ந்ததே தவிர பகிரங்கக் கல்யாணம் என்ற நிலைக்கு செல்லவில்லை.

சிங்கள தேசத்தின் பிரதான கட்சிகளை சமதூரத்தில் வைத்திருத்தல் என்பது தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை கோட்பாட்டு அடிப்படையிலும் இராஜதந்திர அடிப்படையிலும் மிகவும் முக்கியமானது. இருகட்சிகளும் இன அழிப்புக் கட்சிகளாக இருப்பதனால் தமிழ்த் தரப்பு எந்த ஒரு கட்சியையுமே மானசீகமாக ஆதரிக்க முடியாது. இவற்றில் நெஞ்சில் குத்தும் கட்சியை அடையாளம் காண்பது இலகு. அது பச்சை இனவாதத்தைக் கக்கியே முன்னிலைக்கு வரும். தமிழ்த்தேசத்தின் தாங்கு தூண்களான நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பவற்றை நேரடியாக அழிக்கும். ஆனால் முதுகில் குத்தும் கட்சி மறைமுகமாகவே அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதனால் அதனை அடையாளம் காண்பது கடினம். அது அகரீதியாக தமிழ் மக்களை அழிக்கும். தமிழனைக் கொண்டே தமிழனை அழிக்கும். வவுனியா வடக்கில் குடியேறிய சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு காணிப்பத்திரம் வழங்கும் விழாவில் சுமந்திரன் கலந்து கொண்டமை, சம்பந்தனின் சிங்கக் கொடியேற்றம் என்பன இதற்கு நல்ல உதாரணங்கள்.

இராஜதந்திர அணுகுமுறையைப் பொறுத்தவரை சிங்கள தேசத்தின் கட்சியரசியலுக்குள் தமிழ்மக்கள் சென்று மாட்டிவிடக்கூடாது. சமதூரத்தில் நின்றால் இருதரப்புடனும் பேரம் பேச முடியும். ஒரு தரப்புடன் மட்டும் அடையாளம் காட்டிவிட்டால் இருதரப்புடனும் பேரம் பேசலை நடாத்த முடியாது. தமிழ்த் தலைமைகளின் ஐக்கிய தேசியக் கட்சி மீதான காதல் காரணமாக தங்களுக்கு வெற்றுக ;காசோலையில் தமிழர்கள் கையெழுத்திட்டு தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஐக்கியதேசியக்கட்சி தலைமையிடம் இருக்கின்றது. இது தமிழ் அரசியலை மோசமாகவே பாதிக்கும்.

தமிழ் மக்களுக்கு இன்றைய தேவை தமிழ் அரசியலை மேலோட்டமாகப் பார்ப்பதல்ல. ஸ்கான் பண்ணிப் பார்ப்பதே!

 

3/2/2018 2:59:27 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்