Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சீரழிந்து செல்லும் தமிழ்த் தேசிய அரசியல்

சீரழிந்து செல்லும் தமிழ்த் தேசிய அரசியல்
யதீந்திரா

 

உள்ளூராட்சித் தேர்தலின் போது இடம்பெற்ற சம்பவங்கள் ஒரு தேசிய இனத்தின் உரிமைகளை வெற்றிகொள்ளும் எந்தவொரு தகுதியும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு இல்லை என்பதை தெளிவாக உணர்த்தியிருந்தது. இன்றும் இலங்கை தமிழரசு கட்சியை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள்தான் காப்பாற்றி வருகின்றனர். ஆனால் தமிழரசு கட்சியோ தங்களால்தான் பங்காளிக் கட்சிகள் உயிரோடு இருப்பதான நினைப்பில் இயங்கிவருகிறது. இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஒரு நியாயமான அரசியல் தீர்வு வருமென்பதில் தனக்கு நம்பிக்கை இல்லையென்று குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அதனைக் கூறும் சித்தார்த்தனே கூட்டமைப்பை பலவீனப்படுத்திவிடக் கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

சித்தார்த்தனின் நிலைமை விளங்கிக் கொள்ளக் கூடிய ஒன்றே. ஏனெனில் தனது கட்சியின் சார்பில் வீட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிடுபவர்களை உற்சாகப்படுத்த வேண்டிய பொறுப்பு அவருக்குண்டு. ஒரு நியாயமான அரசியல் தீர்வு வராது என்று அவர் நம்புவாராக இருந்தால் அவர் சார்ந்த கூட்டமைப்பால் அதனை பெற முடியாது என்பதுதானே பொருள். அவ்வாறாயின் தற்போது இருப்பது போன்று ஒரு பலவீனமான கூட்டமைப்பை ஏன் பேணிப் பாதுகாக்க வேண்டும்? ஒன்றில் அதனை சீர்செய்ய வேண்டும் அல்லது புதிய ஒன்றை உருவாக்க வேண்டும். சித்தார்த்தன் கூறுவது முற்றிலும் சரி. ஏனென்றால் கூட்டமைப்பால் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது முன்வைத்த வாக்குறுதிகளுக்கு அமைவான ஒரு அரசியல் தீர்வு நிச்சயம் பெறமுடியாது. ஆனால் அவ்வாறானதொரு தீர்வில் கூட்டமைப்பு எந்தளவிற்கு உண்மையாகவும் உறுதியாகவும் இருக்கின்றது என்பதுதான் இங்கு முக்கியமே அன்றி, அந்த தீர்வு வருமா, வராதா என்பதல்ல. தேர்தல் காலங்களில் ஆவேசமாக பேசும் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்ததும் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போவதன் மர்மம் என்ன?

திருகோணமலையில் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை கையளித்துவிட்டு பேசுகின்ற போது சம்பந்தன் இப்படிக் கூறியிருந்தார். அதாவது, சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்காக தமிழ் மக்கள் பெருவாரியாக திரண்டு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு சத்தமிடும் சம்பந்தனோ வழிகாட்டல் குழு கலந்துரையாடல்களின் போது ஒரு தடவை கூட சுயநிர்ணய உரிமை என்னும் சொல்லை உச்சரித்திருக்கவில்லை. ஒருவேளை சம்பந்தனோ அல்லது சுமந்திரனோ சுயநிர்ணய உரிமை தொடர்பில் வாதிட்டிருந்தால், அதில் உறுதியாக இருந்திருந்தால் நிச்சயமாக சுயநிர்ணய உரிமை என்னும் சொற் தொடர் இடைக்கால அறிக்கையில் உள்வாங்கப்பட்டிருக்கும். ஏனெனில் இடைக்கால அறிக்கை என்பதே வழிகாட்டல் குழுவில் பங்குகொண்ட கட்சிகளின் பரிந்துரைகளின் தொகுப்புத்தான். சுயநிர்ணய உரிமையை வலியுறுத்த வேண்டிய இடங்களில் அதனை வலியுறுத்தாமல் விட்டுவிட்டு, தேர்தல்களின் போது மட்டும் அதனை உச்சரிப்பது எந்த வகையில் சரியான ஒன்று? அது நேர்மையானதா?

இத்தனை வருடங்களாக நம்பிக்கையுடன் வாக்களிக்கும் எங்களுடைய சொந்த மக்களையே இவ்வாறு வாக்குகளுக்காக ஏமாற்றுவது எந்த வகையில் சரியானது? ஒரு விடயம் கடினமானது என்றால் அதனை நேர்மையாக குறிப்பிட்டு வாக்குகளை கேட்கலாம். ஆனால் தன்னால் முடியாது என்று கருதும் ஒரு விடயத்தை ஏன் சம்பந்தன் பொய்யாக உச்சரிக்க வேண்டும்? தேர்தல் காலங்களில் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேசும் தமிழரசு கட்சியினர் தேர்தலுக்கு பின்னர் அது தொடர்பில் எவரேனும் கேள்வி எழுப்பினால் உங்களால் வடக்கு கிழக்கை இணைக்க முடியுமா என்று திரும்பி கேட்கின்றனர். அவ்வாறாயின் பின்னர் எதற்காக கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதை உள்ளடக்கினீர்கள்?

உண்மையில் இந்த உள்ளூராட்சித் தேர்தல் அரசியல் ரீதியில் முக்கியமான ஒன்றல்ல. மக்கள் தங்களது நகரத்தை, பிரதேச சபையை நேர்மையாகவும் ஊழலற்றும், அதிகார துஸ்பிரயோகங்களற்றும் நிர்வகிக்கக் கூடியவர்கள் எவரோ அவர்களை தெரிவு செய்யலாம். அவர்கள் வீட்டுச் சின்னத்தின் கீழ்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. எந்தவொரு சின்னத்தின் கீழும் அவ்வாறான நல்லவர்கள் வல்லவர்கள் இருக்கலாம். மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போது விடயங்கள் தமிழ்த் தேசிய நிலையில் நோக்கப்பட வேண்டும் என்றால் அது சரியானது. 

ஆனால் இந்த சாதாரண தேர்தலின் போது இடம்பெற்ற சம்பவங்கள் எந்தளவிற்கு தமிழ் அரசியல் போக்கிரிகளின் கூடாரமாகிவிட்டது என்பதையே காண்பித்திருக்கிறது. தமிழரசு கட்சியின் இரு உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜாவின் வீட்டுக்கு முன்னால் ஹெல்மட்டால் அடிபடுகின்றனர். தமிழரசு கட்சியின் பிறிதொரு பாராளுமன்ற உறுப்பினர் பங்காளிக் கட்சியான புளொட்டின் பெண் வேட்பாளர் ஒருவரை கடத்தி வைத்து அச்சுறுத்தியிருக்கிறார். நீ கையெழுத்து வைக்க வந்தால் உன்னை குடும்பத்தோடு போட்டு கொழுத்திவிடுவேன் என்று அச்சுறுத்தியிருக்கிறார். இலங்கையில் ஆயுத மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் கூட, ஒரு பெண் வேட்பாளர் இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டதில்லை. இத்தனைக்குப் பிறகும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சம்பந்தனோ, மாவை சேனாதியோ எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையில் இவ்வாறானதொரு பாரதூரமான தவறைச் செய்தவர் கட்சியிலிருந்தே வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. ஒரு வேளை அவ்வாறு கடத்திவைக்கப்பட்ட போது அந்தப் பெண் வேட்பாளர் உயிரிழந்திருந்தால் கூட சம்பந்தன் வழமைபோல் நிதானமாகத்தான் இருந்திருப்பார் ஏனெனில் அவருக்கு அவரது கட்சியின் வெற்றி மட்டும்தான் முக்கியம். ஏந்தளவிற்கு தமிழர்களின் அரசியல் மலினமடைந்துவிட்டது என்பதையே மேற்படி சம்பவங்கள் கோடிகாட்டுகின்றன.

அண்மைய சம்பவங்கள் ஒரு விடயத்தை தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. அதாவது, தமிழரசு கட்சியினர் தேர்தல் வெற்றி மீது கொண்டுள்ள வெறித்தனமான விசுவாசம் அவர்களை எந்த எல்லைவரையும் கொண்டு போகலாம். பணபலமும், அதிகாரமும் உள்ளவர்கள் எதனையும் செய்யலாம் என்னும் நிலைமை அதிகரித்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட ஒரு செய்தியை பார்க்க முடிந்தது. யாழப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற பத்திரிகையில் அது பிரசுரமாகியிருக்கிறது. யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஆர்னோல்ட் என்பவரை நியமிப்பது தொடர்பான முடிவு எப்போதோ கனடாவில் வைத்து எடுக்கப்பட்டுவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழரசு கடசிக்கு தேர்தல் காலங்களில் நிதியை வாரிவழங்கும் சிலரே இதனை தீர்மானித்ததாக அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது. இவர்கள் கனேடிய தமிழர் பேரவையால் வழிநடத்தப்படுபவர்களாம். அன்மைக்காலமாக இவ்வாறானதொரு விடயமும் தமிழ் அரசியலில் அரங்கேறிவருகிறது. திருகோணமலையில் கூட கனடாவிலிருந்து வந்திருக்கும் ஒரு சிலரே நகரசபையின், பிரதேசசபையின் தலைவர்கள் யார் என்பதை தீர்மானித்ததாகவும் ஒரு சந்தேகம் நிலவுகிறது. அந்தச் சந்தேகத்தை மேற்படி பத்திரிகைச் செய்தி உறுதிப்படுத்துகின்றது. கனடாவிலிருக்கும் ஒரு சிலர் யாழ்ப்பாண மாநகர சபையின் வேட்பாளரை தீர்மானிக்கின்றனர் என்றால், யாழ்ப்பாணத்திலிருப்பவர்கள் அனைவரையும் மடையர்கள் என்றா அவர்கள் கருதுகின்றனர். பணம் கொடுத்தால் தமிழ் அரசியலில் எதுவும் செய்யலாமா? இதுவா தங்களை பரித்தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு தமிழர்கள் செய்யும் கைமாறு?

சீரழிந்து செல்லும் தமிழ்த் தேசிய அரசியல்

இவைகள் அனைத்தையும் தொகுத்து நோக்கினால் தமிழ்த் தேசிய அரசியலை பூண்டோடு அழிக்க வேண்டுமென்னும் நோக்கில் ஒரு குழுவினர் கச்சிதமாக செயலாற்றி வருகின்றனர். தங்களது பண பலத்தாலும் மேற்குலக தொடர்புகளாலும் தமிழரசு கட்சிக்குள் ஊடுருவியிருக்கும் அந்த சக்திகள் 2009 பின்னரான தமிழர் அரசியலை முற்றிலுமாக தங்களின் ஏகபோக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். 2009இற்கு முன்னர் தமிழ்த் தேசியத்தின் காவலாளிகளாக இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பினது வீழ்ச்சியிலிருந்து இவர்களது செயற்பாடுகள் ஆரம்பிக்கின்றன.

இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விடயம் ஒன்றுண்டு. இவர்களில் பலர் 2009இற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தீவிர விசுவாசிகளாக தங்களை காண்பித்து வந்தவர்களாவர். அவ்வாறாயின் இவர்கள் முன்னர் விடுதலைப் புலிகளின் விசுவாசிகளாக இருந்தது கூட, ஒரு இரகசிய வேலைத்திட்டத்தின் அங்கம்தானா என்னும் ஐயமே வலுக்கிறது. மொத்தத்தில் அரசியல் முக்கியத்துமற்ற ஓர் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வலிந்து ஒரு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை எதிர்காலத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு கொண்டு வந்து, பின்னர் அவர்களின் பதவியை முற்றிலும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அவர்களின் மூலம் தமிழ்த் தேசிய அரசியலை பிரயோசனமற்ற ஒன்று என்று நிறுவுவதே இவர்களின் தீய உள்நோக்கமாகும். அந்த அடிப்படையிலேயே சில சக்திகள் களமிறங்கியிருக்கின்றன. இதனை சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியுமா? சாதாரண மக்களுக்கு இந்த உண்மைகளை எளிமையாக கொண்டு சேர்ப்பிக்கும் வல்லமை எந்த தரப்பிடம் உண்டு. 

1/6/2018 2:19:13 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்